22 June 2014

தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் : அழகிரி விசுவநாதன்

கடந்த மார்ச் 2014இல் 83வயதினை நிறைவு செய்த, வலைப்பூ வாசகர்களுக்கு முன்னரே அறிமுகமான, ஐயா அழகிரி விசுவநாதன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "எனது ஒன்பதாவது புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. உங்களுக்கு அப்புத்தகத்தைத் தர விரும்புகிறேன். வரமுடியுமா?". ஐயாவைப் பார்க்கச் சென்றேன். தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் என்ற தனது புதிய நூலைக் கொடுத்தார்.

ூலின் முகப்புப்பக்கம்


"படிப்பவர்களைக் கண்டால் பெருமையாக இருக்கிறது. எழுத்தார்வம் உள்ள உங்களிடம் புத்தகத்தைத் தருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகத்தைப் படித்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள், நண்பர்களிடம் கூறுங்கள். அவர்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கக் கூறுங்கள். நான் இது தொடர்பான கருத்துக்களை அறியவிரும்புகிறேன்" என்றார். அவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டு, எழுதுவதாகக் கூறினேன். விடை பெறும் போது அவர் என்னிடம், "என்னுடைய அடுத்த புத்தகம் தஞ்சாவூரில் 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வோடு கற்பனை கலந்து எழுதப்படுவதாகும். நூலின் தலைப்பு என்ன தெரியுமா?" என்று கேட்டுக்கொண்டு சற்று நேரம் இடைவெளிவிட்டு "அது ஒரு மர்ம நாவல், அதன் தலைப்பு கண்ணெதிரே ஒரு மோகினிப்பிசாசு. அடுத்த சந்திப்பில் அந்த நாவலைப் பற்றி விரிவாகப் பேசுவோம் என்றார்." என்றார். தன் 10ஆவது நூலை எழுதத் தயாராகும் ஐயாவிடம் நன்றி கூறி  விடை பெற்றேன்.

ஐயாவின் கையொப்பத்துடன் அன்பளிப்புப்படி
84 வயதில் பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதிவரும் அவர், இந்நூலில் தமிழ் மொழியின்மீதான தன்னுடைய பற்றை வெளிப்படுத்துகிறார். 20 பக்கங்கள் கொண்ட சிறிய நூலாக இருப்பினும் அந்நூலில் அவர் தந்துள்ள கருத்துக்கள் சிந்திக்கப்படவேண்டியவையாக உள்ளன. அற்புதமான எண் ஒன்பது என்பார்கள் (பக்கம்1-6), மகளிருக்கு மரியாதை (பக்.7-11), தாய், தாயி ஆயி ஆகிய சொற்கள் (பக்.12-13), காயம், ஈரங்கி, ஏட்டு முதலிய சொற்கள் (பக்.14-19) என்ற நான்கு தலைப்புகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளன இந்நூல்.
ூலின் பின் அட்டை
ஒன்பது அல்ல, ஒட்டு
"அற்புதமான எண் ஒன்பது என்பார்கள். எந்த எண்ணால் நாம் ஒன்பதை பெருக்கினாலும், முதல் எண்ணையும் அடுத்த எண்ணையும் கூட்டினால் ஒன்பதே வரும். அதுதான் எண் ஒன்பதின் தனித்தன்மை எனலாம்.... ஆனால் தமிழில் ஒன்பது என்றால் 9 அல்ல, 90யைக் குறிக்கும். அதாவது 9 x 10 = 90. தொண்ணூறு என்றால் தமிழில் 90யை மட்டும் குறிக்கிறது. ஆனால் இது 9 x 100 = 900யைக் குறிக்கவேண்டும்.  தொள்ளாயிம் என்றால் தமிழில் ஒன்பது நூறுகளை மட்டும் குறிக்கிறது. அது ஒன்பது ஆயிரத்தைக் குறிக்கவேண்டும்.... ஒன்பது என்ற சொல்லை இனி ஒட்டு என்ற சொல்ல வேண்டும். இது இப்படி சரியாக இருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒட்டு, பத்து என்க...." (பக்.2-3).

