11 August 2018

அயலக வாசிப்பு : ஜுலை 2018

ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண்டேலா எழுதி இதுவரை வெளிவராமல் தற்போது வெளியாகியுள்ள கடிதங்கள்,  கடும் மழை மற்றும் கட்டுமானப்பணிகளின் காரணமாக சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்தமை உள்ளிட்ட பல செய்திகளைக் காணலாம். இவை கார்டியன், சன், யுஎஸ்ஏ டுடே, அப்சர்வல், டெலிகிராப் ஆகிய இதழ்களில் வெளிவந்தவையாகும்.

மதுரையைப் சேர்ந்த பேராசிரியரின் சாதனையைப் பற்றி, இன்றைய கார்டியன் இதழில் வெளியான கட்டுரை...இந்தியச்சாலைகளில் பழைய பிளாஸ்டிக்கினைக் கொண்டு சாலை போட வழிவகுக்கின்றார் இந்திய வேதியியல் பேராசிரியர். “பிளாஸ்டிக்கைத் தடை செய்தால் அது குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினரின் வாழ்க்கைமுறையைப் பாதிக்கும். ஆனால் அதனை எரித்தாலோ, புதைத்தாலோ சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.“ பிளாஸ்டிக், பிரச்னையே இல்லை என்று கூறும் முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் (73), மதுரை தியாகராஜர் கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராவார். 2001வாக்கில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஒரு பணிப்பட்டறையின் போது அவர் இந்தக் கருத்தினைத்  தெரிவித்துள்ளார்.  பிளாஸ்டிக் தடை செய்யப்படவேண்டும் என்ற கூக்குரல் தன்னை அதிகம் தொந்தரவுபடுத்தியது என்றும், பிளாஸ்டிக் ஏழை மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நம்புவதாகவும், அதனால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒரு தீர்வு காணவும் விரும்பியுள்ளார்.பயனற்ற பிளாஸ்டிக்கை வழக்கத்திற்கு மாறான முறையில் மறுபடியும் பயன்படுத்தலாம் என்ற அவருடைய ஆய்விற்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருதினைப் பெற்றவர்.
  
கேன்சரையும், ஆல்கிமீர் நோயையும் எதிர்கொள்ளும் வகையில் விண்வெளியில் செடிகளை நடலாம் என்று அண்மை ஆய்வு கூறுகிறது. விண்வெளி ஆய்வு மைய விண்வெளி வீரர்களுடன் அறிவியலாளர்கள் இணைந்து சில மருந்துகளை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு நீர், மண் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்காக கேன்சரை எதிர்கொள்கின்ற சில விதைகள் அங்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி. இம் முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்......தாய்லாந்தின் மலைக்குகைக்குள் 17 நாள்கள் சிக்கித்தவித்த 12 மாணவர்களும் ஒரு பயிற்சியாளரும் கொண்ட வைல்டு போர்ஸ் என்ற கால் பந்தாட்டக்குழுவினர் மீட்கப்பட்டனர். 11 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயிற்சியாளருடன் பயிற்சி முடிந்து செல்லும்போது லூவாங் குகையை அடைகின்றனர். உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பிக்கவே, அவர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கித் தவிக்கின்றனர். சிறப்புக் கடல் அதிரடிப்படையினருடன் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளைக் கொண்ட மீட்புப்பணி வல்லுநர்கள் தம் நுணுக்கமான செயல்பாடுகளாலும், திட்டங்களாலும் அனைவரையும் காப்பாற்றுகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக உலகமே அவர்கள் குகையிலிருந்து மீள வரவேண்டும் என்று ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. இப்பணியில் ஈடுபட்டவர்களில் ஆக்சிசன் பற்றாக்குறையால் ஒருவர் இறந்தது அனைவருக்கும் சோகத்தைத் தந்தது.

சிறையிலிருந்தபோது நெல்சன் மண்டேலா தோழர்களுக்கும், உறவினர்களுக்கும் எழுதிய 250க்கும் மேற்பட்ட கடிதங்களில் பாதிக் கடிதங்கள் இதுவரை வெளிவராதவையாகும். 
வின்னி மண்டேலாவுக்கு அவர் எழுதுகிறார், “உண்மையில் சொல்லப்போனால் இந்தக் குறிப்பிட்ட கடிதம் உன் கைக்குக் கிடைக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஜுலை 18, ஆகஸ்டு 1, 18இல் எழுதியவைகூட உனக்குக் கிடைக்குமோ என்று சொல்லமுடியாது, கிடைத்தால்கூட எப்போது கிடைக்கும் என்று சொல்லமுடியாது…” [The Prison Letters of Nelson Mandela, edited by Sahm Venter, is published by Liveright (£25).]

மண்டேலாவின் நூறாவது பிறந்த நாளில் அவரைப் பற்றிய 100 அரிய செய்திகளை யுஎஸ்ஏடுடே இதழ் வெளியிட்டுள்ளது. அவரது பிறப்பு தொடங்கி, குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட நிகழ்வுகள் இதில் தரப்பட்டுள்ளன. 

சார்லஸ் பெட்டி 95 வயதில் டாக்டர் பட்டம் பெறுகிறார். பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றோரில் அதிக வயதானவர். இவரது ஆய்வேடு 48,000 சொற்களைக் கொண்டது. ஆய்வேட்டின் தலைப்பு Why elderly expats living in Spain return to the UK என்பதாகும். இது இவர் பெற்ற இரண்டாவது முனைவர் பட்டமாகும். மற்றொரு தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். "அவருக்கு படிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் அதிக ஆர்வம் உள்ளது. இது பெரிய சாதனை. அவர் மேற்கொண்டு படித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்று அவருடைய மனைவி பெருமையுடன் கூறினார்.  அவருடைய மகள் இது ஒரு கண்கவர் சாதனை என்றார்.

---------------------------------------------------------------------------------
தமிழக முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி, எங்கள் மூத்த மகன் ஜ.பாரத் எழுதிய கடிதம் The Hindu இதழில் 8 ஆகஸ்டு 2018 அன்று வெளியானது.
---------------------------------------------------------------------------------

11 comments:

 1. சுவாரஸ்யமான தகவல்கள். உங்கள் மகன் ஜ. பாரத்துக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 2. அரிய பல தகவல்கள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.
  உங்களது மகனுக்கு எமது வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. ஞானியார் முனைவர் வீ.ஜெயபால். 11.8.2018.பணிகள் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. தங்களின் அயலக வாசிப்பு எங்களுக்குப் பல அரிய செய்திகளை வாரி வழங்குகிறது
  நன்றி ஐயா

  ReplyDelete
 5. நம்மைப் பற்றி அயல் நாட்டவ என்ன நினைக்கிறான் செய்தி இடுகிறான் என்பதைத் தெரிந்து கொள்வதிலும் ஒரு கிக் இருக்கிறது

  ReplyDelete
 6. அயலக வாசிப்பு - சிறப்பான தகவல்கள்.

  தங்கள் தேடல்கள் வியப்பளிக்கிறது. தொடரட்டும் தேடல்களும் பகிர்வுகளும்.

  ReplyDelete
 7. மிகவும் பயனுள்ள செய்தித் தொகுப்பு. மதுரை பேராசிரியரின் கருத்து அரசின் செவிகளில் விழுமா? நெல்சன் மண்டேலாவின் எழுத்துக்கள் ஆவணமாக்கப்பட வேண்டும், இதற்கு யார் முனைய வேண்டும்? பகிர்வுக்கு நன்றி... இது போன்ற செய்திகளை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமே.

  ReplyDelete
 8. அயலக வாசிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா

  ReplyDelete
 9. செய்திகள் அருமை தங்களுக்கும்
  தங்கள் புதல்வர் அவர்களுக்கும்
  நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete