23 June 2016

தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூரில் அமைந்துள்ள கோயில்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது நிசும்பசூதனி கோயில். வடபத்ர காளி என்றும், ராகுகால காளி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் பூமால் ராவுத்தர் கோயிலுக்கு அருகே இக்கோயில் உள்ளது.

அமைப்பு
கருவறையில் அம்பிகை காணப்படுகிறார். அண்மையில் நடைபெற்ற திருப்பணியின்போது புதிதாக முன் மண்டபம் கட்டப்பெற்று கோயில் புதுப்பொலிவினைப் பெற்றுள்ளது. கருவறையின் மேல் புதுப்பிக்கப்பட்ட விமானம் கோயிலுக்கு அழகினைத் தருகிறது. இத்திருப்பணியின் மூலமாக கோயில் முழுவதுமே புதிய வடிவம் பெற்று காட்சியளிக்கிறது.


"சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளிதேவியை அங்கு (தஞ்சை நகரில்) பிரதிஷ்டை செய்தான். தேவர்களாலும், அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களையுடைய அத்தேவியின் அருளால், நான்கு கடல்கள் ஆகிய ஆடைய அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டுவந்தான்" என்னும் திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும் போதே நிசும்பசூதனியாம் தேவியின் திருக்கோயிலும் எழுந்தது என்று வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் (தஞ்சாவூர், ப.22) கூறுகிறார். 


காளியின் திருவுருவம்
காளியின் திருவுருவத்தை அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆறு அடி உயரத்திற்கும் மேலுள்ள இவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர் போல் மேலே எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரிய குழை. சதை வற்றிய உடல். அவள் உடலில் சதையேயில்லை. வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. 
புகைப்படம் நன்றி : குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர்
எட்டுக் கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது.  அதன் மீது ஊன்றியுள்ள  அவளது காலில், எலும்பாக இருந்தாலும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக்காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். மூச்சுத் திணறுகிறார்கள். ஓடுகிறார்கள். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதனை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இவள்தான் விஜயலாயன் வடித்த நிசும்பசூதனி".  (தஞ்சாவூர், ப.24)

எங்கும் காணக்கிடைக்காத கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் அமைந்துள்ள தேவியைப் பார்க்கப் பார்க்க மனம் நிறைவடையும். சன்னதியில் சிறிது நேரம் நின்று தேவியைப் பார்த்தாலே மன மாசுக்கள் அகன்று மனத்தூய்மை அடைவதை உணரமுடியும். 


யாகசாலை முகப்பு

யாகசாலை 


அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள்

 

குடமுழுக்கு நிகழ்வுகள்
குடமுழுக்கு காணும் கோயிலின் வளாகம்

கோயில் முகப்பு
குடமுழுக்கு காணும் பக்தர்கள்
இக்கோயிலின் குடமுழுக்கு 23 சூன் 2016 காலை சிறப்பாக நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வினை மன நிறைவாகக் கண்டுகளித்தனர். 

நன்றி  
நிசும்பசூதனி, தஞ்சையம்பதி வலைப்பூ
தினமலர் கோயில்கள்
குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர்,  அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997

16 comments:

  1. அன்பின் ஐயா..

    மனம் மகிழ்கின்றது - அன்னையின் ஆலய திருமுழுக்கு தரிசனம் கண்டு!..

    அழகிய படங்களை வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. நிசும்பசூதனி அன்னையின் ஆலய குடமுழுக்கை முழுவதுமாய் நேரில் கண்ட உணர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகிய புகைப்படங்களுடன் விபரம் அளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  4. முனைவர் அவர்களின் பதிவினுக்கு நன்றி. நானும் இந்த கோயிலுக்கும். தஞ்சாவூரில் உள்ள இன்னொரு காளி கோயிலுக்கும் செல்ல வேண்டும். நேரம்தான் அமையவில்லை.

    ReplyDelete
  5. நன்றி சார்.

    ReplyDelete
  6. கும்பகோணம் கோவில்கள் நிறைந்த ஊர். பல கோவில்களுக்கும் சென்றிருந்தாலும் இக்கோவில் பற்றிக் கேள்விப்படவில்லை. பூமால் ராவித்தர் கோவில்....?இஸ்லாமியப் பேர் போல் இருக்கிறதே

    ReplyDelete
  7. நிசும்பசூதனி...பெயர் வித்தியாசமா இருக்கே !பெயர் வைக்கப்படாத பெண் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்கிறேன் :)

    ReplyDelete
  8. பதிவு மிக அருமை சார்.

    ReplyDelete
  9. அழகிய படங்களுடன் விவரங்கள். சிறு வயதில் தஞ்சையில் இருந்த காலங்களில் கொங்கணேஸ்வரர் கோவிலுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை சென்று அப்பா பெயரில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்வோம்.

    ReplyDelete
  10. நிசும்பூதனி அன்னையின் தகவல்கள் புதியது. அழகான படங்கள். மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  11. நிசும்பசூதனி கோவிலைப்பற்றி கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நவீனத்தில் படித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை!

    ReplyDelete

  12. ஐயா,

    தஞ்சை சென்றதில்லை. விவரமும், புகைப்படங்களும் அருமை
    நன்றி.

    கோ

    ReplyDelete
  13. அருமையான தொகுப்பு
    தொடருங்கள்

    ReplyDelete
  14. பல முறை கும்பகோணம் வந்தும் பல கோயில்களைப் பார்க வில்லை!

    ReplyDelete