28 October 2016

The Hindu : 40 வருட வாசிப்பு

The Hindu இதழின் வாசகன் என்ற நிலையில் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகள் : 
  • நீங்கள் பள்ளிப்படிப்பு முதல் ஆங்கில வழியாகப் படித்தீர்களா? 
  • ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி என்ற நூலை முறைப்படி படித்தீர்களா? 
  • ஆங்கிலம் பேசுவது எப்படி என்ற வகுப்பிற்குச் சென்றீர்களா? 
  • நீங்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தீர்களா? 
அனைத்துக் கேள்விகளுக்கும் என் பதில் இல்லை என்பதே. கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தினமணி இதழினை வாசித்து வருகிறேன். மூன்று மகாமகங்களுக்கு மேலாக The Hindu தழின் வாசகன் என்ற நிலையில் எனது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

1976-79 
கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் (ஆங்கில வழி) படித்த காலத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தட்டச்சில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து ஆங்கிலச் சுருக்கெழுத்தில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டருகில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு சாரங்கபாணி என்பவர் எனக்கு The Hindu இதழிலிருந்து சுருக்கெழுத்துப் பயிற்சி தந்தார். அதிகமான சொற்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், சுருக்கெழுத்தின் பயிற்சியும் என்னை  The Hindu நாளிதழின் வாசகனாக்கியது. 1976இல் வாசிப்பின் முதல் நிலையாக அது எனக்கு அமைந்தது.

பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியபடி,  படிக்க ஆரம்பித்தபோது பாடங்களில் வரும் Inflation, Deflation, Economy, Fiscal, Budget, Monetary போன்ற  சொற்கள் The Hindu நாளிதழில் இருப்பதைக் கண்டேன். பாடத்தில் படிக்கும் சொற்களான தேடலானது வாசிப்பின் இரண்டாவது நிலையானது. தினமும் இடம்பெறும் இன்றைய நிகழ்ச்சிகளில் (Engagements) தொடங்கிய வாசிப்பு நிலை பின்வருமாறு பல படிநிலைகளைக் கடந்தது. 
  • முதலில் இன்றைய நிகழ்ச்சிகள், உள்ளூர் நடப்புகள், விழா நிகழ்வுகள்
  • வாசகர் கடிதங்கள்
  • சுதந்திர/குடியரசு நாள்களில் குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர்  விடுக்கும் வாழ்த்துச் செய்திகள்
  • பிற நிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் அரசியல் தலைவர்களின் பேச்சுகள் 
  • தலையங்கம், தலையங்கப் பக்கம், தலையங்க எதிர்ப்பக்க கட்டுரைகள்
  • பொருளாதாரம், கலை, அறிவியல், ஆன்மீகம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் என்ற நிலைகளில் அனைத்து தரப்பிலான கட்டுரைகள்
1980-2016 
கல்லூரிப்படிப்பு முடிந்து சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த பின்னரும் வாசிப்பானது தொடர்ந்தது. படிக்கும்போது கீழ்க்கண்ட உத்திகளை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.   
  • வித்தியாசமான சொல்/சொற்றொடரின் அமைப்பு, பயன்பாட்டை உற்றுநோக்கல்
  • புதிய சொற்களுக்கான பொருளை அகராதியில் தேடல்
  • இறந்த காலத்திலேயே செய்திகளும் கட்டுரைகளும் வரும் நிலையில் நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் என்பதற்கான வேறுபாட்டினை உணர்தல்
  • வெளிநாட்டுச் செய்திகளைப் படிக்கும்போது நாட்டின் பெயரையும், அந்தந்த தலைவர்களின் பெயர்களையும் மனதில் கொள்ளுதல்      
  • அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளில் கையாளப்படும் கலைச்சொற்களை அடையாளம் காணுதல்
  • எழுத்துருக்கள் (fonts), பக்க வடிவமைப்பு, பெட்டிச்செய்தி, படத்துடன் செய்தி என்ற நிலையில் செய்திகள் வழங்கப்படும் விதத்தை ஆராய்தல்
  • கோயில், சுற்றுலா பற்றிய கட்டுரைகளை ஆர்வமாக வாசித்தல்
ஒரு புறம் வாசிப்பு என்ற நிலை இருந்தாலும், நண்பர்களிடமும் பிறரிடமும் பேசும்போது அன்றாடம் காணப்படும் புதிய சொற்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தேன். இதே காலகட்டத்தில் நண்பர்கள், அறிஞர்கள் பேசும்போது அவர்களின் பேச்சு முறையை கவனிக்க ஆரம்பித்தேன். அலுவலகத்திலும், பிற இடங்களிலும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படும் நிலையில் அதன் பொருளை அறிய ஆரம்பித்தேன். பல புதிய சொற்களை அறிந்துகொள்ள இந்த உத்தி உதவியது.  
  • Yea/Yeah (1976-79இல் கும்பகோணம் கல்லூரியில் படித்தபோது எங்கள் ஆசிரியரிடம் வகுப்பு நண்பர் ஒருவர் அப்போது வெளிவந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடிப் பயன்படுத்தும் "ய்யா.." என்ற சொல்லுக்கான பொருளைக் கேட்க, அவர் அதற்கான பொருளையும் உச்சரிப்பையும் கூறினார்).
  • Partake (Part+take என்பதன் இணைப்பு. 1979-80இல் தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தில் நான் பணியாற்றியபோது அதன் மேலாளர் ஒரு நிகழ்ச்சிக்கு வரஇயலா நிலை குறித்து பயன்படுத்தியது).
  • Etiquette (பண்பாடு, நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம் என்ற நிலையில் எவ்வாறு முறையுடன் பழகவேண்டும் என்பதை உணர்த்துவது.சென்னையில் 1980இல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அறிந்தது).
  • You should speak pregnant words (1980-82இல் கோயம்புத்தூரில் பணியாற்றியபோது ஓய்வு நேரத்தில் ICWA வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பெடுத்த ஆசிரியர்களில் ஒருவர் அடிக்கடி இச்சொற்றொடரைப் பயன்படுத்துவார், பொருள் பொதிந்த வார்த்தைகளே பேசுங்கள், என்பார்)
  • Vicissitude (1980களின் இறுதியில் மேதகு ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தபோது அவர் பயன்படுத்திய பல சொற்களில் என் மனதில் நின்ற புதிய சொல்).
  • Epilogue/Prologue (தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 1985வாக்கில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய Literary History in Tamil என்ற நூலைத் தட்டச்சு செய்தபோது அறிந்துகொண்ட புதிய சொற்கள். அவர் அதற்கான பொருளை விளக்கினார்).
  • Fool's cap (தாளை மடித்தால் முட்டாளின் தொப்பி என்ற நிலையில் அமையும்) என்பது சரி Fullscape என்பது தவறு. 
  • Caesarian operation (Julius Caesar முதன்முதலாக அந்த முறையில் பிறப்பிக்கப்பட்டதால் அப்பெயரே அமைந்த நிலை).
இவ்வாறான நிலையில் The Hindu நாளிதழில் அவ்வப்போது வந்த பல சொற்களும், சொற்றொடர்களும் என் மனதில் பதிய ஆரம்பித்தன.  அவற்றில் சிலவற்றைக் காண்போம். 
  • இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி சுடப்பட்டபோது The Hindu நாளிதழில் அச்செய்தி "Indira Gandhi assassinated" என்ற தலைப்பில் வெளியானது. Indian Express நாளிதழில் "Indira Gandhi shot dead"  என்ற தலைப்பில் வெளியானதாக நினைவு. "Assassinated" என்ற சொல்லுக்கான பொருளை அகராதியில் பார்த்தேன். அதற்கு முன்பாக அன்வர் சதத் (1981), மார்ட்டின் லூதர் கிங் (1968), கென்னடி (1963), மகாத்மா காந்தி (1948) கொல்லப்பட்டபோது இச்சொல் பயன்படுத்தப்பட்டதை அறிந்தேன்.   
The Hindu, Madurai, Thursday, November 1, 1984
  • Mumtaj would have gone into the footnotes of history but for Taj Mahal (தாஜ் மகாலைப்பற்றிய ஒரு தலையங்கத்தில் தாஜ்மகால் மட்டும் இல்லாமல் போயிருந்தால் மும்தாஜ் வரலாற்றின் அடிக்குறிப்புகளில் மட்டுமே காணப்பட்டிருப்பாள்).
  • US is making efforts to dehyphenate the hyphenated relationship of India and Pakistan (இந்தியா பாகிஸ்தான் உறவை சரிசெய்ய அமெரிக்கா எடுக்கும் முயற்சி).
  • 50 years on, scars remain (ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டு 50 ஆண்டு நினைவாக 1995இல் வெளிவந்த செய்தியின் தலைப்பு).
  • Pilgrim's progress (கைலாய மலைக்கு பக்தர்கள் வரிசையாகச் சென்ற நிகழ்வுக்கு அமைந்த தலைப்பு).
  • Elephantine task (நீலகிரி முகாமுக்கு யானையை லாரியில் ஏற்றிச்செல்லும்போது அமைந்திருந்த புகைப்படத்திற்கான தலைப்பு).
  • Tigerish resolve (புலிகளைப் பாதுகாக்க பிரதமர் உறுதியான முயற்சி).
  • Towering inferno (ஒரு கட்டடம் பற்றி எரியும்போது/இந்த தலைப்பில் ஓர் ஆங்கிலப்படம் பார்த்துள்ளேன்). 
  • We need not shed crocodile tears (முதலையின் எண்ணிக்கை குறைந்துவருகிறதே என கவலைப்படவேண்டாம், எண்ணிக்கையைப் பெருக்க திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்ற நிலையிலான செய்தி). 
  • I have faced many battles, I will win the war (ஒரு அரசியல்வாதி தனது அரசியல் வாழ்க்கையைப் பற்றிப் பேசியது).
  • I want a full stop to be placed to this problem, no more commas. (ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் பிரச்சினையைப் பற்றி ஓர் அரசியல் தலைவர் பேசியது).
  • I will change the history of India and geography of Pakistan (மத்திய அமைச்சர் ஒரு குறிப்பிட்ட சூழலில் பேசியது).
  • By finding an everlasting solution to the Kashmir problem, I want my name be entered in the history books (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஒரு பேட்டியில் கூறியது).
  • Metamorphosis (மகாவீரரை, அம்மனாக மாற்றி வழிபடும் நிலை என்ற செய்திக்கான தலைப்பு).
  • Pencilled (நாடாளுமன்றத் தேர்வில் ஒரு வேட்பாளருக்கான பெயர் விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டு உறுதி செய்யப்படா நிலையில் இச்சொல் பயன்பாடு).
  • Dealing the Deal, How to deal with the Deal?, Deal without deal, Dealing the Deal (இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட சொற்கள்).
  • Abdul Kalam is wedded with good principles (குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் குணத்தைப் பற்றிய சொற்றொடர்).
  • Emphasis added (ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ அதன் முக்கியத்துவம் கருதிக் கூறும்போது அடைப்புக்குறிக்குள் காணப்படும் சொற்றொடர்)  
படிக்கத் துவங்கிய காலத்தில் இதழைப் பார்க்கவே யோசித்த, பயந்த நான் தற்போது 30 முதல் 45 நிமிடங்களுக்குள் தினமும் (Sports  பக்கங்கள் மட்டும் எனக்கு ஈடுபாடு இல்லாத நிலையில் அதை விடுத்து) வாசித்து விடுகிறேன். ஐயம் ஏற்படும் நிலையில் இன்னும் அகராதியை ஒப்புநோக்குகிறேன். அன்று முதல் இன்று வரை அலுவலகத்திலும், இல்லத்திலும் என் அருகிலேயே அகராதிகளை வைத்துள்ளேன். 40 வருட வாசிப்பு என்னை அடுத்த நிலைக்கு உயர்த்தியது. 
  • Know your English, Letters to the Editor மற்றும் Letters to the Reader's Editor என்று பல நிலைகளில் கடிதம் எழுதுதல்.
  • The Hindu இதழில் வெளியாகும் இணைப்புகளை வாசிக்க ஆரம்பித்தல் (குறிப்பாக Friday Review போன்றவை).
  • வெளிநாட்டு இதழ்கள் பற்றிய அறிமுகம்.
  • Frontline இதழ் அறிமுகமாகி வாசகனாதல்.
  • 20.3.1997இல் லண்டனிலிருந்து வெளிவரும் The Sun இதழை அனுப்பக் கூறி அவ்விதழினைப் பெற்று, பின் அதைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு 17.4.1997இல் நன்றி தெரிவித்தேன். 84 பக்கங்கள் கொண்ட அவ்விதழ் tabloid வடிவில் இருந்தது.
  • அத்துடன் தொடர்ந்து Guardian, New York Times, Dawn மற்றும் பல இதழ்களை இணையத்தில் அவ்வப்போது வாசிக்க ஆரம்பித்தல். 
  • அவ்வப்போது காணும் புதிய  சொல்/சொற்றொடரின் பயன்பாடுகளைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்தல்.
எங்கள் மூத்த மகன் பாரத், இளைய மகன் சிவகுரு இருவருக்கும் இவ்விதழை வாசிக்கக் கற்றுக்கொடுத்தேன். இதழைப் படிக்கத் தனியாக நேரம் ஒதுக்கினேன். வாசிப்பின்போது என் மனைவி பாக்கியவதி உடன் இருந்து சந்தேகங்களைக் கேட்பார். தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்த மகன்களை கடிதம் எழுதவும் பழக்கப்படுத்தினேன். அவர்கள் எழுதிய கடிதங்கள் இவ்விதழில் வெளிவந்தன. மேலும் The Hindu இதழை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துப் படிக்கும் அளவிற்கு இருவரும் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள்.    

The Hindu இதழின் வாசிப்புப்பழக்கமானது மொழி நடை, பயன்பாடு, உத்தி, அமைப்பு, ஒப்புநோக்கல் புதியனவற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்பன போன்ற பல நிலைகளில் என்னை உயர்த்தியுள்ளதை அனுபவத்தில் கண்டுள்ளேன். இவ்விதழில் வெளியான எனது கடிதங்களைப் பற்றியும், பிற அனுபவங்களைப் பற்றியும் மற்றொரு பதிவில் காண்போம்.         

22 October 2016

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்

பிற்காலச் சோழர் காலத்தின் ஒரே கலையமைப்பு கொண்ட கோயில்களாக தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களைக் கூறுவர். இந்நான்கு கோயில்களின் விமானமும் சற்றொப்ப ஒரே மாதிரியாகக் காணப்படும்.  தமிழகத்தில் அவசியம் காணவேண்டிய கோயில்களில் இந்த நான்கு கோயில்களும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இந்த நான்கு கோயில்களுக்கு பல முறை தனியாகவும், குடும்பத்துடனும் சென்றுள்ளேன். அவ்வரிசையில் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த பின்னரும், சினம் குறையாது ஆர்ப்பரித்த நேரத்தில் மூவுலகமும் நடுங்கியதாகவும், அப்போது சர்வேஸ்வரன், சரபமூர்த்தியாகத் தோன்றி, நரசிம்மத்தின் ஆவேசத்தை அடக்கி, அனைவரின் நடுக்கத்தையும் தீர்த்து வைத்ததாகவும், அதனடிப்படையில் நடுக்கம் தீர்த்தநாதர் எனப் பொருள்படும் கம்பகரேஸ்வரர் எனப் பெயர் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது.   இத்தகைய பெருமை பெற்ற கோயிலின் ஏழு நிலை ராஜகோபுரம் நம்மை ஈர்க்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. 
ராஜகோபுரத்திற்கும் முன் மண்டபத்திற்கும் செல்லும் இடையேயுள்ள இவ்விடத்தில் நடந்துசெல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. 
அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகிய சிறிய கோபுரம் உள்ளது. அங்கிருந்து மூலவர் உள்ள கருவறைக்குச் செல்லும் வழி நீண்டு காணப்படுகிறது. மூலவரைப் பார்ப்பதற்கு முன்பாக இந்த தூண்களைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆவல் நமக்கு இயற்கையாக வந்துவிடும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வகையில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.




கருவறையின் முன்புறம் அழகான வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் காணப் படுகின்றன. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் தூண்களிலிருந்து சற்றே மாறுபட்ட வடிவில் இவை உள்ளன. மூலவரை வணங்கிவிட்டு மூலவர் சன்னதியின் வலப்புறம் வழியாக வெளியே வந்தால் யானை இழுத்துச் செல்லும் நிலையிலான அமைப்பில் மண்டபம் உள்ளதைக் காணமுடிகிறது. திருக்களிற்றுப்படியில் இறங்கி மண்டபத்தைச் சுற்றி வரும்போது மிக நுணுக்கமான சிற்பங்களைக் காணமுடிந்தது. அவற்றுள் ராமாயணச் சிற்பங்கள் அடித்தள வரிசையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.





அங்கிருந்து திருச்சுற்றில் வரும்போது கம்பீரமான விமானம் உள்ளது. இந்த விமானத்தைப் பார்த்ததும் நமக்கு மற்ற மூன்று கோயில்களும் நினைவிற்கு வந்துவிடும். 

விமானத்தின் அழகைப் பார்த்துக்கொண்டே சுற்றிவரும்போது தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல் ஆகியோரைப் பார்த்தபடியே தொடர்ந்து அறம்வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் அம்மனின் சன்னதியைக் காணலாம். அம்மன் சன்னதிக்கு அருகே சரபேஸ்வரர் சன்னதி காணப்படுகிறது. 
கோயிலைச் சுற்றி வெளியே வரும்போது  அதே பாணியில் அமைந்துள்ள மற்ற மூன்று கோயில்களின் விமானங்களும், அதிலுள்ள சிற்பங்களும், நேர்த்தியும் நம் மனதிற்குள் இயல்பாகத் தோன்றும். சிற்பக்கலைக்கும் கட்டடக்கலைக்கும் பெயர் பெற்ற திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஒரு முறை செல்வோம். இக்கோயில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
கோயிலில் எங்கள் பேரன் தமிழழகன்

14 October 2016

கீழடி : தமிழகத்தின் தொன்மை, வரலாற்றின் பெருமை

அனைத்துச் சாலைகளும் கீழடி நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன என்பது இக்காலகட்டத்திற்குப் பொருந்தும் கூற்று. அறிஞர்களும், நண்பர்களும், ஆர்வலர்களும் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களுக்குள் முதன்மையான விவாதப் பொருளாக இருப்பது கீழடியே. நாம் வாழும் காலத்தில் நம் மண்ணின் பெருமையை, நம் தொன்மை வரலாற்றை நேரில் காணப்போகிறோம், காண்கிறோம் என்ற நிலை அனைவர் மனத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 
சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன், நண்பர்கள் குழுவாக கீழடி போவதாக உள்ளதாகக் கூறி அழைத்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். திரு வைகறை அவர்கள் ஏற்பாட்டில்  திரு மணி.மாறன், திரு அய்யம்பேட்டை செல்வராஜ், திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் கண்ணதாசன், முனைவர் கல்பனா, செல்வி சோனியா, முனைவர் பாரி, புலவர் நாகேந்திரன், திரு சம்பத், திரு வைகறை, திரு ராமதாஸ் உள்ளிட்ட நண்பர்களுடன் 11 அக்டோபர் 2016 அன்று கீழடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 





தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றூர் கீழடி. பெரிய தென்னந்தோப்பு. நடக்க நடக்க வந்துகொண்டேயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள். நம் தமிழனின் பெருமையைப் பேசும் வரலாற்றின் ஒரு புதிய பக்கம் இங்கிருந்து ஆரம்பமாகியுள்ளது என்று நினைத்துக் கொண்டே பூரிப்போடு நடந்தோம். தோண்டி வைக்கப்பட்டுள்ள குழிகளின் ஆழத்தையும் நீள அகலத்தையும் பார்க்கும்போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இவ்வூரில் சங்க காலத்தைச் சேர்ந்த பல பயன்பாட்டுப் பொருள்கள், சுடுமண் பொம்மைகள், அணிகலன்கள், உறைகிணறுகள் போன்றவை இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 குழிகள் தோண்டப்பட்டு அக்குழிகளிலிருந்து பல பொருள்களும் கட்டட அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியான மிகப்பெரிய அகழாய்வாக இது கருதப்படுகிறது.  ஒரு புதையுண்ட நகரை மேலிருந்து பார்ப்பதைப் போலத் தோன்றும் ஓர் உணர்வினை இப்பகுதியில் இருக்கும்போது உணர முடிந்தது. கட்டட அமைப்பு, கற்களின் நேர்த்தி, கட்டுமானச் செறிவு பண்டைத் தமிழனின் நுண்ணறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தி நிற்பதை அங்கு காணமுடிந்தது. 

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பௌத்தம் தொடர்பாக களப்பணி சென்றிருந்தபோதும் கீழடிப் பயணமானது முற்றிலும் மாறுபட்ட நிலையில் அமைந்திருந்ததை என்னால் உணரமுடிந்தது. பூம்புகாருக்குக் களப்பணி சென்றபோது பார்த்ததைப் போலவே முதலில் கீழடி என் மனதில் பதிந்தது. பூம்புகாரில் காணப்பட்ட செங்கற்களையே இங்குள்ள செங்கற்கள் நினைவூட்டின. ஆனால் அவற்றைவிட இவை சற்று பெரிதாக இருந்தன. கிட்டத்தட்ட 100 ஏக்கர் அளவிலான பகுதியில் அகழாய்வு நடைபெற்ற ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியத்தொல்லியல் துறையினர் செய்துவரும் பணி பாராட்டத்தக்கதாகும். உடன் வந்த அறிஞர்கள் கீழடி குறித்து கூறிய கருத்துகளைக் காண்போம். 

திரு மணி.மாறன் : இங்குள்ள கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியுள்ள செங்கல்லின் அமைப்பானது புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ள சங்க காலத்து கோட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கற்களின் அமைப்பினை ஒத்துத் திகழ்கிறது. இங்கு தொழிலகம் இயங்கியதற்கான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இத்தொழிலகம் சாயத்தொழில் நடைபெற்ற இடமாகவோ அல்லது ஆயுதங்கள், அணிகலன்கள் செய்யப்பெற்ற தொழிலகமாகவோ இணைந்திருக்கக் கூடலாம். ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் சிறு கால்வாய் வழியாக அடுத்த தொட்டிக்கு நீர் செல்லுமாறு அமைக்கப்பட்டு இறுதியாக ஒரு பெரிய கால்வாய் வழியாக முழு நீரும் வெளியேறி ஆற்றில் கலக்கும்படி அமைந்துள்ள அமைப்பினைக் காணமுடிகின்றது. உறைகிணற்று சுடுமண் உறையானது பழந்தமிழனின் தொழில்நுட்பத் திறனை அறிய முடிகிறது.              

திரு தில்லை கோவிந்தராஜன் : பூம்புகார் அருகேயுள்ள பல்லவனீச்சரம் எதிரே காணப்படுகின்ற கிளார்வெளி எனப்படுகின்ற பகுதியில் காணப்படும் கட்டட அமைப்போடு இந்த அமைப்பு ஒத்துள்ளது. பல்லவனீச்சரம் பகுதியின் அருகே மணிக்கிராமம் என்ற இடம் உள்ளது. சங்கினால் செய்யப்பட்ட வளையள்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்பட்ட வணிகம் சார்ந்த ஊரான மணிக்கிராமம் அருகேயுள்ளது. கீழடியில் உள்ள இந்த இடத்தைப் பார்க்கும்போது சாயம் கலப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இடமாக இருக்கக் கருத இடமுள்ளது. செங்கல் அமைப்பு பூம்புகாரில் காணப்படுவதைப் போன்று, ஆனால் அளவில் சற்று பெரியதாக உள்ளது.  

திரு அய்யம்பேட்டை செல்வராஜ் : இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பணி பாராட்டத்தக்கது. இவ்விடம் முழுக்க ஆய்வு செய்யப்படவேண்டும். இங்குள்ள கற்குவியல்கள் இன்னும் ஆய்வு செய்யப்படவேண்டும். மனிதனின் எலும்புக்கூடுகள் எவையும் கிடைக்காத நிலையில் இயற்கைப் பேரிடர் காரணமாக திடீரென இவ்விடம் அழிந்திருக்க வாய்ப்பில்லை. பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக இங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம். 












வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்படவேண்டும் என்பதற்கான ஓர் ஆரம்பமாக கீழடி அமைந்துள்ளது. நாம் வாழும் காலத்தில், நம் மண்ணில் இவ்வாறான ஓர் அரிய கண்டுபிடிப்பு அனைவரையும் பெருமை கொள்ளவைக்கிறது. நம் வரலாற்றையும், நம் தொன்மையையும் அறிந்து போற்றிப் பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளோம். அத்தகைய ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு தற்போது கிடைத்துள்ளது. இவ்விடத்தின் பெருமையை உலகறியச் செய்யும் வாய்ப்பினை உண்டாக்கி இதனைப் பேணிக்காக்க வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தொல்லியல் அறிஞர்களும், ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், கல்வி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்த அரிய அகழாய்வு பற்றிய பதிவுகளை மக்கள் முன் கொண்டு சென்று அவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர ஆவன செய்யவேண்டும். பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் இவ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்படவேண்டும். அனைவரும் நம் தொன்மை வரலாற்றினை அறிய இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நம் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும். தற்போதுள்ள நிலையில் காணவும், தொன்மையை ரசிக்கவும் உடன் கீழடி பயணிப்போம். 
மணி.மாறன், தில்லை.கோவிந்தராஜன், அய்யம்பேட்டை செல்வராஜ்,
பா.ஜம்புலிங்கம், கண்ணதாசன்

நன்றி
களப்பணி ஏற்பாடு செய்த திரு வைகறை மற்றும் நண்பர்கள்
களப்பணி பற்றிய விவரத்தைத் தெரிவித்த நண்பர் திரு மணி.மாறன் 

08 October 2016

அதிவீரராம பாண்டியன் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி : பதிப்பாசிரியர் மணி.மாறன்

சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் நண்பர் மணி. மாறன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட, அதிவீரராம பாண்டியன் அருளிய  திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். 
ஊருக்கான பெயர்க்காரணம், (தமிழ் நூல்கள் கருவை எனக்கூறும் நிலையில் திரு அடையாகக் கொண்டு திருக்கருவை, குலசேகரபாண்டியன் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, தப்பிய யானை புதரைச் சுற்றி வந்து சிவகணமாக மாறிய நிலையில் கரிவலம் வந்த நல்லூர், கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் கருவை நல்லூர், கருவேல நல்லூர் பின்னர் திரிந்து கரிவலம் வந்த நல்லூர் என மாறல்) இறைவனின் பெயர்கள் (பால்வண்ணநாதர், திருக்களா ஈசர், முகலிங்கர்), அந்தாதி என்பதற்கான விளக்கம், (ஒரே வகையான செய்யுளால் 100 பாடல்கள் அந்தாதியாகத் தொடராகப் பாடுவதே பெரும்பாலும் அந்தாதி என்ற நிலையில் இந்நூல் நூற்றந்தைந்தாதி) அதிவீரராம பாண்டியன் இந்நூலை எழுத அமைந்த சூழல் (இளம் பருவத்தில் சிற்றின்பத்தில் ஈடுபட்டதால் தொழுநோய் ஏற்படவே தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி திருக்கருவை இறைவன்மீது இந்நூல் உட்பட மூன்று நூல்களைப் பாடி, நோய் நீங்கப்பெறல்) என்ற நிலைகளில் வாசகனுக்கு மிகவும் எளிதாகப் புரியும் வகையில் கருத்துகளை முன்வைக்கும்விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அந்நூலில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம்.

ஆறாக் காமக் கொடியகனல்
 ஐவர் மூட்ட அவலமனம்
நீறாய் வெந்து கிடப்பேனை
 நின்தாள் வழுத்த னிவுதந்து
மாறா நேயத் திரவுபகல்
 மறவா திருக்க வரமளித்தாய்
சீறா டரவம் முடித்தசடைக்
 கருவை வாழும் செஞ்சுடரே (2)

சீறி ஆடும் பாம்பினைத் தரித்துக் கொண்ட சடையினையுடைய திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் நிறைந்த ஒளிப்பிழம்பே என்றும் அவியாத  நெருப்பாகிய கொடிய காமத்தினை ஐம்புலன்களும் வளர்க்க, அதனால் கேடுற்ற மனம் நீறாகும்படி வெந்து கிடக்கும் எனக்கு, உன்னுடைய திருவடிகளைத் துதிக்க நினைவு கொடுத்தால் மாறுபாடு இல்லாத உன் திருவருளினாலே உன் திருவடிகளை வழுத்தும் செயலை நான் இரவும் பகலும் மறவாமல் இருக்க வரம் கொடுத்து அருளிச்செய்தாய். உன் பேரருளை என்னென்பது.

மனத்தை யான்தினம் வணங்குவன் மின்னென
 வைகலும் நிலையற்ற
தனத்தை வாழ்வினை நிலையென மதித்துழல்
 ஆசையில் தளராதே
புனத்து ழாய்முகில் போற்றிடுங் கருவைவாழ்
 புண்ணியன் பாலற்கா
 சினத்த காலனை உதைத்தவன் பங்கயச்
 சேவடி வணங்கென்றே (27)

மின்னலைப் போன்ற என்றும் நிலையற்ற பொருளையினையும், வாழ்க்கையினையும் நிலையென்று கருதிச் சுழன்று திரியும் விருப்பட்ததால் தளர்ச்சி அடையாமல் முல்லை நிலத்திற்குரிய துளபமலர் மாலையணிந்த மேகம் போன்ற நிறம் உடைய திருமால் வணங்கு திருக்கருவைப் பதியில் வாழும் புண்ணிய வடிவாய் உள்ளவனும், இளைஞரான மார்க்கண்டேய முனிவருக்காகக் கோபித்த எமனை உதைத்தவனுமாகிய இறைவனது தாமரை மலரினை ஒத்த செவ்விய திருவடிகளை வணங்காயென்று என் மனத்தை நான் நாள்தோறும் வணங்கிக் குறையிருப்பேன்.

உய்யவோ ருறுதி நாடா
 உலகினிற் சமய மென்னும்
வெய்யஆர் கலியின் வீழ்ந்து
 வெந்துய ருழக்கின் றேற்குத்
தையலோர் பாகம் வைத்துத்
 தண்டமிழ்க் கருவை வாழும்
 ஐயன்வந் தாண்டு ண்ட
 ததிசயம் விளைக்குமாறே (68)

கடைத்தேற ஒரு பற்றுக்கோட்டை நாடி, உலகில் வழங்கும் புறச்சமயங்கள் என்னும் கொடிய கடலில் வீழ்ந்து அழுந்தி, கொடிய துன்பத்தில் வருந்துகின்ற எனக்கு உமையம்மையினை இடப்பாகத்தில் வைத்துத் தமிழ் வழங்கும் திருக்கருவைப் பதியினில் வாழும் இறைவன் எழுந்தருளி வந்து என்னை அடிமை கொண்ட செய்தி, நினைக்குந் தோறும் அதிசயத்தை விளைக்கும் வகையதாம்.

நேர்ந்த நெஞ்சமே நெடிது வாடிநீ
 சோர்ந்த துன்பமுந் துயரும் போக்குவான்
 வார்ந்த செஞ்சடைக் கருவை வானவன்
 ஆர்ந்த பேரருள் அருவி யாடவே. (74)

வேண்டிய மனமே, (உன் வாட்டத்தையும், சோர்வையும் போக்கும்படி) நீண்ட சிவந்த சடையினை உடைய இறைவனின் வற்றாத பெரிய அருளாகிய அருவியில் நீராட, நீ மிகவும் வாடுதற்கும், சோர்தற்கும் காரணமான துன்பத்தையும் வருத்தத்தையும் அவன் போக்கி அருள்வான்.


குழவி வெண்ணிலா அனைய வெண்ணகை
 சோகொடியி டத்துவாழ் குரிசில் போற்றிஎன்
பழைய தீவினைப் பகைதொ லைத்திடும்
 பாவ நாசனே போற்றி காய்சினத்து
உழுவை யின்வரி தோல சைத்தபட்டு
 உடைம ருங்கினோய் போற்றி செந்தமிழ்க்
கழும லப்பதிக் கவுணி யன்புகழ்
 களவின் நீழலிற் கடவுள் போற்றியே. (92)


இளமையான வெள்ளிய சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய புன்சிரிப்பினை உடைய பூங்கொடியனைய உமாதேவி இடப்பாகத்தில் வாழும் இறைவனே, வணக்கம். தொன்று தொட்டுள்ள எனது தீவினையாகிய பகையைப் போக்கியரளும் பாவநாசனே, வணக்கம். வருத்தும் கோபத்தை உடைய புலியின் கோடமைந்த தோலைப் பட்டு உடையாகக் கட்டிய இடையை உடையவனே, வணக்கம். செந்தமிழ் சீகாழிப் பதியில் திருஅவதாரம் செய்த கௌணிய கோத்திரத்தரான திருஞானசம்பந்தர் புகழ்ந்து பாடிய திருக்களா நீழலமர் கடவுளே வணக்கம். 

நூன்முகம், திருக்கருவை எனப்படும் கரிவலம் வந்த நல்லூர், நூலாசிரியர், அந்தாதி, நூல் காட்டும் புராண வரலாறு என்ற நிலைகளில் பதிப்பாசிரியர் மிகவும் நுட்பமாக நூலைப் பற்றிய அறிமுகத்தைத் தந்துள்ள விதம் வாசகர்களின் மனதில் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் வட்டத்தில் உள்ள கருவை மாநகரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பற்றி அதிவீரராம பாண்டியர் பாடிய, குட்டித் திருவாசகம் என்னும் பெருமையுடைய இந்நூலை வாசிப்போம், தமிழழகை நேசிப்போம், இறையருளைப் பெறுவோம், வாருங்கள். 

---------------------------------------------------------------------------------------------------
நூல் : அதிவீரராம பாண்டியன் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
பதிப்பாசிரியர் : மணி.மாறன் (அலைபேசி 9443476597) 
பதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்
ஆண்டு : 2016
விலை : ரூ.100
---------------------------------------------------------------------------------------------------
நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்:
தமிழ் எண்ணும் எழுத்தும், 

01 October 2016

கோயிற்கலை போற்றும் மகாமகம்

நவராத்திரி தொடங்கி நடைபெறும் இவ்வேளையில் மகாமகத்தின்போது நான் எழுதி வெளியான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். கோயில்களைப் பார்ப்போம், கலைகளை ரசிப்போம். 

குடந்தை, குடமூக்கு, கும்பகோணம்

''கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினுஞ் செறிய அருங்கடிப் படுக்குவள்'' என்கிறது அகநானூற்றுப்பாடல். சங்க காலத்தில் குடந்தை என்றழைக்கப்பட்ட இவ்வூர் புகார் மற்றும் உறையூர் போல தலைநகராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில் 50 இடங்களில்  குடந்தை என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரியாழ்வார் ''குடந்தைக்கிடந்தானே, சப்பாணி'' என்று கூறுகிறார். ''கோவணத்துடையான் குடமூக்கு'', ''கூத்தாடி உறையும் குடமூக்கு'' என்றார் நாவுக்கரசர். கி.பி.7ஆம் நூற்றாண்டில் குடமூக்கு என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. பண்டைய இலக்கியங்களிலும் தேவாரத்திருமுறைகளிலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களிலும் கல்வெட்டுக்களிலும் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. 



கும்பகோணம் கல்வெட்டுகளில் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப்பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் அழைக்கப்பெற்ற பெருமையுடையது இவ்வூர். பாணபுரீசுவரர் கோயில் என வழங்கும் சோமநாததேவர் கோயில் பகுதி சோமநாதமங்கலம், சோமநாத தேவமங்கலம் என்று தனி ஊராக விளங்கியது. திருக்குடமூக்கிலிருந்த அவ்வூர் பிரிக்கப்பட்டது என்பது திருக்குடமூக்கில் வேறு பிரிந்த என்ற தொடரால் அறியலாம்.

கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன் மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்குரியதாகும். இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமையாகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகிறது. அருணகிரியாரும் ''கும்பகோண நகர் வந்த பெருமாளே'' என்று கும்பகோணத்து முருகப்பெருமானைப் போற்றுகிறார். 

மகாமகப்பெருவிழா
இத்தகைய பெருமையுடைய கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழாவினை, ''பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்  மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்'' என்று சேக்கிழார் பெருமான் கி.பி.12ஆம் நூற்றாண்டில் தாமருளிய பெரிய புராணத்தில் எடுத்துக்கூறியுள்ளார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கோயில்களைக் கொண்ட நகரங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது கும்பகோணம். அவற்றில் மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணுகின்ற 12 சைவக்கோயில்களும், காவிரியில் தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து கோயில்களும் அடங்கும். மகாமகத் தீர்த்தவாரி சைவக்கோயில்களில் இரு கோயில்கள் கும்பகோணம் நகருக்கு அண்மையில் கொட்டையூரிலும், சாக்கோட்டையிலும் உள்ளன.
கோயில்களின் சிறப்பு
தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்கள் சிற்பம், ஓவியம், இசை, கட்டடம் என்ற பல்வேறு நிலைகளில் சிறப்பான கலையழகினைக் கொண்டு அமைந்துள்ளன. இக்கோயில்கள் நமக்கு இறையுணர்வினைத் தருவதோடு, கலையுணர்வினையும் நம்முள் எழ வைக்கின்றன. பல்லாண்டு காலமாக பற்பல காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு சிறந்த கலைப்பொலிவோடு விளங்கும் இக்கோயில்களுக்கு ஈடு இணையென இவற்றையே கூறமுடியும்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும், ஆவுடையார்கோயிலும், கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் சிற்பக்கலையின் உச்சத்தினை எடுத்துரைக்கும் கோயில்களில் முக்கியமானவையாகும். கும்பகோணம் சார்ங்கபாணிகோயில் கருவறையும், பழையாறை சோமநாதசுவாமிகோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்களில் உள்ள ரத வடிவ மண்டபங்களும் காண்போரின் கண்ணைக் கவர்வனவாகும். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில், திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்  உள்ளிட்ட கோயில்களில் மிக நுட்பமாக ஓவியங்களைக் காணலாம். திருமழபாடியில் கருவறைத் திருச்சுற்றில் ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர், வேதாரண்யம் திருமறைக்காட்டீஸ்வரர் கோயில் சுழலும் கல்தூண்கள், கும்பகோணம் வீர சைவ மடத்து வீரபத்திரர் கோயிலில் உள்ள செங்கல் கட்டுமானம், பழையாறையில் இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுத்தல் சிற்பம்  ஆகியவற்றில் கட்டடக்கலையின் நுணுக்கத்தைக் காணலாம். மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய விழாக்காலத்தில் இக்கோயில்களில் சில கோயில்களுக்குச் செல்வோம். 

கும்பகோணம் ராமசுவாமி கோயில்
காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் ஐந்து மகாமக வைணவக்கோயில்களில் ராமசுவாமி கோயில் ஒன்றாகும். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகும். ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்த நினைவாக அவ்வரசர் இக்கோயிலைக்கட்டினார். கருவறையில் ராமர் பட்டாபிஷேகக்கோலம் கண்கொள்ளாக்காட்சியாகும்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலுள்ள ராஜகம்பீரன் மண்டபத்தை நினைவுபடுத்துமளவு இங்குள்ள மகாமண்டபத்து சிற்பங்கள் உள்ளன. தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. ராமசுவாமி கோயிலில் ஒவ்வொரு தூணிலும் ஆளுயர சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் நான்கு பக்கங்களிலும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் உள் திருச்சுற்றில் ராமாயண ஓவியங்கள் காணப்படுகின்றன.

புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் உள்ளது புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் ஆலந்துறைநாதர் கோயில். திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இறைவன் ஆலந்துரைநாதர், இறைவி அல்லியங்கோதை. இக்கோயிலின் கருவறைக் கோஷ்டத்தில் சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. சீதை இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல், ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன்மீது அரிதுயில் கொள்ளும் அனந்தசயனமூர்த்தி உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்கு காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் எடுத்துரைப்பதாக குடவாயில் சுப்பிரமணியன் கூறுகிறார். விமானத்தில் பூதகணங்கள் காண்பதற்கு மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.   

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
கும்பகோணத்திலிருந்து சுமார் 11 கிமீ தொலைவில் உள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் புள்ளமங்கைக் கோயிலைப் போலவே கருவறைக் கோஷ்டங்களுக்குப் புகழ் பெற்ற கோயிலாகும்.  ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலம்  காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.  இறைவன் சாட்சிநாதேஸ்வரர், இறைவி கரும்பன்ன சொல்லம்மை. புள்ளமங்கையில் உள்ளதுபோலவே சிறிய, நுட்பமான சிற்பங்களை இங்கு காணலாம். இறைவனும் இறைவியும் பல்வேறு நிலைகளில்
அமர்ந்த கோலத்தில் உள்ள பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. புராணக் காட்சிகள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர்கோயில் எனப்படும் கோயில் கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற இத்தலம் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இறைவன் கபர்தீஸ்வரர், இறைவி பெரியநாயகி. இக்கோயிலின் முன் மண்டபத்தில் வேலைப்பாடுள்ள தூண்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் தூண்கள் சிறப்பாக அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்குள்ள அம்மன் சன்னதியில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் வளாகத்தில் உள்ள வலஞ்சுழி விநாயகர் கோயிலிலும் தூண்கள் மிகவும் வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளன. விநாயகர் கோயிலின் காணப்படுகின்ற கொடுங்கை ஆவுடையார் கோயிலில் காணப்படுகின்ற கொடுங்கையை நினைவூட்டுகின்றது. 

மேற்கண்டவை மூலமாக கும்பகோணம் நகரிலும் அருகிலும் உள்ள கோயில்கள் கலைகளின் இருப்பிடமாகத் திகழ்வதை அறியமுடிகின்றது. கட்டடக்கலை நுட்பங்கள் நம் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துவனவாக உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்புக்கூறுகளைப் பெற்றுத் திகழ்வதைக் காணும்போது முன்னோர்கள் இறையுணர்வோடு கலையுணர்வையும் கொண்டிருந்தனர் என்பதை உணரமுடிகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் இவ்வாறான வகையில் கலையின் நுட்பங்கள் காணப்படுகின்றன. இறையுணர்வினைப் பெறுவதற்காக மகாமகம் கொண்டாடப்படும் கும்பகோணத்திற்கு வருகின்ற இவ்வினிய வேளையில் கும்பகோணத்திலும் அருகிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று கோயிற்கலையின் பெருமையை நாம் அறிவதோடு, பிறர்க்கும் உணர்த்துவோம். கோயிற்கலையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினர் பாதுகாக்க ஆவன செய்வோம். 
---------------------------------------------------------------------
கும்பகோணம் மகாமகம் 2016சிறப்பு மலரில் கோயிற்கலை போற்றும் மகாமகம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. கட்டுரையை வெளியிட்ட இந்து சமய அற நிலையத்துறை மலர்க்குழுவினர்க்கு மனமார்ந்த நன்றி.

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் முகப்பட்டை
துணை நின்றவை
சி.பாலசுப்பிரமணியன், குடமூக்கு ஒரு நோக்கு,  மகாமகம் 1992 சிறப்பு மலர்
புலவர் செ.இராசு, குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள், மகாமகம் 1992 சிறப்பு மலர்
குடந்தை என்.சேதுராமன், திருக்குடமூக்கில் மகாமகம், மகாமகம் 1992 சிறப்பு மலர்
மா.சந்திரமூர்த்தி, புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
மு.அகிலா, புனலாடும் முன் புள்ளமங்கை செல்வோம், மகாமகம் மலர் 2004
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
மகாமகம், விக்கிபீடியா