23 November 2019

சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில்

அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் காண்போம், வாருங்கள்.

விக்கிபீடியாவில் தேவார வைப்புத்தலங்கள் பட்டியலை மேம்படுத்தும்போது தஞ்சாவூரில் சிவகங்கைப்பூங்காவில் அமைந்துள்ள குளத்தின் நடுவில் உள்ள கோயில் தளிக்குளத்தார் கோயில் ஒரு வைப்புத்தலம் என்று ஒரு நூலில் (பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) இருந்த செய்தியின் அடிப்படையில் அறிந்தேன். அவ்வாறே அதில் தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் என்ற தலைப்பில் பதிந்தேன்.

குளத்திற்கு நடுவில் உள்ள கோயில். பிற கோயில்களைப் போல எளிதில் காண்பது சிரமம்.  வாய்ப்பு கிடைக்கும்போது அக்கோயிலுக்குச் செல்ல எண்ணியிருந்தேன். 11 நவம்பர் 2019 அன்றைய தினமணி இதழில் சிவகங்கை பூங்கா குளக்கோயிலில் குடமுழுக்கு என்ற செய்தியினைக் கண்டேன். செல்லும்போதே சிவகங்கை பூங்கா குளக்கோயிலில் என்றுள்ளதே என்று யோசித்துக்கொண்டே சென்றேன். முனைவர் வீ.ஜெயபால் அவர்களிடம் குடமுழுக்கு பற்றி விசாரிக்கும்போது அவரும் வருவதாகக் கூறவே, இருவரும் சென்றோம். 

சிவகங்கைப்பூங்காவில் தற்போது மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. 

உள்ளே உள்ள படகுத்துறையில் உள்ள சிறு வாயில் வழியாக குளத்திற்குச் சென்றோம். அங்கிருந்த படிகளில் நடந்து கீழே இறங்கினோம். 



குளத்தையொட்டி அமைந்திருந்த பாதையில் நடந்தோம். நாங்கள் நடந்து சென்ற பாதையின் மேல் தொங்குபாலத்தில் முன்னர் வழக்கமாகச் சென்ற விஞ்ச் கார் நின்று கொண்டிருந்தது. குளத்தில் முன்பு ஓடிக்கொண்டிருந்த படகுகளைக் காணமுடிந்தது.
அங்கிருந்து சென்றபோது குளத்தின் நடுவே அமைந்த கோயிலுக்கு தனியாக அமைத்திருந்த பழைய பாலத்தையும், அண்மையில் குடமுழுக்கிற்காக அமைக்கப்பட்டிருந்த பாலத்தையும் கண்டோம். அதில் சென்று கோயில் வளாகம் அடைந்தோம்.  சன்னதி சற்று உயர்ந்த தளத்தில் இருந்தது.



கோயிலில் உள்ள லிங்கத்திருமேனி மிகவும் அழகாக உள்ளது. மூலவரை சிவலிங்கசுவாமி என்று கூறுகின்றனர். மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இறைவனை நிறைவாக தரிசித்தோம். அங்கிருந்தபடியே பெரிய கோயிலின் விமானத்தைக்  கண்டு தரிசனம் செய்தேன். 

திரு ஜெயபால் அவர்கள்,  அங்கிருந்த திருமதி மீரா என்கிற தனலெட்சுமி அவர்களையும், பிற சைவ அன்பர்களையும் அறிமுகப்படுத்தினார். மேலும் அவர், அக்கோயில் தளிக்குளத்தார் கோயில் அல்ல என்றும், அது தொடர்பாக பல மாறுபட்ட கருத்துகள் உள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அது தேவார வைப்புத்தலம் அல்ல என்பதை அறிந்தேன். தொடர்ந்து விக்கிபீடியாவில் புகைப்படங்களையும், கீழ்க்கண்ட கூடுதல் செய்திகளையும், என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்தேன். 

பு.மா.ஜெயசெந்தில்நாதன் :
"தஞ்சையில் உள்ளதாலும், கோயிலையுடைய குளம் ஆதலாலும் இது தஞ்சைத் தளிக்குளம் எனப்படுகிறது. இது ஒரு வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது".

குடவாயில் பாலசுப்ரமணியன்:
"சிவகங்கைக்குளம்தான் தளிக்குளம் எனக் கூறுவதற்குப் போதுமான தெளிவான சான்றுகள் இல்லை. இது எப்போது தோண்டப்பெற்ற குளம் என்பதற்கு எந்தச் சான்றும் கிடையாது. நாயக்கர் மற்றும் மராட்டியர் கால ஆவணங்களில் இக்குளம் பற்றிப் பேசப்படுகிறதேயன்றி, அதற்கு முந்தைய காலத்தியக் குறிப்புகள் கிடைக்கவில்லை. குளத்தின் நடுமேடையில் உள்ள சிவலிங்கம் பின்னாளில் வைக்கப்பெற்றதாகும். அத்திருமேனியைத் தளிக்குளத்து மகாதேவர் என்று கூறுவது ஏற்புடையாகாது"  (தஞ்சாவூர் கி.பி.600-1850, அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, ப.96)

தளிக்குளத்தார் கோயில் எது என்பதை அறிந்து விரைவில் அங்கு பயணித்து தொடர்பான பதிவினை எழுதவுள்ளேன். இறைவனின் சித்தத்தை எதிர்நோக்குகின்றேன்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அருள்மிகு சிவலிங்கசுவாமி திருக்கோயில், சிவகங்கைகுளம், தஞ்சாவூர், கும்பாபிஷேக மலரை (தொகுப்பு சிவத்திரு ஞானியார், வெளியீடு திருமதி மீரா என்கிற  தனலெட்சுமி, தஞ்சாவூர், நவம்பர் 2019) அங்கு பெறும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். இந்நூல் தஞ்சை அடியாரும் சிவத்தொண்டும், தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் சிறப்புகள், பொன்மணித்தட்டார் சரிதம், ஏழு நாள் பஞ்சபுராணப் பாடல்கள் ஆகிய உள் தலைப்புகளைக் கொண்ட தொகுப்பாக அமைந்துள்ளது.  குடமுழுக்கு நினைவாக மலர் வெளிட்டோருக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்வோம்.



16 November 2019

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம், புதுக்கோட்டை : 12-13, அக்டோபர் 2019

அண்மையில் புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு விக்கிபீடியா தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அடுத்தடுத்த பிற நிகழ்வுகளில் கலந்துகொண்ட நிலையிலும் விக்கிபீடியா நடத்துகின்ற வேங்கைத்திட்டம் மற்றும் ஆசிய மாதம் ஆகியவற்றின் போட்டிகளில் கலந்துகொள்வதாலும், இப்பதிவு வெளியிட சற்று தாமதமானது. 


பணிச்சுமை காரணமாக முழுமையாக முகாமில் கலந்துகொள்ள இயலா நிலை. முகாமின் இரண்டாம் நாளன்று (13 அக்டோபர் 2019) நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் சென்றிருந்தோம். வலைப்பூவில் எழுதும் பல நண்பர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இம்முகாம் தொடர்பாக திரு முத்துநிலவன், திரு திண்டுக்கல் தனபாலன், முனைவர் ஆ.கோவிந்தராஜுமுனைவர் அ.பாண்டியன் உள்ளிட்டோர்  பதிந்துள்ளனர். 

விக்கிபீடியாவில் ஒரு பதிவினை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை எளிய முறையில் பகிர்ந்துகொண்டேன். நான்முதலில் முகநூல் மற்றும் மின்னஞ்சலுக்குத் தனியாக கணக்கு தொடங்கும் முறைப்படி பயனர் கணக்கு தொடங்குதல், புதிய பதிவினை ஆரம்பித்தல், சொற்றொடரை அமைத்தல், உரிய மேற்கோளைத் தருதல், இணையத்திலிருந்து தரவுகளைத் திரட்டுதல், வந்த தலைப்பே வராமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளல் உள்ளிட்ட பல உத்திகளைப் பரிமாறிக்கொண்டேன். அப்பொழுதே புதிய பதிவாக, கணினி தமிழ்ச்சங்க நிறுவுநரும், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருமான திரு நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி ஒரு புதிய பதிவினை தொடங்கிக் காண்பித்தேன். (அந்தப் பதிவினை பின்னர் மேம்படுத்தி எழுதிக்கொண்டு வந்த நிலையில், அது விக்கிபீடியாவிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி வந்திருந்தது. அதற்கான காரணத்தை விக்கியின் சக நண்பர்கள் தெரிவித்து கைகொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மறுபடியும் அவரைப் பற்றி எழுதவுள்ளேன்) விக்கிபீடியாவில் எழுதுவது மிகவும் எளிமையானது என்பதை உரிய உதாரணங்களுடன் கூறினேன். நான் எதிர்கொண்ட சில சிக்கல்களையும் எடுத்துரைத்தேன். திரு என்னாரெஸ் பெரியார் அவர்களும் என்னுடன் இணைந்துகொண்டார். நான் சொல்ல மறந்த, விடுபட்ட முக்கியமான கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். கலந்துகொண்ட பல நண்பர்கள் மிகவும் எளிமையானதாக இருந்ததாகக் கூறினர். திரு நீச்சல்காரன் அவர்களைக் கண்டதில் மகிழ்ச்சி.  
இவ்வகையான முன்னெடுப்புகளுக்கு என்றும் என்னுடைய ஆதரவு என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, எனக்கு வாய்ப்பு தந்த கணினித் தமிழ்ச்சங்கத்தாருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  









