02 March 2014

மறதி வாழ்க (நாடகங்கள்) : அழகிரி விசுவநாதன்

ஐயா அழகிரி விசுவநாதன் அவர்களின் 84ஆவது பிறந்த நாளை (2.3.2014) முன்னிட்டு அவரது நூல்கள் சலுகை விலையில் தரப்படுவதாக விளம்பரம் வெளியாகியிருந்தது. அச்செய்தி பற்றி தெரிவிப்பதற்காக அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் தனது ஒன்பதாவது நூல் விரைவில் வெளிவரவுள்ளதாகக் கூறினார். தனது இவ்வாறான வாழ்க்கைக்கும் எழுத்துப்பணிக்கும் இறையருளின் துணையே காரணம் என்றார். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிப்பவர்களில் இப்பெரியவரும் ஒருவர்.

ஐயா அழகிரி விசுவநாதன் அவர்களின் அண்மைப் படைப்பான மறதி வாழ்க... என்ற நாடகத்தொகுப்பில் பொங்கல் பண்டிகைக்குப் பின், மிஸ்டர் மரகதம், மறதி வாழ்க, அனுபவ எழுத்தாளர் என்ற தலைப்புகளில் நான்கு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறுகதைத் தொகுப்பு, கவிதைத்தொகுப்பு, புதினம் என்ற துறைகளில் தடம் பதித்த ஐயா தற்போது நாடகங்கள் மூலமாக நம்மை இணைக்கிறார். பிற துறைகளில் எந்த அளவு ஈடுபாட்டோடு எழுத்துவீச்சினை வெளிப்படுத்துவாரோ அதைப் போலவே நாடகத்துறையிலும் தம் முத்திரையை சிறப்பாகப் பதித்துள்ளார் ஆசிரியர். 

 அவருடைய முன்னுரையிலிருந்து
".....மறதி வாழ்க..என்ற இந்தப் புத்தகத்தில் மொத்தம் நான்கு ஓரங்க நாடகங்கள் உள்ளன. எல்லாம் கலைமன்றம் வார ஏட்டில் வெளிவந்த நாடகங்களே. 1950, 1960களில் கலை மன்றம் இலக்கிய ஏடு வெகு பிரபலம். பிறகு ஏதோ பல காரணங்களால் நின்றுவிட்டது. அதன் விலை அன்றைக்கு (1960இல்) 25 காசுகள் தான். இப்பொழுது 50 ஆண்டுகள் கடந்துவிட்டன அல்லவா? இன்றைக்கு அந்த ஏடு இருந்தால் ஒரு ஏடு ரூ.15 என்று சொல்வார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு விலைவாசி ஏறிவிட்டது. பேப்பர் விலை, இங்க் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிவிட்டன. அதாவது 60 மடங்கு அல்லது 70 மடங்கு விலை ஏறிவிட்டது....."

".....நாடகம், நாடகம் என்கிறார்க்ளே, அப்படி என்றார் என்ன? நாட்டில் நடக்கின்ற விஷயங்களைத் தன் அகத்தே கொண்டதுதான் நாடகம். உரைநடையைவிட, கவிதைகளைவிட நாடகங்கள் பார்ப்பவர் மனதில் நன்றாகப் பதிகின்றன....."
 
பொங்கல் பண்டிகைக்குப் பின் என்ற முதல் நாடகத்தில் கடனாளியான ஒரு எழுத்தாளர் படும் பாட்டை மிகவும் அநாயாசமாக எடுத்துவைத்துள்ளார். மிஸ்டர் மரகதம் இரண்டாவது நாடகம்.திருமணப் பத்திரிக்கையில்  மிஸஸ் அண்ட் மிஸ்டர் சுந்தரராஜன் என்பதானது மிஸ்டர் அண்ட் மிஸஸ் என மாற்றப்பட்டதன் காரணத்தை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளார்.  மூன்றாவது நாடகம் நூலின் தலைப்பான மறதி வாழ்க என்பதாகும். வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் மறதி நிலையை சில நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கதாபாத்திரங்களுடன் படிப்பவர்கள் மிக நெருக்கமாகும்படி செய்துள்ளார். அனுபவ எழுத்தாளர் என்ற தலைப்பிலான நான்காம் நாடகத்தில்  பெயர் பத்திரிக்கையில் வரவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியின் விளைவுகளைப் பல திருப்பங்களைக் கொண்டு விறுவிறுப்பாக முடித்துள்ளார்.

நாடகங்களில் அவர் பயன்படுத்திய பல சொற்களும், சொற்றொடர்களும் வித்தியாசமாகவும் மனதில் நிற்பவையாகவும் உள்ளன. "சரித்திரப் பிரசித்தி பெற்ற கல்கத்தா இருட்டறையை மிஞ்சும் தன்னுடைய ஆபீஸ் அறையில்" (ப.1),  "இந்த இடத்தில் மூன்றணாப் பேனாக்கட்டையைச் சொல்லவில்லை.. (ப.2), "கெடுவு என்கிற வார்த்தையே கடன்காரர்கள் கடன் கொடுத்தவர்களிடம் சொல்வதற்கு ஏற்பட்டதுதானே?" (ப.5),  வெறுங்கமிட்டி அங்கத்தினர்கள், அரட்டைக்கச்சேரி, நியூஸ்பேப்பர் பிரேமா (ப.8), "...உயர்தரமான கிளாஸ்ட் காகிதத்தில், நல்ல வெளிநாட்டு இங்க்கினால் அழகான, புது மாடல் இங்கிலீஷ் அச்சுகளால்தான் பிரிண்டாகிஇருக்கிறது..." (ப.9), "கணவன்-மனைவி என்ற விஷயத்தை விட்டு விட்டு ஸ்திரீபுருஷ சம உரிமை என்ற பிரச்சனை தலையிடும்போது, இப்படியெல்லாம் நடக்கத்தானே வேண்டியிருக்கிறது." (ப.11), "காலங்காத்தாலே உன் கடையைத் திறந்திட்டியா? ..போம்மா..உள்ளே போயி காபி என்னும் கழுநீரைக் கலக்கிற வேலையைப் பார்.." (ப.15),  "...நல்லா டீக்கா டிரஸ் செஞ்சிருக்கே, பட்டணத்து வேலையை பட்டணத்திலேயே காண்பிக்கிறேயே?" (ப.18), "கண்டக்டர் சொன்னது போல நீங்க டிராம் சீசன் டிக்கட்டை கைப்பைக்குள் வைச்சிட்டு, மறதியா வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டோம்னு நினைச்சி, காசு கொடுத்து  ஒரு டிக்கட் வாங்கிட்டீங்க.." (ப.21), "பஜ்ஜி வெந்துகிட்டு இருக்கு. இந்த ஸொஜ்ஜிக்கு மஞ்சப் பவுடர் இல்லையே..மணிகிட்டே காசு கொடுத்து வாங்கிட்டு வரச்சொல்லேன்.." (ப.22),  "அடி மகளே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு வாய்த்துடுக்கும், திமிரும் வந்தது?...அரே ஆபத்பாந்தவா..நீதான் இவளைக் காப்பாத்தணும்.." (ப.25), "..அவன் மயான  காண்டம் ஹரிச்சந்திரனைப் போல், சோக ரசம் ததும்ப,  ஹைதர் காலத்துத் தமிழ்ச் சினிமா பாட்டு ஒன்றைக் கொஞ்சம் ரீ-மாடல் செய்து இந்தி மெட்டில் பாடிக்கொண்டிருக்கிறான்..." (ப.32).

மறதி வாழ்க (நாடகங்கள்), அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, மராட்டியத் தெரு அருகில், டபீர் குளம் சாலை, கீழவாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9442871071, 2014, ரூ.32

நாம் முன்னர் படித்த இவருடைய நூல்கள்    
இந்திய நாட்டில் வாழும் அலிகளுடைய வாழ்க்கை முறைகள், கஷ்டநஷ்டங்கள், அவமானங்கள், அவர்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான வழிமுறைகள். இவற்றைச் சொல்லும் ஒரு வித்தியாசமான நாவல் கமலி என்று தனது புதினத்தை அறிமுகப்படுத்துகிறார் அதன் ஆசிரியர் திரு அழகிரி விசுவநாதன் அவர்கள். இப்புதினத்தில் அவர் சமுதாயத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள திருநங்கைகளின் உடல் மற்றும் உணர்வுப் பிரதிபலிப்புகளை மிகவும் தத்ரூபமாகப் படைத்துள்ளார். திருநங்கைகளை கடவுளின் குழந்தைகள் என அழைக்கும் அவர், தமது படைப்பாற்றல் மூலமாக அவர்களைப் பற்றிய ஓர் அருமையான பதிவை நம் முன் வைத்துள்ளார். அவர்களைப் பற்றிய புராண சித்தரிப்பு, வாழ்க்கை நிலை, உடற்கூறு சார்ந்த நிலை, அறிவியல் முன்னேற்றத்தின் துணையுடன் அவர்களுடம் இயல்பான வாழ்வினை மேற்கொள்ளலாம் என்ற கருத்து, அரசு மற்றும் சமுதாயம் அவர்களை நடத்த வேண்டிய முறை உள்ளிட்ட அனைத்தையும் வாசகர் மனதை வருடும்படி எழுதியுள்ளார். அனைத்திற்கும் மேலாக நம்மைப்போல அவர்களுக்கும் உணர்வு உண்டு, இதயம் உண்டு என்பதை வெளிப்படுத்தி படிப்பவர் மனம் நெகிழும்படி செய்துள்ளார். இந்நூலைப் படிப்பவர்களுக்குத் திருநங்கைகளால் எதையும் சாதிக்கமுடியும் என்ற சிந்தனை ஏற்படுவதோடு அவர்களைப் புதிய நோக்கில் பார்ககவும் எண்ணத்தோன்றும்.   

எனது அணிந்துரையிலிருந்து : சிறுகதைச்செம்மல் என்றால் நம் நினைவுக்கு வருபவர் மூத்த எழுத்தாளர் ஐயா திரு. அழகிரி விசுவநாதன் (1931). 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் வாசகர்களைத் தன் எழுத்தால் கவர்ந்த அவர் சிறுகதைத்தொகுப்புகள், நாவல்களைத் தொடர்ந்து தற்போது கவிதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பினைப் படிக்கும்போது அவருடைய பல்துறை அறிவையும், கற்பனை வளத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. 78 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் சமூக அவலம், தத்துவம், மனப்பக்குவம், நம்பிக்கை, ஆன்மிகம், இயற்கை, அரசியல், ஊழல், பயங்கரவாதம் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய கவிதைகளைக் காணமுடிகிறது.

நூலின் அணிந்துரையிலிருந்து:  எழுத்தைச் சுவாசமாகக் கொண்டவர் மூத்த எழுத்தாளர் ஐயா திரு அழகிரி விசுவநாதன் (2.3.1931) அவர்கள். தற்பொழுது 15 சிறுகதைகளைக் கொண்ட ஆயிரம் ரூபாய் நோட்டு என்ற தலைப்பிலான இந்தச் சிறுகதைத் தொகுப்பின் மூலமாக வாசகர்களுடன் இன்னும் நெருக்கமாகிறார். இதற்கு முன்னர் நன்றிக்கடன், ரயிலே நில்லு, அப்பா இது நியாயமா? என்ற தலைப்புகளில் அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் அடுத்து வரப்போவது என்ன என்ற ஆவல் படிக்கும் வாசகருக்கு எழுமளவு அவரது எழுத்துக்கள் உள்ளன.

அழகிரி விசுவநாதன் ஐயாஅவர்களுடைய புதிய வெளியீடுகள் குறித்த செய்தி  தினமணி, தஞ்சை, 2.3.2014, ப.3

38 comments:

  1. அழகிரி விசுவநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    தங்களின் அணிந்துரைக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. வணக்கம்
    ஐயா.
    எழுத்தாளர் திரு.அழகிரி விசுவநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    அவரால் எழுதப்பட்ட புத்தகங்கள் பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்
    தங்களின் அனிந்துரைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. எழுத்தாளர் திரு.அழகிரி விசுவநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    அவசியம் அவரது நூல்களை வாங்கிப் படிக்கிறேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் நூல்களின் மீதான தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

      Delete
  5. மிக்க நன்றி....பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  6. அன்பின் ஜம்புலிங்கம் - எழுத்தாளர் திரு அழகிரி விசுவநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    தங்களீன் அணிந்துரை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அழகிரி விசுவநாதன் ஐயா நூலிற்கான எனது அணிந்துரைக்கான தங்களின் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  7. ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புக்களை அறிமகம் செய்து வைத்துக்
    கூடவே அவரது பிறந்தநாளுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம்
    தாங்கள் வெளியிட்டுள்ள இந்த ஆக்கத்திற்குத் தலை வணங்குகின்றேன் ஐயா .ஐயா அழகிரி விஸ்வநாதன் அவர்களுக்கு இறைவன் மேலும் எல்லா நலமும்
    வளமும் அருளிட என் பிரார்த்தனைகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போதும் அடுத்து செய்யப்படவேண்டிய எழுத்துப்பணியைப் பற்றி ஆர்வமாகப் பேசுபவர் எழுத்தாளர் ஐயா
      அழகிரி விசுவநாதன் அவர்கள். தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  8. மறதி வாழ்க... மறக்காதது மறதி

    ReplyDelete
    Replies
    1. மறக்காமல் வருகை தந்தமைக்கு நன்றி.

      Delete
  9. செவ்வியல் தமிழ்ச்சுவடிகள் குறித்து www.kovaimani-tamilmanuscriptology.blogspot.com கண்டு கருத்துரை வழங்கவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வலைப்பூவில் என் கருத்துரை. நன்றி.

      Delete
  10. DRAMATIC INTRODUCTION TO A PLAYWRIGHT!my regards and birthday wishes to this great man.dr.k.ravindran

    ReplyDelete
    Replies
    1. இந்த வயதிலும் இவ்வாறாகச் செயல்படும் பெரியவரைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  11. மூத்த எழுத்தாளர்களை உரிய முறையில் அறிமுகப்படுத்தும் தங்கள் எழுத்து உண்மையிலேயே மரியாதைக்குரியது. திரு அழகிரி விசுவாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தன் நூலின் அணிந்துரைக்காக என்னைத்தேடி வீட்டுக்கு வந்த அவரிடம் ஐயா தாங்கள் அழைத்திருந்தால் நான் வந்திருப்பேனே என்று சொன்னபோது, அணிந்துரை வேண்டுபவர், தருபவரைத் தேடி வருவதுதான் சரி என்றார். அந்த மூத்த எழுத்தாரைப் பற்றிய தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா
    சிறந்த எழுத்தாளரை எங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தியமைக்கு முதலில் நன்றிகள். அவரது பிறந்த நாளை மகிழ்ச்சியில் நனைய வைத்திருக்கிறது உங்கள் பேனாவின் மை (எழுத்து). தொடரட்டும் உங்கள் பணி. நன்றீங்க ஐயா..

    ReplyDelete
    Replies
    1. தஞ்சைப்பல்கலை கழகத்தில் கல்வியில் துறையில் பணி புரியும் திரு. சீனீவாசன் அவர்கள் (P.S) அவர்கள் எனது ஆசிரியர் என்பதைப் பெருமையோடு அறிமுகம் செய்கிறேன்.

      Delete
    2. தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி. தொடர்ந்த தங்களின் வருகை என்னை மென்மேலும் எழுதவைக்கும். நன்றி.

      Delete
    3. தாங்கள் திரு சீனிவாசன் அவர்களின் மாணவர் என்பதறிந்தேன். எனது எழுத்துக்களை வாசிப்பவர்களின் அவரும் ஒருவர். அறிமுகத்திற்கு நன்றி.

      Delete
  14. it is nice to see pandian, my student in your blog so the world is round

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார். நலம் தானே! எல்லாம் நீங்கள் தந்த பயிற்சியும் தன்னம்பிக்கையும் தான் என்பதை எங்கும் தலை நிமிர்ந்து சொல்வேன். புன்னகை தவழும் முகம் கொண்ட உங்களின் மாணவர் என்பதே எனக்கு பெருமை. நன்றி சார். தொடர்ந்து இணைந்திருப்போம்..

      Delete
    2. வலைப்பூவில் ஆசிரியரும் மாணவரும் கருத்தினைப் பதிவதையும் இணைவதையும் அறிந்து மனநிறைவு அடைகின்றேன். தொடர்ந்து பதிவுகளை வாசிக்க அழைக்கிறேன்.

      Delete
  15. தள்ளாத வயதிலும் தொடரும் அய்யா அழகிரி விஸ்வநாதனின் தமிழ்ப் பணி வாழ்க !வளர்க !

    ReplyDelete
    Replies
    1. எழுத்து மற்றும் வாசிப்பின் பயனை எப்போதும் பெரியவர் ஐயாவைப் பற்றிய தங்களின் கருத்துக்கு நன்றி.

      Delete
  16. படிக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்/ கலைமணி

    ReplyDelete
  17. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. வணக்கம் ஜம்புலிங்கம் சார்..தங்களது வலைப்பூவை இப்போதுதான் பார்த்தேன். மிக அருமையாக உள்ளது. எனது தந்தை அழகிரிவிசுவநாதன் அவர்களின் படைப்புகள் பற்றிய தங்கள் கட்டுரையும் அருமை... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து எனது வலைப்பூ பதிவுகளைக் காண உங்களை அன்போடு அழைக்கிறேன்.

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete