11 April 2017

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி) : ப.தங்கம்

ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்களிடமிருந்து 6 ஏப்ரல் 2017 காலை ஒரு தொலைபேசிச்செய்தி. "தம்பி, கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் இரண்டாம் பகுதி தற்போது வெளிவந்துவிட்டது. அனுப்பிவைக்கிறேன். படித்துவிட்டு கருத்தைக் கூறவும்". அன்று மாலையே நண்பர் திரு ரவி மூலமாக நூல் எனக்குக் கிடைத்தது. ஓவியத்தையே வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய சுறுசுறுப்பும், பொன்னியின் செல்வன் மீதான அவருடைய ஆர்வமும் ஈடு இணையற்றது. நான் படித்ததைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

அவர் தீட்டிய கல்கியின் பொன்னியின் செல்வன்  சித்திரக்கதையின் முதல் பகுதியைப் படித்துள்ளோம். முதல் பகுதியைப் போலவே இரண்டாம் பகுதியும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.  முதல் பகுதி ஆடித்திருநாள் தொடங்கி திடும் பிரவேசம் வரை 11 அத்தியாயங்களில் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருந்தது. குடந்தையில் ஜோசியர் வீட்டில் வானதி ஜோசியரிடம் குந்தவைக்கு வரப்போகும் மணமகனைப் பற்றி ஆவலாகக் கேட்டுக் கொண்டிக்கும் நேரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் அங்கு வந்து ஜோசியரைப் பார்க்க முயல ஜோசியரின் சீடன் அவனைத் தடுக்கிறான்.  அதையும் மீறி வந்தியத்தேவன் உள்ளே நுழைந்ததும் அங்கே குந்தவையைப் பார்க்கிறான். அத்துடன் சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவடைந்திருந்தது.  இரண்டாவது பகுதி (பக்.111-226 வரை) ஜோசியர் வீட்டில் வந்தியத்தேவன் குந்தவையையும், கம்பீரமும், வியப்பும், குறும்புச்சிரிப்பும் ததும்பி இருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்ப்பது முதல் தொடங்குகிறது.  இப்பகுதி பழுவேட்டரையர் மாளிகையிலிருந்து பொக்கிஷ அறைக்குச் செல்கின்ற சுரங்கப்பாதையில்  ஒரு புறம் பழுவேட்டரையரும் நந்தினியும் மற்றொரு புறம் கந்தமாறனும், காவலாளியும் நிற்க அவர்களுக்குத் தெரியாமல் வந்தியத்தேவன் தூண் மறைவில் யாருக்கும் தெரியாமல் நின்றுகொண்டிருப்பதுடன் நிறைவடைகிறது. 

முந்தைய பகுதியில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் தத்ரூபமாக நம் முன் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். கீழ்க்கண்ட ஓவியங்கள் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சிலவாகும். அவற்றில் ஓவியரின் கைவண்ணம் மிளிர்வதைக் காணமுடியும்.  

 • ஜோசியர் வீட்டில் எதையோ நினைத்து குந்தவை சிரித்தபோது  எதற்காகச் சிரிக்கின்றீர்கள் என்று வானதி கேட்கும்போது அதில் உள்ள ஏக்கம் (ப.113)
 • குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதை தெரியாதா, திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா என்ற வந்தியத்தேவனின் எதிர்பார்ப்பு (ப.116)
 • சோழ நாட்டின் செழிப்பை ரசித்துக்கொண்டே குதிரையில் வந்தியத்தேவன் செல்லும்போது அவன் கண்களில் காணப்பட்ட அந்த ரசனை (ப.125)
 • சோழ   நாட்டுப் பெண்கள் மரியாதை அறியாதவர்கள் என்று எண்ண வேண்டாம் என்று வந்தியத்தேவனிடம் குந்தவை கூறும்போது காணப்படுகின்ற பரிதவிப்பு (ப.132)
 • ஆழ்வார்க்கடியான் நம்பியிடம் மீன் சமிக்ஞை செய்தபோது இடும்பன்காரி முகத்தில் காணப்பட்ட பதட்டம் (ப.143)
 • பள்ளிப்படைக்கோயிலில் என்ன நடக்கிறது என்று ஆழ்வார்க்கடியான் நம்பி பார்த்தபோது அவன் முகத்தில் காணப்பட்ட ஆர்வம் (ப.148)
 • நான் பழுவூர் இளையராணிதான், மகாராஜா இல்லை...நீ மிரண்டு போயிருக்கிறாய், துர்க்கையம்மன் கோயில் பூசாரியிடம் போய் வேப்பிலை அடிக்கச் சொல்லு, பயம் தெளியட்டும் என்று வந்தியத்தேவனிடம் நந்தினி சொல்லும் போது காணப்படும் கிண்டல் (ப.161)
 • பேசும் சக்தியற்ற, காது கேளாத தன்னுடைய தாயிடம் அமுதன், வந்தியத்தேவனை அறிமுகப்படுத்தியபோது அவளுடைய முகத்தில் வெளிப்பட்ட அன்பும் கருணையும் (ப.169)
 • தஞ்சைக் கோட்டை மற்றும் அரண்மனையின் பிரம்மாண்டத்தைக் கண்டபோது வந்தியத்தேவன் முகத்தில் காணப்பட்ட ஆச்சர்யம் (ப.176)
 • வந்தியத்தேவனிடமிருந்து சின்ன பழுவேட்டரையர் ஓலையை வாங்கிப் பார்த்தபோது அவருடைய முகத்தில் வெளிப்பட்ட ஆவல் (ப.180)
 • குந்தவைக்குக் கொண்டுவந்த ஓலைச்சுவடியைத் தவறவிட்டபோது வந்தியத்தேவன் முகத்தில் காணப்பட்ட திக்பிரமை (ப.189)
 • நந்தினியின் மோக வலையில் சிக்கிய பெரிய பழுவேட்டரையர் அவளை வர்ணித்துப் பேசியபோது வார்த்தைகளுக்கான அவருடைய  தடுமாற்றம் (ப.219)
கல்கி மற்றும் ஓவியர் மணியம் ஆகிய இருவரைப் பற்றியும் நூலாசிரியர் தந்துள்ள குறிப்பு அவ்விருவரின் மீதான அவருடைய ஈடுபாட்டையும், தாக்கத்தையும் உணர்த்துகின்றது. 1960இல் தினத்தந்தியில் ஓவியராகப் பணியாற்றியபோது தான் ஓவியர் மணியம் அவர்களை சந்தித்துப் பேசியதை நினைவுகூர்கிறார் நூலாசிரியர் (ப.4).

நூலாசிரியரின் தொடர் முயற்சியைப் பாராட்டுவோம். தொடர்ந்து மூன்றாம் பகுதி வெளிவரவுள்ளதாகக் கூறியுள்ளார். அவருடைய முயற்சி கைகூட வாழ்த்துவோம். அடுத்த தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் தன் ஓவியத்திறன் மூலமாக நம்மை பல்லாண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் அவருடைய அபார உழைப்பினைப் பாராட்டும் வகையில் இந்நூலை வாங்குவோம். கடந்த பகுதியைப் போலவே இப்பகுதியையும் சிறப்பாக அமைத்துத் தந்துள்ள முல்லைபாரதிக்கு சிறப்பு பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
-------------------------------------------------------------------------------
முதல் பகுதி பற்றிய பதிவு

-------------------------------------------------------------------------------


கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, இரண்டாம் பகுதி
சித்திரம் :  ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி :  9159582467
விலை : ரூ.200
ஆண்டு : 2016            


17 comments:

 1. அழகான படங்கள், அருமையான சித்திரக்கதை பகிர்வுக்கு நன்றி. ஓவியர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருமையான விளக்கங்கள் ஐயா... நன்றி...

  ReplyDelete
 3. தமிழர்கள் வாங்கி ஆதரிக்கவேண்டிய நூல் இது என்று அறிந்துகொண்டேன். சென்னை வந்ததும் வாங்கவேண்டும்.

  -இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்

  ReplyDelete
 4. மனதுக்கு இனிய வரலாறு சித்திர வடிவில் எனும்போது மகிழ்ச்சி..

  இந்த முறை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வாங்க வேண்டும்..

  ReplyDelete
 5. அழகு ஓவியங்களுடன் அழகான விளக்கங்கள் மகிழ்ச்சி

  ReplyDelete
 6. அழகான படங்கள் விளக்கங்களும் அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 7. விளக்கிய விதம் அருமை

  ReplyDelete
 8. #1960இல் தினத்தந்தியில் ஓவியராகப் பணியாற்றியபோது தான் ஓவியர் மணியம் அவர்களை சந்தித்துப் பேசியதை நினைவுகூர்கிறார் நூலாசிரியர் (ப.4)#
  57 ஆண்டுகள் ஆன பின்னரும் மறக்காமல் இருப்பது திரு .தங்கம் அவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது :)

  ReplyDelete
 9. கல்கி இதழில் தொடராக வந்த போது வரையப்பட்ட படங்களே இதற்கு இன்ஸிபிரேஷனா

  ReplyDelete
 10. ஓவியர் தங்கம் ஐயா அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தொடர்கிறது ஐயா
  விரைவில் சந்திக்க விரும்புகிறேன்
  ஐயா அவர்களின் அலைபேசி எண்ணை, தங்களைத்தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்கின்றேன் ஐயா

  ReplyDelete
 11. ஒரு வரலாற்றுப் புதினத்தை வளரும் தலைமுறை மனங்கொள்ளத் தக்க வரைகலையாகத் தந்துள்ள ஓவியர் தங்கம் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

  ReplyDelete
 12. ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு!

  ReplyDelete

 13. நீங்கள் படங்களுடன் பதிவு செய்த விதம்
  மிக மிக அருமை
  அவசியம் அடுத்த தலைமுறையினருக்கு
  பதினத்திற்கு இது ஒரு நுழைவு வாயிலாக
  நிச்சயம் இருக்கும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. காமிக்ஸ் வடிவில் ?
  வாவ்
  விலையும் குறைவுதான்

  ReplyDelete
 15. கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி) பற்றிய அறிமுகம் அருமையாகவுள்ளது. சிறப்பாகப் படங்களுடன் அறிமுகம் நன்றாகவுள்ளது.

  ReplyDelete
 16. சித்திர கதை அருமையான தலைமுறை நகர்வு ஐயா..

  ReplyDelete