24 September 2016

முனைவர் இராம. குருநாதன் நூல்கள்

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாகக் கட்டுரை எழுதுவதற்காக கும்பகோணம் சென்றபோது முனைவர் இராம. குருநாதன்  (9444043173), அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தான் எழுதிய நூல்களைத் தந்து எனது கட்டுரைகளைப் பாராட்டிக் கூறினார்.  அவரது நூல்களை முன்னரே படித்துவிட்டாலும் தற்போதுதான் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நூல்களைப் பற்றிச் சுருக்கமாக அறிவோம், வாருங்கள்.


தமிழ் யாப்பியல் உயராய்வு, ஆங்கில மூலம் : செந்தமிழ்க்காவலர் பேராசிரியர் அ.சிதம்பரனார், தமிழில் : இராம.குருநாதன், விழிகள் பதிப்பகம் (9444265152), 8/எம், 139, 7ஆவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை 600 041, 2009
"தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஆய்வேடு அளித்து அதன்வழியே முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வேடு என்ற பெருமையைக் கொண்டது இந்நூல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ்வாய்வேடு 67 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதன்முதலாகத் தமிழ் வடிவம் பெறுகிறது. முனைவர் அ.சிதம்பரநாதனார் கைப்படி ஆங்காங்கே சில திருத்தங்களை செய்ய எண்ணிய நூல் படிவம் என்னிடம் உள்ளது. அதில் சில இடங்களில் அவரே அடித்தும் கைப்படக் குறுக்குக் கோடு இட்டும் வைத்துள்ளார்" என்று மொழிபெயர்ப்பாசிரியர் நூலின் பெருமையைப் பற்றிக் கூறுகிறார்.   இந்நூல் கி.பி.10ஆம் நூற்றாண்டு வரை தமிழ் யாப்பியலின் வரலாற்றை எடுத்துக்கூறுகிறது. 

போடோ சிறுகதைகள்மூலம் : ஜெய்காந்த சர்மா, தமிழாக்கம் : இராம.குருநாதன்,
சாகித்திய அகாதெமி, புதுதில்லி, 2012
"போடோவின் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள் பதினொன்றும் ப்டோவின் அண்மைக்காலக் கதைகளின் போக்கை உணர்த்துகின்றன. குறிப்பாகபத்தாண்டு காலத்தின் பதிவுகள் அவை. போடோ வாசகர்களாலும் திறனாய்வாளர்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றவையாகும். எளிமையும் தமக்கெனத் தனி அடையாளமும் கொண்ட போடோ மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் பிரதிபலிப்பினை இக்கதைகள் வெளிப்படுத்துவனவாய் உள்ளன" என்ற நிலையில் பதிப்பகத்தாரின் குறிப்போடு அமைந்துள்ள இந்நூலில் மூல ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படிக்கும்போது மூல நூலையே படிப்பதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. 

நெடுநல்வாடையும் புனித ஆக்னிசு நற்பொழுதும் ஓர் ஒப்பாய்வு,  இராம.குருநாதன், விழிகள் பதிப்பகம் (9444265152), 2012
"கீரரையும் கீட்சையும் ஒப்பிட்டு நோக்க இயலுமா?  நக்கீரர் செவ்வியல் காலத்துக் கவிஞராயிற்றே. செவ்வியல் தன்மைகள்தாமே அவருடைய கவி ஆளுமையாக இருக்க இயலும். கீட்சு புனைவியல் காலத்துக் கவிஞராயிற்றே! முற்றிலும் புனைவியல் கூறுகளால் அமைந்த கவித்தன்மையல்லவா அவரது கவிதையில் இருக்கமுடியும். செவ்வியல் காலத்தைச் சேர்ந்த கவிஞர் ஒருவரைப் புனைவியல் காலத்தவரோடு ஒப்பியல் நோக்கில் ஒப்பிட இயலுவதா எனக் கேட்கலாம். காலங்கடந்து நிற்பவர்களாயிற்றே கவிஞர்கள்" என்ற குறிப்பினை முன்னுரையில் தரும் ஆசிரியர் மிகவும் நுட்பமாக தன் எழுத்துத்திறமையால் பாடுபொருள் சிந்தனையில் அவர்களை ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடுகிறார். ஒப்புமைப் பண்புகளை நூலாசிரியர் வாசகர்கள் முன்பாக வைக்கும்விதம் வியப்பை உண்டாக்குகிறது.

ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன் : பாரதிதாசனும் இராபர்ட் லீ பிராஸ்ட்டும், இராம.குருநாதன், தென்புத்தூர் பதிப்பகம், 10/E55, 3ஆம் குறுக்குத்தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை 600 041, விற்பனை உரிமை : விழிகள் பதிப்பகம் (9444265152), 2015
ஒப்பியல் நோக்கில் வல்லுநராக நூலாசிரியர் பாரதிதாசனையும் இராபர்ட் லீ பிராஸ்ட்டையும் இந்நூலில் ஒப்புநோக்குகிறார். ஒருவர் தமிழகத்துக் கவிஞர். மற்றொருவரோ அமெரிக்கக்கவிஞர். இவர்கள் இருவருமே பல வகைகளில் ஒத்த நிலையில் உள்ளவர்கள். வாழ்க்கையின் பரந்த வெளியைக் கவிதையின் பாடுபொருளாக்கியவர்கள். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை மக்களுக்குப் புரிய வைத்தவர்கள். இவர்களை ஒப்பிடுவதற்கான சில அடிப்படைக் கூறுகளை முன்வைத்து, அந்த வகையில் இவ்விருவரையும் சில கோணங்களில் ஒப்பிட முயன்று வெற்றி பெறுகிறார். 


பல்வகைப் பொருண்மையில் அமைந்துள்ள முனைவர் இராம.குருநாதன் அவர்களின் மூல நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும், ஒப்பியல் நூல்களையும் வாசிப்போம், வாருங்கள். 


விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு

15 September 2016

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்

பள்ளி நாள்கள் (1970களில்) முதல் கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்திற்குச் சென்று வருகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி பல வரலாற்றுப் புதினங்களை இங்கு நானும் நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தோம். எனக்கும், பள்ளிக்கால நண்பர்கள் பலருக்கும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது இந்நூல் நிலையம். தமிழ்ப்பல்கலைக்கழகம் 36ஆம் ஆண்டு துவங்கும் நாளில் (15.9.2016) - நான் தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காலகட்டத்தில் (16.8.2016) - இதன் வரலாற்றையும், அரிய பணிகளையும் காண அழைக்கிறேன். வாருங்கள், கும்பகோணம் செல்வோம். 

தோற்றம்
1947ஆம் ஆண்டில் கும்பேஸ்வரர் கோயிலில் அறங்காவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தேர்த்திருவிழா ஏற்பாட்டிற்காக ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார்  தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கேயிருந்த ஞானசம்பந்தம் நூல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் முறை அவரைக் கவர்ந்துவிட்டது.  அப்போது அவருடைய மனதில் அவருடைய தந்தையின் தந்தை கோபு சிவகுருநாதன் செட்டியார் எம்.ஏ., பி.எல்., பெயரில் நூல் நிலையம் அமைக்கும் எண்ணம் உருவானது.  அவர் பெயரில் சில ஆண்டுகள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.  அவ்வாறு பயின்ற பலர் நல்ல நிலையில் வாழ்வதை அறிந்த  அவர் நூல் நிலையம் ஒன்றும் அவர் பெயரில் அமைத்தால் அனைவரும் பயனடைவர் என்று எண்ணினார். இந்நூலகம் உருவாவதற்கு அடிப்படை இதுவேயாகும். 

சிவகுருநாதன் செட்டியார் வாழ்க்கை
கி.பி.1865இல் பிறந்த சிவகுருநாதன் செட்டியார் வழக்கறிஞர் பணியினை மேற்கொண்டார்.  அவர் திருவாவடுதுறை, குன்றக்குடி ஆதீனங்களின் வழக்கறிஞராகவும், அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1899 முதல் 1901 வரை கும்பகோணம் நகரத்தின் அவைத்தலைவராக விளங்கி பல நற்பணிகளைச் செய்துள்ளார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் டெல்லிக்கு வந்தபோது திருவாளர் செட்டியாரின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். குடந்தை சாதுசேஷய்யா நூல் நிலைய அமைப்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்.  பல கோயில்களில் அறக்கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளார். பெரும்புலவர்களான மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, தியாகராஜ செட்டியார்,  மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்,  மறைமலையடிகள் போன்றோர் இவரது ஆதரவைப் பெற்றிருந்தனர். கும்பகோணத்தில் நாணயக்காரத் தெருவில் இருந்த அறுபத்துமூவர் மடத்தில் சைவ வளர்ச்சிக்கென ஒரு சங்கம் அமைத்து அதன் தலைவராகவும் விளங்கினார்.

1925இல் தனது 60ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போது குடந்தை பேட்டைத்தெருவில் தனக்குச் சொந்தமான லட்சுமி சத்திரத்தை நகராட்சி தொடக்கப் பள்ளிக்கென நன்கொடையாக வழங்கினார்.  (இன்றும் அது பேட்டைத்தெருவில் கோபு சிவகுருநாதன் தொடக்கப்பள்ளியாக விளங்கிவருகிறது.) இவர் 63ஆவது வயதில் 1928இல் இயற்கையெய்தினார்.

நூலகம் உருவாகுதல்
இத்தகு பெருமைகளைக் கொண்டு வாழ்ந்த சிவகுருநாதன் செட்டியார் பெயரில் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தற்போதுள்ள இடத்தில் (நாணயக்காரத் தெரு, கும்பகோணம்) அமைக்கத் திட்டமிடப்பட்டு, 21.5.1958இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்  சென்னை மேல்சபை உறுப்பினர் செந்தமிழ்க்காவலர் பேராசிரியர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால் நூல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  


9.11.1959இல் நூல் நிலையம் சென்னை மேல் சபை உறுப்பினர் தமிழகவேள் சர் பி.டி.ராஜன் பார் அட் லா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இலவசமாக யாவரும் வந்து அமர்ந்து படித்து இன்புறுவதற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் இந்நூல் நிலையம் கொண்டு அமைந்தது.  கும்பகோணத்தில் இத்தகைய நூல் நிலையம் வேறில்லை என்று துணிந்து கூறும் அளவில் சிறப்பு பெற்றது. செந்தமிழ் நூல்களை மட்டுமே கொண்ட அரிய கலைப் பெட்டகமான இந்நூலகத்தில் 10,000 நூல்கள் சேர்க்கப்பெற்ற விழாவும்,   நூல் நிலையத்தின் 12ஆவது ஆண்டு விழாவும் 23.5.1971இல் கொண்டாடப்பட்டது.  27.2.2010 அன்று பொன்விழா நடைபெற்று, அதற்கான கல்வெட்டு மருத்துவர் திரு சு.திருஞானசம்பந்தம் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது. 

