27 April 2019

டெலிகிராப் இதழில் சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழின் பக்கங்கள்

26 ஏப்ரல் 2019இல் வெளியான The Hindu நாளிதழில் “போட்டி இதழின் பக்கங்களை ஆஸ்திரேலிய நாளிதழ் அச்சிட்டிருந்தது” (Australian newspaper prints rival pages, The Hindu, 26 April 2019, p.18) என்ற செய்தியைக் காணமுடிந்தது. போட்டி நாளிதழான Sydney Morning Herald இதழின் பக்கங்களிலிருந்து இரண்டு பக்கங்கள் அப்படியே Daily Telegraph இதழில் வெளியாகியிருந்ததை அச்செய்தியில் காணமுடிந்தது. டெய்லி டெலிகிராப் ட்விட்டரில் இரு நாளிதழ்களும் சிட்னியில் ஒரே இடத்தில் அச்சிடப்படுகின்றன. அச்சுப்பணியின்போது இத்தவறு நிகழ்ந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக வருந்துகிறோம் என்று அவ்விதழ் கூறியிருந்தது. இந்த இரு இதழ்களுமே ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகின்ற இதழ்களாகும். இச்செய்தியைப் பார்த்ததும் பிற இதழ்களின் தளங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 

டெய்லி டெலிகிராப் இதழில் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பக்கங்கள்
(தலையங்கப்பக்கமும், தலையங்க எதிர்ப்பக்கமும்)


“அச்சுப்பிழை : மர்டோவின் இதழான டெய்லி டெலிகிராப், அதன் போட்டி இதழான சிட்னி மார்னிங் ஹெரால்டின் இரு பக்கங்களைக் கொண்டிருந்தது” என்ற தலைப்பில் (Printing error: Murdoch's Daily Telegraph includes pages from rival Sydney Morning Herald, The Guardian, 25 April 2019) கார்டியனில் செய்தி வெளியாகியிருந்தது. ரூபர்ட் மர்டோவின் இதழான டெய்லி டெலிகிராப் அதன் வாசகர்களுக்கு ஒரு முற்போக்குச் சிந்தனையை இன்று தந்துள்ளது. அவர்கள் இன்று காலை அவ்விதழை வாசிக்கும்போது அதில் சிட்னி மார்னிங் ஹெரால்டிலிருந்து சில பக்கங்களைக் கண்டார்கள். ஹெரால்டின் தலையங்கப்பக்கத்தில் வெளியாகியிருந்த Anzac Day பற்றிய கட்டுரை பழமைவாத டெய்லி டெலிகிராப் வாசகர்களுக்கு  ஒரு குழப்பத்தைத் தந்திருக்கலாம். அதனருகே டெலிகிராப்பின் gossip செய்திகளுடன் Syndney Confidential இடம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் உலக அழகியின் பெரிய அளவிலான புகைப்படம் அதில் இருந்தது. அதே பக்கத்தில் ஹெரால்டின் obituary செய்திகளும் இடம் பெற்றிருந்தன.   Anzac day செய்தி தவறாக இடம்பெற்றதைப் பற்றி ஹெரால்டின் உரிமையாளர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. அது எப்படி நடந்தது என்றும் அவர்களால் கூறமுடியவில்லை. பின்னர்தான் இரு நாளிதழும் ஒரே இடத்தில் அச்சாகின்ற நிலையில் இந்த அச்சுப்பிழை நடந்திருக்கும் என்பதை உணர்ந்தனர். ஹெரால்ட் இதழ் ப்ராட்ஷீட் வடிவில் இருந்திருந்தால் இவ்வாறான தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். இரு இதழ்களுக்கும் மேம்படுத்தப்பட்ட வடிவு தரப்பட்டபோது, 15 மில்லியன் டாலர் தொகையை மிச்சப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ஒரே இடத்தில் அச்சிட ஒத்துக்கொண்டனர். அச்சகப்பொறுப்பாளர், “இன்றைய நகரப்பதிப்புகளை அச்சிடும்போது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. பிந்தைய மெட்ரோ பதிப்புகளில் அத்தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. இதுபோன்ற தவறு இனி நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும்” என்று கூறினார். சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதனை மிகவும் மென்மையாக எடுத்துக்கொண்டதோடு, “டெலிகிராப் இதழின் வாசகர்கள் இன்று எங்கள் இதழின் தலையங்கப்பக்கத்தினை ரசித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். பின்னர் அத்தவறு கண்டறியப்பட்டபின் அடுத்தடுத்த பதிப்புகளில், பாதிப்பு ஏதுமின்றி, சரிசெய்யப்பட்டது” என்று கூறியது.
தவறாக வெளியானதை உணர்த்தும் வகையில் 
pressfrominfo தளத்தில் வெளியான புகைப்படம்

“ஆஸ்திரேலிய நாளிதழ், அதன் போட்டியிதழின் பக்கங்களை தவறுதலாக அச்சிட்டது” (Australia's Daily Telegraph prints rival's pages by mistake BBC News, 25 April 2019) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்த பிபிசி நியூஸ், டெலிகிராப் அத்தவறுக்காக மன்னிப்பு கேட்டதைப் பற்றிக் கூறியிருந்தது. பருவ நிலை மாற்றத்திற்கான நடவடிக்கையைப் பற்றிய ஒரு கடிதமும் அதில் வெளியாகியிருந்தது. பல வாசகர்கள் அத்தவறினை சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஹெரால்ட் இதழாளர் ஒருவர், “இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ஹெரால்ட் இதழின் சில பக்கங்கள் டெலிகிராப் வாசகர்களுக்குக் கிடைத்த போனஸ்” என்றார்.
வாசகர்கள் இக்குழப்பம் தொடர்பாக தம் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். ஒருசிலர் அச்சுச்செலவினைக்குறைக்க இதுவும் ஒரு வாய்ப்பு என்று கூறியிருந்தார். இத்தவறால் பணியாளர் பணியிழக்க நேரிடும் என்றார்.
ஒரே இடத்தில் அச்சாகும்போது இவ்வாறான தவறுகள் ஏற்படுவது இயல்பு. இருப்பினும் இரு மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இதழ்களில் இவ்வாறாக செய்தி வெளியாகும்போது வாசகர்களிடம் வியப்பு மேம்பட்டதை அனைவரும் உணரமுடிந்தது. பிற இதழ்களும் இச்செய்தியினைப் பற்றி விரிவாக அலசியிருந்தன.

