08 July 2016

மயிலாடுதுறை சப்தஸ்தானம் : புனுகீஸ்வரர் கோயில்

அண்மையில் கும்பகோணம் சப்தஸ்தானத்தைப் பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். 3 சூன் 2016 அன்று மயிலாடுதுறை சப்தஸ்தானத்தில் ஒரு கோயிலான, கூறைநாட்டில் அமைந்துள்ள, புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய பிற கோயில்கள் பின்வருவனவாகும்.

  • மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
  • சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  • மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோயில்
  • சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
  • துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில் 
  • மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

இக்கோயில்களில் ஐயாறப்பர் கோயிலும், மயூரநாதர் கோயிலும் சென்றுள்ளேன். பிற கோயில்களுக்கு விரைவில் செல்லவுள்ளேன். 
தற்போது புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.  


மண்டப வாயிலின் முகப்பில் லிங்கத்தை புனுகுப்பூனை பூஜிப்பதைப் போன்ற சுதைச்சிற்பம் காணப்படுகிறது. முன்மண்டபத்தில் கொடி மரம் காணப்படுகிறது.கொடி மரத்தை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன.





அம்மன் சன்னதி
கோயிலின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே பள்ளியறையும் அலங்கார மண்டமும் காணப்படுகின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. 
மூலவர் கருவறை
மூலவர் புனுகீஸ்வரர் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். மூலவர் கருவறைக்குச் செல்லும் முன்பாகக் காணப்படும் மண்டபத்தில் வரத விநாயகர், அனுமார், சோமாஸ்கந்தர், ஐயப்பன், 63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார், சுப்பிரமணியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. கருவறைத் திருச்சுற்றில் சூரியன், பைரவர், கீழக்குமரர் எனப்படும் சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சனீஸ்வரன், விநாயகர் காணப்படுகின்றனர். அருகே லிங்கத்திருமேனி காணப்படுகிறது. 

திருப்பணி
விரைவில் திருப்பணி நடைபெறவுள்ளதை அங்கு காணப்படுகின்ற ஏற்பாடுகளைக் கொண்டு அறியமுடிந்தது. ராஜகோபுரம், மூலவர் மற்றும் இறைவியின் விமானங்களில் மூங்கில் சாளரங்கள் போடப்பட்டு திருப்பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

நன்றி: 
கும்பகோணம் நண்பர் திரு செல்வம் பணிநிறைவு விழாவிற்காக மயிலாடுதுறை சென்றபோது இக்கோயிலுக்குச் சென்றோம். உடன் வந்த தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுக்கு நன்றி.

15 comments:

  1. மயிலாடுதுறை புனுகீஸ்ரர் கோயில் பற்றிய அழகிய புகைப்படங்களும், விபரங்களும் அளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி
    த.ம.1

    ReplyDelete
  2. ஒவ்வொரு சப்தஸ்தானமும் ஏழு ஊர்க கோயில்களை
    உள்ளடக்கி..

    எவ்வளவு தீர்மானமாக, கனக்கச்சிதமாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வ்கத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  3. 2014-ம் ஆண்டு மயிலாடுதுறை சென்றிருக்கிறோம் அங்கே கோமதி அரசு தம்பதியினர் உதவியுடன் திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கும் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவிலுக்கும் அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவிலுக்கும் சென்றோம். அபயாம்பிகை அம்மனை கண்ணாடி ஓவியமாக வரைந்திருக்கிறேன் அங்கிருந்து திருக்கடையூர் சென்று வந்ததெல்லாம் நினைவுகளாக வருகிறது உங்கள் பதிவின் மூலம் நன்றி

    ReplyDelete
  4. அழகிய படங்கள்.

    ReplyDelete
  5. அழகிய படங்கள். விரைவில் திருப்பணி நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete

  6. மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பற்றிய தகவல் பயனுள்ளது
    தொடருங்கள்

    ReplyDelete
  7. பதிவும் படங்களும் அருமை சார்.

    ReplyDelete
  8. அழகான படங்கள்...மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பற்றிய தகவல்களும் அது போன்றே அருமை..விரைல் திருப்பணி நடக்கவிருப்பது சிறப்பு...

    ReplyDelete
  9. மயிலாடுத்றை புனுகீஸ்வரர் கோவில் சென்று வந்தது மகிழ்ச்சி. முப்பது வருஷங்களுக்கு மேலாக அந்த கோவில் வழி பாடு செய்து வந்து இருக்கிறோம். புனுகீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவிலில் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கும்.
    அந்த கோவிலில் எங்கள் சார் சொற்பொழிவு செய்வார்கள். அந்த கோவில் லட்சதீபம் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.

    கோவில் முன் கோபுர வாசலில் வலது பக்க சுவற்றில் கற்சிற்பம் உள்ளது. (சிவனை புனுகு பூனை வழி படும் சிற்பம்.) மேல் விதானத்தில் சுதைசிற்பம்.

    //சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய பிற கோயில்கள் பின்வருவனவாகும்.//

    இவை எல்லா கோவில்களுக்கும் சென்று வருவோம் அடிக்கடி.


    மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
    மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோயில்
    துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில்
    மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

    இந்த நானகு கோவில்களிலும் சமய சொற்பொழிவுகள் செய்து இருக்கிறார் என் கணவர்.

    உங்கள் பதிவின் மூலம் மீண்டும் எல்லா கோவிலுக்கும் மனதால் வலம் வந்தேன். நன்றி.

    பாலசுப்பிரமணியம் சார் எங்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. மயூரநாதர் திருக்கோயிலுக்கு மட்டுமே சென்றிருக்கின்றேன்.. மற்ற தலங்களைப் பற்றிய விரிவான தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  12. ஐயா, வணக்கம், கோயில்களின் பெயர்கள், இறைவன் இறைவி பெயர்கள் ஆகியவற்றின் பண்டைய தமிழ்ப் பெயர்களை மீட்டெடுக்க இயலுமா..?

    ReplyDelete
  13. படங்களுடன் கோயில் அறிமுகம் அருமை! நன்றி ஐயா!

    ReplyDelete
  14. அருமையான பதிவு.எங்கள் முகவரியின் மூலவர் புனுகீஸ்வரர்.(புனுகீஸ்வரர் வடக்கு வீதி) எதிர்வரும் 16/07/2017 அன்று சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ReplyDelete