02 March 2019

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ் சாலை

புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992) என்ற நூலில் கும்பகோணத்திலுள்ள கோயில்கள் பட்டியலின் அடிப்படையில் கும்பகோணம் மற்றும் அருகேயுள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்றேன். அப்பதிவில் முத்துப்பிள்ளை மண்டபத்தில் பாடகச்சேரி சுவாமிகள் கோயில் என்ற ஒரு கோயில் இருப்பதற்கான குறிப்பினை முதன்முதலாகக் கண்டேன்.
தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளை விக்கிபீடியாவில் பதிய ஆரம்பித்த காலகட்டத்திலும், 2016 மகாமகத்தின்போது கும்பகோணத்திலும் அருகேயுள்ள பல கோயில்களுக்கும் சென்றபோது  பாடகச்சேரி கோயிலுக்குச் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன். 

18 நவம்பர் 2018 அன்று நண்பர் சிற்பக்கலைஞர் ராஜசேகரனுடன் முத்துப்பிள்ளைமண்டபத்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை என்ற பெயரோடு இருந்த அவ்விடத்திற்குச்  செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முத்துப்பிள்ளை மண்டபம் என்று கூறப்படுகின்ற இவ்விடத்தின் பெயர் முக்திக்குள மண்டபம் என்பதை அங்கு சென்றபின்னர்தான் அறிந்தேன்.   




கும்பகோணம் நாகேசுவரர் கோயிலில் திருப்பணி செய்து 1923இல் குடமுழுக்கு செய்துவைத்தவர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் எனப்படுகின்ற பாடகச்சேரி சுவாமிகள்.  உண்டியல் நன்கொடை மூலமாகவே அப்பணியை செய்துமுடித்ததாகக் கூறுவர். கோயிலின் ராஜ கோபுரத்தில் அவருடைய சுதைச்சிற்பம், கழுத்தில் உண்டியலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளதை இன்றும் காணலாம். (ராஜ கோபுரத்தின் முதல் தளத்தில், நுழைவாயிலக்கு மேலே நடுவில் வெள்ளை ஆடையுடன் உள்ளவர்.)  


இக்கூழ்ச்சாலையை பாடகச்சேரி சுவாமிகள் அமைந்த பின்னணியைக் காண்போம். பசிப்பிணியையும், உடற்பிணியையும் போக்கிய சிறந்த யோகியான பாடகச்சேரி சுவாமிகள் 1876இல் கோயம்புத்தூரில் பிறந்தார். தன் 12ஆம் வயதில் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு 4 கி.மீ. தொலைவில் அமையப்பெற்ற பாடகச்சேரி வந்தார். மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்ட அவரை அருட்பெரும் ஜோதி ராமலிங்கம் ஆட்கொண்டு, உபதேசம் வழங்கினார். 

பைரவரையே வணங்கி வந்த அவர், யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருப்பார். அவருடைய பக்தர்கள்  தேடும்போது நாயுடன் அவர்களின் முன் நிற்பார். ஒரே சமயத்தில், 100 தலைவாழை இலைகளில் உணவுகளை இட்டு கண்மூடி நிற்கும்போது 100 நாய்கள் அவற்றை உண்ண வந்துவிடும். பிழைக்க வாய்ப்பில்லாதவர்களையும் விபூதி பூசி காப்பாற்றுவார். கும்பகோணம் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேஸ்வரன் கோயிலின் கோபுரக்கட்டுமானப்பணிக்காக தனியாளான அலைந்து திருப்பணியை நிறைவேற்றியவர். அக்கோயிலில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. 

மகாயோகி எரிதாதா சுவாமிகள் அவரை சீடனாக ஏற்றுக் கொண்டார். பாடகச்சேரியிலிருந்து முத்துப்பிள்ளை மண்டபம் வந்து தங்கி யோகமார்க்கத்தில் சென்றார். அங்கு தங்கியிருந்தபோது ஏற்பட்ட பஞ்சம் பட்டினியைப் போக்கவே இந்த கூழ்சாலையைத் தொடங்கினார். மக்களின் பசித்துயர் போக்கும் பணியினை மேற்கொண்டார்.

 தற்போது பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கூழ்சாலையில் எரிதாதா சுவாமிகள் சன்னதி, சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான சபை, சத்திய தரும சாலை, சத்திய வேத வைத்திய சாலை ஆகியவை உள்ளன. 

கூழ்சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை குருவார பூஜை, பௌர்ணமி பூஜை, தைப்பூச விழா,  மாசி மகம் விழா, ஆடிப்பூரம் குரு பூஜை, விஜய தசமி, பூஜை, சாமண்ணா குரு பூஜை, எரிதாதா சுவாமிகள் குரு பூஜை, திருவாதிரை பூஜை மற்றும் அருள்மிகு நடராஜ சுவாமிகள் அபிஷேக ஆராதனை போன்ற பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

எரிதாதா (எரிசாமி) சன்னதியில் அவருக்கு முன்பாக வலது புறத்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளும், இடது புறத்தில் விவேகானந்தரும் உள்ளனர். அவர்களுக்கு எதிராக பைரவரைக் குறிக்கின்ற நாய் சிலைகள், பறவை சிலை உள்ளது. 

எரிதாதா சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன.
சத்திய ஞான சபையில் மூன்று தியான அறையும், ஒரு குண்டலி அறையும் உள்ளன. சத்திய ஞான சபையின் அருகே, எரிதாதா சுவாமிகள் சன்னதியின் பின்புறம் எலந்த மரம் உள்ளது. 



அதே வளாகத்தில் ஒரு நடராஜர் கோயில் உள்ளது. கோயிலின் கருவறையில்  நடராஜப் பெருமான் உள்ளார். 
கூழ்சாலையை அடுத்து மிக அருகில் சித்தி புத்தி விநாயகர் கோயில் உள்ளது.  அக்கோயிலில் ராமலிங்க சுவாமிகள் நின்ற கோலத்தில் உள்ளார். கருவறையில் விநாயகர் சித்தி புத்தியுடன் காணப்படுகிறார்.

  

பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகளைப் பற்றி திரு நல்லி குப்புசாமி செட்டியார் எழுதியுள்ள நூல், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களையும் எடுத்துரைக்கிறது. சுவாமிகளின் குறிப்பேடுகளின் நகல்களையும் நூலாசிரியர் அரிதின்முயன்று திரட்டி நூலில் சேர்த்துள்ளார். நூலாசிரியர் சென்னை, பெங்களூர், கும்பகோணம், பாடகச்சேரி, திருச்சி, செள்ளக்கருக்கி ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று பேட்டிகள் எடுத்துத் தந்துள்ள விதம் பாராட்டும் வகையில் உள்ளது.  (பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், 16/2, ஜெகதாம்பாள் தெரு, தி.நகர், சென்னை 600 017, தொலைபேசி 044-2815 1160, விரிவான ஐந்தாம் பதிப்பு, 2014, ரூ.125)

நன்றி : 
சிற்பக்கலைஞர் திரு இராஜசேகரன்
திரு ஏ.இளங்கோவன், எல்.ஐ.சி.டெவலப்மெண்ட் ஆபீசர், மயிலாடுதுறை,  9443075837 (களப்பணியில் உதவி செய்தததோடு, நூலை அனுப்பி உதவினார்)

துணை நின்றவை : 
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ் சாலை, விக்கிபீடியா
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், தினமலர் கோயில்கள்
சித்தர்கள் அறிவோம், பூவுலகில் இது சிவலோகம் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள், இந்து தமிழ் திசை, 1 அக்டோபர்
கூழ் சாலை முன்பாக

சித்தி புத்தி விநாயகர் கோயிலில் திரு ஏ.இளங்கோவன் உடன்

14 comments:

  1. தாங்களே இப்பொழுதுதான் செல்கிறீர்கள் என்பதே வியப்புதான்
    முக்திக்குள கோயில்
    அறிந்தேன் வியந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. அருமை. நன்றி

    ReplyDelete
  3. தகவல்கள் வியப்பை அளிக்கின்றன ஐயா... நன்றி...

    ReplyDelete
  4. பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளைப்பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
  5. புதிய தகவல்கள். அழகான படங்கள்.

    ReplyDelete
  6. பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் படம் ஒன்று எங்கள் வீட்டில் இருந்தது. பிறகு என் அப்பா இறந்தபின் நான் அந்த வீட்டிற்கு ச் செல்லவில்லை .
    அந்தப் படம் என்னவாயிற்று என்று தெரியாது என் அம்மா பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் . 'தங்கள் பதிவு பழைய நினைவுகளை நினைக்கவைத்தது .

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் பற்றிய விபரங்களும், அந்த கோவில் படங்களும் மிக அருமையாக இருந்தது. இந்த விபரங்கள் எல்லாம் தங்கள வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது அரிய முயற்சிகளால், தாங்கள் தரும் விபரங்கள் வியப்பைத் தருகின்றன. அரிய பல கோவில்களை, அதன் தகவல்களை திரட்டித் தரும் தங்கள சேவை மகத்தானது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. தனசை புன்னை நல்லூர் மாரியம்மன் மற்றும் தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் கோயில்களுக்கும் திருப்பணி செய்திருக்கின்றார்.. இந்த இரண்டு கோயில்களிலும் ஸ்வாமிகளின் சுதை சிற்பங்கள் உள்ளன.. கரந்தையில் அன்பர் ஒருவரின் இல்லத்தில் சிலகாலம் ஸ்வாமிகள் தங்கியிருந்ததாக அன்பின் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்...

    ஸ்வாமிகளைப் பற்றிய அரிய செய்திகளுடன் நல்லதொரு பதிவு..

    வாழ்க நலம்...

    ReplyDelete
  10. படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன முனைவர் ஐயா. பாடகச்சேரி இராமலிங்க ஸ்வாமிகள் பற்றி அறிந்து கொண்டோம்.

    //பைரவரையே வணங்கி வந்த அவர், யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருப்பார். அவருடைய பக்தர்கள் தேடும்போது நாயுடன் அவர்களின் முன் நிற்பார். ஒரே சமயத்தில், 100 தலைவாழை இலைகளில் உணவுகளை இட்டு கண்மூடி நிற்கும்போது 100 நாய்கள் அவற்றை உண்ண வந்துவிடும்.//

    மிக மிக வியபான தகவல் ஐயா.

    கீதா

    ReplyDelete
  11. பதிவும் படங்களும் அழகு. பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் குறித்த விவரங்களும் மிக ஸ்வாரஸ்யம்.

    முனைவர் ஐயா தங்கல் மகன் பாரத் அவர்கள் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்த தங்கள் மனைவியார் எழுதிய புத்தகம் கோயில் உலா வாசித்தேன். மிகவும் பயனுள்ள புத்தகம். அருமை. வாழ்த்துகளுடன் மிகுந்த நன்றியும் ஐயா.

    துளசிதரன்

    ReplyDelete
  12. அவ்வூர் பஸ் நிறுத்ததம் வழியே அடிக்கடி சென்றிருந்தாலும் அவரைப் பற்றி முழு விபரங்களும் அளித்துள்ளீர்கள். நன்றி Sir. எனது பல நண்பர்களின் ஐயங்களை இனி போக்கவுதவும்

    ReplyDelete
  13. அரிய தகவல்கள் - அழகான படங்கள் - அருைமயான பதிவு - நன்றிகள் பல

    ReplyDelete
  14. பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜீவ சமாதி இருக்கும் இடம் போய் இருக்கிறோம். பாடகச்சேரியில்.
    அவரை நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் வீதியில் திருந்தி கொண்டு இருக்கும் நாய்களிடம் சொல்லி விட்டால் அவர் நம்மை பார்ப்பார் என்பார்கள்.

    அவர் இத்தனை இலை என்று சாப்பாடு பரிமாறி வைத்து நாய்களை அழைத்தால் எத்தனை இலை போட்டு பரிமாறி வைத்து இருக்கிறரோ அதந்த அளவு நாய்கள் வந்து இலை முன் அமர்ந்து அவர் தரும் உணவை சண்டையிடாமல் அமைதியாக உண்டு செல்லுமாம்.
    நிறைய கோவில் திருப்பணி செய்து இருக்கிறார்.
    அற்புதங்கள் செய்து காட்டி இருக்கிறார் என்று அவர் வாழ்க்கை குறிப்பில் படித்து இருக்கிறேன்.

    உங்கள் பதிவு நான் போய் வந்த அவர் ஜீவ சமாதி பற்றி போடும் ஆவலை தூண்டி விட்டது. நன்றி சார்.

    ReplyDelete