27 January 2017

அயலக வாசிப்பு : ஃபிடல் காஸ்ட்ரோ

  • 20 ஆண்டுகளுக்கு முன் ப்ரன்ட்லைன் ஆங்கில இதழில் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி படித்தபோது (Fidel breakfasts with not less than three hundred pages of world news .. தினமும் காலையில் முந்நூறு பக்கங்களுக்குக் குறையாமல் வெளிநாட்டுச் செய்திகளை வாசிக்கிறார்) நான் அடைந்த வியப்பு, 
  • ஒரு முறை ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சு நேரம் முடியப்போவதை அறிவிக்கும் வகையில் சிகப்பு விளக்கு எரிந்தபோது அதன்மேல் தன் கைக்குட்டையைப் போட்டு தொடர்ந்து தன் பேச்சைத் தொடர்ந்த நிலை,
  • புதுதில்லியில் அணி சேரா மாநாடு நடைபெற்றபோது பாலஸ்யாதீன யாசர் அராபத், ஜோர்டான் அதிபர் ஆகியோருக்கிடையேயான, பெரிய பிரச்னையாக மாறவிருந்த,  சிறிய சிக்கலைத் தீர்த்துவைத்தது, 
  • வெனிசூலா அதிபர் சவேசுடன் தான் படிக்கும் நூல்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் பாங்கு,
  • அவரைக்கொல்ல 638 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர் எதிர்கொண்டவிதத்தைப் படித்தபோது அடைந்த உணர்வு,
  • அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காகக் காட்டில் அவரைத் தேடிச் சென்ற நிருபர்களிடம் பேசிவிட்டு, அவர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்ப ஏற்பாடு செய்தமை,
  • அணிசேரா இயக்க மாநாட்டின்போது இந்திரா காந்தியிடம் அவர் வெளிப்படுத்திய அன்பின் வெளிப்பாடு, 
என்ற நிலைகளில் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி அவ்வப்போது படித்தது அவர்மீதான மதிப்பை என்னுள் உயர்த்தியது. அவர் இயற்கையெய்தியபோது  ஃபிடல் காஸ்ட்ரோ எங்கள் வாசிப்பில் என்று தலைப்பிட்டுப் பதிந்தேன். தொடர்ந்து வந்த செய்திகளை அவ்விதழ்களிலிருந்தும், இந்தியாவில் வரும் இதழ்களிலிருந்தும் வாசித்து முகநூலில் பதிவிட்டேன். இப்பதிவில் அவற்றைப் புகைப்படத் தொகுத்துத் தந்துள்ளேன். இவ்விதழ்களின் புகழாரம் அவருடைய மேன்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. 
Observer, London

Guardian, London

Guardian, London

NYT, New York

Times of India

The Hindu

தி இந்து

தினமணி

Dawn, Pakistan

Independent, London

Granma

BBC News

தி இந்து 

Aljazeera

  









20 January 2017

கோயில் உலா : தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை

17 ஜனவரி 2017 மற்றும் அதற்கு முன்னருமாக வெண்ணாற்றங்கரையிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவந்தேன்.  வெண்ணாற்றங்கரையில் ஆற்றங்கரை ஓரத்திலேயே சென்று சில கோயில்களைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அக்கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். இந்த கோயில் உலாவின்போது கரந்தட்டாங்குடி சப்தஸ்தானக் கோயில்களில் மூன்று கோயில்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானக்கோயில்கள் உள்ளன. அவற்றில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் ஒன்றாகும். பல வருடங்கள் சப்தஸ்தான தேரோட்டம் நடைபெறாத அந்த கோயில்களைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.

  • கரந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
  • விரைவில் குடமுழுக்கு காணவுள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் (தேவகோட்டத்தில் மிக  அழகான சிற்பங்களைக் கொண்டுள்ள கோயில்) (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)
  • கோடியம்மன் கோயில் (உற்சவ கோடியம்மன் கோயில் என்ற பெயரில் தஞ்சாவூரில் மேல வீதியில் ஒரு கோயில் உள்ளது)
  • தஞ்சபுரீஸ்வரர் கோயில் (ஆனந்தவல்லியம்மன் கோயில் என்றாலே பலருக்கும் தெரிகின்ற கோயில். பெரிய கோயிலுக்கும் முந்தையது என்ற பெருமையுடையது)
  • தஞ்சை மாமணிக்கோயில் (வீரநரசிம்மப்பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில்,  நீலமேகப்பெருமாள் கோயில்) (வைணவத்தில் ஒரு திவ்ய தேசம் என்ற நிலையில் பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் காணலாம். அவ்வகையில் இங்கு மூன்று கோயில்கள்)
  • கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயில் (பராமரிப்பின்றி உள்ள கோயில்)
  • விரைவில் குடமுழுக்கு காணவுள்ள தளிகேஸ்வரர் கோயில் (பெரிய குளத்தைக் கொண்டுள்ள கோயில்)
  • கூடலூர் சொக்கநாதசுவாமி கோயில் (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)
  • கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில் (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விமானம்
(தஞ்சாவூர் கரந்தைப்பகுதியில் உள்ளது)

வசிஷ்டேஸ்வரர் கோயில்
(தஞ்சாவூர் கரந்தைப்பகுதியில் உள்ளது)

கோடியம்மன் கோயில்
(தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பள்ளியக்கிரகாரம் முன்பாக உள்ளது) 


தஞ்சபுரீஸ்வரர் கோயில் (தஞ்சபுரீஸ்வரர், ஆனந்தவல்லி)
(நுழைவாயில், மூலவர் விமானம்)
(வெண்ணாற்றங்கரைக்கு முன்பாக உள்ளது)  


கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயில்(நுழைவாயில், மூலவர் விமானம்) (வெண்ணாற்றங்கரையில் உள்ளது)


வீரநரசிம்மப்பெருமாள் கோயில்



மணிகுன்றப்பெருமாள் கோயில்

நீலமேகப்பெருமாள் கோயில்

தளிகேசுவரர் கோயிலில் எங்கள் பேரன் தமிழழகன்

தளிகேசுவரர் கோயில் (தளிகேசுவரர், சுகுந்த குந்தலாம்பிகை)
(நுழைவாயில், மூலவர் விமானம்)
(வெண்ணாற்றங்கரையில் உள்ளது)

கூடலூர் சொக்கநாதசுவாமி கோயில் (சொக்கநாதர், மீனாட்சி)
(நுழைவாயில், மூலவர் விமானம்)
(வெண்ணாற்றங்கரையில் உள்ளது)

கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில் (ராஜராஜேஸ்வரர், ஆனந்தவல்லி)
(வெண்ணாற்றங்கரையில் உள்ளது)
நன்றி 
  • உடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய திரு பிரசாத், மூத்த மகன் பாரத் 
  • தொந்தரவு தராமல் உடன் வந்த எங்கள் பேரன் தமிழழகன்

14 January 2017

நன்னாளில் நூல் அன்பளிப்பு

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் (14 சனவரி 2017)
இரண்டாவது வலைப்பூவில் 151ஆவது பதிவு
வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்வதும், வீட்டில் நூலகத்தைப் பேணுவதும் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய நல்ல பழக்கங்களாகும். வாசிக்கும் பழக்கத்தைத் தொடரவேண்டும் என்ற நன்னோக்கில் நல்ல பல உத்திகளைப் பலர் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று விழாக்களின்போது நூல்களை அன்பளிப்பாக வழங்குவதாகும். கல்விச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வது நம்மை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பகிர்ந்துகொள்ள முடிகின்ற செல்வமும் இதுவே. இப்பழக்கத்தை நான் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறேன். என் நண்பர்கள் பலர் தம் இல்ல நிகழ்வுகளின்போது நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர். அவ்வாறான அன்பளிப்புகளைக் காணவும், அந்த பழக்கத்தை மேற்கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.  

சைவ சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால் தன்னுடைய மகன்களின் திருமணத்தின்போது ஒவ்வொரு நூலை எழுதி அதற்கு அட்டையாக திருமண அழைப்பிதழை இணைத்து வடிவமைத்திருந்தார். அவ்வகையில் அவருடைய மகன்களின் திருமணத்திற்கு அவர் எழுதிய நூல்கள் (வெளியீடு : சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர், அலைபேசி 9443975920) பின்வருவனவாகும். மேலட்டை இரட்டை மடிப்பாகவும், பின்னட்டை ஒற்றை மடிப்பாகவும் திருமண அழைப்பிதழாக அமைந்திருந்தது. 

  • திருமுறைத்திருமணம் (செயல்முறை-விளக்கம்), (48 பக்கங்கள்) 
  • சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் (96 பக்கங்கள்) 
  • திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்யதேசங்கள் (48 பக்கங்கள்)
வீ.ஜெ.நவகோடி நாராயணன்-து.ரேவதி திருமணம் 15.9.2011
வீ.ஜெ.மதுசூதனன்-கு.திவ்யா திருமணம் 2.3.2015
வீ.ஜெ.வேதராமன்-து.பிரீத்தி திருமணம் 11.5.2016
திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் தன் மூத்த மகன் திருமணத்தின்போது, திருமண அன்பளிப்பு என்ற குறிப்பு முதல் பக்கத்தில் இணைக்கப்பட்ட நிலையில் திருக்குறள் எளிய உரை (உரை : நல்லாசிரியர் புலவர் செக.வீராசாமி, திருவருள் பதிப்பகம், 12/91, முதல் தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 008) என்ற நூலை வழங்கினார். இளைய மகன் திருமணத்தின்போது அவராலும் அவருடைய மகனாலும் தொகுக்கப்பட்ட நூலை (தொகுப்பு : அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, சென்னை தே.கி.மலையமான், இராசகுனா பதிப்பகம், 28 முதல் தளம், 36ஆவது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 600 091) அன்பளிப்பாக வழங்கினார். முதல் பக்கத்தில் திருமண அன்பளிப்பு என்ற நிலையிலான நூலட்டையைக்கொண்டும், இரண்டாவது பக்கம் திருமண அழைப்பாகவும் இருந்தது.  
தே.கி.மலையமான்-பெ.சுகன்யா திருமணம் 29.1.2012 
தே.கி.பூங்குன்றன்-நெடு.கார்த்திகா திருமணம் 26.2.2016
திரு மா.பாலகிருட்டினன் தன் மகன் திருமணத்திற்கு அளித்த அழைப்பிதழ் தமிழ் கற்போம் என்ற தலைப்பிலான 32 பக்கங்களைக் கொண்ட பாதுகாத்து வைக்கப்படவேண்டிய தொகுப்பாக அமைந்திருந்தது. அந்த அழைப்பிதழ் நூலில் ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, சிவப்பிரகாசரின் நன்னெறி, உலக நாதரின் உலக நீதி ஆகியவை உரையுடன் இடம் பெற்றிருந்தன. மேலும் தமிழ் எண்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், 16 பேறுகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், திரிகடுகம், ஐம்புலன்கள், அறுசுவை, கடையெழு வள்ளல்கள், நவமணிகள், நவரசம், ஐவகை இசைக் கருவிகள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் தலைப்புகள், நிகண்டுகள் ஆகியவை பெட்டிச் செய்திகளாகத் தரப்பட்டிருந்தன. மற்றும் ஓரெழுத்தொரு மொழிகள், பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், 63 நாயன்மார்கள், முக்கிய இலக்கண நூல்கள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அழைப்பிதழின் மேலட்டையின் மணமக்கள் மற்றும் மணமகனின் பெற்றோர் புகைப்படமும், மேலட்டையின் உட்புறம் திருமண அழைப்பிதழும், பின் அட்டையின் உட்புறம் சுற்றமும் நட்பும் விடுக்கும் அழைப்பும், வெளிப்புறம் மணமகனின் பெற்றோர், சித்தப்பா சித்தி புகைப்படங்கள் இருந்தன.
பா.பாலு ஆனந்த்-ப.சத்யபாமா திருமணம் 22.3.2015
திரு கஜேந்திரன் தன் மகள் திருமணத்தின்போது, ஸ்வாமி சிவானந்தா எழுதிய மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை என்ற நூலை (நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017)அன்பளிப்பாக வழங்கினார். திருமண விழா என்ற நிலையிலான குறிப்பு முதல் பக்கத்தில் மணமக்களின் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. 
கவி.கயல்விழி-ஆதி.பரணி விஜயகுமார் திருமணம் 11.5.2016
முனைவர் ந.அதியமான் தன் மகள் திருமணத்தின்போது, வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிய ஜேம்ஸ் ஆலனின் மனம்போல வாழ்வு அகமே புறம் என்ற, 108 பக்கங்களைக் கொண்ட இரு நூல்களை ஒரே தொகுப்பாக (பதிப்பாசிரியர் நடராசன் அதியமான், காமினி பதிப்பகம், 43/2, பெரியப்பண்ணை சந்து, சிறுகனூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம் 621 123) அன்பளிப்பாக வழங்கினார். நூலின் முதற்பக்கத்தில் மணமக்களின் புகைப்படமும், திருமண அழைப்பிதழும் அச்சிடப்பட்டிருந்தன. நூலின் பின்னட்டையில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் புகைப்படமும், மணமக்கள் பெயரும், மண நாளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அ.காயத்ரி-க.நிரஞ்சன் திருமணம் 4.9.2016
பதிப்பாசிரியராக, தொகுப்பாசிரியராக, நூலாசிரியராக அன்பளிப்பாக நூலினை வழங்குதல் என்பதோடு பிறர் எழுதிய நூல்களை அன்பளிப்பாக வழங்குவதும் பாராட்டத்தக்கதாகும். திருமணத்தின்போது மேற்கொள்ளப்படும் செலவுகளில் பயனுள்ள செலவாக இதனைக் கொள்ளலாம்.

எங்களது பேரன் தமிழழகன் பெயர் சூட்டு விழாவின்போது, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தஞ்சைப்பெரிய கோயில் என்ற நூலை வந்திருந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தோம். அந்நூலின் முதற்பக்கத்தில் என் மகனும், மருமகளும் கையொப்பமிட்டு இருந்தனர். 
முனைவர் சோ.கண்ணதாசன்-தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா 23.11.2017
முனைவர் சோ.கண்ணதாசன்-தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா அழைப்பிதழ்


முனைவர் சோ.கண்ணதாசன் அவருடைய புதுனை புகுவிழாவின்போது நடுக்காவேரி அருள்மிகு அரிபிரம்மேசுவரர் திருக்கோயிலும் பதிற்றுப்பத்தாந்தியும் என்ற அவரால் பதிப்பிக்கப்பட்ட நூலை அன்பளிப்பாக வழங்கினார். விழாவிற்கான அழைப்பிதழும் சிறப்பாக இருந்தது. 

விழா நிகழ்வுகளில் நூல்களை அன்பளிப்பாகக் கொடுக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம். ஒவ்வொருவரும் இல்லத்தில் நூல் நிலையம் பேணுவோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவோம். 

23 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.

07 January 2017

கோயில் உலா : 24 டிசம்பர் 2016

என் வலைப்பூவில் 150ஆவது பதிவு
எழுத்துக்கு ஊக்கமூட்டும் அனைவருக்கும் நன்றி
24 டிசம்பர் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தேவாரப்பாடல் பெற்ற எட்டு கோயில்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற மூன்று கோயில்களுக்கும் தலப்பயணம் சென்றோம். திருப்பாலைத்துறையில் சிவபுராணம் ஓதி உலா தொடங்கினோம். 
திருப்பாலைத்துறையில் சிவபுராணம் ஓதப்படல்
தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், வைகல் வைகல்நாதர் கோயில், கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில், தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில், திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களை தற்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மற்ற கோயில்களுக்கு முன்னர் சென்றுள்ளேன். அனைத்து கோயில்களையும் காண அழைக்கிறேன்.   

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள்
  • திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் (பெரிய களஞ்சியத்திற்கு சிறப்பு பெற்றது) (கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அருகில் உள்ளது)
  • ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது)
  • திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் (ராஜகோபுரத்துடன் கோயில் முன்னர் உள்ள குளத்தைக் காணும்போது மிகவும் அழகாக உள்ளது. வான சாத்திர அடிப்படையில் நவக்கிரக அமைப்பு உள்ள கோயில்) (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ளது. ஆடுதுறையிலிருந்தும் செல்லலாம்) 
  • வைகல் வைகல்நாதர் கோயில் (மாடக்கோயில்) (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி தாண்டி பழியஞ்சிய நல்லூரை அடைந்து மேலும் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்)
  • திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில்  (பெரிய நடராஜர் திருமேனிக்கும், அழகான ஓவியங்களுக்கும், நுட்பமான சிற்பங்களுக்கும் பெயர் பெற்றது)(கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ செல்லவேண்டும்)
  • கோழம்பம் எனப்படும் கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம்)
  • தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கோமல் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்)
  • திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் (பெரிய நந்திக்குப் புகழ் பெற்ற கோயில்) (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது)
மங்களாசாசனம் பெற்ற தலங்கள்
  • தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில் (மிக அழகான பெருமாள் உள்ள கோயில்) (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கோமல் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்)
  • நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் கோயில் (கல் கருடனுக்குப் பெயர் பெற்ற கோயில்)  (கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது)
  • திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் (அழகான மூலவரைக் கொண்ட கோயில்) (கும்பகோணம்-குடவாசல்-திருவாரூர் சாலையில், கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தூரத்தில் உள்ளது)
திருப்பாலைத்துறை பாலைவனநாதர், தவளவெண்ணகையாள்  
(நாவுக்கரசர்)
திருப்பாலைத்துறையில் உள்ள நெற்களஞ்சியம்
தென் குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர், பவழக்கொடியம்மை 
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர்)
திருநீலக்குடி (தென்னலக்குடி) நீலகண்டேஸ்வரர், அழகாம்பிகை 
(நாவுக்கரசர்)
வைகல் வைகல்நாதர், கொம்பியல்கோதை 
(ஞானசம்பந்தர்)
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர், அங்கவளநாயகி 
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர்)
ஆனையுரித்தேவர் சிற்பம், அருகில் பார்வதியும் கந்தனும்
முன்மண்டபக்கூரையில் உள்ள அழகான ஓவியம்
கோழம்பியம் கோகிலேஸ்வரர், சௌந்தரநாயகி 
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர்)
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், சௌந்தரநாயகி  
(ஞானசம்பந்தர்)
ஆமருவிப்பெருமாள் கோயில்
(பெரிய திருமொழி)
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா முலையம்மை(ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்)

 

நாச்சியார்கோயில் 
சீனிவாசப்பெருமாள் கோயில், வஞ்சுளவல்லித்தாயார் 
திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், சாரநாயகி
நன்றி
இக்கோயில் உலாவிற்கும், இதற்கு முந்தைய  26 நவம்பர் 201613 மார்ச் 201626 செப்டம்பர் 201518 சூலை 201520 சூன் 20158 நவம்பர் 201413 செப்டம்பர் 201426 ஏப்ரல் 2014 நாள்களிலான உலாவிற்கும் அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. 

துணை நின்றவை
முனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

7 ஜனவரி 2017அன்று இரவு மேம்படுத்தப்பட்டது.