15 September 2018

தமிழ் அகராதியின் குற்றங்களும் குறைகளும் : திருத்தம் பொன். சரவணன்

தமிழ்ப்பண்பாட்டில் புதிய பார்வை என்ற இலக்குடன் திருத்தம் வலைதளத்தில் எழுதிவரும் திருத்தம் பொன்.சரவணன்  16 ஜுன் 2018 என்று எங்கள் இல்லம் வந்திருந்தார். அருப்புக்கோட்டையிலிருந்து என்னைச் சந்திக்க வந்த அவர் தன்னுடைய தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும் என்ற அவருடைய நூலை அன்பளிப்பாகத் தந்து தமிழ் மொழி, இலக்கியம், அகராதி, வரலாறு உள்ளிட்ட பல துறைகளைக் குறித்து உரையாடினார். 


தன்னுடைய உரையில் கீழ்க்கண்ட கருத்துகளை நூலாசிரியர் முன்வைக்கின்றார்.

  • இந்நூல் தமிழ் அகராதிகளுக்கு எதிரானதல்ல
  • அகராதியில் கூறப்பட்டுள்ள சில பொருள்கள் மீள் ஆய்வு செய்யப்படவேண்டும்
  • அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்களில் சில இலக்கியங்களில் பல இடங்களில் பொருந்தாத நிலையில் உள்ளன
  • புரிதல் தவறாகிப் போகும்பொழுது மக்களின் பேச்சும் எழுத்தும் தவறாகும்

தற்போது தமிழ் அகராதிகளில் காணப்படும் தவறுகளை அகராதிக்குற்றங்கள் என்றும், அகராதிக்குறைகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கும் அவர்  அவற்றைச் சுட்டிக்காட்டி திருத்தங்களை முன்மொழிவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

கூந்தல் என்ற சொல்லை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு கூறும்போது அவர் இலக்கியங்களில் இச்சொல் எந்தப்பொருளில் ஆளப்பட்டதோ அதே பொருளை அகராதிகள் இச்சொல்லுக்குக் குறிப்பிடவில்லை என்றும், நடைமுறை வழக்கிலம் இச்சொல்லை இலக்கிய வழக்கிற்கு மாறாகப் பயன்படுத்திவருகிறோம் என்றும் கூறுகிறார்.  நடைமுறைப் பேச்கூ வழக்கிலும், அகராதிகளிலும் தலை மயிர் குறிப்பாகப் பெண்களின் தலை மயிர் என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுவதாகவும், இலக்கிய வழக்குகளில் இச்சொல்லுக்கான பொருள் பெண்களின் கண் இமையாகும் என்றும் கூறுகிறார். (ப.6) இவ்வாறாக பல சொற்களை நாம் தவறான பொருள்களில் பயன்படுத்திவருகிறோம் என்பதைச் சான்றுகாட்டி விளக்குகிறார். 


குறிப்பிட்ட சில சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான தற்போதைய பொருளையும், புதிய பொருளையும் தருகிறார். அவர் தந்துள்ள புதிய பொருள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. (ப.10)

பசப்பு/பசலை : தோல் நிற மாற்றம், அழகுத்தேமல்  (அழுகை, கண்ணீர்)
மேனி : உடல்  (கண்ணிமை)
நுதல் : சொல், நெற்றி, புருவம், தலை  (கண்விழி, கண்ணிமை)
பாம்பு/அரவு : நச்சுயிரி  (மேகம்)
முலை : பெண்களின் மார்பகம்  (கண்ணிமை, கண்விழி)
கூந்தல் : பெண்களின் தலை மயிர்  (கண்ணிமை)
அறல் : கருமணல், நீர்  (சிப்பி, நத்தை)
அல்குல் : பெண்குறி, இடை  (நெற்றி)

குறிப்பிட்ட சொல்லுக்கான புதிய பொருளைப் பற்றி விவாதிக்கும்போது அச்சொல்லைப் பற்றிய சிறிய முன்னுரை, அந்த சொல்லின் வடிவங்கள், அதற்கு அகராதி தரும் பொருட்கள், தற்போதைய நடைமுறையில் வழங்கப்படும் பொருள், சொல்லின்  பயன்பாடு, புதிய பொருள், புதிய பொருளை நிறுவ முன்வைக்கப்படுகின்ற காரணிகள் என்ற வகையில் குறிப்பிடுகின்றார்.

இந்த நூலில் உள்ள சொல் மற்றும் பொருள் குறித்த ஒவ்வொரு கட்டுரையிலும் அச்சொற்களின் புதிய பொருட்களை உறுதிப்படுத்துவதற்கு ஏராளமான இலக்கிய ஆதாரங்களைத் தந்துள்ளார். அதனை மறுப்பவர்கள் தம் கருத்துகளை தகுந்த ஆதாரங்களோடு அனுப்பிவைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியுள்ள புதிய பொருள்கள் ஏற்புடையனவா என்பதை பிற ஆய்வாளர்களும், அறிஞர்களும் உறுதி செய்யவேண்டிய நிலை தற்போது உள்ளது. புதிய முயற்சியினை மேற்கொண்டுள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். மாற்றுக்கருத்து இருப்பின் அவருக்குத் தெரிவிப்போம்.

நூல் : தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும்
ஆசிரியர் :  திருத்தம் பொன்.சரவணன் (அலைபேசி 7010558268)
முகவரி : சைபர்நெட் சேவை மையம், 34பி, புதுக்கடைத் தெரு, எஸ்.ஆர்.எஸ்.வளாகம், அருப்புக்கோட்டை 626 101 
பதிப்பு : 2016
விலை : ரூ.100

15 செப்டம்பர் 2018 காலை மேம்படுத்தப்பட்டது.

12 comments:

  1. அவசியம் அனைவரும படித்து அறிய வேண்டிய நூல் ஐயா
    அருமையான விமர்சனப் பார்வை
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. இச்சமூகத்துக்கு பயனுள்ள நூலை தந்தமைக்காக நூலாசிரியர் திரு. பொன். சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் கூறுவோம்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யம். இந்தப் புத்தகம் ஒன்று வாங்கவேண்டும்.

    ReplyDelete
  4. நல்லதொரு விமர்சனம் ஐயா... அறிந்துகொள்ள வேண்டிய நூல்... நன்றி...

    ReplyDelete
  5. பயனுள்ள நூல் அறிமுகம்.. நன்று..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு நூல் அறிமுகம்.

    /புரிதல் தவறாகிப் போகும்பொழுது மக்களின் பேச்சும் எழுத்தும் தவறாகும் /

    உண்மையான கருத்துக்கள். பகிர்ந்து கொள்ள வேண்டியவை...

    இதை எழுதிய நூலாசிரியர் திரு. பொன்.சரவணன் அவர்களுக்கும், பயனுள்ள இந்நூலை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. அருமையான முறையில் என் நூலை தனது வலைத்தளத்தில் அறிமுகப்படுத்திய முனைவர் ஐயா அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. நல்லதொரு அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  9. எல்லோராலும் வரவேற்க்கப்பட வேண்டிய நூல்
    பாராட்டுகள்

    ReplyDelete
  10. வெறுத்துக் கூறுவோர் பலரிருக்க மறுத்துக் கூறுவோர் சிலரே. பொன்.சரவணன் முயற்சி வரவேற்கத் தக்கதே.

    ReplyDelete
  11. அருமையான அகராதி விளக்கம்.. எனக்கும் இந்தப் புத்தகம் தேவைப்படும். ஏற்கனவே என்னிடம் பென்னாம் பெரிய ஒரு தமிழ் அகராதிப் புத்தகம் இருக்கிறது:).

    ReplyDelete
  12. மிகவும் உபயோகமான நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete