02 September 2017

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றபோது கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற  துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சென்றோம். இக்கோயிலைப் பார்க்க வேண்டுமென்ற எனது நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. தமிழகத்தில் செங்கல் கட்டுமானத்திற்கும், கருங்கல் கட்டுமானத்திற்கும் புகழ் பெற்ற கோயில்கள் பல உண்டு. அத்தகைய பெருமையினைக் கொண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள, உயர்ந்த அளவிலான விமானத்தைக் கொண்ட, இடிபாடுற்ற நிலையிலுள்ள வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலுக்கு 2012இல் நாங்கள் சென்று வந்த அனுபவத்தை மார்ச் 2014இல் பகிர்ந்துகொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  

துக்காச்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது கோயிலின் அமைப்பு, கட்டுமான அமைப்பு போன்றவற்றைப் பற்றிய எண்ணங்கள் எழ ஆரம்பித்தன. வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலைப் போல இடிபாடான நிலையில் உள்ளதா, முற்றிலும் பார்க்க முடியாமா என்பன போன்ற எதிர்பார்ப்புகளோடு துக்காச்சி வந்துசேர்ந்தோம். இடிபாடான ராஜகோபுரத்தினை பார்த்ததும் கோயிலுக்கு வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அருகில் உள்ளோரிடம் விசாரித்து பூட்டியிருந்த கதவு திறக்கப்படும் வரை காத்திருந்தோம். நாங்கள் சென்ற நேரம் கிட்டத்தட்ட நண்பகலாக இருந்த நிலையில் திறப்பார்களோ, மாட்டார்களோ என்ற ஏக்கமும் எங்களை ஆட்டிவைத்தன. 
பூட்டு திறந்து உள்ளே வந்தபின் முதலில் உள்ள ராஜகோபுரத்தைக் கண்டோம். இனி எந்த யுகத்தில் இதுபோன்ற ஒரு கட்டுமானத்தைப் பார்க்கப்போகிறோம்?  
ராஜ கோபுரத்தின் நடுவே எங்கும் இதுவரை பார்த்திராத வகையில் நான்கு கருங்கல் தூண்களைக் கண்டோம். செடிகள் எங்கும் ஆக்கிரமித்திருக்க அதற்கிடையே ஆனையுரித்த தேவர் உள்ளிட்ட  அழகான சிற்பங்களைக் கண்டோம்.


ராஜ கோபுரம், வலப்புறம்

ராஜ கோபுரம், இடது புறம்
அந்த கோபுரத்தின் இடது புறத்தில் சிறிய சன்னதி போன்ற அமைப்பில் செங்கல் கட்டுமானம் காணப்பட்டது.  
தனி சன்னதி போன்ற நிலையில் செங்கல் கட்டுமானம்
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றபோது மற்றொரு கோபுரம் காணப்பட்டது. அக்கோபுரமும் சற்றொப்ப ராஜகோபுரத்தைப் போலவே செடிகள் அடர்ந்த நிலையில் காணப்பட்டது.   
அடுத்து அமைந்துள்ள கோபுரம்
இரு கோபுரங்களுக்கும் இடையில் இடது புறத்தில் கருங்கல்லால் ஆன அழகிய மண்டபம் காணப்பட்டது. இடிபாடான நிலையில் இருந்த அந்த மண்டபத்தில் அழகான தூண்களும், சிற்பங்களும் காணப்பட்டன.  உள்ளே சென்று புகைப்படம் எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது. எந்த நேரமும் விழுந்து விடுமோ என்ற நிலையில் ஓர் அச்சம் எங்களிடம் இருந்தது.  
 

சாவி எடுத்து வந்தவரிடம் கோயிலுக்கு உள்ளே செல்வதற்காகத் திறந்துவிடக் கேட்டபோது அதற்கான சாவி உள்ள பொறுப்பாளர் வெளியே சென்றிருப்பதாகவும், அன்று மாலைதான் அவர் வருவார் என்றும் கூறினார். வேறு வழியின்றி இரண்டாவது கோபுரத்தின் வாயிலில் இருந்தபடியே உள்ளே உள்ள மண்டபத்தைப் புகைப்படம் எடுத்தோம்.    
இக்கோயிலின் பெருமையை சற்றே அறிவோம். "பல்லவ மன்னனான இரண்டாம் நந்தி வர்ம பல்லவனின் (கி.பி.730-795) பட்டப் பெயரான விடேல் விடுகு என்ற பெயரில் துக்காச்சி என்று வழங்கப்படுகிறது. தென் காளத்தி என்ற பெருமையுடைய இக்கோயிலின் விமானம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலைப் போல உள்ளது. மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் சௌந்தரநாயகி தென் திசை நோக்கியுள்ளார். முதல் திருச்சுற்றில் உள்ள துர்க்கை தென் திசை நோக்கியுள்ளார். மகாமண்டபத்தில் சரபமூர்த்தி தென் திசை நோக்கியுள்ளார். தெற்கில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன் உள்ளிட்டோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் வட திசை நோக்கி தனி சன்னதியில் உள்ளார்."  (தினமணி, 16 டிசம்பர் 2016)

சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தற்போது திருப்பணி காணுகின்ற இக்கோயிலை இயலும் விரைவில் சென்று பார்ப்போம். காலம் கடத்தவேண்டாம், நம் கலையழகினை ரசிப்போம், அது வேறு வடிவம் பெறுவதற்குள். 

கோயிலுக்குச் சென்ற நினைவாக நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்


என் மனைவி திருமதி பாக்கியவதி, உடன் எங்கள் பேரன் தமிழழகன்
எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு

இக்கோயிலில் மே 2023இல் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அக்கல்வெட்டில் இவ்வூரின் தொன்மையைப் பறைசாற்றும் வாசகம் இடம்பெற்றுள்ளதாக கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்க நிறுவனர் ஆ.கோபிநாத் கூறினார். 

இக்கோயிலின் திருப்பணி நடைபெற்று, விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொள்வோம், இறையருள் பெறுவோம்.



விக்கிபீடியாவில் இக்கோயில் தொடர்பாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பதிவு
ஆங்கில விக்கிபீடியாவில் இக்கோயில் தொடர்பாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பதிவு



20 ஆகஸ்டு 2017 அன்று முதல் பக்கத்தில் ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் இக்கோயில் பற்றிய, நான் ஆரம்பித்த, ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்துள்ள புகைப்படத்துடன் "உங்களுக்குத் தெரியுமா" பகுதியில் இடம் பெற்றது.

In Wikipedia's first page, under the column Did you know? (DYK) among others a sentence from the article written by me under the title Thukkachi Abatsahayesvar temple has been quoted: .."that the Thukkachi Abatsahayesvar temple (pictured) was greatly expanded by Vikrama Chola after he was supposedly cured of vitiligo by praying to the presiding deity for 48 days?"

20 ஜூலை 2023இல் மேம்படுத்தப்பட்டது.

12 comments:

  1. ​இப்படி ஒரு அரிய பொக்கிஷமான இடம் கவனிப்பாரின்றி கிடப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த இடத்தைப் பார்க்கும் ஆவலும் வருகிறது.

    ReplyDelete
  2. நாம் புதிதாக ஏதும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை நம் முன்னோர்கள் கட்டி வைத்த பொக்கிஷங்களை பாதுகாத்து வைக்கும் எண்ணம்கூட அரசுக்கும் இல்லை

    மக்களுக்கும் அந்த உணர்வு இல்லை என்பது வேதனையான விடயமே....

    ReplyDelete
  3. வேதனை தான் மிச்சம்..

    ReplyDelete
  4. போற்றுவார் இன்றி சிதிலமடைந்து காட்சியளிப்பது
    வேதனைஅளிக்கிறது ஐயா

    ReplyDelete
  5. ஊர் மக்கள் எல்லோரும் அந்த கோவிலை இப்படி பாழ் அடைய விட்டு இருக்க வேண்டாம்.
    இறைவனுக்கும் ஒரு காலம் போலும்!
    புதிது புதிகாக அற்க்கட்டளைகள் பெயரில் கோவில் கட்டுவதற்கு பதில் பழைய கலைநுணுக்கம் உள்ள கோவில்களை பராமரிக்க உதவலாம்.
    அழகிய கோயில் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் முனைவர் ஐயா !

    சிறப்பான பதிவாய் இருக்கிறது அறியாதவற்றை அறிந்தோம் ஆனாலும் உள்நேன்சின் வருத்தம் என்னவெனில் பண்டைய பொக்கிசங்கள் இப்படிக் கவனிப்பார் இன்றிக் கிடப்பதுதான் இனியாவது சிந்திப்பார்களா ?????

    தம +1

    ReplyDelete
  7. சிறப்பான பகிர்வு. அருமையான கட்டிடக்கலை இப்படி சிதிலமடைந்து கிடப்பதைப் பார்க்கையில் மனதில் வலி. போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றையும் அழித்திருக்கிறோம், அழித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் மனதில் வருத்தமும் வலியும் மட்டுமே.....

    ReplyDelete
  8. எவ்வளவு அழகான கோயில்! கலை! ஆனால் இப்படிச் சிதிலமடைந்து இருப்பதைப் பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. இது போன்ற கோயில்களைப் பாதுகாப்பதை விட்டு புதியதாக ஆங்காங்கே கோயில் அதுவும் மொசைக், டைல்ஸ் என்று கட்டுகிறார்கள். ஏனோ அவற்றை மனம் ஏற்க மறுக்கிறது...

    நல்ல பதிவு ஐயா! புதியதொரு கோயில் பற்றி அறிந்தோம்...துக்காச்சி கோயில் துக்கவடிவில் ஆகிப் போனதோ!?

    ReplyDelete
  9. அரிய பொக்கிஷமான இடம் கவனிப்பாரின்றி கிடப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த இடத்தைப் பார்க்கும் ஆவலும் வருகிறது.

    ReplyDelete
  10. ஐயாவிற்கு வணக்கங்கள்,
    இவைபோன்ற அரிதான கோவில் கட்டிடங்களை பராமரித்து போற்றி பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நம் கலாச்சார , கட்டிட கலையின் முதிர்ச்சியை இனி வரும் உலகமும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

    எத்தனையோ சிரமங்களை கடந்து இதுபோன்ற அறிய தகவல்களை சேகரித்தளிக்கும் தங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    கோ

    ReplyDelete