28 May 2016

ஆறாம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்

தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, அண்மையில் ஆறாம் திருமுறையினை நிறைவு செய்துள்ளேன்.  

நான்கு மற்றும் ஐந்தாம் திருமுறைகளில் இருப்பன போலவே இத்திருமுறையிலும் இறைவன், இயற்கை, பக்தி, இறைவனை அடையும் வழி என்ற பல நிலைகளில் நாவுக்கரசப்பெருமான் பாடுகின்றார். ஆறாம் திருமுறையிலிருந்து அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம். 


  1) திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூர்க் கோடீச்ரமும்
இவ்விரு கோயில்களுக்கும் நான் சென்றுள்ளேன். ஒரே பதிகத்தில் இரு கோயில்களைப் பாடும் வகையில் இப்பதிகம் சிறப்பு பெறுகிறது. 
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. 
(பதிகத்தொடர் எண்.286 பாடல் எண்.1) 

நிறம்  வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனுமாகிய சிவபெருமான் நீலமணி போல் திகழும் அழகு மிக்கவனும் கல்லால மர நிழலில் இருந்தவனும், பெரிய மாணிக்க மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்று போல் காட்சி அளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரம் அருளும் வரதனும் ஆவான்.

 2) திருவீழி்மிழலை
வௌவால்நத்தி மண்டபம் என்ற சிறப்பான மண்டபத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது திருவீழிமிழலைக் கோயில். அக்கோயில் பற்றிய பதிகத்தில் சமணப்பற்றை நீக்கியதைப் பற்றிக் கூறுகிறார்.
தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணினான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
(பதிகத்தொடர் எண்.265 பாடல் எண்.3) 

விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய், மூன்று கண்களை உடையவனாய், காபாலக்கூத்து ஆடுபவனாய், காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணனா, என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினை நீக்கி என்னை ஆட்கொண்டவனாய், பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான்.

3) திருஆவடுதுறை
சிவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்கிறார் திருவாவடுதுறைப் பதிகத்தில் நாவுக்கரசர்.
துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்ட நான் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையும் அமர ரேறே.
(பதிகத்தொடர் எண்.260 பாடல் எண்.10)

ஆவடுதுறைத் தேவர் பெருமானே. துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன். உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன். உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டு வாழ்கின்றேன். செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக.

4) திருப்பழனம்
இப்பதிகத்தில் சூலை நோயை நீக்கி இறைவன் ஆட்கொண்டதைப் பற்றிப் பாடுகின்றார்.
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையால் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.
(பதிகத்தொடர் எண்.249 பாடல் எண்.1)
   
திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம் பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர்.

5) திருச்செங்காட்டாங்குடி
இப்பதிகத்தில் தன்னை நாயேன் என்கிறார்.
கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னை
கதிரவிடுமா மாணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சடையான் தன்னைசராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
(பதிகத்தொடர் எண்.297 பாடல் எண்.4)

மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒரு பாகத்தொடு தன் பாகம் விளங்குபவனும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும், நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்த இலக்கண நெறியின்  அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என் மனத்து மண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டாங்குடியில் கண்டேன்.
------------------------------------------------------------------------------------------------
பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008  

11 comments:

  1. சிறப்பான தகவல்கள்.

    ReplyDelete
  2. தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. ''கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்..//

    'நிறம் வாய்ந்த மணி போன்ற அழகுடையவன்'
    என்று பொருள் கொள்ளும் பொழுது ஏதோ குறைவு பட்டாற் போலத் தெரிகிறது, ஐயா!

    அந்த 'கண்ட' என்ற வார்த்தை பொருள் சொல்லும் பொழுது விடுபட்ட மாதிரி உணர்கிறேன்.

    கருமணி போன்ற தொண்டைக் குழி கொண்ட அழகன்-- என்று விரித்துப் பொருள் கொள்ள வேண்டுமோ என்று நினைக்கிறேன்.

    கருமணி போனற தொண்டை-- நீலகண்டன் என்ற திருப்பெயருக்கும் பொருந்தி வருகிற மாதிரி தெரிகிறது.

    தினமும் ஒரு தேவாரப் பதிகம் வாசிப்பது என்பது அருமையான முயற்சி, ஐயா! இரண்டு மூன்று முறை படித்தாலே ஆழ்ந்து கற்ற மன நிறைவு ஏற்படுகிறது.

    இதே மாதிரி இரு திருக்கோயில்களை ஒரே பதிகத்தில் உள்ளடக்கிய மாதிரி வேறு ஏதாவது பதிகம் தேவாரத்தில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும் ஆவல்.

    மனநிறைவு கொடுத்த தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக நான் கொடுத்துள்ள 310 நூல்களில் இதுவும் ஒன்று. ஆதலால் நீங்கள் சொன்னதை (விடுபாடு தொடர்பாக)உறுதி செய்யமுடியவில்லை. பொறுத்துக்கொள்க. ஒரே பதிகத்தில் இரு கோயில்கள் இன்னும் சில இடங்களில் படித்துள்ளேன்.

      Delete
  4. சிறப்பான தகவல்கள், அருமையான விளக்கத்துடன் திருமுறை பற்றியும் அறிந்து கொண்டோம் ஐயா. மிக்க நன்றி

    ReplyDelete
  5. திருமுறை படிப்பதும் அதனை பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சி.உங்கள் சிறந்த பணிக்கு வாழ்த்துக்கள்.

    பன்னிருதிருமுறை பாராயணம் செய்தலை என் கணவர், அவர்கள் அம்மா எல்லோரும் சித்திரையில் ஆரம்பித்து பங்குனியில் முடிப்பார்கள் .

    ReplyDelete
  6. பாட்டுடன் விளக்கவுரை கொடுத்ததால் தப்பித்தென் அய்யா..

    ReplyDelete
  7. அருமை அருமை ஐயா,,,

    ReplyDelete
  8. தேவாரத் திருப்பதிகங்களை வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்க வேண்டும் வாழ்த்துகள்

    ReplyDelete