29 April 2015

பெரிய கோயில் தேரோட்டம்

21.4.2015 அன்று தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயிலின் வெள்ளோட்டம் கண்ட நாம் இன்று (29.4.2015)தேரோட்டம் காண்போம். 

28.4.2015 மாலை
தேரோட்டத்திற்கு முன்பாக பெரிய கோயில் சென்று வருவோம். வாயிலில் தேரோட்டத்திற்கான அழைப்பிதழ் பெரிய பதாகையாக வைக்கப்பட்டிருந்தது. 






28.4.2015 மாலை பெரிய கோயில் வளாகம்
தேரோட்டத்தின் முதல் நாளான 28.4.2015 அன்று மாலை முளைப்பாரி ஊர்வலமாக பெரிய கோயில் நடராஜர் மண்டபத்திலிருந்து எடுத்துவரப்பட்டது. பக்தர்கள் மிகவும் ஆர்வமாக அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு உடன் வந்தனர். இன்னிசை முழங்க கோயில் வளாகத்திலிருந்து வெளியே உலா வந்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது.



28.4.2015 மாலை முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படல்
தேர் மேலவீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிற்பமாக பார்க்கும் முன்பாக இந்தத் தேருக்குப்  பெருமை சேர்ப்பனவற்றைப் பார்ப்போம். 

பயன்படுத்தப்பட்டவை : 
25 டன் இலுப்பை மற்றும் நாட்டுத்தேக்கு, அரை டன் இரும்பு
தேரின் உயரம் : 16½ அடி
தரை முதல் கும்பம் வரை  : 40 அடி உயரம், 16 அடி அகலம்
தேரின் மொத்த எடை  : சுமார் 40 டன்
நிலைகள் : ஐந்து
இரும்புச்சக்கரம்,  அச்சு தயாரிப்பு: திருச்சி, பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்) 
இரும்புச்சக்கரங்கள் : தலா 6.5 அடி உயரம், 1 டன் எடை
அச்சு : 14.5 அடி நீளம், 2 அச்சு 2 டன் எடை  
சக்கரங்கள் ஒவ்வொன்றும் : தலா 1 டன் எடை
பலகை மட்டம் : பன்னிரெண்டே கால் அடி உயரத்தில் 
தேவாசனம் (நடைபாதை) : மேல்மட்டத்தில் இரண்டரை அடி உயரத்தில் 
சிம்மாசனம் (ஸ்வாமி பீடம்) : இதிலிருந்து, இரண்டே கால் அடி உயரத்தில்
அலங்காரத்துணி : சோழர் கால பாணியிலான எட்டுப் பட்டை வடிவம்

தொம்பைகள் : துணியாலானவை 

இனி, தேரில் அமைந்துள்ள சிற்பங்களின் அம்சங்களைக் காண்போம். முதல் படி நிலையில் ஒன்றரை அடியில் 67 இரண்டாம் படிநிலையில் இரண்டேகால் அடியில் 67 என மொத்தம் 360 மரச்சிற்பங்கள் உள்ளன. தேரின் முன்புறம் கைலாசநாதர் கயிலாயக் காட்சி, பின்புறம் நந்தி மண்டபத்துடன் கூடிய பெரிய கோயில் அமைப்பு (ஒரே பலகையில்) மற்றும் நாயன்மார்கள், சிவ தாண்டவக் காட்சிகள் மற்றும் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிட்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி உள்ளிட்டவை. நான்கு திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்கள் தேரை அழகுபடுத்துகின்றன.


28.4.2015 மாலை அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேர்
தேரோட்ட நாளின் முதல் நாள் மாலை பெரிய கோயிலுக்கும், தேரைப் பார்க்கவும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். மாலை நடராஜர் மண்டபத்திலிருந்து இன்னிசை முழங்க, முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


29.4.2015 காலை
தேரோட்டம் காண்பதற்காக நானும் எங்களது குடும்பத்தாரும் கிளம்பினோம். முதலில் பெரிய கோயில் வந்தோம். அங்கு 5.15 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பெரிய கோயில் வளாகத்தைவிட்டுக் கிளம்பியதைக் கண்டோம். 




 









 

பஞ்சமூர்த்திகள் பெரியகோயிலிலிருந்து கிளம்பி வரல்
கோயில் வளாகத்திலிருந்து ராஜராஜன் பெருவாயில்,கேரளாந்தகன் வாயில் வழியாக வெளியே வந்து, ராஜராஜசோழன் சிலை, சிவகங்கைப்பூங்காவைக் கடந்து அலங்கரிக்கப்பட்ட தேர் இருந்த தேர் மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் வந்து சேர்ந்தனர். நாங்களும் பஞ்சமூர்த்திகளுடன் வந்தோம்.


  
மேலவீதியிலிருந்து தேர் புறப்பாடு

பஞ்சமூர்த்திகளில் தேர் மண்டபத்தில் இருந்த தேருக்கு முன்னதாக விநாயகரும், சுப்பிரமணியரும் அமைய தேர் கிளம்ப ஆயத்தமானது. அலங்கரிக்கப்பட்ட யானை தேரோட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்தது. தனி அம்மனும், சண்டிகேஸ்வரரும் தேருக்குப் பின்னால் இருந்தனர். தியாகராஜரையும் அம்மனையும் சிம்மானத்தில் அமர்த்தும் பணி மிக நுட்பமாக மேற்கொள்ளப் படுவதைக் கண்டோம். இறைவனும் இறைவியும் அமர்ந்ததும் ஆர்த்தி எடுக்கப்பட்டது.


மேலவீதியில் தேர்

வடக்குவீதியில் தேர்

கீழ வீதியில் தேர்
தேரோட்டத்தின்போது பரமசிவனாக ஒரு சிறுவன்
சுமார் 6.15 மணிவாக்கில் இன்னிசை முழங்க, தேவாரங்கள் பாடப்பட, நாதசுவர இசை, கோலாட்டம் போன்றவற்றுடன் இறைவனும், இறைவியும்  தேரில் உலா வரத் தொடங்கினர்.  பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பச்சைக் கொடி காட்டப்பட தேர் மேல ராஜ வீதியிலிருந்து கிளம்பியது. அவ்வீதியில் கொங்கணேஸ்வரர் கோயிலிலும், மூலை ஆஞ்சநேயர் கோயிலிலும் பக்தர்கள் வசதிக்காக தேர் சிறிது நேரம் நின்றது. தொடர்ந்து  வடக்கு ராஜ வீதியில் ராணிவாய்க்கால் சந்து எதிரேயுள்ள பிள்ளையார் கோயிலிலும், காந்தி சிலை அருகேயுள்ள ரத்தினபுரீஸ்வரர் கோயிலிலும், பின்னர் அவ்வாறே கீழ இராஜவீதியிலும் தெற்கு ராஜ வீதியிலும் குறிப்பிடப்பட்ட இடங்களில் தேர் நின்றது.  (நான்கு ராஜ வீதிகளும் பெரிய கோயிலைச் சுற்றி உள்ளவை அல்ல. பெரிய கோயிலிலிருந்து அதன் இடப்புறமாகச் சிவகங்கைப் பூங்கா வழியாகச் சென்றால் அங்கிருந்து மேல ராஜ வீதி ஆரம்பமாகிறது. சிறிது தூரத்தில் தெற்கு ராஜ வீதியுடன் அவ்வீதி சந்திக்கும் இடத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர் முட்டி உள்ளது. அங்கிருந்தே தேர் புறப்பட்டது.)  பக்தர்களின் வசதிக்காகவும், ஆர்த்தி எடுப்பதற்காகவும், சிறப்புப்பூஜை செய்வதற்காக இந்த இடங்களில் தேர் நின்றது. 

நேரம் ஆக ஆக, தேர் புறப்பட இருந்தபோது இருந்ததைவிட பன்மடங்கில் கூட்டம் பெருகியது. முழுமையாக தேருடன் வலம் வந்து மன நிறைவுடன் திரும்பினோம். மக்கள் வெள்ளத்தை பல ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூர் கண்டதை நேரில் உணர முடிந்தது.

வில்லிப்புத்தூர் தேர், சார்ங்கபாணி கோயில், திருவாரூர் தேர் என்றவாறு பல ஊர்களில் தேர்களை ரசித்த மக்கள் தற்போது தஞ்சாவூருக்குப் புதிய தேர் கிடைத்ததறிந்து மகிழ்ச்சியடைந்ததை தேரோடு உலா வந்தபோது எங்களால் காணமுடிந்தது. அனைத்துத் துறையினரும் மிகவும் சிறப்பாகப் பங்காற்றி தேரோட்டம் நல்ல முறையில் அமைய ஒத்துழைப்புத் தந்தமை பாராட்டத்தக்கதாகும்.

------------------------------------------------------------------------------------
பெரியகோயில் தேர் வெள்ளோட்டம் பற்றிய முந்தைய பதிவில் முனைவர் த.பத்மநாபன் அவர்கள் (Prof.,Dr.T. Padmanaban, Tamil Research Center) கூறியுள்ள கருத்துகளை வரலாற்று நோக்கிலும், அடிப்படையிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. இப்பொருண்மை தொடர்பாக அவருடைய பிற கடிதங்களையும் அப் பதிவில் காணலாம்.
------------------------------------------------------------------------------------

20 April 2015

பெரிய கோயில் தேர் வெள்ளோட்டம்

இன்று (20.4.2015) காலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேரின் வெள்ளோட்டம் பார்க்கக் கிளம்பினோம். மேலவீதி ராமர் கோயில் அருகே புதிய தேர் செய்யப்பட்ட இடத்தில் பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.  



தேரோட்டத்திற்கு முன்பாக பூஜை
அங்கு சிறிது நேரம் நின்றுவிட்டு அந்த இடத்தில் உருவாக்கப்பட்டு வெளியே ராமர் கோயிலின் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேரினைக் கண்டோம். மலர்த் தோரணங்களால் தேர் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னர் தஞ்சாவூரில் இருந்த தேரைப் பற்றிப் படித்தவை நினைவிற்கு வந்தன.




1997இல் தஞ்சாவூரில் நடைபெற்ற தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலரில் வெளியான (எஸ்.பாபாஜி ராஜா பான்சலே சத்ரபதி, மாமன்னர் சரபோஜியின் மகத்தான கொடை) கட்டுரையில் 400 ஆண்டுகளுக்கு முன்பாக தஞ்சாவூரில் இருந்த தேரைப் பற்றிய குறிப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கி.பி.1776இல் 20,200 நபர்கள் இழுத்து தஞ்சாவூரில் தேர் உலா வந்தததாகவும், சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1813இல் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் இழுப்பதற்காக 27,394 நபர்கள் பல தாலுக்காக்களிலிருந்தும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவையாறு (1900), பாபநாசம் (2800), கும்பகோணம் (3494),மாயவரம் (3484), திருவாரூர் (2920), மன்னார்குடி (4200), கீவளூர் (4500), நன்னிலம் (3200) என்ற நிலையில் தேருக்காக 26,494 நபர்களும், வாகனங்களுக்காக திருவையாற்றிலிருந்து 900 நபர்களுமாக மொத்தம் 27,394 நபர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 




இந்த நினைவுகளுடன் தேரைப் பார்த்துவிட்டு மறுபடியும் பல நூற்றாண்டுக்குப் பின் உருவான இந்த தேரைப் பார்த்தோம். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழிபாடு செய்யப்பட்ட பூரண கும்பம் தேரின் மீது அமைக்கப்பட்டு அதன் மீது அலங்கரிக்கப்பட்ட சிறிய வண்ணக்குடை வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தீப ஆராதனைகள் காட்டப்பட்டு தேர் புறப்பட ஆயத்தமானது. மங்கல வாத்தியங்கள் முழங்க, மயிலாட்டத்துடன் வெகு சிறப்பாக தேர் கிளம்பியது. தேர் கிளம்பும் முன்பாக தேரின் வடத்தை தொட்டுக் கும்பிட்டோம்.   


 


மேலவீதி தேரோட்டம்

இத்தேர் பற்றி நாளிதழ்களில் முழுமையான விவரங்கள் வந்ததைப் பார்த்திருந்தோம். 16½ அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்டதாக உள்ளதாகவும், மேல்மட்டத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் 1½ அடியிலும் 56 பொம்மைகளும், 2ஆம் அடுக்கில் 2¼ அடியில் 46 பொம்மைகளும், 3ஆம் நிலையில் 1½ அடியில் 56 பொம்மைகளும் என மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளதாகவும் முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிச்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி போன்ற பொம்மைகள் நான்கு திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம். தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,  தேரின் 2 அச்சும் 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சுமார் 40 டன் என்பதையும் அறிந்தோம். தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தோம். 





பின்னர் கீழவீதிக்கு வந்து கீழ வீதியில் தேர் செல்லும் அழகினைப் பார்க்கக் காத்திருந்தோம். யானை முன் வர, தொடர்ந்து கலைக்குழுவினர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தேர் வந்தது. அங்கிருந்து சிறிது நேரம் பார்த்து இறையுணர்வோடு அவ்வழகினை ரசித்தோம். 





கீழவீதியில் தேரோட்டம்
பின்னர் மறுபடியும் மேலவீதிக்கு வந்து அங்கே இந்த புதிய தேர் அமைக்கப்படவுள்ள தேர்முட்டியைப் பார்த்தோம். இந்த புதிய தேர்முட்டி செப்பம் செய்யப்படும்போது கடந்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய தேரின் 20 மரச்சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் ஆகியவை கிடப்பது தெரியவந்ததாகக் கூறினர். 


மேலவீதியில் புதிய தேர்முட்டி
மேல வீதியில் தேரோடு தொடங்கிய எங்களது பயணம் புதிய தேர்முட்டியில் நிறைவானது. இத்தேரோட்டத்தின்போது பக்தர்களே பக்தி பரவசத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 29.4.2015 அன்று இங்கிருந்துதான் தேரோட்டம் நடைபெறவுள்ளது. 

18 April 2015

இளைய மகாமகம் : தீர்த்தவாரி

இளைய மகாமகத்தையொட்டிய 3.3.2015 அன்று தேரோட்டம் சென்று திரும்பிவிட்டு, மறுநாள் (4.3.2015) தீர்த்தவாரியைக் காண  நானும் என் மனைவியும் கும்பகோணம் சென்றோம். கோயில் மகாமகக்குள மண்டபத்திலிருந்து தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 

தீர்த்தவாரியில் விநாயகர், முருகன், கும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர்
கும்பேஸ்வரர், மங்களாம்பிகை
விநாயகர், முருகன்

தீர்த்தவாரி

தீர்த்தவாரியில் காசி விஸ்வநாதர்



தீர்த்தவாரியில் அபிமுகேஸ்வரர்
தீர்த்தவாரிக்கு முன்பாக கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களிலிருந்து சிவனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் பல்லக்கில் தீர்த்தவாரிக்காக மகாமகக் குளத்தினைச் சுற்றி வந்து, பின்னர் குளக்கரையில் இருந்து அருள் பாலித்தனர். உடன் நாங்களும் சுற்றிவந்தோம். தீர்த்தவாரிக்காக வரும் இறைவன், இறைவியைப் பார்க்க மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். சிலர் உடன் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு கோயில் இறைவன், இறைவியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த கோயிலைச் சார்ந்த பல்லக்கினைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்லக்குகள் வர ஆரம்பித்தன. அனைத்துப் பல்லக்கினையும் காணும் ஆர்வத்தில் பார்த்ததையே மறுபடியும் சூழலும் எழுந்தது.  ரிஷப வாகனத்தில் சிறப்பான மலர் அலங்காரத்தோடு கோயில் குடையின் கீழ் இறைவன் செம்மாந்து அமர்ந்திருந்த அழகினை பொறுமையாக ரசித்தோம். இவ்வாறான இறை இன்பத்தை இப்போது பெறமுடிந்ததை எண்ணி மகிழ்ந்தோம். 

 



இவ்வாறாக கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் சுவாமிகள் ரிஷப வாகனத்தில் தேவியருடன் குளத்தைச் சுற்றி வந்த காட்சியைக் காண கண் கோடி வேண்டும். அவர்களுடன் நாங்களும் மகாமகக்குளத்தைச் சுற்றி வலம் வந்தோம். சுற்றிவரும்போது குளத்தின் கரையில் பலர் மூத்தோருக்கு வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். 





காலை 9.15 மணிவாக்கில் சுற்ற ஆரம்பித்து, 10.00 மணிவாக்கில் மகாமகக்குளத்தின் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறும் இடத்திற்கு எதிராக உள்ள படித்துறையில் அமர்ந்தோம். அங்கிருந்தபடியே காசிவிஸ்வநாதர் கோயிலின் அருகே தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்டோம். வாகனங்களில் வந்த இறைவன், இறைவியை ஒரே இடத்தில் அங்கு காணமுடிந்தது. குளக்கரையில் நான்கு திசையிலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் காணமுடிந்தது. பல இடங்களில் குளத்திற்காக உள்ளே வரும் வழியில் காவலர்கள் நின்றுகொண்டு கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர்.  நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அபிமுகேஸ்வரர் கோயிலையும் அங்கு பல்லக்கில்  நின்றுகொண்டிருந்த இறைவன், இறைவியைக் கண்டோம்.   








நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அபிமுகேஸ்வரர் கோயிலையும் அங்கு பல்லக்கில் இருந்த இறைவன், இறைவியைக் கண்டோம். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாங்கள் இருந்த படிக்கட்டில் கூட்டம் அதிகமாகிவிட்டது. பலர் படிக்கட்டில் தீர்த்தவாரி நேரத்தில் புனிதக்குளியல் குளிக்கவேண்டும் என்பதற்காக அமர்ந்துகொண்டிருந்தனர். அவ்வாறாக சுமார் 2 மணி நேரம் சிலர் அமர்ந்திருந்ததைக் காணமுடிந்தது. தலையில் குளத்தின் நீரைத் தெளித்துத் திரும்பக் கூட வந்தவர்களுக்கு யோசித்தே இடம் தந்தனர். மறுபடியும் தத்தம் இடத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டனர். தீர்த்தவாரி நேரத்தில் அனைவரும் புனித நீராடினர். அங்கிருந்தபடியே இறைவனை வணங்கினோம்.  பின்னர் சிறிது சிறிதாகக் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாள் நான்கு கோயில் தேர்களைப் பார்த்த நிறைவுடன், இன்று அனைத்து கோயில்களின் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு, உடன் சென்று, வழிபட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம். 2016இன் மகாமகத்திற்கு முன்னோட்டமாகவே இந்த இளைய மகாமகத் தீர்த்தவாரி இருப்பதை எங்கள் மனம் உணர்ந்தது.

புகைப்படங்கள் எடுக்க உதவி: 
உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி