25 April 2017

தமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள்

பணி நிறைவடைவதையொட்டி 28.4.2017 மாலை 3.00 மணியளவில் தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில் 
வாழ்த்தியல் விழா நடைபெறவுள்ளது. 
விழாவில் கலந்துகொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன். 
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளரைத் தவிர அனைத்துப் பதிவாளர்களையும், அனைத்துத் துணைவேந்தர்களையும் பார்த்ததும் அவர்களில் பல பேருடன் பணியாற்றியதும் இந்த 35 வருடங்களில் கிடைத்த அனுபவங்களில் முக்கியமானவை. இவ்வினிய வேளையில் அவற்றை பகிர்வதில் மகிழ்கிறேன்.

கைகொடுத்த தட்டச்சும் சுருக்கெழுத்தும்
தமி்ழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாளை (16.8.1982) என்றும் நான் மறவேன். பணியில் சேர்வதற்கு முன்பாக நடைபெற்ற எவ்வித தயக்கமும் இன்றி அமைதியாகத் தட்டச்சிட்டேன். சுருக்கெழுத்துப் பத்தி வாசிக்கப்படும்போதும் அதே நிதானத்தைக் கடைபிடித்தேன். அனைத்திலும் நான் முன்னணியில் இருந்ததாகத் தெரிவித்தனர். 

தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகள் தட்டச்சுப்பணி
1983வாக்கில் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளின் (Statutes of the Tamil University) வரைவினை தட்டச்சிடும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. அப்பணியைத் தந்தபோது துணைவேந்தரவர்கள் "மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றி செய்யவேண்டும்" என்றார். துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில், என் ஆரம்ப காலப் பணிகளில் எனக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பாகவும், மறக்கமுடியாத பணியாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளை தட்டச்சிடும் பணி அமைந்தது. இப்பணிக்காக அனைவரின் பாராட்டையும் பெற்றேன்.

ஓவியத்துறை
நான் பணியில் சேர்ந்து சில மாதங்களில் ஓவியத்துறை சார்பாக இந்திய அளவிலான ஒரு கருத்தரங்கின்போது ஓர் அறிஞருக்கு வழங்கவேண்டிய மதிப்பூதியத்தைத் தவறுதலாக பிறிதொரு அறிஞருக்கு வழங்கிவிட்டேன்.  புலத்தலைவரும், துறைத்தலைவருமான முனைவர் ஏ.எஸ்.ராமன் அவர்கள், "தவறு வருவது இயல்பே. இதுபோன்ற பணிகளைச் செய்யும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும்". என்றார். எனக்கு அது ஒரு சரியான பாடமாக இருந்தது. இவ்வாறு ஒரு துறை இருந்ததே பலருக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை.  
(புகைப்படம் நன்றி : Tamil University-A Profile 1983)
கல்வெட்டுத் துறை
பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் கல்வெட்டுத்துறை சார்பாக நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கிற்காக (Indus Script Seminar) உரிய ஏற்பாடுகளைச் செய்தபோது லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் கீனியர் வில்சன் (Dr Kinnier Wilson) என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு கசப்பான அனுபவமாகும். இதே கருத்தரங்க பொறுப்பாளர் முனைவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து நான் மேற்கொண்ட சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டினை மனம் திறந்து பாராட்டியவர் ஆவார்.

நீண்ட சொற்றொடரில் நன்றி
Tamil Civilization இதழை அனுப்பிவைக்கும்படி வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அப்போதிருந்த பதிவாளர் முனைவர் சு.செல்லப்பன் அவர்கள், உரிய மறுமொழியினை தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். என் நினைவிலிருந்து.... "While acknowledging with thanks the receipt of your letter cited above we wish to state that the quarterly research journal of Tamil University, Tamil Civilization, is in print and would be sent to you in due course, for which the relevant details regarding the subscription rates issue is enclosed for ready reference". இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பாகவும் உள்ளது.  

பணியின் மீதான பொறுப்பு
தமிழ்ப்பல்கலைக்கழகம், 25.8.1982ஆம் நாளிட்ட கடிதத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தர்களுக்குத் தந்த கடிதத்தில், எங்களின் பொறுப்பை உணர்த்திய, சொற்றொடர்: "...The officers and Academic Staff are requested to utilise the services of the Stenographers as per their Secretaries in the best way just in the Foreign Countries. The Stenographers should be trained for in that way. In the absence of the Officers or Academic Staff, the stenographers posted to work under their control should be able to manage the Section as Secretaries efficiently." பணியில் சேர்ந்த காலத்தில் பணிப்பொறுப்பானது பிற பணி நிலைகளிலிருந்து வித்தியாசமாக அது எங்களுக்கு அப்போது தோன்றியது. பல்கலைக்கழகம் அப்போது எங்களுக்குத் தந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சொற்கள் அப்பணியின் இன்றியமையாமையை உணர்த்தின. 

துணைவேந்தர் வருகையும், என் தாமதமும் (அலுவலகத்தொடர்பு அல்ல)
1 செப்டம்பர் 1985இல் தஞ்சாவூர் கீழ வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வாக கொண்டிராஜபாளையத்தைக் கடந்துகொண்டிருந்தபோது துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. "வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். அவரிடம் நேரில் வாழ்த்து பெறமுடியவில்லை. திருமணத்திற்கான விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் அவருடைய அலுவலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்துவிட்டு வந்தேன்.    

தமிழ் சிவிலிசேசன்
தமிழ்ப்பல்கலைக்கழக ஆங்கிலக் காலாண்டிதழானTamil Civilization இதழுக்கான முகப்பட்டை வடிவமைக்கப்படும்போது என்னால் மேற்கொள்ளப்பட்ட ப்ளாக் தயாரிப்பு, அட்டை வடிவமைப்பு உள்ளிட்ட பல ஆயத்தப் பணிகள் மறக்கமுடியாதவை. முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்கள் வடிவமைப்பில் நேர்த்தி, எழுத்துருவில் தெளிவு, உள்ளடக்கத்தில் உலகளாவிய தரம், ஆடம்பரமற்ற அதே சமயம் பார்வைக்கு உயர்ந்த தரம் என்ற நிலையிலும், திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் ISDL இதழின் அமைப்பிலும் அமையவேண்டும் என்று பதிவாளர் வழியாக ஆணையிட்டிருந்தார். முதல் இதழ் வெளியானதும் கட்டுரையாளர்களுக்கு இதழின் படியும், கட்டுரைப்படிகளும் (offprints) அனுப்பும்போது பெற்ற அனுபவமும்கூட மறக்கமுடியாதனவாகும். 


தமிழ்க்கலை
தமிழில் ஒரு காலாண்டிதழ் வரவேண்டும் என்று முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான குறிப்பினைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன். Tamil Civilization என்பதற்கு இணையாக தமிழ் சிவிலிசேசன் (ஆங்கிலத்தில் உள்ளபடியே தமிழில்), தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை என்ற பெயர்கள் (தலைப்புகள்) பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக தமிழ்க்கலை என்ற பெயர் துணைவேந்தரால் தெரிவு செய்யப்பட்டது. 


Literary History in Tamil 
1982இல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய Literary History in Tamil என்ற ஆங்கில நூலின் வரைவை தட்டச்சு செய்யும்போது  அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகும். நூலின் தலைப்பு Literary History of Tamil என்றுதானே ஐயா இருக்கவேண்டும் என்று நான் கேட்க அதிலிருந்து இது சற்றே மாறுபட்டது, ஏன் வேறுபட்டதும்கூட என்றார். அவ்வாறே, அந்நூலில் Prologue, Epilogue என்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் முன்னுரை மற்றும் முடிவுரை என்பதையே இது குறிக்கும் என்றார். அப்போது அவர் கொடுப்பதை அப்படியே பலர் தட்டச்சு செய்துவிடுவர் ஆனால் இவ்வாறான ஐயங்களை சிலரே கேட்கின்றனர் என்று கூறி என்னைப் பாராட்டினார். 

ஆயுள் தண்டனைக் கைதியின் ஆர்வம்
1985வாக்கில் வேலூர் மத்திய சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக்கைதி ஒருவர் பல்கலைக்கழக வெளியீடுகள் மீது ஆர்வம் கொண்டு தனக்கு அனுப்பும்படி கடிதம் அனுப்பியிருந்தார். துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களுடைய ஆணைப்படி தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர் கட்டணம் பெறப்படாமல் அன்பளிப்பாக அவருடைய எண் குறிப்பிடப்பட்டு வேலூர் சிறை முகவரிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக தொடர்ந்து அனுப்பிவைக்கப்பட்டது.

பதிப்புத்துறை
பதிப்புத்துறையில் பணியாற்றியபோது ஒவ்வொரு மாதமும் வெளிவருகின்ற செய்தி மலருக்காக செய்திகளைத் திரட்டுவதும், தட்டச்சு செய்வதும், விடுபாடின்றி உறுப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதும் முக்கியமான பணியாக இருந்தது. விழா நிகழ்வுகளை  வடிவமைக்கவேண்டிய முறை, புகைப்படங்களை வெளியாரிடமிருந்து பெறும்போது நன்றி கூறும் முறை உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்த ஒரு துணை ஆசிரியர், "ஆங்கில செய்தி மலரை ஜம்புலிங்கம் பார்த்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம்" என்பார். He proposed a vote of thanks (vote of thanks என்பதற்கு முன் சேர்க்க),   A two-day seminar was held....(two-days அல்ல) என்பன போன்ற பல சொல் அமைப்புகளைக் கற்கும் வாய்ப்பும் அப்போது கிடைத்தது.    

மொழியியல் துறை

மொழியியல் துறையில் பணியாற்றியபோது சொற்கள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில் (குறிப்பாக ஆங்கிலத்தில்) உள்ள முறைகளைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. புதிய சொல் தேடலும், துறை ஆசிரியர்களுடன் அது பற்றி விவாதிப்பதும் அக்காலகட்டத்தில் அதிகரித்தது.  

அன்பளிப்பு இதழ்கள் 
வாசிப்பினை ஊக்குவிக்கவும், பிற இதழ்களுக்கு ஆதரவு தரவும் தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை இதழ்களுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்களுக்கு தமிழ்ப்பொழில், செந்தமிழ், கலைக்கதிர், விஞ்ஞானச்சுடர் உள்ளிட்ட ஐந்து மாத இதழ்கள் 200 எண்ணிக்கை பெறப்பட்டு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. பெயர்ப்பட்டியலைத் தயாரித்து, உள்நாடு, வெளிநாடு என பிரித்து விடுபாடின்றி அனுப்பும் பணியானது சற்றே சிரமமாக இருந்தாலும் குறையின்றி அப்பணி மேற்கொள்ளப்பட்டது.  

Embodiment of Tamil Culture
2006இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையைக் கொண்ட Embodiment of Tamil Culture என்ற கையேட்டை தட்டச்சிடும் பணியை மேற்கொள்ளும்படி துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் அவர்கள் பணித்தார்கள். பல துறைகளிலிருந்து செய்திகளை ஒன்றுதிரட்டவும், வடிவமைக்கவும், தட்டச்சு செய்து சிறு கையேடாக ஆக்கவும் மேற்கொண்ட வாய்ப்பு மறக்கமுடியாததாக அமைந்தது. ஒவ்வொருவர் நடையிலிருந்தனவற்றை சீராக ஒரே நடைக்குக் கொண்டு வர அபரிமிதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.    

