08 October 2016

அதிவீரராம பாண்டியன் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி : பதிப்பாசிரியர் மணி.மாறன்

சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் நண்பர் மணி. மாறன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட, அதிவீரராம பாண்டியன் அருளிய  திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். 
ஊருக்கான பெயர்க்காரணம், (தமிழ் நூல்கள் கருவை எனக்கூறும் நிலையில் திரு அடையாகக் கொண்டு திருக்கருவை, குலசேகரபாண்டியன் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, தப்பிய யானை புதரைச் சுற்றி வந்து சிவகணமாக மாறிய நிலையில் கரிவலம் வந்த நல்லூர், கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் கருவை நல்லூர், கருவேல நல்லூர் பின்னர் திரிந்து கரிவலம் வந்த நல்லூர் என மாறல்) இறைவனின் பெயர்கள் (பால்வண்ணநாதர், திருக்களா ஈசர், முகலிங்கர்), அந்தாதி என்பதற்கான விளக்கம், (ஒரே வகையான செய்யுளால் 100 பாடல்கள் அந்தாதியாகத் தொடராகப் பாடுவதே பெரும்பாலும் அந்தாதி என்ற நிலையில் இந்நூல் நூற்றந்தைந்தாதி) அதிவீரராம பாண்டியன் இந்நூலை எழுத அமைந்த சூழல் (இளம் பருவத்தில் சிற்றின்பத்தில் ஈடுபட்டதால் தொழுநோய் ஏற்படவே தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி திருக்கருவை இறைவன்மீது இந்நூல் உட்பட மூன்று நூல்களைப் பாடி, நோய் நீங்கப்பெறல்) என்ற நிலைகளில் வாசகனுக்கு மிகவும் எளிதாகப் புரியும் வகையில் கருத்துகளை முன்வைக்கும்விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அந்நூலில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம்.

ஆறாக் காமக் கொடியகனல்
 ஐவர் மூட்ட அவலமனம்
நீறாய் வெந்து கிடப்பேனை
 நின்தாள் வழுத்த னிவுதந்து
மாறா நேயத் திரவுபகல்
 மறவா திருக்க வரமளித்தாய்
சீறா டரவம் முடித்தசடைக்
 கருவை வாழும் செஞ்சுடரே (2)

சீறி ஆடும் பாம்பினைத் தரித்துக் கொண்ட சடையினையுடைய திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் நிறைந்த ஒளிப்பிழம்பே என்றும் அவியாத  நெருப்பாகிய கொடிய காமத்தினை ஐம்புலன்களும் வளர்க்க, அதனால் கேடுற்ற மனம் நீறாகும்படி வெந்து கிடக்கும் எனக்கு, உன்னுடைய திருவடிகளைத் துதிக்க நினைவு கொடுத்தால் மாறுபாடு இல்லாத உன் திருவருளினாலே உன் திருவடிகளை வழுத்தும் செயலை நான் இரவும் பகலும் மறவாமல் இருக்க வரம் கொடுத்து அருளிச்செய்தாய். உன் பேரருளை என்னென்பது.

மனத்தை யான்தினம் வணங்குவன் மின்னென
 வைகலும் நிலையற்ற
தனத்தை வாழ்வினை நிலையென மதித்துழல்
 ஆசையில் தளராதே
புனத்து ழாய்முகில் போற்றிடுங் கருவைவாழ்
 புண்ணியன் பாலற்கா
 சினத்த காலனை உதைத்தவன் பங்கயச்
 சேவடி வணங்கென்றே (27)

மின்னலைப் போன்ற என்றும் நிலையற்ற பொருளையினையும், வாழ்க்கையினையும் நிலையென்று கருதிச் சுழன்று திரியும் விருப்பட்ததால் தளர்ச்சி அடையாமல் முல்லை நிலத்திற்குரிய துளபமலர் மாலையணிந்த மேகம் போன்ற நிறம் உடைய திருமால் வணங்கு திருக்கருவைப் பதியில் வாழும் புண்ணிய வடிவாய் உள்ளவனும், இளைஞரான மார்க்கண்டேய முனிவருக்காகக் கோபித்த எமனை உதைத்தவனுமாகிய இறைவனது தாமரை மலரினை ஒத்த செவ்விய திருவடிகளை வணங்காயென்று என் மனத்தை நான் நாள்தோறும் வணங்கிக் குறையிருப்பேன்.

உய்யவோ ருறுதி நாடா
 உலகினிற் சமய மென்னும்
வெய்யஆர் கலியின் வீழ்ந்து
 வெந்துய ருழக்கின் றேற்குத்
தையலோர் பாகம் வைத்துத்
 தண்டமிழ்க் கருவை வாழும்
 ஐயன்வந் தாண்டு ண்ட
 ததிசயம் விளைக்குமாறே (68)

கடைத்தேற ஒரு பற்றுக்கோட்டை நாடி, உலகில் வழங்கும் புறச்சமயங்கள் என்னும் கொடிய கடலில் வீழ்ந்து அழுந்தி, கொடிய துன்பத்தில் வருந்துகின்ற எனக்கு உமையம்மையினை இடப்பாகத்தில் வைத்துத் தமிழ் வழங்கும் திருக்கருவைப் பதியினில் வாழும் இறைவன் எழுந்தருளி வந்து என்னை அடிமை கொண்ட செய்தி, நினைக்குந் தோறும் அதிசயத்தை விளைக்கும் வகையதாம்.

நேர்ந்த நெஞ்சமே நெடிது வாடிநீ
 சோர்ந்த துன்பமுந் துயரும் போக்குவான்
 வார்ந்த செஞ்சடைக் கருவை வானவன்
 ஆர்ந்த பேரருள் அருவி யாடவே. (74)

வேண்டிய மனமே, (உன் வாட்டத்தையும், சோர்வையும் போக்கும்படி) நீண்ட சிவந்த சடையினை உடைய இறைவனின் வற்றாத பெரிய அருளாகிய அருவியில் நீராட, நீ மிகவும் வாடுதற்கும், சோர்தற்கும் காரணமான துன்பத்தையும் வருத்தத்தையும் அவன் போக்கி அருள்வான்.


குழவி வெண்ணிலா அனைய வெண்ணகை
 சோகொடியி டத்துவாழ் குரிசில் போற்றிஎன்
பழைய தீவினைப் பகைதொ லைத்திடும்
 பாவ நாசனே போற்றி காய்சினத்து
உழுவை யின்வரி தோல சைத்தபட்டு
 உடைம ருங்கினோய் போற்றி செந்தமிழ்க்
கழும லப்பதிக் கவுணி யன்புகழ்
 களவின் நீழலிற் கடவுள் போற்றியே. (92)


இளமையான வெள்ளிய சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய புன்சிரிப்பினை உடைய பூங்கொடியனைய உமாதேவி இடப்பாகத்தில் வாழும் இறைவனே, வணக்கம். தொன்று தொட்டுள்ள எனது தீவினையாகிய பகையைப் போக்கியரளும் பாவநாசனே, வணக்கம். வருத்தும் கோபத்தை உடைய புலியின் கோடமைந்த தோலைப் பட்டு உடையாகக் கட்டிய இடையை உடையவனே, வணக்கம். செந்தமிழ் சீகாழிப் பதியில் திருஅவதாரம் செய்த கௌணிய கோத்திரத்தரான திருஞானசம்பந்தர் புகழ்ந்து பாடிய திருக்களா நீழலமர் கடவுளே வணக்கம். 

நூன்முகம், திருக்கருவை எனப்படும் கரிவலம் வந்த நல்லூர், நூலாசிரியர், அந்தாதி, நூல் காட்டும் புராண வரலாறு என்ற நிலைகளில் பதிப்பாசிரியர் மிகவும் நுட்பமாக நூலைப் பற்றிய அறிமுகத்தைத் தந்துள்ள விதம் வாசகர்களின் மனதில் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் வட்டத்தில் உள்ள கருவை மாநகரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பற்றி அதிவீரராம பாண்டியர் பாடிய, குட்டித் திருவாசகம் என்னும் பெருமையுடைய இந்நூலை வாசிப்போம், தமிழழகை நேசிப்போம், இறையருளைப் பெறுவோம், வாருங்கள். 

---------------------------------------------------------------------------------------------------
நூல் : அதிவீரராம பாண்டியன் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
பதிப்பாசிரியர் : மணி.மாறன் (அலைபேசி 9443476597) 
பதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்
ஆண்டு : 2016
விலை : ரூ.100
---------------------------------------------------------------------------------------------------
நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்:
தமிழ் எண்ணும் எழுத்தும், 

11 comments:

 1. அரிய நூல்தனை அறிமுகம் செய்து
  அழகான பாடல்களையும் பதிவில் தந்ததற்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 2. அதிவீரராம பாண்டியர் சிறப்பாகவே வெகுதிரள் மக்களுக்கும் அறியப்பட்டவர்.

  நூல் அறிமுகம் நன்று.

  //ஒத்த செவ்விய திருவடிகளை வணங்காயென்று என் மனத்தை நான் நாள்தோறும் வணங்கிக் குறையிருப்பேன். //

  ஒத்த செவ்விய திருவடிகளை வணங்கு என்று
  ......

  என்று இருக்க வேண்டுமோ?..

  ReplyDelete
  Replies
  1. நூலில் இவ்வாறுதான் உள்ளது. நானும் 'வணங்கு என்று' என்பதே சரி என நினைக்கிறேன்.

   Delete
 3. நூலை அழகிய விடயங்களுடன் விமர்சனம் தந்த முனைவருக்கு நன்றி

  ReplyDelete
 4. அருமையான ஒரு நூலின் அறிமுகம் ஐயா....

  ReplyDelete
 5. //நானும் 'வணங்கு என்று' என்பதே சரி என நினைக்கிறேன்.//

  அது அச்சுப் பிழையாக இருக்கலாம், ஐயா!

  'வணங்காயோவென்றே' ஓசை நயத்துடன் இன்னும் அழகாக இருக்கிறது.

  ஆனால் அதிவீரராமபாண்டியர், 'சேவடி வணங்கென்றே' என்று சொல்லியிருப்பதால், நாம் வணங்கு என்றே கொள்ளலாம்.

  ReplyDelete
 6. அரிதான ஒரு நூலைப் பற்றி அழகான விமர்சனம். நன்றி அய்யா!
  த ம 3

  ReplyDelete
 7. சிறந்த திறனாய்வுப் பார்வை
  அருமையான நூல் அறிமுகம்!

  ReplyDelete
 8. மிகவும் அரிதான நூல் பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 9. அதிவீரராம பாண்டியன் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி : பதிப்பாசிரியர் மணி.மாறன் = கரிவலம் வந்த நல்லூர் (சங்கரன் கோவில் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்) கோவில் பற்றிய புத்தகம், அற்புதமான, பழமையான கோவில். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி முனைவர் ஜம்புலிங்கம் http://drbjambulingam.blogspot.com/

  ReplyDelete