22 December 2018

வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி : முனைவர் சோ.கண்ணதாசன்

நண்பர் முனைவர் சோ.கண்ணதாசன் (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோசி அரசு கல்லூரி, தன்னாட்சி, தஞ்சாவூர்) அவர்கள் எழுதியுள்ள வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி என்ற நூலைப் பார்த்ததும் என் பள்ளிக்கால அனுபவங்கள் நினைவிற்கு வந்தன. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் பள்ளி நண்பர் கோவிந்தராஜனின் பெரியப்பா தையற்கடைக்குச் செல்லும்போது அருகில் உள்ள வெற்றிலைக்கடையில் வெற்றிலையை அடுக்குவது, ஏலம் போடுவது போன்றவற்றைப் பார்ப்பேன். 

பள்ளிப்பருவம் முதலே பெரியவர்கள் சிலர் வெற்றிலைப் போடும் அழகினை ரசித்து வந்துள்ளேன். சிலர் இரண்டடுக்காக உள்ள கையடக்க எவர்சில்வர் டப்பாவில் கீழ்த்தட்டில் வெற்றிலையையும், மேல் தட்டில் சீவல் அல்லது பாக்கையும், சுண்ணாம்பையும், புகையிலையையும் வைத்திருப்பர். சிலர் பல மடிப்புகளைக் கொண்ட தாளில் வெற்றிலையையும், சீவல் பாக்கெட்டையும், புகையிலையையும், மடிக்கப்பட்ட ஒரு வெற்றிலையில் சுண்ணாம்பையும் வைத்திருப்பர். அவர்கள் வெற்றிலையை லாவகமாக எடுத்து, சுண்ணாம்பை பெருவிரலில் எடுத்து சிறிது தடவி வெற்றிலையை மடித்து அதனுள் பாக்கையோ, சீவலையோ வாயின் ஓரமாக ஒதுக்கி உள்ளே வைக்கும் அழகு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். சிலர் சீவலுக்குப் பதிலாக பாக்குக்கொட்டையைக் கடித்துச் சிறிதாக்கி வெற்றிலைக்குள் வைத்துப் போடுவர். பெருவிரல் மற்றும் கட்டைவிரலால் சிறிதளவு புகையிலையை உதறி எடுக்கும் அழகும் ரசனையாக இருக்கும்.  பயணத்தின்போதோ, பிற நிகழ்வுகளின்போதோ இவ்வாறாக வெற்றிலை போடுபவர்களை ஆர்வமாகப் பார்த்து ரசிப்பேன். 

நாம் பார்க்கும்போது ஏமாந்துபோகக்கூடாது என்பதற்காக அவர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக் கொடுப்பார்கள். வெற்றிலைக்காம்பின் ருசியும் அவர்களுடைய அன்பும் நம்மை ஈர்த்துவிடும். சிலர் கையில் வெற்றியையும் சீவலையும் உள்ளங்கையில் வைத்து மசித்துக் கொடுப்பர். அது இன்னும் ருசியாக இருக்கும்.  திருமணத்திற்குப் பின் அவ்வப்போது பிற இல்ல சிறப்பு நிகழ்வுகளுக்குச் செல்லும்போது அவ்வப்போது வெற்றிலை போடுவேன். நாக்கு சிவந்திருக்கிறதா என்று நானே பார்த்துக்கொள்வேன். அவ்வாறு போடும்போது இனம் புரியா மகிழ்ச்சி மனதில் தோன்றும். கும்பகோணம் கொழுந்து வெற்றிலை போட்டால் சிவக்குது என்ற திரைப்பாடல் வரிகள்கூட அப்போது நினைவிற்கு வரும். தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்று வெற்றிலையல்லவா?

  

நூலாசிரியர் அகராதியியலின் வரலாற்றைப் பற்றி விவாதித்துவிட்டு அகராதியைத் தருகிறார்.  அகராதியியல் வரலாற்றில் அகராதியியல் தோற்றம், அகராதிக்கும் களஞ்சியத்திற்கும் உள்ள வேறுபாடு, அகராதியின் வளர்ச்சிக்காலம், அகராதியின் வகைகள், நூல் அகராதிகள், பிற சிறப்பு அகராதிகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கிறார். தொடர்ந்து ஆய்வுக்களமான, தஞ்சாவூருக்கு வடமேற்கே 15 கிமீ தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள நடுக்காவேரி என்னும் ஊரின் சிறப்பினையும், அங்குச் சாகுபடி செய்யப்பட்டு வருகின்ற நெல், தென்னை, வெற்றிலை, கரும்பு, வாழை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டு ஊரின் அமைப்பு, மக்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறார்.

தொடர்ந்து வெற்றிலை வேளாண்மை செய்வதற்கான காரணங்கள், வெற்றிலை வேளாண்மை செய்யும் முறை, வெற்றிலை வேளாண் தொடர்பான பழமொழிகள், வெற்றிலை தொடர்பான புராண, மரபுக்கதைகள், சங்க இலக்கியம், சிலம்பு, அற இலக்கியம், கம்பன் காவியம், நாட்டுப்புறப் பாடல், திரைப்படப்பாடல்கள், வைத்திய நூல்கள் ஆகியவற்றில் வெற்றிலை, வெற்றிலையின் பயன், பழமொழிகளில் வெற்றிலை என்ற தலைப்புகளில் விவாதிக்கிறார்.

அகராதியில் அகர வரிசையில் வேளாண் கலைச்சொற்களைத் தந்துள்ளார். தலைச்சொற்பகுதியில் திருந்திய வடிவத்தினை முதலிலும், அச்சொற்களின் பேச்சு வழக்கு வடிவங்களை அடைப்புக்குறிக்குள்ளும் தந்துள்ளார். விளக்கப்பகுதியில் சொற்களுக்குரிய பொருளை எளிய நடையில் தந்துள்ளார். அவர் தந்துள்ள சொற்களில் சிலவற்றைக் காண்போம்.

அரைக்கவளி (அரக்கவுளி) – ஐம்பது வெற்றிலைகளைக் கொண்ட சிறிய கட்டு.
ஆக்கை கட்டுவது – அகத்தி, செம்பை மரங்களில் வெற்றிலைக் கொடிப் படர கோரை கொண்டு கட்டுகை.
எக்கிக் கட்டுதல் – வெற்றிலைக் கொடியைச் சுருக்குக் கட்டும்பொழுது, கால் விரலை ஊன்றிக் குதி காலை உயர்த்தி எக்கி நின்று கைக்கு எட்டிய தூரம் வரை கட்டுதல்.    
கறலை – வெற்றிலைக்கொடியின் தண்டில் காணப்பெறும் தடிமனான பகுதி.
கொடிக்கால் – வெற்றிலைக் கொடிகளைத் தாங்கும் கால் (அல்லது) குச்சி.
நாராசம் – கொடிக்காலுக்குள் போவதற்கு ஒதுக்கப்படும் பொதுப்பாதை.
முட்டி – இருபத்தைந்து கவுளிகளைக் கொண்ட வெற்றிலைக்கட்டு.

இந்த அகராதிக்காக நூலாசிரியர் பல நூல்களிலிருந்து உரிய மேற்கோள்களைத் திரட்டித் தந்துள்ளதோடு, களப்பணி மேற்கொண்டு செய்திகளையும் திரட்டியுள்ளார். ஒவ்வொரு துறைக்கும் இவ்வாறான அகராதிகள் தற்போதைய தேவையாகவுள்ளது. மண் சார்ந்த தொழில்களையும், மரபுகளையும் விட்டு தற்போதைய சமூகம் விலகிப்போகின்ற நிலையில் மரபினையும், மண்ணையும் காக்கும் வகையில் நூலாசிரியர் அரிய முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இதனடிப்படையிலேயே இவர் நெல், தென்னை, கரும்பு, வாழை போன்றவை தொடர்பாகவும் அகராதிகளை வெளியிட முயற்சியினை மேற்கொள்ளலாம். 