குடியரசுத்தலைவர் கலந்துரையாடல் கேள்விகள் தட்டச்சு
24 செப்டம்பர் 2006இல் நடைபெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக குடியரசுத்தலைவர் மேதகு  ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடன் மாணவர்களின்  கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடியரசுத்தலைவரிடம் மாணவர்கள் கேட்கும் கேள்விகளைத் தட்டச்சு செய்யும் பணி நான் பணியாற்றிய பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. கேள்விகளைத் தனித்தனித்தாளில் தட்டச்சிடப்பட்டு குடியரசுத்தலைவர், கேள்வி கேட்கும் மாணவர், மாணவர்களை நெறிப்படுத்தும் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கப்படும் வகையில் தயாரிக்கப்பட்டு, அமைப்பாளர்களிடம் தரப்பட்டன. கூடுதலாக சில படிகளை நான் எடுத்து தனியாக ஒரு கோப்பில் வைத்தேன். உடன் இருந்த நண்பர் திரு ராஜராஜன் அதற்கான காரணத்தைக் கேட்டாபோது அவசரத்திற்கு உதவும் என்றேன். மறு நாள் விழா தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக விழா அமைப்பாளர்கள் அவசரமாக வந்து கலந்துரையாடலுக்கான கேள்விகளை மேடையில் கேட்பதாகக் கூறினர். முதல் நாள் அனுப்பிய விவரத்தைக் கூறியபோது அது அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் உடனே அனுப்பிவைக்கும்படியும் கேட்டனர். அவற்றை அச்செடுக்க முயற்சி மேற்கொண்டபோது கணிப்பொறி இயங்காமல் (complete shut down and dead) நின்றுவிட்டது. சமயோசிதமாக நான் எடுத்துவைத்திருந்த படிகள் எங்களுக்கு உதவின. அவற்றை விழா நடக்கும் இடத்திற்கு அனுப்பிவைத்தோம்.     

தேசிய தர மதிப்பீட்டுக்குழு அறிக்கை 
தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக்குழு (NAAC-National Assessment and Accreditation Council) வருகையை முன்னிட்டு உரிய அறிக்கை தயாரிக்கும் பணியின்போது தட்டச்சு மற்றும் தொகுப்பு பணி என்னால் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக அனைத்து ஆசிரியர்களின் கல்விப்பணி, பல்கலைக்கழகம் தொடர்பான கல்வி மற்றும் அலுவல் பணியமைப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்று வடிவமைத்து, அவர்கள் தந்த வடிவத்தில் தட்டச்சு செய்து அறிக்கை தயாரித்தபோது பெற்ற அனுபவம் ஓர் அரிய  ஆய்வு நூலை ஆதாரங்களுடன் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அறிக்கையை பெங்களூரிலுள்ள அலுவலகத்தில் சென்று சேர்த்தபோது பெற்ற அனுபவம் என்றுமே என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.  

தேர்வுப்பிரிவு
தேர்வுப்பிரிவில் பணியாற்றியபோது ஆயிரக்கணக்கில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆய்வாளர்கள் ஆய்வேட்டை அளிக்க வரும்போது படிவம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டள்ளதா என்பதை உறுதி செய்தபின் ஆய்வேட்டின் தலைப்பு, வடிவம், பக்கத்தலைப்புகள், அடிக்குறிப்பு தந்துள்ள விதம், முன்னுரை மற்றும் முடிவுரையில் விவாதிக்கப்பட்டவை ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் அப்போதே உரிய ஆய்வாளரிடம் அது பற்றி விவாதிப்பதையும் பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆய்வாளர்களுடனான நல்லுறவை மேம்படுத்தவும், பல பொருண்மைகளைப் பற்றி அறியவும் இக்காலகட்டம் எனக்கு மிகவும் உதவியது. 


.....................அனுபவங்கள் தொடரும்
நன்றி
திரு மா.கௌதமன், தமிழ்ப்பல்கலைக்கழக முதல் நிலை நூலகர் (பணி நிறைவு)
(தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை  மேலட்டைகளின் புகைப்படங்கள்)
துணை நின்றவை
Tamil University-A Profile, 1983 
Embodiment of Tamil Culture, Tamil University, 2006
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்

21 April 2017

என்னைப் பற்றி நான் : மனசு தளம்

அடுத்த வாரம் இதே நாளில்  (28 ஏப்ரல் 2017) பணி நிறைவு பெறவுள்ள நிலையில் என்னைப்பற்றி நான் என்ற தலைப்பிலான பதிவை 
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


என்னைப் பற்றி நான் என்ற ஒரு தலைப்பினைக் கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு பரிவை குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிசையில் அவரது வலைப்பூவில் தொடர்ந்து பல நண்பர்கள் எழுதி வருவதைப் பார்த்து, அவ்வப்போது பின்னூட்டம் இட்டு வந்துள்ளேன். சுயமதிப்பீடு செய்வதற்கு இவை போன்ற பதிவுகள் மிகவும் உதவும். 
என் அத்தை கூறுவார் "எப்படியும் வாழலாம்ணு இருக்கு. இப்படித்தான் வாழணும்னு இருக்கு, இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான்.... எப்படி பிழைக்கப் போறோனோ?" பெற்றோர் என்று இருந்தாலும்கூட என்னை வளர்த்தவர்கள் ஆத்தா, தாத்தா மற்றும் என் அத்தையே. என்னை வளர்த்துக் கொண்டிருப்பதும், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்க உதவுவதும், தடுமாறாமல் என் வழியில் நான் தொடர்ந்து செல்லக் காரணமாக இருப்பதும் இந்த சொற்றொடரே.  இப்படியாகத்தான் வாழவேண்டும் என்ற நியதியை வைத்துக்கொண்டு இச் சமுதாயத்தில் வாழ்வது அதிகம் சிரமமே. இதுவரை அவ்வாறே இருந்துவிட்டேன். மாற்றிக்கொள்ள முடியவில்லை. என் கல்லூரி நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணன் "Men may come men may go but I go on forever" என்ற புகழ்பெற்ற அயல்நாட்டுக் கவிஞனின் சொற்களைக் கூறுவார்.  விடாப்பிடியான இக்கொள்கையானது மற்றவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காண்பிப்பதை உணரமுடிகிறது.



நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு (பி.1959, கும்பகோணம்) குடும்பச்சூழல் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து (1975-79), அதே காலகட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியனவற்றைக் கற்ற வகையில் வேலை வாய்ப்பு பெற்றேன். சென்னையிலும், தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் தனியார் நிறுவனங்களில் (1979-82) பணியாற்றி விட்டு, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து (16 ஆகஸ்டு 1982) சுமார் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வீட்டு வேலைகளையும், பிற பணிகளையும் விடுமுறை நாள்களில் கவனித்துக் கொள்கிறேன். நண்பர்கள், அறிஞர்கள் சந்திப்பு, ஆய்வுப்பணி, களப்பணி போன்றவற்றை விடுமுறை நாள்களில் மேற்கொண்டுவருகிறேன்.  ஒரு நாளுக்கான திட்டமிடலை பின்வருமாறு அமைத்துக்கொள்கிறேன்.    
  • காலை 6.30 : 10 நிமிட உடற்பயிற்சி
  • காலை 6.45 : Guardian, New York Times, Dawn உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு  
  • காலை 7.45 : The Hindu மற்றும் தினமணி வாசிப்பு 
  • காலை 8.00 : தேவாரம் ஒரு பதிகம் வாசிப்பு (விடுமுறை நாள்களில் திவ்யப் பிரபந்தமும் சேர்த்து)
  • காலை 8.20 : அலுவலகத்திற்குக் கிளம்புதல் (பேருந்தில்)
  • காலை 9.30 : அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் வரல்
  • மாலை 5.45 : அலுவலகத்தை விட்டுப் புறப்படல் 
  • இரவு 6.30 : இல்லம் வந்து சேர்தல், குடும்பத்தினருடன் அளவளாவுதல்
  • இரவு 8.00 : சிறிது நேரம் வாசிப்பு
  • இரவு 9.00 : கட்டுரைகள் எழுதுதல்
  • இரவு 10.00 : உறங்கச் செல்லல்
வாழ்வின் இலக்குகளாக நான் நினைத்தனவற்றில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியுள்ளேன் என்பது எனக்கு மன நிறைவாக உள்ளது. வாசகர் கடிதம் எழுதத் தொடங்கி தற்போது சுமார் 1000 பதிவுகள் (ஆய்வுக்கட்டுரைகள், இரண்டு வலைப்பூவில் கட்டுரைகள், நாளிதழ்களுக்குக் கட்டுரைகள், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகள்) எழுதுமளவு உயர்ந்துள்ளது.   

காலந்தவறாமை : 1979இல் முதன்முதலாக பணியில் சேர்ந்த முதல் காலந்தவறாமை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரத்திற்குள் சென்றுவிடுவேன். இயலா நிலை ஏற்படின் இயலாமையைத் தெரிவித்துவிடுவேன். நிகழ்ச்சியோ, விழாவோ நடப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். நேரம் வீணாவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.    

நேரம் பேணுதல் : உரிய நேரத்தில் உரிய பணிகளை முடித்துவிடல் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அந்தந்த நேரத்தில் அந்தந்த பணிகளைச் செய்யுமளவு வரையறுத்துக்கொள்வேன். தகுதிக்கு மேலாக முடியாததை இழுத்துப்போட்டுக் கொண்டு சிரமப்படுவதில்லை. இயலாது எனின் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவேன். 

நேர்மை அனுசரித்தல் : முடிந்த வரை நேர்மையாக இருக்கிறேன். இதனால் அதிக சங்கடங்களை எதிர்கொண்டு வருகிறேன்.   

இடம் விட்டு நகர்தல் : நமக்குப் பிடிக்காத ஒன்று, இயற்கைக்கு முரணானது, விதிகளுக்கு அப்பாற்பட்டு நடப்பது, அரசியல், இனம், சாதி என்ற போர்வையில் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி காரியம் சாதிக்கப்படல் என்பன போன்ற செயல்கள் கண் முன்னே நடக்கும்போது அங்கிருந்து நகர்ந்துவிடுவேன். 

மேற்கொள்ளும் பணிகளில் கட்டுப்பாடு முடிந்தவரை என்னால் மேற்கொள்ள முடியும் என்ற பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றேன். இயலாத ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளையோ எடுத்துக்கொண்டு நேரமில்லை, செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்வது கிடையாது.  

சுற்றமும் நட்பும் பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகிய ஒருவர், அனைத்து செய்திகளையும் என்னுடன் பகிர்வார். நானும் அவ்வாறே பழகிவந்தேன். சில நாள்களாக அவரைக் காணவில்லை. பின்னர் வேறு சில நண்பர்கள் மூலமாக தனிப்பட்ட முயற்சியாலும், தகுதி அடிப்படையிலும் அவர் பிறிதொரு இடத்தில் ஆசிரியராக, பணியில் சேர்ந்ததாக அறிந்தேன். அதிர்ச்சியடைந்தேன். இதனை அவர் என்னுடன் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவரைப் பற்றி பேசுவதை முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். இவ்வாறே குடும்ப நிலையிலும், உறவு நிலையிலும் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். தம் தவறை அவர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும்கூட அவர்களை விட்டு விலகி விடுகின்றேன். மனதிற்கு சரியாகப் படும் இடத்தில் நேர்மையினைக் கடைபிடித்து வரும் நிலையில் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன்.  

