19 November 2016

பேராசிரியர் : தஞ்சை தமிழ்ச்செல்வன்

எங்களது இல்லத்தில் நாளிதழ் வாசிப்புக்காக தனியாக நேரம் ஒதுக்குவோம். முதலிடத்தைப் பெறுவது மூன்று மகாமகங்களுக்கு மேலாக நான் வாசித்து வரும் The Hindu நாளிதழ். என் மூத்த மகன் பாரத், இளைய மகன் சிவகுரு இருவரும் பள்ளியில் படிக்கத்தொடங்கிய காலம் முதல் அண்மையில் வேலைக்குச் சென்றது வரை இந்த வாசிப்பு தொடர்ந்தது. அவர்கள் வேலைக்குச் சென்ற பின்னரும் தினமும் செய்தித்தாளில் பார்க்கும் புதிய சொல்லின் பயன்பாட்டைக் குறித்துப் பேசுவது தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரு மாதங்களாக முகநூலில் புதிய சொற்களைப் பதிய ஆரம்பித்தேன். எங்களது வாசிப்பைப் பற்றி இளைய மகன் தன் தளத்தில் #thehinduநாளொருசொல் பற்றி பேராசிரியர் என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவினைக் காண அழைக்கிறேன். 

எனக்கு விவரம் தெரிந்து நினைவில் உள்ள, நான் எழுதிய முதல் கட்டுரை, 3 அல்லது 4ஆம் வகுப்பு படிக்கும் போது ‘Science in our everyday life’ என்ற தலைப்பில் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டிக்காக எழுதியதாகும். அந்தக் கட்டுரைக்கு ‘We have to realize that science is a double-edged sword’ என்ற மேற்கோளை ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து எனக்கு எடுத்து தந்தது என் அப்பா தான். முழுவதும் எழுதித்தந்தது அவர் அல்ல. என்னையே எழுத வைத்தார். அதற்கு தேவையான மூலப்பொருட்களாக சில வாசகங்களையும், சில சிந்தனைகளையும்  தந்தார். நான் எழுதியதில் பிழை திருத்தம் செய்து தந்தார். ஆனால் எழுதியது நான் தான் (இன்று குழந்தைகளுக்காக பெற்றோர் செய்யும் பிராஜெக்ட்டுகள் போல அல்ல அது). அந்த கட்டுரைக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லை.

ஆங்கில வார்த்தைகளையும், விதவிதமான வித்தியாசமான பிரயோகங்களையும் எங்களுக்கு (எனக்கு, அண்ணனுக்கு, அம்மாவுக்கு) சொல்லித்தந்தது அப்பா தான். நான் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது (1995-1996இல்) தூர்தர்ஷன் ஆங்கில 8:00மணிச் செய்தியை நாங்கள் அனைவரும் பார்ப்போம். நானும் அண்ணனும் எங்களுக்கென்று உள்ள தனித்தனி நோட்டில் அன்றைய தேதியிட்டு, செய்தியில் வந்த, குறைந்தபட்சம் 10 வார்த்தைகளை எழுதுவோம். செய்தி முடிந்தவுடன் அதன் Spelling சரியா, அது அன்றைய செய்தியில் பயன்படுத்தப்பட்டதா என்று அப்பா சரிபார்ப்பார். தவறுகளை சரி செய்வார். நான் நிறைய நாட்கள் எண்ணிக்கையை சரிசெய்ய ICICI என்ற வார்த்தையை நிரப்பி வைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. கவனிக்கும் திறனை (Listening Skill) வளர்வதற்கான பயிற்சி அது என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

நாங்கள் வளர வளர எங்களுக்கான ஆங்கிலப் பயிற்சி முறையும் மாறிக்கொண்டே வந்தது (எங்களுக்கே தெரியாமலேயே). ஆங்கில ‘தி இந்து’ நாளிதழை நாங்கள் எழுத்துக்கூட்டி படிப்போம், அதற்கு அப்பா தமிழ் அர்த்தம் சொல்லுவார். சில வருடங்களில், அண்ணன் படிக்க நானும், நான் படிக்க அண்ணனும் மாறி மாறி அர்த்தம் சொல்லுவோம். பின்பு ஆங்கிலத்தில் உள்ள செய்திகளில் கையை வைத்தபடியே தமிழில் படிப்போம். இவ்வாறாக, சொல்லாட்சி, எழுத்து நடை,  மொழிபெயர்க்கும் முறை என அனைத்தும் எங்களுக்குத் தெரியாமலேயே பயிற்றுவிக்கப்பட்டது.

அண்ணன் கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் வரை (2008), ஒரு வாரம், ஒரு மாதம் என எத்தனை நாட்கள் ஆனாலும், நாங்கள் நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து படிக்கப்படாத இந்து நாளேடுகள் பழைய பேப்பர் போடும் இடத்துக்கு போனதேயில்லை.

அண்ணன் வேலைக்கு போன பிறகு, நான் அவ்வளவாக முன்புபோல படிப்பதில்லை. ஆனாலும் தினமும் மதிய உணவு இடைவேளை, பேருந்து பயண நேரம் என தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படித்த செய்திகளை Highlight செய்து வந்து வீட்டில் எனக்கும், தொலைபேசியில் அண்ணனுக்கும் அப்பா சொல்லுவார். எனக்கு தெரிந்த வரையில், ஒரு நாளேட்டை, 10ஆம் வகுப்பு மாணவன் பப்ளிக் பரீட்சைக்கு எப்படி படித்து Highlight செய்து படிப்பானோ, அப்படி படிப்பவர் அப்பா மட்டும்தான்.

நானும் வேலைக்கு வந்த பிறகு, முன்பு போல நானோ அண்ணனோ படிப்பதில்லை என்று அப்பாவுக்கு தெரியும். ஆனாலும் அப்பா விட்டுவிடவில்லை. தான் படிக்கும் செய்திகளையும், புதிய சொற்களையும், #thehinduநாளொருசொல் என்ற #HashTag உதவியோடு Facebookல் தினமும் பதிவிடுகிறார். நாங்கள் படிப்பதற்காகத்தான் அப்பா பதிவிடுகிறார் என்று எங்களுக்குத் தெரியும்.  நாங்கள் அதை படித்துவிடுவோம் என்று அப்பாவுக்கும் தெரியும். காலம், தொழில்நுட்பம் என எது மாறினாலும், பல வழிகளில் எங்களுக்கே தெரியாமல் பயிற்றுவித்த, பயிற்றுவிக்கும் அப்பாவும் அவர் பாடங்களும், எங்களது பேராசிரியர் என்ற நிலையும் என்றும் மாறப்போவதில்லை.

எங்களைப் போலவே நீங்களும் கற்க ஆவலிருந்தால் இந்த இணைப்பை தொடரவும்.


19 comments:

  1. நல்ல முயற்சி. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரிய தந்தை தாங்கள்

    ReplyDelete
  3. பிள்ளைகளை மட்டுமல்ல எங்களையும் கொள்ளைகொண்ட மனிதர் நீங்கள்.! பலருக்கும் உபயோகமான பயிற்சிமுறை. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்தித்தாள்களை படிக்கும் முறையை கற்றுத்தருவதே இல்லை. தங்கள் மகனின் இந்த பதிவினை படித்தபின் பல பெற்றோர்களின் மனம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
    அருமையான பதிவு!

    ReplyDelete
  4. அருமயான பதிவு.
    உங்களுக்கும்,உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. முற்றிலும் மாறுபட்ட அங்கத்தினராகிய தங்களது குடும்பத்தினர் அனைவரையும் வணங்குகிறேன் வாழ்க நலம்.
    த.ம.2

    ReplyDelete
  6. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சும்மாவா சொன்னார்கள்!..

    வாழ்க நலம் என்றென்றும்!..

    ReplyDelete
  7. நல்லதொரு வளர்ப்பு! நல்ல முயற்சி! வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  8. ஊரார் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கும் உங்கள் பரந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. வணங்கி வியக்கிறேன் ஐயா! எப்படிப்பட்ட அப்பா..பிள்ளைகளும் அருமையாகப் பின்பற்றி இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா. உங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்

    ReplyDelete
  10. இப்படி இருப்பது தானே பெருமை...
    அதிலும் நீங்கள் ஜம்பு லிங்கம்..குட்டி தாவுவதில் வியப்பில்லை..உவப்பே..

    ReplyDelete
  11. தங்கள் பதிவு பலருக்கு வழிகாட்டலாக அமையுமென நம்புகிறேன்
    நன்றியும் பாராட்டும்

    ReplyDelete
  12. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  13. வீட்டிலும் ஆசிரியர் .... பிரம்பில்லாமல்!

    ReplyDelete
  14. நல்ல ஒரு வழிகாட்டி சார் நீங்கள் உங்களின் பல்திறமைகள் எமக்கும் உதவி புரிகின்றது எதிர்கால சந்ததிக்கும் மொழியை வளர்ச்சியடைச்செய்ய!

    ReplyDelete
  15. வீட்டிலும் ஒரு ஆசிரியர் பிரம்பில்லாமல் அன்புடன் வாழ்த்துகள் உங்கள் மகனின் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை

    ReplyDelete
  16. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதைத்தவிர......

    ReplyDelete
  17. உங்களுக்கு அப்பா என்றால் எனக்கு அந்த இடத்தில் தாய் மாமா. (எனக்கு ஒரு வயதாக இருக்கும் பொழுது என் தந்தையார் காலமாகி விட்டார்)

    பள்ளி தலைமை ஆசிரியராக வலங்கைமான், பாபநாசம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர். பாடப்புத்தகங்களை உரக்கப் படிக்கச் சொல்வார். பிழைகளைத் திருத்துவார். ஒரு பக்க கட்டுரைகளை அழகாக டிக்டேட் செய்து மனப்பாடம் செய்யச் சொல்வார், வகுப்பில் நான் எழுதும் கட்டுரை மட்டும் வேறுபட்டு இருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆங்கில அறிவு என்னில் அவரால் தான் வளர்ந்தது. உங்கள் பதிவைப் படித்தும் நெகிழ்வுடன் அவரைத் தான் நினைத்துக் கொண்டேன்.

    ஏழாவது படிக்கையில் தமிழ் வகுப்பில் பொதுக் கட்டுரை எழுதுகையில், 'பறவைகளைப் பார்த்துப் பறக்கக் கற்றுக் கொண்ட மனிதன் காக்கைகளைப் பார்த்து ஒன்றுமையுடன் வாழ கற்க மறந்ததேன்?' என்ற ஒரு வரியை நான் எழுதிய கட்டுரையில் எழுதியிருந்தேன். இது தான் தமிழில் சுயமாக முதல் முதல் நான் எழுதிய நீண்ட கட்டுரை. அந்த வயது எண்ணப் பதிவு என்றும் சொல்லலாம்.

    இந்த ஒற்றை வரியை எடுத்துக் கொண்டு தமிழாசிரியர் வகுப்பில் நான் எழுதியதைப் பலபடப் பாராட்டிச் சொன்னதுடன், அந்த வரியை வைத்துக் கொண்டே பல உதாரணங்கள் சொல்லி அன்றைய வகுப்பை நடத்தினார். அந்த மாதிரியான ஆசிரியர்கள் அன்று அளித்த உற்சாகமும், ஊக்குவிப்பும் தான் இன்றும் எழுத வைக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறேன்.

    ReplyDelete
  18. முதலில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! ஐயா எங்கள் இருவரிடமிருந்தும். அருமையான அப்பா!!! முன் மாதிரியான அப்பா! அப்பாவைப் பிந்தொடர்ந்த பிள்ளைகள்! நல்ல வளர்ப்பு முறை! பலகலைக்கழகம் தங்கள் குடும்பம்..இப்போதும் தொடர்வது இன்னும் சிறப்பு!.

    கீதா: ஐயா எங்கள் வீட்டிலும் இதே போன்றுதான் பலதும் சொற்கள் அதன் பயன்பாடு கற்றுக் கொள்வதிலிருந்து, அறிவியல், மொழிப்பயிற்சி என்று பலதும். ஏனென்றால் என் மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்தது. மொழி ஆளுமை கிடையாது. எழுத மாட்டான். நான் அதற்காகப் பல பயிற்சிகளை அவனுக்குக் கற்றுக் கொடுத்து என்றால் கற்றுக் கொடுக்காமல் நானும் அவனுடன் பங்கு கொள்வேன் தங்களைப் போல பயிற்சி கொடுத்தேன். மிக மிக அருமை ஐயா தங்களின் பணி. நல்ல வளர்ப்பு ஐயா!தற்போதைய பெற்றோர் இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்களிடமிருந்து. இங்கு வாசிப்பவர்கள் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் ஐயா! மீண்டும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete