27 March 2017

எளிது எளிது ஐ.ஏ.எஸ் தேர்வு : உட்கோட்டை பழனியப்பன்

அண்மையில் நான் படித்த நூல் திரு உட்கோட் பழனியப்பன் அவர்கள் எழுதியுள்ள எளிது எளிது : ஐ.ஏ.எஸ். தேர்வு என்னும் நூல். 

இந்திய ஆட்சிப்பணி, இந்திய ஆட்சிப்பணியின் மூன்று கட்டத் தேர்வுகள், நூலகம் சென்று படிப்பது, பயிற்சி மையம், ஐஏஎஸ் தேர்வு பற்றிய பயம் இருக்கிறதா? பொதுத்தேர்வும், போட்டித்தேர்வும், சிவில் சர்வீஸ் தேர்வின் பிரிவுகள், சிவில் சர்வீசஸ் தேர்வின் 26 பணிகள் பற்றிய விவரங்கள், ஐ.ஏ.எஸ்.தேர்விற்குப் பிறகு பயிற்சி, ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்ற பல தரப்பினர்கள் சாதனை, மாதிரி வினாக்கள் என்ற தலைப்பிலான பொருளடக்கத்தைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

இந்திய ஆட்சிப்பணி (சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், சிவில் சர்வீஸ் தேர்வின் சிறப்பு அம்சங்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையம், தேர்வு எழுதத் தகுதிகள், விண்ணப்பிப்பது, விண்ணப்பங்கள் அனுப்பும்போது கவனிக்கவேண்டியவை), இந்திய ஆட்சிப்பணியின் மூன்று கட்டத் தேர்வுகள் (முதல் நிலைத்தேர்வு, முதன்மை நிலைத்தேர்வு, நேர்முகத்தேர்வு),  நூலகம் சென்று படிப்பது (நூலகப் படிப்பின் மூலம் உயர்ந்தவர்கள், நூலகப் படிப்பின் மூலம் ஐ.ஏ.எஸ்.தேர்வானவர்கள், நூலகங்களில் உள்ள வசதிகள்), பயிற்சி மையம் (பயிற்சி மையங்கள், பெண்களுக்கான இலவசப் பயிற்சி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதத் தாட்கோ உதவித்தொகை, ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் பயன்படும் படிபப்புகள்) போன்ற தலைப்புகள் பல உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.

இந்நூலைப் பற்றி அரியலூர் மாவட்ட  ஆட்சியர் அணிந்துரை : 
"இன்றைய காலகட்டத்தில் திறன்மிக்க மாணவ மாணவிகள் இந்திய ஆட்சிப்பணியைப் பெற மிகவும் விரும்புகின்றாரகள். ஆனால போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதில் வெற்றி பெறுவதற்குதிரய வழிகள் யாவை என்பதை எல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஐ.ஏ.எஸ்.கனவுடன் வாழும் அனைவருக்கும் இந்நூல் பேருதவி புரியும் என்பது உறுதி.. இந்திய இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு இத்தேர்வினை எதிர்கொண்டால் ஏதாவது ஒரு பணியில அமரலாம். ஆதலால் ஊக்கத்துடன் முயல்வதற்கு இந்நூல் உங்களுக்குக் கையேடாக உதவும். நகர்ப்புற இளைஞர்களுக்குப் பல வாய்ப்புகள் அமையும். ஆனால், கிராமப்புற இளைஞர்களுக்கு இந்நூல் ஒன்றுதான் வாய்ப்பாக ஏணியாக அமையும்....."  

இந்நூலைப் பற்றி நூலாசிரியர் :  
"போட்டிகள் நிறைந்த உலகில் வெறும் பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்ல முடியாத சூழல் இப்போது உள்ளது. படிப்பறிவோடு பட்டறிவையும் பன்முகத்திறமையும இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்....நாள் தவறாமல் நூலகம் சென்று வாசிக்கின்ற பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொண்டால் பல போட்டித் தேர்வுகளை அவர்களால் எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்....இளைஞர்கள் தொலைக்காட்சி, கைபேசி, இணையதளம், வைலைதளம், வீடியோ விளையாட்டு முதலானவற்றிற்கு அடிமையாகிவிட்டால் ஒரு ரோபோவைப் போல் இயந்திரமாகிவிடுவர். இதனால் மூளையில் பாதிப்பு உண்டாகி நினைவாற்றல் குறையும்....ஆதலால் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக   நின்று அவர்களைப் பக்குவப்படுத்தி அவர்களது வாழ் உயர்த்துவது மூத்தோர் கடமையாம். அக்கடமைக்கு அணில் உதவியாக யான் பாடுபட உள்ளேன்....." 

