16 April 2017

பணியனுபவங்கள் : சூலை 1979 - ஆகஸ்டு 1982

கல்லூரிப்படிப்பு முடிந்து பணியில் சேர்ந்தபோது பெற்ற அனுபவங்கள் வாழ்வில் நான் பக்குவப்பட பெரிதும் உதவின. முதன் முதலாகப் பணிக்குச் சேர்ந்து தொடர்ந்து சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது குடும்பச் சூழல், பொருளாதார நிலை, அறிவு மேம்பாடு, புதிய சூழல், பழக்கவழக்கம் என்ற நிலைகளில் வாழ்க்கைக்கான ஒரு புதிய தடத்தை உருவாக்கிய காலகட்டம் அது. அனைவரும் தம் வாழ்வில் எதிர்கொள்வதே. நானும் அத்தகைய சூழலை எதிர்கொண்டு, பல அனுபவங்களைப் பெற்றேன். எனது அந்த அனுபவங்கள் கும்பகோணத்திலிருந்து சென்னை, தஞ்சாவூர், மறுபடியும் சென்னை, கோயம்புத்தூர் என்ற இடங்களில் கிடைத்தன. 
  • சென்னை  (சூலை 1979 - செப்டம்பர் 1979)
கல்லூரிப்படிப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்குச் சென்றதை மறக்க முடியுமா? நான் இளங்கலை மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தை (ஜனவரி 1979) இறந்தார். மன நிலை காரணமாக நான் மூன்றாமாண்டுத் தேர்வு எழுத முடியாத சூழலில் இருந்தபோது, சென்னையிலிருந்து வந்திருந்த என் மாமா தனஞ்செயன் அவர்கள், தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, தேர்வினை எழுதாமல் இருக்கவேண்டாம் என்று அறிவுரை கூறி எனக்காக அவரே விண்ணப்பம் தயாரித்து அனுப்பிவைத்தார். அவ்விண்ணப்பத்தில் candidature (I offer my candidature for the same) என்ற புதிய சொல்லை நான் கண்டேன். அதில் நான் கையொப்பமிட்டு அனுப்பினேன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விடுப்பு வெற்றிடத்தில் (leave vacancy) ரூ.300 மாத ஊதிய அடிப்படையில், பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். 

என் மாமா தயாரித்து அனுப்பிய 
13 சூன் 1979 நாளிட்ட முதல் விண்ணப்பம்
முதல் தொலைபேசியழைப்பு
அலுவலகத்தில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பணியில் சேர்ந்த மூன்றாம் நாள் புதுதில்லியிலிருந்து ஒரு தொலைபேசியழைப்பு வரவே, தொடர்பை என்னிடம் கொடுத்து, அவர்கள் பேசுவதைக் குறிப்பு எடுத்துக்கொண்டு அதன்படி கடிதத்தை தட்டச்சு செய்துவிடு என்றார். அதற்கு முன்னர் இரு முறைதான் தொலைபேசியில் பேசியுள்ளேன். (வியப்பாக இருக்கிறதல்லவா?) தொலைபேசியில் அவர் பேசியதும் புரியவில்லை, ஆங்கிலமும் தெளிவாக இல்லை. கையில் பென்சிலையும் குறிப்பு நோட்டையும் வைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்தவரை சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டேன். அதனை வைத்து என்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அவரிடம் பேசினேன். அவர் மிகவும் பொறுமையாக இருக்கும்படி என்னிடம் கூறினார். பதட்டப்படவேண்டாம் என்று கூறிவிட்டு, நான் குறிப்பு எடுத்தவற்றை ஆங்கிலத்தில் தட்டச்சிட்டுத் தரும்படி கேட்டார். விட்டுவிட்டு தெரியாத இடங்களில் புள்ளி வைத்து அவற்றை அவரிடம் கொடுத்தேன். என்னை சுருக்கெழுத்து கற்க வைத்துவிடுவாய்போலுள்ளது என்று கூறி நான் தந்த குறிப்புகளை வைத்துச் செய்தியைப் புரிந்துகொண்டார். நாளடைவில் தவறின்றி இதுபோன்ற பணிகளை நானே செய்ய ஆரம்பித்தேன். நான் கற்ற இந்தியும், தட்டச்சும், சுருக்கெழுத்தும், The Hindu நாளிதழ் வாசிப்புப் பழக்கமும் பணியின்போது  துணை நின்றன. 

முதல் டெலக்ஸ் பயன்பாடு
முதன்முதலாக டெலக்ஸ் எனப்படும் கருவியை அங்கு பார்த்தேன். தொலைபேசி இணைப்போடு கூடிய தட்டச்சுப் பொறியைப்போல டெலக்ஸ் இருந்தது. டெலக்சில் தலைமை அலுவலகத்திலிருந்து பெறப்படும் செய்தியை உள்ளது உள்ளபடியோ, சில குறிப்புடனோ கிளை அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டிய பணி தட்டச்சு செய்து அனுப்புவது என்பதானது சற்றே வித்தியாசமானது. செய்தியை மட்டும் அனுப்பவேண்டுமென்றால் தொடர்புடைய எண்ணை டயல் செய்யவேண்டும். இணைப்பு கிடைத்ததும் தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வதைப் போல தட்டச்சு செய்யவேண்டும். நாம் தட்டச்சு செய்யும்போது கேட்கும் கேள்விக்கு மறுமுனையில் உள்ளவர் தட்டச்சிட்டே பதில் கூறுவார். கேள்வியும், பதிலும், விளக்கங்களும் இவ்வாறாக தட்டச்சிடப்படும். பெரிய செய்தியாகவோ, அதிக பக்கங்கள் உள்ளனவாகவோ இருந்தால் அவர்கள் அதற்கான குறியீட்டைக் கொடுத்ததும் டேப் போன்ற சிறிய வெள்ளைத்தாளினை அடுத்துள்ள சிறிய கருவியில் செருக வேண்டும். பின்னர் அந்த சிறிய வெள்ளைத்தாள் டேப்பை மறுபடியும் அக்கருவியில் வைத்தால் தானாகவே தட்டச்சிட்டுக்கொள்ளும் வசதியைக் கண்டேன். தலைமை அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளைப் பெற்று பிற கிளை அலுவலகங்களுக்கு உரிய குறிப்புரையுடன் அனுப்பும் அனுபவத்தைப் பெற்றேன்.


  • தஞ்சாவூர் (செப்டம்பர் 1979 - ஆகஸ்டு 1980)
சென்னையில் பணியாற்றும்போதே நாளிதழைப் பார்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு விண்ணப்பித்து, தஞ்சாவூரில் வேலை கிடைத்தது. நேர்முகத்தேர்விற்குப் பின் மருந்து நிறுவனத்தில் ரூ.250 ஊதியத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன். தினமும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு ரயிலில் சென்றுவந்தேன்.  

புதிய சொற்கள் தெரிந்துகொள்ளல்
மருந்து பாட்டில்களில் லேபிள் சேர்ப்பு, பட்டியல் தயாரித்தல், மருந்துகளை பரிசோதனைக்கு அனுப்பல் என்ற பணிகளை மேற்கொண்டபோது மருந்து சம்பந்தப்பட்ட புதிய சொற்களை அறிந்தேன். மருந்து பாட்டில்களில் காணப்படுகின்ற ஒவ்வொரு ஆங்கிலச்சொற்களுக்குமான சொல்லையும், பொருளையும் தெரிந்துகொண்டேன். (q.s. = quantity sufficient, mcg = microgram, Cobalamin = Vitamin B12, I.P. = Indian Pharmacopoeia, B.P. = British Pharmacopoeia). நிறுவன மேலாளர் முன்னர் பல சுருக்கெழுத்தாளர்களும், தட்டச்சர்களும் பணியாற்றினாலும் இவ்வாறாக யாருமே ஒவ்வொரு சொல்லையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தினைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். 

மேலாளருக்காக கையொப்பம்

பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் பல நிறுவனங்களிடம் மருந்துக்கான விலைப்புள்ளிகள் கேட்டு கடிதங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. அப்போது நிறுவன மேலாளருக்காக (for Manager) என்று தட்டச்சிட்டு மேலாளர் கையொப்பமிடும் இடத்தில் என்னை கையொப்பமிட்டு அனுப்பும்படிக் கூறினார் மேலாளர். அதற்கு முன்னர் எந்தப் பணியாளருக்கும் அவ்வாறான அனுமதியை அவர் தந்ததில்லை என்று கூறி அலுவலகத்தில் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டனர். உரிய நேரத்தில் பணிக்கு வரல், மேற்கொள்ளல் என்பதில் தெளிவாக இருந்தேன். மேலாளர் அரிமா சங்கத்தில் இருந்ததால் சங்க உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதும்போது என்ற நடையை அவர் பயன்படுத்தினார். கடிதத்தை ஆரம்பிக்கும்போது Dear Lion......என்றும்,   நிறைவு செய்யும்போது Yours in Lionism  என்றும் எழுதுவதை அறிந்தேன். 

கடிதங்களை வீசி எறிதல்

இதே மேலாளர் ஒரு முறை புதிய பொறுப்பேற்ற மற்றொரு நிறுவன மேலாளருக்குக் கடிதம் எழுதும்போது  I congratulate you on your new assignment என்று எழுதக் கூறியதை நான் பொருள் புரியாமல்  I congratulate you on your new consignment என்று தட்டச்சிட்டுவிட்டேன். நான் தட்டச்சு செய்த தாள்களை அனைத்து பணியாளர்களின் முன்பாக வீசி எறிந்து தட்டச்சு பயின்றுதான் வந்தாயா, ஆங்கில சொற்களுக்கான பொருளைத் தெரிந்துகொள்ள மாட்டாயா என்று கோபமாகக் கேட்டார். சுருக்கெழுத்தில் எழுதும்போது புள்ளியை மாற்றி வைத்த அளவில் இந்த தவறை நான் செய்துவிட்டேன். பின்னர் தவறுக்காக வருந்தினேன். அங்கிருந்துகொண்டே நாளிதழ்களில் விளம்பரத்தைப் பார்த்து  பிற நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வரவே அங்கு செல்ல அனுமதி கேட்டேன். மேலாளரும் ஒத்துக்கொண்டார். 
  • மறுபடியும் சென்னை (ஆகஸ்டு 1980 - நவம்பர் 1980)
சென்னையில் நேர்முகத்தேர்வினை முடித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தைத் தஞ்சையில் கூறி, தஞ்சையிலிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் ரூ.250 மாத ஊதியத்தில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன்.  வந்திருந்த மூவரில் நான் மட்டுமே சுருக்கெழுத்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் சேர்ந்த மூன்று மாதங்களில் என்னை நிரந்தரப்படுத்தி இளநிலைச் சுருக்கெழுத்தர் என்ற பணியில் ரூ.300 ஊதியத்தில் அமர்த்தினர். வழக்கமாகக் கொடுக்கின்ற ஆணையுடன்  "On observing your performance and hard work, we are pleased to keep you in our regular employment"  என்று என்னைப் பாராட்டி தனியாகக் கடிதம் தந்தனர். 

நுணுக்கமான பணிகள்
மிகக்குறைந்த காலத்தில் பலவிதமான புதிய பணிகளை இந்நிறுவனத்தில் அறிந்து கொண்டேன். முழுக்க முழுக்க சுருக்கெழுத்துப்பணிகள் அதிகமாக இருந்தன. புதிய தொழில்நுட்பச் சொற்கள் பலவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வவற்றை உடன் முடிக்க வேண்டிய நிலையில் முந்தைய நிறுவனங்களின் பணி நிறுவனம் உதவியாக இருந்தது. தொடர்ந்து பிற நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்துகொண்டிருந்தேன்.   


  • கோயம்புத்தூர் (நவம்பர் 1980 - ஆகஸ்டு 1982)
தஞ்சாவூரில் பணியாற்றும்போது, முன்னர் செய்வாறே நாளிதழைப் பார்த்து பல இடங்களுக்கு விண்ணப்பித்தபோது கோயம்புத்தூரில் வேலை கிடைத்தது. கோவையில் நேர்முகத்தேர்விற்குச் சென்ற அனுபவம் மறக்கமுடியாத ஒன்றாகும். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தட்டச்சு, சுருக்கெழுத்தில் முதலிடம் பெற்ற நிலையில் கோவையில் எழுத்தர் மற்றும் தட்டச்சர் பதவியில் தலைமை அலுவலகத்தில் நான் நியமிக்கப்பட்டேன். என்னுடன் சேர்ந்த இருவர் முறையே ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பணியில் சேரும்படி பணிக்கப்பட்டார்கள். ஊதியம் ரூ.350 என்று ஆணை பெறப்பட்டது. ஆணை வாங்கியபின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது நிர்வாக இயக்குநர் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது அழைப்பு ஓர் அதிர்ச்சியைத் தந்தது. ஆணையில் ரூ.350 என்பது தவறாக தட்டச்சிடப்பட்டதாகவும் ரூ.250 ஊதியம்தான் வழங்கப்படவுள்ளது என்றும் கூறி, நன்கு யோசித்து இசைவைத் தெரிவியுங்கள் என்று அவர் கூறினார். கால அவகாசம் கேட்டு வெளியே வந்த நாங்கள் சுமார் 10 நிமிடங்கள் எங்களுக்குள் பேசி ரூ.250 ஊதியத்தில் சேர்வது என்று தீர்க்கமாக முடிவெடுத்து இசைவைத் தெரிவித்தோம். நல்ல நிறுவனத்தை விட்டுச் செல்ல மனமின்றி, எங்களது முடிவு அமைந்தது.
வத்தலகுண்டு ஆறுமுகம், விழுப்புரம் திருநாவுக்கரசு, கும்பகோணம் ஜம்புலிங்கம், திண்டுக்கல் கண்ணன், கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி பெருமாள் (15.8.1982இல் கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

நண்பர்கள்
சுமார் இரண்டு ஆண்டுகள் தங்கிய நிலையில் அலுவலகத்திலும், தங்குமிடத்திலும் நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.  விடுமுறை நாள்களில் வ.உசி.பூங்காவிலோ, தியேட்டர்களிலோ எங்களது நேரம் இனிமையாகக் கழிந்தது. நேரம் கிடைக்கும்போது சொந்த ஊரான கும்பகோணம் வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக என்னை அதிகம் கவர்ந்த ஊர் கோயம்புத்தூரேயாகும். அங்கிருந்தபடியே மேலும் பல நிறுவனங்களுக்கு பணிக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். அதே சமயம் பணியாற்றிய இடத்தில் தொடர்ந்து நன்முறையில் பணியைச் செய்து வந்தேன். 

வார விடுமுறை
சனிக்கிழமை மதியமும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக இருந்தன.  இதுவரை பணியாற்றிய இடங்களில் ஒரு நாளே விடுமுறையாக இருந்தது. அலுவலகம் ரேஸ்கோர்சில் இருந்தது. மதியம் பெரும்பாலும் அருகில் உள்ள ரெயின்போ தியேட்டரில் சினிமா பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள ஆரம்பித்தேன். பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். 

பம்பாய் அலுவலகம்
கோயம்புத்தூர், மதுரை, தேனி, திருச்சி, துடியலூர், வேலூர் உள்ளிட்ட கிளைகளில் விற்கும் பொருள்களின் விவரங்களைத் தொலைபேசி வழியாகப் பெற்று மதியம் 1.00 மணிக்குள் பம்பாய் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டியது என் இருக்கைப் பணிகளில் முக்கியமானதாகும். பல வகையான பொருள்கள், விலைகள், அளவுகள் என்ற நிலையில் தனியாகப் பட்டியலிட்டுத் தொகுத்து அதனைச் சுருக்கிச் செறிவாக தொலைபேசி மூலமாக பம்பாய்க்குத் தெரிவிக்க வேண்டும். முதல் இரு வாரங்கள் மிகவும் சிரமப்பட்டேன். பின்னர் புரிந்துகொண்டேன்.

கூடுதல் பணிக்கான ஊதியம்
அலுவலகப்பணிக்கு மேலாக அதிகமாக பணியாற்றியபோது கூடுதல் பணிக்கான ஊதியத்தை அவ்வப்போது பெற்றுக்கொள்ளும் வசதி அங்கு இருந்தது. எந்த ஒரு பணியாளரின் பணி நேரமும் உரிய முறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்பதிலும், கூடுதலாகப் பணியாற்றுவோருக்கு உரிய ஊதியத்தை வழங்கவேண்டும் என்பதில்  நிர்வாக மேலாளர் மிகவும் கவனமாக இருப்பார். இவ்வாறாக ஊதியம் பெறும்போது பணியின்மேலிருந்த மதிப்பும் அக்கறையும் மேம்பட்டன.    

அலுவலகம் செல்லல்
இரண்டு இடங்களில் தங்கியிருந்தபோதிலும் இரண்டாவதாகத் தங்கிய புது சித்தாப்புதூரிலுள்ள வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள அறையில் அதிக நாள் தங்கியிருந்தேன். அங்கிருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள நிறுவனத்திற்குப் பேருந்தில் செல்வேன். திரும்பும்போதும் அவ்வாறே. பல சமயங்களில் தங்கும் அறையிலிருந்து அலுவலத்திற்கு நடந்தே சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டேன். 

பயணங்கள்
கோவையிலிருக்கும்போது கூடுதல் பணிக்கான ஊதியமோ பிற ஊதியமோ பெறும்போது அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்றுவந்தேன். முதன்முதலாக சபரிமலைக்கும் கேரளாவிலுள்ள பிற கோயில்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது.   இந்த சூழலில்தான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களையும், கோயம்புத்தூரையும் பிரிய மனமின்றிப் பிரிந்தேன். கோயம்புத்தூரைவிட்டு வெளியே வந்தது ஒரு பெரிய இழப்பாகத் தெரிந்தது. அந்த அளவிற்கு கோயம்புத்தூரும், நண்பர்களும் என் மனதில் இடம் பெற்றுவிட்டனர், நண்பர் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தார் உட்பட. 
----------------------------------------------------------------
30 ஏப்ரல் 2017இல் பணி நிறைவு : திரும்பிப் பார்க்கிறேன்
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்
----------------------------------------------------------------

11 comments:

  1. இத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

    அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. தங்களுடைய பதிவின் மூலமாக அன்றைய காலகட்டங்கள் நினைவுக்கு வருகின்றன..

    ReplyDelete
  3. அருமை ஐயா... வேறு ஏதும் சொல்ல வார்த்தைகள் இல்லை...

    ReplyDelete
  4. பிரமிப்பாக இருக்கிறது தங்களது நினைவுகள்

    ReplyDelete
  5. #I congratulate you on your new assignment என்று எழுதக் கூறியதை நான் பொருள் புரியாமல் I congratulate you on your new consignment#
    இரண்டுக்கும் உள்ள அர்த்தம் புரிய எனக்கும் சிறிது நேரமானது :)

    ReplyDelete
  6. சின்னச் சின்னப் பதம் வைத்து...என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. படிப்-படி-யாக முன்னேறிருக்கிறீர்கள். இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவு.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  7. ஆஹா... வியப்பாக இருக்கிறது ஐயா... முதல் முதல் என எப்படி ஞாபகத்தில் இத்தனை நினைவுகள்...
    அருமை.

    ReplyDelete
  8. மனதில் படமாக ஓடும் மறக்க முடியாத நினைவுகள் - அனுபவங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  9. வணக்கம்.

    தங்களின் அனுபவங்களைச் சுவைபடத் தருகிறீர்கள்.

    இவ்வளவு விவரங்களையும் துல்லியமாக அளித்துச் செல்லும்விதம் வியக்க வைக்கிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  10. தங்கள்
    வாழ்க்கைப் பதிவுகள்
    பலருக்கு வழிகாட்டல்
    நாங்கள்
    கற்றுக்கொள்ள பல இருக்கே

    ReplyDelete