26 January 2019

விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு

6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  700 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். வழக்கம்போல புகைப்படங்களை பொதுவகத்தில் (wikipedia commons) பதிந்துவருகிறேன். தமிழில் வெளிவராத, தேவையான என கருதப்படுகிற தலைப்புகளில் தொடர்ந்து எழுத முயற்சித்து வருகிறேன். அண்மையில் எழுதிய சில பதிவுகளைக் காண்போம்.

முதல் உலகப்போர் நிறைவுற்று 100 ஆண்டுகள் நிறைவான நிகழ்வு 11 நவம்பர் 2018இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்தொடர்பாக எழுதப்பட்டதுதான் வரலாற்று நிகழ்வுகள் என்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகின்ற 11.11.11 நூற்றாண்டு நினைவு என்ற தலைப்பிலான பதிவு. 

மகாமகத்தின்போது கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுதும்போது நான் எழுத விடுபட்டது பாடகச்சேரி சுவாமிகளைப் பற்றிய பதிவு. அண்மையில் நேரில் அங்கு சென்று பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்ச்சாலை என்ற பதிவினை ஆரம்பித்தேன். பாடகச்சேரி சுவாமிகள் என்ற முதன்மைக்கட்டுரையில் அவரைப் பற்றிய விவரங்கள் காணப்பட்டன. இருப்பினும் கூழ்ச்சாலை பற்றிய பதிவின் முக்கியத்துவம் கருதி இப்பதிவு தொடங்கப்பட்டு, அவருடைய புகைப்படம் இரு பதிவிலும் சேர்க்கப்பட்டது. 

அறிஞர்கள் என்ற நிலையில், தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அக்டோபர் 2018இல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற கோ.பாலசுப்பிரமணியன் அவர்களைப் பற்றி நாளிதழ் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பதிவு ஆரம்பித்தேன். தொடர்ந்து அவருடைய புகைப்படத்தை எடுத்து பதிவில் இணைக்கவுள்ளேன். அதுபோன்று தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான, தஞ்சையைச் சேர்ந்த சி.எம்.முத்து அவர்களைப் பற்றி விக்கிபீடியாவில் பதிவுகள் இல்லாததைக் கண்டேன். அவரைப் பற்றிய பதிவினைத் தொடங்கினேன். விரைவில் அவரைப் புகைப்படம் எடுத்து, இணைக்கவுள்ளேன்.


அண்மையில் துவங்கப்பட்ட பதிவுகளில் முக்கியமான பதிவாக நான் கருதுவது ஒற்றுமைக்கான சிலை என்ற தலைப்பில் அமைந்த பதிவாகும். சிலை திறக்கப்பட்ட 31 அக்டோபர் 2018 அன்று, ஆங்கில விக்கிபீடியாவில் அமைந்திருந்த கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு, இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வு நடைபெறும்போதே பதிதல் என்ற நிலையில் கோயில்களின் குடமுழுக்கினை அதே நாளில் பதிந்தபோதிலும், இவ்வாறான ஒரு பதிவினை இப்போதுதான் முதன்முதலாகப் பதிகிறேன். தமிழ் விக்கிபீடியாவில் இருந்த விடுதலைச் சிலை என்ற தலைப்பில் அமைந்த சுதந்திரதேவி சிலை கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு பதிவிட நினைத்தேன். ஆனால் ஆங்கில விக்கிபீடியாவில் Statue of Unity என்ற தலைப்பிலான கட்டுரையில் அதிகமான செய்திகள் இருந்ததால் அதனையே மொழிபெயர்த்து, கூடுதல் விவரங்களை பதிந்த நாளிலேயே பெற்று இணைத்தேன்.

ஆங்கில வெளிநாட்டு இதழ்களில் சிலவற்றைப் பற்றிய பதிவுகள் தமிழில் இல்லாத நிலையில் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான், லண்டனிலிருந்து வெளிவரும் டேப்ளாய்ட் சன், மற்றும் தி கார்டியன் வீக்லி, உள்ளிட்ட இதழ்களைப் பற்றி ஆங்கில விக்கிபீடியா பதிவினை அடிப்படையாக வைத்து பதிவுகளைத் தொடங்கினேன். இந்த மூன்று இதழ்களும் நான் வாசித்து வருகின்ற இதழ்களாகும்.



திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 80ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடிய தருணத்தில், அகில இந்திய வானொலி நிலையம் பற்றி பதிவு இருக்கின்றதா எனத் தேடியபோது அது இல்லாத நிலையில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் என்ற தலைப்பில் புதிய பதிவினைத் தொடங்கினேன். சமய விழாக்கள் என்ற நிலையில் மதுரையில் நடைபெறுகின்ற படியளக்கும் விழா என்ற விழாவினைப் பற்றிய பதிவினை ஆரம்பித்ததோடு, அவ்விழா மானாமதுரை மற்றும் திண்டுக்கல் நடைபெறுவது தொடர்பான செய்திகளையும் சேர்த்தேன். அவ்வாறே ஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் அளித்தது தொடர்பான விழா பட்டீஸ்வரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அவ்விழா நடைபெற்றபோது நேரில் சென்று, முத்துப்பந்தலுடன் உடன் வந்து, புகைப்படங்களை இணைத்து, முத்துப்பந்தல் விழா என்ற தலைப்பில் புதிய பதிவினைத் தொடங்கினேன்.
அண்மைக்காலத்தில் மிகவும் முக்கியப்பணியாக நான் கருதியது தேவார வைப்புத்தலங்கள் என்ற தலைப்பில் 147 கோயில்கள் கொண்ட பட்டியலை உருவாக்கி, அதற்கேற்றவாறு தேவார வைப்புத்தலங்கள் என்ற வார்ப்புருவினை அமைத்து 90 விழுக்காட்டுப் பணியினை நிறைவு செய்துள்ளேன். பட்டியலில் இல்லாத கோயில்களைப் பற்றி புதிய பதிவிட்டும், பட்டியலில் உள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளை மேம்படுத்தியும் செய்யும் பணியினை விரைவில் நிறைவு செய்யவுள்ளேன்.

ஆங்கில விக்கிபீடியா அனுபவம்
இதே காலகட்டத்தில் ஆங்கில விக்கிபீடியாவில் Tiruverkadu Devi Karumariamman Temple என்ற தலைப்பில் அங்கு சென்று வந்த அடிப்படையில் புதிய கட்டுரை ஒன்றை ஆரம்பித்தேன். புகைப்படங்களை அந்தந்த கட்டுரைகளில் இணைக்கும் பணியினை மேற்கொண்டேன். 

என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 
மார்ச் 2017 விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தமிழ்ப் பல்கலைக் கழக கண்காணிப்பாளர் : தினமணி
டிசம்பர் 2017 : விக்கிபீடியாவில் 600ஆவது பதிவு 


------------------------------------------------------------------------------------
அன்புடையீர், வணக்கம். 
நாளை நடைபெறவுள்ள என் இளைய மகனின் திருமணத்திற்கு 
உங்கள் வருகையையும், வாழ்த்தையும் அன்போடு எதிர்பார்க்கிறேன்.
மணமக்கள் : ஜ. சிவகுரு - சே. சிந்துமதி
மண நாள், நேரம் : 27 ஜனவரி 2019, காலை 9.00 - 10.30
நிகழ்விடம் : ஷண்முகப்பிரியா திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
அன்புடன், ஜம்புலிங்கம்
------------------------------------------------------------------------------------

19 January 2019

அயலக வாசிப்பு : டிசம்பர் 2018

டிசம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், டெய்லி மெயில், ஏபிசி நியூஸ், சீனாடெய்லி, இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.   
சிங்கப்பூரையும், ஜெர்மனியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு (United Arab Emirates) உலகின் மிகச் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற நிலையைப் பெற்றுள்ளது. அந்நாட்டு கடவுச்சீட்டினை வைத்துள்ளவர்கள் முன்விசா (prior visa) இன்றி 167 நாடுகளுக்குள் நுழையலாம். 113 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். 54 நாடுகளுக்கு அடைந்த பின் விசா (visas on arrival) என்ற நிலையில் செல்லலாம். கடந்த மாதம் மூன்றாமிடத்திலிருந்த இந்நாடு தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளதாக கல்ப் நியூஸ் கூறுகிறது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள கலகாடி டிரான்ஃப்ரான்டியர் பார்க்கில் (Kgalagadi Transfrontier Park) ஓர் ஆமையை இரு சிங்கங்கள் தமக்கு இரையாக்க முயற்சிக்கின்றன. அந்த ஆமை கூட்டுக்குள் தன்னை உள்ளிழுத்துக்கொள்கிறது. பசியோடு உள்ள இரு சிங்கங்களும் தம் கூரிய பற்களாலும், நகங்களாலும் மாறி மாறி அந்த கூட்டினை உடைக்கவும், முயற்சித்துத் தோற்றுவிடுகின்றன. அக்காட்சியை பீட் வான் சால்க்விக் (Peet van Schalkwyk) என்பவர் படம் பிடித்துள்ளார். இச்செய்தியில் ரசிக்கத்தக்க மற்றொரு கூறு Turtle-y protected!இல் உள்ள Turtle-y என்ற சொல்லின் பயன்பாடு.

வெற்றிக்களிப்பில் விருது பெற மேடைக்கு வந்த கால் பந்தாட்ட வீராங்கனையிடம் கேட்கப்படக்கூடாத கேள்வியைக் கேட்க, மேடை நாகரீகம் கருதி நிதானத்தை கடைபிடித்து தன் கருத்தைக் கூறியவிதம் அருமை.

சீனாவில், தென் சீனக்கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மாகாணங்களுள் ஒன்றான குவாங்டாங் (Guangdong) என்னுமிடத்தில் வகுப்பறைகளில், மாணவர்களின் கண் பார்வையினைப் பாதுகாக்கும் நோக்கில் அலைபேசிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மின்னணு சாதனங்களை அறிவியல்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வீட்டுப்பாடங்களை எழுதுவதற்கு மின்னணுக் கருவிகளுக்கு பதிலாக தாள்களையே பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தி்னர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டைம் (Time) இதழின் 2018இன் சிறந்த நபராக (Person of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஆவர். அவர்களில் வாஷிங்டன் போஸ்ட் இதழைச் சேர்ந்த ஜமால் கஷோகி உள்ளிட்ட, கொலை செய்யப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அடங்குவர். அவர்களை பாதுகாவலர்கள் (The Guardians) என்று கூறுகிறது அவ்விதழ்.

லிட்டில் ஸ்டோன் (Little Stone) என்றழைக்கப்படுகின்ற மூன்று வயது குங்பூ குழந்தை க்யூஇ (Qi), தினமும் காலை 5.00 மணிக்கு படுக்கையை விட்டு எழுகிறது. ஷாவோலின் மாஸ்டராவதற்காக ஷாவோலின் கோயிலில் ஏப்ரல் மாதத்திலிருந்து தினமும் பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறது. பயிற்சி எடுக்க சேர்ந்தபோது தினமும் குழந்தை அழுததாகவும், பின்னர் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் அக்குழந்தையின் பயிற்சியாளர் (master, Abbot Yanbo ) கூறுகிறார். தாயின் நினைவு வரும்போது அவ்வப்போது அழ ஆரம்பிக்கின்ற அக்குழந்தை, தானாகவே கண்ணீரை துடைத்துக்கொண்டு இயல்பாக பயிற்சியில் இறங்கிவிடுகிறது என்றும் அவர் கூறுகிறார். அக்குழந்தை பயிற்சியெடுப்பது தொடர்பான படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகிவருகிறது.

கேம்பிரிட்ஜ், காலின்ஸ், ஆக்ஸ்போர்டு அகராதிகளைத் தொடர்ந்து, மெரியம் வெப்ஸ்டர் அகராதி இந்த ஆண்டுக்கான சிறந்த சொல்லை தற்போது வெளியிட்டுள்ளது. மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த, 2018க்கான சிறந்த சொல் (Word of the Year, WOTY) Justice ஆகும். நீதித்துறையைப் (Justice Department) பற்றிக் குறிப்பிடும்போது நீதி (Justice) என்றே டிரம்ப் கூறுவாராம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, இந்த சொல்லுக்கான தேடல் 74 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், நீதிக்கான வழியடைப்பு (obstruction of justice) என்ற அவருடைய சொல் பயன்பாடு, கடந்த ஆண்டைவிட 900 விழுக்காடு அதிகமாக, இத்தளத்தில் பார்க்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் மக்கள் இந்த சொல்லையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருந்ததாகவும் அவ்வகராதி கூறுகிறது.

பிரிட்டனில் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த இதழ் The Guardian (துவக்கம் 1821, கார்டியன்) என்கிறது அறிக்கை. கார்டியனை அடுத்து வாசிக்கப்படும் இதழ்களாக The Telegraph (1855, டெலிகிராப்), The Independent (1986, இன்டிபென்டன்ட்), The Times (1785, டைம்ஸ்), i (2010, ஐ, இன்டிபென்டன்ட் இதழின் சகோதர இதழ்) இதழ்களை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. கார்டியன், டெலிகிராப், டைம்ஸ், இன்டிபென்டன்ட் ஆகிய இதழ்களை நான் படித்துள்ளேன். i என்ற இதழைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு தற்பொழுதுதான் கிடைத்தது.