அரிய அகராதியை வெளிக்கொணர்ந்த நூலாசிரியருக்குப் பாராட்டுகள். அருமையான முகப்பட்டை, அழகான எழுத்துரு, வாசிக்க மிகவும் எளிதாக நூல் அமைந்துள்ளது. 96 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு ரூ.150 விலை என்பது சற்றே கூடுதலாகத் தெரிகிறது. அடுத்தடுத்த பதிப்புகளில் விலையைக் குறைப்பது பற்றி அவர் சிந்திக்கலாம்.

நூல் : வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி
ஆசிரியர் :  முனைவர் சோ.கண்ணதாசன் (அலைபேசி 9442890293)
முகவரி : செல்ல தங்கம் பதிப்பகம், நாட்டார் தெரு, நடுக்காவேரி 613 101, தஞ்சாவூர் மாவட்டம் 
பதிப்பு : 2016
விலை : ரூ.150


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------------------------------------------

12 comments:

 1. நல்லதொரு அறிமுகம். வெற்றிலைக்காகவே ஒரு புத்தகமா? பாராட்டுகள்.

  நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் கும்பகோணம் கொழுந்து வெத்திலை என்று வராது "கோயம்புதூரு கொழுந்து வெத்திலை வாய் சிவக்குதடி" என்று வரும்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்ஜி கும்பகோணம் என்று தொடங்கி வெற்றிலைப்பாட்டு ஒன்று இருக்கிறது.

   வரிகள் ஞாபகத்திற்கு வரவில்லை.

   Delete
  2. வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை எடுத்து எடுத்து காட்டு

   வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ...

   கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா நா சிவக்கும்..

   இந்த மூணும் எனக்கு நினைவுக்கு வந்துச்சு முனைவர் ஐயா, ஸ்ரீராம், கில்லர்ஜி

   கில்லர்ஜி நீங்க சொல்லிருக்கற பாட்டு கும்பகோணம் கொழுந்து வெத்தலை வந்து ஒரு வீடியோ பாடல் இருக்கு ஏதோ ஆல்பம் போல ...

   கீதா

   Delete
 2. அருமையான புத்தகம்
  அருமையான அறிமுக உரை
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. வெற்றிலைகளைக் குறித்து இவ்வளவு விடயங்களா ? நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 4. நூலின்சிறந்தவிமர்சனத்திற்குநன்றிஐயா

  ReplyDelete
 5. சுவாரஸ்யமான தகவல்கள் முனைவர் ஐயா. வெற்றிலை பற்றி புத்தகமே என்பதும் நல்ல விஷயம் தான். அறிமுகத்திற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 6. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 7. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா.

  ReplyDelete
 8. கேட்கவே நாராசமாக உள்ளது எனும் போது அச்சொல் எதிர்மறை என்று பொருள் கொண்டறிந்தவனுக்கு இது புது விளக்கம்.நன்றி ஐயா

  ReplyDelete
 9. வீட்டில் ஒரு வெற்றிலை கொடி இருக்கிறதே தவிர அது பற்றிய செய்திகள் அறிந்திருக்கவில்லை

  ReplyDelete
 10. இத்தனை சிறப்புக்கொண்ட இலை ஏன் "வெற்றிலை" என அழைக்கப்படுகிறது? நூலை படித்தால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கின்றேன்.

  பி கு : எப்போதேனும் விசேஷ நாட்கள், விருந்து சமயங்களில் சுவைக்க , நா சிவக்க,வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு இவற்றோடு நிற்கும்போது சரி, கூடவே புகையிலை எனும் வஸ்த்து கூடும்போதும் அதன் பயன்பாடு கூடும்போதும் எதிர்வினைகளும் கூடுவதால் வெற்றிலை - புகை இலை வழக்கம் வரவேற்கத்தக்கதன்று என்பது என் கருத்து.

  அறிமுகம் சிறப்பு.

  கோ.

  ReplyDelete