27 August 2016

தோற்றம் பின்னுள்ள உண்மைகள் : தேனுகாவின் கலை இலக்கியப்படைப்புகள்

க.நா. சுப்ரமணியன்,  எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, விட்டல்ராவ், சி.என்.ராஜராஜன், தஞ்சை ப்ரகாஷ், ரவிசுப்ரமணியன், ம.மதியழகன், பிரேமா நந்தகுமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் விமர்சிக்கும் தேனுகா என்றழைக்கப்படும் சீனிவாசன் கலையுலகின் பெரும் ரசிகன். 
தான் ரசித்ததை பிறரும் ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மேற்கத்திய பாணி, நமது நாட்டுப்பாணி என்ற எதுவாயினும் ஆழ ஊன்றிப் பார்த்து, படித்து தோய்ந்து, அனுபவித்து அதனை பகிர்ந்துகொள்வதில் அவருக்கு நிகர் அவரே. கலையை அவர் ரசிக்கும் விதத்தை நாம் அதிகமாக ரசிக்கலாம். ரசனையே உன் பெயர் தேனுகாவா? என்று நாம் வியக்கலாம், பாராட்டலாம். அதே சமயத்தில் நாமும் அவ்வாறே ஆகிவிடுவோம். அத்தகைய ஈர்ப்பு அவருக்கு உண்டு. கலைக்கு ஏதாவது பங்கம் என்ற நிலையில் அவரது எழுத்தில் வெளிப்படுத்தும் கோபம் நியாயமானதாகவே இருக்கும். கும்பகோணத்தில் வங்கிப்பணியாற்றிக் கொண்டே தமிழனின், கலையின், பண்பாட்டின் பெருமையை வெளியுலகிற்குக் கொணர்ந்த அவர் பல ரசிகர்களை உருவாக்கிச் சென்றிருக்கிறார் என்பதே உண்மை. 

சந்திக்கும்போதெல்லாம் அவருடைய பேச்சு கலை, கோயில், ரசனை என்ற நிலையில் அமையும். நம் கலைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். அவருடனான நட்பு எனக்கு கலை மீதான ஆர்வத்தை மேம்படுத்தியது. சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வினை பாராட்டியவர்களில் ஒருவர். நான் கண்டுபிடித்த புத்தர் சிலைகளைப் பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவரும்போது தொலைபேசியில் அழைத்து பாராட்டுவார். நம்மைவிட்டுச் சென்றுவிட்டாலும் அவருடைய எழுத்துக்கள் மூலமாக இன்னும் நம்மிடையே இருக்கிறார். அவர் எழுதி நமக்காக விட்டுச் சென்ற தோற்றம் பின்னுள்ள உண்மைகள் : தேனுகாவின் கலை இலக்கியப்படைப்புகள் என்ற நூலிலிருந்து சில பகுதிகளைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.  
கும்பகோணம் வெற்றிலை பாக்கு
தஞ்சை மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கும்பகோணத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை வாயில் அடக்கிக்கொண்டு ஊமைகளாகிவிடும் மனிதர்களிடம் எந்த கேள்விக்கும் பதில் வருவதில்லை. பதில் சொல்ல வேண்டுமென்றால் வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டுத்தான் அவர்களால் பதில் சொல்ல முடியும். தொழில் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சீவலுக்கு வாசனை சேர்த்தல், புகையிலை கத்த காம்புகளை பதப்படுத்துதல், நாக்கை துளைக்காத சுண்ணாம்பைத் தயார் செய்தல், கொழுந்து வெற்றிலை பாக்கு அதன் நரம்புகளை எடுத்துவிட்டு துடைத்து மீண்டும் வெற்றிலை பாக்கு போடுவது துப்புவது மீண்டும் போடுவது என்றே அவர் வாழ்க்கைப் பொழுதுகளாகிவிடும். இதனால்தான் நாதஸ்வர வித்வான்கள் வாய்விட்டும் பேசுவதில்லை. அவர்களது வாசிப்பை புகழ்ந்து பேசினாலும் வெறும் தலையாட்டந்தான். இவர்களை இயக்கச் செய்வது எப்படி என்று நினைத்தபோது எனக்கு பயமாகிவிட்டது. (நாதஸ்வரப்படம் என் அனுபவங்கள், ப.39)

மல்லாரி இசை வாசிப்பு
ஒரு நாட்டு ராஜா அல்லது சக்கரவர்த்தி வெளியில் வரும்போது சாதாரணமாக வருவார். ரதகஜதுரகபதாதிகள் புடைசூழ வீதிக்கு கிளம்புவது போன்று, சுவாமியின் வீதியுலாக்காட்சி மக்களின் மனக்காட்சிகளாய் விரியும். சுவாமியின் புறப்பாட்டைத் தெரிவிக்க எக்காளம், திருச்சீரனம், டவுண்டி, மிருதங்கம், முகபடாம் பூட்டிய யானையின் அம்பாரி என்றும் சுருட்டி வாசமாலை ஏந்தி வரும் நபர்கள் என்று விதவிதமான காடசிகளின் தொகுப்பாக இவை அமையும். இந்த நேரத்தில்தான் மக்களுக்கு உணர்வூட்டும்படியாக நாதஸ்வரக் கலைஞர் குழு மல்லாரி இசையை வாசிப்பார்கள். (நாதஸ்வரப்படம் என் அனுபவங்கள், ப.39)

தேரோட்ட அழகு
தேரோட்டத்தின்போது தேரில் அமர்ந்து வாசிக்கும் தேர் மல்லாரியை படமெககத் திட்டமிட்டோம். தேருக்கு எங்கு செல்வது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் நல்ல வேளையாக திருவாரூரில் ஆழித்தேர் புறப்பட்டது. பிரம்மாண்டமான இவ்வாழித்தேர் முன்னே நான்கு குட்டித் தேர்கள் சென்றுகொண்டிருக்கின்றன ஆழித்தேரில்  தியாகராஜ சுவாமிக்கு அருகில் உள்ள மரத் தூண்களுக்கு இடுக்கில் தேர் மல்லாரி வாசித்துவருகிறார்கள் நாதஸ்வரக் கலைஞர்கள். ஊரே அசைந்து தேராக வீதிகளில் உலா வந்ததோ என்று வியக்கம் வண்ணம் மக்கள் வெள்ளத்தில் அவ்வாழித்தேரைப் படம் பிடித்தோம். (நாதஸ்வரப்படம் என் அனுபவங்கள், ப.50)

நண்பர்களாக ஆசிரியர்கள்
உலகின் சகல வசதிகளை விரல் நுனி தொடுதிரையில் பெறும் அதி அற்புத உலகம் இது என்று விஞ்ஞானிகள் இன்றைய உலகத்தை வர்ணிக்கின்றனர். செல்பேசிக்குள்ளேயே தொலைக்காட்சி, இணைய தள வசதிகள்  முழுமையும் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. வகுப்பறையில் உலகப்படத்தைக் காண்பித்து நாடுகளையும் காடுகளையும், கடல்களையும் காண்பித்த காலம் மர்றி, கூகுள் எர்த் மூலம் உலகத்தின் மாதிரி உருவத்தை உருட்டித் திரட்டி நம் கண்முன் காட்டிவிடுகின்ற வித்தியாசமான உலகம் இது. இணையத்தில் இப்போது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் பார்க்கவேண்டுமென்றால் அதனை மேலிருந்து பார்ப்பதபோல் தஞ்சையின் நிலப்பரப்போடு கோயிலையும் காட்டிவிடுகிற வினோத உலகம் இது. ஆசிரியர்கள் இவ்வுலகில் இதுபோன்ற தகவல் சேகரிப்பின் மன்னர்களாகத் திகழ வேண்டும். நமக்குத் தெரிந்த தகவல்களை மாணவர்களுக்க பகிர்ந்து அளிக்கும் நல்ல நண்பர்களாக ஆசிரியர்கள் மாறவேண்டும்.  (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.61)

