05 May 2018

சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு

திருவாவடுதுறை ஆதீனம் நடத்திவருகின்ற சைவ சித்தாந்த வகுப்பில் அறிமுகமானவரும், முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் நாங்கள் செல்கின்ற கோயில் உலாவின்போது உடன் பயணிப்பவருமான திரு அ.கு.செல்வராசன், புலவர் வ.குமாரவேலு (அலைபேசி 7373276051) எழுதியுள்ள சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் என்ற நூலினைத் தந்தார். அந்நூலை வாசிக்க அழைக்கிறேன்.

பொன்றும் உலகில் பொன்றாப் பொருள்களாக இருப்பவை இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) ஆகியன. இம்முப்பொருள்களும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். இம்மூன்று பொருள்களும் எவராலும் படைக்கப்படாதவை, தோற்றமில்லாப் பொருள்கள். (ப.xviii) இந்த முப்பொருளின் விளக்கமே திருக்கோயில்களாகும். மூலவர் (பதி), நந்தி (பசு), பலி பீடம் (பாசம்) என்னும் செய்தி வழிபாட்டின் உண்மையை உணர்த்துகிறது. (ப.ix)   நூலாசிரியர் தன் பார்வையில் சித்தாந்தத்தை அணுகி முப்பொருள் விளக்கத்தினை பொது இயல், பதி இயல், பசு இயல், பாச இயல் என்ற நான்கு தலைப்புகளில் மிகவும் சிறப்பான முறையில் தந்துள்ளார். 
பொது இயலில் (பக்.1-51) சமயம், சிவனும் செந்தமிழும், செந்நெறி, சைவ நூல்கள், சைவ சமயத் தொன்மை, முப்பொருள், மெய்கண்ட சாத்திரங்கள் உள்ளிட்ட பல உள் தலைப்புகளில் விவாதிக்கிறார்.  

பதி இயலில் (பக்.52-135) பதிக்கொள்கை, குணகுணி பாவம், பதி உண்மை, பதியின் பொது இயல்பு, சிறப்பு இயல்பு, இறைவன் உண்மையும் தன்மையும், சொரூப இலக்கணம், தடத்த இலக்கணம், அருட்சத்தி இலக்கணம், சிவனும் அருளும் ஒன்றே, இறைவன் எண்குணத்தான், ஒன்றாதல், வேறாதல், உடனாதல், அவற்றுக்கான காரணங்கள், பலன்கள், இறை வடிவ நிலைகள், இறை வடிவம் என்பன போன்ற தலைப்புகளில் விவாதிக்கிறார்.

பசு இயலில் (பக்.136-194) உயிர்க்கொள்கை, உயிர்த் தோற்றுமுறை, கடவுளின் வடிவம், உயிர் உணர்த்த உணர்வது, உயிர் பெறும் மூவகை நிலை (கேவல அவத்தை, சகலாவத்தை, சுத்த அவத்தை), இவற்றில் உயிரின் சிறப்பு இயல்புகள், இறைவன் உயிர்களுக்கு அருளும் தன்மை, உயிரின் குணங்கள் போன்ற பல தலைப்புகளில் ஆராய்கிறார்.

பாச இயலில் (பக்.195-278) பாச இலக்கணம், பாசத்தின் காரணிகள், மும்மலங்களின் இயல்பு, குணம் உள்ளிட்ட பல தலைப்புகள் எடுத்துரைக்கிறார்.

தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த கருத்துகள், சைவ சித்தாந்தம் தொடர்பாக முன்னர் வெளியான நூல்களிலிருந்து மேற்கோள்கள், வெளிநாட்டு மற்றும் இந்திய அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றை உரிய இடங்களில் சிறப்பான முறையில் அமைத்துத் தந்துள்ளார். கருத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மேற்கோள்களைச் சிறப்பாக கையாண்டுள்ளார். சொல்லவந்த கருத்தினை, எளிமையாக அதே சமயத்தில் நுட்பமாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும் மனதில் பதியும் வகையிலும் தந்துள்ளார். சைவம் மற்றும் சிவனின் பெருமை தொடங்கி இக்காலத்திற்கு சைவ சித்தாந்தம் பொருந்தி வருகின்ற சூழல் வரை பரந்துபட்டு  எழுதியுள்ளார்.  

சிவசிவ, உழவாரம், நால்வர் நெறி, மணிநாதம் உள்ளிட்ட பல ஆன்மீக இதழ்களில் கட்டுரைகளையும், பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ள இவருடைய இந்நூல் சைவ சித்தாந்தத்தினை எளிதாக நமக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. ஆசிரியரின் முயற்சியைப் பாராட்டுவோம். இந்நூலை வாசிப்போம்.



27 பிப்ரவரி 2018இல் திரு அ.கு.செல்வராஜ் உடன்
நூல் : சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் 
ஆசிரியர் : புலவர் வ.குமாரவேலு
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447, 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 (தொலைபேசி 24342926, 24346082, மின்னஞ்சல் manimekalaiprasuram@gmail.com)
ஆண்டு : 2016
விலை : ரூ.200   

12 comments:

  1. தங்களது வாசிப்பு அனுபவத்தை விமர்சன வாயிலாக எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம்..

    ReplyDelete
  3. அருமையான் நூல் விமர்சனம்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  4. வணக்கம்

    அருமையான நூலைப்பற்றிய அழகான விமர்சனம். எளிதில் புரியும்படி மிக அருமையாக உள்ளது. நூலின் பெருமையைப் பற்றி தெளிவாக கூறி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகுந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. நல்ல நூல் அறிமுகம், அதைப் பற்றிய விமர்சனமும் நன்று.

    ReplyDelete
  6. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர்களில் திரு தி தமிழ் இளங்கோ அவர்களும் ஒருவர் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  7. என் நீண்ட நாள் கனவு இது. முதல் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரைக்கும் தமிழக வரலாற்றை இதுவரையிலும் எவரும் கோர்வையாக அடுத்தடுத்து சம கால இளைஞர்கள் வாசிக்கும் அளவுக்கு எழுதியதே இல்லை. எழுதப்பட்ட ஒவ்வொரு புத்தகங்களும் அந்தந்த சமயங்களில் நடந்த மன்னர்களின் வாழ்க்கை, மொழி வளர்ச்சி, வீழ்ச்சி, அரச பெருமை, கோவில் சார்ந்த நிகழ்வுகள் என்று தான் எழுதியுள்ளார்கள். மற்ற நாடுகள், சரித்திரங்கள் எல்லாவற்றையும் பலரும் முழுமையாக ஒரே பார்வையில் எழுதி உள்ளனர். ஆனால் நம்மவர்கள் அதில் கவனம் செலுத்தவே இல்லை என்பது என் ஆதங்கம். கரிகாற்பெருவளத்தான் முதல் மூன்று (சோழப் பேரரசு) நூற்றாண்டுகள் வருகின்றது. அதன் பிறகு இடைவெளி. அதன் பிறகு இருண்ட காலம் என்று மாறி ஒன்பதால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் சோழப் பேரரசு. 13 வாக்கில் பாண்டியப் பேரரசு. அப்புறம் நாயக்கர் காலம். அதன் பிறகு ஆங்கிலேயர்கள். கோர்வையாக சமூகவியல் பார்வையாக யோசித்துப் பாருங்கள். எத்தனை சுவராசியம் அடங்கியிருக்கும்?

    ReplyDelete
  8. ஜோதிஜி சொன்னதை வழிமொழிகிறேன். நல்ல நூல் பகிர்வுக்கு நன்றி ஜம்பு சார்.

    ReplyDelete
  9. விமர்சனத்திற்கு நெஞ்சுவந்த நன்றி

    ReplyDelete