03 March 2018

கோயில் உலா : நவம்பர் 2017

நவம்பர் 2017இல் காளி கோயிலாக உள்ளூரில் அறியப்படுகின்ற சிவன் கோயில், இதுவரை அறிந்திராத வைப்புத்தலம், உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றேன். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுவனவாகும். அக் கோயில்களுக்குச் செல்வோம். 

தஞ்சாவூர் கேசவதுதீஸ்வரர் கோயில்

தஞ்சாவூரில் உள்ள புகழ் பெற்ற காளி கோயில்களில் ஒன்று சிரேஸ் சத்திரம் சாலையில் உள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். திரு துரை செல்வராஜ் தன்னுடைய தஞ்சையம்பதி வலைப்பூவில் இக்கோயிலைப் பற்றி டிசம்பர் 2016இல் ஒரு பதிவு எழுதியிருந்தார். அக்கோயிலுக்குச் செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு 27 அக்டோபர் 2017இல் அக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போதும் செல்ல இயலாத நிலையில் 21 நவம்பர் 2017 அன்று அக்கோயிலுக்குச் சென்றேன். ஆனால் அக்கோயிலின் மூலவராக கேசவதுதீஸ்வர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை ஆவார். தஞ்சாவூர் நகரில் வடக்கு வாசல் பகுதியில் உள்ள சிரேஸ் சாத்திரம் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் சிவனாக இருப்பினும் இக்கோயிலை வட பத்ரகாளி கோயில் என்றே அழைக்கின்றனர். திருச்சுற்றில் வடக்கு நோக்கிய சன்னதியில் வட பத்திர காளி உள்ளார். இக்காளியை வீரபத்ர காளி என்றும் மகிஷாசுரமர்த்தினி அழைக்கின்றனர்.  

அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரர் கோயில்
பட்டீஸ்வரம் அருகேயுள்ள அரிச்சந்திரபுரம் என்னுமிடத்தில் சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் 24 நவம்பர் 2017 அன்று குடமுழுக்கு நடைபெறுவதை அறிந்தேன். குடமுழுக்கு நாளில் செல்ல இயலாத நிலையில் மறுநாள் என் மனைவி மற்றும் இளைய மகனுடன் சென்றேன். பல முறை பட்டீஸ்வரம் பகுதியிலுள்ள பல கோயில்களுக்குச் சென்றபோதிலும் இக்கோயிலுக்குச் சென்றதேயில்லை. சோழன்மாளிகைக்கு அருகேயுள்ள இக்கோயிலுக்குச் சென்றபின்னர்தான் அப்பரால் பாடப்பெற்ற வைப்புத்தலம் என்ற பெருமை கொண்டிருந்ததை அறியமுடிந்தது. இங்குள்ள இறைவி சௌந்தரவல்லி எனப்படுகிறார். இக்கோயிலின் வளாகத்தில் மகாகாளி சன்னதி தனியாக உள்ளது. 

மருதூர் கைலாசநாதர் கோயில்
27 நவம்பர் 2017இல் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் அவர்களுடன் மருதூர் கைலாசநாதர் கோயிலுக்கும், போஜீஸ்வரர் கோயிலுக்கும் சென்றேன். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் மருதூர் என்னுமிடத்தில் உள்ள கோயிலின் மூலவர் கைலாசநாதர் ஆவார். மூலவர் சன்னதிக்கு இடதுபுறமாக பக்தபுரீஸ்வரர் சன்னதி தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்வான நிலையில் வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது.  இறைவி கனகாம்பிகை. இக்கோயிலின் வலது புறத்தில், வெளியே வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ளார். அடுத்தடுத்து சிவன் கோயிலையும், பெருமாள் கோயிலையும் காணும் வாய்ப்பு மருதூரில் கிடைத்தது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது.


போஜீஸ்வரர் கோயில்
போசளேஸ்வரர் கோயில் எனப்படுகின்ற போஜீஸ்வரர் கோயில்  திருச்சி அருகே சமயபுரத்தில் உள்ளது. மூலவர் போஜீஸ்வரஸ்வாமி என்றும் போஜராஜஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சுற்றில் மடப்பள்ளி, நந்தவனம், விநாயகர் சன்னதி,முருகன் சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகியவை உள்ளன. மூலவர் கருவறையின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது.  இங்குள்ள அம்மன் ஆனந்தவள்ளி ஆவார். அண்மையில் குடமுழுக்கு கண்ட இக்கோயிலின் மண்டபத்தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. இக்கோயிலைப் பற்றி பிறிதொரு பதிவில் விவரமாகக் காண்போம்.

வடபத்ரகாளி கோயில் என்றழைக்கப்பட்டபோதிலும் கோயிலின் மூலவராக சிவபெருமான் லிங்கத்திருமேனியாக கேசவதுதீஸ்வரர் என்ற பெயரில் இருப்பதை தற்போதுதான் அறிந்தேன்.  தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும், வைப்புத்தலங்களையும் அவ்வப்போது கோயில் உலாக்களின்போது பார்த்து வருகிறோம். இருந்தாலும் மிகவும் அண்மையில் இருந்த அரிச்சந்திரபுரம் கோயிலை, குடமுழுக்கின் காரணமாகவே அறியமுடிந்தது. மருதூர் கோயில் அருமையான சூழலில் அமைந்திருந்ததைக் காணமுடிந்தது. அண்மையில் குடமுழுக்கு கண்ட போஜீஸ்வரர் கோயிலில் மண்டபத் தூண்கள் சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு கோயில் பயணமும் வித்தியாசமான அனுபவத்தையும், மன நிறைவையும் தருகிறது. பயண நிறைவிற்குப் பின்னர் இக்கோயில்களைப் பற்றி விக்கிபீடியாவில் புதிய பதிவுகளைத் தொடங்கி எழுதினேன். வாய்ப்பு கிடைக்கும்போது இக்கோயில்களுக்குச் செல்வோம்.

13 comments:

  1. தங்களது பயணம் தொடரட்டும் ஐயா
    மகிழ்ந்தேன்

    ReplyDelete
  2. அழகிய கோவில். இனிய தகவல்கள்.

    ReplyDelete
  3. தரிசனம் நன்று பயணங்கள் இன்னும் நிகழட்டும்...

    ReplyDelete
  4. சிறப்பான கோவில்கள். அந்தக் காலத்தில் எத்தனை எத்தனை கோவில்களைச் சிறப்பாக கட்டி இருக்கிறார்கள்.

    உங்கள் மூலம் புதிய தகவல்கள் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. காலையில் இனிய தரிசனம்..

    பதிவினில் எனது தளத்தையும் குறித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  6. எனக்கொரு சந்தேகம், ஐயா.

    போஜளேஸ்வரர் கோயில் அம்மன் பெயர் ஆனந்தவள்ளி என்பதைப் படித்ததும் நெடுநாள் என் மனத்தில் இருக்கும் சந்தேகத்தைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

    'வல்லி' என்பதனை'வள்ளி' என்று 'ல'கர 'ள'கர உச்சரிப்பு மாற்றத்தில் எழுதுகிறார்களா என்பதே அது. வல்லி, வள்ளி என்ற வார்த்தைகள் ஒரே பொருள் கொண்டமையாகவும் வழக்கத்தில் ஆகிப் போயிற்றோ என்றும் தெரியவில்லை.

    விக்கிபீடியாவில் கோயில்கள் தரிசனம் பற்றி நீங்கள்
    பதிவுகள் எழுதுவதும் சிறப்பு.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    அழகான நான்கு கோவில்கள். கோபுர படங்களுடன் கோவில்களின் இருப்பிடமும், அதன் விபரங்களுமாக, இறைவன் இறைவி பெயருடன் அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். படங்கள் அருமை. குறிப்பிட்டுள்ள கோவில்களுக்கு செல்லும் தருணங்களை இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. வந்து வாசித்து விட்டேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. அந்த உள் கோயிலின் கோபுர சிற்பம அழகோ அழகு.. கோயில் என்றாலே அழகும் மனதுக்கு இதமும்தான், அதிலும் கிராமப்புறக் கோயில்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்.

    ReplyDelete
  10. அழகிய புகைப்படங்கள் அற்புதமான விளக்கம்

    ReplyDelete
  11. கோயில் அழகு உள்ளே உள்ள சிற்பங்களும் தங்கள் விவரணமும் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  12. வழக்கம்போல் அரிய தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் கோவில்களில் மூலவர் பெயர் தூய தமிழில் இருந்தது. மீண்டும் அவ்வாறு அமைய என்ன செய்யலாம்? நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
  13. கோவிந்தராஜூ அருணாசலம் ஐயா,

    முந்தைய பெயரும் இன்றைய பெயரும் என்று அதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்களேன். விளக்கமாகப் புரியும்.

    ReplyDelete