சிட்டி மார்னிங் ஹெரால்ட் 1831 முதல், ஆஸ்திரேலியாவில் சிட்னியிலிருந்து வெளிவருகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து நெடுநாள் தொடர்ந்து வெளிவருகின்ற நாளிதழ் என்ற பெருமையைக் கொண்டது இவ்விதழ். இதன் அச்சு வடிவம் காம்பாக்ட் வடிவில் வாரத்திற்கு ஆறு நாள்கள் வெளியாகிறது.
டெய்லி டெலிகிராப் 1879 முதல், ஆஸ்திரேலியாவில் சிட்னியிலிருந்து வெளிவருகிறது. டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்ற இவ்விதழை Tele என்றும் அழைக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் ஆறாவது புகழ்பெற்ற நாளிதழ் என்ற பெருமையினைக்கொண்டது.


நன்றி:
The Hindu
The Guardian
BBC News
The Daily Telegraph
The Sydney Morning Herald
Wikipedia
Pressfrominfo 

20 April 2019

உலக அரசியல் களத்தில் மகளிர் : தினமணி

16.4.2019 நாளிட்ட தினமணியில் வெளியான 
என் கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவில் பகிர்வதில் மகிழ்கிறேன், 
கட்டுரையை வெளியிட்ட தினமணிக்கு நன்றி. 

மகளிர் சக்தி பல துறைகளில் பரவிவருகின்ற நிலையில் அரசியல் களத்திலும் அவர்களுடைய சாதனைகளையும் அவர்கள் சமூகத்தின்மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் உணர முடிகிறது. உலகின் பல நாடுகளில் பெண் அரசியல்வாதிகள் தலைமைப்பொறுப்பில் ஜனாதிபதிகளாகவும், பிரதமர்களாகவும் தற்போது உள்ளனர். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மையில் ஸ்லோவாகியாவைச் சேர்ந்தவர் ஜனாதிபதி ஆகியுள்ளார். அவ்வகையில் 28 நாடுகளில் ஒரு பெண்மணியைத் தலைமைப் பொறுப்பில் கொள்கின்ற எட்டாவது நாடாக அந்நாடு திகழ்கிறது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி (ஏஞ்சலா மெர்கல்), ஸ்லோவாகியா (ஜுஜுனா கபுடோவா), குரோஷியா (கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்), எஸ்தோனியா (கெர்ஸ்டி கல்ஜுலெய்ட்), லிதுவேனியா (டேலியா க்ரைபாஸ்கைட்), ருமேனியா (வியோரிக்கா தான்சிலா), மால்டா (மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா), பிரிட்டன் (தெரசா மே) ஆகியோர் தலைமைப்பொறுப்பில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத பிற ஐரோப்பிய நாடுகளில் நார்வே (எர்னா சோல்பர்க்), ஐஸ்லாந்து (கட்ரின் ஜாகோப்டாடிர்), ஜார்ஜியா (சலோம் ஜௌராபிச்விலி), செர்பியா (அனா ப்னாபிக்) ஆகிய நான்கு நாடுகளில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அவர்களைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

ஏஞ்சலா மெர்கல் 2005இல் ஜெர்மனியின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்று, ஐரோப்பாவின் பெரிய பொருளாதாரத்தை நடத்திச்செல்வதோடு, மார்ச் 2018இல் நான்காவது முறை வெற்றி பெற்றுள்ளார். போர்ப்ஸ் இதழ் வெளியிடுகின்ற சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் இவர் ஏழு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுபவம் வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார்.
ஜுஜுனா கபுடோவா, ஸ்லோவாகியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடி அதிபர் தேர்தலில் 58 சதவீத வாக்குகளைப் பெற்று பெற்றி பெற்றார். அத்தேர்தலானது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என்று கூறியிருந்தார். 2016ஆம் ஆண்டிற்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றவர். ஸ்லோவாகியாவின் முதல் பெண் அதிபரான இவர் ஸ்லோவாகியா வரலாற்றில் குறைந்த வயதில் (45) அதிபரானவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் குரோஷியாவின் முதல் பெண் அதிபராக ஜனவரி 2015இல் பொறுப்பேற்றார்.  2005 முதல் 2008 வரை வெளியுறவு அமைச்சராகவும், 2008 முதல் 2011 வரை குரோஷியாவின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றினார். 2017இல் போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் சக்திவாய்ந்த 39ஆவது பெண் என்று அறிவித்தது. நேட்டோ எனப்படுகின்ற வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உதவிப்பொதுச் செயலாளராக 2011 முதல் 2014 வரை பணியாற்றியவர். குறைந்த வயதில் (46) அதிபர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். 
கெர்ஸ்டி கல்ஜுலெய்ட் எஸ்தோனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக அக்டோபர் 2016இல் பொறுப்பேற்றார். எஸ்தோனியா, ஆங்கிலம், பின்னிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சரளமாகவும், குறிப்பிட்ட அளவிற்கு ரஷ்ய மொழியிலும் பேசக்கூடியவர்.  குறைந்த வயதில் (46) ஜனாதிபதியானவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். 
டேலியா க்ரைபாஸ்கைட் லிதுவேனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2009இல் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை இரும்புப்பெண்மணி என்று அழைக்கின்றனர். ஐரோப்பிய கமிஷனராக இவர் பணியாற்றியுள்ளார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் எலெக்ட்ரீசியன் மற்றும் ஓட்டுநர் வேலை பார்த்துள்ளார். தாயார் ஒரு கடையில் விற்பனைப் பெண்ணாகப் பணியாற்றியவர்.
வியோரிக்கா தான்சிலா ருமேனியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். 2009 முதல் 2018 வரை ருமேனியாவின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராவார்.
மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா மால்டாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பிரதமரின் ஆலோசனைப்படி ஏப்ரல் 2014இல் பொறுப்பேற்றார். அந்நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆனார். மார்ச் 2013 முதல் மார்ச்  2014 வரை குடும்ப மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். சமூக மற்றும் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக சமூக நன்மைக்கான ஜனாதிபதியின் அமைப்பு என்ற லாப நோக்கமற்ற அமைப்பினை உருவாக்கினார். குறைந்த வயதில் (55) அப்பொறுப்பினை ஏற்றவர் என்ற பெருமையையுடையவர்.
தெரசா மே, மார்கரெட் தாச்சருக்குப் பின், ஜுலை 2016இல் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகல் தொடர்பான ஓட்டெடுப்பில் டேவிட் காமரூன் பதவி விலகியபோது இப்பொறுப்பினை ஏற்றார். நீண்ட காலம் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த  பிரிட்டன் என்பது அவருடைய இலக்காக உள்ளது. போர்ப்ஸ் இதழின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்.
எர்னா சோல்பர்க், நார்வேயில் 2004 முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2013இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நார்வேயின் 28ஆவது பிரதமராகப் பதவியேற்றார். இவர் நார்வேயின் இரண்டாவது பெண் பிரதமராவார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அதிக காலம் பிரதமாக உள்ளவர் என்ற பெருமையினைப் பெற்றவர்.
கட்ரின் ஜாகோப்டாடிர் ஐஸ்லாந்தின் 28ஆவது மற்றும் தற்போதைய பிரதமராக 2017இல் பதவியேற்றார். 2009 முதல் 2013 வரை இவர் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் நார்டிக் கூட்டுறவுத்துறையின் அமைச்சராக இருந்துள்ளார். இவர் ஜோஹன்னா சிகுரோர்டாடிருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் பிரதமராவார். இடதுசாரி பசுமை இயக்கம் என்ற பொருளாதார சமூக அரசியல் கட்சியின் துணைத்தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சலோம் ஜௌராபிச்விலி ஜார்ஜியாவின் ஐந்தாவது மற்றும் தற்போதைய ஜனாதிபதியாக 2018இல் பதவியேற்றார். ஆறு ஆண்டுகள் இவர் இப்பதவியில் இருப்பார். இவர் பிரான்சின் முன்னாள் தூதுவருமாவார்.   இனிவரும் காலங்களில் நாட்டின் தலைவர் மறைமுகமாக தெரிவு செய்யப்படுகின்ற தேர்தல் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், இவர் ஜார்ஜியாவின் பிரபலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி ஜனாதிபதியாக இவர் கருதப்படுகிறார்.
அனா ப்னாபிக் செர்பியாவின் முதல் பெண் பிரதமருமாவார். இவர் 2017இல் பதவியேற்றார். முன்னர் இவர் பொது நிர்வாகம் மற்றும் உள் சுயாட்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2018இல் போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் 91ஆவது சக்தி வாய்ந்த பெண் என்னும்,  21ஆவது சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் கொள்கைத்தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பாவில் மட்டுமன்றி உலகின் பிற நாடுகளின் அரசியலிலும் தற்போது மகளரின் செல்வாக்கு பரவலாகக் காணப்படுகிறது. சீனக்குடியரசின் முதல் பெண் பிரதமர் சாய் இங் வென், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவரான, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  வித்யா தேவி பண்டாரி,  மார்ஷல் தீவுகளின் பிரதமரான அந்நாட்டின் முதல் டாக்டர் பெற்ற ஹில்டா ஹைன்,  வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமரான ஷேக் ஹசீனா, ட்ரினிடாட் டொபாகோ குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியான பாலாமே வீக்கெஸ்   போன்றோர் அரசியலில் தம் பங்கினை அளித்துவருகின்றனர்.

