18 June 2016

உமாமகேசுவரம் : கரந்தை ஜெயக்குமார், கரந்தை சரவணன்

தன்னலங் கருதாப் பொதுநலத் தொண்டர்
தமிழ்ப்புல வோர்கள் தம்பெருந் தோழர்
எண்ணில் சிறார்க்கு கண்ணருள் அன்னை
உடல்பொருள் உயிரெல்லாம் உரிமையாக்கித்
தமிழ்த்தொண் டாற்றிய சங்கத் தலைவர்
செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்

இத்தகு பெருமையுடைய மாமனிதரைப் பற்றிய அரிய பதிவை வலைப்பூவில் வரலாறு படைத்து வரும் கரந்தை ஜெயக்குமாரும், வலைப்பூவில் எழுத ஆரம்பித்துள்ள கரந்தை சரவணனும் இணைந்து தமிழ்கூர் நல்லுலகிற்காக அளித்துள்ளார்கள். 

நன்றிக்கடன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாக இந்நூலைக் கொள்ளலாம். தாம் பணியாற்றும் நிறுவனத்திற்கு அடித்தளமாக விளங்கிய தமிழவேளின் வரலாற்றை, பல ஆதாரங்களைத் தேடிப் பிடித்து, நுணுக்கமாக ஆராய்ந்து படைத்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். மாபெரும் தமிழறிஞரின் வரலாற்றை வளர்ந்துவரும் தமிழ் ஆர்வலர்கள் நமக்கு அளித்துள்ள விதம் நம்மை வியக்க வைப்பதைப் படிக்கும் போது உணரமுடியும்.   வாருங்கள் நூலைப் படிப்போம்.

"நாங்கள் பயின்ற சங்கம், எங்களை வளர்த்த சங்கம், எங்களுக்கு வாழ்வளித்த சங்கம். இத்தகு சங்கத்திற்கு, இதுநாள் வரை நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? எங்களால் என்ன செய்ய இயலும்? எண்ணிப் பார்த்தோம். சங்கம் பற்றி எழுதுவதைவிட, சங்கத்தின் புகழினைப் பறைசாற்றுவதைவிட வேறு என்ன, எங்களால் செய்ய இயலும்? தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க, தமிழவேள் ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளை எங்களால் இயன்றவரை ஏட்டில் எழுத முற்படுகின்றோம்" என்று நன்றியுரையில் கூறும் நூலாசிரியர்கள், இந்நூலின் மூலமாக தமிழுக்கும், தமிழறிஞருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் பெருமையினைச் சேர்த்துள்ளார்கள். ஓர் அரிய முயற்சியில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ள அவர்களுக்கு நாம் நன்றி கூறுவோம். அவர்களுடைய நூலிலிருந்து உமாமகேசுவரனாரின் பெருமைகள் சிலவற்றைக் காண்போம்.

உமாமகேசுவரனாரின் திருவுருவம்
"சிவமணக்கும் இன்சொல், உருமணக்கும் திருநீறு, இயலருள் ஒழுகும் கண்கள், அருள் மணக்கும் திருநோக்கு, இளநகை செவ்வாய், சொற்பொறுக்கும் செவிகள், வீரவுரை நவிலும் நாக்கு, செம்பாகத் தமிழ் பேசிச் சிரிப்புக் காட்டும் முகம், எடுப்பான திருவுருவம் உடையவர் உமாமகேசுவரனார்." (ப.12)

அரிய குணங்கள்
"பெயர்ப் பலகைக் கூடத் தொங்கவிடாமல், ஏறத்தாழ 32 ஆண்டுகள் திறம்பட வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பணத்தைவிட பேரும் புகழும் அடையவேண்டும் என்ற ஆர்வம், இடையறா உழைப்பு, உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் மட்டுமே வாதிடும் உயரிய குணம். அச்சம் என்பதை என்னவென்றே அறியாத உள்ளம் இவையே வழக்கறிஞர் உமாமகேசுவரனாரின் அரிய பண்புகள்." (ப.13)

சங்க நூலகம்
சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே சங்கத்திற்கென்று தனியொரு நூலகம் அமைக்கும் பணியைத் தொடங்கியவர். (ப.17)

நீராருங் கடலுடுத்த...
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களை தமிழ்ப் பெருமையினை பறைசாற்றும், ஓர் இனிய பாட்டுடன் தொடங்கும் எண்ணம் கொண்டு, அவருடைய உள்ளத்தை உருக்கிய மனோன்மணீயம் சுந்தரம் அவர்களின் நீராருங் கடலுடுத்த என்னும் பாடல் சங்க மேடையில் ஒலிக்கச் செய்தவர். சங்கம் துவங்கிய இரண்டாம் ஆண்டிலேயே இம் முயற்சி தொடங்கப்பட்டது. (ப.23)


ஏழூர்த் திருவிழா
உமாமகேசுவரம்விள்ளை அவர்கள் வெண்ணீறும், உருத்திராட்ச மணி மாலையும், புன்முறுவலும் பூத்த பொன் மேனியராய், இடையில் கட்டிய வேட்டியும், இதன் மேல் சுற்றிய வெண்ணிற துண்டுடன், அடியார்கள் புடை சூழ, ஏழூர் முழுதும் நடந்தே செல்வார். அடியார்களை ஆங்காங்கே சமயச் சொற்பொழிவாற்றச் செய்வதோடு, தாமும் சொற்பொழிவாற்றுவார். (ப.46)

தமிழ்ப் பல்கலைக்கழகம்
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் 10ஆம் ஆண்டு விழாவின்போது (1921) "தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் இருக்கவேண்டுவது இன்றியமையாததென்று இக்கூட்டத்தார் துணிபுற்று, இம்முயற்சியில் ஈடுபட வேண்டுமென, தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன், இதனை மேற்கொண்டு செய்விக்க வேண்டுமென அரசியலாரையும் வேண்டிக்கொள்கிறார்கள் எனும் தீர்மானம் உமாமகேசுவரனால் அவர்களால் நிறைவேற்றப்பட்டது". (ப.54)


தமிழ்ப்பொழில்
பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914இல் அவரால் தொடங்கப்பெற்ற முயற்சியானது 11 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் தமிழ்ப்பொழில் இதழின் முதல் இதழ் அச்சிடப்பெற்றது... இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச்செய்தார். (ப.67)


காந்தியுடனான சந்திப்பு
நீதிக்கட்சியைச் சார்ந்த உயர் தலைவர்களான சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும் உமாமகேசுவரனார் அவர்களும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்திலேயே விவரமாக வெளியாகியிருந்தது.
(ப.78)

மொழிபெயர்ப்பு
தமிழ்  மொழியில் தக்க புது நூல்கள் வெளிவரவேண்டும் என்பதும், பிற மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவேண்டுமென்பதும் உமாமகேசுவரனாரின் நோக்கமாகும்...1921ஆம் ஆண்டிலேயே உமாமகேசுவரனாரால் தமிழ்ச்சங்கத்தின் மூலம் மொழிபெயர்க்க வேண்டிய தமிழ்ச் சொற்களைத் தேடவும், ஆக்கவும், தக்க தமிழறிஞர்கள் கூடிய ஒரு கழகம் கட்டும் பணிக்குத் தமிழ்ச் சங்கங்களையும், தமிழறிஞர்களையும் கேட்டுக்கொள்வதெனத் தீர்மானம் அனுப்பிவைத்தார்.  (ப.114)

148 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் உமாமகேசுவரனாரின் பன்முக ஆளுமைகளை நன்கு உணர முடிகிறது. இந்த அரிய நல்ல நூலை வாசித்து, தமிழன்னைக்குப் பெருமை சேர்த்த பெரியாரின் நினைவைப் போற்றுவோம். 

