29 September 2018

காமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975

பெருந்தலைவர் காமராஜர் இயற்கையெய்திய செய்தியை, 3 அக்டோபர் 1975 நாளிட்ட நியூயார்க் டைம்ஸ் (கஸ்தூரி ரங்கன்) இதழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஆவணப்பிரிவில் இவ்வாறான, முந்தைய ஆண்டுகளுக்கான  செய்திகள் உள்ளன. அவ்விதழில் 38ஆம் பக்கம் அச்செய்தி வெளியானதாகக் குறிப்பில் காணமுடிந்தது. காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2இல் என்ற நிலையில் அச்செய்தியின் மொழிபெயர்ப்பினைக் காண்போம். 



நியூடெல்லி, அக்டோபர், 2- தென்னிந்தியாவின் மிகச்சிறந்த, மக்களைத் தன் பக்கம் ஈர்க்கும் சக்தி கொண்ட, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி பிரதமர்களாக ஆட்சிக்கட்டிலில் அமரக் காரணமாக இருந்த  குமாரசாமி காமராஜ் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

காந்தியின் அடியொட்டி வாழ்ந்தவரும், முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நண்பருமான அவர் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் களத்தில் அதன் சிக்கலான காலங்களில் இருந்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் இறங்கிய வகையிலும், சுதந்திர இந்தியாவை நிர்ணயித்தவகையிலும் பெரும்பங்காற்றியவர். 

திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த அவர் தன் முழு வாழ்க்கையையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்தார். தேசிய அளவில் அக்கட்சியின் தூண்களில் ஒருவராக விளங்கினார். பிற்காலத்தில் அக்கட்சி உடையவும் அவர் காரணமாக இருந்தார். இந்திரா காந்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெருமக்களில் அவரும் ஒருவர்.

தென் மாவட்டமான ராமநாதபுரத்திலுள்ள விருதுநகரில் 1903இல் பிறந்தார்.
கீழ்நிலையிலுள்ள நாடார் இனத்தில் பிறந்த காமராஜர் சிறிதளவு காலமே முறைக்கல்வி பயின்றார். தேங்காய் வியாபாரியான அவருடைய தந்தையார் அவருக்கு ஆறு வயதாகியிருந்தபோது காலமானார்.
1921இல்  தன்னுடைய ஊருக்கு அருகிலுள்ள மதுரைக்கு காந்தி வந்தபோது அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். காந்தியின் எளிய, பயமற்ற, உறுதிக் குணங்கள் அவரை ஈர்த்தன. அவற்றையே தம் வாழ்வின் கொள்கைகளாகக்கொண்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினரானார்.
கட்சிக்கூட்டங்களுக்கு விவசாயிகளை அழைக்கின்ற டிரம்மர் பையனாக தன் பணியைத் தொடங்கிய அவர் சென்னையின் மிகச்சிறந்த தலைவரான சத்தியமூர்த்தியின் நம்பிக்கைக்கு உரியவனார். மெல்லிய தோலினைக் கொண்ட பிராமணரும், கருந்தோலைக்கொண்ட கடைநிலை இனத்தவரும் இணைந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தியும், வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டும் சென்னை மாநிலம் முழுவதும் சுற்றி வந்தனர். அதனால் பல முறை இருவரும் இணைந்தே சிறை சென்றனர். எட்டு வருட காலத்தில் காமராஜர் ஆறு முறை சிறைக்குச் சென்றார்.
சென்னை மாநிலத்திலிருந்த அடித்தட்டு இனத்தவருக்குத் தலைவர் என்ற பெயரைப் பெற்றதோடு, பிராமணர்களின் ஆதிக்கத்தைக் கண்டு கோபமுற்ற பிராமணரல்லாதோரிடையே செல்வாக்கினை உண்டாக்கினார்.  அவர்களுடைய ஆதரவுடன் காமராஜர் தென்னகத்தின் போட்டியில்லாத் தலைவரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை தோற்கடித்தார். 
1954இல் ராஜகோபாலாச்சாரிக்குப் பின்னர் காமராஜர் முதலமைச்சரானார். இருந்தாலும் 1963இல் தன் பதவியைத் துறந்து திராவிட இயக்கத்திற்கு எதிராக கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்த உத்தியைப் பயன்படுத்திக்கொண்ட பிரதமர் நேரு தேவையற்ற காங்கிரஸ் கட்சிக்காரர்களை அதிகாரத்திலிருந்து நீக்கினார். இந்நிலையில் காமராஜர் திட்டத்தின் காரணமாக காமராஜர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றார். 1964இல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.
நேருவின் மரணத்திற்குப் பிறகு, அவருக்குப் பின்னால் யார் என்று முடிவெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.  சக்திவாய்ந்த வலதுசாரி எதிர்க்கட்சித்தலைவரான மொரார்ஜி தேசாயின் திட்டங்களை சமயோசிதமாக முறியடித்து சாஸ்திரியை பிரதமராக்கினார்.  
ஜனவரி 1966இல் சாஸ்திரி இறந்தபோது இதே முறையை அவர் மறுபடியும்  கடைபிடித்தார். இந்திரா காந்தி காமராஜரின் வேட்பாளரானார். ஆனால் அவர் மொரார்ஜிக்கு எதிராக நிறுத்தப்பட்டார். இந்த முறை சூழலை எதிர்கொள்வதில் மொரார்ஜி உறுதியாக இருந்தார். ஆனால் பாராளுமன்றத்தில் கட்சித்தலைமைக்கான போட்டியில் இந்திரா காந்தி மொரார்ஜியைத் தோற்கடிக்க காமராஜர் ஆதரவைத் திரட்ட முனைந்தார்.    
அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான திராவிட கட்சியினரின் ஆதரவோடு களமிறங்கிய, முன்பின் அறிமுகமில்லாத மாணவர் தலைவரிடம் தன் சொந்த ஊரில் பெருந்தோல்வியடைந்தார்.
அப்போது முதல் அவருடைய அரசியல் செல்வாக்கு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1967இன் இறுதியில் காங்கிரசின் தலைமைப்பொறுப்பிலிருந்து இந்திரா காந்தியால் நீக்கப்பட்டார்.
1969இல் காங்கிரசின் மூத்த தலைவர்களைக்கொண்ட, இந்திரா காந்தியை ஆட்சியிலிருந்து நீக்க விரும்பிய,  சிண்டிகேட் காங்சிரசில் இணைந்தார். கட்சி உடைந்து பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் இந்திரா காந்திக்கான செல்வாக்கு அதிகரித்தது.  
பிற மூத்த தலைவர்களுடன் இணைந்த அப்பிரிவு காங்கிரஸ் (ஓ) என்றழைக்கப்பட்டது. அண்மைக்காலம் வரை தன் கட்சிக்காக தமிழ்நாட்டில் உழைத்தார். ஆளும் திராவிடக் கட்சியிலிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நம்பிக்கையில் இருந்தார். 

நன்றி : Kumaraswami Kamaraj Dead; Power Broker in Indian Politics, Kasturi Rangan, Oct 3, 1975, p.38, New York Times, Archives 
தமிழில் : பா.ஜம்புலிங்கம்

30 செப்டம்பர் 2018 அன்று மேம்படுத்தப்பட்டது. 

26 comments:

  1. நேருவுக்குப் பின் காமராஜர் வந்திருந்தால்
    காலம் மாறி இருக்கும்.

    பெருந்தலைவர் காமராஜரின் மதிப்புக் குறைந்ததற்குக் காரணம்
    அந்த காலத்தில் ஊழல் அதிகரிக்க ஆரம்பித்தது தான்.
    சாதாரண மாணவரிடம் அவர் தோற்க நேர்ந்த துரதிர்ஷ்டமும் அதனால் தான்.

    மிக மிக நல்ல பதிவு.\மிக மிக நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  2. வல்லிம்மாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

    காமராஜரை ஜெயித்த காரணத்தினாலேயே அந்த மாணவரின் பெயரும் பிரபலம் ஆச்சு! ஆளைத் தெரியுமோ இல்லையோ பெயரைத்தெரியும்!

    காமராஜர் பிறந்த நாள் நெருங்கி வரும் நிலையில் அவரைப்பற்றிய பகிர்வு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அந்த மாணவர் பெயர் சீனிவாசன்.

      Delete
  3. கல்விக் கண் திறந்த கர்மவீரர் பற்றிய பதிவு போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  4. தங்களது தயவால் நாங்களும் அறிந்து கொண்டோம் நன்றி.

    ReplyDelete
  5. பெருந்தலைவரைப் பற்றிய தகவலைப் பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  6. பெருந்தலவர் பற்றிய செய்திகள் வசந்த் தொலைக்காட்சியில் தினம் ஒளிபரப்புகிறார்கள்.

    அவரை பற்றிய பகிர்வு மிக அருமை.

    ReplyDelete
  7. அப்பப்பா! அரிய செய்திகள்! பகிர்வு மிக நன்று.

    ReplyDelete
  8. பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள் (அக்டோபர்.2)நெருங்கும் வேளையில் அவரைப் பற்றிய நல்லதொரு பதிவு. முனைவருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  9. பெருந்தலைவர் பற்றிய சிறப்பான பகிர்வு. நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  10. அருமையான பதிவு
    பல தகவலைக் கற்க முடிந்தது.

    ReplyDelete
  11. பெரும் குணங்களால் பெருந்தலைவரானவர் காமராஜ். தமிழக முதல்வர் என்ற முறையில் தன்னை பெற்ற தாயாருக்கு கூட சலுகை காட்ட கூடாது என்ற தன்னிகரற்றவர். அவரை போன்றவர்கள் ஊருக்கு ஒருவர் இருந்தால் இந்தியா வல்லரசாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தாயு.செந்தில்குமார், நாகப்பட்டினம்

      Delete
  12. நல்லதொரு தலைவரைப் பற்றிய நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  13. அவரது நினவு நாளுக்கு முன் அவரைப் பற்றி எழுதியது வர வேற்கத்தக்கது

    ReplyDelete
  14. https://www.nytimes.com/1975/10/03/archives/kumaraswami-kamaraj-dead-power-broker-in-indian-politics.html
    தி ஹிண்டு பத்திரிகையின் கஸ்தூரி சீனிவாசன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.

    நல்ல மொழிபெயர்ப்பு.

    அன்புடன்,
    நா. கணேசன்

    ReplyDelete
  15. கணையாழி பத்திரிகை தொடங்கி நடாத்திய கஸ்தூரி ரங்கன் கட்டுரை இது:
    https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-journalist-kasturi-rangan-dead/article1990532.ece

    வாழ்க.

    அன்புடன்
    நா. கணேசன்

    ReplyDelete
  16. தங்களது பணி மிகச்சிறப்பு. அப்பழுக்கில்லாத மொழிபெயர்ப்பு.மிகைப்படுத்தப்படாத நடை.நன்றி.

    ReplyDelete

  17. ’நியூயார்க் டைம்ஸ்’ இதழின் இந்திய அரசியல் தொடர்பான ஒரு பழைய கட்டுரையை வெளியிட்டு, நினைவுகளை மீட்டெடுக்கிறீர்கள். இந்த கட்டுரையை எழுதியது கஸ்தூரி ரெங்கன். கணையாழி ஆசிரியர்தான் என நினைக்கிறேன்.

    அமெரிக்காவின் அரசியல் செல்வாக்குள்ள ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை, எப்படி அந்தக்கால இந்திய அரசியலைப் பார்த்ததோ, காமராஜ் என்கின்ற அரசியல்வாதியைப் பார்த்ததோ, புரிந்துகொண்டதோ, அவ்வாறே, அதற்கேற்ப கட்டுரையை எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். கஸ்தூரி ரெங்கனின் ‘பவர் ப்ரோக்கர்’ எனும் சொல்லாடலைக் குறித்தே இதனை எழுதுகிறேன். அந்த வார்த்தை இந்திய அரசியலில், காமராஜ் என்கிற அரசியல் தலைவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, காமராஜ் ’கிங் மேக்கர்’ என முதன்முறையாக பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட தேசிய அரசியல்வாதி. அமெரிக்க அரசியல்மொழியில் ‘பவர் ப்ரோக்கர்’ என்பதன் அர்த்தமே வேறு. மேலும் காமராஜ்பற்றி – காங்கிரஸ் பிற்காலத்தில் பிளவுபட காரணமாக இருந்தவர்களில் காமராஜும் ஒருவர் என்று பொத்தாம்பொதுவாக அடித்துவிடுகிறார் கஸ்தூரி ரெங்கன். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, கட்சிக்குள்ளேயே தனக்கு எதிரிகளாக மாறக்கூடியவர்கள் என தான் அனுமானித்த முது தலைவர்களை (மொரார்ஜி தேசாய், காமராஜ், நிஜலிங்கப்பா போன்றவர்கள்) விலக்கி வீச முற்பட்ட இந்திராகாந்தியின் பிரித்தாளும் சூட்சிதான், காங்கிரஸ் அப்போது இரண்டாக பிளந்ததின் ஒருமையான காரணம். கட்சிக்காகவே காலமெலாம் உழைத்த காமராஜின் மீது பழியைப்போட்டு நியூயார்க் டைம்ஸிடம் கைதட்டு வாங்கியிருக்கிறார் கஸ்தூரி ரெங்கன். காசோலையையும் சேர்த்துத்தான்.

    ReplyDelete
  18. *மேலே ‘கஸ்தூரி ரங்கன்’ எனப் படிக்கவும்

    ReplyDelete
  19. அறியாத விடயங்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  20. மிகச்சிறந்த பதிவு! பல தகவல்களை அறிய முடிகிறது!

    ReplyDelete
  21. மின்னஞ்சல் மூலமாக (mani.tnigtf@gmail.com)
    அய்யா, அருமையான ஆக்கம்
    அன்புடன், ஆ.மணிகண்டன்

    ReplyDelete
  22. கர்மவீரர் காமராஜர் மரணமடைந்த 2 அக்டோபர் 1975 ஆம் நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. மதுரை நகரம் முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. இந்த சோகத்திலிருந்து இயல்பு நிலை திரும்பவே பல நாட்கள் ஆயிற்று. இது பற்றிய செய்தியுடன் தங்கள் இட்ட பதிவு அருமை.

    ReplyDelete