10 November 2018

11.11.11 நூற்றாண்டு நிறைவு

உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடைபெற்றதாகும்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பசிபிக் தீவுகள், சீனா, தெற்கு மற்றும் வட அமெரிக்காவின் கடற்பகுதிகளில் நடைபெற்ற இப்போரின் முடில் ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி ஒட்டாமன் மற்றும் ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகள் வீழ்ந்தன. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் புதிய நாடுகள் உருவாயின. இப்போரில் 17 கோடி வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.

முதல் உலகப்போர் நிறைவுற்றதற்கான ஒப்பந்தம் கையொப்பமிட்டு ஒரு நூற்றாண்டு 11 நவம்பர் 2018 அன்று நிறைவு பெறுகிறது. அமைதிக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு முன்பாக சண்டையை நிறுத்தல் armistice எனப்பட்டது. இச்சொல்லுக்கு "தற்போதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு, போர் நிறுத்த நாள், 1918 முதல் ஆண்டுதோறும் முதலாவது உலகப்போர் நிறுத்தம் கொண்டாடப்பட்டு வரும் நாள் (நவம்பர் 11)" ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் (சென்னைப் பல்கலைக்கழகம், 1963, மறுபதிப்பு 2010) கூறுகிறது.  முதல் உலகப்போரைப் பொறுத்தவரை ஜெர்மானியருக்கும், நேச நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே அது. 
வரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம்  11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் கூறுவர். போர் நிறுத்த செய்தி எதிர்நோக்கப்பட்ட விதத்தை அப்போதைய இதழ்கள் வெளியிட்டிருந்தன. இந்நிகழ்வினையொட்டி 11th Month, 11th Day, 11th Hour (Philip Julian), 11th Month, 11th Day, 11th Hour : Armistice day, 1918 (Joseph E.Persico) உள்ளிட்ட பல நூல்கள் வெளிவந்துள்ளன.


12 நவம்பர் 1918 The Hindu
12 நவம்பர் 1918 மான்செஸ்டர் கார்டியன்

முதல் உலகப்போர் நிறைவுற்றபோது இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1,634 குழந்தைகளுக்கு போர் தொடர்பான, போர் நடைபெற்ற இடங்கள் தொடர்பான பெயர்கள் சூட்டப்பட்டன. அவை வெர்டன் (Verdun, பிரான்சில் உள்ள ஒரு இடம்), கிட்சனர் (Kitchener மற்றும் ஹைக் Haig, ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் படையின் பெயர் கிட்சனர் படை), வெற்றி (Victory), அமைதி (Peace), 11 நவம்பர் 1918 அன்றோ, அந்நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளோ பிறந்த குழந்தைகளுக்கு ஆர்மிஸ்டைஸ் (Armistice), பச்சென்டாலே (Passchendaele, பெல்ஜியத்தில் உள்ள இடம்), சோமே (Somme, பிரான்சில் உள்ள சோமே ஆறு அருகில்), ஒய்பிரஸ் (Ypres, பெல்ஜியத்தில் ஒரு இடம் ஒய்பிரஸ்), ஏமியன்ஸ் (Amiens, பிரான்ஸில் உள்ள ஏமியன்ஸ்) என்றவாறு அமையும்.

முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய மூன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன. அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது.

போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் லண்டனில் ஆயுதப்படை நினைவு நாள் கொண்டாடப்பட்டது. மறைந்த ராணுவ வீரர்களின் கல்லறைகளில் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல் உலகப்போரில் இன்னுயிர் ஈந்தோரை நினைவுகூறும் விதமாக, அதன் நூற்றாண்டு நாளான 2018 நவம்பர் 11 அன்று விடியற்காலையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் 3,000க்கும் மேற்பட்ட மணிக்கூண்டுகளில் மணி ஒலிக்கப்படவுள்ளது.  உலகம் முழுவதும் இந்த 100ஆவது ஆண்டு நாள் நினைவுகூறப்படுகிறது. முதல் உலகப்போரில் உயிர் துறந்தோரின் உறவினர்களும் நண்பர்களும் நூற்றாண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். 

போரின் நூற்றாண்டு இந்தியாவில் நினைவுகூறப்படவுள்ளது. இந்தியாவின் பங்களிப்பினை வெளியுலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதற்கான முயற்சியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரவை உதவியுடன் யுனைடைட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் மேற்கொண்டுள்ளது.  
முதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவினையொட்டி வெளிநாட்டில் இந்திய வீரர்களுக்கான இரண்டாவது தேசிய போர் நினைவுச்சின்னம் துணை ஜனாதிபதி எம்.வெங்கய்யா நாயுடுவால் நவம்பர் 11, 2018இல் பிரான்ஸில் திறக்கப்படவுள்ளது.  
பெல்ஜியத்தில் போரிட்ட 1,30,000 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் முதல் நினைவுச்சின்னம் அங்கு யைப்ரஸ் என்னுமிடத்தில் 2002இல் வடிவமைக்கப்பட்டது. அவர்களில் 10,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தனர்.
1970களில் பதியப்பட்ட, இந்திய வீரர்களின் சுமார் 1,000 பக்கங்கள் அடங்கிய பேட்டியின் கையெழுத்துப்படிகள் பிரிட்டிஷ் நூலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் போரில் கலந்துகொண்ட பெரும்பாலும் கல்வியறிவற்ற, வட இந்தியாவைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட மோசமான விதம், கசையடி, விடுப்பிற்கான அனுமதி மறுப்பு, இன அடிப்படையில் வேறுபாடு உள்ளிட்ட நெஞ்சை உருக்குகின்ற நிகழ்வுகள் இதில் பதியப்பட்டுள்ளன.    

துணை நின்றவை
விக்கிபீடியா, முதலாம் உலகப்போர்
முதல் உலகப்போர் நூற்றாண்டு தினம் அனுசரிப்பு, தினமலர், 6 ஆகஸ்டு 2014
Soldiers' relatives mark centenary of first world wars forgotten battle, Guardian, 7 Aug 2018
Bells will ring out: world to mark end of first world war, 100 years on, Guardian, 12 Aug 2018
Indians in the trenches : voices of forgotten army are finally to be heard, Observer, 27 October 2018 
The forgotten million : on Indian soldiers in World War I, The Hindu, 6 November 2018 
லண்டனில் முதல் உலகப்போர் முடிவின் 100வது ஆண்டு நிறைவு நாள் அனுசரிப்பு, தினகரன், 8 நவம்பர் 2018
A sacrifice remembered, The centenary of the First World War has provided a welcome opportunity to recognise India's role, The Hindu, 9 November 2018

12 நவம்பர் 2018 மேம்படுத்தப்பட்டது. 

17 comments:

 1. சுவாரஸ்யமான தகவல்கள். ஒரு ரீகேப் போல படுத்துக்கொண்டேன். நான் அறியாதவைதான் அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. /படுத்துக்கொண்டேன்//

   ஹையோ.... ஹையோ.... படித்துக் கொண்டேன்.

   Delete
 2. அனைத்துமே எனக்கு புதிய தகவல்களே...
  முனைவர் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 3. தகவல் தொகுப்பிற்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 4. நல்ல தகவல் தொகுப்பு... பல விஷயங்கள் எனக்குப் புதியவை. நன்றி.

  ReplyDelete
 5. மிகவும் இன்றி அமையாத தகவல். நன்றி ஐயா

  ReplyDelete
 6. தொகுப்பு நன்று ஐயா. அறியாதவை பல அறிந்து கொண்டோம்...

  ReplyDelete
 7. நல்ல தொகுப்பு. இதை அப்படியே விக்கிபீடியாவில் பதிந்து விடுவீர்கள்; இல்லையா? முயற்சிக்க வேண்டுமென நினைத்து காலமெல்லாம் நழுவிப் போய் விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. 12.11.2018 அன்று 11.11.11. நூற்றாண்டு நினைவு என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் பதிவு ஆரம்பித்துவிட்டேன் ஐயா

   Delete
 8. இதுநாள் வரை அறியாத, அரியச் செய்திகளின் தொகுப்பு ஐயா
  நன்றி

  ReplyDelete
 9. 11.11.11 ஆகா அருமையான செய்தி!

  ReplyDelete
 10. அரிய தகவல்கள் - பலரும் அறியாத தகவல்கள் - அருமையான பதிவு _ தங்கள் பணி தொடரட்டும் - வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அறியாத அரிய தகவல்கள். மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 12. அருமையான பதிவு. மிக்க நன்றி. தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 13. wonderful rare collection. Good keep it up Dr.by kalvi today ram

  ReplyDelete