06 October 2018

கடிதம் செய்த மாற்றம் : தினமணி

நான் எழுதிய கடிதம் செய்த மாற்றம் என்ற தலைப்பிலான கட்டுரை 3 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 



“எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், எப்படி என்று கேள்விகள்  கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்தையான ஜேம்ஸ் அதனை ஆமோதிக்கின்றார். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் என்று பார்ப்போமா?

கெல்லோக் நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப்பொட்டலத்தின் அட்டையில் இருந்த ‘குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன. உடனே தன் பெற்றோர்களிடம் அவள் இவ்வாறாக ‘அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த அவளுடைய பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.

கடிதத்தை ஆர்வத்துடன் காண்பிக்கும் மாணவி,
 அவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள்.
"என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின்போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர்கள் என்றோ பாதுகாவலர்கள் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப்படிக்கும்போது அவர்கள் சங்கடப்படுவார்கள்."

தந்தையுடன் மாணவி
விடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பியபோது ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.

“எங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப்பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது.”

புதிதாக மாற்றம் பெறவுள்ள அட்டை
கடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், "என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இதுதொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது " என்றாள்.

"நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்கவேண்டிய சூழல். என் கணவர்தான் அவளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். 'அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக்கொள் என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்" என்றும் அவளுடைய தாயார் கூறினார்.

நிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும்போது  அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்கவேண்டும்.

ஒரு சிறிய குரலால் உலகை மாற்றிவிட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. சில நேரங்களில் நம்மில் மிக இளையவராக இருப்பவர்கள் எந்த ஒரு குறையையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா? தினமணி, 7 அக்டோபர் 2018
29 நவம்பர் 2018இல் மேம்படுத்தப்பட்டது.

16 comments:

  1. ஒரு பெரிய நிறுவனம் அப்படி குழந்தையை மதித்து உடனே பதில் கொடுத்திருப்பதை பாராட்ட வேண்டும். குழந்தையின் சிந்தனையும் சிறப்பு.

    ReplyDelete
  2. நான் தினமணி வாங்குகிறேன் என்றாலும் இப்பொழுதெல்லாம் செய்திகளை மேலோட்டமாக பார்த்துவிட்டு ஓடவே நேரமிருக்கிறது. கடிதங்கள் பெரும்பாலும் வாசிப்பதில்லை / பார்ப்பதில்லை. எனவே நேரிலேயே உங்கள் கடிதம் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பை இழந்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. அந்நிறுவனத்தின் பெருந்தன்மை போற்றத்தக்கது.
    முனைவர் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட நிறுவனம், தகுந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம் ஐயா
    நன்றி
    இதே போலத்தான் முதன் முதலில் காம்ப்ளான் விளம்பரத்தின் போது, ஐ யம் ய காம்ப்ளான் பாய் என்பது மட்டுமே இருந்தது, அந்நிறுவனத்தின் பணியாளர்களுள் ஒருவர், ஒருமுறை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு பெண்மணியிடம், காம்ப்ளானை பரிந்துரை செய்ய, அவரோ எனக்கு பெண் குழந்தைதான் இருக்கிறது, பையன் இல்லையே எனக் கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அந்த நிறுவனத்திற்கு புரிந்திருக்கிறது, காம்ப்ளான் பாய் என்பதால், இது பையன்களுக்கு மட்டுமே உரிய உணவு என்ற புரிதல் மட்டுமே பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, ஐ யாம் ய காம்ப்ளான் கர்ள் என்ற விளம்பரத்தையும் இணைத்துக் கொண்டார்கள் என்று படித்த நினைவு வருகிறது
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. சிறியரும் செயற்கரியன செய்வர் என்றாகி விட்டது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  6. எத்தனை பெரிய நிறுவனம்! என்றாலும் சிறுமியின் கருத்திற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து மறுமொழியும் கொடுத்து மாற்றமும் செய்தது பெரிய விஷயம். பாராட்ட வேண்டிய ஒன்று. சிறுமியின் சிந்தனையும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்தமைக்கும் தங்களது கடிதம் தினமணியில் வெளியானமைக்கும் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  7. கடிதம் செய்த மாற்றம் என் கருத்தைக் கவர்ந்தது. உங்கள் கைவண்ணத்தில் வெளியானது கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  8. மிக அருமை, நானும் அறிந்தேன்.

    இப்படித்தான் என் கணவரும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் க்குக் கடிதம் போட்டு, வெறும் சிங்களப் படம் மட்டுமே போட்டுக்கொண்டிருந்தவர்கள் பின்பு தமிழ்ப்படத்தையும் இணைத்தார்கள் பிளைட்டுக்குள்:).. நாம் சொல்லி அதனை ஒரு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு எல்லையே இருப்பதில்லை.

    ReplyDelete
  9. முக்கியமான விஷயம், நமது உணர்வுகளைத் தெரியப்படுத்துதலாகும். தெரியப்படுத்தினால் என்றாவது ஒருநாள் தீர்வு பிறக்கலாம். இந்த உண்மையைக் குழந்தைப் பருவத்திலேயே போதித்த பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    இந்தியாவிலும் பல சமயங்களில் விளம்பரதார்கள் இத்தகைய பின்னூட்டங்களை ஏற்றுக்கொண்டு தங்கள் விளம்பரப் பாணியை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. பெற்றோரும் பாரட்டப் படவேண்டியவர்கள் . அந்த நிறுவனமும் பாராட்டத் படவேண்டிய ஒன்றே .

    ReplyDelete
  11. அண்மையில் நான் பதிவிட்டிருந்த சீரியசான தமாஷ் என்னும் இடுகையில் இதே எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒரு துணுக்கு கதை எழுதி இருந்தேன்

    ReplyDelete
  12. குழந்தைகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.அந்த தந்தையும்,அந்த நிறுவனமும்
    நல்ல உதாரணம்.அந்த குழந்தை பிகாலத்தில் நல்ல சிந்தனையாளனாக வர வாய்ப்புண்டு.

    ReplyDelete
  13. எழுத்துக்கள் செய்யும் மாற்றங்கள் இச்சமூகத்தில் நிறைய நிறையவே,,,/

    ReplyDelete
  14. குழுந்தைகளின் ஆர்வத்தையும் சிந்தனையையும் போற்றும் பெற்றோர்கள் . . . . சிறப்பு

    ReplyDelete
  15. அழகு அய்யா
    இந்தக் கட்டுரை குறித்து எழுதுகிறேன்
    ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் ,"செம"

    ReplyDelete