14 October 2016

கீழடி : தமிழகத்தின் தொன்மை, வரலாற்றின் பெருமை

அனைத்துச் சாலைகளும் கீழடி நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன என்பது இக்காலகட்டத்திற்குப் பொருந்தும் கூற்று. அறிஞர்களும், நண்பர்களும், ஆர்வலர்களும் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களுக்குள் முதன்மையான விவாதப் பொருளாக இருப்பது கீழடியே. நாம் வாழும் காலத்தில் நம் மண்ணின் பெருமையை, நம் தொன்மை வரலாற்றை நேரில் காணப்போகிறோம், காண்கிறோம் என்ற நிலை அனைவர் மனத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 
சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன், நண்பர்கள் குழுவாக கீழடி போவதாக உள்ளதாகக் கூறி அழைத்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். திரு வைகறை அவர்கள் ஏற்பாட்டில்  திரு மணி.மாறன், திரு அய்யம்பேட்டை செல்வராஜ், திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் கண்ணதாசன், முனைவர் கல்பனா, செல்வி சோனியா, முனைவர் பாரி, புலவர் நாகேந்திரன், திரு சம்பத், திரு வைகறை, திரு ராமதாஸ் உள்ளிட்ட நண்பர்களுடன் 11 அக்டோபர் 2016 அன்று கீழடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 





தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றூர் கீழடி. பெரிய தென்னந்தோப்பு. நடக்க நடக்க வந்துகொண்டேயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள். நம் தமிழனின் பெருமையைப் பேசும் வரலாற்றின் ஒரு புதிய பக்கம் இங்கிருந்து ஆரம்பமாகியுள்ளது என்று நினைத்துக் கொண்டே பூரிப்போடு நடந்தோம். தோண்டி வைக்கப்பட்டுள்ள குழிகளின் ஆழத்தையும் நீள அகலத்தையும் பார்க்கும்போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இவ்வூரில் சங்க காலத்தைச் சேர்ந்த பல பயன்பாட்டுப் பொருள்கள், சுடுமண் பொம்மைகள், அணிகலன்கள், உறைகிணறுகள் போன்றவை இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 குழிகள் தோண்டப்பட்டு அக்குழிகளிலிருந்து பல பொருள்களும் கட்டட அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியான மிகப்பெரிய அகழாய்வாக இது கருதப்படுகிறது.  ஒரு புதையுண்ட நகரை மேலிருந்து பார்ப்பதைப் போலத் தோன்றும் ஓர் உணர்வினை இப்பகுதியில் இருக்கும்போது உணர முடிந்தது. கட்டட அமைப்பு, கற்களின் நேர்த்தி, கட்டுமானச் செறிவு பண்டைத் தமிழனின் நுண்ணறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தி நிற்பதை அங்கு காணமுடிந்தது. 

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பௌத்தம் தொடர்பாக களப்பணி சென்றிருந்தபோதும் கீழடிப் பயணமானது முற்றிலும் மாறுபட்ட நிலையில் அமைந்திருந்ததை என்னால் உணரமுடிந்தது. பூம்புகாருக்குக் களப்பணி சென்றபோது பார்த்ததைப் போலவே முதலில் கீழடி என் மனதில் பதிந்தது. பூம்புகாரில் காணப்பட்ட செங்கற்களையே இங்குள்ள செங்கற்கள் நினைவூட்டின. ஆனால் அவற்றைவிட இவை சற்று பெரிதாக இருந்தன. கிட்டத்தட்ட 100 ஏக்கர் அளவிலான பகுதியில் அகழாய்வு நடைபெற்ற ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியத்தொல்லியல் துறையினர் செய்துவரும் பணி பாராட்டத்தக்கதாகும். உடன் வந்த அறிஞர்கள் கீழடி குறித்து கூறிய கருத்துகளைக் காண்போம். 

திரு மணி.மாறன் : இங்குள்ள கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியுள்ள செங்கல்லின் அமைப்பானது புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ள சங்க காலத்து கோட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கற்களின் அமைப்பினை ஒத்துத் திகழ்கிறது. இங்கு தொழிலகம் இயங்கியதற்கான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இத்தொழிலகம் சாயத்தொழில் நடைபெற்ற இடமாகவோ அல்லது ஆயுதங்கள், அணிகலன்கள் செய்யப்பெற்ற தொழிலகமாகவோ இணைந்திருக்கக் கூடலாம். ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் சிறு கால்வாய் வழியாக அடுத்த தொட்டிக்கு நீர் செல்லுமாறு அமைக்கப்பட்டு இறுதியாக ஒரு பெரிய கால்வாய் வழியாக முழு நீரும் வெளியேறி ஆற்றில் கலக்கும்படி அமைந்துள்ள அமைப்பினைக் காணமுடிகின்றது. உறைகிணற்று சுடுமண் உறையானது பழந்தமிழனின் தொழில்நுட்பத் திறனை அறிய முடிகிறது.              

திரு தில்லை கோவிந்தராஜன் : பூம்புகார் அருகேயுள்ள பல்லவனீச்சரம் எதிரே காணப்படுகின்ற கிளார்வெளி எனப்படுகின்ற பகுதியில் காணப்படும் கட்டட அமைப்போடு இந்த அமைப்பு ஒத்துள்ளது. பல்லவனீச்சரம் பகுதியின் அருகே மணிக்கிராமம் என்ற இடம் உள்ளது. சங்கினால் செய்யப்பட்ட வளையள்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்பட்ட வணிகம் சார்ந்த ஊரான மணிக்கிராமம் அருகேயுள்ளது. கீழடியில் உள்ள இந்த இடத்தைப் பார்க்கும்போது சாயம் கலப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இடமாக இருக்கக் கருத இடமுள்ளது. செங்கல் அமைப்பு பூம்புகாரில் காணப்படுவதைப் போன்று, ஆனால் அளவில் சற்று பெரியதாக உள்ளது.  

திரு அய்யம்பேட்டை செல்வராஜ் : இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பணி பாராட்டத்தக்கது. இவ்விடம் முழுக்க ஆய்வு செய்யப்படவேண்டும். இங்குள்ள கற்குவியல்கள் இன்னும் ஆய்வு செய்யப்படவேண்டும். மனிதனின் எலும்புக்கூடுகள் எவையும் கிடைக்காத நிலையில் இயற்கைப் பேரிடர் காரணமாக திடீரென இவ்விடம் அழிந்திருக்க வாய்ப்பில்லை. பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக இங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம். 












வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்படவேண்டும் என்பதற்கான ஓர் ஆரம்பமாக கீழடி அமைந்துள்ளது. நாம் வாழும் காலத்தில், நம் மண்ணில் இவ்வாறான ஓர் அரிய கண்டுபிடிப்பு அனைவரையும் பெருமை கொள்ளவைக்கிறது. நம் வரலாற்றையும், நம் தொன்மையையும் அறிந்து போற்றிப் பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளோம். அத்தகைய ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு தற்போது கிடைத்துள்ளது. இவ்விடத்தின் பெருமையை உலகறியச் செய்யும் வாய்ப்பினை உண்டாக்கி இதனைப் பேணிக்காக்க வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தொல்லியல் அறிஞர்களும், ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், கல்வி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்த அரிய அகழாய்வு பற்றிய பதிவுகளை மக்கள் முன் கொண்டு சென்று அவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர ஆவன செய்யவேண்டும். பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் இவ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்படவேண்டும். அனைவரும் நம் தொன்மை வரலாற்றினை அறிய இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நம் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும். தற்போதுள்ள நிலையில் காணவும், தொன்மையை ரசிக்கவும் உடன் கீழடி பயணிப்போம். 
மணி.மாறன், தில்லை.கோவிந்தராஜன், அய்யம்பேட்டை செல்வராஜ்,
பா.ஜம்புலிங்கம், கண்ணதாசன்

நன்றி
களப்பணி ஏற்பாடு செய்த திரு வைகறை மற்றும் நண்பர்கள்
களப்பணி பற்றிய விவரத்தைத் தெரிவித்த நண்பர் திரு மணி.மாறன் 

25 comments:

  1. கீழடி பற்றிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அதிசயப்பட வைத்த ஆய்வுத் தகவல்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. அருமை ..நன்றி! அய்யா.......

    ReplyDelete
  4. பெருமை மிக்க பயணம். முன்பே தெரிவித்திருந்தால் நானும் மதுரையிலிருந்து வந்திருப்பேன். அருமையான பதிவு அய்யா!
    த ம 3

    ReplyDelete
  5. விரிவான செய்திகளும், வியப்புக்குறிய விடயங்களும், அழகிய புகைப்படங்களும் நன்று பெருமைப்படுவோம்
    த.ம.5

    ReplyDelete
  6. அருமையான பதிவு. படங்கள் பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  7. கீழடி என்றாலும் தமிழரின் தொன்மையை மேற்கொண்டு வருதே ,தொடர்ந்து ஆராயப் படவேண்டும் :)

    ReplyDelete
  8. அருமையான படங்களுடன் அற்புதமான பதிவு. உங்களுடனேயே நேரில் சென்று வந்ததுபோல மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. வரலாறு வைகையாற்றின் கரையில் இருந்துதான் இனி எழுத வேண்டும் என்ற தங்கள் பதிவின் மூலம் உண்மையை உரக்க சொல்லியிருக்கீறீர்கள் ...இக்குழுவில் ஆய்வாளர்களுடன் ஆர்வலர்களும் கலந்து கொண்டதும் சிறப்புதான்..தங்கள் அருகில் இருந்து பயணித்தது இனிய அனுபவம். senior citizen மீது தனி கவனமெடுத்துக் கொண்டதும் நினைவில் நிற்கும்.நன்றி. அடுத்த பயணத்திலும் தொடருவோம்.

    ReplyDelete
  10. அருமையான தகவல்
    தங்கள் ஆய்வுப் பணி தொடர
    எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. அவசியம் ஒரு முறை சென்று பார்த்து
    பெருமைப்பட வேண்டிய இடம் அய்யா
    அவசியம் செல்வேன்

    ReplyDelete
  12. நீங்கள் சொல்லியிருப்பது போல நாம் வாழும் காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது அரிய சாதனை தான். நேரில் பார்த்தது போல் இருக்கின்றன படங்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!

    ReplyDelete
  13. ஒவ்வொரு தமிழனும் சென்று பார்க்க வேண்டிய இடம் - கீழடி... தாங்கள் படங்களுடன் விளக்கம் அளித்துள்ளது மகிழ்ச்சி..

    பெருமைகள் பெருகட்டும்!..

    ReplyDelete
  14. //ஒரு புதையுண்ட நகரை மேலிருந்து பார்ப்பதைப் போலத் தோன்றும் ஓர் உணர்வினை இப்பகுதியில் இருக்கும்போது உணர முடிந்தது.. //

    வாசிக்கும் நாங்களும் உணர முடிந்தது. இது தொடர்பாக மேலும் தகவலகள் அறிய ஆவலாக இருக்கிறது.

    1. கட்டிடக்கலை வரலாற்றில் செங்கல்கள் உபயோகமான காலம் எதுவென்று வரலாற்றாசிரியர்கள் அநுமாகவேனும் குறிப்பிடும் காலம் எதுவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.

    2. கீழடி பூமியில் தோண்டிய பொழுது எவ்வளவு அடி ஆழத்தில் இந்த அகவாய்வுச் செல்வங்கள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள், ஐயா?..

    ReplyDelete
  15. 1)வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதென்றும், இங்கு அதிக அளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.
    2) தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் கிடைத்ததாகக் கூறுகின்றனர்.
    கீழடி தொடர்பாக வந்த ஊடகங்களில் வந்த செய்திகளிலும், விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளிலும் கூடுதல் செய்திகளைக் காணலாம். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. பெருமையான கண்டுபிடிப்பு ... தொடர வேண்டும்.

    ReplyDelete
  17. தமிழர்கள் நாகரிகத்தின் சான்றாக கீழடி அகழ்வு மெய்ப்பிக்கிறது. சிறப்பான கட்டுரை தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  18. கீழடியில் அகழ்வாய்வு செய்யத்தூண்டிய தடயங்கள் என்ன இருந்தது என்று அறிய ஆவல்

    ReplyDelete
    Replies
    1. கட்டிடங்கள், சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள், செங்கற்சுவர்கள்
      மண்பாண்டங்கள், தமிழி எழுத்துக்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல அரிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன ஐயா.

      Delete
  19. நமது முன்னோர்களின் தடயங்கள் என்று பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது, நீங்கள்கொடுத்துள்ள விவரங்கள். மேலும் அறியவேண்டும் என்ற ஆவலையும் தூண்டியிருக்கிறது உங்கள் கட்டுரை. சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அகழ்வாய்வு பணி தொடரட்டும்.

    ReplyDelete
  20. மிகவும் அருமை சார். அடடா மிஸ் பண்ணிட்டனே. ஹ்ம்ம் இத என் ப்லாகுக்குக் கேட்டிருக்கலாமே.:)

    மதிப்பிற்குரிய ஜம்பு சாருக்கு,

    தேனம்மைலெக்ஷ்மணன் எழுதிக் கொண்டது. நான் எனது வலைப்பதிவில் சாட்டர்டே ஜாலி கார்னர்/சாட்டர்டே போஸ்ட் என இரு இடுகைகள் வெளியிடுகிறேன். அதற்கு தாங்கள் ஏதும் எழுதித்தர வேண்டுகிறேன்.

    தங்கள் ஊர், தொழில் , சிறு பிராயம், பள்ளி பற்றி அல்லது புத்தர் மற்றும் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஏதேனும் எழுதித் தாருங்கள். ஒரு 4 பாராவிலிருந்து ஒரு கட்டுரை அளவு இருக்கலாம் ( 22 , 23 பாரா )

    தங்கள் சுயவிபரக் குறிப்பும் தங்கள் புகைப்படம் ஒன்றும் தேவை.

    நேரம் கிடைக்கும்போது அனுப்புங்கள்.

    அன்புடன்,

    தேனம்மைலெக்ஷ்மணன்.

    ReplyDelete
  21. தங்களுக்கு மெயில் அனுப்ப இயலவில்லை சார். :(

    ReplyDelete
  22. வணக்கம். இதோ என் மின்னஞ்சல்: drbjambulingam@gmail.com

    ReplyDelete
  23. நன்றி சார். அது பாக்சர் பி வெயிட்டிங் லிஸ்டில் போகிறது. நான் இரு மெயில்கள் அனுப்பி இருக்கேனே கிடைத்ததா.. வேறு ஏதும் மெயில் ஐடி இருக்கா.என் மெயிலுக்கு நான் மேலே கேட்டிருக்கும் கேள்விக்கான பதில் புகைப்படம் சுயவிபரம் அனுப்புங்க சார் ப்ளீஸ்.

    ReplyDelete
  24. உங்கள் அகழ்வாய்வு பணி தொடரட்டும்.
    பெருமைகள் பெருகட்டும்!..
    எனது வாழ்த்துகள்!

    ReplyDelete