22 November 2014

தஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் : தமிழ்ப்பல்கலைக்கழகம்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகக் கல்வெட்டுத்துறையில் நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கு (Indus Script Seminar) என்ற   ஒரு கருத்தரங்கு மறக்கமுடியாத இரு நிகழ்வுகளை எனக்குத் தந்தது. ஒன்று மகிழ்ச்சி. மற்றொன்று கசப்பு.

முதலில் மகிழ்ச்சியைத் தந்த அனுபவம். அப்போதைய பதிவாளர் என்னை அழைத்து வரலாற்றறிஞர் ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ள கருத்தரங்கிற்குரிய  ஏற்பாடுகளைச் செய்யும்படிக் கூறினார். அப்போது கருத்தரங்கு, பேராளர்கள், அறிஞர்கள், கட்டுரை வாசிப்பு, கடவுச்சீட்டு போன்றவை பற்றி எனக்கு என்னவென்றே தெரியாது. உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் (30 பேர் என நினைக்கிறேன்) கலந்துகொண்ட கருத்தரங்கில் அரங்க அமைப்பு முதல் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் பொறுப்பில் என் உடன் பணியாற்றியவர் திரு மகேந்திரராவ். கருத்தரங்கின் ஓர் அங்கமாக அறிஞர்கள் பெரிய கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். முதன்முதலாக தஞ்சாவூர் பெரிய கோயில் விமானத்தின் உள்ளே காணப்படும் ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து பல முறை அந்த ஓவியங்களைப் பார்த்துள்ளேன். கருத்தரங்கிற்கு லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் கீனியர் வில்சன் என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு கசப்பான அனுபவம். கடவுச்சீட்டு கிடைத்தபின் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு சிறப்பாக நிறைவு செய்தோம். நிறைவு நாளன்று  அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களும் பதிவாளர் அவர்களும் எங்களை அதிகம் பாராட்டினர்.  பெரிய கோயில் ஓவியங்களைக் காண அரிய வாய்ப்பு கொடுத்ததே இந்த கருத்தரங்குதான்.


 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கூறும் அந்த ஓவியங்கள் தஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் என்ற தலைப்பில் நூலாக தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அரிய ஓவியங்களைப் பற்றிய செய்திகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.

முன்னுரையில் துணைவேந்தர்
".......தஞ்சைப் பெரிய கோயிலின் சோழர் கால ஓவியங்கள் 1931ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவிந்தசாமி அவர்களால் கண்டறியப்பட்டிருந்தும் முழுமையாக நூல்  வடிவில்முதன்முறையாக ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அளிக்கும் பெருமையினைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் பெறுகிறது....."

சோழர்கால ஓவியப் பகுதிகள்
"கோயில் விமானத்தின் தென் பகுதியில் உள்ள ஏணியில் ஏறித் திருச்சுற்றுப் பாதை வழியாக வடக்குப் பக்கம் சென்றால் இப்பாதையின் இரு பக்கங்களிலும் உள்ள இரு சுவர்களின் உட்புறப் பகுதிகளில் ஓவியங்கள் இருப்பதைக் காணலாம். இச்சுவர்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோழர் கால ஓவியப் பகுதிகளை ஒன்பது பெரும் பகுதிகளாகப் பிரித்துக் காணலாம்". தெற்கு உட்சுவரின் தெற்கு நோக்கிய ஓவியம்,  மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம், வடமேற்கு உட்சுவரின் வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓவியம், வடக்கு உட்சுவரின் வடக்கு நோக்கிய ஓவியம், வடக்கு உட்சுவரின் தெற்கு நோக்கிய ஓவியம்,   வடமேற்கு வெளிச்சுவரின் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கிய ஓவியம், மேற்கு உட்சுவரின் கிழக்கு நோக்கிய ஓவியம், பிற ஓவியம் என்ற நிலைகளில் ஓவியங்களின் அமைவிடம் சிறப்பாகக் குறிக்கப்பட்டு ஓவியங்களின் புகைப்படங்களும், ஓவியங்களைப் பற்றிய செய்திகளும், ஓவியங்களின் கோட்டுருவங்களும் பார்ப்பவர் மனதில் பதியும் வகையில் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.

ஓவியங்களும் விளக்கமும்
நூலிலுள்ள ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே அதனருகில் தரப்பட்டுள்ள செய்திளைப் படிக்கும்போது நேரில் சென்றால்கூட இந்தஅளவுக் கண்டு புரிந்துகொள்ளமுடியுமா என்ற ஓர் ஐயம் ஏற்படும். பாமரர் வரை அறிஞர் வரை அனைவரும் மனதிலும் எளிதில் மனதில் பதியும் வகையில் படங்களும், விளக்கங்களும் அமைந்துள்ளன. சில ஓவியங்களுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.

மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம் (ஒன்று)
"........இவ்வோவியம் சுந்தரரின் கதையை விளக்குகின்ற ஓவியமாகும். சுந்தரர் மண்ணுலகில் சடையனார் இசைஞானியாருக்கு மகனாகத் திருநாவலூரில் பிறக்கின்றார். உரிய வயதில் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இத்திருமண நிகழ்ச்சி இவ்வோவியத்தில் மிக எழிலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது......".

மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம் (இரண்டு)
"....இப்பகுதியில் தீட்டப்பட்ட ஓவியம் தில்லையில் ஆடல்வல்லானை மாமன்னன் இராசராசனும் அவரது மனைவியர்களும் வழிபடும் காட்சித்தொகுதியாகும். இராசராசன் காலத்தில் தில்லைக் கோபுரங்கள கேரள அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தன. தட்டோடுகள் வேயப்பட்டு இவை காட்சியளிக்கின்றன...."

"....பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் ஆடல்வல்லான் தூக்கிய திருவடியுடன் ஒரு காலினை முயலகன்ம் மீது இருத்தி, முகத்தில் புன்னகை தவழத் திருநடனம் புரிகின்றார். வெண்மை நிறத்தில் காட்டப்பட்டுள்ள இவரது மேனி புலித்தோல்ஆடையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆடும் நிலையைக் காட்ட இறைவனின் முடிக்கற்றைகள் இரு பக்கங்களிலும் விரிந்தும் சுருண்டும் செல்கின்றன. இதனைக் கருமை நிறத்தில் ஓவியர் காட்டியுள்ளார். உள்ளே மகரந்தத்தை உடைய தண்டுகளுடன் ஊமத்தம்பூ தலையின் இடப்பக்கம் நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது. வலப்பக்கத் தலைமுடி பாரத்தில் கங்கை அமர்ந்துள்ளாள்...."

வடமேற்கு வெளிச்சுவரின் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கிய ஓவியம்
 "....இவை சிவன்-பார்வதி திருமணக் கோலமான கல்யாணசுந்தரமூர்த்தியின் ஓவியங்களாகும். திருமணக் கோலத்தில் சிவனும் பார்வதியும் நின்றிருக்கத் திருமணத்தைத் திருமால் நடத்தி வைக்கிறார். பொன்னாலான பாத்திரத்திலிருந்து நீர் தெளித்துக் கன்னியாதானத் திருமணத்தை நடத்தி வைக்கின்றார். சிவன் உருவம் சிவப்பு நிறத்தில் இங்கு வரையப்பட்டுள்ளது. முழுவதும் அழிந்த நிலையில் இவரது உருவம் காணப்படுகிறது....."

தஞ்சாவூர் பெரிய கோயில் ஓவியங்களை நேரில் காணும் வாய்ப்பு பெறாதவர்கள் இந்நூலிலுள்ள ஓவியங்களைப் பார்த்தால் அக்குறை நீங்கப் பெறுவர். ஓவியங்களுக்கான விளக்கங்கள் படிப்பவர்களுக்கு மேலும் பல தெளிவுகளைத் தரும். மிகவும் சிறப்பாக முழுக்க முழுக்க ஆர்ட் தாளில் அமைந்துள்ள 156 பக்கங்கள் கொண்ட இந்நூல் மிகச் சிறந்த வரலாற்று ஆவணம். இந்நூலை வாங்கிப் படிப்போமே, ஓவியங்களை ரசிப்போமே.

தஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு செப்டம்பர் 2010, ரூ.500

25 comments:

  1. அரிய தகவல்கள் பலதும் அறிந்து கொண்டேன் நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அன்புடையீர்..

    காலத்தை வென்று நிற்கும் பெரிய கோயிலில் மூலஸ்தான திருச்சுற்றினுள் வரையப்பட்டுள்ள ஓவியங்களைப் பற்றி முதல் அறிந்த நாள் நேரில் கண்டு மகிழ பெரும் ஆவல்.

    தற்போது கூட விடுமுறையில் வந்த போது அவற்றைக் காண்பதற்கு முயற்சித்தேன்.

    அது - சாதாரண மக்களுக்கு ஆகாத காரியம் என்று தெரிய வந்தது.

    இருப்பினும் திருக்கோயிலின் தென்புறமாக உள்ள அருங்காட்சியகத்தில் சில ஓவியங்கள் ஒளிப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன..

    ஆயினும் - என்றேனும் ஒருநாள் நேரில் காண்பேன் என்று நினைக்கின்றேன்..

    ஓவியங்களை நினைவு கூர்ந்த தங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    உயர்தரப் பாடத் திட்டத்தில்ஒரு பாடமாக இந்து நாகரீகம் என்ற பாடப்பரப்பு படித்தது போல ஒரு உணர்வு மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மிக அரிய தகவல்கள் நல்ல விளக்கங்களுடன் கொடுத்துள்ளீர்கள்! அறிந்து கொண்டோம். நூல் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி! செல்லும் போது ஓவியம் காண ஆசை....முயற்சிக்கின்றோம். மிக்க நன்றி! ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே !
      ஓவியத்தைக் காண நம்மை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.
      அதற்குச் சிறப்பு அனுமதியும் சிபாரிசும் தேவைப்படலாம்.