இந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பெறும் மற்றொரு பெண்மணி ஜெஸிந்தா ஆர்டர்ன் ஆவார். இவர் தன் மனிதநேயத்தாலும், அன்பாலும் அண்மையில் உலகையே தன்னைப் பார்க்கவைத்த நியூசிலாந்தின் 40ஆவது பிரதமர் ஆவார். உலகிலேயே இளம் வயதில் (37) நாட்டின் உயர்ந்த பதவியை வகிக்கும் பெருமையை உடைய இவர் பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த இரண்டாவது பெண்மணி ஆவார். குடிமக்கள்மீதான பற்று, மன உறுதி, ஆளுமைத்திறன், சமூக நலனில் அக்கரை போன்றவற்றின் காரணமாக அரசியல் களத்தில் மகளிரின் ஈடுபாடும் பங்களிப்பும் உயர்ந்துகொண்டே வருவதைக் காணமுடிகிறது. தாம் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், தம்மால் சாதித்துக்காட்ட முடியும் என்பதையும் அவர்களுடைய ஆட்சி உணர்த்துகிறது.
கட்டுரை வெளியாவதற்கு முதல் நாள் வந்த செய்தி

தினமணி இதழில் வாசிக்க : 
உலக அரசியல் களத்தில் மகளிர்

Power of women 2018, Forbes, 4 December 2018 
(https://www.forbes.com/lists/power-women/#299c46ca5a95)
Women in power in the European Union, France24, March 2019
(https://www.france24.com/en/20190331-women-power-european-union)
அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்! போல்டுஸ்கை, 19 ஜுலை 2018 (https://tamil.boldsky.com/insync/life/2018/inspiring-women-political-leaders-present-day/articlecontent-pf149534-021700.html)
முதன்முதலில் அதிகாரத்துக்கு வந்த பெண்கள் இவர்கள்தான், தமிழ்வின்,
Planetrulers, Current Heads of State and Dictators (https://planetrulers.com/category/female-leaders/
Top female leaders around the world, TIME, (http://content.time.com/time/specials/packages/completelist/0,29569,2005455,00.html)
'She power' in Europe, The Hindu, 1 April 2019

13 April 2019

திரு சிலம்பொலி செல்லப்பன் (1929-2019)

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பாகவும், பதிப்புத்துறை இயக்குநர் பொறுப்பாகவும் திரு சு.செல்லப்பன் அவர்கள் இருந்த காலகட்டத்தில், 16 ஆகஸ்டு 1982இல் பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்தபோது ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த்தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நாடறிந்த தமிழறிஞரான அவரிடம் சுருக்கெழுத்துத்தட்டச்சராகப் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாகும். பதிவாளர் பிரிவில் வேலை பார்த்த எனக்கு பதிப்புத்துறையின் பொறுப்புகளையும் தந்தார். முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் காலம் என்ற நிலையில் மூவர் செய்யவேண்டிய பணிகளை ஒருவரே அப்போது செய்வோம். அன்பு, நட்பு, பரிவு என்று பணியாளர்களிடம் மிகவும் அணுக்கமாகப் பழகுவார். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார். "ஜம்புலிங்கம் தட்டச்சு செய்தால் அதில் தட்டச்சுப்பிழையே இருக்காது" என்பார். என் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணியையும், ஆங்கிலக் கடித வரைவுகளையும் வெகுவாகப் பாராட்டியவர்.


 

தமிழ்ப்பல்கலைக்கழக அரண்மனை வளாகம் 

தமிழே அவருடைய பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது. பணிக்காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் இன்றும் நினைவில் உள்ளன. கட்டுரைகள், அணிந்துரைகளை அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு சொல்லச்சொல்ல, அதற்கு ஈடாகத் தட்டச்சு செய்வேன். அப்போது கடைபிடித்த நுணுக்கங்கள் பலவாயினும் சிலவற்றைக் காண்போம். 
  • அவர் சொல்வதில் விடுபான்றி, அதே சமயம் மறுபடியும் கேட்காமல் (ஒரே முறை கேட்பதை உள்வாங்கி) தட்டச்சிடுவேன்.
  • தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் போன்றவற்றையும் விடுபாடின்றி செய்வேன். 
  • தடித்த எழுத்தில் சொல் அமைய வேண்டும் நிலையில் தட்டச்சுப்பொறியில் அவ்வசதி இல்லாத நிலையில் அடிக்கோடிடுவேன். 
  • உரைநடைப்பகுதியின் இடையே கவிதையோ, செய்யுளோ வரும்போது அதனை வேறுபடுத்திக்காட்ட உள்ளே தள்ளி தட்டச்சிடுவேன். 
  • என்னைப்போல அப்போது என்னைப்போல அவ்வாறு தட்டச்சு செய்தவர்கள் அப்போது திரு நடராஜன், திரு உதயகுமார், செல்வி விமலா கிறிஸ்டபெல் ஆகியோர். 
பணியில் சேர்ந்த சில நாள்களில் சிந்துவெளிக்கருத்தரங்கு நடத்தும் முழுப்பொறுப்பினையும் தந்ததோடு, பணி நிறைவுற்றதும், கருத்தரங்கப்பொறுப்பாளர் வரலாற்றறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முன்பாக அதிகம் புகழ்ந்து கூறினார்.

ஆரம்ப காலத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி சுற்றறிக்கைகள் அனுப்புவோம். அவ்வகையில் நான் பணியில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் ஆங்கிலத்தில் ஒரு சுற்றறிக்கையின் வரைவினைத் தயாரிக்கும் பொறுப்பில் பிறருடன் நானும் இணைந்திருந்தேன். அது பணியில் சேர்ந்தவர்களுக்கான பணிப்பங்கீடு தொடர்பான கடிதமாகும். அந்தப் பட்டியலில், பதிவாளரின் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக,  என் பெயரே முதலிடத்தில் இருந்ததை பெருமையாக நினைவுகூர்கிறேன். உயர் அலுவலர்களோ, ஆசிரியர்களோ இல்லாத நிலையில் அவர்களின்கீழ் பணியாற்றுகின்ற சுருக்கெழுத்தர்கள், செயலாளர்கள் போல அந்தந்தப் பிரிவினை கட்டுப்பாடாக வைத்திக்கவேண்டும் என்ற பொருளில் அப்போது சுருக்கெழுத்துத்தட்டச்சர்களாக இருந்த எங்களுக்கு அனுப்பப்பட்ட அக்கடிதத்தில் கையெழுத்திட்டபின் இவ்வாறான ஒரு கடிதம் ஆங்கிலத்தில் உள்ளதே, இனி இதுபோன்ற கடிதங்கள் தமிழில்தான்இருக்கவேண்டும் என்று எங்களையெல்லாம் அழைத்துக்கூறியது இன்னும் நினைவில் உள்ளது



நான் பணியில் சேர்ந்த முதல் வாரத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெளிவரவுள்ள ஆங்கிலக்காலாண்டு ஆய்விதழான தமிழ் சிவிலிசேசன் தொடர்பாக வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அக்கடிதத்திற்கு உரிய மறுமொழியினை தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். மற்றொரு சிறப்பு இக்கடிதம் நீண்ட சொற்றொடரைக்கொண்டிருந்தது. என் நினைவிலிருந்து.... "While acknowledging with thanks the receipt of your letter cited above we wish to state that the quarterly research journal of Tamil University, Tamil Civilization, is in print and would be sent to you in due course, for which the relevant details regarding the subscription rates is enclosed for ready reference". வரைவு தட்டச்சிடாமல் நேரடியாகவே கையொப்பமிடும் அளவு இருந்ததாகக் கூறி என்னைப் பாராட்டியதோடு, பிற சக பணியாளர்களை அழைத்து ஆங்கிலக்கடிதங்கள் இவ்வாறு தட்டச்சிடப்படவேண்டும் என்றார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்வதற்கு முன்னரே பிற தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் என் திறமைகளை வெளிப்படுத்த உதவியாக அமைந்ததோடு என்னை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. பிற்காலத்தில் நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கும், பிற மொழிபெயர்ப்புக்கட்டுரைகளைத் தற்போது எழுதுவதற்கும் இவரிடமும், இவரைப்போன்ற அறிஞர்களிடமும் பணியாற்றியபோது இடப்பட்ட அடித்தளமே என்பதை நன்கு உணர்கிறேன்.

என்னைப் போன்றோருக்கும் அவரின் பிரிவு ஒரு பேரிழப்பே.

09 April 2019

2018இன் சிறந்த சொல்

2017இன் சிறந்த சொற்களாக யூத்க்வேக் (ஆக்ஸ்போர்டு), ஃபேக் நியூஸ் (காலின்ஸ்),  ஃபெமினிசம் (மெரியம் வெப்ஸ்டர்) ஆகிய சொற்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன.  2017இல் முதன் முதலாக ஆக்ஸ்போர்டு சிறந்த இந்தி சொல்லைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது. 
2018க்கான சிறந்த ஆங்கிலச் சொல்லாக Toxic (ஆக்ஸ்போர்டு),  No mobile phone phobia என்பதன் சுருக்கமான Nomophobia (கேம்பிரிட்ஜ்), Justice (மெரியம் வெப்ஸ்டர்), Single use (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும், Misinformation என்ற சொல்லை டிஸ்னரி இணைய தளமும் தெரிவு செய்துள்ளன.  Plastic (நெகிழி)  என்ற சொல்லையும் (2018இன் குழந்தைகள் தெரிவு செய்த சிறந்த சொல்), நாரிசக்தி என்ற சொல்லையும் (2018இன் சிறந்த இந்தி சொல்) ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. 2018க்கான சிறந்த சொற்கள் தெரிவு செய்ததற்கான பின்புலத்தினைக் காண்போம்.  

ஆக்ஸ்போர்டு அகராதி
ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் டாக்சிக் என்பதாகும். டாக்சிக், டாக்சிகலி என்பதற்கு நஞ்சு சார்ந்த, நச்சியலான என்ற பொருளாக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கூறுகிறது. லத்தீன் மொழியில் டோக்ஸியஸ் என்ற சொல்லுக்கு விஷப்படுத்தப்பட்ட, விஷத்துடனான என்ற பொருள்களுண்டு. இச்சொல் 17ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பயன்பாட்டிற்கு வந்தது.  தொடர்புடைய லத்தீன் சொல்லான டாக்சிகம் என்பதற்கு விஷம் என்று பொருளாகும். இதற்கான முன்னோடி கிரேக்கச் சொல்லான டாக்சிகான் பார்மகான் என்பதாகும். பண்டைய கிரேக்கர்களால் அம்புகளின் முனைகளில் தடவுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கொடிய விஷத்தை அது குறிக்கும். இதிலும் சிறப்பு என்னவெனில் பார்மகான் என்பது விஷத்தைக் குறிக்கவில்லை. மாறாக கிரேக்கத்திலிருந்து வந்த, வில்லைக் குறிக்கின்ற சொல்லான டாக்சான் என்பதிலிருந்து வந்த டாக்சிகான் என்ற சொல்லே விஷம் என்ற பொருளைத் தருகிறது. 
மீடூ இயக்கத்தில், விஷத்தன்மையுள்ள ஆளுமை (டாக்சிக் மஸ்கியூலினிட்டி) என்று குறிப்பிட்டு மகளிர் தம் மீதான பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்தியதற்காக அவ்வியக்கத்திற்கு ஆக்ஸ்போர்ட் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

கேம்பிரிட்ஜ் அகராதி
கேம்பிரிட்ஜ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் நோமோபோபியா என்பதாகும். அலைபேசி இல்லாத அல்லது அதனைப் பயன்படுத்த முடியாத சூழலால் எழும் பயம் அல்லது வருத்தம் என்பது இதன் பொருளாகும்.  கேம்பிரிட்ஜ் அகராதியின் இணையதள இவ்வாண்டு புதியதாக வந்த சொற்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட, 2018க்குப் பொருத்தமான சொல்லைப் பற்றிக் கூறும்படி வாசகர்களிடமும், கேம்பிரிட்ஜ் இணைய தள வாசகர்களிடமும், சமூக வலைத்தளங்களைத் தொடர்வோர்களிடமும் கேட்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் எண்ணப்பட்டு இந்த சொல் அதிக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இவ்வகராதி கூறுகிறது. அவ்வகையில் 2018இன் மக்களின் சொல்லாக இச்சொல்லைத் தெரிவு செய்துள்ளது. அறிவியல் சார்பற்ற முதன்முதலில் இச்சொல் 2008இல் பயன்படுத்தப்பட்டதாக யுனைடெட் கிங்டம் அஞ்சலக அலுவலகத்தால் அமைக்கப்பட்ட யூகவ் ஆய்வாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐக்கிய ராஜ்யத்தின் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட இச்சொல், இவ்வாண்டின் ஆரம்பத்தில் அகராதியின் இணையதளத்தில் இடம்பெற்றது.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி
மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த சொல் ஜஸ்டிஸ் என்பதாகும். 2018இல் பெரும்பாலும் தினமும் இச்சொல் நாளிதழ்களில் நீதித்துறை, நீதிக்கான தடை, உயர்நீதிமன்ற நீதிகள், சமூக நீதி உள்ளிட்ட பல நிலைகளில் வெளியானதாகவும் பல காரணங்களின் அடிப்படையிலும், பல பொருள்களின் அடிப்படையிலும் மக்களின் மனதில் இச்சொல் இருந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவ்வகராதி கூறுகிறது.  2017ஐக் காட்டிலும் 2018இல் 74 விழுக்காட்டினர் இச்சொல்லை அதிகமாகத் தேடியுள்ளனர் என்றும், 2018இல் நீதி தொடர்பான பொருண்மை தேசிய விவாதங்களின் முதன்மையான இடத்தைப் பெற்றதாகவும் கூறுகிறது. இச்சொல் பொதுவாகப் பேசப்படுவது என்று கூறப்பட்டாலும், பிரபலமான சொற்களோடு தொடர்புடைய, குறிப்பிடத்தக்க, தொழில்நுட்பம் சார்ந்த, சட்டரீதியான சொல் என்ற நிலையில் இதற்கான தேடல் அதிகமாகியுள்ளது.   

காலின்ஸ் அகராதி
காலின்ஸ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் சிங்கிள் யூஸ் என்பதாகும். அதற்கு ஒருமுறைப் பயன்பாடு என்ற பொருளாகும். இச்சொல் ஒரே ஒரு முறை பயன்படுத்துவதற்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்ற, பெரும்பாலும் நெகிழியையே குறிக்கின்றது. இது சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு, உணவுப்பொருள் தயாரிப்பு தொடங்கி அதன் விற்பனை வரை பல நிலைகளில் பெரிய தாக்கத்தினை உண்டாக்குகிறது. நெகிழியிடம் நாம் அடிமையானதையும், சிறிய பை தொடங்கி தேக்கரண்டி வரை நெகிழி உலகை ஆக்கிரமித்துள்ளதையும்கூட உணர்த்துகிறது. பெருங்கடல்களில் ஸ்ட்ரா, பாட்டில் மற்றும் பை போன்ற பல வடிவங்களில் நெகிழி காணப்பட்டதைக் கண்டு, அதனை எதிர்த்து அதன் பயன்பாட்டைக் குறைக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
2013 முதல் இச்சொல்லின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. பிபிசி ஊடக அமைப்பில் இயற்கை வரலாற்றுப் பிரிவு சார்பாக 2017இல் எடுக்கப்பட்ட, கடல் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படத் தொடரான  ப்ளூ ப்ளானட்-2 தொடரில் வெளியாகின்ற செய்திகளையும், படங்களையும், காட்சிகளையும் பொதுமக்கள் பார்க்க ஆரம்பித்ததும் இச்சொல்லின் பயன்பாடானது நான்கு மடங்கு பெருகிவிட்டது. அது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே பெருக ஆரம்பித்துவிட்டது. 
இந்த சொல் 1959இல் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் முதன் முதலாக இடம் பெற்றது. அப்போது பிரிட்டிஷ் தர நிறுவனம் உலோகப் பெட்டிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் டியூப் பற்றி குறிப்பிடுகையில் இச்சொல்லைப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனை மறுபடியும் பயன்படுத்தவோ, மறுபடியும் மறுமுத்திரை வைக்கவோ  முடியாது. தட்டச்சுப்பொறிக்கான ரிப்பனுக்கும், தொடர்ந்து 1980களில் தெர்மாமீட்டர், ஊசி உள்ளிட்டவற்றிற்கும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, பெரும்பாலும் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் நிலையில் இந்த ஒரு முறை பயன்பாடு இருந்தாலும், பெரும்பாலும் உணவுத்தயாரிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் ஒரு முறைப்பயன்பாடு நிலையில் நெகிழியே பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் எதிர் விளைவுகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.      

டிஸ்னரி இணையதளம்
டிஸ்னரி இணையதளம் தேர்ந்தெடுத்த சொல் மிஸ்இன்பமேஷன் என்பதாகும். மிஸ்இன்பாம் என்பதற்கு தவறான செய்தி, மெய்ம்மை பிழை பட உரை, தகவல் திரித்துக்கூறு, தப்புவழிகாட்டு  என்ற பொருள்களை ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கூறுகிறது. டிஸ்இன்பமேஷன் என்பதற்கு பதிலாக இச்சொல் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், போலிச்செய்திகளை எதிர்த்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக இச்சொல் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. எங்களின் இந்த ஆண்டு சிறந்த சொல் மிஸ்இன்பமேஷன் என்று கூறும் அகராதியின் தளம், இது ஒரு சொல் மட்டுமல்ல என்றும், நடவடிக்கைக்கான ஓர் அறைகூவல் என்றும் கூறுகிறது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்காக பகிரப்படுகிறதா என்பதைப் பற்றி சிந்திப்பதற்கான அவசியம் எழவில்லை என்றாலும் இச்சொல்லுக்கு தவறாகப் பரப்பப்படும் செய்தி என்று பொருளாகும்.
1500களிலிருந்தே இச்சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இணையதளத்தில் அதிகமான தவறான செய்திகள் பயன்பாட்டில் வந்துவிடவே இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகியுள்ளது. மக்கள் தாம் பகிர்வது என்னவென்று தெரிந்து பரப்புவது மிஸ்இன்பமேஷன் ஆகும். மாறாக டிஸ்இன்பமேஷன் என்பதற்கு மற்றவரை தவறான அல்லது மாற்றுக்கண்ணோட்டத்தில் இட்டுச்செல்லும் செய்தி என்பது பொருளாகும். இதில் மேலும் குழப்பம் தரும் நுட்பம் என்னவெனில் டிஸ்இன்பமேஷன் என்பதில் ஒரு கூறு மட்டுமேகூட மிஸ்இன்பமேஷன் ஆகிவிட வாய்ப்புண்டு. அதனை பகிர்ந்துகொள்வோரைப் பொறுத்தே பொருள் நிலையில் முக்கியம் பெறுகிறது எனலாம். உதாரணமாக ஒரு அரசியல் பிரமுகர் தவறு என்று தெரிந்து, திட்டமிட்டே ஒரு செய்தியை கட்டுரை, புகைப்படம், மீம்ஸ் வடிவில் பரப்புவது டிஸ்இன்பமேஷன் ஆகும். பொதுமக்கள் அதனை நம்பிப் பகிரும்போது அது மிஷ்இன்பமேஷன் ஆகிவிடுகிறது.    
அகராதிகளும், இணைய தளங்களும் இவ்வாண்டிற்கான சிறந்த ஆங்கிலச்சொல்லையும், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்த இந்திச் சொல்லையும் அறிவித்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு குழந்தைகளுக்கான அகராதி ப்ளாஸ்டிக் என்ற சொல்லை 2018இன் சிறந்த சொல்லாகத் தெரிவு செய்துள்ளது.

குழந்தைகள் அதிகம் பயன்படுத்திய சொல்
ஆக்ஸ்போர்டு குழந்தைகள் அகராதியும், பிபிசி ரேடியோ 2உம் இணைந்து இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 500 சொல் கட்டுரைக்கான தேசிய அளவிலான போட்டியை நடத்தினர். இதில் 1,34,000 குழந்தைகள் கலந்துகொண்டனர். அப்போது குழந்தைகள் அக்கட்டுரைகளில் அதிகமாகப் பயன்படுத்திய சொல் நெகிழி (பிளாஸ்டிக்) ஆகும். 2017ஐவிட 2018இல் இச்சொல் 100 விழுக்காடு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதன் அதனடிப்படையில் இச்சொல் தெரிவு செய்யப்பட்டது. முதல் முதலாக உணர்வுபூர்வமாக சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற அடிப்படையில் கட்டுரைகளில் குழந்தைகள் இச்சொல்லை பயன்படுத்தியிருந்தது பாராட்டத்தக்க வகையில் அமைந்தது.

2018இன் சிறந்த இந்தி சொல்
2018இன் சிறந்த இந்தி சொல்லாக, பல துறைகளில் பெண்களின் ஈடுபாட்டை எடுத்துச்செல்கின்ற நாரிசக்தி (இந்தியில் நாரி என்றால் பெண்கள்) என்பதனை அறிவித்தது. இச்சொல்லுக்கான மூலச்சொல்லாக ஆதிசக்தியான, படைப்பு தொடங்கி அழிப்பு வரை சக்தியினைக்கொண்டுள்ள  துர்க்கையைக் குறிப்பதாகவும், தற்காலத்தில் தம் வாழ்வினைத் தானே தேர்வு செய்துகொள்கின்ற ஆற்றலை மகளிர் கொண்டுள்ளதைக் குறிக்கும் வகையில் இச்சொல் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளதாகவும் அவ்வகராதி கூறியது. 

ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் விரைவில் அமையும் என்று நம்புவோம். எனினும் இப்போதுள்ள சூழ்நிலையில்  நெகிழியானது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அங்கிங்கெனாதபடி தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி, தூக்கி எறிகின்ற நெகிழியைத் தடை செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ச்சொல்லாக ப்ளாஸ்டிக் எனப்படுகின்ற நெகிழியையே நாமும் கொள்வோம்.

துணை நின்றவை
The people’s word of 2018, Cambridge Dictionary
‘Nomophobia’ Declared People’s Word of 2018 by Cambridge Dictionary, Guess What It Means,  News18, December 1, 2018
Collins Dictionary, Word of the year 2018
Collins 2018 Word of the year Shortlist, 7 November 2018
Oxford Word of the year 2018 is toxic  
Toxic: Oxford Dictionaries sums up the mood of 2018 with word of the year, CNN, December 5, 2018
‘Toxic’ Is Oxford’s Word of the Year. No, We’are Not Gaslighting You, The New York Times, 14 November 2018
2018ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம், வீரகேசரி, 17 நவம்பர் 2018
2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்  - ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு, மாலை மலர், 16 நவம்பர் 2018
‘இந்த ஆண்டின் சிறந்த சொல் விஷம்..! - ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு, ஹிக்சிக், 17 நவம்பர் 2018
Word of the Year 2017: Oxford, Cambridge, Merriam-Webster and Collins Dictionaries select words that defined 2017, India Today
'Misinformation' chosen as word of the year by Dictionary.com
'Misinformation' is crowned Dictionary.com's word of the year, CNN, November 26, 2018
Word of the Year: Justice
‘Justice’ is Merriam-Webster’s word of the year, beating out ‘lodestar’ and ‘nationalism’, Washington Post, 17 December 2018 
Children’s word of the year : 2018 Insights, OUP
‘Plastic’ is Oxford’s Children’s Word of the Year 2018 as per 134,000 short stories by children, India Today, 11 June 2018
‘Oxford Dictionaries Hindi word of the year 2018 is….’, Oxford Dictionaries, 26 January 2019

திகிரி இதழுக்கு நன்றியுடன்..







12 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது

06 April 2019

நாளிதழ்கள் : டேப்ளாய்ட் வடிவம்

ஐக்கிய நாடுகளில் 1821இல் மான்செஸ்டன் கார்டியன் என்ற பெயரில் வெளியாகிவரும் இதழ் 1959இல் கார்டியன் என்ற பெயரைப் பெற்றது. இவ்விதழ் 1821-2005இல் பிராட்ஷீட் வடிவிலும், 2005-2018இல் பெர்லினர் வடிவிலும் வெளியானது.  15 ஜனவரி 2018 முதல் கார்டியன் டேப்ளாய்ட் வடிவத்திற்கு மறுபடியும் மாறியபோது, 2005 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த நீல மற்றும் வெள்ளை நிற முகப்பு வேறு வண்ணத்தினைப் பெற்றது. மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டபோது கார்டியன் மற்றும் அப்சர்வர் இதழ்களுக்கான முதன்மை இதழாசிரியர் “பல மாதங்கள் மேற்கொண்ட சிந்தனை, படைப்பாற்றல், இலக்குகளின் அடிப்படையின் விளைவே இந்த புதிய வடிவம். இதழின் மூத்த ஆசிரியர்களும், வடிவமைப்பாளர்களும் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். தாம் விரும்புவதைப் போலவே வாசகர்களும் புதிய முகப்பினை விரும்புவர்" என்று கூறியிருந்தார்.

15 ஜனவரி 2018இல் வெளியான முதல் டேப்ளாய்ட் வடிவ
கார்டியன் இதழுடன் ஆசிரியர்

15 ஜனவரி 2018இல் கார்டியன் புதிய வடிவம் பெற்றது. சக ஊடகங்கள் என்ன நினைத்தன என் பார்ப்போமா?
"நாங்கள்தான் பிரிட்டனின் மிகப்பெரிய, சிறந்த தரமான நாளிதழ்" என்றது டெய்லி டெலிகிராப் (Daily Telegraph).
2003இல் டைம்ஸ் (Times) டேப்ளாய்ட் வடிவிற்கு மாறியது.
டெலிகிராப் (Telegraph) மற்றும் ஃப்னான்சியல் டைம்ஸ் (Financial Times) ஆகிய இதழ்கள் ப்ராட்ஷீட் வடிவில் கடைசியாக வெளியாகின்ற நாளிதழ்களாகும்.
மிர்ரர் (Mirror) இதழைவிடவும், கார்டியன் (The Guardian) இதழைவிட 1.50 பவுண்டு விலை குறைவு என்றும் சன் (Sun) கூறியது.
சில விமர்சனங்களை முன்வைத்த பிபிசி (BBC), "இந்த வடிவம் படிக்க மிகவும் எளிதானது" என்றது.
"டேப்ளாய்ட் இதழின் சில தவறான பழக்கங்களை இவ்விதழ் மேற்கொள்ள வாய்ப்புள்ளது" என்றது டெய்லி மிர்ரர் (Daily Mirror).
உலகளாவிய நிலையில் உற்றுநோக்கப்பட்ட இவ்வடிவம் பற்றி நியூயார்க் டைம்ஸ் (New York Times), "பிரிட்டனின் இடதுசாரி இதழ் சக்தி டேப்ளாய்ட் வடிவம் பெறுகிறது" என்றது.
லே மேண்டே (Le Monde, France) இதழும் இதனைப் பற்றி விவாதித்தது.
காட்சிப்பேழையில் டேப்ளாய்ட் வடிவ இதழ்கள்










இந்த செய்திகளைப் படித்தபோது நாளிதழ்களின் அளவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. நாளிதழ்கள் பல அளவுகளில் வெளியாகின்றன. இருந்தாலும் ப்ராட்ஷீட், பெர்லினர், டேப்ளாய்ட் மற்றும் கம்பாக்ட் என்பவை பொதுவாக காணப்படுபவையாகும்.
ப்ராட்ஷீட்
ப்ராட்ஷீட் 600 x 750 mm (23.5" x 29.5") என்ற அளவில் உள்ளதாகும். அரசியல் மற்றும் கதைப்பாடல்களை ஒற்றைத்தாளில் விற்கப்பட்டபோது பிரிட்டிஷார் பக்கங்களின் அடிப்படையில் 1712 வாக்கில் அவற்றிற்கு வரி விதித்தானர். அப்போதுதான் ப்ராட்ஷீட் என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அண்மைக்காலமாக ப்ராட்ஷீட் என்பதிலிருந்து பல நாளிதழ்கள் டேப்ளாய்ட் வடிவிற்கு மாற்றம் பெற ஆரம்பித்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் ப்ராட்ஷீட் என்பதானது ஏ1 அளவு தாளில் அச்சிடுவதைக் குறிக்கிறது. (594 x 841 mm - 23.4" x 33.1"). நாம் தமிழகத்தில் தற்பொழுது வாசிக்கின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வகையைச் சார்ந்ததாகும்.

பெர்லினர்
பெர்லினர் 315 x 470 mm (12.4" x 18.5") என்ற அளவில் உள்ளதாகும். மிடி என்றும் அழைக்கப்படும் இந்த வடிவமானது பொதுவாக ஐரோப்பாவில் காணப்படுகிறது. ‘பெர்லினர் ஜீட்டங்’  எனப்படும் இதழ் பெர்லினர் என்றே அழைக்கப்பட்டாலும் பெர்லினர் அளவில் அச்சடிக்கப்படுவதில்லை. பெர்லினர் வடிவம் என்பதானது டேப்ளாய்ட்/காம்பேட் வடிவினைவிட சற்றே நீளமாகமாகவும், சற்றே அகலமாகவும், அதே சமயம் ப்ராட்ஷீட்டைவிட சிறியதாகவும் இருக்கும். ப்ராட்ஷீட் வடிவத்திற்கு ஒரு மாற்றாக இருப்பதோடு, இதழியல் உலகில் பெர்லினர் வடிவம் ஒரு அரிய கண்டுபிடிப்பாக அமைவதாகக் கொள்ளலாம்.

டேப்ளாய்ட்
டேப்ளாய்ட்  280 x 430 mm (11.0" x 16.9") என்ற அளவில் உள்ளதாகும். இதனை ப்ராட்ஷீட்டின் பாதி என்பர். இருந்தாலும் இந்த வரன்முறையை முற்றிலும் உண்மை எனக் கூறிவிடமுடியாது. ஏனென்றால் ப்ராட்ஷீட்டின் அளவு 600 x 750 mm (23.5" x 29.5") ஆகும். ஏ3 அளவிற்கும் டேப்ளாய்ட் அளவிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஏ2 தாளில் டேப்ளாய்டை அச்சடிக்கும்போது நாளடைவில் பொருத்தமாகிவிடுகிறது. (நாளிதழ்களின் அளவு மடிக்கப்பட்ட பக்கங்களின் அளவினைக் கொண்டுள்ளதை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்)  நாளிதழ் அளவுகளைக் குறிக்க டேப்ளாய்ட் என்று கூறும்போது அது ‘டேப்ளாய்ட் இதழியலை’ குறிப்பிட ஆரம்பிக்கிறது எனலாம். டேப்ளாய்ட் இதழியல் என்பது சுருக்கமான, எளிதாகப் படிக்கக்கூடிய, அதே சமயம் மிகைப்படுத்தப்பட்ட வடிவில் செய்தியைத் தருவதாகும். 1880களில் காணப்பட்ட, எளிதாக விழுங்கக்கூடியதாகவுள்ள, தாராளமாகக் கிடைத்த ‘டேப்ளாய்ட் மாத்திரைகளைக்’ குறிக்கவே முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, சீனா, ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் டேப்ளாய்ட் வடிவ இதழ்கள் வெளிவருகின்றன. வாசகர்களிடையே பிரபல்யம் ஆகிவிட்ட நிலையில் அண்மைக்காலமாக புகழ்பெற்ற பல நாளிதழ்கள் ப்ராட்ஷீட் வடிவிலிருந்து டேப்ளாய்ட் வடிவிற்கு மாற்றம் பெற்றுள்ளன.
           Daily Mail (தினசரி), The Mail on Sunday (ஞாயிறு), Daily Express (தினசரி), Sunday Express (ஞாயிறு) ஆகியவை டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்றன. இவற்றில் Daily Mail 1971 வரையிலும், Daily Express 1977 வரையிலும், Sunday Express 1992 வரையிலும் ப்ராட்ஷீட் வடிவில் வெளிவந்தன.

காம்பேக்ட்
காம்பேக்ட் என்பது டேப்ளாய்ட் அளவினைப் போன்றதேயாகும். ‘தரம்’, ‘உயர்நிலை’ என்ற வகையில் தனித்து வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும்,  டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து சற்றே வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்காகவும், டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள விரும்புவதாலும் காம்பேக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் டேப்ளாய்ட்
இந்தியாவில் வெளிவருகின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வடிவில் வெளிவருகின்றன. 1941 முதல் வெளிவந்த பிளிட்ஸ் (Blitz) இந்தியாவிலிருந்து வெளிவந்த முதல் டேப்ளாய்ட் என்ற பெருமையினைப் பெற்றது. இவ்விதழின் ஆங்கிலப்பதிப்பை நான் படித்துள்ளேன். அதன் மொழி நடை அனைவரையும் ஈர்க்கும்வகையில் காணப்படும். ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் அது வெளிவந்தது.  1990களின் இடையில் இவ்விதழ் வருவது நின்றுவிட்டது. 
தி இந்து (The Hindu) 24 பிப்ரவரி 2019 முதல், மேகசைன் பிரிவான (Magazine) இணைப்பினை  40 பக்க டேப்ளாய்ட் வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல வருடங்களாக வெளிவந்த வெள்ளிக்கிழமை இணைப்பையும் (Friday Review) அவ்விதழ் டேப்ளாய்ட் வடிவில் கொணர்ந்துள்ளது.  இந்து தமிழ், தினமணி போன்ற இதழ்கள் சிறப்பு நிகழ்வுகளின்போது டேப்ளாய்ட் வடிவில் சிறப்பு இணைப்பினை  வெளியிடுகின்றன. ஆனந்த விகடன், சில ஆண்டுகளுக்கு முன் சகோதரப்பதிப்பாக ஜுனியர் போஸ்ட் என்ற இதழை டேப்ளாய்ட் வடிவில் கொணர்ந்தது. அதில் நான் எழுதிய வாசகர் கடிதங்கள் வெளியாயின.

எங்கள் இல்லத்தில் டேப்ளாய்ட் 
எங்கள் தாத்தா நவசக்தி நாளிதழ் மற்றும் போல்ஸ்டார் நாளிதழ்களின் வாசகர் ஆவார். அவர் இவ்விரண்டு இதழ்களையும் வாசிப்பார். அப்போது (1960களின் இறுதியில்) நாங்கள் அவ்விதழ்களைப் பார்த்துள்ளோம். அவற்றுள் போல்ஸ்டார் டேப்ளாய்ட் வடிவில் நாத்திகம் இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததாக நினைவு. மிகத்துணிச்சலாக தலைப்புச்செய்திகள் அதில் வெளியாகியிருக்கும்.  சிவாஜிகணேசன் நடித்து வெளியான சிவந்த மண் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் (1969), அப்படத்தின் ஒரு பாடலின் வரிகளைக் கொண்ட "ஒரு முறை நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள், சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்" என்ற தலைப்பில் அப்போதைய அரசியல் நிகழ்வினை அடிப்படையாகக்கொண்ட செய்தி வெளியானது இன்னும் என் நினைவில் உள்ளது. படித்து முடிந்ததும் எங்கள் தாத்தா அவற்றை கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியும், தெற்கு வீதியும் சந்திக்கின்ற இடத்தில் இருந்த, அப்போது காங்கிரஸ் கட்சிக்காரர்களால் நடத்தப்பெற்ற கமலா நேரு வாசகசாலையில் அந்த நாளிதழ்கள் வராத நாள்களில் அவற்றை வைத்துவிட்டு வரச்சொல்வார். அப்போது இல்லத்தில் நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்தன் பழக்கமே இன்னும் தொடர்கிறது. நவசக்தி இதழ் ப்ராட்ஷீட் வடிவில் இருக்கும். நவசக்தியில் ஒரு முறை "அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார்" என்று ஒரு குழந்தை பெருந்தலைவர் காமராஜரிடம் சொல்லி அழுத செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தி வந்த நவசக்தி நாளிதழ் தொடர்பான, ஒரு காட்சி சிவாஜிகணேசன் நடித்த எங்கள் தங்க ராஜா (1973) திரைப்படத்தில் இருக்கும். "பட்டாக்கத்தி பைரவன் விடுதலை" என்று செய்தி வாசிக்கப்படும்போது நாகேஷ் பயந்து கீழே குதிப்பார். அப்போது "அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார்" என்ற செய்தி தெரியும் நவசக்தியைக் காணலாம். 
உலகெங்கிலும் டேப்ளாய்ட் வடிவிற்கு நாளிதழ்கள் மாறிவரும் நிலையில் இந்தியாவிலும், டேப்ளாய்ட் வடிவத்திற்கு நாளிதழ்கள் விரைவில் மாறிவரும் வாய்ப்புகள் உள்ளன. இணையத்தில் இதழ் வாசிப்பு, அச்சுக்கட்டணம், அச்சு இதழ்களைப் படிப்போர் எண்ணிக்கை குறைவு போன்ற பல காரணிகளால்  தமிழ் இதழ்களும் அவ்வடிவத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

துணை நின்றவை
http://www.papersizes.org/newspaper-sizes.htm
https://en.wikipedia.org/wiki/Blitz_(newspaper)
http://suttonnick.tumblr.com/