நெஞ்சு நிமிர்தல் வாய்மையைக் கடைபிடிக்கும் நிலையில் எவருக்கும் அஞ்சுவதில்லை. அனாவசியமாக ஒருவரைப் பேருக்காகப் புகழ்தல்,  பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக உயர் பதவியில் இருப்போரை பாராட்டுதல், தத்துவங்களைப் பேசிக்கொண்டு குறுகிய நோக்கில் நடந்துகொள்ளல் என்பனவற்றில் ஈடுபடுவதில்லை. அவ்வாறான குணமுள்ளவர்களோடு பழகுவதும் இல்லை.  மூத்த அலுவலரோ, ஆசிரியரோ, நண்பரோ யாராக  இருந்தாலும் சரி, அவர் தவறாக ஒரு காரியத்தினைச் செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். (ஓர் அலுவலர் தட்டச்சில் பிழை செய்தபோது சுட்டிக்காட்டிய நிலை ஏற்பட்டது. பிறர் அதனைக் கண்டும் காணாதது போல இருந்தனர். அவ்வாறே ஆய்வு நிலையில் துறை சார்ந்த ஒருவர் புத்தர் சிலையை சமண தீர்த்தங்கரர் சிலை என்றார். பதவிப் பொறுப்பில் இருந்ததால் அவர் தவறான கருத்து கூறியும் உடன் இருப்போர் அதற்காக தலையாட்டினர். நான் ஏற்காமல், என் கருத்தை அதுவும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் நான் மாற்றுக்கண்ணோட்டத்தில் அவர்களால் பார்க்கப்பட்டேன்). என்னைவிட இளையவர்களாக இருந்தால்கூட அவர்கள் கூறும் கருத்தில் நியாயமிருப்பின் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.   

பொருளாசை, பணத்தாசை : பொருள்மீதோ, பணத்தின்மீதோ ஆசை வைத்து சேர்க்க ஆசைப்படுவதும், அண்டை வீட்டாரிடம் இருப்பதால் நம்மிடமும் இருக்கவேண்டும் என்று பொருள்களை வாங்கிச்சேர்ப்பதோ கிடையாது. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அதனை மீறாமல் இருக்க முயற்சிக்கிறேன்.  

கணக்கு வைத்துக்கொள்ளல் அவ்வப்போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு கணக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இது பல நிலைகளில் அனாவசிய செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும், நம்மை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.

ஆவணப்படுத்துதல் முதன்முதலாக நான் வேலைக்குப் போட்ட விண்ணப்பம் (12.5.1976) தொடங்கி அண்மையில் தினமணியில் வெளியான என் பேட்டி வரை அனைத்தையும் ஆவணப்படுத்தி, ஆண்டுவாரியாக நூற்கட்டு செய்து வைத்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் இவற்றை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு என்ற தலைப்புகளாகப் பிரித்து வைத்துள்ளேன். பெரும்பாலும் நான் எழுதி வெளியான கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை இவ்வாறு வைத்துள்ளேன். 

கோபப்படல் : நமக்குப் பிடிக்காத, ஒவ்வாத ஒரு பொருள், நபர், செயல், சூழல் என்ற நிலையில் அதிகம் கோபம் ஏற்பட்டு விடுகிறது. முன்னர் அதிகம் கோபப்பட்டு கொண்டு இருந்தேன். தற்போது இதன் அளவு குறைந்துவிட்டாலும், இக்குணத்தை என்னால் முற்றிலுமாக விடமுடியவில்லை. 

ஆசிரியர் பணி : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், அலுவல் நிலையில் பணியாற்றும்போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். இரு முறை நேர்முகத்தேர்வினை எதிர்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனைகளை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த அளவிற்கு 1000+ பதிவுகளை எழுதியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பதை உணர்கிறேன். 

குடும்பம்
மனைவி (திருமதி பாக்கியவதி), மூத்த மகன் (திரு பாரத்/பி.காம்., எம்.பி.ஏ.,), இளைய மகன் (திரு சிவகுரு/பி.டெக்.,) ஆகியோரைக் கொண்ட குடும்பம். மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு மகன். இரு மகன்களும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மகன்கள் இருவருக்கும் பள்ளிக்காலம் முதல் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வளர்த்தோம். அதன் விளைவாக எங்கள் இல்லத்தில் தற்போது ஒரு சிறிய நூலகம் உள்ளது. நான் இரு வலைப்பூக்களில் (சோழ நாட்டில் பௌத்தம்முனைவர் ஜம்புலிங்கம்  ) எழுதிவருகிறேன். என் மனைவி (பாக்கியவதி பக்கங்கள்), மூத்த மகன் (பாரத்), இளைய மகன் (தஞ்சை தமிழ்ச்செல்வன்) ஆகியோரும் வலைப்பூவில் எழுதி வருகின்றனர். 

சமுதாயத்தில் குடும்பம், பணி, ஆய்வு என்ற நிலையில் முன்னுதாரணமாக இருக்க முயற்சித்து வருகிறேன். அதற்கு என் நண்பர்களும், குடும்பத்தவர்களும் உதவியாக உள்ளனர். இவையனைத்திலும் என் மனைவி மற்றும் மகன்களின் ஒத்துழைப்பு என்னை மேம்படுத்த உதவியாக உள்ளது. குறிப்பாக நாம் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் உறுதியாக உள்ளேன். எனது இப்பயணம் தொடரும்.   
திரும்பிப் பார்க்கிறேன்
வாழ்த்தியல் விழா 28 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்

16 April 2017

பணியனுபவங்கள் : சூலை 1979 - ஆகஸ்டு 1982

கல்லூரிப்படிப்பு முடிந்து பணியில் சேர்ந்தபோது பெற்ற அனுபவங்கள் வாழ்வில் நான் பக்குவப்பட பெரிதும் உதவின. முதன் முதலாகப் பணிக்குச் சேர்ந்து தொடர்ந்து சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது குடும்பச் சூழல், பொருளாதார நிலை, அறிவு மேம்பாடு, புதிய சூழல், பழக்கவழக்கம் என்ற நிலைகளில் வாழ்க்கைக்கான ஒரு புதிய தடத்தை உருவாக்கிய காலகட்டம் அது. அனைவரும் தம் வாழ்வில் எதிர்கொள்வதே. நானும் அத்தகைய சூழலை எதிர்கொண்டு, பல அனுபவங்களைப் பெற்றேன். எனது அந்த அனுபவங்கள் கும்பகோணத்திலிருந்து சென்னை, தஞ்சாவூர், மறுபடியும் சென்னை, கோயம்புத்தூர் என்ற இடங்களில் கிடைத்தன. 
  • சென்னை  (சூலை 1979 - செப்டம்பர் 1979)
கல்லூரிப்படிப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்குச் சென்றதை மறக்க முடியுமா? நான் இளங்கலை மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தை (ஜனவரி 1979) இறந்தார். மன நிலை காரணமாக நான் மூன்றாமாண்டுத் தேர்வு எழுத முடியாத சூழலில் இருந்தபோது, சென்னையிலிருந்து வந்திருந்த என் மாமா தனஞ்செயன் அவர்கள், தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, தேர்வினை எழுதாமல் இருக்கவேண்டாம் என்று அறிவுரை கூறி எனக்காக அவரே விண்ணப்பம் தயாரித்து அனுப்பிவைத்தார். அவ்விண்ணப்பத்தில் candidature (I offer my candidature for the same) என்ற புதிய சொல்லை நான் கண்டேன். அதில் நான் கையொப்பமிட்டு அனுப்பினேன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விடுப்பு வெற்றிடத்தில் (leave vacancy) ரூ.300 மாத ஊதிய அடிப்படையில், பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். 

என் மாமா தயாரித்து அனுப்பிய 
13 சூன் 1979 நாளிட்ட முதல் விண்ணப்பம்
முதல் தொலைபேசியழைப்பு
அலுவலகத்தில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பணியில் சேர்ந்த மூன்றாம் நாள் புதுதில்லியிலிருந்து ஒரு தொலைபேசியழைப்பு வரவே, தொடர்பை என்னிடம் கொடுத்து, அவர்கள் பேசுவதைக் குறிப்பு எடுத்துக்கொண்டு அதன்படி கடிதத்தை தட்டச்சு செய்துவிடு என்றார். அதற்கு முன்னர் இரு முறைதான் தொலைபேசியில் பேசியுள்ளேன். (வியப்பாக இருக்கிறதல்லவா?) தொலைபேசியில் அவர் பேசியதும் புரியவில்லை, ஆங்கிலமும் தெளிவாக இல்லை. கையில் பென்சிலையும் குறிப்பு நோட்டையும் வைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்தவரை சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டேன். அதனை வைத்து என்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அவரிடம் பேசினேன். அவர் மிகவும் பொறுமையாக இருக்கும்படி என்னிடம் கூறினார். பதட்டப்படவேண்டாம் என்று கூறிவிட்டு, நான் குறிப்பு எடுத்தவற்றை ஆங்கிலத்தில் தட்டச்சிட்டுத் தரும்படி கேட்டார். விட்டுவிட்டு தெரியாத இடங்களில் புள்ளி வைத்து அவற்றை அவரிடம் கொடுத்தேன். என்னை சுருக்கெழுத்து கற்க வைத்துவிடுவாய்போலுள்ளது என்று கூறி நான் தந்த குறிப்புகளை வைத்துச் செய்தியைப் புரிந்துகொண்டார். நாளடைவில் தவறின்றி இதுபோன்ற பணிகளை நானே செய்ய ஆரம்பித்தேன். நான் கற்ற இந்தியும், தட்டச்சும், சுருக்கெழுத்தும், The Hindu நாளிதழ் வாசிப்புப் பழக்கமும் பணியின்போது  துணை நின்றன. 

முதல் டெலக்ஸ் பயன்பாடு
முதன்முதலாக டெலக்ஸ் எனப்படும் கருவியை அங்கு பார்த்தேன். தொலைபேசி இணைப்போடு கூடிய தட்டச்சுப் பொறியைப்போல டெலக்ஸ் இருந்தது. டெலக்சில் தலைமை அலுவலகத்திலிருந்து பெறப்படும் செய்தியை உள்ளது உள்ளபடியோ, சில குறிப்புடனோ கிளை அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டிய பணி தட்டச்சு செய்து அனுப்புவது என்பதானது சற்றே வித்தியாசமானது. செய்தியை மட்டும் அனுப்பவேண்டுமென்றால் தொடர்புடைய எண்ணை டயல் செய்யவேண்டும். இணைப்பு கிடைத்ததும் தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வதைப் போல தட்டச்சு செய்யவேண்டும். நாம் தட்டச்சு செய்யும்போது கேட்கும் கேள்விக்கு மறுமுனையில் உள்ளவர் தட்டச்சிட்டே பதில் கூறுவார். கேள்வியும், பதிலும், விளக்கங்களும் இவ்வாறாக தட்டச்சிடப்படும். பெரிய செய்தியாகவோ, அதிக பக்கங்கள் உள்ளனவாகவோ இருந்தால் அவர்கள் அதற்கான குறியீட்டைக் கொடுத்ததும் டேப் போன்ற சிறிய வெள்ளைத்தாளினை அடுத்துள்ள சிறிய கருவியில் செருக வேண்டும். பின்னர் அந்த சிறிய வெள்ளைத்தாள் டேப்பை மறுபடியும் அக்கருவியில் வைத்தால் தானாகவே தட்டச்சிட்டுக்கொள்ளும் வசதியைக் கண்டேன். தலைமை அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளைப் பெற்று பிற கிளை அலுவலகங்களுக்கு உரிய குறிப்புரையுடன் அனுப்பும் அனுபவத்தைப் பெற்றேன்.


  • தஞ்சாவூர் (செப்டம்பர் 1979 - ஆகஸ்டு 1980)
சென்னையில் பணியாற்றும்போதே நாளிதழைப் பார்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு விண்ணப்பித்து, தஞ்சாவூரில் வேலை கிடைத்தது. நேர்முகத்தேர்விற்குப் பின் மருந்து நிறுவனத்தில் ரூ.250 ஊதியத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன். தினமும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு ரயிலில் சென்றுவந்தேன்.  

புதிய சொற்கள் தெரிந்துகொள்ளல்
மருந்து பாட்டில்களில் லேபிள் சேர்ப்பு, பட்டியல் தயாரித்தல், மருந்துகளை பரிசோதனைக்கு அனுப்பல் என்ற பணிகளை மேற்கொண்டபோது மருந்து சம்பந்தப்பட்ட புதிய சொற்களை அறிந்தேன். மருந்து பாட்டில்களில் காணப்படுகின்ற ஒவ்வொரு ஆங்கிலச்சொற்களுக்குமான சொல்லையும், பொருளையும் தெரிந்துகொண்டேன். (q.s. = quantity sufficient, mcg = microgram, Cobalamin = Vitamin B12, I.P. = Indian Pharmacopoeia, B.P. = British Pharmacopoeia). நிறுவன மேலாளர் முன்னர் பல சுருக்கெழுத்தாளர்களும், தட்டச்சர்களும் பணியாற்றினாலும் இவ்வாறாக யாருமே ஒவ்வொரு சொல்லையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தினைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். 

மேலாளருக்காக கையொப்பம்

பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் பல நிறுவனங்களிடம் மருந்துக்கான விலைப்புள்ளிகள் கேட்டு கடிதங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. அப்போது நிறுவன மேலாளருக்காக (for Manager) என்று தட்டச்சிட்டு மேலாளர் கையொப்பமிடும் இடத்தில் என்னை கையொப்பமிட்டு அனுப்பும்படிக் கூறினார் மேலாளர். அதற்கு முன்னர் எந்தப் பணியாளருக்கும் அவ்வாறான அனுமதியை அவர் தந்ததில்லை என்று கூறி அலுவலகத்தில் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டனர். உரிய நேரத்தில் பணிக்கு வரல், மேற்கொள்ளல் என்பதில் தெளிவாக இருந்தேன். மேலாளர் அரிமா சங்கத்தில் இருந்ததால் சங்க உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதும்போது என்ற நடையை அவர் பயன்படுத்தினார். கடிதத்தை ஆரம்பிக்கும்போது Dear Lion......என்றும்,   நிறைவு செய்யும்போது Yours in Lionism  என்றும் எழுதுவதை அறிந்தேன். 

கடிதங்களை வீசி எறிதல்

இதே மேலாளர் ஒரு முறை புதிய பொறுப்பேற்ற மற்றொரு நிறுவன மேலாளருக்குக் கடிதம் எழுதும்போது  I congratulate you on your new assignment என்று எழுதக் கூறியதை நான் பொருள் புரியாமல்  I congratulate you on your new consignment என்று தட்டச்சிட்டுவிட்டேன். நான் தட்டச்சு செய்த தாள்களை அனைத்து பணியாளர்களின் முன்பாக வீசி எறிந்து தட்டச்சு பயின்றுதான் வந்தாயா, ஆங்கில சொற்களுக்கான பொருளைத் தெரிந்துகொள்ள மாட்டாயா என்று கோபமாகக் கேட்டார். சுருக்கெழுத்தில் எழுதும்போது புள்ளியை மாற்றி வைத்த அளவில் இந்த தவறை நான் செய்துவிட்டேன். பின்னர் தவறுக்காக வருந்தினேன். அங்கிருந்துகொண்டே நாளிதழ்களில் விளம்பரத்தைப் பார்த்து  பிற நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வரவே அங்கு செல்ல அனுமதி கேட்டேன். மேலாளரும் ஒத்துக்கொண்டார். 
  • மறுபடியும் சென்னை (ஆகஸ்டு 1980 - நவம்பர் 1980)
சென்னையில் நேர்முகத்தேர்வினை முடித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தைத் தஞ்சையில் கூறி, தஞ்சையிலிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் ரூ.250 மாத ஊதியத்தில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன்.  வந்திருந்த மூவரில் நான் மட்டுமே சுருக்கெழுத்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் சேர்ந்த மூன்று மாதங்களில் என்னை நிரந்தரப்படுத்தி இளநிலைச் சுருக்கெழுத்தர் என்ற பணியில் ரூ.300 ஊதியத்தில் அமர்த்தினர். வழக்கமாகக் கொடுக்கின்ற ஆணையுடன்  "On observing your performance and hard work, we are pleased to keep you in our regular employment"  என்று என்னைப் பாராட்டி தனியாகக் கடிதம் தந்தனர். 

நுணுக்கமான பணிகள்
மிகக்குறைந்த காலத்தில் பலவிதமான புதிய பணிகளை இந்நிறுவனத்தில் அறிந்து கொண்டேன். முழுக்க முழுக்க சுருக்கெழுத்துப்பணிகள் அதிகமாக இருந்தன. புதிய தொழில்நுட்பச் சொற்கள் பலவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வவற்றை உடன் முடிக்க வேண்டிய நிலையில் முந்தைய நிறுவனங்களின் பணி நிறுவனம் உதவியாக இருந்தது. தொடர்ந்து பிற நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்துகொண்டிருந்தேன்.   


  • கோயம்புத்தூர் (நவம்பர் 1980 - ஆகஸ்டு 1982)
தஞ்சாவூரில் பணியாற்றும்போது, முன்னர் செய்வாறே நாளிதழைப் பார்த்து பல இடங்களுக்கு விண்ணப்பித்தபோது கோயம்புத்தூரில் வேலை கிடைத்தது. கோவையில் நேர்முகத்தேர்விற்குச் சென்ற அனுபவம் மறக்கமுடியாத ஒன்றாகும். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தட்டச்சு, சுருக்கெழுத்தில் முதலிடம் பெற்ற நிலையில் கோவையில் எழுத்தர் மற்றும் தட்டச்சர் பதவியில் தலைமை அலுவலகத்தில் நான் நியமிக்கப்பட்டேன். என்னுடன் சேர்ந்த இருவர் முறையே ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பணியில் சேரும்படி பணிக்கப்பட்டார்கள். ஊதியம் ரூ.350 என்று ஆணை பெறப்பட்டது. ஆணை வாங்கியபின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது நிர்வாக இயக்குநர் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது அழைப்பு ஓர் அதிர்ச்சியைத் தந்தது. ஆணையில் ரூ.350 என்பது தவறாக தட்டச்சிடப்பட்டதாகவும் ரூ.250 ஊதியம்தான் வழங்கப்படவுள்ளது என்றும் கூறி, நன்கு யோசித்து இசைவைத் தெரிவியுங்கள் என்று அவர் கூறினார். கால அவகாசம் கேட்டு வெளியே வந்த நாங்கள் சுமார் 10 நிமிடங்கள் எங்களுக்குள் பேசி ரூ.250 ஊதியத்தில் சேர்வது என்று தீர்க்கமாக முடிவெடுத்து இசைவைத் தெரிவித்தோம். நல்ல நிறுவனத்தை விட்டுச் செல்ல மனமின்றி, எங்களது முடிவு அமைந்தது.
வத்தலகுண்டு ஆறுமுகம், விழுப்புரம் திருநாவுக்கரசு, கும்பகோணம் ஜம்புலிங்கம், திண்டுக்கல் கண்ணன், கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி பெருமாள் (15.8.1982இல் கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

நண்பர்கள்
சுமார் இரண்டு ஆண்டுகள் தங்கிய நிலையில் அலுவலகத்திலும், தங்குமிடத்திலும் நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.  விடுமுறை நாள்களில் வ.உசி.பூங்காவிலோ, தியேட்டர்களிலோ எங்களது நேரம் இனிமையாகக் கழிந்தது. நேரம் கிடைக்கும்போது சொந்த ஊரான கும்பகோணம் வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக என்னை அதிகம் கவர்ந்த ஊர் கோயம்புத்தூரேயாகும். அங்கிருந்தபடியே மேலும் பல நிறுவனங்களுக்கு பணிக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். அதே சமயம் பணியாற்றிய இடத்தில் தொடர்ந்து நன்முறையில் பணியைச் செய்து வந்தேன். 

வார விடுமுறை
சனிக்கிழமை மதியமும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக இருந்தன.  இதுவரை பணியாற்றிய இடங்களில் ஒரு நாளே விடுமுறையாக இருந்தது. அலுவலகம் ரேஸ்கோர்சில் இருந்தது. மதியம் பெரும்பாலும் அருகில் உள்ள ரெயின்போ தியேட்டரில் சினிமா பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள ஆரம்பித்தேன். பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். 

பம்பாய் அலுவலகம்
கோயம்புத்தூர், மதுரை, தேனி, திருச்சி, துடியலூர், வேலூர் உள்ளிட்ட கிளைகளில் விற்கும் பொருள்களின் விவரங்களைத் தொலைபேசி வழியாகப் பெற்று மதியம் 1.00 மணிக்குள் பம்பாய் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டியது என் இருக்கைப் பணிகளில் முக்கியமானதாகும். பல வகையான பொருள்கள், விலைகள், அளவுகள் என்ற நிலையில் தனியாகப் பட்டியலிட்டுத் தொகுத்து அதனைச் சுருக்கிச் செறிவாக தொலைபேசி மூலமாக பம்பாய்க்குத் தெரிவிக்க வேண்டும். முதல் இரு வாரங்கள் மிகவும் சிரமப்பட்டேன். பின்னர் புரிந்துகொண்டேன்.

கூடுதல் பணிக்கான ஊதியம்
அலுவலகப்பணிக்கு மேலாக அதிகமாக பணியாற்றியபோது கூடுதல் பணிக்கான ஊதியத்தை அவ்வப்போது பெற்றுக்கொள்ளும் வசதி அங்கு இருந்தது. எந்த ஒரு பணியாளரின் பணி நேரமும் உரிய முறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்பதிலும், கூடுதலாகப் பணியாற்றுவோருக்கு உரிய ஊதியத்தை வழங்கவேண்டும் என்பதில்  நிர்வாக மேலாளர் மிகவும் கவனமாக இருப்பார். இவ்வாறாக ஊதியம் பெறும்போது பணியின்மேலிருந்த மதிப்பும் அக்கறையும் மேம்பட்டன.    

அலுவலகம் செல்லல்
இரண்டு இடங்களில் தங்கியிருந்தபோதிலும் இரண்டாவதாகத் தங்கிய புது சித்தாப்புதூரிலுள்ள வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள அறையில் அதிக நாள் தங்கியிருந்தேன். அங்கிருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள நிறுவனத்திற்குப் பேருந்தில் செல்வேன். திரும்பும்போதும் அவ்வாறே. பல சமயங்களில் தங்கும் அறையிலிருந்து அலுவலத்திற்கு நடந்தே சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டேன். 

பயணங்கள்
கோவையிலிருக்கும்போது கூடுதல் பணிக்கான ஊதியமோ பிற ஊதியமோ பெறும்போது அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்றுவந்தேன். முதன்முதலாக சபரிமலைக்கும் கேரளாவிலுள்ள பிற கோயில்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது.   இந்த சூழலில்தான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களையும், கோயம்புத்தூரையும் பிரிய மனமின்றிப் பிரிந்தேன். கோயம்புத்தூரைவிட்டு வெளியே வந்தது ஒரு பெரிய இழப்பாகத் தெரிந்தது. அந்த அளவிற்கு கோயம்புத்தூரும், நண்பர்களும் என் மனதில் இடம் பெற்றுவிட்டனர், நண்பர் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தார் உட்பட. 
----------------------------------------------------------------
30 ஏப்ரல் 2017இல் பணி நிறைவு : திரும்பிப் பார்க்கிறேன்
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்
----------------------------------------------------------------