      Delete
  5. இதற்கென ஒருமுறை தஞ்சாவூர் வர வேண்டும் ஐயா... கூடவே நீங்களும் கரந்தையாரும் இருக்க வேண்டும்...!

    ReplyDelete
  6. இதற்கென ஒருமுறை தஞ்சாவூர் வர வேண்டும் ஐயா... கூடவே நீங்களும் கரந்தையாரும் இருக்க வேண்டும்...!

    ReplyDelete
  7. ஐயா,
    பலமுறை தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் போயிருக்கிறேன்.
    விமானத்தின் நிலைகளில் போக எல்லார்க்கும் அனுமதிக்கப் படாததால் பார்க்க முடியவில்லை.
    தங்களின் தகவல் பகிர்வு ஒரு அரிய சேவை.
    தமிழ்ப்பல்கலைக்கழகம் கழிவுகள் அறிவிக்கும் சமயமும் தெரிவித்தீர்கள் என்றால் பல நூல்களைப் பார்த்து வாங்கப் பேருதவியாய் இருக்கும்.
    தங்களின் பகிர்வுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  8. //நேரில் சென்றால்கூட இந்தஅளவுக் கண்டு புரிந்துகொள்ளமுடியுமா // ஆமாம், ஏற்கனவே படித்து வைத்திருந்தால் அல்லது விடயம் அறிந்த ஒருவரோடு சென்றால் தவிர முழுமையாக ரசிக்க இயலாதுதான்.

    அருமையான கட்டுரை. தஞ்சைக்குப் போகக் கிடைத்தால் மீண்டும் உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு, மேலும் விபரங்கள் தேடிப் படித்துவிட்டுத்தான் போவேன்.

    ReplyDelete
  9. ஓவியங்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. அடுத்தமுறை தஞ்சை பெரிய கோயில் செல்லும்போது அவசியம் பார்க்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட நூலினை எங்கள் மாவட்ட மைய நூலகத்தில் கேட்டுப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. பெரிய கோவில் ஓவியங்கள் குறித்து மிக அழகான கட்டுரையாக்கித் தந்திருக்கிறீர்கள்.

    இன்னும் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்றதில்லை. இந்த முறையேனும் சென்று எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும்...

    நல்ல கட்டுரை ஐயா.

    ReplyDelete
  11. இதுவரை, நான் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றதில்லை. அடுத்த முறை இந்தியா வரும்போது, முடிந்தால் சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  12. அறியாதன அறிந்தேன்
    ஒரு அரிய வாய்ப்பை அருமையாக பயன்படுத்தியுள்ளது
    மிக்க மகிழ்வளிக்கிறது
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. எங்களைப் போன்றவைகள் போழுதுப்க்குக்காக எழுதிக்கொண்டிருக்கிறோம். தங்கள் தமிழர் பெருமையை பறைசாற்றும் பல தகவல்களை பதிவு செய்கிறீர்கள். சோழர் கால ஓவியங்கள் பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஒளிந்திருக்கும் ஓவியங்களை வார்த்தைகளால் கண்முன் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் வெளிப் புறக் காட்சிகள் தான் காண முடிந்திருக்கிறது. ஓவியங்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நேரில் பார்த்து ரசிப்பதற்கும் புகைப் படத்திலோ புத்தகங்களிலோபார்ப்பதற்கும் அசலுக்கும் நகலுக்கும் உள்ள வேறு பாடுதான். உங்களிடம் அந்தப் புத்தகம் இருந்தால் ஓவியங்களைப் புகைப்படமெடுத்து இட்டிருக்கலாம். நூலின் விலை சாதாரண மனிதனுக்கு அதிகம் அல்லவா. ஓவியங்களின் நகல்கள் மியூசியத்தில் இருப்பதாக படித்த நினைவு. எந்தக் கோவிலிலும் விமானம் வரை சென்று பார்க்க அனுமதிப்பதில்லை. உங்கள் பணி பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. பல முறை சென்றிருந்தும் ஓவியங்களைப் பார்த்ததில்லை. கண்டிப்பாய் மறுமுறை சென்று பார்த்து ரசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  19. தினமும் பயணம் தொடரட்டுமே......!

    ReplyDelete
  20. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_28.html?showComment=1417134527203

    ReplyDelete
  21. புத்தக விமர்சனத்திற்கு நன்றி/அ.கலைமணி

    ReplyDelete
  22. உங்களுடைய இப்பதிவினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். தங்கள் தகவலுக்காக!

    http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_31.html

    நட்புடன்
    ஆதி வெங்கட்

    ReplyDelete
  23. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete