29 April 2015

பெரிய கோயில் தேரோட்டம்

21.4.2015 அன்று தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயிலின் வெள்ளோட்டம் கண்ட நாம் இன்று (29.4.2015)தேரோட்டம் காண்போம். 

28.4.2015 மாலை
தேரோட்டத்திற்கு முன்பாக பெரிய கோயில் சென்று வருவோம். வாயிலில் தேரோட்டத்திற்கான அழைப்பிதழ் பெரிய பதாகையாக வைக்கப்பட்டிருந்தது. 






28.4.2015 மாலை பெரிய கோயில் வளாகம்
தேரோட்டத்தின் முதல் நாளான 28.4.2015 அன்று மாலை முளைப்பாரி ஊர்வலமாக பெரிய கோயில் நடராஜர் மண்டபத்திலிருந்து எடுத்துவரப்பட்டது. பக்தர்கள் மிகவும் ஆர்வமாக அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு உடன் வந்தனர். இன்னிசை முழங்க கோயில் வளாகத்திலிருந்து வெளியே உலா வந்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது.



28.4.2015 மாலை முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படல்
தேர் மேலவீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிற்பமாக பார்க்கும் முன்பாக இந்தத் தேருக்குப்  பெருமை சேர்ப்பனவற்றைப் பார்ப்போம். 

பயன்படுத்தப்பட்டவை : 
25 டன் இலுப்பை மற்றும் நாட்டுத்தேக்கு, அரை டன் இரும்பு
தேரின் உயரம் : 16½ அடி
தரை முதல் கும்பம் வரை  : 40 அடி உயரம், 16 அடி அகலம்
தேரின் மொத்த எடை  : சுமார் 40 டன்
நிலைகள் : ஐந்து
இரும்புச்சக்கரம்,  அச்சு தயாரிப்பு: திருச்சி, பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்) 
இரும்புச்சக்கரங்கள் : தலா 6.5 அடி உயரம், 1 டன் எடை
அச்சு : 14.5 அடி நீளம், 2 அச்சு 2 டன் எடை  
சக்கரங்கள் ஒவ்வொன்றும் : தலா 1 டன் எடை
பலகை மட்டம் : பன்னிரெண்டே கால் அடி உயரத்தில் 
தேவாசனம் (நடைபாதை) : மேல்மட்டத்தில் இரண்டரை அடி உயரத்தில் 
சிம்மாசனம் (ஸ்வாமி பீடம்) : இதிலிருந்து, இரண்டே கால் அடி உயரத்தில்
அலங்காரத்துணி : சோழர் கால பாணியிலான எட்டுப் பட்டை வடிவம்

தொம்பைகள் : துணியாலானவை 

இனி, தேரில் அமைந்துள்ள சிற்பங்களின் அம்சங்களைக் காண்போம். முதல் படி நிலையில் ஒன்றரை அடியில் 67 இரண்டாம் படிநிலையில் இரண்டேகால் அடியில் 67 என மொத்தம் 360 மரச்சிற்பங்கள் உள்ளன. தேரின் முன்புறம் கைலாசநாதர் கயிலாயக் காட்சி, பின்புறம் நந்தி மண்டபத்துடன் கூடிய பெரிய கோயில் அமைப்பு (ஒரே பலகையில்) மற்றும் நாயன்மார்கள், சிவ தாண்டவக் காட்சிகள் மற்றும் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிட்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி உள்ளிட்டவை. நான்கு திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்கள் தேரை அழகுபடுத்துகின்றன.


28.4.2015 மாலை அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேர்
தேரோட்ட நாளின் முதல் நாள் மாலை பெரிய கோயிலுக்கும், தேரைப் பார்க்கவும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். மாலை நடராஜர் மண்டபத்திலிருந்து இன்னிசை முழங்க, முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


29.4.2015 காலை
தேரோட்டம் காண்பதற்காக நானும் எங்களது குடும்பத்தாரும் கிளம்பினோம். முதலில் பெரிய கோயில் வந்தோம். அங்கு 5.15 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பெரிய கோயில் வளாகத்தைவிட்டுக் கிளம்பியதைக் கண்டோம். 




 









 

பஞ்சமூர்த்திகள் பெரியகோயிலிலிருந்து கிளம்பி வரல்
கோயில் வளாகத்திலிருந்து ராஜராஜன் பெருவாயில்,கேரளாந்தகன் வாயில் வழியாக வெளியே வந்து, ராஜராஜசோழன் சிலை, சிவகங்கைப்பூங்காவைக் கடந்து அலங்கரிக்கப்பட்ட தேர் இருந்த தேர் மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் வந்து சேர்ந்தனர். நாங்களும் பஞ்சமூர்த்திகளுடன் வந்தோம்.


  
மேலவீதியிலிருந்து தேர் புறப்பாடு

பஞ்சமூர்த்திகளில் தேர் மண்டபத்தில் இருந்த தேருக்கு முன்னதாக விநாயகரும், சுப்பிரமணியரும் அமைய தேர் கிளம்ப ஆயத்தமானது. அலங்கரிக்கப்பட்ட யானை தேரோட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்தது. தனி அம்மனும், சண்டிகேஸ்வரரும் தேருக்குப் பின்னால் இருந்தனர். தியாகராஜரையும் அம்மனையும் சிம்மானத்தில் அமர்த்தும் பணி மிக நுட்பமாக மேற்கொள்ளப் படுவதைக் கண்டோம். இறைவனும் இறைவியும் அமர்ந்ததும் ஆர்த்தி எடுக்கப்பட்டது.


மேலவீதியில் தேர்

வடக்குவீதியில் தேர்

கீழ வீதியில் தேர்
தேரோட்டத்தின்போது பரமசிவனாக ஒரு சிறுவன்
சுமார் 6.15 மணிவாக்கில் இன்னிசை முழங்க, தேவாரங்கள் பாடப்பட, நாதசுவர இசை, கோலாட்டம் போன்றவற்றுடன் இறைவனும், இறைவியும்  தேரில் உலா வரத் தொடங்கினர்.  பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பச்சைக் கொடி காட்டப்பட தேர் மேல ராஜ வீதியிலிருந்து கிளம்பியது. அவ்வீதியில் கொங்கணேஸ்வரர் கோயிலிலும், மூலை ஆஞ்சநேயர் கோயிலிலும் பக்தர்கள் வசதிக்காக தேர் சிறிது நேரம் நின்றது. தொடர்ந்து  வடக்கு ராஜ வீதியில் ராணிவாய்க்கால் சந்து எதிரேயுள்ள பிள்ளையார் கோயிலிலும், காந்தி சிலை அருகேயுள்ள ரத்தினபுரீஸ்வரர் கோயிலிலும், பின்னர் அவ்வாறே கீழ இராஜவீதியிலும் தெற்கு ராஜ வீதியிலும் குறிப்பிடப்பட்ட இடங்களில் தேர் நின்றது.  (நான்கு ராஜ வீதிகளும் பெரிய கோயிலைச் சுற்றி உள்ளவை அல்ல. பெரிய கோயிலிலிருந்து அதன் இடப்புறமாகச் சிவகங்கைப் பூங்கா வழியாகச் சென்றால் அங்கிருந்து மேல ராஜ வீதி ஆரம்பமாகிறது. சிறிது தூரத்தில் தெற்கு ராஜ வீதியுடன் அவ்வீதி சந்திக்கும் இடத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர் முட்டி உள்ளது. அங்கிருந்தே தேர் புறப்பட்டது.)  பக்தர்களின் வசதிக்காகவும், ஆர்த்தி எடுப்பதற்காகவும், சிறப்புப்பூஜை செய்வதற்காக இந்த இடங்களில் தேர் நின்றது. 

நேரம் ஆக ஆக, தேர் புறப்பட இருந்தபோது இருந்ததைவிட பன்மடங்கில் கூட்டம் பெருகியது. முழுமையாக தேருடன் வலம் வந்து மன நிறைவுடன் திரும்பினோம். மக்கள் வெள்ளத்தை பல ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூர் கண்டதை நேரில் உணர முடிந்தது.

வில்லிப்புத்தூர் தேர், சார்ங்கபாணி கோயில், திருவாரூர் தேர் என்றவாறு பல ஊர்களில் தேர்களை ரசித்த மக்கள் தற்போது தஞ்சாவூருக்குப் புதிய தேர் கிடைத்ததறிந்து மகிழ்ச்சியடைந்ததை தேரோடு உலா வந்தபோது எங்களால் காணமுடிந்தது. அனைத்துத் துறையினரும் மிகவும் சிறப்பாகப் பங்காற்றி தேரோட்டம் நல்ல முறையில் அமைய ஒத்துழைப்புத் தந்தமை பாராட்டத்தக்கதாகும்.

------------------------------------------------------------------------------------
பெரியகோயில் தேர் வெள்ளோட்டம் பற்றிய முந்தைய பதிவில் முனைவர் த.பத்மநாபன் அவர்கள் (Prof.,Dr.T. Padmanaban, Tamil Research Center) கூறியுள்ள கருத்துகளை வரலாற்று நோக்கிலும், அடிப்படையிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. இப்பொருண்மை தொடர்பாக அவருடைய பிற கடிதங்களையும் அப் பதிவில் காணலாம்.
------------------------------------------------------------------------------------

28 comments:

  1. கொடுத்து வைத்தவர் தாங்கள்..
    மனம் நிறைவான பதிவினை வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. நெஞ்சை மகிழ வைத்தீர் முனைவர் அய்யா!
    தஞ்சை தேர்த்திருவிழா கண்ணுக்கு இனிமை
    பக்தி பரவசத்தை பகிர்ந்தளித்த பாங்கு போற்றுதலுக்குரியது!
    வணங்கி வரவேற்று மகிழ்கின்றேன்! நன்றி!
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை மிகவும் கண்கவர் படங்களுடன் பிரமிக்கவைத்துள்ளீர்கள். தேர்பற்றிய விபரத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். நாங்களும் கலந்து கொண்டது போல ஒரு உணர்வு. பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. பெரிய கோயிலைப் பார்த்திருக்கின்றோம். மிகவும் அருமையான கோயில் பிரம்மாண்டமான கோயில்....ராஜராஜன் வாழ்க!

    தேரோட்டம் பற்றிய விவரணங்களும், படங்களும் மிகவும் அருமை! அருமை! ஐயா!

    ReplyDelete
  5. Thanks sir. very detailed report with so many photos.It gave the pleasure of physical watching.
    well brought out.

    ReplyDelete
  6. தேரோட்டத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

    முளைப் பாலிகையின் தத்துவத்தைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
  7. வணக்கம் முனைவரே....
    தேரோட்டத்தை நேரில் பார்ப்பதைப்போன்ற உணர்வை தங்களின் வர்ணனையில் கண்டேன் அருமை தேரைப்பற்றிய குறிப்புகள் அருமை புகைப்படங்கள் அனைத்தும் அழகு வாழ்த்துகளும் பதிவுக்கு நன்றியும்.
    வாழ்க வளமுடன்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  8. தேரோட்டத்தைப் பதிவில் கண்டேன் . நேரடி ஒளிப்பரப்பு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. படங்களுடன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. தஞ்சை பெரிய கோவில் தேர் பற்றிய நுணுக்கமான தகவல்கள், புகைப்படங்களுக்கு இனிய நன்றி! சொந்த‌ ஊர்ப்பெருமை தலை தூக்குவதை தவிர்க்க இயலவில்லை. ஊரில் இருந்திருந்தால் நானும் சென்று ரசித்திருந்திருப்பேன்!

    ReplyDelete
  10. தேர் பற்றிய தகவல்களுடன் படங்கள் அனைத்தும் அருமை... நாங்களும் கலந்து கொண்ட உணர்வு... நன்றி ஐயா...

    ReplyDelete
  11. விரிவான விவரங்கள்
    அருமையான அபதிவு

    ReplyDelete
  12. பெரிய கோயில் தேர் அசைந்து அசைந்து வந்த காட்சியை
    நானும் என் மனைவியும் கண்டு களித்தோம் ஐயா
    இன்று தங்களால் மீண்டும் கண்டேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  13. பெரிய கோயின் தேரோட்டத்தை விரிவாக வர்ணித்து எழுதியது நாங்களும் கலந்து கொண்ட உணர்வினைத் தந்தது ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  14. நேரில் பார்த்த உணர்வைத் தந்தது விவரிப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. ஒரு நேர்முக வர்ணனை போல் இருந்தது தாங்கள் கொடுத்திருந்த விளக்கங்களும் படங்களும். பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  17. தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் பற்றி ஒரு வரலாற்றுப் பதிவு. பின்னாளில் இந்த பதிவும் ஒரு ஆவணம்.
    த.ம.8

    ReplyDelete
  18. விபரங்களும் தகவல்களும் அருமை அய்யா....

    ReplyDelete
  19. விபரங்களும் தகவல்களும் அருமை அய்யா....

    ReplyDelete
  20. வர்ணனையும் படங்களும் நேரில் பார்த்தது போன்ற மகிழ்வினைத் தந்தது ...! அருமையான பதிவு நேரில் கண்டு களித்த தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. விளக்கமும் படங்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
  22. படங்களும் தேரோட்டப் பதிவும் நன்று
    சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  23. பெரிய கோவில் தேரோட்டம் பற்றிய விளக்கமும், படங்களும் அருமை ஐயா. நாங்களும் உங்களுடன் பார்த்த உணர்வு வருகிறது. நன்றி

    ReplyDelete
  24. தேரோட்டம் பற்றிய தகவல்கள், படங்கள், தேரில் இருக்கும் சிற்பங்கள் என பலவற்றையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நேரில் பார்க்க முடியாத குறையை உங்கள் படங்கள் மூலம் தீர்த்துக் கொண்டேன்.

    ReplyDelete
  25. தேரின் அமைப்பைக் கண்டு திகைத்துப் போனேன் அவ்வளவு பெரிய தேரோ ..ம்ம் பார்க்கத்தான் ஆசை ...தங்கள் பதிவு நேரில் சென்று நாமும் பார்த்ததுபோல் உணர்வைத் தருகிறது நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஐயா மிக விரிவான பதிவு.
    நிறைந்த பட விளக்கம்
    இவ்வளவு விவரம் அறிந்து மகிழ்வு.
    எனது விழா முன் - பின்னெடுப்புகள் காரணமாக
    இங்கு வர முடியவில்லை தொடருவேன்
    வாழ்க!

    ReplyDelete
  27. விரிவான விளக்கமும் வியக்க வைக்கும் வண்ணப்படங்களும் தங்களின் பதிவை மெருகூட்டுகிறது. மி்க்க மகிழ்ச்சி

    ReplyDelete