27 March 2015

திரிவேணி சங்கமம்

எங்களது வட இந்தியப் பயணத்தில் முதன்முதலாக நாங்கள் சென்ற இடம் அலகாபாத். முதல் நாள் காலை நாங்கள் திரிவேணி சங்கமம் சென்றோம். வாருங்கள் அங்கு செல்வோம். 

புகைவண்டி நிலையத்திலும் பிற இடங்களிலும் அலகாபாத் என்ற பெயர் ஆங்கிலத்தில் இருந்தது. இந்தியில் இலாகாபாத் என்றிருந்தது. காரணம் தெரியவில்லை. பள்ளி நாள்களில் படித்த இந்தி தற்போது உதவியதையறிந்தேன். பல இடங்களில் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்கொண்டோம்.


தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு விடியற்காலை சூரிய உதயத்தில் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமம் என்ற இடத்திற்குப் புறப்பட்டோம்.

 

சூரிய உதயத்தில் திரிவேணி சங்கமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.  வெளியூரிலிருந்து வருபவர்கள் கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் காண ஆவலோடு வந்துகொண்டிருந்தார்கள். எங்களது குழுவில் வந்த மூத்த தம்பதியினர் 17 ஆண்டுகளாக இவ்வாறான பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினர். அவர்களுடைய வேகமும், ஆர்வமும் எங்களை அதிகமாக ஈர்த்தது.

 




அனைவரும் படகில் ஏறி சிறிது தூரம் சென்றோம். படகில் குடும்பம் குடும்பமாக மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் என்று கூறுமிடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். படகு ஓட்டுபவர்கள் இலாவகமாக ஓட்டுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. அருகருகே படகுகள் நெருக்கமாகச் சென்றபோதிலும் ஒன்றை ஒன்று உரசிவிடாமல் படகுகளை ஓட்டிச் சென்றனர். குறைவான எண்ணிக்கையில் படகுகளில் சுற்றுலாப் பயணிகளை அவர்கள் அழைத்துச் சென்றது எங்களுக்கு நெடுநாள் பழகிய நண்பர்களோடு செல்வதுபோல இருந்தது. சுற்றிலும் நீர். எங்களையும் அறியாத ஏதோ ஓர் பிணைப்பு எங்கள் அனைவரையும் இட்டுச்சென்றது போன்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. சிறிது தூரம் சென்றதும் படகினை நீரின் நடுவில் நிற்கவைத்துவிட்டு எங்களை இறங்கச் சொன்னார் படகோட்டி. அதிகமான ஆழம் அங்கு காணப்படவில்லை. அனைவரும் அங்கு இறங்கி புனிதக் குளியல் குளித்தோம். 

சில படகோட்டிகள் இரு படகுகளை நெருக்கமாக வைத்து குறுக்கே கயிறு கட்டி அதன்மூலமாக பக்தர்களை இறங்க வைத்து குளிக்கக் கூறினார்கள். அந்த இடம்தான் திரிவேணி சங்கமம் என்றும் அவ்வாறாகக் குளிப்பது சிறந்தது என்றும் கூறினர். எங்கள் குழுவில் சிலர் அவ்வாறு குளித்தனர். எங்களில் பலர் அருகருகே நின்று நீராடினோம். நீரிலிருந்து வெளியே வர எங்களுக்கு மனமில்லை.அடுத்தடுத்து பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் நீரிலிருந்து வர மனமின்றி வெளியே வந்தோம். படகில் ஏறினோம். நதியின் அழகினை ரசித்துக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தோம். 


குளித்து கரையேறிய பின் அங்கிருந்து அருகில் பார்த்தபோது ஒரு கோட்டை தெரிந்தது. அந்தக் கோட்டை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அந்தக் கோட்டையைப் பார்க்க எங்களுக்கு ஆவல் வரவே கோட்டையை நோக்கி நடந்தோம்.  கோட்டையின் வலப்புறம் ஒரு கோயில் இருப்பதாகக் கூறினார்கள். அங்கு சென்றோம். தாழ் தளமாக இருந்த பாதை வழியாக கோட்டையின் மேற்பகுதிக்குச் சென்றோம். கோயிலை நோக்கிச் செல்லும் வழியில் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. கோட்டையின் அப்பகுதியில் அவ்வாறாக ஒரு கோயில் இருப்பது பலருக்குத் தெரியவில்லை. கோயிலுக்குச் சென்றதும் உள்ளே பல சிறிய சன்னதிகளில் அதிக எண்ணிக்கையிலான பல கடவுள் சிலைகளைப் பார்த்தோம். ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையிலான கடவுள்களைப் பார்த்ததில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி.  கோயில்கள் உள்ள ஒரு பக்கம் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்றும், கோட்டையின் பிற பகுதியின் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினர். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்களை அங்கு காண முடிந்தது. அனுமதி பெற்று கோட்டை உள்ளே பார்க்க விரும்பி அதற்கான முயற்சியினை மேற்கொண்டோம்.  எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை.  

 










கோட்டையை ஒட்டியே சுமார் 2 கிமீ தூரத்திற்குச் சென்று அதன் அழகினை ரசித்தோம். கோட்டையின் முகப்பில் இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் அழகினை ரசித்தோம். கோட்டையைச் சுற்றி வந்தபின் அருகே இருந்த அனுமார் கோயிலைப் பார்த்தோம். சற்று நேரம் அங்கு இளைப்பாறிவிட்டு திரிவேணி சங்கமத்தைவிட்டு கிளம்பினோம். 

புகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி பாக்கியவதி, திருதி கண்மணி

இதற்கு முன் நாம் பார்த்த இடங்கள் 
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை  
ஆனந்த பவன்
புத்தகயா புகைப்படப்பதிவு    

20 March 2015

அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம் : பதிப்பாசிரியர் மணி.மாறன்

அண்மையில் நான் படித்த நூல் அம்பலவாணக்கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம் (பதிப்பாசிரியர் மணி.மாறன்). 

தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும். அவற்றில் ஒன்று 100 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ள சதகம் என்பதாகும். மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான நீதிகளையும், அறநூல் கருத்துக்களையும், ஒழுக்கக்கூறுகளையும் வழங்கி அவர்களை நன்கு வாழச் செய்வதே சதக இலக்கியம். இச்சதகம் கொல்லிமலையில் உள்ள அறப்பள்ளி ஈசுவரனைப் பற்றி அம்பலவாணக்கவிராயர் பாடியதாகும். (பக்.1-2)

சிறந்த நீதி இலக்கியமாகத் திகழும் இந்நூலில் ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும், ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும், நல்ல அரசும் அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும்? உடன்பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழவேண்டும், பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்ல முறையில் அமையவேண்டும்  என்பன போன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.  நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்களைப் பாடல்கள் வழி அறிவுறுத்தியுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது. (ப.1)

இந்நூலில் சில கருத்துக்கள் தற்போது பொருந்துவனவாகவோ ஏற்கக் கூடியனவாகவோ இல்லை. இருப்பினும் நீதி என்ற நிலையில் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை இச்சதகத்தில் காணமுடிகிறது. காலத்திற்குப் பொருந்துவனவற்றை எடுத்து மற்றவற்றை விடுப்போம். முழுக்க நீதி நூலாக அமைந்துள்ள இந்நூலிலிருந்து இரு பாடல்களைப் பொருளுடன் காண்போம்.


நல்லோர் 
செய்ந்நன்றி மறவாத பேர்களு மொருவர்செய்
தீமையை மறந்த பேருந்
திரவியந் தரவரினு மொருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற் கொடுத்த பேருங்
காசியி லொருவர்செய் தருமங் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும்
பொய்யென்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகழாத நிலைகொள் பேரும்
புவிமீது தலைபோகு மென்னினுங் கனவிலும்
பொய்மையுரை யாத பேரும்
ஐயவிங் கிவரெலாஞ் சற்புருடரென் றுலகி
லகமகிழ்வ ரருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே (16)

பொருள்: அருமை தேவனே, ஒருவர் செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய்த தீமையை மறந்தவர்களும், பொருளைக் கொடுத்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச் செலுத்தாதவர்களும், கையிலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெடுதலுறாமல் காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்கில் ஒருவர் கொடுத்தாலும், அழிவழக்குக் கூறாத நிலையுடையவரும், உலகத்திலே தலையே போகும் என்றாலும் கனவிலேயேயும் பொய் கூறாதவரும், இவ்வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகிய நன்மக்கள் என்று உலக மாந்தர் மனம் களிப்பார்கள். 

அடங்காதவற்றை அடக்கும் வழி 
கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று
கோர்த்துவச விர்த்தி கொள்வர்
குவலயந் தனின்மதக் களிதனை யங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வர்
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச விர்த்தி கொள்வார்
மிக்கபெரி யோர்களும் கோபத்தை யறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்
அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்
தையனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே (42)

பொருள்: திரு அடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரைனைய திருவடிகளை உடைய தலைவனே, அருமை தேவனே, கொடிய தன்மையுடைய பொலிகாளையை அதன் இரண்டு மூக்கிலும் ஒரு கயிற்றைக் கோர்த்து வசப்படுத்துவர். உலகத்தில் மத யானையை அங்குசம் கொண்டு வசப்படுத்துவர். உலகில் நஞ்சுடைய நாகத்தை மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர். தாவும் குதிரையினை நீண்ட கடிவாளத்தைக் கொண்டு நடைப்பழக்கி வசப்படுத்துவர். நஞ்சுடைய தீயவரை சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர். பெரிய சான்றோர்களும் தம் கோபத்தை அறிவின் திறனால் நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து மனதை வசப்படுத்துவர்.

---------------------------------------------------------------------------------------------------
நூல் : அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்
பதிப்பாசிரியர் : மணி.மாறன் (அலைபேசி 9443476597) 
பதிப்பகம் : சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்
ஆண்டு : 2014
விலை : ரூ.150
---------------------------------------------------------------------------------------------------

நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்:
தமிழ் எண்ணும் எழுத்தும், தமிழ் ஆய்வுக்கட்டுரைகள், தமிழறிமடந்தை கதை

12 March 2015

ஆளுமைகள் தருணங்கள் : ரவிசுப்பிரமணியன்

அண்மையில் நான் படித்த நூல் ரவிசுப்பிரமணியன் எழுதியுள்ள ஆளுமைகள் தருணங்கள். பெரும் பெரும் ஆளுமைகளுடனான அவரது தருணங்களை அவர் தனக்கே உரிய ஆளுமையோடு நம் முன் வைக்கும் விதம் நம்மை நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் பெரும் விற்பன்னர்களாக இருக்கும் மாமனிதர்களிடம் அவர் கொண்டிருந்த நட்போ, பழக்கமோ, அணுக்கமோ, ஈடுபாடோ ஏதோவொன்று நம்மை அவருடைய எழுத்தோடு பிணைத்துவிடுகிறது. நூலாசிரியரின் நினைவாற்றல், தேர்ந்தெடுத்த சொல் பயன்பாடு, நினைவுகூறும் விதம், சமுதாயத்தின் தாக்க வெளிப்பாடு போன்றவையும் அவருடைய எழுத்தில் மிளிர்வதைக் காணமுடிகிறது. இசை, ஓவியம், கலை, இலக்கியம், திரைப்படம் என்ற பல்வேறு நிலையில் பரிணமித்து தம் முத்திரையைப் பதித்தவர்களைப் பற்றி எழுதுவது என்பது எளிதான காரியமன்று. தன்னுடைய அழகான சொல்லாடல் மூலமாக நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்ளும் பாங்கு படிப்பவர் மனதைவிட்டு அகலாது. அவர்களுடைய நிறைகுறைகளை சீர்தூக்கி அலசி நூலாசிரியர் எழுதியுள்ள முறை நாம் வாழும் காலத்திய கலைஞர்களின் பன்முகப்பாங்கினை அனாயசமாக நம்முன் கொண்டுவருகிறது.அனைத்துக் கருத்துக்களும் பொருள் பொதிந்தவையாக அர்த்தமுள்ளவையாக உள்ளன. 

எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,  கவிஞர் அபி, மதுரை சோமு, பி.பி.சீனுவாஸ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஓவியர் மருது, ஓவியர் ஜே.கே., பாலுமகேந்திரா, தேனுகா, ருத்ரய்யா ஆகியோரைப் பற்றிய இப்பதிவுகள் மூலமாக நம்மை அவர்களுடன் மிக அணுக்கமாக்கிவிடுகின்றார் ரவிசுப்பிரமணியன். இவர்களில் தேனுகா அவர்களுடன் மட்டுமே நான் பழகியுள்ளேன். வாழும் காலத்தில் வாழ்ந்தோரைப் பற்றியும் வாழ்வோரைப் பற்றியும் இவ்வாறு எழுதுவதன் மூலமாகச் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அவர்களைப் பற்றி அவர் பகிர்ந்தவற்றில் சிலவற்றை இதோ பகிர்ந்துள்ளேன், உங்களுக்காக. வாருங்கள் வாசிக்க.    


ரவிசுப்பிரமணியன் 

"நான் எழுத்துலக முன்னோடிகளாகக் கருதும் சில ஆளுமைகள் என்னிடம் இவை குறித்துச் சிலாகித்தது, அதற்கு முன் நான் அறியாதது. இத்தனைக்கும் இவை எண்ணிக்கையில் குறைவான கட்டுரைகளே. இந்தக் கட்டுரைகளில் இடம்பெறும் ஆளுமைகளோடு எனக்கிருந்த உணர்வுபூர்வமான ஒடடுதலே இவற்றின் பின்னுள்ள பலம். எல்லாரும் என்னில் மூத்தவர்கள்" என்கிறார் நூலாசிரியர். (ப.17)




எம்.வி.வி.
"கேட்காத காதுகளோடும் பார்க்கமுடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை. இயன்ற வரையில், நினைவு தப்பாமல் இருந்த வரையில் எல்லாக் கஷ்டங்களையும் மீறி, கைம்மாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்துகொண்டே இருந்தார், தன் நடுங்கும் விரல்களால்." (ப.26)

கரிச்சான்குஞ்சு
"தன் படைப்புகளை முன்னிறுத்தாது, தன்னை முன்னிறுத்தும் போக்குகள் மலிந்த தமிழ்ச்சூழலில், தனது படைப்புகளின் மேன்மை வழியே, தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான்குஞ்சு. நம் காலத்திலேயேஅவர் வாழ்ந்து மறைந்திருந்தாலும், கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை." (ப.27)

கவிஞர் அபி
"அபியின் கவிதைச் சாதனைகளிலி முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியைக் கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான்." (ப.42)

மதுரை சோமு
"சோமுவின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகக் காரணமாக அமைந்தது 'தேவரின் தெய்வம்' படத்தில் வந்த தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த 'மருதமலை மாமணியே' பாடல்தான். பல பாடல்களைப் பாடி ஒரு பாடகர் அடையும் பெரும் புகழை, அந்த ஒரே பாடலில் பெற்றார் அவர்." (ப.54)

பி.பி.சீனுவாஸ்
"காலம் ஒவ்வொரு கட்டத்திலும் சில சிறந்த பாடல் கலைஞர்களை நமக்குப் பரிசளித்தபடிதான் இருக்கிறது. ஆனால், கலையின் மேன்மையோடு, பக்கத்து வீட்டுக்காரனின் தோழமை போல, மனம் விட்டுப் பேச முடிகிற நண்பனின் அண்மை போல, நமக்கு வெகு அருகில் இருக்கும் தோற்றத்தைத் தன் குரலால் ஏற்படுத்திவிடுகிற எளிய கலைஞர்கள் எப்போதாவதுதான் நமக்குக் கிடைக்கிறார்கள். அத்தகைய கலைஞன் பிபி.எஸ்." (ப.62)

எஸ்.வி.சகஸ்ரநாமம்
"நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பாத்திரத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர்." (ப.67)

ஓவியர் மருது
"தன் கோடுகள் வழியாகவே அதிகபட்சமான தமிழர்களைச் சென்றடைந்த நவீன ஓவியக்கலைஞன் மருதுவாக மட்டுமே இருக்கமுடியும் என்று சொன்னால் அது மிகையாகாது." (ப.83)

ஓவியர் ஜே.கே.
"இவரது கோட்டோவியங்களின் வித்தைச்சூழலில், சமயங்களில் என் மனம் கிறங்கிப் போனதுண்டு. ஸ்ருதி பிசகாது, தாளம் பிசகாது கோடுகள் சென்ற பயணத்தின் வழித்தடம் வழியே எழும்பும் சுநாதம் அது. என்ன வருமென அனுமானிக்க முடியாது. ஒற்றைப்புள்ளியில் துவங்கிட, கையை எடுக்காமல் அவர் கோட்டோவியங்களை வரைந்து முடிக்கும் மாயத்தை நான் கண்டிருக்கிறேன். நகாசு வேலைகளுக்கான மெனக்கெடல் தனி. வெறும் தொழில்நுட்ப வித்தையாகத் தேங்கிவிடாமல் படைப்பாகவும் அவை உருக்கொள்ளும் தருணங்களையும் நான் பார்த்ததுண்டு." (ப.89)

பாலுமகேந்திரா
"சதா அவர் பயணப்பட்டுக்கொண்டே இருந்தார். ஆசிரியாக இருந்தாலும் மாணவனாக வாழ்ந்தார். எல்லா வெற்றிக்குப் பின்னும் துயரத்தின் மெல்லிய நிழல் அவரைத் தொடர்ந்தபடியே இருந்தது. ஆனால் ஒரு போராளியின் வீர்யம் மட்டும் கடைசிவரை அவரை விட்டு விலகவே இல்லை." (ப.93)

தேனுகா
"கலை குறித்த உரையாடலுக்கு சதா ஏங்கிய அவர் தன் வாழ்வின் கடைசி நாளில்கூட, பி.பி.சி.நேர்காணலில் நாதஸ்வரத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த உரையாடலில் கரைந்ததில் உடல் முழுக்க வேர்த்து அவருக்கு நெஞ்சு வலி வந்ததையும் அவரால் உணர இயலவில்லை. சட்டென அவரது மனோலயம் அறுந்து உரையாடல் நின்று போய்விட்டது." (ப.108)

ருத்ரய்யா
"காத்திரமான பங்களிப்பைச் செய்துவிட்டு தன்னை முன்னிருத்தும் யத்தனங்கள் இல்லாத சில உன்னத கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் தமிழ்ச் சமூகம் தனித்தே வைத்திருக்கிறது. அதுகுறித்து அதற்கு எவ்வித சொரணையும் இல்லை. உலகமே வியாபாரிகள் கையில் இருக்கும்போது எல்லாமே ஒரு வகையில் பொருள்கள்தானே." (ப.111)

(திரு ரவிசுப்பிரமணியன் புகைப்படம் அவரது முகநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, நன்றியுடன்)

---------------------------------------------------------------------------------------------------
நூல் : ஆளுமைகள் தருணங்கள்
ஆசிரியர் : ரவிசுப்பிரமணியன் (9940045557)
பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், 669 கே.பி.சாலை, 
நாகர்கோயில் 629 001
ஆண்டு : 2014
விலை : ரூ.100
---------------------------------------------------------------------------------------------------






05 March 2015

இளைய மகாமகம் : தேரோட்டம்

மகாமகத்திற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது. 2016இல் மகாமகம் நிகழவுள்ள நிலையில் 2015இல் நடைபெறும் மகாமகம் இளைய மகாமகமாகும். இளைய மகாமகத்தையொட்டிய தேரோட்டங்களைக் காண 3.3.2015 அன்று நானும் என் மனைவியும் கும்பகோணம் சென்றோம். கும்பேஸ்வரர் கோயில்,  சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அபிமுகேஸ்வரர் கோயில்களில் தேரோட்டத்தை ஒரு நாளில் கண்டோம். அடுத்த நாள் மகாமகக்குளத்திற்குச் சென்று தீர்த்தவாரியைக் கண்டோம். இப்போது தேரோட்டங்களைக் காண்போம். 

விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்குரிய தேருக்கான திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை தேர்கள் மட்டும் நிலையில் இருந்தன. கும்பேஸ்வரர் தேரில் விநாயகரும், முருகனும் இருந்தனர். மங்களாம்பிகை தேரில் சண்டிகேஸ்வரர் இருந்தார். கும்பேஸ்வரர் தேரை இழுத்து அனைத்து வீதிகளையும் சுற்றிவந்து நிலையில் நின்ற பின்னர், சிறிது நேரம் கழித்து மங்களாம்பிகை தேரினை இழுத்தோம்.

புறப்படத் தயாராகும் கும்பேஸ்வரர் கோயில் தேர்கள் 

கும்பேஸ்வரர் தேர்
தேரில் கும்பேஸ்வரர், விநாயகர், முருகன்
மங்களாம்பிகை தேர்


தேரில் மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர்

கோயில் தேர் நகர நகர அங்கிருந்து தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாகச் சென்றோம். மேலவீதி-வடக்குவீதி சந்திப்பிலும், கோயில் குளத்தின் அருகே உள்ளேயிருந்தும், பொற்றாமரைக்குளத்தின் அருகேயிருந்தும், முதன்மை வாயிலிலிருந்தும்மொட்டை கோபுர வாயிலின் உள்ளேயிருந்தும்,  தேர்களைப் புகைப்படமெடுத்தோம். 








கும்பேஸ்வரர் கோயில் தேர்களில் உள்ள சிற்பங்களைப் பார்த்தோம். அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன. சிவனின் பல்வேறு உருவங்களையும், சைவத்தின் முக்கியக் கூறுகளைச் சித்தரிக்கும் சிற்பங்களையும் கண்டோம்.




பின்னர் கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து கிளம்பி கடைத்தெரு ஆஞ்சநேயர் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், கன்னிகாபரமேஸ்வரி கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், கரும்பாயிரம் விநாயகர் கோயில், வராகப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்றுவிட்டு பின்னர் மற்ற தேர்களைக் காணச் சென்றோம்.
காசி விஸ்வநாதர் கோயில் தேர்
அபிமுகேஸ்வரர் கோயில் தேர்



சோமேஸ்வரன் கோயில் தேர் (கோயில் வாயிலில்) 
முதலில் சோமேஸ்வரர் கோயில் சென்றோம். சோமேஸ்வரர் கோயில் தேர் அலங்கரிக்கப்பட்டு கோயில் வாயிலில் நிற்க வைக்கப்பட்டிருந்தது. மாலை நாங்கள் அங்கிருந்து கிளம்பும்வரை அத் தேர் கிளம்பவில்லை. அத்தேர் ஓடவில்லை என்பதை அறிந்தோம். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அபிமுகேஸ்வரர் கோயில்களின் தேர்களை சிறிது நேரம் இழுத்துவிட்டு மகாமகக்குளத்தைச் சுற்றிவந்தோம். 2004 மகாமகத்திற்குப் பிறகு ஒரே நாளில் அதிக நேரம் கும்பகோணத்தில் தற்போது பல கோயில்களைச் சுற்றிவந்ததைப் பெருமையுடன் கூறினார் என் மனைவி. அனைத்துக் கோயில்களுக்கும் நடந்தே சென்றது ஒருவகையான மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

ஒரே நாளில் நான்கு கோயில்களில் ஐந்து தேர்களையும், சில கோயில்களையும், இரு குளங்களையும் பார்த்த மன நிறைவோடு அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம், மறுநாள் மகாமகம் தீர்த்தவாரியைப் பார்ப்பதற்குக் கிளம்ப ஆயத்தம் ஆவதற்காக. 

புகைப்படம் எடுக்க உதவி : உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி

7.3.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.