ஆரம்ப கால நன்கொடையாளர்கள்
நூலகம் உருப்பெறும் காலகட்டத்தில் ஆதீனங்கள், கோயில்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், தனிநபர்கள் என்ற நிலையில் பல நன்கொடையாளர்கள் மனமுவந்து நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர்.  அவர்களில் திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானம் (216 நூல்கள்), தருமபுரம் ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானம் (152 நூல்கள்), திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானம் (15 நூல்கள்),  கும்பகோணம் ஜகத்குரு காமகோடி பீடம் (35 நூல்கள்), அ.சிதம்பரநாத செட்டியார் (661 நூல்கள்), ப.சுந்தரேசன் (120 நூல்கள்), என்.சொக்கலிங்க செட்டியார் (101 நூல்கள்), ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச அய்யர் (68 நூல்கள்), எஸ்.வி.தியாகராஜ பிள்ளை (60 நூல்கள்), ஜி.கே.வைத்தியநாதன் செட்டியார் (51 நூல்கள்), ஜி.என்.சதாசிவம் (46 நூல்கள்),  கோபு.அ.ராமலிங்கம் செட்டியார் (40 நூல்கள்), ஜி.ஆர்.ராமானுஜம் (44 நூல்கள்),  எஸ்.எம்.பஞ்சநதம் செட்டியார் (33 நூல்கள்),  ஏ.ஆர்.ராமசாமி (31 நூல்கள்), கலியாணசுந்தர முதலியார் (30), சக்கரபாணி செட்டியார் (24 நூல்கள்),  ஏ.எஸ்.ஏ.துரைசாமி செட்டியார் (24 நூல்கள்),  ஏ.எஸ்.ஏ.சீதாராமன் (19 நூல்கள்), சி.ராமன் (16 நூல்கள்),  ஆடுதுறை எம்.என்.சொக்கலிங்க  செட்டியார் (16 நூல்கள்),  சாக்கோட்டை எம்.டி.டி.வி.மில் (14 நூல்கள்),  காரைக்கால் வி.ஏகாம்பரம் (13 நூல்கள்), திருவிடைமருதூர் தேவஸ்தானம் (10 நூல்கள்) உள்ளிட்ட பலர் அடங்குவர்.

ஆசி மொழி வழங்கிய பெரியோர்கள்
நூலகம் உருப்பெற்ற காலத்தில் திரு த.ச.மீனாட்சிசுந்தரம்பிள்ளை, திருவாவடுதுறை ஆதீன வித்வான் (20.11.1957), பர.முத்துவேலன் (2.2.1958), ஊரன் அடிகள், வடலூர் (8.3.1968), கி.வா.ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியர், சென்னை (14.6.1960), கிருபானந்தவாரியார், சென்னை (24.6.1965), புலவர் கீரன், லால்குடி (8.3.1968) உள்ளிட்ட ஆதீனங்கள், கோயில்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், என்ற நிலையில் பல பெரியோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பதிவேட்டுப் பட்டியல்கள்
இந்நூலகத்தில் உள்ள நூல்கள் பல்துறை நூல்கள் என்ற தலைப்பில் இரு நூற்பட்டியல்களிலும், பத்திரிக்கைகள் என்ற தலைப்பில் இரு சிறிய பதிவேடுகளிலும், ஆங்கிலப்புத்தகப் பட்டியலைக் குறிக்கும் ஒரு சிறிய பதிவேட்டிலும் பதியப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இவற்றில் ஒவ்வொரு நூலின் தலைப்பு, ஆசிரியர், அதற்கான எண் என்ற விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் புத்தகத் தொகுப்புப்பட்டியல்
நூலகம் அமைந்த காலகட்டத்தில் முதன்முதலாக 44 பிரிவுகளைக்கொண்டு 5,000 நூல்களின் பட்டியல் முதலில் தொகுக்கப்பட்டது. இப்பட்டியலில் புராணம், தலபுராணம், சாத்திரம், தோத்திரம், திருமுறை, சமயம், சங்க நூல், பிரபந்தம், அகவல், அந்தாதி, உலா, கலம்பகம், சதகம், தூது, பரணி, பிள்ளைத்தமிழ், மாலை, வெண்பா, கீதை, இதிகாசம், வைணவம், நீதி நூல், அகராதி, இலக்கணம், நிகண்டு, கணிதம், சங்கீதம், புதுமைக்கவி, மொழிபெயர்ப்பு, கல்வெட்டுகள், சிற்ப நூல், உலக வரலாறு, யாத்திரை, வாழ்க்கை வரலாறு, உயிர் நூல், உடற்பயிற்சி, வைத்தியம், மாந்தரீகம், சோதிடம், கட்டுரை, மன நூல், வரலாறு உள்ளிட்ட தலைப்புகள் அடங்கும். இந்நூலில் பிற்சேர்க்கையும், திருத்தமும் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது புத்தகத் தொகுப்புப்பட்டியல்
        முதல் பட்டியலில் விடுபட்ட துறைகளான அரசியல், அறிவியல், வேளாண்மை, இசுலாமிய, கிறித்தவ நூல்கள், நாடகம், புதினம் ஆகியவை கொண்ட 5,000 நூல்களின் தலைப்புகளைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

நூல் நிலைய விதிகள்
     இந்நூலகத்திற்கு வாசிக்க வருவோர் கடைபிடிக்க வேண்டிய விதிகளாக பின்வருவன கூறப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலமாக வரும் வாசகர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.
  • இந்த நூல் நிலையத்தில் சாதி மத வேறுபாடின்றி ஆடவர், மகளிர் யாவரும் நூல்களை எடுத்துப் படிக்கலாம்.
  • புத்தி மாறாட்டம் உள்ளோரும், தொழுநோயால் பீடிக்கப்பட்டோரும், தூயஉடையின்றி அழுக்காடை அணிந்து வருவோரும் நூல் நிலையத்திலே நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கட்கு நூல் நிலையப் புத்தகங்கள் கொடுப்பதில்லை.
  • வியாழக்கிழமை தவிர மற்றைய நாட்களில் நூல் நிலையம் திறக்கப்பட்டிருக்கும். வேறு நாட்களிலே விடுமுறை இருக்குமாயின் முன்னரே அறிவிக்கப்படும்.
  • நூல் நிலை அலுவல் நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்  8 மணி வரையிலும் நூல் நிலையம் திறக்கப்பட்டிருக்கும்.
  • நூல் நிலையம் திறந்த அரை மணி நேரம் கழித்தே படிப்போருக்குப் புத்தகம் எடுத்து அளிக்கப்படும்.
  • நாய் முதலிய செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அவைகளுடன் நூல் நிலையத்துக்குள் வரச் சிறிதும் அனுமதி கிடைக்கப்பட மாட்டாது.
  • தூங்குதல், எச்சில் துப்புதல், வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளுதல், புகை பிடித்தல் முதலியவைகட்கு நூல் நிலையத்தில் இடமில்லை.
  • படிப்பவர்கட்கு இடைஞ்சலாக இரைந்து பேசுதல், வீண் வார்த்தையாடுதல், வம்பளத்தல் முதலியன செய்தல் கூடாது.
  • படிப்பவர்கள் புத்தகத்தைப் பழுதுபடாதவண்ணம் ஒழுங்காக வைத்துக் கொண்டு படித்தல் அவசியம். புத்தகங்களோ அல்லது நூல் நிலையத்தில் உள்ள ஏனைய பொருள்களோ பழுது நேரும்படி உபயோகிக்கக்கூடாது. பழுதுபடுமாயின் நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும்.
  • நூல் நிலையத்திலே படிப்பதற்கு வருவோர்கள் தாங்கள் கொண்டுவரும் குடை, கைத்தடி முதலியவைகளையும், தமது சொந்தப்புத்தகம் முதலியவற்றையும் குறிப்பிட்ட ஓரிடத்திலே   வைத்துவிடவேண்டும். அந்தப் பொருள்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நூல் நிலையத்தாரைச் சேர்ந்ததல்ல என்பதும் அறிவிக்கப்படுகிறது.
  • நூல் நிலையத்திற்குச் சொந்தமான புத்தகங்களிலே பென்சில், பேனா முதலியவற்றால் கோடிடுதல், எழுதுதல் முதலிய எந்தச் செயலும் செய்யக்கூடாது.
  • புத்தகங்களிலிருந்து படம் முதலியவற்றை ‘டிரேஸ்’ செய்யக்கூடாது.
  • படித்தவர்கள் அதற்கெனக் குறிப்பிட்டுள்ள பட்டியலில் கையொப்பமிட்டுச் செல்லவேண்டும். புத்தகங்களை மேஜையின்மீது ஒழுங்காக வைத்தல் வேண்டும்.


1993இல் பௌத்தம் தொடர்பாக  ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய முதல்  இங்கு சென்று பல நூல்களைப் படித்துக் குறிப்பு எடுத்துள்ளேன்.  அவற்றில் பூர்வாச்சாரியார்கள் அருளிய ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரப்ரபாவம் (பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928), தமிழர் மதம் (மறைமலையடிகள், திருமகள் அச்சுக்கூடம், பல்லாவரம், 1941), தென்னிந்திய சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம், சுன்னாகம் திருமகள் அழுத்தகம், யாழ்ப்பாணம், 1941), புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் (உவேசா, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1945), பிற்காலச்சோழர் சரித்திரம் (சதாசிவப்பண்டாரத்தார், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், 1951), முதற்குலோத்துங்கசோழன் (சதாசிவப் பண்டாரத்தார், பாரி நிலையம், 1955), பூம்புகார் (புலவர் ப.திருநாவுக்கரசு, அஸோஸியேஷன் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1957), தமிழக வரலாறு (அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1958) உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.




  

தற்போது இந்நூலகம் 35,000 நூல்களைக் கொண்டுள்ளது. நூலகத்தினை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள்  கொள்ளப்பட்டுவருகின்றன. காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 8.00 வரையும் செயல்பட்டு வரும் இந்நூலகத்திற்கு வியாழக்கிழமை விடுமுறை நாளாகும். நூலக நாட்களில் நூலகத்திற்கு வந்து அங்குள்ள நூல் பட்டியலைப் பார்த்து படிக்க வேண்டிய நூலின் எண்ணை எழுதித் தந்தால் அந்நூலை படிக்கத் தந்துவிட்டு, அதற்கான எண்ணை அங்குள்ள கரும்பலகையில் எழுதிவிடுவர். தொடர்ந்து படிக்க வரும் வாசகர்கள் கரும்பலகையில் உள்ள எண்ணைக் கொண்ட நூல்களைத் தவிர பிற நூல்களை எடுக்க இவ்வசதி உதவியாக உள்ளது. வாசகர்களுக்கு ஒரு முறைக்கு இரு நூல்கள் தரப்படுகின்றன. வாசிப்பதற்கும், தேவையான குறிப்புகள் எடுப்பதற்கும் உதவியாக மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 1995இலும், 2015இலும் பார்வையாளர் குறிப்பேட்டில் நூலகத்தைப் பற்றிய எனது கருத்தை பதியும் வாய்ப்பு கிடைத்தது. கும்பகோணத்தில் இந்நூலகம் அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர மக்களின் வாசிப்புத்தேவையைப் பூர்த்தி செய்துவருகின்றது. மக்களிடையே படிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், கல்வியறிவை மேம்படுத்தவும் இந்நூலகம் செய்துவரும் பணி போற்றுதற்குரியதாகும். கோயில் நகரமாம் கும்பகோணத்திற்குப் பெருமை சேர்க்கும் இந்நூலகத்திற்குச் செல்வோம், அரிய நூல்களை வாசிக்கும் வாய்ப்பினைப் பெறுவோம், வாருங்கள். 

தமிழ் விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு

ஆங்கில விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு

புதிய பெயர்ப்பலகையுடன் காணப்படும் நுழைவாயில்
நன்றி
நூலகப் பொறுப்பாளர்களுக்கும், நூலகப் பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
திரு எஸ்.தயாளன், நூல் நிலையத் தலைவர் (அலைபேசி 9486407156)
திரு கோ.மாறன், பொருளாளர் 
திரு எஸ்.சோமசுந்தரம்,  நூலகர் (0435-2427156) 
திரு எஸ்.சண்முகம், கணினி உதவியாளர்

22 செப்டம்பர் 2016 தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க பின்வரும் இணைப்பை சொடுக்கலாம்.




என் பள்ளிக்காலம் தொடங்கி, ஆய்வுக்காலத்தில் தொடர்ந்து நான் சென்று வருகின்ற, என் எழுத்திற்குத் துணை நிற்கின்ற கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு என் புதிய நூலை (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து Manonmani Pudhuezuthu காவேரிப்பட்டிணம் 635 112, 2022, அலைபேசி +91 9842647101, +91 6374230985) வழங்கிய இனிய தருணங்கள். (ஒளிப்படத்தில் நூல் நிலையத்தலைவர் எஸ்.தயாளன், நூலகர் சரண்யா)

23 நவம்பபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

10 September 2016

நலம், நலமறிய ஆவல் : எஸ் வி வேணுகோபாலன்

தி இந்து நாளிதழின் வாசகர் என்ற நிலையில் அறிமுகமானவர் திரு எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள். நாளிதழ்களிலும் எனது வலைப்பூக்களிலும் வெளியாகும் எனது கட்டுரைகளைப் படித்து கருத்து கூறுவார். நானும் அவரது எழுத்துகளை தி இந்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) இதழ்களில் வாசித்து எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து அவர் எழுதிய நூல்களை மார்ச் 2016 வாக்கில் அனுப்பிவைத்திருந்தார். நூல்களைப் பெற்ற உடனே படித்துவிட்டாலும் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு தற்போதுதான் கிடைத்தது. அந்நூல்களைப் பற்றிச் சுருக்கமாக அறிவோம், வாருங்கள்.

அவருடைய நான்கு நூல்களும் உடலைப் பாதுகாக்கவேண்டிய முறையையும், முக்கியத்துவத்தையும் மிகவும் எளிதாக எடுத்துக் கூறுகின்றன. இந்த நான்கு நூல்களுமே மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் அவர்களுடைய ஆலோசனைக் குறிப்புகளை உதவியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அல்சரே வராதே அருகினில்!, கொதிக்காதே என் ரத்தமே, நீரிழிவு இழிவல்ல, இரும்பை விரும்பு, எலும்பே எலும்பே தேயாதே, கண்ணே என் கல்லீரலே, (காலைக்) கடன்பட்டார் நெஞ்சம் போல, தோல் காப்பியம், இதயம் : உண்மையான எந்திரன், கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன் என்ற நிலையில் உள்ள உட்தலைப்புகள் வாசகர்களின் ஆவலை மேம்படுத்தி விடும். 

நலம், நலமறிய ஆவல்
நோய்த்தடுப்பு அம்சங்களைச் சுருக்கமாக இந்நூல் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார் ஆசிரியர். அந்தந்தப் பகுதியில் அந்தந்த உணவு வகையை எடுத்துக்கொள்வது இயற்கையோடு நம்மை இயைபு கொள்ளவைக்கும் (ப.6), கொலஸ்டிரால் கூடவே கூடாது என்ற தப்பெண்ணம் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது (ப.10), உபரி அளவு கொழுப்பைத் தவிர்த்தால் போதும், அதிகமான மாவுப்பொருள்களைத் தவிர்த்துவிடுவதும் நல்லது (ப.13), BPயில் சாதாரணமான ஏற்ற இறக்கங்களுக்காக அதன் காரணங்கள் புரியாமல் பீதி அடைவது தேவையற்றது (ப.17), ஒட்டாத தோசைக்கல் எப்படி இரும்புச்சத்தைத் தரும்? (ப.21) என்பன போன்ற கருத்துகள் நாம் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டியவை.  

உடலும் உள்ளமும் நலம் தானா?
முந்தைய நூலைப் போலவே இந்நூலும் அச்சத்திற்கு பதிலாக அக்கறையைப் பேசுகிறது என்கிறார் நூலாசிரியர். சர்க்கரை பிரச்சனை, நோய் அல்ல. ஒரு சமன்பாடு தவறிய நிலை. அவ்வளவுதான் (ப.7),  உறக்கத்தைத் தவிர்க்க மாத்திரைகள் போடுவது தவறானது (ப.22), கிராமங்களில் உளுத்தங்களி செய்து கொடுப்பது புரோட்டீன் சத்துக்காகத்தான். பெண் குழந்தைகள் தானிம், பயறு வகைகளில் தான் தங்கள் உடல் நலத்தைத் தேட முடியும். சோயா பீன்ஸ் மட்டும் கூடவே கூடாது (ப.31), மாதவிடாய் காலத்திலும், மெனோபாஸ் சமயத்திலும், பெண்ணுக்குள் ஏற்படும் உளச்சோர்வும் உளைச்சலும் எழுத்தில் கொண்டுவர முடியாதது. கருப்பை அகற்றுதல் அவளை கூடுதலாகவே உளரீதியாகப் பாதிக்கும் (ப.37) என்ற நிலையில் தேவையான இடங்களில் எச்சரிக்கையாகவும், புரிந்துகொள்ளும் நிலையிலும் வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை. 

எல்லோரும் நலமுற்றிருக்க...
விவரமறிந்த தாய்மார்கள் குழந்தையை மடியில் நீளவாக்கில் படுத்தமேனிக்கு வைத்து பாலூட்டுவதில்லை. தலைப்பாகத்தைச் சற்று உயர்த்திக் கையணைப்பாக வைத்துப் பிடித்துக்கொண்டு குழந்தையைப் பாலருந்த வைக்கிறபோது, காற்று அதிகம் உட்புக விடாமல் செய்தபடி தேவையான அளவிற்குப் பாலை ஆசைதீர உட்கொள்ளுகிறது குழந்தை (ப.11), ஏப்பம் பந்தால் சலிக்கவும் வேண்டாம். அதை ஒரு அன்றாட நடவடிக்கையாக வைத்துக்கொண்டிருக்கவும் வேண்டாம். தவிர்க்க முடிந்தால் தவிர்த்துவிடுவது அல்லது தானாக ஏற்பட்டால் அனுமதித்துவிடுவது என்று பழகலாம் (ப.13), தலைவலி வந்தால் உடனே நிவாரணி என்று மாத்திரைகளை அடுக்கிக் கொண்டு போவது நாள்பட நாள்பட வேறு தீவிர பிரச்சனைகளை உருவாக்கும் (ப.18), உடலின் செல்கள் ஒவ்வொன்றிற்கும் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்ற மூன்று பருவங்கள் உண்டு. பழையன கழிதலும், புதியன புகுதலும் சங்கிலித் தொடராக நிகழ்கிற வரை பிரச்சனை இல்லை. இந்த ஒழுங்கமைவுத் தன்மை சிதைந்து செல்கள் கன்னாபின்னாவென்று பெருகுவது அல்லது வளர்ச்சி முடமாகிப்போவது என்பதுதான் கேன்சர் (ப.46) என்றவாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே
மஞ்சட்காமாலை என்பது நோயல்ல, கல்லீரல் நோயுற்று இருப்பதன் அறிகுறி. விதவிதமான நோய்கள் கல்லீரலின் பாதிப்பை வெளிப்படுத்தக்கூடும் (ப.10), ஆண் குழந்தைகளுக்கு 14-16 வயதுக்கட்டமும், பெண் குழந்தைகளுக்கு 12-14 வயதுக்காலமும் வீச்சான வளர்ச்சி காணும் பருவம். இந்த நேரத்தில் அவர்கள் பச்சைக்காய்கறிகள், கனிவகைகள் போன்வற்றை உவப்போடு உண்ணவேண்டியது அவசியம் (ப.15), காலைக்கடன்களை முடிக்க அவரவருக்குரிய திட்டப்படி செயல்படுவதில் தவறில்லை. இது குடல் தன்னை தகவமைத்துக்கொள்ள உதவும். (ப.21), வைட்டமின் D பற்றாக்குறை இருக்கும்போது நாம் எவ்வளவு கால்சியம் சேர்த்துக்கொண்டாலும், கால்சியம் மாத்திரைகளாகவே உட்கொண்டாலும் அதை உடல் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பது இயற்கையின் நுட்பமான அம்சம் (ப.25), மண்டை வெடிக்கும் வரை, சன் ஸ்ட்ரோக் வரும் வரை வெயிலில் அலையவேண்டாம், நியாயம்தான்,ஆனால் வெயில் படாத திருமேனி என்ற பட்டம் நமக்கு எதற்கு? (ப.28). நாம் பராமரிக்கும் அளவே உடல் நமக்கு உதவும் என்ற நிலையிலான கருத்துகள் தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

விழிப்புணர்வினை உண்டாக்கும் கருத்துகள்
இந்த நான்கு நூல்களிலும் ஆங்காங்கே நமக்கு விழிப்புணர்வினைத் தரும் அளவிலான கருத்துகளையும், யதார்த்தத்தையும், திருத்திக்கொள்ளும் வழிகளையும் ஆங்காங்கே தந்துள்ளார் நூலாசிரியர். நம்மை வைத்து பணம் பண்ண முயல்வோரைச் சாடுகிறார். சுகாதாரமும் கல்வியும் சுதந்திர இந்தியாவின் பட்ஜெட்டில் எப்போதும் முன்னுரிமை பெறவில்லை (நலம், ப.4), தேவையற்ற பயத்தை பணமாக்கத்தான் போட்டி விற்பனையாளர்கள் கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் என்று விளம்பரம் செய்கின்றனர் (நலம், ப.11), 'நார்மல்' பிரசவம் நடக்கக்கூடியதை 'சிசேரியன்' ஆக்குவது வன்முறைதானே? (உடலும்..நலம்தானா, ப.7), அணைத்த அடுப்பில் அஞ்சு நாள் சமைக்கலாம் போல தீ, தீ என்று எரிகிற தீயின் உச்சபட்ச வெப்பத்தில் திணறத்திணற உருவாகிறது வேக உணவு (Fast Food) (உடலும்..நலம்தானா, ப.12), உணவுக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்தால், உடல் அசர வேலை செய்தால் தொப்பை தானே கரையும். எதற்கு காசு கொடுத்து பெல்ட், ஸ்டிக்கர், வைப்ரேட்டர் என்று வாங்கி ஏமாற வேண்டும்? அது விளம்பரக் கம்பெனி ஆசாமிகளது தொப்பைக்குத்தானே போகும்? (உடலும்..நலம்தானா, ப.16), பொதுவாக ஓட்டல் சாம்பாரிலும், இதர உணவுப்பொருள்களிலும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அது உணவுப்பொருள்கள் கெடாமல் இருப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் அதிகம் சாப்பிட இயலாதவாறு இருப்பதற்குமான பிரத்தியேக ஏற்பாடு (எல்லோரும்..ப.23), மாற்று சிறுநீரக விவகாரம் மோசடியாகவும், சட்ட விரோதமாகவும் நடக்கிறது....பாதிப்புற்ற நோயாளியைவிடவும் அவருக்கான சிறுநீரகம் வழங்கும் முன்பின் அறிமுகம் இல்லாத கொடையாளரைவிடவும் இடையில் தரகுவேலை செய்வோர் அடையும் லாபமே அதிகம். நெறியற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட இத்தகைய நீசச்செயலில் இறங்குவோரின் கொள்ளை லாப வெறியில் என்னென்ன அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதும் தெரியும் (எல்லோரும்..ப.24), சுரங்கங்களிலும் நச்சு வேதியல் கழிவுகளுக்கிடையில் பணியாற்றவேண்டிய இடங்களிலும் தொழிலாளியின் மூச்சுப்பாதைக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டியதைப் பெரும்பாலும் எஜமானர்கள் எவரும் மதிப்பதில்லை. அவர்களது நுரையீரல் படும் பாடு சொல்ல முடியாதது (எல்லோரும்..ப.28), மலம் கழிப்பதைப் பற்றிப் பேச மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிற சமூக நிலையை என்னவென்று சொல்வது?    (உடலும் உள்ளமும்..ப.20)

இந்த நூல்கள் படிப்பதற்கு மட்டுமல்ல. பாதுகாப்பதற்கும் கூட. தேவையானபோது அவசரத்திற்கு வீட்டில் உள்ள ஒரு மருத்துவராக இந்நூல்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வீட்டுப் பாட்டியைப் போல புத்தி சொல்லும் பாங்கு, அனாவசியமாகப் பயந்து மனதைக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்ற நிலையில் நமக்குத் தரும் மனத் தைரியம், நமக்கு நாமே மேற்கொள்ளும் உணவு முறையும் உடற்பயிற்சியும் நம் வாழ்விற்கான ஆதாரம் என்ற நிலையில் எடுத்துக்கூறும் பக்குவமான போக்கு என்ற நிலையில் பல கோணங்களில் நூலாசிரியர், மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கியுள்ளார். மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி கூறி, ஆரோக்கியமான மன நிலையையும், உடல் நிலையையும் வைத்துக்கொள்வதற்காக நூலாசிரியர் கூறியுள்ள கருத்துகளைச் சற்றே உணர்ந்து, புரிந்து, கடைபிடிக்க முயற்சிப்போம், பலன் பெறுவோம். 

நோயர் (நேயர்) விருப்பம் என்ற தலைப்பிலான டாக்டர் ஜி.ராமானுஜம் அவர்களின் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் "நிலத்தடி நீரைத் தொலைத்த தலைமுறையினர் லாரிகளில் தண்ணீர் வரக் காத்திருக்கிறோம். மருத்துவம் ஜி.ராமானுஜம் அப்படி துணுக்குகளை சப்ளை செய்து சிரிக்க வைக்காமல், நமது கேணியில் ஊறிக்கொண்டிருக்கும் கல்கண்டு நீரை நாமாக எடுத்து அருந்திக் கொண்டாடக் கற்கும் வண்ணம் எழுதுகிறார். மனநல மருத்துவராக இருக்கும் அவர், நம் கேட்காமலே எழுதித்தரும் பிரிஸ்கிருப்ஷன், மனம் விட்டுச் சிரியுங்கள் என்பதுதான்". நூலாசிரியரோ நகைச்சுவை உணர்வு ததும்ப "இந்நூலை என்னை நம்பி உடலையும், மனதையும் ஒப்படைத்த நான் குணமாக்கிய/மோசமாக்கிய நோயாளிகள் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறேன்" என்கிறார். வாருங்கள், நகைச்சுவையை ரசிக்க இந்நூலையும் படிப்போம். 

நலம், நலமறிய ஆவல் (ரூ.20)
உடலும் உள்ளமும் நலம் தானா?  (ரூ.25)
எல்லோரும் நலமுற்றிருக்க... (ரூ.25)
உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே  (ரூ.30)
நோயர் (நேயர்) விருப்பம் (டாக்டர் ஜி.ராமானுஜம்) (ரூ.50)

பாரதி புத்தகாலயம், 7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com/www.thamizhbooks.com

03 September 2016

தமிழ்ப்பல்கலைக்கழக நூற்கொடை இயக்கம் : 500 நூல்கள் அன்பளிப்பு

தமிழ்ப்பல்கலைக்கழகம் 35ஆம் ஆண்டை நிறைவு செய்யும் (14 செப் 2016) இனிய வேளையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 35ஆம் ஆண்டில் அடியெடுத்து (16 ஆகஸ்டு 2016) வைத்துள்ளேன். நூற்கொடை இயக்கத்தில் இதுவரை 500 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.  
தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடம்
முந்தைய பதிவில் நான் கூறியதைப் போல நானும், என் குடும்பத்தாரும், நண்பர்களும் படித்த, எங்கள் இல்ல நூலகத்தில் இருந்த நூல்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணமே நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நூல்களை வழங்க உதவியாக இருந்தது. 