12 January 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : நான்முகன் திருவந்தாதி : திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதியை (2382-2477) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



இன்று ஆக, நாளையே ஆக, இனிச் சிறிது
நின்று ஆக, நின் அருள் என்பாலதே ; நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் ; நாராயணனே!
நீ என்னை அன்றி இலை. (2388)
நாராயணனே! இன்றைக்காகவும், நாளைக்காகவும், இன்னம் சிறிது காலம் கழித்தாகவும் (என்றைக்கானாலும்) உன்னுடைய அருள் என்மீது ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது ஆம். நிச்சயமாக நான் உன்னை ஒழியப் புகலில்லாதவன் காண். நீயும் என்னைத் தவிர வேறொரு அடியனை உடையை அல்லை காண்.

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் - ஞாலம்
அளந்தானை, ஆழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு. (2398)
மெய்யான தவ நெறியையுடையவனான சிவன், உலகளந்தவனும், பாற்கடல் பள்ளிகொண்டவனும், ஆலிலைமேல் வளர்ந்தவனுமான பெருமானைத் தான் வழிபடும் நெறியாகிய நல்வழியை முன் யுகத்திலே ஓரால மரத்தின் நிழலிலே நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தான்.

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள 
உதைப்பளவு போதுபோக்கு இன்றி - வதைப் பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாதது ; அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி. (2413)
உலகத்தில் விவரிக்கப்படுகின்ற பொருள்கள் யாவும் ஒரு நிமிட காலமும் ஓயாமல் எப்போதும் எம்பெருமானுடைய சங்கல்பத்தினால் பயனை அடைந்துள்ளன. (அப்படிப்பட்ட பெருமானுடைய) திருக்கலியாண குணங்களில் ஈடுபடாத பொருள் பயனற்றதே ஆகும். ஆகையால் சிறந்த திருக்குணங்களை உடைய அப்பெருமானின் திருவடிகளைப் பணியுங்கள்.

பதிப் பகைஞர்க்கு ஆற்றாது, பாய் திரை நீர்ப் பாழி,
மதித்து அடைந்த வாள் அரவம் - தன்னை - மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது, ஒன்று ஏத்தாது, என் நா. (2455)
பகையான பெரிய திருவடிக்கு அஞ்சிக கடல் போலக் குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றிய பாம்பாகிய சுமுகனை ஆதரித்து அந்தக் கருடனுடைய வலிய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்விய மங்கள விக்கிரகத்தை (திருமேனி) உடையவனுமான எம்பெருமானைத் தவிர வேறொன்றை எனது நாவானது தோத்திரம் செய்யாது.

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் ; 
இனி அறிந்தேன் எம் பெருமான்! உன்னை  -  இனியறிந்தேன்
காரணன் நீ ; கற்றவை நீ ; கற்பவை நீ ; நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான். (2477)
எம்பெருமானே! உன்னைச் சிவனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக இப்போது திடமாகத் தெரிந்துகொண்டேன். எல்லா உலகங்களுக்கும் காரணபூதன் நீ! இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ! (என்கிற இதனையும்) இனி அறிந்தேன். கரரணமற்ற முறையில் பாதுகாப்பதையே நல்ல தொழிலாக உடையவனான நாராயணன் நீ என்பதை நான் நான்றாகத் தெரிந்துகொண்டேன்.


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,

05 January 2019

பிருந்தாவனம் பூங்கா

பல திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த பிருந்தாவன் பூங்காவிற்கு ஆகஸ்டு 2017இல் சென்றிருந்தோம். இதற்கு முன் 1980களில் கோயம்புத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் சென்றிருந்தபோதிலும் இப்போதைய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. 






















பிருந்தாவனம் தோட்டம் கர்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடுத்து, அதளை அழகுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழகான பூங்காவாகும். மாண்டியாவில், ஸ்ரீரங்கப்பட்டின வட்டத்தில், மைசூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 143 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

1927இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1932இல் நிர்மாணப்படி முடிவுற்றது. கிருஷ்ணராஜசாகரா படிநிலைப் பூங்கா என அழைக்கப்பட்ட இப்பூங்கா 60 ஏக்கருக்கும் மேல் மூன்று படிநிலைகளைக் கொண்டு, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது. உலகின் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களில் (the most beautifully laid out terrace gardens) இதுவும் ஒன்றாகும். 

காஷ்மீரில் முகலாயர் பாணியில் அமைந்துள்ள ஷாலிமர் பூங்காவின் மாதிரியையொட்டி அமைக்கப்பட்டது. இதனை சிறப்புற செயல்படுத்தியவர் அப்போதைய மைசூர் அரசின் திவானாக இருந்த சர் மிர்சா இஸ்மாயில் ஆவார். அழகான வடிவத்திற்காகவும், பலவகையான செடிகளுக்காகவும், வண்ண மயமான விளக்கொளிக்கழகிற்காகவும் திகழும் இப்பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இரவில் விளக்கொளியில் பூங்காவின் அழகினை ரசித்துக்கொண்டே இருக்கத்தோன்றும். 

இப்பூங்கா முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா என்ற நான்கு பிரிவாக அமைந்துள்ளது. 

முதன்மை வாசல்
புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் வடிவில் அமைக்கப்பட்டது. இரு புறமும் ரோஜாப்பூ தோட்டங்கள் உள்ளன. 

தெற்கு பிருந்தாவன்
காவிரி சிலைக்கருகே இப்பகுதி உள்ளது. சிலைக்கு முன்னே உள்ள காவேரியம்மா சர்க்கிளில் பெரிய அளவிலான நீர்வீழ்ச்சி (water fountain) உள்ளது. அங்கு பல வகையான வித்தியாசமான செடி வகைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு காணப்படுகின்ற நீர்ச்சாரல்கள் கண்களுக்கு இதமாக உள்ளன. மாலை நேரத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இவ்விடம் காணப்படும்.

வட பிருந்தாவன்
நான்கு அழகான படி நிலைகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளன. வரிசையாக செடிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் காண்போரைக் கவர்கிறது. சிறிய நீர் வீழ்ச்சிகள் ஆங்காங்கே உள்ளன. வட பிருந்தாவனுக்கும், தெற்கு பிருந்தாவனுக்கும் இடையே காவிரியாறு ஓடுகிறது. பார்வையாளர்கள் படகுப்பயணம் செய்ய வசதியுள்ளது.

குழந்தைகள் பூங்கா
தெற்கு பிருந்தாவன் அருகே வலப்புறத்தில் குழந்தைகள் பூங்கா உள்ளது. குழந்தைகள் விளையாடவும், பொழுதைப் போக்கவும் அதிகமான வசதிகள் அங்கு உள்ளன.

விளக்கொளியில் பூங்கா
புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு பூங்கா மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூங்காவைப் பற்றிய இணைய தளங்களில் விளக்கொளி நேரம் மாறிமாறி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்துகொள்வது நலம்.

மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மைசூரிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கும், வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

மைசூரிலிருந்து பேருந்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் பிருந்தாவன் பூங்கா வந்துசேர்ந்தோம். டிக்கட் எடுக்க வரிசையாக கூட்டமாகக் காத்திருந்தோம். சூரியன் மறையும் வேளையில் நுழைந்த நாங்கள் ரசித்துக்கொண்டே உள்ளே சென்றோம். அதிகமான மேகக்கூட்டம் காரணமாக சூரியன் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் மாலையின் உணர்வு மனதிற்கு இதமாக இருந்தது. பூங்காவினைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. அகன்றும் உயரமாகவும் வளர்ந்திருந்த மரங்கள், பரந்து விரிந்து கிடக்கின்ற புல் தரை, அழகான பூக்கள், இலைகளைக் கொண்ட செடிகள் போன்றவை மிகவும் ரம்மியமாக இருந்தன. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அவ்வளவு கூட்டத்தையும் அந்த பூங்கா எதிர்கொண்டதைக் காணும்போது வியப்பாக இருந்தது.  நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது. 

மாலையில் இருந்த அழகினை விட மாறுபட்ட அழகினை தொடர்ந்து ரசித்தோம். தொடர்ந்து மின்னொளியில் பூங்காவின் அழகைக் கண்டு வியந்தோம். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகள், படிகளில் நீர் இறங்கி வரும் விதம் பூங்காவின் ரசனையை நன்கு வெளிப்படுத்தியது. மின்னொளியில் அது இன்னும் அருமையாக இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனமின்றி திரும்பினோம், மைசூரை நோக்கி.  

நன்றி: 
விக்கிபீடியா
http://horticulture.kar.nic.in/brindavan.htm






நன்றி:
உடன் வந்ததோடு புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி மற்றும் எங்கள் இளைய மகன் சிவகுரு 

கர்நாடக உலாவில் இதற்கு முன் நாம் பார்த்தவை : 
சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர்  
மைசூர் :  மெழுகுச்சிலை அருங்காட்சியகம் 
மைசூர் மிருகக்காட்சி சாலை


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு :