21 April 2017

என்னைப் பற்றி நான் : மனசு தளம்

அடுத்த வாரம் இதே நாளில்  (28 ஏப்ரல் 2017) பணி நிறைவு பெறவுள்ள நிலையில் என்னைப்பற்றி நான் என்ற தலைப்பிலான பதிவை 
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


என்னைப் பற்றி நான் என்ற ஒரு தலைப்பினைக் கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு பரிவை குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிசையில் அவரது வலைப்பூவில் தொடர்ந்து பல நண்பர்கள் எழுதி வருவதைப் பார்த்து, அவ்வப்போது பின்னூட்டம் இட்டு வந்துள்ளேன். சுயமதிப்பீடு செய்வதற்கு இவை போன்ற பதிவுகள் மிகவும் உதவும். 
என் அத்தை கூறுவார் "எப்படியும் வாழலாம்ணு இருக்கு. இப்படித்தான் வாழணும்னு இருக்கு, இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான்.... எப்படி பிழைக்கப் போறோனோ?" பெற்றோர் என்று இருந்தாலும்கூட என்னை வளர்த்தவர்கள் ஆத்தா, தாத்தா மற்றும் என் அத்தையே. என்னை வளர்த்துக் கொண்டிருப்பதும், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்க உதவுவதும், தடுமாறாமல் என் வழியில் நான் தொடர்ந்து செல்லக் காரணமாக இருப்பதும் இந்த சொற்றொடரே.  இப்படியாகத்தான் வாழவேண்டும் என்ற நியதியை வைத்துக்கொண்டு இச் சமுதாயத்தில் வாழ்வது அதிகம் சிரமமே. இதுவரை அவ்வாறே இருந்துவிட்டேன். மாற்றிக்கொள்ள முடியவில்லை. என் கல்லூரி நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணன் "Men may come men may go but I go on forever" என்ற புகழ்பெற்ற அயல்நாட்டுக் கவிஞனின் சொற்களைக் கூறுவார்.  விடாப்பிடியான இக்கொள்கையானது மற்றவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காண்பிப்பதை உணரமுடிகிறது.



நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு (பி.1959, கும்பகோணம்) குடும்பச்சூழல் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து (1975-79), அதே காலகட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியனவற்றைக் கற்ற வகையில் வேலை வாய்ப்பு பெற்றேன். சென்னையிலும், தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் தனியார் நிறுவனங்களில் (1979-82) பணியாற்றி விட்டு, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து (16 ஆகஸ்டு 1982) சுமார் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வீட்டு வேலைகளையும், பிற பணிகளையும் விடுமுறை நாள்களில் கவனித்துக் கொள்கிறேன். நண்பர்கள், அறிஞர்கள் சந்திப்பு, ஆய்வுப்பணி, களப்பணி போன்றவற்றை விடுமுறை நாள்களில் மேற்கொண்டுவருகிறேன்.  ஒரு நாளுக்கான திட்டமிடலை பின்வருமாறு அமைத்துக்கொள்கிறேன்.    
  • காலை 6.30 : 10 நிமிட உடற்பயிற்சி
  • காலை 6.45 : Guardian, New York Times, Dawn உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு  
  • காலை 7.45 : The Hindu மற்றும் தினமணி வாசிப்பு 
  • காலை 8.00 : தேவாரம் ஒரு பதிகம் வாசிப்பு (விடுமுறை நாள்களில் திவ்யப் பிரபந்தமும் சேர்த்து)
  • காலை 8.20 : அலுவலகத்திற்குக் கிளம்புதல் (பேருந்தில்)
  • காலை 9.30 : அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் வரல்
  • மாலை 5.45 : அலுவலகத்தை விட்டுப் புறப்படல் 
  • இரவு 6.30 : இல்லம் வந்து சேர்தல், குடும்பத்தினருடன் அளவளாவுதல்
  • இரவு 8.00 : சிறிது நேரம் வாசிப்பு
  • இரவு 9.00 : கட்டுரைகள் எழுதுதல்
  • இரவு 10.00 : உறங்கச் செல்லல்
வாழ்வின் இலக்குகளாக நான் நினைத்தனவற்றில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியுள்ளேன் என்பது எனக்கு மன நிறைவாக உள்ளது. வாசகர் கடிதம் எழுதத் தொடங்கி தற்போது சுமார் 1000 பதிவுகள் (ஆய்வுக்கட்டுரைகள், இரண்டு வலைப்பூவில் கட்டுரைகள், நாளிதழ்களுக்குக் கட்டுரைகள், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகள்) எழுதுமளவு உயர்ந்துள்ளது.   

காலந்தவறாமை : 1979இல் முதன்முதலாக பணியில் சேர்ந்த முதல் காலந்தவறாமை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரத்திற்குள் சென்றுவிடுவேன். இயலா நிலை ஏற்படின் இயலாமையைத் தெரிவித்துவிடுவேன். நிகழ்ச்சியோ, விழாவோ நடப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். நேரம் வீணாவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.    

நேரம் பேணுதல் : உரிய நேரத்தில் உரிய பணிகளை முடித்துவிடல் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அந்தந்த நேரத்தில் அந்தந்த பணிகளைச் செய்யுமளவு வரையறுத்துக்கொள்வேன். தகுதிக்கு மேலாக முடியாததை இழுத்துப்போட்டுக் கொண்டு சிரமப்படுவதில்லை. இயலாது எனின் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவேன். 

நேர்மை அனுசரித்தல் : முடிந்த வரை நேர்மையாக இருக்கிறேன். இதனால் அதிக சங்கடங்களை எதிர்கொண்டு வருகிறேன்.   

இடம் விட்டு நகர்தல் : நமக்குப் பிடிக்காத ஒன்று, இயற்கைக்கு முரணானது, விதிகளுக்கு அப்பாற்பட்டு நடப்பது, அரசியல், இனம், சாதி என்ற போர்வையில் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி காரியம் சாதிக்கப்படல் என்பன போன்ற செயல்கள் கண் முன்னே நடக்கும்போது அங்கிருந்து நகர்ந்துவிடுவேன். 

மேற்கொள்ளும் பணிகளில் கட்டுப்பாடு முடிந்தவரை என்னால் மேற்கொள்ள முடியும் என்ற பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றேன். இயலாத ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளையோ எடுத்துக்கொண்டு நேரமில்லை, செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்வது கிடையாது.  

சுற்றமும் நட்பும் பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகிய ஒருவர், அனைத்து செய்திகளையும் என்னுடன் பகிர்வார். நானும் அவ்வாறே பழகிவந்தேன். சில நாள்களாக அவரைக் காணவில்லை. பின்னர் வேறு சில நண்பர்கள் மூலமாக தனிப்பட்ட முயற்சியாலும், தகுதி அடிப்படையிலும் அவர் பிறிதொரு இடத்தில் ஆசிரியராக, பணியில் சேர்ந்ததாக அறிந்தேன். அதிர்ச்சியடைந்தேன். இதனை அவர் என்னுடன் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவரைப் பற்றி பேசுவதை முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். இவ்வாறே குடும்ப நிலையிலும், உறவு நிலையிலும் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். தம் தவறை அவர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும்கூட அவர்களை விட்டு விலகி விடுகின்றேன். மனதிற்கு சரியாகப் படும் இடத்தில் நேர்மையினைக் கடைபிடித்து வரும் நிலையில் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன்.  

நெஞ்சு நிமிர்தல் வாய்மையைக் கடைபிடிக்கும் நிலையில் எவருக்கும் அஞ்சுவதில்லை. அனாவசியமாக ஒருவரைப் பேருக்காகப் புகழ்தல்,  பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக உயர் பதவியில் இருப்போரை பாராட்டுதல், தத்துவங்களைப் பேசிக்கொண்டு குறுகிய நோக்கில் நடந்துகொள்ளல் என்பனவற்றில் ஈடுபடுவதில்லை. அவ்வாறான குணமுள்ளவர்களோடு பழகுவதும் இல்லை.  மூத்த அலுவலரோ, ஆசிரியரோ, நண்பரோ யாராக  இருந்தாலும் சரி, அவர் தவறாக ஒரு காரியத்தினைச் செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். (ஓர் அலுவலர் தட்டச்சில் பிழை செய்தபோது சுட்டிக்காட்டிய நிலை ஏற்பட்டது. பிறர் அதனைக் கண்டும் காணாதது போல இருந்தனர். அவ்வாறே ஆய்வு நிலையில் துறை சார்ந்த ஒருவர் புத்தர் சிலையை சமண தீர்த்தங்கரர் சிலை என்றார். பதவிப் பொறுப்பில் இருந்ததால் அவர் தவறான கருத்து கூறியும் உடன் இருப்போர் அதற்காக தலையாட்டினர். நான் ஏற்காமல், என் கருத்தை அதுவும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் நான் மாற்றுக்கண்ணோட்டத்தில் அவர்களால் பார்க்கப்பட்டேன்). என்னைவிட இளையவர்களாக இருந்தால்கூட அவர்கள் கூறும் கருத்தில் நியாயமிருப்பின் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.   

பொருளாசை, பணத்தாசை : பொருள்மீதோ, பணத்தின்மீதோ ஆசை வைத்து சேர்க்க ஆசைப்படுவதும், அண்டை வீட்டாரிடம் இருப்பதால் நம்மிடமும் இருக்கவேண்டும் என்று பொருள்களை வாங்கிச்சேர்ப்பதோ கிடையாது. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அதனை மீறாமல் இருக்க முயற்சிக்கிறேன்.  

கணக்கு வைத்துக்கொள்ளல் அவ்வப்போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு கணக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இது பல நிலைகளில் அனாவசிய செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும், நம்மை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.

ஆவணப்படுத்துதல் முதன்முதலாக நான் வேலைக்குப் போட்ட விண்ணப்பம் (12.5.1976) தொடங்கி அண்மையில் தினமணியில் வெளியான என் பேட்டி வரை அனைத்தையும் ஆவணப்படுத்தி, ஆண்டுவாரியாக நூற்கட்டு செய்து வைத்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் இவற்றை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு என்ற தலைப்புகளாகப் பிரித்து வைத்துள்ளேன். பெரும்பாலும் நான் எழுதி வெளியான கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை இவ்வாறு வைத்துள்ளேன். 

கோபப்படல் : நமக்குப் பிடிக்காத, ஒவ்வாத ஒரு பொருள், நபர், செயல், சூழல் என்ற நிலையில் அதிகம் கோபம் ஏற்பட்டு விடுகிறது. முன்னர் அதிகம் கோபப்பட்டு கொண்டு இருந்தேன். தற்போது இதன் அளவு குறைந்துவிட்டாலும், இக்குணத்தை என்னால் முற்றிலுமாக விடமுடியவில்லை. 

ஆசிரியர் பணி : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், அலுவல் நிலையில் பணியாற்றும்போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். இரு முறை நேர்முகத்தேர்வினை எதிர்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனைகளை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த அளவிற்கு 1000+ பதிவுகளை எழுதியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பதை உணர்கிறேன். 

குடும்பம்
மனைவி (திருமதி பாக்கியவதி), மூத்த மகன் (திரு பாரத்/பி.காம்., எம்.பி.ஏ.,), இளைய மகன் (திரு சிவகுரு/பி.டெக்.,) ஆகியோரைக் கொண்ட குடும்பம். மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு மகன். இரு மகன்களும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மகன்கள் இருவருக்கும் பள்ளிக்காலம் முதல் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வளர்த்தோம். அதன் விளைவாக எங்கள் இல்லத்தில் தற்போது ஒரு சிறிய நூலகம் உள்ளது. நான் இரு வலைப்பூக்களில் (சோழ நாட்டில் பௌத்தம்முனைவர் ஜம்புலிங்கம்  ) எழுதிவருகிறேன். என் மனைவி (பாக்கியவதி பக்கங்கள்), மூத்த மகன் (பாரத்), இளைய மகன் (தஞ்சை தமிழ்ச்செல்வன்) ஆகியோரும் வலைப்பூவில் எழுதி வருகின்றனர். 

சமுதாயத்தில் குடும்பம், பணி, ஆய்வு என்ற நிலையில் முன்னுதாரணமாக இருக்க முயற்சித்து வருகிறேன். அதற்கு என் நண்பர்களும், குடும்பத்தவர்களும் உதவியாக உள்ளனர். இவையனைத்திலும் என் மனைவி மற்றும் மகன்களின் ஒத்துழைப்பு என்னை மேம்படுத்த உதவியாக உள்ளது. குறிப்பாக நாம் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் உறுதியாக உள்ளேன். எனது இப்பயணம் தொடரும்.   
திரும்பிப் பார்க்கிறேன்
வாழ்த்தியல் விழா 28 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்

11 comments:

  1. முனைவருக்கு வாழ்த்துகள்
    திரு. குமார் அவர்கள் தளத்திலும் படித்தேன் நன்றி
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. கடமை கண்ணியம் கட்டுபாடு என்று அறிஞர் அண்ணா சொல்லி சென்றார் ஆனால் அதன்படி யாரவது வாழ்ந்தார்கள் என்றால் ஜம்புலிங்கம் அவர்களைத்தான் சொல்லலாம் என்படை இந்த் பதிவின் மூலம் அறிய முடிகிறது, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  3. மிகவும் நல்ல நல்ல கொள்கைப் பிடிப்புகளுடன் வாழும் சாதனைத் திலகமான இந்த முனைவர் ஐயா அவர்களே நமக்கெல்லாம் இன்று ஒரு வழிகாட்டியாகவும், நடமாடும் பல்கலைக் கழகமாகவும் திகழ்கிறார்.

    பணி ஓய்வு பெற இருக்கும் அவர்கள், மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழவும், மென்மேலும் பல சாதனைகள் புரியவும் மனமார வாழ்த்தி மகிழ்கிறோம்.

    ஓர் உண்மையான + எளிமையான சாதனையாளரைப் பற்றி வெளியிட்டுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. குமார் அவர்களது தளத்திலும் வாசித்தோம் தங்களைப் பற்றி தங்கள் தளத்தின் மூலம் அறிந்திருந்தாலும் மேலும் கூடுதலாகத் தங்களைப் பற்றி அறிய முடிந்தது. சிறப்பாகச் சொல்லியிருந்தீர்கள் ஐயா.

    இன்னும் ஒரு வாரகாலமே உள்ளது தங்களின் பணி நிறைவிற்கு இல்லையா. ஆனால் தாங்கள் தங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாகச் செய்துகொள்வீர்கள் என்பதை நன்கு அறிவோம்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. தங்கள் குறிக்கோள் வாழ்க்கை எம் போலும் இளையரை நெறிப்படுத்தும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  8. அங்கேயும் வாசித்தேன். வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  9. குமார் தளத்தில் குறிப்பிட்டது போல
    தங்கள் வரலாறு - பலருக்கு
    இனிய வழிகாட்டல்!
    தங்களைப் போல முன்னேறி வென்றிட
    இன்றைய இளசுகள்
    சிந்திப்பதாகத் தெரியவில்லையே!

    ReplyDelete
  10. திட்டமிட்ட வாழ்க்கை..
    திகட்டாத மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  11. திட்டமிட்டு வாழ்ந்துவரும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகின்றேன். வருகிற 28 ஆம் நாள் பணி நிறைவு பெறுகின்ற தங்களுக்கு வாழ்த்துகள். பணி நிறைவு என்பது அலுவலகத்தில் மட்டுமே. நீங்கள் ஆற்றவேண்டிய பணி இன்னும் நிறைய இருக்கிறது. தங்களின் ஆராய்ச்சிப் பணி தொடரவேண்டும். தாங்கள் ஆய்ந்ததை எல்லோருடனும் பகிர்ந்து மகிழவேண்டும். இதுவே எனது அவா!

    ReplyDelete