09 November 2014

கரந்தை மாமனிதர்கள் : கரந்தை ஜெயக்குமார்


நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கரந்தை மாமனிதர்கள் என்னும் நூலை வெளியிடும் வாய்ப்பினை அண்மையில் பெற்றேன். வலையுலகில் அவரை அனைவரும் அறிவர். அவருக்கு எண்ணிலடங்கா ரசிகர்கள். அவருடைய எழுத்து படிப்பவரை ஈர்க்கும். அவருடைய நட்பு ஆழமானது. அவருடைய கரந்தை ஜெயக்குமார் என்ற தலைப்பிலான வலைப்பூவில் அவர் எழுதியுள்ள பன்முகக் கட்டுரைகளைக் காணலாம்.  


   
அவருடய இந்நூலில் ஐந்து கட்டுரைகள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே அவருடைய வலைப்பூவில் வெளியானவையாகும். தனக்கு ஏற்றமிகு வாழ்வளித்த கரந்தைக்கு தான் என்ன செய்துள்ளோம் என தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் அவர், அதற்கான விடையாக இந்நூலை தமிழ்கூர் நல்லுலகிற்கு அளித்துள்ளார். கரந்தையைச் சேர்ந்த ஐந்து அரிய மனிதர்களை அவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். வலைப்பூவில் முன்னரே படித்திருந்தபோதிலும் அச்சு வடிவில் மறுபடியும் படிக்கும்போது இன்னும் அதன் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.  தான் வளர்ந்த, படித்த, பணியாற்றுகின்ற கரந்தை என்று மிகவும் பெருமையோடு அவர் கூறிக்கொள்ளும்போது அவருடைய ஈடுபாட்டையும் ஆழமான உணர்வையும் புரிந்துகொள்ளமுடிகிறது. 

முதற்கட்டுரை தமிழ் மொழிக்காகவும், தமிழர்தம் முன்னேற்றத்திற்காகவும் அரும்பணியாற்றியுள்ள செந்தமிழ்ப்புலவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களைப் பற்றியதாகும். (பக்.1-3) கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் த்லைவராக அவர் பொறுப்பில் இருந்து ஆற்றியுள்ள பணிகளை நூலாசிரியர் பட்டியலிடும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது. 

நேசமே சுவாசமாய் என்ற தலைப்பிலான இரண்டாவது கட்டுரை உடல் தளர்ந்து, கால்கள் வலுவிசழந்து நடக்க இயலாத நிலையில்கூட, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை விட்டு அகலாது, தனது இறுதி மூச்சு வரை நேசம் காத்த, பாசம் போற்றிய கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்களைப் பற்றியதாகும். (பக்.4-10). தனது வாழ்வும் சாவும் உமாமகேசுவரனார் இருந்த கரந்தையிலேயே என்பதில் இவர் உறுதியாக இருந்துள்ளதை ஆசிரியர் சிறப்புற முன் வைத்துள்ளார்.

அடுத்த கட்டுரை கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்ட பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் இலக்கிய மற்றும் களப்பணியைப் பற்றியதாகும். (பக்.11-18) இலக்கியம், வரலாறு, களப்பணி என்ற மூன்று நிலைகளிலும் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அளவிடற்கரியதாகும். கண்ணகி பயணித்த பாதை வழியாக அவர் நடந்து சென்று வரலாறு படைத்துள்ளார். அவரைப் பின் தொடர்ந்து ஆசிரியர் அருமையான பதிவு மேற்கொண்டுள்ளார். 

நான்காவது கட்டுரை ஆங்கிலேயர் காலத்தில் பொறியியல் பட்டம் பெற்று, பொதுப்பணித்துறையில் பணியாற்றிய, சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகி திரு கரந்தை காந்தி என அன்போடு அழைக்கப்படும் திரு ச.அ.சாம்பசிவம்பிள்ளை அவர்களைப் பற்றியதாகும். (பக்.19-21). நம்மை அடிமைப்படுத்தி அரசாளும் ஆங்கிலேயர்களின் கீழ் பணியாற்றும் எண்ணத்தைத் துறந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியில் சேர்ந்து அதனையே தன் இல்லமாகக் கொண்டவரைப் பற்றி வேட்கையுடன் எழுதியுள்ளார்.

நிறைவுக்கட்டுரை, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்னும் பெயரில் ஒரு மாநாடு செயலாக்கம் பெற முழுமுதற்காரணமாய் அமைந்த சமூக சேவகர், மருத்துவமணி டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களைப் பற்றியதாகும். (பக்.22-26). பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அம்மையாரைப் பற்றிய வாழ்வு அனைவரும் அறியப்படவேண்டும் என்ற நன்னோக்கில் அரிதின் முயன்று விவரங்களைத் திரட்டி எழுதியுள்ளார்.

சிறிய நூல். பெரிய அறிஞர்கள். அரிய கருத்துக்கள். முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட இந்நூலை வாங்கி வாசிப்போமே. 

நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (அலைபேசி 94434 76716)
தலைப்பு    : கரந்தை மாமனிதர்கள்
பதிப்பகம்   : பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர், மூன்றாவது தெரு, 
             மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613 004
பதிப்பு      : அக்டோபர் 2014
விலை     : ரூ.50


இந்நூலை மதுரையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் திருவிழாவில் பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க, மதுரை மாவட்டச் செயலாளர், மனித நேயப் பண்பாளர் திரு எஸ். சூரியன் அவர்கள் அவர்கள் வெளியிட அதன் முதற்படியினைப் பெறும் பேற்றினைப் பெற்றேன். முதற்படியினை வெளியிட்ட நண்பருக்கும், முதற்படியினைப் பெறும் வாய்ப்பினை அளித்த நூலாசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வலைப்பதிவர் மாநாட்டில் பல நண்பர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை மாநாடு ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
    
கரந்தை மாமனிதர்கள் நூல் வெளியீடு
மேடையில் நண்பர்களுடன்





கரந்தை மாமனிதர்கள் என்ற அரிய நூலை நமக்குத் தந்துள்ள நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் கரந்தை மாமனிதரே. அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், பிற சாதனைகளையும் காண தமிழ் விக்கிபீடியாவில் கரந்தை ஜெயக்குமார் பெயரில் நான் துவங்கியுள்ள பக்கத்திற்கு அன்போடு அழைக்கிறேன்.

13 comments:

  1. நானும் படித்தேன் ஐயா அதனைப்பற்றிய பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா
    தங்களின் சீரிய வழிகாட்டுதலில் நடப்பவன் நான்.
    தங்களின் அன்பு கண்டு நெகிழ்ந்து போய் நிற்கின்றேன் ஐயா
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete
  3. சிறந்த ஆசிரியரின் சிறந்த நூல் பற்றிச் சிறப்பான அறிமுகம் அய்யா!
    கரந்தையும் தஞ்சையும் என் வாழ்வில் பாதியானவை!
    அவற்றைப் பற்றி யார் பேசக் கேட்டாலும் மகிழ்ச்சிதான்!
    பகிர்விற்கு நன்றி!!!

    ReplyDelete
  4. நூல் அறிமுகம் நன்று! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. சிறப்பான அறிமுகம் ஐயா...

    ReplyDelete
  6. //கரந்தை மாமனிதர்கள்..//
    சிறப்பான நூல் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி ஐயா..

    ReplyDelete
  7. அன்பின் ஜம்புலிங்கம்

    அருமையான பதிவு - சிறப்பான அறிமுகம் - பாராட்டுகளைப் பெறத் தகுதியான பதிவர் கரந்தை ஜெயக்குமார்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. கரந்தை மாமனிதர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியை ஜெயகுமார் அவர்கள் வலைதளத்தின் மூலம் தொடர்ந்து அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.
    நூலை நானும் படித்தேன். அய்யா . சிறப்பான அறிமுகம் செய்துள்ளீர்கள். இந்த மனிதர்கள் பட்டியலில் ஜெயக்குமார் அவர்களின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்

    ReplyDelete
  9. நூல் வெளியீட்டு விழா செய்திகள், படங்களோடு நல்லதொரு விமர்சனம். நானும் மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பின் போது, அரங்கத்தில் இந்த நூலை வாங்கினேன். ஏற்கனவே கரந்தை ஜெயக்குமார் அவர்களது வலைத் தளத்தில் படித்த இந்த கட்டுரைகள் நூலாக வந்திருப்பது மிக்க மகிழ்வான விஷயம். தஞ்சை வரலாற்று நூல்களில் இந்நூல் ஒரு முக்கிய மைல் கல்லாக விளங்கும். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி அய்யா. விழாவில் பங்கேற்கும் பேறு பெற்றது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். .

    ReplyDelete
  11. நான்தான் அய்யா புத்தகத்தை வாங்காமல் வந்துவிட்டேன். அங்கிருந்த நம் சகோதர சகோதரியரைச் சந்தித்துப் பேசுவதிலும், குறிப்பாக கிரேஸின் குடும்பத்தினரை முதன் முதலாகப் பார்த்ததிலும் நூல்வாங்க விட்டுப்போனது. அய்யாவிடம் பேசி வாங்க வேண்டும். மன்னிக்க வேண்டும்

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  13. அய்யாவணக்கம்,கரந்தைமாமனிதர்கள்பற்றிதெரிந்துகொள்வதற்குநல்லதொருவாய்ப்பினைத்தந்தீர்மனதைதொட்ட
    விடயம்தங்க (தங்குவதற்காக)பதக்கம்,சிலப்பதிகாரப்பாதையின்
    உண்மைகண்டஉத்தமர்உயிரோடுஇருப்பதுஎன்றசெய்தி.
    அந்தஇடங்களைநாமும்சென்றுபாற்கவேண்டுமென்றஆர்வத்தைதூண்டியது

    ReplyDelete