31 December 2016

விக்கிபீடியாவில் 300+ பதிவுகள் : இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் 18 டிசம்பர் 2016இல் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் விக்கிபீடியாவில் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்த வகுப்பில் நான் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவ்வாய்ப்பினைத் தந்த பொறுப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
பயிற்சி முகாமிற்கு வந்தவர்கள் எளிதில் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் விழாவிற்கு வந்திருந்த திரு தங்கம் மூர்த்தி அவர்களைப் பற்றிய விவரங்கள் நேரில் பெறப்பட்டு, அங்கேயே புதிய பதிவு அவர் பெயரில் தொடங்கப்பட்டது. கூடுதல் விவரங்கள் பெறப்படும்போது அவரைப் பற்றிய கட்டுரை மேம்படுத்தப்படும். 


தற்போது கட்டுரைகளைத் தொடங்கும் முறை சற்றொப்ப வலைப்பூவில் உள்ளதைப்போலவே இருப்பதை அப்போதுதான் கண்டேன். அதே சமயத்தில் பழைய முறையிலும் பதியலாம். பயிற்சி வகுப்பில் நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட அனுபவங்களில் சில : 
  • மின்னஞ்சல், வலைப்பூ போன்றவற்றிற்கு பதிவது போலவே பயனராக விக்கிபீடியாவில் பதிவு செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமலும் பலர் எழுதுகிறார்கள். பதிவு செய்து பயனர் என்ற நிலையில் எழுதும்போது அனைத்தும் நம் பெயரில் பதிவாக வாய்ப்புண்டு. 
  • முடிந்தவரை தெரிந்த தகவல்களை அதன் நம்பகத்தன்மையை இணைப்பாகத் தந்து பதிவிடுதல் நலம். 
  • ஆரம்ப நிலையில் முடிந்தவரை விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டால், புதிய கட்டுரைகள் எழுத உதவியாக இருக்கும்.
  • நாளிதழ், ஆய்விதழ், நூல் என்ற நிலையில் பெறப்படும் புதிய செய்திகளை அந்தந்த தொடர்புடைய கட்டுரைகளோடு இணைத்து கட்டுரையினை மேம்படுத்தலாம். 
  • எடுக்கும் புகைப்படங்களை பொதுவகத்தில் இணைத்தால் பிற மொழி விக்கிபீடியாக்களில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு.
  • ஏதேனும் ஐயமிருப்பின் பேச்சுப்பக்கத்தில் எழுதினால் பிற விக்கிபீடியர்கள் நமக்கு உதவி செய்வர், தெளிவுபடுத்துவர். 
  • எப்படி எழுதுவது என்பது தொடர்பானவை பற்றி விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் கூறப்பட்டுள்ளன.
  • அனைத்திற்கும் மேலாக எழுத்தில் பொறுமையும், நிதானமும் இருப்பது நலம்.
  • மாற்றுக்கருத்துகளையோ, மாறுபட்ட கருத்துகளையோ பரிமாறிக்கொள்ளும்போது கவனம் தேவை.
விக்கிபீடியா தொடர்பான கடந்த பகிர்வுக்குப் பின் சுமார் 70 பதிவுகளை எழுதி தற்போது 320 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். சூலை 2016இல் விக்கிபீடியாவில் என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நான் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகத் தானாகக் குறிக்கப்படும் என்பதை அறிந்தேன். அதனைத் தொடர்ந்து எழுதும்போது இன்னும் கவனமாக எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அண்மைய பதிவுகளில் ஏற்பட்ட சில அனுபவங்கள் :
  • நேரில் சந்திக்கும் நபர்கள், சென்ற இடங்கள் என்ற நிலையில் களப்பணியில் திரட்டப்படும் செய்திகளின் அடிப்படையில் பதிவுகளைத் தொடங்கவும், மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
  • மகாமகம் கட்டுரையில் 15ஆம் நூற்றாண்டு மகாமகம் முதல் கிடைத்த விவரங்கள் பதியப்பட்டன. துணைத்தலைப்பான 2016 மகாமகம் என்ற தலைப்பிலான, என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை, முதன்மைக் கட்டுரையாக அமையும் அளவு விரிவுபடுத்தப்பட்டது. தேவையான புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. 
  • கடந்த மகாமகங்களின்போது வெளிவந்த குடந்தை மகாமக விழா மலர் 1980, மகாமகம் மலர் 1992, மகாமகம் சிறப்பு மலர் 2004 ஆகிய மலர்கள் தேடிப்பெறப்பட்டு விவரங்கள் பதியப்பட்டன.
  • 2016 மகாமகத்தின்போது வெளியிடப்பட்ட மகாமகம் 2016 சிறப்பு மலர் மற்றும் கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் ஆகிய மலர்கள் பெறப்பட்டு புதிய பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • கும்பகோணத்திலுள்ள, விக்கிபீடியாவில் விடுபட்டுள்ள, பல கோயில்களைப் பற்றி புதிய பதிவுகள் தொடங்கப்பட்டன. 
  • இளைய மகாமகம் 2015 என்ற தலைப்பில் தொடங்கியிருந்த கட்டுரையில், ஒவ்வொரு மகாமகத்திற்கும் முந்தைய ஆண்டு இளைய மகாமகம் இல்லை என்றும், 11 ஆண்டுக்கொரு முறை வருவதே இளைய மகாமகம் என்ற விவரம் தாமதமாக அறியப்பட்டு,உரிய குறிப்பு கட்டுரையில் இணைக்கப்பட்டது.
  • கும்பகோணம் கோயில்கள் வார்ப்புரு அமைப்பில் தஞ்சாவூர் கோயில்கள் என்ற புதிய வார்ப்புரு தொடங்கப்பட்டு, முக்கியத்துவம் பெற்ற அனைத்துக் கோயில்களையும் விடுபாடின்றி சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 
  • நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்,  தமிழவேள் உமாமகேஸ்வரனார் பற்றிய கட்டுரையை மேம்படுத்தும்படி கூறியிருந்தார். மேம்படுத்தும்போது வே.உமாமகேசுவரன் மற்றும் உமாமகேஸ்வரனார் என்ற தலைப்பில் இரு கட்டுரைகளை காண முடிந்தது. தற்போது இரு கட்டுரைகளும் இணைக்கப் பட்டுவிட்டது.
  • நவம்பர் 2026இல் கோயில் உலா சென்றதன் அடிப்படையில் புகைப்படங்களை விக்கிபீடியாவில் இணைத்தபோது ஒரே கோயில் பற்றிய பதிவு திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் மற்றும் பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் என்ற இரு தலைப்புகளில் இருப்பதைக் காண முடிந்தது. தற்போது இரு பதிவுகளும் இணைக்கப்படுகிறது. 
  • இவ்வாறே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கட்டுரையும் திருபுவனம் கம்பகரேசுவரர் கட்டுரையும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
  • இவ்வாறே ஆங்கில விக்கிபீடியாவில் ஒரே கோயில் பற்றிய பதிவு  Tirunallam Umamaheswarar Temple மற்றும் Umamaheswarar Temple, Konerirajapuram என்ற இரு தலைப்புகளில் இருப்பதைக் காண முடிந்தது. தற்போது இரு பதிவுகளையும் ஒன்றாக இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. (ஆங்கில விக்கிபீடியாவில் முதன்முதலாக கட்டுரையை இணைக்கும் முயற்சியை இப்பதிவு மூலம்தான் ஆரம்பித்துள்ளேன்), அத்துடன் இரு விக்கிபீடியாக்களிலும் இக்கோயில்களில் காணப்படுகின்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என்னால் இணைக்கப்பட்டன. 

விக்கிபீடியா தொடர்பான எனது பதிவுகள்: 
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு 
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு 
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம் 
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம் 
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு 
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது  
நவம்பர் 2015 :  விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம் 
நவம்பர் 2015 : Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express
முகாமில் கலந்துகொண்டோர்  


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி நறுக்கு 

புகைப்படங்கள் நன்றி : 
அன்பிற்குரிய நண்பர்கள் கவிஞர் முத்துநிலவன், தமிழ் இளங்கோ, கில்லர்ஜி, கீதா, புதுகை செல்வா

24 December 2016

தேவகோட்டை தேவதை தேவகி : கில்லர்ஜி

நண்பர் திரு தேவகோட்டை கில்லர்ஜி நூலுக்கான 
என் முகவுரை

புதுக்கோட்டை கணினி பயிற்சி முகாமில், வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக திரு கில்லர்ஜியுடன்
(புகைப்படம் நன்றி : திரு தமிழ் இளங்கோ)

வாசகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி எழுத்துக்கு உண்டு. சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், இயற்கை, ஆன்மீகம், அறிவியல் என்ற ஒவ்வொரு நிலையிலும் பலவிதமான மாற்றங்களை எழுத்து உண்டாக்கிவிடுகிறது.  உணர்வுகள் எழுத்துக்களாக உருப்பெறும்போது அதில் எழுதுபவரின் அனுபவமோ, கற்பனையோ காணப்படுவது இயற்கையே. அதிகமான வாசிப்போர் எழுதும் எழுத்துகளில் அதிகமான நிகழ்வுகளைக் காணலாம். தொடர்ந்து எழுதும் நிலையிலும்,  களங்கள் மாறுபடும் நிலையிலும் எழுதுபவர்கள் பக்குவம் பெறுகின்றார்கள். அவ்வாறான ஒரு பக்குவத்தை தம் எழுத்துகளின் மூலம் கொணர்ந்துள்ளார் நண்பர் திரு. தேவக்கோட்டை கில்லர்ஜி.

 எழுத்துகள் மூலமாக அனைத்து தரப்பினரையும் தன்னை நோக்கி இழுக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவருடைய பதிவுகளைப் படித்தவர் நன்கு அறிவர். வலைப்பூவில் தொடர்ந்து எழுதி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தைக் கொண்ட அவர் தற்போது நூல் வடிவில் அவற்றை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கவேண்டிய முயற்சியாகும். சுமார் 60 தொகுப்புகளைக் கொண்டுள்ள இந்நூலில் சிறுகதை, கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், நகைச்சுவை, துணுக்குகள் என்ற பல வகையிலான பதிவுகள் காணப்படுகின்றன.  

பதிவுகளுக்கு அவர் தலைப்பு வைக்கும் விதம் அலாதியானது. அவரது பதிவுகளின் தலைப்புகள் வித்தியாசமாகவும், படிப்பவர் மனதில் எளிதில் பதியும் வகையிலும்,  விரைவில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும்.  அவ்வாறான தலைப்புகளில் பெரும்பாலும் ஊரின் பெயர் முதன்மையாக காணப்படும். படிக்கப்படிக்க ஆவலோடு காணப்படும் அவரது பதிவுகளில்  சமூகப் பிரக்ஞைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். 

சில நிகழ்வுகள் கற்பனையாகவும், சில அவர் பெற்ற அனுபவம் போல இருப்பதை இப்பதிவுகள் உணர்த்துகின்றன. தான் எதிர்கொண்ட அனுபவங்களைப் பதியும்போது பிறருக்கு அவைப் பாடங்களாக அமையவேண்டும் என்ற நன்னோக்கினை மிகவும் நுட்பமாகவும், ஆழமாகவும் அவர் வெளிப்படுத்துகிறார்.   ஒவ்வொரு பதிவிலும் சமூகத்திற்குப் பயனுள்ள செய்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தரும் நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். பல நிகழ்வுகளில் ஒப்புமைகளைக் காட்டும்போது அடுக்குத்தொடராகச் சொற்களை அவர் பயன்படுத்தியுள்ள விதம் வாசகர்களை அதிகம் கவர்ந்துவிடும்.

ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவாதிக்கும் நிலை (தேவகோட்டை, தேவதை தேவகி), பகல் கனவில் வாழ்வினை நடத்தும் சுகம் (பெரியகுளம் பெரியவர் பெரியசாமி), பேச்சாற்றலால் அமையும் நல்ல வாழ்க்கை (சென்னை செம்மொழி செண்பகவள்ளி), நிருபரிடம் அளிக்கும் பேட்டிக்கு இயல்பான மறுமொழிகளைத் தரல் (எமமேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்), நடிகை எதிர்கொள்ளும் வாழ்க்கை (கண்ணூர் கண்ணகி கருப்பாயி), வேலைக்கு சிபாரிசு செய்வதால் எழும் சிக்கல்  (அரக்கோணம் அரைக்கேனம் மரைகானம்), குழப்பம் தரும் நபரிடம் சிக்கிக்கொள்ளும் மருத்துவர் (சங்ககிரி சகுனி சடையாண்டி), வித்தியாசமாக செருப்பு தயாரித்து அனாவசிய மருத்துவச்செலவில் மாட்டிக்கொள்ளல்  (செங்கல்பட்டு செங்கல்சூளை செங்கல்வராயன்), நண்பனுக்கு அறையில் இடம் கொடுத்து புதிய பிரச்னையை உண்டாக்கிக்கொள்ளல் (மாதவனூர் மாவுடியான் மாதவன்), மனைவி காட்டும் அதீத அன்பினால் நெகிழும் கணவன் (வெள்ளையபுரம் வெள்ளந்தி வெள்ளையம்மாள்) என்ற நிலையில் ஒவ்வொரு கதையையும் வித்தியாசமான கோணத்தில் அமைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.   

கதாபாத்திரங்களுக்கு அவர் வைத்துள்ள பெயர்கள் வித்தியாசமானவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஆனால் அதே சமயத்தில் ஏதோ ஒரு நிலையில் ஒருவகையான பொருத்தம் அமைந்திருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தலைப்பைத் தெரிவு செய்யும் விதத்தில் அவர் கவனமாக இருந்துள்ளார்.

கதை மட்டுமல்ல. நகைச்சுவைகள், கவிதைகள், துணுக்குகள், நாட்டுப்புறப்பாடல்கள் என்ற நிலையில் பல நிலைகளிலும்கூட  தன்னால் பரிணமிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் பெருமுயற்சி எடுத்த அதில்  வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.  

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை எடுத்துரைக்கும்போது அவரது இரண்டாவது மனைவி கைதட்டுதல் (குரும்பூர், குட்டிக்கதை குருசாமி), பிச்சைக்காரனுக்கு நினைத்த இடமெல்லாம் தூக்கம் வரும், பணக்காரனுக்கு நினைத்தாலும் தூக்கம் வராது (கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு) என்ற நிலையில் நகைச்சுவை ததும்பும் வரிகளை அவர் தரும் விதம் அருமையானது. பெரும்பாலான நகைச்சுவைகளில் சமூக உணர்வினை அவர் வெளிப்படுத்துகின்றார்.

வந்துவிடு வசந்தக்காற்றே நாம் வளமுடனே வாழ்ந்திடவே (துபாய், துணைவன் துரைச்சாமி), கண் (இமைக்குள் வசப்படும்போது) /நிலவு (மேகத்துக்குள் வசப்படும்போது) /கண்ணே நீ ஏன் என் வசப்படக்கூடாது? (ராயப்பேட்டை ராப்காடு ராதிகா), கண்ணடித்து நகைக்க வேணுமடி/கண்ணாலம்தான் கட்டிக்குவோமடி (கல்லல், கலக்கல் கண்ணன்), என் மனதில் வீற்றிருக்கும் கலைவாணி/உன் மனதை விரைந்து தந்திடு மகராணி  (பவானியில் பவனி வரும் பவானி) என்ற நிலைகளில் தன் கவிதைகளில் கற்பனைத் திறத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

வலைப்பதிவுகளின் மூலமாக அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ள திரு தேவக்கோட்டை கில்லர்ஜி, தன் எழுத்துகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நூலாக்க முயற்சியில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.  இந்நூல் மூலமாக அவர் இன்னும் பல புதிய வாசகர்களைப் பெறுவார்.  அவருடைய எழுத்துப்பணி மென்மேலும் தொடரவும் அவர் இன்னும் பல நூல்களை எழுதவும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

புதுக்கோட்டை கணினி பயிற்சி முகாமில், வலைப்பூ அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் திரு கில்லர்ஜி.
உடன் திரு திண்டுக்கல் தனபாலன், கவிஞர் திரு முத்துநிலவன்
(புகைப்படம் நன்றி : தேவதா தமிழ் வலைப்பூ)

நூல்  : தேவகோட்டை தேவதை தேவகி
ஆண்டு  : 2016
ஆசிரியர் முகவரி : திரு கில்லர்ஜி (8220750853) 
சாஸ்தா இல்லம், ஸ்ரீசக்தி திருமண மண்டபம் 
அருகில், 3, தேனம்மை ஊரணி வீதி, வேகோட்டை 630 302
மின்னஞ்சல் : sivappukanneer@gmail.com
நூல் பெற தொடர்புக்கு : திரு கே.விவேக் (9600688726)

27 டிசம்பர் 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

20 December 2016

கோயில் உலா : 26 நவம்பர் 2016

26 நவம்பர் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தேவாரப்பாடல் பெற்ற எட்டு கோயில்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற நான்கு கோயில்களுக்கும், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலுக்கும் தலப்பயணம் சென்றோம். இவையனைத்தும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும். மயூரநாதர் கோயிலில் சிவபுராணம் பாடல் பாட ஆரம்பித்து அங்கிருந்து பிற தலங்களுக்குச் சென்றோம். தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் கோயிலில் வழிபட்ட பின் அங்கு மதியம் ஓய்வெடுத்து, பின்னர் பயணத்தைத் தொடங்கி ஆக்கூரில் நிறைவு செய்தோம். மயூரநாதர் கோயில் தவிர மற்ற கோயில்கள் நான் இதுவரை பார்த்திராத கோயில்களாகும். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். 

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (அமைவிடம்)
  • ஆதிமயூரநாதருக்காக தனி சன்னதி கொண்டுள்ள மயூரநாதர் கோயில். இரு கொடி மரங்கள் உள்ளன. (மயிலாடுதுறை நகரில் உள்ளது) 
  • குடமுழுக்கு காணவுள்ள திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் (மயிலாடுதுறை அருகே பொறையாறு சாலையில் 6கிமீ தொலைவில் உள்ளது)
  • அட்டவீரட்டானத்தலங்களில் ஒன்றான, வயல்களின் நடுவே காட்சியளிக்கின்ற கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் (மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் செம்பொன்னார் சென்று, அங்கிருந்து நல்லாடை செல்லும் சாலையில் வலப்புறத்தில் உள்ளது) 
  • அழகான மாடக்கோயிலான செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் (மயிலாடுதுறை-பொறையாறு சாலையில் உள்ளது)
  • அய்யம்பேட்டை புள்ளமங்கை, கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலைப் போன்று கருவறையைச் சுற்றி சிறிய சிற்பங்களையும், சற்றே பெரிய அளவிலான கருவறை விமானத்தையும் கொண்ட நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில் (செம்பொனார் கோயில் அருகே உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் செல்லலாம்)
  • பனை மரத்தை தலமரமாகக் கொண்ட மேலப்பெரும்பள்ளம் வலம்புர நாதர் கோயில் (மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் உள்ளது)
  • மாடக்கோயிலான தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் (சீர்காழி-ஆக்கூர் சாலையில் உள்ளது) 
  • மாடக்கோயிலான ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் (மயிலாடுதுறை-பொறையாறு சாலையில் உள்ளது)
மங்களாசாசனம் பெற்ற தலங்கள்
  • தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில் (சீர்காழி-ஆக்கூர் சாலை) 
  • திருநகரி கல்யாண அரங்கநாதசுவாமி கோயில் (திருவாலியிலிருந்து 2 கிமீ) 
  • திருவாலி லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில் (சீர்காழி-பூம்புகார் சாலையில் 9 கிமீ தொலைவில்) 
  • திருத்தேவனார்தொகை கீழச்சாலை மாதவப்பெருமாள் கோயில் (சீர்காழியிலிருந்து 6 கிமீ. திருநாங்கூரிலிருந்து 4 கிமீ)

மயூரநாதர் கோயில் 
மயூரநாதர்-அபயாம்பிகை (ஞானசம்பந்தர், அப்பர்)

மயூரநாதர் கோயிலில் சிவபுராணம் ஓதுதல்

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்
உசிரவனேசுவரர்-வேயுறுதோளி (ஞானசம்பந்தர்)

கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் 
வீரட்டேசுவரர்-இளங்கொம்பனையாள் (ஞானசம்பந்தர்)


வீரட்டேசுவரர் கோயில் முன்பாக கோயில்உலா சென்றோர்

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் செம்பொன்பள்ளியார்-மருவார்குழலி, (ஞானசம்பந்தர், அப்பர்)
நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில் நற்றுணையப்பர்-மலையான்மடந்தை (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்)
நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில் மூலவர் விமானம் அருகில் 
 





நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயிலில் நுட்பமான சிற்பங்கள்


மேலப்பெரும்பள்ளம் வலம்புர நாதர் கோயில் 
(சம்பந்தர், அப்பர், சுந்தரர்) 
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
சங்காரண்யேசுவரர்-சௌந்தரநாயகி (ஞானசம்பந்தர்)


தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில் நாண்மதியப்பெருமாள்-செங்கமலவள்ளித்தாயார் (திருமங்கையாழ்வார்) 

திருநகரி கல்யாண அரங்கநாதசுவாமி கோயில்
(திருமங்கையாழ்வார்)


திருவாலி லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில் (குலசேகராழ்வார்)  
திருத்தேவனார்தொகை கீழச்சாலை மாதவப்பெருமாள் கோயில் 
(திருமங்கையாழ்வார்) 

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோயில்

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் 
தான்தோன்றீஸ்வரர்-வாள்நெடுங்கண்ணி (ஞானசம்பந்தர், அப்பர்)
நன்றி
கோயில் உலா அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. இந்த கோயில் உலாவில் கலந்துகொண்டோர்:

முனைவர் வீ.ஜெயபால் 
திரு கிருஷ்ணமூர்த்தி, பணிநிறைவு (RDO)
திரு மணிவாசகம் (BSNL)
திரு தங்கவேலு 
நெய்வேலி திரு வெங்கடேசன்
நெய்வேலி திரு செல்வராஜ்
முனைவர் ஜம்புலிங்கம்
திரு சச்சிதானந்தம் (BSNL) திருமதி சுசீலா
திருமதி கௌரி டீச்சர்
திருமதி மனோரஞ்சிதம்
திரு த.சு.பாலசுப்பிரமணியன்
திருமதி பா.இந்துமதி
திரு அருள்நிதி செல்வமணி
திரு அ.கு.செல்வராசன்

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத்தலங்கள் வழிகாட்டி
முனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

17 December 2016

ஏழாம் திருமுறை : சுந்தரர் தேவாரம்

தினமும் நாளொரு பதிகம் வாசித்து வரும் நிலையில் ஆறாம் திருமுறையைத் தொடர்ந்து அண்மையில் ஏழாம் திருமுறையை (சுந்தரர் தேவாரம்) நிறைவு செய்துள்ளேன். சைவ சமய ஆசாரியருள் மூன்றாமவராக உள்ள சுந்தரர் தம்பிரான் தோழர் என்றும், வன்தொண்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.  பெரிய புராணம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த திருத்தொண்டத்தொகையைப் பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலங்களுக்கு கோயில் உலாவின்போது செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தலங்களைக் காண்போம், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் வாசிப்போம், வாருங்கள். 
திருஎதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) (ஐராவதேஸ்வரர்)
தந்தை யாரும் தவ்வை யாரும்
எட்டனைச்சார் வாகார்
வந்து நம்மோடு உள்அ ளாவி
வானநெறி காட்டும்
சிந்தையீரே நெஞ்சி னீரே
திகழ்மதியும் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
என்பதுஅடை வோமே. (9) ப.92
நெஞ்சீரே, தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார். ஆதலின் நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி, எமக்கு வீட்டு நெறியைக் காட்ம் நினைவுடையீராயின், விளங்குகின்ற திங்களைச் சூடும நம் தந்தை கோயிலை திருஎதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம், வாரீர்.

திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை) (அமிர்தகலசநாதர்)
தண் கமலம் பொய்கை புடை சூழ்நதழகார் தலத்தில்
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவிய ஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே. (10), ப.155
திருக்குளத்தையுடைய இப்பெருங் கோயிலின்கண் முறைப்படி பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சியுற்றிருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது? என்று வினவின் பல வளங்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென் கரையில் மணம் வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரேயாம்.

திருப்பழமண்ணிப்படிக்கரை (நீலகண்டேஸ்வரர்)
உங்கைக ளாற்கூப்பி உகந்
தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையொர், கூறுடையான் வா
னோர்முத லாய பிரான்
அங்கையில் வெண்மழுவன் அலை
யார்கதிர் மூவிலைய
மங்கைய பாதனிடம் பழ
மண்ணிப் படிக்கரையே. (5), ப.194
தொண்டர்களே, உமையை ஒரு கூற்றில் உடையவனும், தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும், அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும், கொல்லுதல் பொருந்திய ஒளியுடைய முத்தலை வேலை (சூலத்தை) ஏந்திய தாமரை மலர் போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து, உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள்.

திருக்கற்குடி (உச்சிநாதர்)
சந்தார் வெண்குழையாய்
சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்
ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான்
அடியேனையும் ஏற்றுக்கொள்ளே. (5) ப.226
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட  ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமைய ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே, மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலைபெற்றிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே,  அடியேனையும் ஏற்று உய்யக்கொண்டருளுக.

திருப்புறம்பயம் (சாட்சிநாதேஸ்வரர்)
பண்டரீயன செய்ததீமையும்
பாவமும்பறை யும்படி
கண்டரீயன கேட்டிற்கவ
லாதுஎழுமட நெஞ்சமே
தொண்டரீயன பாடித்துள்ளிநின்று
ஆடிவானவர் தாந்தொழும்
புண்டரீக மலரும்பொய்கைப்
புறம்பயந்தொழப் போதுமே. (9)  ப.283
அறியாமை நிறைந்த மனமே. முற்பிறப்பில் நீக்குவதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும் அச்செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின் தேவர்கள் பாடியும் ஆடியும் தொழுகின்ற, பொய்கைகளையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம், கவலைப்படாமல் புறப்படு.

திருப்புன்கூர் (சிவலோகநாதர்)
நற்றமிர் வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக்கு அரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டுநின் குறைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே (4), ப.425
தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் பொருந்தியிருப்பவனே. நல்ல தமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், திருநாளைப்போவாரும், மூர்க்க நாயனாரும், சாக்கிய நாயனாரும், சிலந்தியும், கண்ணப்பரும் ஆகிய இவரிகள் குற்றமான செயல்களைச் செய்திருந்தும், அவைகளைக் குணமான செயல்களாகக் கருதும் உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து அடியேன் உனது கழலணிந்த திருவடியை அடைந்தேன், என்னை ஏற்றுக்கொள்வீராக.

தற்போது எட்டாம் திருமுறை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இதில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் இடம்பெறுகின்றன.  

பன்னிரு திருமுறைகள்,  தொகுதி 10, சுந்தரர் தேவாரம்,
உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை,
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 600 017
தொலைபேசி 28144995, 28140347, 43502995,