வந்தாள் அல்ல, வந்தாளர்
"சத்தியமூர்த்தி வந்தான் என்று சொல்கிறோம். சத்தியமூர்த்தி கொஞ்சம் வயதானவராக இருந்து நாம் அவரை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று நினைத்தால் சத்தியமூர்த்தி வந்தார் என்று சொல்றோம். வந்தார் என்பது ஆண்பால் வினைச்சொல். அதே மாதிரி பெண்களைக் குறிக்கும்போது சரோஜா வந்தாள் என்கிறோம். சரோஜா கொஞ்சம் வயதானவராக  இருந்து மரியாதையாக அழைக்கவேண்டும் என்று விரும்பினால் சரோஜா வந்தார் என்று பேசுகிறோம், எழுதுகிறோம். வ்ந்தார் என்பது ஆண்பால் வினைச்சொல். ஆகையினால் சரோஜா வந்தாளர் என்று சொல்ல வேண்டும்........ மஞ்சுளா நன்றாகப் பாடினாள் என்பதை மரியாதையாக மஞ்சுளா நன்றாகப் பாடினாளர் என்று சொல்ல வேண்டும்.வாசகர்கள் என் கருத்தை ஒத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். அதற்காகத்தான் இந்த கட்டுரை, இந்தப் புத்தகம் எனலாம்".(ப.11).
 
ஆசிரியரின் பிற நூல்கள்
தாய், தாயி, ஆயி
"தாய் என்றால் என்ன பொருள் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்? அன்னை, அம்மா, நம்மைப் பெற்றவர் என்றும் பொருள்படும். சின்னக்குழந்தைகள் நமது கிராமங்களில் தனது பாட்டிகளை அம்மாயி என்று சகஜமாக அழைக்கின்றன. அதற்கு என்ன பொருள்? அம்மாவின் அம்மா (பாட்டி). அப்பாவின் அம்மா (இன்னொரு பாட்டி) என்று அர்த்தம். அதைப்போல் அம்மப்பா (தாத்தா) அப்பப்பா (இன்னொரு தாத்தா) என்று அழைத்தால் என்ன? சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.........இன்று  பேச்சுத்தமிழில் இருக்கும் அம்மப்பா (தாத்தா) அப்பப்பா (இன்னொரு தாத்தா) இந்த இரண்டு சொற்களையும் எழுத்துத் தமிழில் கொண்டுவரவேண்டும்....."(ப.13). 
காயம், ஈரங்கி, ஏட்டு
"......ஆறு வருஷமா கிளார்க்கா வேலைபார்க்கிறான் என்றார் மாப்பிள்ளையின் தந்தையார்.
அப்படியென்றால் வேலை காயம் ஆகியிருக்குமே? என்று இழுத்தாள் மூதாட்டி.
Confirmation தானே கேட்கிறீங்க? வேலை காயமாகி 4 வருடமாச்சி.....இந்த இடத்தில் காயம் என்றால் confirmation என்று பொருள்படும்....இந்த ஆங்கில வார்த்தை மருவி காயம் என்றுத் தமிழில் வழங்குகிறது. இதை நாம் திசைச்சொல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்....."(ப.15).

"........ஈரங்கி, ஈரங்கி என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? Hearing என்ற ஆங்கில வார்த்தையின் மரூஉதான் ஈரங்கி என்பது..........ஈரங்கி என்றால் என்றைக்கு வழக்கு விசாரணை என்று பொருள். இந்த ஈரங்கி என்ற வார்த்தையையும் திசைச்சொலலாக நாம் தமிழில் சேர்த்துக்கொள்ள வேண்டும்....."(ப.15).

"......ஏட்டு என்ற சொல்லை நாம் காவல்துறை வட்டாரத்தில் அடிக்கடி கேட்கக்கூடும். ஏட்டு என்றால் Head Constable என்று பொருள் தரும். கான்ஸ்டபிளுக்கு மேலே இன்ஸ்பெக்டருக்குக் கீழே உள்ள ஒரு பதவி இது. ஹெட் கான்ஸ்டபிள் என்ற சொல் மருவி ஏட்டு ஆகிவிட்டது. இதையும் திசைச்சொல்லில் தமிழில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.........."(ப.16).

"....இந்த சொற்களை அகராதியில் (Dictionary) சேர்க்கும்போது வளைவுக்குறிக்குள் (Bracket) என்னுடைய பெயரைப் போடவேண்டும். எப்படியென்றால் (Coined By Alagiri Visvanathan) என்றுப் போட வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்......."  என்று ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். 

மேற்காணும் சொற்களுடன் வேறு சில சொற்களைப் பற்றியும், பயன்பர்டுகளைப் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் விவாதிக்கிறார். அவர் சொல்லும் சில சொற்கள் ஏற்கக் கூடியனவாக இருப்பினும் சிலவற்றின்மீது நீண்ட விவாதம் தேவைப்படுகிறது. இவ்வாறான ஒரு சிந்தனையுடன் அவர் படைத்துள்ள இந்நூலைப் படிப்போமே. வாசிப்பை நேசிப்போமே.

வேண்டுகோள் : நூலைப் பெறவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் விரும்பும் நண்பர்கள் நூலாசிரியரை அவரது முகவரியில் கடிதம் வழியாகவோ அலைபேசியிலோ (திரு அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, மராட்டியத் தெரு அருகில், டபீர் குளம் சாலை, கீழவாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9442871071) தொடர்பு கொள்ளலாம். உங்களது கருத்துக்களுக்காக அவர் ஆவலோடு காத்திருக்கிறார்.

52 comments:

  1. சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள்..
    நல்ல விளக்கங்களுடன் இனிய பதிவு..

    ReplyDelete
    Replies
    1. பல ஆண்டுகளாக மனதில் இருந்தனவற்றை இந்நூல் மூலமாக வெளிக்கொணர்ந்ததாகக் கூறினார் ஐயா அழகிரி விசுவநாதன் அவர்கள். தங்களின் கருத்திற்கு நன்றி.

      Delete
  2. ஏழு, எட்டு, ஒட்டு, பத்து
    சிந்தனையினைத் தூண்டும் நூல்
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் வித்தியாசமான சிந்தனையைத் தூண்டியது இந்நூல். நன்றி.

      Delete
  3. விளக்கம் படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை ஆர்வமாகத் தொடர்ந்து வரும் தங்களுக்கு நன்றி.

      Delete
  4. வித்தியாசமான பார்வை...
    நிலவன் அண்ணாத்தே
    ஜோ.வி
    கோபி
    பாண்டி
    பேட்டை இது எனவே அவர்களின் கருத்தை அறிய ஆவல் ..

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் கருத்து மாறுபடவாய்ப்பிருந்தாலும் இவ்வாறான ஒரு சிந்தனையைத் தூண்டிய ஆசிரியர் பாராட்டப்படவேண்டியவர். நன்றி.

      Delete
  5. அருமையான நூல் அறிமுகம்! கட்டாயம் வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படிக்க ஆர்வத்தை இந்நூல் தூண்டியதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  6. கண்டிப்பாக வாங்குவேன் ஐயா, பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கிப் படித்து, தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

      Delete
  7. சுவாரஸ்யமான பதிவுகள்...

    ReplyDelete
  8. whether another name for number nine will gain moment

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவதுபோல் நடக்கிறதோ இல்லையோ இவ்வாறான ஒரு சிந்தனைப் போக்கை நம்மிடம் தோற்றுவித்த நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. நன்றி.

      Delete
  9. சரோஜா வந்தாளர்//

    பயனுள்ள சிந்திக்க வேண்டிய பதிவு, அய்யாவுக்கு வாழ்த்துகளை சொல்லிருங்க !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தினை ஐயாவுக்குக் கூறிவிட்டேன். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  10. உங்கள் விமர்சனத்திலிருந்து, அய்யா அழகிரி விசுவநாதன் அவர்களின் இந்த நூல் வித்தியாசமானது என்று தெரிகிறது. இவரைப் போன்ற உணர்வாளர்கள் இப்போது அருகி வருகிறார்கள். தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முரசு புத்தக நிலையத்தில் இந்த நூல் கிடைக்குமா என்பதனைத் தெரிவிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. பதிவில் தரப்பட்டுள்ள பதிப்பாளர் முகவரியில் தொலைபேசியிலோ கடிதம் வழியிலோ தொடர்பு கொண்டால் நூலை அனுப்பிவைப்பர்.

      Delete
  11. தமிழைக் கற்போரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது,எனவே கற்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்போம்/ அ. கலைமணி

    ReplyDelete
    Replies
    1. இந்நூலாசிரியரைப் போல வேறு பலர் தாங்கள் கூறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  12. நமது எழுத்துக்களிலும் மாற்றம் வேண்டும். உதாரணத்துக்கு க எழுத்து கடல், கண்டம் இரண்டிலும் ஒரே எழுத்து ஆனால் உச்சரிப்பில் மாற்றம். இது போன்று ச, த, ட, ப.

    ReplyDelete
    Replies
    1. புனேயிலிருந்து வந்த தங்களின் கடிதம் மனதிற்கு நிறைவைத் தந்தது. ஐயாவில் நூல் தங்களுக்கும் சிந்தனையைத் தூண்டியதறிந்து மகிழ்ச்சி.

      Delete
  13. Age 84 page20! His affection towards tamil language is laudable!! Great man!

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் அவருக்கு எழுத்து மற்றும் வாசிப்பில் நேசிப்பு. தாங்கள் கூறுவதைப் போல் பெருமனிதர்தான். நன்றி.

      Delete
  14. எவ்வளவு வயதானால் என்ன. ?அங்கீகாரம் வேண்டும் என நினைப்பது இயல்புதானோ. அகராதியில் அவர் பெயரை வளைவில் இட வேண்டும் என்கிறார் என்பதைப் படிக்கும்போது தோன்றிய கருத்து. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தன் முயற்சிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கப்படவேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிந்திக்கத்தக்கது. வருகைக்கு நன்றி.

      Delete
  15. ஐயா தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது பதிவை பார்க்கவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தொடர்பதிவில் இணைத்தமையறிந்து மகிழ்ச்சி. அன்புக்கு நன்றி.

      Delete
  16. ஒன்பது ஒட்டு குறித்த கருத்தை ஒப்புவதற்கில்லை. இதற்குத் தெளிவான இலக்கண வரையறை உண்டு. அடுத்து, “வந்தார்“ என்பது அய்யா சொல்வதுபோல், ஆண்பால் வினைச்சொல் அன்று. அது பலர்பால் விகுதி. (ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆண் இருவர், பெண் இருவர், ஆணும் பெண்ணுமாய் இருவர் வந்தார் என வரும்) அள் எனும் பெண்பால் விகுதியின் பின் அர் சேர்ப்பது குழப்பமாகும். ஒருவர் எனும்போது மரியாதைப் பன்மைப் பொருள் படும். இதற்கும் இலக்கணமுண்டு. அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா என்பது ஈழத்தமிழில் ஏற்கெனவே உள்ளது, தமிழகத்திலும் சில இடங்களில் புழங்கிவருகிறது. ஈரங்கி, ஏட்டு, சைக்கிள் போலப் புழக்கத்தில் உள்ளதுதான். அய்யாவின் ஆர்வத்தை பாராட்டுவோம் ஆனால், இலக்கணத்தை நாம் நினைத்தபடி திருத்த இயலாது. புதியன புகுதல் என்பது சொற்களில் என்றாலும் அதற்கு மரபார்ந்த பொருட் பின்னணி தேவை. பாவாணர் அய்யாவின் வேர்ச்சொற் கட்டுரைகள், சிவத்தம்பி அவர்களின் இலக்கணமும் சமூக உறவுகளும், அருளி அய்யாவின் கட்டுரைகளை அழகிரி அய்யா படிக்க வேண்டுகிறேன். “தொன்மையவாம் எனும் எவையும் தீதாகா, இன்று தோன்றியநூல் எனும் எவையும் நன்றாகா” (மாற்றத்திற்கு மன்னிக்க) ஆங்கிலேயர் ஒருவர் குறளுக்குத் தவறான பொருள்தந்து உரையெழுத, நூல் பிரதி மொத்தத்தையும் வாங்கிக் கொளுத்திய பாண்டித்துரையார் நினைவுக்கு வருகிறார். முனைவர் ஜம்புலிங்கனார் அய்யா என்னை மன்னிக்க வேண்டும். இதனை வெளியிடுவது உங்கள் விருப்பம். ஆனால் என் கருத்து இதுதான். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முத்துநிலவன் அய்யாவின் கருத்தற்கு முழுதும் உடன்படுகிறேன்.
      “ தொன்“ என்ற சொல் முன் எனும் பொருள் படும். தொன் பத்து என்பதற்கு பத்திற்கு முன்
      தொன் நூறு என்பதற்கு நூற்றிற்கு முன்
      இவ்வாறே இன்ன பிற.........!
      திராவிட மொழிகள் பலவற்றிலும் இவ்வமைதி காணப்படுகிறது.
      தெலுங்கின் தொம்பதி இதற்கு எடுத்துக்காட்டு.
      திராவிட மொழிகளில் எழுத்துக்கள் முதலில் எட்டு வரைதான் இருந்தது. பின்தான் ஒன்பது பத்து என எண்கள் விரிவடைந்துள்ளன என ஒரு பார்வை ஆய்வுலகில்உண்டு.
      வழக்கில் “எட்டுற“ வரைக்கும் என எட்டினை முடிவெல்லைப் பொருளில் வழங்குவதை அவர்கள் இதற்குச் சான்று காட்டுவர்.
      விளக்க இலக்கணத்திற்குப் பெருந்தடையாய் இருக்கும் தொன்னூறு, தொள்ளாயிரப் புணர்ச்சியை மல்லுக்கட்டி விதி வகுத்துக் கொணரும் பண்டைய இலக்கணக்காரர்களின் போராட்டம் மரபு வடிவத்தை நிலை நாட்டுதற்கே ஆகும்.
      மாற்றம் வரவேற்கப்படவேண்டியதுதான். அது ஏறுக்குமாறாய் அமைந்திடக்கூடாது.
      “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      னகர முதற்றே உலகு“
      என்றும்
      “தக்கார் தகவிலார் என்ப தவரவர்
      மக்களாற் காணப் படும்“
      என்றும் திருவள்ளுவரையே திருத்திய தமிழப் பெருமகனாய் சுகாதியர் எனத் தன் பெயர் தோற்றிய W. SCOTT, தான் திருந்திய உரையைப் பாடமாக வைக்க வேண்டுமென தியாகராய செட்டியாரிடத்திலே கொண்டுபோய் அவரால் வெளித்துரத்தப்பட்டதையும்,
      அந்தத்திருத்தங்களையும் போற்றி ஆகா ஓகோ வெனப்புகழ்ந்து ஒரு கூட்டம் அவரைப் பாராட்டியதையும்,
      பாண்டித்துரைத் தேவர் அப்புத்தப் பிரதிகள் அனைத்தையும் கொணர்வித்துத் தீயிட்டெரித்ததையும் வரலாறு இன்னும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.
      நன்றி

      Delete
    2. திரு முத்துநிலவன் ஐயா அவர்களின் கருத்து பிறிதொரு கோணத்தில் சிந்திக்கவைத்துவிட்டது. காலத்தின் போக்கில் இவ்வாறான மாற்றுச் சிந்தனைகள் வருவதும் அவை தொடர்பான விவாதங்கள் எழுவதும் தேவை. தங்கள் இருவரின் ஆழமான விவாதம் பல புதிய செய்திகளை வெளிப்படுத்தியதோடு தெளிவு பிறக்கவும் உதவியது. நன்றி.

      Delete
    3. அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் கருத்தை நானும் வரவேற்கிறேன்.
      சிறந்த நூலறிமுகம்.

      Delete
    4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  17. காயம் எனும் சொல் பர்மனெண்ட் எனும் பொருளில் எனக்குத் தெரிந்து, 40ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. காயமா பதிலியா? என்று கேட்டபின்னரே தகுதிகாண் பருவம் முடிவுக்கு வரும். இது எனது பணிப்பதிவேட்டில் 1981ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறிய இக்கருத்தை தஞ்சையில் ஓய்வு பெற்ற அலுவலர் கூறினார். தாங்களும், அவரும் கூறுவதற்கு முன் இச்சொல்லைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. நன்றி.

      Delete
  18. நான் இப்பொழுது தான் தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன்.

    நேரம் கிடைக்கும்போது, தங்களின் பழைய பதிவுகளை படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கு நன்றி. பதிவுகள் மூலமாக நட்பைத் தொடர்வோம். நன்றி.

      Delete
  19. எட்டு ஒட்டு ம்...ம்...... சித்திக்க வைக்கும் பதிவுகள்.
    தொடர்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  20. இருக்கும் மொழியுருவின் இன்பத்தின் ஊற்றை
    மருவாமல் காத்தல் மதி !

    உள்ளம் தெளிந்து உரைப்பவர்கள் எல்லாம் குழப்பங்களையே விதைக்கின்றார்கள் ...என்ன கொடுமைடா சாமி ...!

    எனக்கு பிடித்திருக்கு இந்த தமிழ் இதில் எதுக்கு மாற்றங்கள் !

    ReplyDelete
    Replies
    1. மாற்றமில்லா தமிழை வரவேற்கும் தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  21. நூல் பற்றிய விமர்சன‌மும் விவாதங்களும் கருத்துக்களும் படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது. புதிய நூலை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றி!!

    என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் மனமார்ந்த நன்றியை மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  22. தமிழ் சீர் திருத்தம் நல்லதுதான்....இதில் தொண்ணூறு என்பதற்கு மகன் சிறு வயதில் எப்படி இதைத் தொண்ணூறு என்று சொல்றாங்க....தப்பு....9 நூறுகள் அப்படின்னா 900.....அதே போல தொள்ளாயிரம் 9 ஆயிரம்...இதையெல்லாம் கேள்வி கேட்பான்...ஆனால் அப்போது இது போன்ற சொற்களைச் சொல்லி விளக்கத் தெரியவில்லை! இதில் ஒரு சிலவை வழக்கில் இருக்கலாம்...தொகுப்புகளில்....சில, பல விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பிறகு வழக்கில் வரலாம்....பெரியார் எழுத்துக்கள் எப்படி இப்போது பின்பற்றப்படுகின்றதோ அது போன்று....

    மிக நல்ல பகிர்வு ஐயா.

    தங்கள் தளத்தை இப்போதுதான் தொடர்கின்றோம். வாசிப்பதற்கு நிறைய உள்ளன....தங்கள் தளத்தில்.....வாசிக்கின்றோம் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறிமுகம் மகிழ்வைத் தருகிறது. தங்களின் கருத்தை அறிந்தேன். நன்றி.

      Delete
  23. தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் : அழகிரி விசுவநாதன் = Dr B Jambulingam அவர்களின் அருமையான தமிழ் பதிவு. புத்தகம் பற்றிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் Dr B Jambulingam

    ReplyDelete
  24. இப்பதிவைத் தாங்கள் பகிர்வதறிந்து மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் : அழகிரி விசுவநாதன் = Dr B Jambulingam = அழகு தமிழில் ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். புத்தகம் தேவைப்படுபவர்கள் அதிலுள்ள முகவரிக்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம். நல்ல புத்தகங்கள் விற்பனைக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்.
    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர் வருகையும், கருத்துக்களும் என்னை மென்மேலும் எழுதவைக்கின்றன. நன்றி.

      Delete
  26. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ சபயள

    ReplyDelete