08 April 2017

மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)

கும்பகோணத்தின் அழகில் ஒன்று காவிரி ஆற்றங்கரையில் உள்ள, பல பேரறிஞர்களை உருவாக்கிய, அரசு ஆடவர் கல்லூரி. சலசலப்பாக ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அந்த குளிர்ச்சியான காற்றில் பாலத்தைக் கடந்துபோனால ஒரு சுகம். ஆற்றில் நீரில்லாதபோது ரசித்துக்கொண்டு செல்வதில் இன்னொரு வகையான சுகம். காவிரியாற்றின் மேலுள்ள குறுகிய பாலத்தின் வழியாக உள்ளே நடந்து செல்லும்போது கிடைத்த பேரின்பம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. (தற்போதுள்ள பாலம் புதிதாக கட்டப்பட்டதாகும்) அழகான மரச்சிற்பங்களைக் கொண்ட தூண்கள் அமைந்துள்ள வராந்தாவினைக் கடந்து, அழகான மணிக்கூண்டினைக் காணலாம். பழமை கூறும் பல வகுப்பறைகள். அழகான கட்டுமானங்கள். வேலைப்பாடுடன் கூடிய திறந்து மூடும் நிலையிலுள்ள ஜன்னல்களைக் கொண்ட பெரிய கதவுகள். அனைத்துமே பிரம்மாண்டம்தான். கல்லூரியில் சேரும் முன்னும் சேர்ந்த பின்னரும் பெற்ற அனுபவம் என்றும் நெஞ்சில் நிற்கும். கல்லூரியில் சேர்ந்த சூழலே வித்தியாசமானதுதான்.    

இருளப்பன் மிளகாய் மண்டி
பள்ளி விடுமுறையின்போது தாத்தாவால் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள இருளப்பன் மிளகாய் மண்டியில் பணிக்கு அனுப்பப்பட்டேன். தாத்தா கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த ஷண்முக விலாஸ் மளிகைக்கடைக்கு அருகிலேயே மிளகாய் மண்டி இருந்த நிலையில், முதலாளியை தாத்தாவிற்கு நன்கு தெரியும்.  அரைகுறை மனதுடன் வேலைக்குச் சென்றேன். மிளகாய் நெடி உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. வீட்டில் என்னை கல்லூரிக்கு அனுப்புவதுபோலத் தெரியவில்லை. 1975-1976 கல்வியாண்டு தொடங்கி கல்லூரியும் திறந்துவிட்டது. என்னுடன் படித்தவர்கள் பலர் கல்லூரியில் சேர்ந்துவிட்டனர். 

முதலாளி பார்த்துவிடல் 
மிளகாய் மண்டிக்கு வருவதற்கு முன்பாக தட்டச்சு வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தேன். தொடர்ந்து இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஓய்வு நேரத்தில் அவ்வப்போது இந்தி எழுதிப் பார்ப்பேன். தட்டச்சு ஆங்கில எழுத்துகளையும், புதிய சொற்களையும் தெரிந்துகொள்வது இடையிடையே நடந்தது. அவ்வப்போது மனனம் செய்வதையும், தாளில் பயிற்சிக்காக எழுதுவதையும் ஒருமுறை முதலாளி பார்த்துவிட்டு என்னிடம் கேட்கவே, நான் தட்டச்சும், இந்தியும் படித்துக் கொண்டிருப்பதைக் கூறினேன். யாராவது இருக்கும்போதோ, வேலை அதிகமாக இருக்கும்போதோ படிக்கக் கூடாது. மற்ற நேரங்களில் படிக்கலாம் என்று கூறினார். சற்றே ஆறுதலாக இருந்தது. 

நண்பர்கள் கல்லூரியில் சேரல்
என்னுடன் படித்த, பழைய அரண்மனைத்தெருவைச் சேர்ந்த நண்பர் திரு செல்வம் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பத்தினை வாங்கி பூர்த்தி செய்தபோது "நான் இப்போ ஆடவர் ஆகிவிட்டேன். ஆடவர் கல்லூரியில் சேரப் போகிறேன்" என்று கூறியது என் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. என்னுடைய பல நண்பர்களும் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்தனர். இடைப்பட்ட நாளில் மிளகாய் மண்டி முதலாளியிடம் அனுமதி பெற்று தஞ்சாவூருக்கு வந்து என் பெயரை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். 

புகுமுக வகுப்பு (1975-76)
1975 ஜுன் வாக்கில் கல்லூரி திறந்து ஒரு மாதம் கழித்து, மறுபடியும் மாணவர்களைச் சேர்ப்பதாகக் கூறினர். கடைசியாகக் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றியது. அடம்பிடித்து என்னை கல்லூரியில் புகுமுக வகுப்பு (Pre University Course) சேர்க்கக் கேட்டேன். சேர்க்காவிட்டால் வீட்டைவிட்டு ஓடிவிடுவேன் என்று கூறி அழ ஆரம்பித்தேன். தாத்தாவிற்கும் ஆத்தாவிற்கும் மனது கேட்கவில்லை. என்னை கல்லூரியில் சேர்க்க என் அப்பாவுடன் அனுப்பிவைத்தனர். அன்று அலுவலக நேரத்திற்குப் பின்னரும் கல்லூரியில் அட்மிசன் நடந்தது. ஒருவழியாக கல்லூரியில் சேர்ந்தேன். எந்த வகுப்பிற்கு இடம் இருந்ததோ அதில் சேர்த்தார்கள்.   அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் வரலாறு, புவியியல், அளவையியல் (Logic) என்ற மூன்று பாடப்பிரிவுகள் இருந்தன. அளவையியல் என்றால் நான் கேள்விப்பட்டதேயில்லை. வேறு வழியில்லாமல் எப்படியாவது சேரவேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்தேன். 

நடு இரவில் கல்லூரியில் சேர்தல்
சேர்ந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது இரவு சுமார் 11.30 மணியாகியிருந்தது. மறக்க முடியாத இரவு. கல்லூரிக்குப் போன நானும் அப்பாவும் காணவில்லை என்று வீட்டில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்ததும் ஆத்தாவை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியில் அழுதேன். நான் கல்லூரியில் சேர்ந்தது நண்பர்கள் பலருக்குத் தெரியாது. மறுநாள் சென்றபோது வியப்புடன் பார்த்தார்கள். ராஜசேகரன், செல்வம், மதியழகன், பொன்னையா உட்பட பழைய நண்பர்களுடன் ஒன்றுசேரும் வாய்ப்பு கிடைத்தது. திருமஞ்சன வீதி பள்ளியில் படித்த நண்பர்கள் ஒன்று சேரவே, மறுபடியும் மகிழ்ச்சிக்கான காலம் துவங்கியது.

அபூர்வ ராகங்கள்
கல்லூரியில் சேர்ந்து நாங்கள் பார்த்த முதல் படம் அபூர்வ ராகங்கள். பாலசந்தரின் தாக்கமானது என்னைத் தொடர்ந்தது. நூர் மஹாலில் (இப்போதைய செல்வம் தியேட்டர்) அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை அனைத்து நண்பர்களும் ஒன்று சேர்ந்து பார்த்தோம். என் வாழ்க்கையில் நான் ரசித்த ஒரே திரைப்படப்பாடல்களில் முதலிடத்தைப் பெறுவது "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடலே. தன்னம்பிக்கையைத் தரக்கூடிய பல சொற்றொடர்களை அப்பாடலில் நான் கண்டேன். தொடர்ந்து தேவி தியேட்டரில் வந்த பல படங்களைப் பார்த்தோம். பெரும்பாலான திரைப்படங்களைப் பார்த்துவிடுவோம்.   

ஓவியர் ஜெயராஜ்
ராஜசேகரன் வகுப்பு நேரத்தில் ஓவியர் ஜெயராஜ் படங்களை வரைந்துகொண்டிருப்பதைப் பார்ப்போம். (முதன்முதலாக ஓவியர் ஜெயராஜின் முகத்தை தினமணி கதிர் அட்டையில் பாதி முகம் மட்டும்படி வெளியிட்டிருந்தது இன்னும் எங்களுக்கு நினைவில் உள்ளது.) எங்கள் அனைவருக்கும் அவர் வரையும் ஓவியங்கள் மீது ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்தது.

தேர்வு முடிவு
தேர்வு முடிவு எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தது. என்னுடன் பயின்ற நண்பர்கள் அனைவரும் தோல்வியுற, நான் மட்டுமே வெற்றி பெற்றேன். என் வாழ்க்கையின் திருப்புமுனையாக என்னை நான் உணர்ந்துகொள்ள உதவியது என் புகுமுக வகுப்புத் தேர்ச்சி.

இளங்கலை பொருளாதாரம் (1976-79)
நண்பர்கள் அனைவரும் என்னை விட்டுப்பிரிய கல்லூரியின் மீதான ஆர்வம் சற்றே குறைந்தது. இருந்தாலும் படிப்பைத் தொடரவேண்டுமே. இளங்கலை பொருளாதாரம் தமிழ் மற்றும் ஆங்கில வழி என்ற இரு பிரிவிற்கும் விண்ணப்பித்தேன். இரண்டிலிருந்தும் நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. ஆங்கிலத் தட்டச்சின்மீதான ஈடுபாடு ஆங்கிலவழி படிக்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது. அருகிலிருந்த நண்பர்கள் பலர் ஆங்கில வழியாகப் படிப்பது மிகவும் சிரமம், தேர்ச்சியடைய முடியாது என்று கூறினர். இருந்தாலும் அதில் என்னதான் இருக்கிறது, முடிந்தால் முடியாதது ஒன்றுமில்லை என்ற எண்ணங்களுடன் ஆங்கிலவழி பொருளாதாரப் பிரிவில் சேர்ந்தேன். 


இளங்கலை (1976-79) படிக்கும்போது கல்லூரிக்கு
எடுத்துச்சென்ற கோப்பு அட்டை
ஆரம்ப காலம்
முதல் மூன்று மாதங்கள் ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் பாடங்களைப் புரிந்துகொண்டேன். தமிழ் ஆங்கிலம் தவிர பொருளாதாரத்தில் ஐந்து தாள்களும், துணைப்பாடங்களாக இரு தாள்களும் இருந்தன. பொருளாதாரம் தொடர்பான தாளுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவ்வப்போது நாளிதழ்கள் படிக்கும் அவசியத்தை எடுத்துக் கூறினர். ஏற்கனவே The Hindu படிக்க ஆரம்பித்த நிலையில், பல பாடங்களுக்கு நாளிதழ் செய்திகள் உதவியாக இருந்தன. கல்லூரியில் திட்டக்குழுவில் உதவிச்செயலராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சில ஆசிரியர்கள் பொது அறிவிலும், நாட்டு நடப்பிலும் அதிக கவனத்தைச் செலுத்தும்படி கூறினர். 

தோப்பில் படிப்பு
அப்போது இளங்கலை வணிகவியல் படித்த நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனின் நட்பு படிப்பின் மீதான ஆர்வத்தை மேம்படுத்திக்கொள்ளவும், குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் உதவியது. நாங்கள் இருவரும் இடைவேளையின்போது எங்கள் வகுப்பறைக்குச் சற்றுத் தள்ளியுள்ள ஒரு தோப்பில் அமர்ந்து அவ்வப்போது பாடங்களைப் படிக்க ஆரம்பித்தோம். (தோப்பில் செல்வதற்கு ஒரு சுவரை ஏறிக்குதித்துச் செல்லவேண்டும். அல்லது காவிரியாற்றில் தண்ணீர் இல்லாத நேரத்தில் படிக்கட்டுகளில் இறங்கி தோப்பு இருக்கும் பக்கமாகச் சென்றுவிடுவோம்.) கல்லூரிக்கால வேடிக்கை, விளையாட்டு அனைத்திலும் ஈடுபட்டபோதிலும் நூலிழையாக படிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவம் எனக்கு மிகவும் உதவியது. 

படிக்கும்போதே தட்டச்சும் சுருக்கெழுத்தும், இந்தியும்
படித்துக்கொண்டிருக்கும்போதே முதலில் ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும் தொடர்ந்து பாரத் தட்டச்சு பயிற்சி நிலையத்திலும் ஆங்கிலத் தட்டச்சு கற்க ஆரம்பித்தோம். என் தட்டச்சுப் பயிற்சிக்கு மாதத்திற்கு ரூ.10 (முதலில் ரூ.5பயிற்சிக்கட்டணமாக இருந்தது. பின்னர் ரூ.7, தாளுக்கு ரூ.3) அப்போது எங்கள் அத்தை திருமதி இந்திரா தருவார்கள். என் படிப்பை ஊக்குவித்தவர்களில் அவர் முதலிடத்தைப் பெறுகிறார். நன்றாகப் படித்து வெற்றி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். படிப்பின் ஆரம்பக் காலம் முதல் கல்லூரியில் முதலாண்டு படித்தவரை அவர் தொடர்ந்து உதவி செய்தார். குடும்ப சூழல் காரணமாக எங்களை விட்டு அவர் சென்றுவிட்டார்.

நேரத்தை வீணாக்காமல் முதலாண்டில் உயர்நிலை ஆங்கிலத்தட்டச்சும் (நவம்பர் 1976), இரண்டாமாண்டில் உயர்நிலை தமிழ்த்தட்டச்சும்  (டிசம்பர் 1977), மூன்றாமாண்டில் ஆங்கிலக் கீழ்நிலை சுருக்கெழுத்தும் (டிசம்பர் 1978) தேர்ச்சி பெற்றேன். பாரத் தட்டச்சு பயிற்சியகத்தில் தட்டச்சுப பயின்றபோது குறைவான பிழையோடு அல்லது பிழையின்றி தட்டச்சு செய்யும் பழக்கத்தை வளர்த்தேன். சுருக்கெழுத்திலும் அவ்வாறான ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். இடையில் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் இந்தி வகுப்பினைத் தொடர்ந்து பிராத்மிக் (பிப்ரவரி 1978), மத்யமா (ஆகஸ்டு 1978), ராஷ்ட்ரபாஷா (பிப்ரவரி 1979)  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். முடிந்தவரை நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற உறுதி என் கல்வித்தகுதிகளை மேம்படுத்திக்கொள்ள உதவியது.

வகுப்பில் சுருக்கெழுத்தில் குறித்தல்
இளங்கலை மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அனைத்தும் பாடத்தாள்களாக அமைந்துவிட்ட நிலையில் வேகமாக எழுதமுடியாதபோது சுருக்கெழுத்தில் குறிப்பினை எடுத்துக்கொண்டு பின்னர் அதனை வீட்டிற்கு வந்து ஆங்கிலத்தில் விரிவாக்கி, பாடம் வாரியாக பிரித்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். வகுப்பிலேயே சுருக்கெழுத்தை என்னைப் போல யாரும் எழுதினார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறு நான் எடுத்த குறிப்பு பலருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

குறிப்பெடுத்தல்
நேரடியாக எழுதிக்கொள்ளும் பாடங்களுக்காக ஒவ்வொரு பாடத்திற்கும் ஏ4 அளவிலான வெள்ளைத்தாளை மேலே ஒரு துளையிட்டு வரிசையாக அடுக்கிக்கொண்டு ஒரு பேடில் எடுத்துச்செல்வேன். அந்தந்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது குறித்துக்கொண்டு விடுவேன். தேர்வின்போது படிக்க இது எனக்கு உதவியாக இருந்தது. 

திரைப்படங்கள் 
புகுமுக வகுப்பில் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்தது, இளங்கலைத் தொடரும்போது தொடர்ந்தது. கல்லூரிக்கு அடுத்தபடியாக பொழுதைப் போக்க உதவியது நூர்மஹால் (தற்போதைய செல்வம்) தியேட்டரும், தேவி (தற்போதைய பரணிகா) தியேட்டருமே. தொடர்ந்து பாலசந்தர் படங்களை விடாமல் பார்க்க ஆரம்பித்தேன். (உபயம் நண்பர்கள்)

அடுத்தடுத்து சோகம்
முதலாண்டில் எங்கள் மாமாவும், இரண்டாமாண்டு படிக்கும்போது எங்கள் தாத்தாவும், மூன்றாமாண்டில் எங்கள் அப்பாவும் இறந்தது இடிமேல் இடியாக விழுந்தது. மாமா இறந்ததும் தாத்தாவிற்கு வந்த ஓய்வூதியம் நின்றுவிடவே, வீட்டு வாடகையை வாங்கி ஓட்டுமளவு நிலை சிரமமானது. அவ்வாறான நிலை எப்படியும் படித்து முடித்து வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்தைத் தந்தது. தொடர்ந்து குடும்பத்தில் பல சிக்கல்கள் எழ ஆரம்பித்தன.


பணி தேடும் படலம் 
என் தந்தை இயற்கையெய்தியபோது வந்த மாமா திரு தனஞ்செயன் என்னை சென்னையில் வேலைக்குச் சேர்க்க உதவியதாகக் கூறி, அவரே ஒரு விண்ணப்பத்தை தட்டச்சு செய்து என் கையொப்பத்திற்கு அனுப்பியிருந்தார். படித்து முடித்து தேர்வு முடிந்து சில நாள்களே வீட்டில் இருந்த நிலையில் பணி தேடும் படலம் ஆரம்பமானது. தேர்வு முடிவுக்குக் காத்திருப்பதாக என்ற ஒரு வரியையும் அவர் சேர்த்திருந்தார். அவர் விண்ணப்பத்தை அனுப்பும்போது தேர்வு முடிவு வெளியாகவில்லை.

தேர்வில் வெற்றி
தேர்வில் வெற்றி பெற்ற செய்தி பல சோகங்களுக்கிடையே மனதிற்கு சிறிது மகிழ்வினைத் தந்தது. உடன் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.  பணியைத் தேடும் படலமும் தொடர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லூரியில் படிப்பினை நிறைவு செய்ததைத் தொடர்ந்து வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பமாயின.
----------------------------------------------------------------
திரும்பிப் பார்க்கிறேன்

பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வு:
----------------------------------------------------------------

19 comments:

  1. மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி என
    அருமையான எண்ணங்கள் மலர்ந்தன - இவை
    நாளைய மாணவ உறவுகளுக்கு
    நல் வழிகாட்டலாக அமையுமே!

    ReplyDelete
  2. பாடம் சொல்லும் உங்கள் வாழ்க்கையின் நினைவோடை.

    ReplyDelete
  3. கணிதமேதை இராமானுஜன் படித்தக் கல்லூரியில் படித்திருக்கிறீர்கள்
    ஒரு முறை அவர் பயின்ற வகுப்பில், அவர் அமர்ந்திருந்த இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஐயா

    ReplyDelete
  4. பிறகு வருவேன்... கணினியில்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு நிகழ்வையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

    ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்கவில்லை... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  6. தங்களது நினைவாற்றலுக்கு ஒரு இராயல் சல்யூட்.

    நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் தாங்கள் கடந்து வந்தது மிகப்பெரிய விடயமே...

    இன்றைய மாணவர்களை ஒப்பிட்டு பார்த்தேன் ???

    தொடர்கிறேன்...
    த.ம.

    ReplyDelete
  7. தங்கள் இளமைக்கால நினைவுகளைப் பொறுத்தவரை வியப்புக்குரியது, தங்களின் நினைவாற்றலே. எல்லார் பெயரும் எப்படித்தான் கவனத்தில் இருக்கிறதோ! அவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் உங்கள் நினைவுக் களஞ்சியம் திறக்கட்டும்! ஆவலோடு காத்திருக்கிறோம்!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  8. கல்லூரி நினைவுகள்....

    எங்கள் கல்லூரி நினைவுகளும் மனதில் இப்போது....

    ReplyDelete
  9. மலரும் நினைவுகள் - அருமை..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  10. நெஞ்சம் நீங்காநினவலை

    ReplyDelete
  11. மாணவர் பருவத்து ( அதிலும் கல்லூரிக் காலத்து ) மலரும் நினைவுகள் மகிழ்சியும், நெகிழ்ச்சியும் கலந்ததாய் கடந்திருக்கிறது. படிக்கச் சுவையாய் இருந்தது.

    ReplyDelete
  12. உங்கள் கல்லூரி நினைவுகள் வெறும் நினைவுகள் மட்டுமல்ல எங்களுக்கும் பல பாடங்களைப் புகட்டுகிறது!!

    ReplyDelete
  13. அழகிய நினைவோடை...
    இழப்புக்கள் வேதனை என்றாலும் கல்லூரி நினைவுகள் சுகமானவைதானே...
    அருமை ஐயா...

    ReplyDelete
  14. வணக்கம் ! முனைவர் ஐயா
    தங்கள் பணிநிறைவு மகிழ்வானதாக அமையட்டும் ஓயவின்றிய தங்கள் பயணங்களில் ஓராயிரம் வலிகள் கண்டு இருப்பீர்கள் அவற்றுக்கு ஒத்தடமாக தங்கள் பண்பி நிறைவு அமையட்டும் ,,,,சிறந்த ஒரு பதிவினைப் படித்து மகிழ்ந்த உணர்வு பிறக்கிறது வாழ்க வளமுடனும் நலத்துடனும்

    ReplyDelete
  15. கல்லூரி நினைவுகளை நிகழ்வுகளை ஆற்றொழுக்காகச் சொல்லும் பாங்கினைக் கண்டு வியந்தேன். தனியாக ஒரு தன் வரலாற்று நூலே எழுதலாம்; எழுதுங்கள்.

    ReplyDelete
  16. அனேகமாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கல்லூரிக்கு எடுத்துச் சென்ற பைலை வேறு யாரும் இப்படி பாதுகாத்திருக்க மாட்டார்கள்

    நினைவுகள் அருமை

    ReplyDelete
  17. வணக்கம்.

    தாங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றதறிந்தேன்.

    தங்களின் தமிழ்ப்பணிக்கு ஓய்வேது?

    நேற்று கரந்தை திருவையாறு வழி செல்ல நேர்ந்தது.

    திருவையாறு கல்லூரி பற்றிக் காரில் உடன்வந்தவருடன் சொல்லிக் கொண்டு வந்தேன்.

    குடந்தைக் கல்லூரியும் அத்தகு சிறப்புகள் வாய்ந்ததுதான்.
    அதிற்பயின்ற, பணியாற்றி பேராளுமைகள் பலரை அறிவேன்.

    தாங்களும் அதில் பயின்றமை அறிந்து மகிழ்வு.

    தங்களது வாழ்வியல் வரலாற்றைத் தொடராக எழுதுகிறீர்களோ?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  18. இம்மாதிரி பழைய நினைவுகளை அசை போடும் போது கடந்து வந்த பாதை பற்றிய நினைவுகள் நம்மை நாமே சீர்த்தூக்கி பார்க்க உதவும்

    ReplyDelete
  19. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' படித்திருக்கிறீர்களா, ஐயா? ஆற்றுப் பாலம் கடந்து கும்பகோணம் கல்லூஈரிக்குப் போகும் கதையின் நாயகன் பாபுவின் உணர்வகள் பற்றி அழகாக எழுதியிருப்பார்.

    ReplyDelete