07 December 2014

அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை : ஜ. பாக்கியவதி

அண்மையில் நாங்கள் சென்ற தலப்பயணம் தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரை இன்றைய தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இதனை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி. 


காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.

 8.10.2014 அன்று விடியற்காலை அலகாபாத் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடச் சென்றோம். கங்கா, யமுனா மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று புனித நீராடிவிட்டுத் திரும்பினோம். மூன்று ஆறுகளும் சேரும் அவ்விடத்திலிருந்து சூரிய உதயம் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொடர்ந்து ஆனந்த பவனம்.

 கயா: 9.10.2014 காலை கயா வந்தடைந்தோம். காலையில் விஷ்ணுதத் கோயில் சென்றோம். அங்கு ஒரு நபருக்கு ரூ.270 வீதம் எங்கள் குழுவில் பலர் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தனர். தொடர்ந்து மங்களகெüரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.

 புத்தகயா: மதியம் புத்தகயா. அங்கிருந்த புத்தர் கோயிலான மகாபோதி கோயில் சென்றோம். அழகான புத்தரைப் பார்த்தோம். கோயில் வளாகத்தில் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புகழ் பெற்ற போதி மரத்தினைப் பார்த்தோம். மரத்தின் அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் இருந்தது. போதி மரத்தருகே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கோயிலைச் சுற்றியும் காணப்பட்ட அமைதியான சூழல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து தாய்லாந்து புத்தர் கோயிலைப் பார்த்தோம். அதற்குப் பின்னர் அமர்ந்த நிலையில் பார்க்க கம்பீரமாக இருந்த புத்தர் சிலையில் என்னவொரு சோகம்?

 காசி: 10.10.2014 காலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காசி மண்ணில் காலடி வைத்தோம். கங்கையில் நாங்கள் இருவரும், எங்கள் குழுவினருடன் புனித நீராடினோம். காலையில் காமகோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். பின்னர் கேதாரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பின்புறம் கங்கை ஓடுவதைப் பார்க்க அழகாக இருந்தது. அடுத்தபடியாக காசி விசுவநாதர் கோயிலுக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் சோதனையிடப்பட்டே அனுப்பப்பட்டோம். பேனா, கேமரா, செல்பேசி என எதையும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. வலப்புறத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். தங்க அன்னபூரணியைக் கண்குளிரக் கண்டோம். அவர் அருகில் வெள்ளியால் ஆன சிவனை பிச்சாண்டவர் கோலத்தில் கண்டோம். அன்னபூரணி சிவனுக்கு அன்னம் இடுவதாக வரலாறு கூறினர். வரிசையில் தொடர்ந்து சென்று காசி விசுவநாதர் கோயிலை அடைந்தோம். கோயிலுக்குள் போகும்போது பக்தர்கள் பூ, பால், நீர் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. அதை வைத்து அவர்களே லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். நம்மூர் கோயில்களில் கருவறைக்குள் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இங்கு அவரவர் செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர் பேரின்பத்தை பக்தர்கள் மனதார  அடைகிறார்கள்.

 கங்கை: மாலை கங்கையாற்றில் படகிலிருந்தபடியே 64 கங்கைக்கரைகளில் மன்மந்திர் காட், அகில்பாய் காட், முன்ஷி காட், நாரதர் காட், மணிகர்ணீஸ்வரர் காட், அரிச்சந்திரா காட் உள்ளிட்ட சில கரைகளைப் பார்த்தோம். இவற்றில் மணிகர்ணீஸ்வரர் காட் மற்றும் அரிச்சந்திரா காட் என்ற இரு இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டோம். சடலங்கள் எரியும்போது எவ்வித துர்நாற்றமும் வீசாது என்று கூறினர். அதை நேரிலும் உணர்ந்தோம். அடுத்த இரு நாள்கள் காசியிலுள்ள பிற முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம். காசிப் பயண நிறைவாக இந்தியாவின் புகழ் பெற்ற காசி இந்து பல்கலைக்கழகம் சென்றோம். பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்று அவரை  வணங்கினோம்.

 மிர்சாபூர்: 13.10.2014 அன்று மிர்சாபூரிலுள்ள முதல் சக்தி பீடம் என அழைக்கப்படும் பிந்திவாசினி கோயில் சென்றோம். அம்மனின் பல் விழுந்த வகையில் அவ்விடம் முக்கியத்துவம் பெற்றதாகக் கூறினர். மதியம் சீதாமடி சென்றோம். ரம்மியமான சூழலில் சுவரில் சீதையின் சிற்பத்தைக் காணமுடிந்தது.

 ஹரித்வார்: 14.10.2014 அன்று புறப்பட்டு 15.10.2014 அன்று ஹரித்வார் வந்தடைந்தோம். அங்கு காயத்ரி யாகசாலை, ஆனந்தமாயி ஆசிரமம், சீதளமாதா கோயில், சிவசக்தி பீடம், லட்சுமிநாராயணா கோயில், தட்சேஸ்வர மகாதேவ் கோயில், தட்சண் யாககுண்டம், வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில், பூமாநிகேதன் கோயில், படிக லிங்கம், ருட்திராட்ச மரம், மரண பயம் நீக்குபவர் எனப்படும் மிருத்துஞ்சேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். ஒரு நாள் முழுவதும் பல கோயில்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில் மற்றும் பூமாநிகேதன் கோயில் இருந்த இடத்தில் ஒரே தெருவில் அதிக எண்ணிக்கையிலான கோயில் களைக் காணமுடிந்தது.

 ரிஷிகேஷ்: 6.10.2014 அன்று ரிஷிகேஷுக்கு ரோப் காரில் சென்றோம். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில், ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றோம். இவை அனைத்தும் ரிஷிகேஷில் மலைமீது இருந்தன. அனைத்துக் கோயில்களையும் பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்பினோம்.

இவ்வளவு கோயில்களைப் பார்த்த எங்களுக்கு நம்மூர்க் கோயில்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு இல்லை. இங்கே எல்லா சுவாமிகளும் மார்பிளில் இருக்கின்றன. நந்தி, லிங்கம் ஒழுங்கின்றி பக்கம் மாறி பல இடங்களில் இருந்தன. விபூதியோ, குங்குமமோ தரப்படவில்லை. காசியிலும் பிற இடங்களிலும் ஜிலேபி சூடாகப் போட்டுத் தருவது அப்பகுதியின் சிறப்பாக இருந்தது. இரு நாள்கள்கூட தாங்காது என்று கூறினர். அடுப்பிலிருந்து அவ்வப்போது போட்டு எடுத்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருந்தது. இங்கே பெரும்பாலும் கடுகு எண்ணெயில்தான் சமையல். நாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் சத்திரத்தில் தமிழக உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும், ஆடை அணியும் முறைகளையும் காணமுடிந்தது. காசியில் தினமணி வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் செய்தித்தாளைப் பார்க்க எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களது இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைந்தது.  - ஜ.பாக்கியவதி
---------------------------------------------------------------------------------------------------
 கட்டுரையை தினமணி இதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, கொண்டாட்டம், 7.12.2014 
---------------------------------------------------------------------------------------------------

19 comments:

  1. நல்ல ஒரு விரைவுப் பயணம். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நானும் இன்று முதல் ஒரு பயணக் கட்டுரை என் பதிவில் வெளியிடுகிறேன். நான்கு பாகங்களாக வரும்.2003-ல் மேற்கொண்ட பயணம் நினைவடுக்குகளிலிருந்து. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //இங்கு அவரவர் பூஜை செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர் பேரின்பத்தை பக்தர்கள் மனதார அடைகிறார்கள்.//

    இந்த பேரின்பத்திற்காகவே நானும் காத்திருக்கின்றேன்..

    நல்லதொரு பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. சிறப்பான பயணக்கட்டுரை அருமை ஐயா மென்மேலும் பயணங்கள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நல்ல கட்டுரை.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்லதொரு பயணக்கட்டுரை. என் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆசை. பார்ப்போம் அந்த இறைவன் என்ன நினைக்கிறான் என்று...

    ReplyDelete
  7. அன்பிற்குரிய அய்யாவிற்கு, அருமையான பயணக் கட்டுரை பதிவிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  8. நல்ல பயணக் கட்டுரை. இந்த இடங்களுக்கு எல்லாம் நானும் என் குடும்பத்துடன் சென்று வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. அருமையான பயணக்கட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா...
    அம்மாவுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
  10. உடன் பயணிக்க முடிந்தது.
    நிச்சயம் பின்னாளில் நான் இங்கெல்லாம் போகும் பொது ஒரு கையேடாய் உதவும் இந்தக் கட்டுரைகள்.
    நன்றி அய்யா

    ReplyDelete
  11. பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. காசி சென்று வந்தவர்களைப் பார்த்தாலே
    புண்ணியம் என்பார்கள்
    அதைப் போல் பதிவுகளைப் படித்தாலும்
    புண்ணியம்தான்
    அடுத்த ஆண்டு போகிற எண்ணம் உள்ளது
    தங்கள் பதிவு அதற்கு தூண்டுகோலாக இருக்கிறது
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. தினமணி வீட்டில் வாங்குகிறேனே... இதை எப்படி மிஸ் செய்தேன்?

    அருமை.

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி! ஐயா...........

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரரே!

    என் முதல் வருகையில் தங்களது காசிப் பயணம் குறித்த பயணக்கட்டுரை படித்து மகிழ்ந்தேன்.தினமணியில் தங்களது கட்டுரை வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    வாழ்வில் ஒரு முறையேனும் காசி சென்று வழிபட்டு விட்டு வந்தால் நல்லது! அந்த புண்ணியத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை! அந்த நற்செயலை தங்களுக்கு அமைத்துக் கொடுத்த அந்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    என் வலைதளத்திற்கு முதன் முறையாக வந்து கருத்திட்டு பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. மிகச் சிறப்பான பயணக் கட்டுரையை எழுதிய உங்கள் மனைவிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். நல்ல பயண வழிகாட்டியாக பலருக்கும் அமையும் இந்தக் கட்டுரை.

    ReplyDelete
  17. தங்கள் பயணப் பதிவு
    பல உண்மைகளை எடுத்துச் சொல்கிறதே!
    தொடருங்கள்

    ReplyDelete
  18. சிறப்பான பயணக்கட்டுரைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete