21 December 2017

காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் : தேவரசிகன்

கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலக நிறுவனரின் நூற்றாண்டு விழாவிற்குச் சென்றபோது அறிமுகமானவர் திரு தேவரசிகன். விழா நிகழ்வு நிறைவுற்றதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தான் எழுதிய காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் என்ற கவிதைத் தொகுப்பினை அன்பளிப்பாகத் தந்தார். அவருடைய நூலை முழுமையாக வாசித்தேன். அவர், முன்னுரையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.
 • கவிதையின் ஸ்திதி, கவிஞனின் செயல்பாடுகள், கவிஞனின் நிலைப்பாடுகள் என்பது குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துகள் 
 • வாசிப்பு, படைப்பு, இலக்கியத்தை அணுகுதல், அதற்குத் தேவையான அடிப்படை முயற்சிகள் குறித்த ஜவஹர்லால் நேருவின் கருத்துகள்
 • தற்கால இலக்கியச்சூழலில் கவிதைக்கு இடமில்லை கவிதை இறந்துவிட்டது எனப் பிரகடனப்படுத்தும் பேர்வழிகளுக்கு...மலையாளக்கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை  


"நூலின் சில கவிதைகளை மட்டும் இம்முன்னுரையில் குறிப்பிட்டு அதன் உணர்வுத்தளம் பற்றிய அபிமானத்தை வாசகர்களிடம் ஏற்படுத்துவதை நான் வேண்டுமென்றே தவிர்க்கிறேன். ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளைப் படிக்கையில் நான் வந்தடையும் மனப்பதிவை இவ்வறிமுகத்தில் பதிவு செய்யவே விரும்புகிறேன்" (ப.7) என்று நூலின் முன்னுரையில் திரு ஜி.காரல்மார்க்ஸ் கூறுவதிலிருந்து திரு தேவரசிகன் எழுத்தினைப் பற்றி உணரமுடிகிறது.

தமிழ்ப்பற்று, சமூக அவலங்களை எதிர்த்தல், இயற்கையின் மீதான ரசனை, யதார்த்தங்களின் வெளிப்பாடு, தத்துவ உணர்தல், மொழிபெயர்ப்பாற்றல் என்ற பல நிலைகளில் இவரது கவிதைகள் காணப்படுகின்றன. அவருடைய பரந்துபட்ட வாசிப்பினை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவர் எழுதியுள்ள கவிதைகள், பிற இதழ்களில் வெளியான இவரது கவிதைகள், அவர் மொழிபெயர்த்த கவிதைகள் என்ற வகையில் காணப்படுகின்றன. அக்கவிதைகளில் சிலவற்றைப் பார்ப்போம். 

மனிதன் 
உற்றுப்பார்க்கவில்லை
இயற்கை
இருந்தது.
இயற்கை
உற்றுப் பார்த்தது
மனிதனைக் 
காணவில்லை. (சுனாமி, ப.20)

.... .... .... ....
தமிழும் ஆங்கிலமும் கலந்து
இரு மொழிக்கும் பழிகள் சேர்த்து
இரு மொழியும் குழியில் வீழ
ஒரு வழியும் புலப்படாமல்
கரு விழிகள் இருள் சுமந்து
போலிப் பெருமையும்
பொய்யான பண்டிதமும்
காலிப்பெட்டிக்குள்
கை கோர்த்து ஒலியெழுப்ப
தமிழா! நீ பேசுவது தமிழா? (தமிழா நீ பேசுவது தமிழா, ப.27)

.... .... .... ....
இவர்கள்
அங்காடித் தெருக்களிலும்
சமூக விரோதிகளின் கரங்களிலும்
அரை வேக்காட்டு அரசியல் வாதிகளின்
ஆதாய பாசறைகளிலும்
சிறுநீரக தரகர்களின்
கழுகுப் பார்வைகளிலும்
பட்டுத் தெறித்து
செத்து விழும்
பட்டினத்து விட்டில் பூச்சிகள். (பட்டினத்து விட்டில் பூச்சிகள், ப.31)

படுத்தவுடனே
தூங்கி விடுபவர்கள்
பாக்கியவான்கள். 
.... .... .... ....(நித்ரா, ப.39)

மிருகங்கள் 
தத்தமது விஷங்களைப்
பாதுகாத்து
வைத்திருக்கின்றன.
மனிதர்கள் மட்டும்
எப்பொழுதும்
விஷங்களைத் துஷ்பிரயோகம்
செய்து கொண்டோ,
பரிமாறிக் கொண்டோ
இருக்கிறார்கள்.
.... .... .... .... (ஒரு பாதி உண்மை, ப.72)

வாழ்க்கை
தெரிந்த கேள்விகளும்
தெரியாத கேள்விகளும்
நிரம்பிய ஓர் வினோத தேர்வரங்கம்.
.... .... .... .... (நீயா?, நானா?, ப.81)

அனுபவ அடுப்பைப் பற்றவைத்து
வாழ்க்கையெனும் சட்டிதனில்
எண்ணமெனும் எண்ணெய் ஊற்றி
இன்பத்தையும் துன்பத்தையும்
உதிர்த்துப்போட்டு
இதயமெனும் கரண்டியாலே வறுத்தெடுத்தால்
அதுதான் ஞானம். (அவிந்தடங்கல், ப.117)

நெடுநாள்களுக்குப் பின்னர் அருமையான கவிதை நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன் இவர் மூலமாக. இந்நூல் இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். இவர் இன்னும் பல நூல்களை வெளியிட்டு, தமிழுக்கும், கவிதைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.

நூல் : காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்பு
ஆசிரியர் : தேவரசிகன் (9994564972)
பதிப்பகம் : தமிழாசை பதிப்பகம், 14, முல்லை வீதி, இரண்டாம் குறுக்கு,  நேரு நகர் விரிவு, மேல அம்மாசத்திரம், திருபுவனம் 612 103
ஆண்டு : 2014
விலை : :ரூ.80   

24 comments:

 1. அற்புதமான நூலைக்குறித்த விமர்சனம் அருமை. சுனாமி பற்றிய கவிதை ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடு.

  ReplyDelete
 2. //அனுபவ அடுப்பைப் பற்றவைத்து
  வாழ்க்கையெனும் சட்டிதனில்
  எண்ணமெனும் எண்ணெய் ஊற்றி
  இன்பத்தையும் துன்பத்தையும்
  உதிர்த்துப்போட்டு
  இதயமெனும் கரண்டியாலே வறுத்தெடுத்தால்
  அதுதான் ஞானம்.//

  இந்த கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு. ஞானம் பிறக்கையில் இதயக் கரண்டி என்னவாகியிருக்கும்?.. அதுவும் வறுபட்டு ஞானக்கல்வையோடு கலந்து போயிருக்குமோ?..

  ReplyDelete
 3. நல்லதொரு அறிமுகம்.

  ReplyDelete
 4. அனைத்து கவிதைகளும் அருமை. படிக்கத் துாண்டும் விமர்சனம்.

  ReplyDelete
 5. அறிமுக நூலுக்கு நன்றி அருமையான கவிதைகளை பகிர்ந்தற்க்கும் நன்றி

  ReplyDelete
 6. நல்லதோர் அறிமுகம்..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 7. நல்லதொரு அறிமுகம்,கவிதைகள் அருமை.
  நன்றிகள்.

  ReplyDelete
 8. வழக்கம்போல எதிர்மறை விமர்சனம்தான். என் செய்வது? என் கண்கள் அப்படி.

  ஆழிப்பேரலைகளை மனிதன் உருவாக்கவில்லை. அவனை இங்கு குறை சொல்ல முடியாது. அவைகளாக உருவாகி (இயற்கையால்) பட்டினங்களை அழிக்கின்றன. இந்தப்பின்னணியில் சுநாமி பற்றிய கவிதை எனக்குப் புரியவில்லை.

  ஆங்கிலக்கலப்புத் தமிழ் பற்றிய கவிதை. பேசுவதைப்பற்றியே சொல்கிறார். ஆங்கிலம் கலந்தும் எழுதுகிறார்கள். என் பின்னூட்டங்கள், கட்டுரைகளில் நிறைய ஆங்கிலச்சொற்கள் இருக்கும். எனக்கு தமிழும் ஆங்கிலமும் இரு கணகளைப் போல. தாக்கினால் என்னையும் சேர்த்து - அதாவது எழுதும் தமிழ வழக்கத்தையும் சேர்த்து - தாக்கியிருக்க வேண்டும். ஆனால் கவிதை என்ன சொல்லவேண்டுமென்பது அவர் உரிமை.

  மூன்றாம் கவிதை ''பட்டினத்து விட்டில் பூச்சிகளைப் பற்றிப்பேசுகிறது, சுநாமி கவிதைபற்றிய விமர்சனத்தில் நான் பட்டினங்களை அழிக்கின்றன என்றெழுதியிருக்கிறேன். பட்டினம் என்றால் கடலோர ஊர்கள். ஆனால் கவிதை பேசுவது பட்டணங்கள்.. அதாவது நகரங்கள். பட்டினம்-பட்டணம் . இரண்டும் வெவ்வேறு இடங்களைச் சுட்டும் பெயர்ச்சொற்கள்.

  மிருகங்கள் என்று தொடங்கும் கவிதை. மிருகங்கள் - விலங்குகள். இவ்விரு சொற்களுக்கும் பொருள் கொஞ்சம் வேறுபடும். ஆங்கிலத்தில் ஃபார்மல்; இன்ஃபார்மல் என்ப. விலங்குகள் ஃபார்மல். ஒருவனைத்திட்டும்போது, அட மிருகமே என்றுதான் சொல்வோம். அட விலங்கே என்பதில்லை. இக்கவிதையில் விலங்குகள் என்ற சொல்லே பொருத்தம். (இது என் கருத்து. திணிக்கவில்லை)

  ஆங்கிலக்கலப்பைத் தாக்கும் கவிஞரின் தமிழ் எப்படி இருக்கிறது எனபதை இங்கு காட்டப்படும் ஒரு சில கவிதைகளே சாட்சிகள்:

  இவர் பயன்படுத்தும் அயல் மொழிச்சொற்கள்: பண்டிதம் (ஆங்கிலம்கலந்த பேச்சு பற்றிய கவிதையில்) மற்ற கவிதைகளில் - பாக்கியம்; விஷங்கள்; துஷ்பிரயோகம்; அனுபவம்; ஞானம்.

  ஆங்கிலக்கலப்பில் பேசும் தமிழை கண்டிக்கும் கவிதையை எழுதியவர் பின்னொரு நாள், அயல்மொழிச்சொற்கள் - குறிப்பாக, வடமொழிச்சொற்கள் - கலப்பையும் பகடி பண்ணி கவிதை தருவார் என நம்புகிறேன். ஒரேயடியாக அச்சொற்களை நீக்கவேண்டுமெனச்சொல்லவில்லை. பல சொற்களை தமிழ் இலக்கணம் ஏற்கிறது. நானே கவிதை,கவிஞன் என்றுதானே எழுதியிருக்கிறேன். முடிந்தவரை விரட்டுக என்பதுதான் விண்ணப்பம்.

  ஜீவி என்பவர் சுட்டிக்காட்டியதைப்போல இறுதியில் காட்டப்படும் கவிதை நன்று.

  ReplyDelete
  Replies
  1. ஐயா!
   விலங்கு - தமிழ்ச்சொல்
   மிருகம்/ம்ருகம்‪/मृग‬ - சமஸ்கிருதம்
   அவ்வளவுதான் இவ்விரு சொற்களுக்கிடையேயான வேறுபாடு!

   Delete
  2. சரியே. ஆனால் சொல்வழக்கும் எடுக்கப்படும். எடுக்கப்படவேண்டும். பாட‌நூல்களில் காட்டு விலங்குகள்; வீட்டு விலங்குகள் என்று இருக்கும். மிருகம் என்பது சமஸ்கிருதம். ஆனால் தமிழில் அது விலங்கு என்ற சொல்லைப்போல மெல்லிய உணர்வைத்தரும் சொல் அன்று. எனவேதான்: ஒருவனை - மிருகப்பய; அல்லது அட மிருகமே என வைகிறோம். அட விலங்கே! விலங்குப்பய என்று திட்டுவதில்லை. இவ்வாறாக, சொற்கள் பயன்படுத்தவேண்டிய இடங்களை பேச்சு மற்றும் எழத்து வழக்குகள் நிலைப்படுத்துமே தவிர‌ (எல்லா மொழிகளிலும் இப்படித்தான்) இலக்கணம் நிலைப்படுத்தாது. என் முந்தைய‌ கருத்தின்படி, கவிஞர் சமஸ்கிருதச்சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் விரவித்தான் எழுதுகிறார் எனபதை நீங்களும் சொல்லிக்காட்டுகிறீர்கள். அவர் விலங்கு என்ற தமிழ்ச்சொல்லைவிட்டுவிட்டு மிருகம் என்ற சமஸ்கிருதச்சொல்லுக்குப் போகிறார். தமிழ்க்கவிஞர்; ஆனால், சமஸ்கிருத காதலை விட முடியவில்லை. பிறகு எப்படி பொதுமக்கள் ஆங்கில மோகத்தை விடுவார்கள்? அதைப்பற்றிய கவலையோடு ஒரு கவிதையும் இங்கு போடப்பட்டிருக்கிறது. இலக்கியவாதிகள் மக்களுக்கு மொழியின் வழியைக்காட்ட வேண்டும். ஏற்கனவே சொன்னபடி, மொழிவெறி தேவையில்லை. ஆனால் கடப்பாடு இருக்கிறது. கூடியவரை முடிந்ததைச் செய்க. எப்பேர்ப்பட்ட இலக்கியவாதியாக இருந்தாலும் இதுதான் சரி எனபதை ஜெயகாந்தனின் சமஸ்கிருதப் பாசத்தைக் கோடிட்டு காட்டி நான் வரைந்த யுகசந்தி சிறுகதைப் பற்றிய கட்டுரையை இங்கு காண்க: puthu.thinnai.com

   Delete
  3. ஐயா! விலங்கு-மிருகம் இரண்டும் ஒரேப் பொருளைத் தரும் இரு வெவ்வேறு மொழிகளிலுள்ள சொற்கள்.. நீங்கள் சொல்வது போல மென்மை-கடிமை என்னும் தன்மை வேறுபாடெல்லாம் இச்சொற்களுக்கிடையே யில்லை.. இவையெல்லாம் நாமாகவே தவறாக உருவகித்துக் கொண்டது..!

   Delete
 9. நல்லதோர் அறிமுகம். நன்றி.

  ReplyDelete
 10. பகிர்ந்த கவிதைகள் அனைத்தும் அருமை

  ReplyDelete
 11. விமர்சனம் அருமை ஐயா
  அவசியம்வாங்கிப் படிப்பேன் நன்றி

  ReplyDelete
 12. கவிதை நூல்களையும் அதன் அழகியலோடு எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா :)

  ஞானம் பற்றிய கவிதை ஈர்த்தது... :)

  ReplyDelete
 13. எதிர்மறை விமர்சனத்தால் கவிஞனின் பேனா முனையை உடைத்து விடுகிறோம். சரி போகட்டும்.
  உங்கள் நூல் மதிப்புரை நூலாசிரியர் அடுத்த நூலை வெளியிட ஆர்வமூட்டும் வகையில் அமைந்துள்ளது.

  ReplyDelete
 14. இடிப்பாரையில்லா ஏமரா மன்னன்
  கெடுப்பான் இலானும் கெடும்.

  குறை, நிறைகளைச் சுட்டிக்காட்டுவதே விமர்சனம்.

  ReplyDelete
 15. //..தமிழும் ஆங்கிலமும் கலந்து.. என ஆரம்பிக்கும் கவிதை பற்றிக் கொஞ்சம் சொல்லவிரும்புகிறேன்.

  எந்த ஒரு மொழியின் வளர்ச்சியிலும் பிறமொழிச்சேர்க்கை தவிர்க்கவியலாதது. அந்த மொழியை அன்றாடம் பேசுபவர்கள், புழங்குபவர்கள், தங்கள் பேச்சு வழக்கில் ஆங்கிலம் முதலான பிறமொழிவார்த்தைகளை இயல்பாகக் கலந்து பயன்படுத்தவே செய்கிறார்கள். அவர்களது தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன அவை. எழுத்தில் காணாமற்போகவேண்டுமென்றால் எப்படி? ஏன்? அப்படி என்ன நெருக்கடி இங்கே!

  ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மேலை நாட்டுப் பெருமொழிகளில், அயல் மொழி வார்த்தைகள் ஏகத்துக்கும் இருக்கின்றன. குறிப்பாக, ஆங்கிலத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அயல்மொழி வார்த்தைகள் அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்படுகின்றன. டிக்ஷனரிகளில் வார்த்தைகளின் மூலத்தையும் (கிரேக்கம், லத்தீன், சமஸ்க்ருதம், ஹிந்தி, ஃப்ரெஞ்ச் என) குறித்திருப்பதைப் பார்க்கலாம் ( உதாரணமாய் ஆங்கிலத்தில் சேர்ந்திருக்கும் சில அன்னிய வார்த்தைகள்: Restaurant (ஃப்ரெஞ்ச் மூலம்), Namaste (சமஸ்க்ருத மூலம்), Catamaran (கட்டுமரம் என்கிற தமிழ் வார்த்தையே மூலம்). இத்தகைய பிறமொழி வார்த்தைச் சேர்க்கையினால், ஆங்கிலத்துக்கு என்ன பழி சேர்ந்துவிட்டது? என்ன களங்கம் விளைந்துவிட்டது? அந்த மொழி வளராமல் தடுமாறி நின்றுவிட்டதா?

  மேலும், வேகமாக மாறிவரும் காலமாற்றத்துக்கேற்றபடி. கலைச்சொற்கள், அறிவியல்/தொழில் நுட்ப சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டாலும், சில புழக்கத்தின் காரணமாக, காலப்போக்கில் அவற்றின் அயல்நாட்டு வடிவத்திலேயே நம் மொழியிலும் கலந்துவிடும்/ஏற்றுக்கொள்ளப்படும். பாதகம் ஏதுல்லை. இதனால் மொழி காணாமற்போய்விடாது !

  ReplyDelete
 16. நல்ல பதிவு!திரு வினாயகம் ,ஏகாந்தன் கருத்துகள் சிந்திக்க தக்கவையே! சொற்களில் பிற மொழி கலப்பது
  தவிர்க இயரலாதது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற இலக்கண விதியும் நினைக்கத் தக்கதே!!ஆங்கிலம் உலக மொழியாக ஆனதே பிற மொழிச் சொற்களை
  அப்படியே ஏற்றுக் கொண்டதே ஆகும்!

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. மெல்ல தமிழ் இனி சாகும்-
  அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
  என்றந்தப் பேதை உரைத்தான்!
  ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ?
  -- பாரதியார்

  அந்தப் பேதை யார்?

  ReplyDelete
 19. இறுதிக் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல அறிமுகம்

  ReplyDelete
 20. வடசொல் அறிவும் வடமொழி வழக்குக்களும் தொல்காப்பியர் காலத்தே - அவருக்கு முன்பே என்றும் எடுக்கலாம் ஏனெனின் அவர் ஏற்கனவே தோன்றி நன்கு வளர்ச்சியடைந்த மொழியின் இலக்கணத்தையே தான் வரையறுத்ததாகச் சொல்கிறாரல்லவா? - இருந்தன தமிழகத்தில். ஆனால், அச்சொற்களைத் தமிழ்ப்படுத்திதான் எழதவேண்டும் என்பது அவர் வைத்த விதி.

  வடசொற் கிளவி வடவெழுத் தொரி இ
  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே''

  வடமொழி சொற்களை தமிழுடன் கலந்து எழுதும்போது, தமிழின் ஒலி, ஒளி வடிவங்களுக்கேற்ப மாற்றி எழுதலாம் என்பதே இவ்விதியின் பொழிப்புரை.

  இந்நாளில் சமசுகிருதச்சொற்களைக் கலக்காமல் எழுதினால் எவரும் பெரிதாக நினைக்க மாட்டார்கள். வடமொழிச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் பொதுவாக எல்லாருக்கும் தெரிந்திருந்தால் சரி. ஞானம் என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல்லில்லையா? இப்படி அடுக்கலாம்.

  சமசுகிருதம் கோலேச்சி தமிழையேத் தள்ளிவிடும் நிலை தெயவ வழிபாட்டில் இருந்த ஒரு காலத்தில் பன்னிரு ஆழ்வார்களும் தோன்றி திவ்ய‌ பிரபந்த தொகுப்பில் அடக்க்ப்பட்ட பாடலகளை (பாசுரங்களை) யாத்தனர். கவனிக்க: தெய்வ வழிபாட்டில் வடமொழிச்சொற்கள் தவிர்க்கவியலாதவை. ஆனால், அவர்கள் தொல்காப்பியரின் விதியை கண்ணும்கருத்துமாக செயல்படுத்தினர். ஏனெனில் தொல்காப்பியர் தமிழ்மக்களைப் போய் தமிழ்மொழியின் பலன் சேரவேண்டுமென்று கருதியதே இவர்களும் கருதினார்கள்; அதாவது திருமால் வழிபாடு தமிழ்மக்களுக்குப் போய்ச்சேர அவர்கள் வாயில் நுழைந்து வெளிவரும் தமிழே சரியென்றார்கள். கவனிக்க: இவர்களில் பலர் சமசுகிருத்தத்தில் விற்பன்னர்கள். அம்மொழியிலும் தெய்வப்பனுவலகள் யாத்தவர்கள். இப்படி தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச்சொற்கள் ஏராளம். அவற்றுள் இரண்டு இங்கே:

  சிஷடர்கள் என்ற சொல்லை ஆண்டாள் சிட்டர்கள் என்கிறார்.

  நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
  பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
  பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
  காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

  ரிஷிகளை இருடிகள் என்று தமிழ்ப்படுத்துகிறார் நம்மாழ்வார்.

  எங்குமே வடமொழிச்சொற்கள் அப்படியே எடுத்தாளப்படவில்லை. உணர்ச்சிப்பெருக்கில் எழுதப்பட்ட பாடல்களைக்கூட தமிழ் இலக்கணம் (தொல்காப்பியம்) கொடுத்த விதியை மீறாமல் எழுகிறார்கள்.

  இங்கே நம்புலவரோ, துஷ்பிரயோகம் என்று எழுதுகிறார். சமசுகிருதமே சரி என்று ஆழ்வார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழ்நிலையை எதிர்த்து நின்றார்கள் ஆழ்வார்கள் தமிழைத் தூக்கிப்பிடித்து. ஆனால் நம்புலவருக்கு என்ன இக்கட்டான சூழ்நிலை? எவராவது அவரை கண்டிப்பாக துஷ்பிரயோகம் என்றுதான் எழுதவேண்டுமென்றார்களா?

  தயை செய்து புலவர்களே! நீங்கள்தான் தமிழுக்கு வேலி. கடமையைச் செய்க. அதாவது தொல்காப்பியர் விதியை மறக்காமல் செயல்படுத்துக. இல்லாவிட்டால், அந்தப்பேதை சொன்னது பலிக்கும் காலம் வரும்.

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete