24 October 2015

கோயில் உலா : செப்டம்பர் 2015

26.9.2015 அன்று குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில், விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில், திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில்,  திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் (தேவாரப்பாடல் பெற்ற கோயில்கள்), பழையாறை சோமநாதசுவாமி கோயில், நாதன்கோயில் என அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் ஏரகரம் ஆதிசுவாமிநாதசுவாமி கோயிலை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிற கோயில்களுக்கு முன்னரே சென்றுள்ளேன். வாருங்கள் கோயில்களுக்குச் செல்வோம். 

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
தஞ்சாவூரிலிருந்து காலை கிளம்பி 6.30 மணி வாக்கில் கும்பகோணம் சென்றடைந்தோம். மகாமகத் தீர்த்தவாரி கோயில்களில் ஒன்றான கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து எங்களது பயணம் துவக்கமானது. கும்பேஸ்வரரையும் மங்களாம்பிகையையும் தரிசித்துவிட்டுக் கிளம்பினோம். குடமுழுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவுற்ற நிலையில் மகாமகத்திற்காக திருப்பணி நடைபெற்றுவருவதைக் கண்டோம்.


கும்பேஸ்வரர் கோயில், திருப்பணிக்குத் தயாராகும் குளம்
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்
அங்கிருந்து கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலிலும் மகாமகத்திற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. மகாமகத்தீர்த்தவாரி கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இறைவனையும், இறைவி பந்தாடு நாயகியையும் பார்த்துவிட்டு கோயிலை வலம் வந்தோம்.


இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில்
அடுத்த மிக அருகில் உள்ள இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில் சென்றோம். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகளை கண்டோம். வித்தியாசமான முறையில் அமைந்திருத்த மூலவர் விமானத்தை பார்த்தோம்.   

இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயிலும் விமானமும்
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
அங்கிருந்து திருப்புறம்பியம் கோயில் சென்றோம். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள தளத்திற்கு மேல் தளத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் கருவறை கோஷ்டத்தில் புள்ளமங்கை கோயிலில் உள்ளது போன்று மிகச் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.


திருப்புறம்பியம் கோயிலும், சிற்பமும்
விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்
திருப்புறம்பியம் கோயில் தரிசனம் நிறைவுற்ற பின் விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில் சென்றோம். இறைவனையும் இறைவி மங்கைநாயகியையும் தரிசனம் செய்தோம். 

விஜயமங்கை கோயிலும், கருவறையுடன் கூடிய விமானமும்
திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில்
அடுத்த கோயில் சுவாமிமலைக்கு அருகே அமைந்துள்ள திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில். வேறு எந்தத் தலத்திலும் காணாத வகையில் இங்குள்ள நந்தி அனைத்து இடத்திலும் நம்மை எதிர்கொண்டழைக்கும் (கிழக்கு நோக்கி) காட்சியைக் காணலாம்.

திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில் (நம்மை எதிர்கொண்டழைக்கும் நந்தி)
ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில்
அங்கிருந்து ஏரகரம் சுவாமிநாதசுவாமி கோயில் சென்றோம். சுவாமிமலைக்கு முந்தைய கோயில் என்ற சிறப்பினைக் கொண்ட கோயில். ஆதிகந்தநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. கருவறையில் லிங்கத்திருமேனி உள்ளது. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஆதிகந்தநாதசுவாமி சன்னதி உள்ளது. இச்சன்னதியில் சுப்பிரமணியர் நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். 
ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில் முகப்பு

சூன் 2015 பயணத்தின்போது சென்ற திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில், பட்டீஸ்வரர் தேனுபுரீஸ்வரர் கோயில், பழையாறை சோமநாதர் கோயில், நந்திபுரவிண்ணகரம் எனப்படும் நாதன்கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இக்கோயிலின் மண்டபத்தில் கருவறையின் வலப்புறம் சக்தி தழுவிய உடையார் என்ற சன்னதி உள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். சக்தி முற்றம் (சக்தி உறையும் இடம்) என்பதை இறைவி, இறைவனுக்கு முத்தம் தருவாகக் கூறுவதைக் கண்டோம்.
திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில் மூலவர் விமானம்
அடுத்து அருகில் உள்ள, நந்தி விலகிய தலமான தேனுபுரீஸ்வரர் கோயில் சென்றோம். அக்கோயிலின் இடப்புறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் வேலைப்பாடு உடையவனவாக உள்ளன. தேனுபுரீஸ்வரரையும், அம்மனையும்  தரிசித்துவிட்டு துர்க்கையம்மன் சன்னதி சென்றோம். 

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் நுழைவாயில்
அங்கிருந்து போகும் வழியில் முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். மாடக்கோயில் வடிவில் அழகாக இருந்தது. அதற்கடுத்து பார்சுவநாதசுவாமி உள்ளது. தொடர்ந்து பழையாறை சோமநாதசுவாமி கோயில் சென்றோம். எத்தனை முறை சென்றாலும் பார்க்கத் தூண்டும் கோயில். தற்போது திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குதிரை தேரை இழுத்துச்செல்லும் வடிவில் உள்ள மண்டபம் அருமையாக உள்ளது. இவ்வறான சிற்பத்தை கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்களில் காணமுடியும்.  
பழையாறை சோமநாதசுவாமி கோயில் வெளிச்சுற்று
தேரை இழுத்துச்செல்லும் குதிரை
அதற்கடுத்து நந்திபுர விண்ணகரம் எனப்படும் நாதன்கோயில் சென்றோம். ஆறு விண்ணகரங்களில் ஒன்றான இக்கோலத்தில் மூலவர் அமர்ந்த கோலத்தில் இரு தேவியருடன் உள்ளார்.
நந்திபுரவிண்ணகரம் எனப்படும் நாதன்கோயில்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
நிறைவாக தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சென்றோம். கோயிலின் முன்பு சற்றே ஓய்வெடுத்தோம். சிறிது நேரத்தில் மேகமூட்டத்துடன் மழை வருவது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த எங்களது பேரனை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினோம், பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த மன நிறைவுடன். 

ஆங்காங்கு சிலகோயில்களில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சில, இதோ.
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் வாயிலில்

திருப்புறம்பியம் கோயிலை சுற்றிவரும்போது


திருப்புறம்பியம் கோயிலில் சிற்பத்தைக் காட்டும் எங்கள் பேரன் தமிழழகன்
தாராசுரம் ஐராவதஸ்வரர் கோயில் முன்பாக
தாராசுரம் ஐராவதஸ்வரர் கோயில் முன்பாக

நன்றி

கோயில் உலா : குடந்தை கோயில்கள் என்ற தலைப்பில் பத்திரிக்கை.காம் இணைய இதழில் வெளியான எனது கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம். இக்கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்கு நன்றி.

40 comments:

  1. மனங்கவரும் அழகிய படங்கள்..
    அருமையான தகவல்களுடன் இனிய பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  2. நான் படிக்கும் காலத்தில் வானொலியில் ”வலம் வரும் ஒலி வாங்கி” என்ற நிகழ்ச்சியைக் கேட்டு இருக்கிறேன். அதே போல கோயில்களின் நகரமாம், கும்பகோணத்தைச் சுற்றி வலம் வந்து, பல்வேறு கோயில்களைப் பற்றி அழகிய வண்ணப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. படங்களைத் தனியே பெரிதாக்கிப் பார்த்தேன். படங்கள் யாவும் நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்டு தெளிவாக உள்ளன. தங்கள் பேரன் தமிழழகனுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை புகைப்படம் எடுததேன். தங்களின் பாராட்டுக்கும், பேரனுக்கான வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  3. அழகிய படங்கள்... நாங்களும் உடன் பயணித்த மன நிறைவு ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. புதுக்கோட்டைப் பணி முடிந்து உங்களது வருகையைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  4. கும்பகோணம் சுற்றியுள்ள கோயில்களின் தரிசனம் கிடைத்தது! சிறப்பான படங்களுடன் அழகான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    கோயில்கள் உலா படங்களுடன் அருமை. தங்களின் பேரன் தமிழழகன் - அழகன். அருமையிலும் அருமை.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. பதிவிற்கான பாராட்டுக்கும், பேரனுக்கான பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  6. முனைவரே படங்கள் அனைத்தும் நன்று வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. உங்களது வாழ்த்து என்னை மென்மேலும் எழுதவைக்கும். நன்றி.

      Delete
  7. படங்களுடன் உலா அழகும் அருமையும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உலாவினை ரசித்து கருத்து கூறியமைக்கு நன்றி.

      Delete
  8. கும்பகோணம் கோயில் உலா
    சிறந்த ஆவணப் பதிவு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை சிறந்த ஆவணமாக அமையவேண்டும் என்பதே என் அவா. நன்றி.

      Delete
  9. மகாமகம்! அம்மாடி.. என்ன கூட்டம் கூடப் போகிறதோ கோவில் நகரத்தில்!

    வழக்கம் போல தமிழ்மண வாக்கிட்டு, அழகிய படங்களுடன் இருந்த பதிவைப் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மகாமகத்திற்கு முன்பாகவே உங்களை அழைத்துச்செல்லவேண்டும் என்ற நன்னோக்கில் இவ்வாறான பதிவு. நன்றி.

      Delete
  10. தங்களுடன் நாங்களும் பயணித்த உணர்வு
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. என் பதிவுகளுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு நன்றி.

      Delete
  11. திருக்கோயில்களும் அவற்றின் அழகு தமிழ் திருப்பெயர்களும் அழகு.. பகிர்வுக்கு நன்றி சார் :)

    ReplyDelete
    Replies
    1. சில கோயில்களில் இறைவன் பெயரும், இறைவியின் பெயரும் கூட மிகவும் அழகாக இருப்பதைப் பார்த்துள்ளேன். நன்றி.

      Delete
  12. உலா அழகான காட்சிப்படங்களுடன் அருமையான தொகுப்பு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உலாவில் கலந்துகொண்டமைக்கு நன்றி.

      Delete
  13. கோயில்கள் உலா படங்கள் அருமை சார்!. தங்களின் பேரன் தமிழழகனுக்கு அன்பு முத்தங்கள்

    ReplyDelete
    Replies
    1. படத்திற்கான பாராட்டுக்கும், பேரனுக்கான பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  14. அன்பின் ஜம்பு லிங்கம் அவர்களே !

    கோவில்களின் அருமையான படங்களூம் அவற்றின் அழகான தமிழ்த் திருபெயர்களூம் அவற்றின் அழகான பகிர்வும் கண்ணைக் கவர்கின்றன. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய பதிவு. தங்களின் வாழ்த்துக்களுடன் தொடர்வேன். நன்றி.

      Delete
  15. தங்கள் பதிவின் மூலம் நாங்களும் கோவில் உலா சென்ற உணர்வு. இது வரை நாங்கள் காணாத கோவில்களுக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வட இந்தியாவிற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். நான் தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள கோயிலுக்கு அழைத்துச்செல்கிறேன். நன்றி.

      Delete
  16. மன நிறைவு தந்தது பகிர்வு!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மன நிறைவு கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  17. இரண்டுஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றோம். மீண்டும் சென்றது போன்ற உணர்வு. சிறப்பான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை கும்பகோணம் பக்கம் வாருங்கள். அனைத்து கோயிலையும் பாருங்கள். அன்புக்கு நன்றி.

      Delete
  18. வணக்கம்
    ஐயா

    அழகிய படங்களுன் விளக்கம் நன்று.. நாங்களும் சென்றது போல ஒரு உணர்வு வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறான உணர்வை ஏற்படுத்தவே இப்பதிவு. தொடர்ந்து பயணிப்போம். நன்றி.

      Delete
  19. கோயில் உலா அழகிய தகவல்களோடு அருமை....நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா..மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  20. #இணைய இதழில் வெளியான எனது கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.#
    தொடர்ந்து கோவிலைப் பற்றியே எழுதிய காரணம் புரிந்தது !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், காரணப்புரிதலுக்கும் நன்றி.

      Delete