தமிழ்ப்பல்கலைக்கழக நூலகக்கட்டடம்
தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு இலக்கியம், தத்துவம், கலை, பொருளாதாரம், மேலாண்மையியல், கதை, கட்டுரை, கவிதை, கருத்தரங்கத் தொகுப்பு, கோயில் தல புராணம், நீதி நூல், சங்க இலக்கியம், ஆங்கில இலக்கணம், பொது அறிவு, பேச்சு ஆங்கிலம், தமிழ்ச்சுருக்கெழுத்து, ஆங்கிலச் சுருக்கெழுத்து உள்ளிட்ட  நூல்களையும், தினமணி புத்தாண்டு மலர், மாத இதழ்களின் சிறப்பு மலர்கள், The Hindu இணைப்பாக வெளியிட்ட Folio  (supplement to The Hindu, Nov 1996-Sep 1997) வழங்கியுள்ளோம். அவற்றில் கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ள   நூல்கள் அடங்கும். 
எங்கள் இல்ல நூலகத்தில் நூல்கள்
அட்லாஸ்
  • Oxford Student Atlas for India, OUP
  • The Concise Orient Longman School Atlas, Orient Longman
அகராதிகள்
  • Concise Oxford Dictionary, 1983
  • Cambridge International Dictionary of English, 1996
  • Oxford Senior Learner's Dictionary, 2001
  • English-Tamil Dictionary, University of Madras, 1988
  • அருங்கலைச்சொல் அகரமுதலி, தமிழ்ப்பல்கலைக்கழகம், 1992
  • சட்டத்தமிழ் அகராதி, தமிழ்ப்பல்கலைக்கழகம், 2001
  • மருத்துவக்கலைச்சொற்கள், சாமி.சண்முகம், 1990 
வரலாறு/கலை
  • பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு.பவுன்துரை
  • தமிழ்ப்பெரியார்கள், வ.ரா,
  • Literary History in Tamil, Karthikesu Sivathambi
  • தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீனாட்சிசுந்தரன், (மொ.பெ.), 2000
  • நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் வரிசை, பழனியப்பா பிரதர்ஸ்
  • Bronzes of South India, P.R.Srinivasan, 1994 (Revised edition)
  • Amaravathi sculptures in the Chennai Government Museum, C.Sivaramamurti,1998
  • Care of Archival materials, V.Jayaraj, 1999
சமயம்
  • பன்னிரு திருமுறை வரலாறு, வெள்ளைவாரணன், 2 தொகுதிகள்
  • திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நூல்கள்
  • காசியில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகள்
  • வாரியார் அமுதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், 2000
  • முதல் ஏழு திருமுறைகள் மற்றும் திருவாசகம் உரையுடன், சதுரா, 2008 
  • திருவாசகம், ராஜராஜ சமய சங்கம், 2003
  • சமயம் வளர்த்த சான்றோர்கள் வரிசை, பழனியப்பா பிரதர்ஸ்
  • Hindu speaks on Religious Values, 1999
  • கீதைப்பேருரைகள், ஆச்சார்ய வினோபா பாவே
  • பகவத் கீதா, 1999
  • முப்பொருள் விளக்கம், தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர் 1911 (மறுபதிப்பு), களப்பாள் குமரன்
ஆண்டு/ஆயிரமாண்டு நூல்கள் 
  • மனோரமா இயர்புக் 
  • தினமலர் இயர்புக்
  • Manorama Year Book
  • A Millennium Book of Reference, India 1000 to 2000
  • India Book of the Year 2003 (Encyclopaedia Britannica & The Hindu)   
  • India Book of the Year 2004 (Encyclopaedia Britannica & The Hindu)  
வரலாற்றுப்புதினம்
  • சிவகாமியின் சபதம், கல்கி

பிற மொழி நூல்கள்
  • ஸம்ஸ்கிருத பாரதி, ராஜபாளையம்
  • சுலபமாக நீங்களும் இந்தியில் பேசலாம்
  • Agasthiar Hindi-Hindi-Tamil-English Dictionary, 1997
  • Sanmskritasri, Patamala I and II, Sanskrit-English
  • 30 நாள்களில் கன்னட பாஷை
மகாமகம் 
  • மகாமகம் 2014 இந்தியா டுடே, தினத்தந்தி, கல்கி இதழ்கள் 
  • மகாமகம் 2016 சிறப்பு மலர், சரசுவதி மகால் நூலகம், 2016

எனது ஆய்வேடுகள்/நூல்கள்
  • Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995
  • சோழ நாட்டில் பௌத்தம், 1999
  • Buddhism in Cola country, Nehru Trust for the Indian Collections at the VA Museum, New Delhi, 2002, Project
  • வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு), 2001
  • Judgement Stories of Mariyathai Raman, (Tr), NCBH
  • Tantric Tales of Birbal, (Tr), NCBH
  • Jesting Tales of Tenali Raman, (Tr), NCBH
  • Nomadic Tales from Greek (Tr), NCBH 
  • படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ், 2004
தமிழ்ப்பல்கலைக்கழக நூல் கொடை இயக்கம்
நவம்பர் 2015இல் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழத்துடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான நேரடித்தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நூலை அளித்து பல்கலைக்கழகத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் அதன்மூலம் லட்சக்கணக்கான நூல்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்து, நூல் கொடை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நூல்களில் கொடையாளர்களின் பெயர்கள் எழுதப்படும் என்றும் 100க்கு மேல் நூல் அளிப்பவர்களின் பெயர் நூலகப்பெயர்ப்பலகையில் குறிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தற்போது 1,70,327 நூல்களும், 275 காலமுறை இதழ்களும் உள்ளன. இதில்  26,787 நூல்கள் மறைந்த மற்றும் வாழும் அறிஞர்களின் வீடுகளைத் தேடிச் சென்று பணம் கொடுத்தும், அன்பளிப்பாகவும் பெறப்பட்டவையாகும். இதில் 18,000 அரிய நூல்கள் உள்ளன. 
அறிவுக்கொடையாக 1 இலட்சம் நூல்களைப் பெற  தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். தானத்தில் சிறந்தது அறிவு தானம். நீங்கள் படித்து, பயன்படுத்திய நூல்களைக் கொடையாகத் தர பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வேண்டுகோளை மறுபடியும் உங்கள் முன் வைக்கிறேன்.  தொடர்புக்கு துணைவேந்தர் செயலகத் தொலைபேசி எண்.04362-227040இல் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு 300 நூல்கள் அன்பளிப்பு வழங்கிய விவரத்தை 26 மார்ச் 2016 நாளிட்ட பதிவில் காணலாம். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் 200 நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழங்கவுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 20.9.2016 வரை வழங்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை : 525

While entering into service of Tamil University on the 35th year I feel happy to share that I have so far donated 500 books to Tamil University which completes its 35th year.

20.9.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.