நூல் : உமாமகேசுவரம்
ஆசிரியர்கள் கரந்தை ஜெயக்குமார், கரந்தை சரவணன்
பதிப்பகம் : கரந்தை லோகநாதன் நூலாலயம், 1392, கிருஷ்ணன் கோயில் எடத்தெரு, கரந்தை, தஞ்சாவூர் 613 002
ஆண்டு : 2016
விலை : ரூ.150
--------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முதல் வலைப்பூவில் 
சூன் 2016இல் வெளியான கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
--------------------------------------------------------------------------------
17 சூன் 2016 மாலை சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் சார்பில் தஞ்சாவூர் ஞானம் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் தி இந்து நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் திரு சமஸ் அவர்களின் பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல் தொடங்கி பொருளாதாரம் என்ற நிலையில் பலதரப்பட்ட பொருண்மைகளில் அமைந்த அவருடைய பேச்சு அனைவரையும் ஈர்த்தது. என் எழுத்துக்கு ஊக்கம் தரும் நண்பர்களில் இவரும் ஒருவர் என்பது எனக்கு மகிழ்வினைத் தருகிறது.

 
 ------------------------------------------------------------------------------

19 comments:

 1. நூலைப்பற்றிய விரிவான அலசலைத்தந்த முனவைர் அவர்களுக்கு நன்றி
  ஆசிரியர்கள் திரு. கரந்தை ஜெயக்குமார் மற்றும் திரு. கரந்தை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
  த.ம 2

  ReplyDelete
 2. நல்லதொரு அறிமுகம்..

  உயர்திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் உயர்திரு. கரந்தை சரவணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

  வாழ்க அறிமுகம்..

  ReplyDelete
 3. நல்லதொரு நூல் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. நூல் குறித்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  எல்லோருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. அருமையான நூல் அறிமுகம்
  படைப்பாளிகளைப் பாராட்டுவோம்

  http://ypvn.myartsonline.com/

  ReplyDelete
 6. நன்றி ஐயா
  தங்களின் அன்பில் நெகிழ்ந்தேன்

  ReplyDelete
 7. முனைவருக்கு நன்றி. அடுத்த மாதம் (ஜூலையில்) தஞ்சையில் நடக்கவிருக்கும் புத்தகத் திருவிழாவில் இந்த நூலையும், இன்னும் சில நூல்களையும் வாங்கலாம் என்று இருக்கிறேன்.

  ReplyDelete
 8. சிறப்பான அறிமுகம். பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete
 9. வாழ்க்கை வரலாறு பற்றி எழுதுவதில் திரு ஜெயக்குமார் தனக்கென ஒரு பாணி வைத்துள்ளார் அவருக்கு எழுதப் படுபவர் மேல் இருக்கும் மரியாதையும் எழுத்தில் இருக்கும் இவர் எழுதுவதை நன்றி அறிதல் என்று கூறி விட முடியாது இவர் எழுத்துக்களும் ஒரு விதத் தமிழ்ப்பணியே சுட்டிக்காட்டி எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. உண்ட வீட்டுக்கு இரண்டு பேர் செய்திருக்கும் சேவை மகத்தானது ,வாழ்த்துகள் !

  ReplyDelete
 11. கரந்தையின் பெருமையை மேலும் பரப்பிய பெருமை ஜெயகுமார் அவர்களை சாரும். எத்துனை சிறப்பு!

  ReplyDelete
 12. கரந்தையின் பெருமையை மேலும் பரப்பிய பெருமை ஜெயகுமார் அவர்களை சாரும். எத்துனை சிறப்பு!

  ReplyDelete
 13. நூலுக்கு தந்த அறிமுகத்துக்கு நன்றி!

  ReplyDelete
 14. நூலுக்கு தந்த அறிமுகத்துக்கு நன்றி!

  ReplyDelete
 15. சிறப்பான அறிமுகம் ஐயா மிக்க நன்றி

  ReplyDelete
 16. சிறப்பான அறிமுகம் ஐயா மிக்க நன்றி

  ReplyDelete