காணாமற் போன்ற கதை சொல்லும் மரபு
அறம் சார்ந்த நீதிக்கதைகளையும், பாடங்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். அக்காலத்தில் ஆசிரியர்கள் நடத்தி வந்த மகாபாரதக் கதைகளில் வரும் கர்ண மோட்சம்,  அரவானை களத்தில் பலியிட்டு தொடங்கும் பாரத யுத்தம், அர்ஜுனனின் விதவிதமான வில்வித்தைகள், சூரிய அஸ்தமனத்தில் அம்புராப் படுக்கையில் உயிர் விடும் பீஷ்மரின் மரணக் காட்சி, விதுர நீதி, யட்ஷ பிரச்னம் போன்ற கதைகள் இன்று தர்க்கத்திற்கு உரியவைகளாக மாறியிருப்பதும், அறிவுச் சார்ந்த கேள்விகளால் இவை தேவையற்றது என்றாகிவிட்டதும் வேதனைக்குரிய ஒன்றாகும். பொம்மலாட்டம், கூத்து, நாடகம், அம்மானை, குறவஞ்சி, பள்ளு, பறையாட்டம், பாகவதமேளா போன்ற நாடக ஆடல்,பாடல் வழி தமிழர்களின் கதை சொல்லும் மரபு காணாமற் போய்விட்டது. (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.62)

கதை சொல்லி ஆசிரியர்கள்
இளம் வயதில் கதை கேட்பது மனதிற்கு எவ்வளவு குளுமை தருகிறது. பாரதப்போரே நம் கண்முன் நிகழ்வதாகத் தோன்றுகிறது. ஆழ்பகை, வஞ்சினம், தர்மம், கொடை, காதல், வீரம் என்ற மனித மனத்தின் மனக்காட்சிகளை அற்புதமாக விவரிக்கும் கதைகள் எங்கே போனது. தாயை மணக்கும் மகன், அவளது  மமகளை மணக்கும் தகப்பன், இவர்களுக்கு குழந்தை பிறந்தால் என்ன முறையிட்டு அழைப்பார்கள், என்ற வினாவை எழுப்பும் முறைதெரியா விக்ரமாதித்தன் கதையை நினைத்தால் இன்றைக்குக் கூட அவிழ்க்க முடியாத புதிராக உள்ளது. காத்தவராயன் கதையில் ஆரிய மாலா பிறக்கும்பொழுதே பூமியை வெடித்து வெளிவரும் கழுமரம் நாட்டிற்கு வரும் மிகப் பெரிய விபரீதத்தை காட்டுகின்ற கதை எங்கே? மகாபாரதக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், பேசாமடந்தைக் கதை, திரைச்சீலைச் சொல்லும் கதைகள், அவற்றுள் வரும் அண்டரண்ட பட்சிகளின் கதை, பரமார்த்த குரு கதை போன்ற அற்புதமான கதைகளை மாணவர்களுக் சொல்லிக்கொடுத்த கதைச்சொல்லி ஆசிரியர்கள் எல்லாம் எங்கே மறைந்தார்கள். (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.63)

புதியதோர் கலை உலகம்
இன்றைய மாணவர்கள், ஒரே நேரத்தில் பல்துறை, பல்கலை, பல மொழி அறிவைப் பெறும் திறன் படைத்தவர்களாக விளங்குகின்றார்கள். வெறும் எழுத்து சார்ந்த படிப்பைவிட உருவ அருப காட்சிப்பார்வைகள் சார்ந்த உலகத்தின் பயன்களை மாணவர்கள் அனுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இன்றைய மாணவர்களுக்கு அபரிமிதமான படைப்புத்திறன்கள் தேவைப்படுகின்றன.  கதைகள் கேட்டல், நாடகம், நாட்டுப்புறக்கதைகளில் ஈடுபடுதல் போன்றவற்றால் விதவிதமான படைப்பு ஆற்றல்களை வளர்க்கும் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்கவேண்டும். உணர்வு சார்ந்த அறிவே இன்றைய உலகத்திற்குத் தேவையானது என்று அறிஞர்கள் வற்புறுத்தும் இந்நேரத்தில் குழந்தை, சிறுவர், மாணவர்களுக்கான புதியதோர் கலை உலகத்தை நாம் படைக்க வேண்டும்.  (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.66)

தமிழரின் கட்டடக்கலை
உலகப் புகழ் பெற்ற கட்டடக்கலை விமர்சகர் கென்னத் பிராம்டன், நவீன கட்டடக்கலையின் தந்தை எனப்போற்றப்படும் பிராங்க்லாய்ட்ரைட் போன்றோர் தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்த்தபோது இது கட்டடக்கலையின் விந்தையே என்றே அழைத்த பெருமைக்குரியது. ஜவஹர்லால் நேரு காலத்தில் சண்டிகர் நகரை வடிவமைத்த கட்டடக்கலைஞர் லீகபூசியர் தஞ்சை பெரிய கோயில் நகரைப் பார்த்தபோது நகரிய வடிவமைப்பில் தமிழர்களே முதன்மையானவர்கள் என்று வியந்து ரசித்தார். பரந்த வெளியினை அமைத்து பகலில் சூரியனையும், இரவில் சந்திர நட்சத்திரங்களையும் கோயில் பிரகாரங்களிலேயே கண்டு ரசிக்கும் அழகில் மெய்மறந்த இந்தியக் கட்டடக்கலைக் கலைஞர் சார்லஸ் கொரியா தற்போது தான் கட்டிய போபால் சட்டசபை வளாகம், தில்லி, பெங்களூரு போன்ற இடங்களில் தான் கட்டி வரும் டைடல் பார்க் போன்ற கட்டிடங்களையெல்லாம் இவ்வாறு நீண்ட இடைவெளிவிடு சூரிய சந்திரர்களை கட்டடத்திற்குள்ளே காணும் அற்புதத்தை நிகழ்த்தி வருகிறார். (தேவாலய சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜன், ப.68)

தமிழர்களின் வீடுகள்
தமிழக மக்கள் வசிக்கும் வீடுகள் பல வகையானது, ஏன் விசித்திரமானதும்கூட. மக்கள் வாழும் இடம், அவர்கள் செய்யும் தொழில், நிலத்தின் தன்மை, சுதந்திரமான காற்று, சூரிய வெளிச்சம், இரவில் நிலவொளி போன்றவற்றால் சுகாதாரமான இவ்வீடுகள், அந்தந்த பகுதிக்கேற்ப விதவிதமாக அமைந்துவிடுகிறது. பட்டு நெசவுத்தொழிலை மேற்கொள்ளும் சௌராஸ்டிர  மக்களின் வீடுகளோ, சிகடா போட்டு பட்டுப்புடவைகளை நெய்யும் தறிகளுக்கேற்ற நீண்ட வீடுகளாக அமைந்துள்ளது. தஞ்சை பகுதியில் குடிசையில் வாழும் மக்களோ, ஆற்றுப்படுகையில் கிடைக்கும் வண்டல் மண்ணான களிமண்ணைக் கொண்டு வீட்டைக் கட்டி, அதனை சாணமிட்டு மெழுகி, தென்னங்கீற்று கூரையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். தென்னங்கீற்றால் ஆன கூரையின் மேல் உள்ள சிறிய வெண் படலம், கோடை கால வெயிலை திருப்பி விசிறி அடித்து வீட்டினுள்ளே குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. மழைக் காலத்திலோ தண்ணீரை வெகு விரைவில் வெளியேற்றி வீட்டினுள் ஒரு கதகதப்பான வெட்பத்தை உட்செலுத்திவிடுகிறது. (தட்சிணசித்ராவில் தமிழக வீடுகள், ப.290)

தோற்றம் பின்னுள்ள உண்மைகள் : தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள்
பதிப்பகம் மதி நிலையம், 2/3, நான்காவது தெரு, கோபாலபுரம், சென்னை 600 086
தொலைபேசி : 044-28111506
ஆண்டு : 2012

22 comments:

  1. அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. ரசிக்கத்தக்க பகிர்வு.

    ReplyDelete
  3. படிக்கத்தூண்டும் படைப்பு.
    அருமையான விமர்சனம்.
    த ம 2

    ReplyDelete
  4. தஞ்சை மாவட்டத்தின் பழைமையை நினைவூட்டுகின்றது..

    ReplyDelete
  5. ரசனையான எழுத்து...
    விமர்சனம் என்றில்லாமல் அழகான ஒரு பகிர்வு...
    வாழ்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான செய்திகள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. படிக்கப்படிக்க சுவாரசியமாக இருக்கிறது. அவசியம் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம். பகிர்விற்கு, அழகிய விமர்சனத்திற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  8. #பட்டு நெசவுத்தொழிலை மேற்கொள்ளும் சௌராஸ்டிர மக்களின் வீடுகளோ, சிகடா போட்டு பட்டுப்புடவைகளை நெய்யும் தறிகளுக்கேற்ற நீண்ட வீடுகளாக அமைந்துள்ளது.#
    தேனுகா அவர்கள் கூரிய பார்வையுடன் ,அதை எழுத்தில் வடித்துள்ளார் என்பது தெரிகிறது !நல்லதொரு அறிமுகம் ,வாழ்த்துகள் !

    ReplyDelete
  9. அருமையான பதிவு சார்.

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம் மற்றும் பகிர்வு ஐயா. மிக்க நன்றி

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு நூல் விமர்சனம். அதை அழகாக எங்களுடன் பகிர்ந்து தந்து இருக்கிறீர்கள்.படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. அவசியம் வாங்கி படிக்கிறேன். தங்கள் பாணியில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. நல்லதொரு அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  13. வணக்கமும் நன்றியும் அய்யா. காலஞ்சென்ற எனது நண்பர் தேனுகா அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் அரிய நூலை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அய்யா. இவர் எனது நண்பர் திருச்சி நந்தலாலாவின் சம்பந்தியும் ஆவார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. (தேனுகாவின் மகன் விஜய், நந்தலாலாவின் மூத்த மகள் பாரதியைத் திருமணம் செய்திருக்கிறார்) இந்த நட்பும் உறவும் கடந்தும் தேனுகா மிகச்சிறந்த கலை விமர்சகர் என்பதை நாடறியும். எனவே எனது நன்றிகலந்த வணக்கத்தை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete
  14. தஞ்சை மாவட்டத்து நிகழ்வுகளின் விமரிசனம் என் இளமை வாழ்வை நினைவூட்டுகிறது.
    ரசித்துப் படித்தேன் .

    ReplyDelete
  15. அறிமுகத்துக்கு நன்றி ! அய்யா..

    ReplyDelete
  16. அருமையான நூல் அறிமுகம்
    பயனுள்ள பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  17. தேனுகா சீனிவாசன் அவர்களது எழுத்துக்களை வாசித்ததில்லை. சென்ற ஞாயிறு அன்று புதுக்கோட்டை வீதி இலக்கியக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, எழுத்தாளர் தஞ்சை நா.விச்வநாதன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது, அவர் தேனுகாவின் படைப்பைப் பற்றி சிலாகித்துச்சொன்னார். இன்று உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கும் தேனுகாவின் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது. காரணம், நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள எடுத்துக் காட்டுகள், அந்த காலத்து விஷயங்களோடு ஒன்றிப் போன மலரும் நினைவுகளாக அமைந்துள்ளதுதான். நல்லதொரு நூல் விமர்சனம். தொடர்ந்து செய்யுங்கள்.

    ReplyDelete
  18. அருமையான அறிமுகத்தோடு
    ஒரு அற்புதமான கலை இரசிகரையும்
    அவர் படைத்த அதி அற்புதமான நூலையும்
    சுருக்கமாக எனினும் நிறைவாக அறிமுகம்
    செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Balasubramaniam G.M (gmbat1649@gmail.com) வழியாக
    பதிவில் பின்னூட்டம் இட இயலவில்லை ஆகவே இங்கே விமரிசனத்தில் கூறப்பட்டுள்ள் விஷயங்களைப் படிக்கும் போது நமக்கு தெரிய வேண்டுவது நிறையவே இருக்கிறது என்று தெரிகிறது. கற்றதுகைம்மண் அளவு...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இந்தச் சிக்கல்தான் அய்யா, ரொம்ப நாளாகவே.. தொழில்நுட்பம் வளர்க்க வேண்டும்.

      Delete
  20. நல்ல நூல். தற்போது கிடைக்கும் இடம் தெரிவிக்கவும்.

    ReplyDelete