ஐ.ஏ.எஸ். எனப்படுகின்ற இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்விற்கான இரு தாள்களுக்குரிய பாடங்கள் (400 மதிப்பெண்கள்), முதன்மைநிலைத் தேர்விற்கு உள்ள ஒன்பது தாள்களுக்குரிய பாடங்கள் (2350 மதிப்பெண்கள்) மற்றும் நேர்முகத்தேர்வு (275 மதிப்பெண்கள்) என்றவாறு தேர்வின் அமைப்பினைத் தொடங்கி பறவைப்பார்வையாக தேர்வுடன் தொடர்புடையனவற்றை ஆசிரியர் விவாதிக்கும் விதம் படிப்போர் மனதில் பதியும் வகையில் உள்ளது.

தேர்வு எழுதவேண்டியோர் வைக்கவேண்டிய நம்பிக்கை, உறுதியான எண்ணம், நேர்மறை சிந்தனை ஆகியவற்றைப் பற்றி மிகவும் நுணுக்கமாக ஆசிரியர் எழுதியுள்ளார். இத்தேர்வினை எழுதி நல்ல நிலையில் உள்ளோர், அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி ஆகியவற்றையும் எளிதாகப் புரியும் வகையில் பகிர்ந்துள்ளார். தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், மதிப்பெண்கள் விவரம், எத்தனை முறையில் எழுதலாம், எங்கு தேர்வு எழுதவேண்டும் என்ற நிலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் ஆசிரியர் திரட்டித் தந்துள்ளார். எந்தந்த நூல்களைப் படிக்கவேண்டும், எந்தந்த இதழ்களைப் படிக்கவேண்டும், நாளிதழ்கள் வாசிப்பதன் முக்கியத்துவம், தொலைக்காட்சிச் செய்திகளைக் கேட்பதில் உள்ள பலன், ஆங்கில இதழ்களைப் படிக்க வேண்டிய காரணம், நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்துக் கொள்ளவேண்டியதன் தேவை என்ற வகையில் தேர்வு எழுதுவோரின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்துள்ளார்.  பலர் விண்ணப்பித்தாலும்  குறைந்த அளவிலானர்களே  தேர்வு எழுதுகின்றனர் என்றும் கூறி, விண்ணப்பித்தவர்கள் பின்வாங்குவதற்கான காரணங்களையும் விளக்குகின்றார்.  

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி, அஞ்சல் மூலம் படித்தவர், தொழில்நுட்பப்பயிற்சி முடித்தவர், ஏழாவது முயற்சி, தமிழ் வழி, நூலகப்படித்து நிறைவு செய்தவர் என்ற பல தரப்பினர்களின் சாதனைகளை ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார். அவர்களுடைய அனுபவங்களைப் படிக்கும்போது நம்மாலும் படித்து தேர்ச்சி பெற முடியும் என்ற எண்ணத்தை படிப்பவர் மனத்தில் ஆழப் பதிக்கிறார் ஆசிரியர். 

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்புவோருக்கு அனைத்துச் செய்திகளையும் கொண்டு அமைந்துள்ள நூல் அவர்களுடைய பல ஐயங்களை தெளிவிப்பதோடு, நம்மால் எழுத முடியும், தேர்ச்சி பெற முடியும், நல்ல பதவியைப் பெற வேண்டும் என்ற ஓர் எண்ணத்தை விதைக்கிறது. இக்காலகட்டத்திற்குத் தேவையான இந்நூலைப் படிப்போம், பயன்படுத்திக்கொள்வோம், வாருங்கள்.

நூல் : எளிது எளிது ஐ.ஏ.எஸ்சி. தேர்வு
ஆசிரியர் :  உட்கோட்டை பழனியப்பன் (04331247427/9789640173)
பதிப்பகம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வளர்மதி பதிப்பகம், வடக்குத்தெரு, உட்கோட்டை அஞ்சல், அரியலூர் மாவட்டம் 612 901 
ஆண்டு : ஏப்ரல் 2015
விலை : ரூ.120

9 comments:

  1. தக்க தருணத்தில் இந்நூல் பற்றிய விபரங்களை அறிய வைத்த முனைவர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்லதோர் அறிமுகம் முனைவரே

    ReplyDelete
  3. தேர்வு எழுதுபவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

    ReplyDelete
  4. அரிய பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. நேரில் பார்க்கும் அனைவருக்கும் இதுபற்றி அறிமுகப்படுத்துவேன். நன்றி.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல்கள் அடங்கிய அறிமுகம். நாங்களும் இதுகுறித்துச் சொல்கிறோம் தேவைபடுவோர்க்கு...பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  8. பயனுள்ள நூலிற்கு
    அருமையான அறிமுகம்
    பயனருக்கு வாழ்த்து

    ReplyDelete
  9. சென்ற மாதம் அவரை ஜெயங்கொண்டத்தில் சந்தித்துப் பேசினேன். அந்த நூலை என் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். நல்ல நூல் நல்ல மனிதர் நல்ல பதிவு

    ReplyDelete