இவ்விழாவில் வீதி50 நூலினை (நா.முத்துநிலவன், மேன்மை வெளியீடு, சென்னை, 2018, ரூ.110) மேடையில், திரு நா.அருள்குமரன் அவர்கள் முன்னிலையில் திரு ஆதவன் தீட்சண்யா அவர்களிடமிருந்து பெற்றேன். கவிதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல் திரு நா.முத்துநிலவன் அவர்களால் மிகவும் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வீதி நிகழ்வினை தொடர்ந்து  நடத்திவருகின்ற புதுக்கோட்டை கலை இலக்கியக் களத்தின் பணி பாராட்டுக்குரியதாகும். அமைப்பல்லாத அமைப்பு என்று கூறிக்கொள்ளும் வீதியின் நண்பர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து இதனை மேற்கொள்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.  வீதியின் பயணம் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.



இவ்வகையான முகாம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் என்னுடைய விக்கிபீடியா பணி இந்நூலில் குறிப்பிடப்பட்டதைக் கண்டேன். ".......இதில் மாணவராக வந்து பயிற்சியெடுத்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பின்னால் உதவிப்பதிவாளராகி பணி நிறைவு பெற்ற முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிபீடியாவில் எழுதி அதற்காக விருதும் பெற்று, பின்னர் நடந்த பயிற்சியில் ஆசிரியராகப் பரிணமித்ததும் நடந்தது". உண்மைதான். அதிகம் சிரமம் என முதல் வகுப்பில் நினைத்த என்னை வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினர் இதுபோன்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.  

09 November 2019

காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை : ஆர்.பரதன்



அண்மையில் நான் வாசித்த நூல் ஆர்.பரதன் எழுதியுள்ள காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை என்பதாகும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தின் பறவைப் பார்வையைக் கொண்டமைந்த இந்நூல் விருதுநகர் மாவட்ட சிறப்புகள், காரியாபட்டி வட்டார ஊர்களின் பெயர்களும், சிறப்புகளும் என்ற மூன்று தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

“வானம் பார்த்த பூமி, மழை குறைவு, நதி ஓடும் பிற இடங்களைப் போலச் செழிப்பில்லை. முட்செடிகள் மட்டும் நிறைந்த வளமற்ற பூமி என்று மட்டுமே நமது ஊர்களைப் பற்றி அறிந்திருக்கும் நம் சந்ததியினருக்கு இங்கு வாழ்ந்த நன்மக்கள், ஈகைக்குணத்துடன் கொடுத்த கொடையாளிகள், வாழ்வினை வளமாக வைத்துக்கொள்ள நல்லறிவு தந்த பெருந்தகைகள், நோய்தீர்த்த கிரம மருத்துவர்கள், புகழ்மிக்க பதவி வகித்தோரையும் இம்மண்ணுக்குப் பெருமை தேடித் தந்தவர்களையும் பற்றித் தெளிவாக எடுத்துக்கூற முற்பட்டுள்ளது வெற்றி பெற்றுள்ளது என்பதைவிட ஓர் உந்துததல் தந்துள்ளது என்று பெருமைப்படலாம்.”  என்று நூலாசிரியர் தம் மண்ணின் பெருமையையும் இந்நூலின் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறார்.

“காரியாபட்டி வட்டாரத்தின் முதன்மைத்தொழில் விவசாயமே. விவசாயம் அழிந்துவிடாமல் அதற்கென அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும். புன்செய்ப் பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு, எள், நிலக்கடலை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயிரிட வேண்டும். வானம் பார்த்த பூமியையும் வளம் கொழிக்கச் செய்யப் புன்செய்ப் பயிர்கள் நிச்சயம் உதவும்….பல ஊர்களில் இருந்து வந்த பனைஓலைத் தொழில் மீண்டும் ஊக்குவிக்கப்படவேண்டும். மண்பாண்டத்தொழில், நெசவுத்தொழில், சிற்ப வேலைப்பாடுகள், பால் பண்ணைத்தொழில் போன்ற பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தொழில்கள் மலர இளைய தலைமுறை முன்வர வேண்டும்” என்று ஆசிரியர் குழுவினர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் காரியாபட்டி வட்டாரம் ஒன்றாகும். 2228 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட இவ்வட்டாரத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 1,05,428 மக்கள் வசிக்கின்றார்கள். 1 செப்டம்பர் 1998இல் இவ்வட்டாரம் உருவாகியுள்ளது. (ப.19)

அழகியநல்லூர், அல்லாளப்பேரி, அரசகுளம், ஆவியூர், சத்திரம்புளியங்குளம், டி.கடம்பங்குளம், ஜோகில்பட்டி, கல்குறிச்சி, கம்பிக்குடி, கிழவனேரி, குரண்டி, மாங்குளம், மாந்தோப்பு, முடுக்கன்குளம், முஷ்டக்குறிச்சி,  மேலக்கள்ளங்குளம், நந்திக்குண்டு, பந்தனேந்தல், பனிக்குறிப்பு, பாப்பணம், பாம்பாட்டி, பி.புதுப்பட்டி, பிசிண்டி, எஸ்.கல்லுப்பட்டி, எஸ்.மரைக்குளம், சூரனூர், டி.செட்டிக்குளம்,  டி.வேப்பங்குளம், தண்டியரேந்தல், தோணுகால், எஸ்.தோப்பூர், துலுக்கன்குளம், வி.நாங்கூர், வக்கணாங்குண்டு, வலுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய ஊராட்சிகள், மற்றும் காரியாபட்டி, மல்லாங்கிணர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள கிராமங்களைப் பற்றிய அதன் சிறப்புகளைப் பற்றியும் நூலாசிரியர் விவாதித்துள்ளார்.  

ஒவ்வொரு ஊரின் மக்கள் தொகை, ஊரின் பெயர்க்காரணம், கல்வி நிலை, மருத்துவ வசதி, கலைஞர்கள், வாழ்ந்த பெருமக்கள் மற்றும் சான்றோர்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிப்பதோடு அந்த கிராமங்களுக்கான தேவையினையும் ஆங்காங்கே குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.

காரியாபட்டி வட்டாரத்தைப் பற்றிய ஒரு களஞ்சியமாக இந்நூல் உள்ளது. பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தகவல்களைத் திரட்டி தொகுத்துத் தந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. தேவையான இடங்களில் நிழற்படங்களும் தரப்பட்டுள்ளன. தம் மண்ணிற்கு அருமையான நூலைத் தந்து பெருமை சேர்த்துள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். ஊரின் பெருமையைவ, வரலாற்றை எழுதுவதற்கு ஒரு முன்னுதாரணமான அமைந்துள்ள இந்நூல் படிக்கப்படவேண்டியது மட்டுமல்ல, பாதுகாக்கப்படவேண்டிய ஆவணமும் ஆகும்.

இந்நூலாசிரியர் ஆர்.பரதன் காரியாபட்டியில் மனு நூல் நிலையம் என்ற பெயரில் ஒரு நூலகத்தை நடத்திவருகிறார். நம் மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் நிலையம் முற்பட்டுள்ளது என்கிறார் அவர். அவருடைய பணி சிறக்க வாழ்த்துவோம்.

நூல் : காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை
ஆசிரியர் : ஆர்.பரதன்
வெளியீட்டாளர் : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113, தொலைபேசி : 044-22452992
பதிப்பாண்டு : 2018
விலை : ரூ.140 

02 November 2019

பெரிய புராண நாடகங்கள் ஒரு பன்முகப்பார்வை : வீ. ஜெயபால்

 ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் எழுதியுள்ள பெரிய புராண நாடகங்கள்-ஒரு பன்முகப்பார்வை என்ற நூலில் வெளியாகியுள்ள என் அணிந்துரையையும், விழா நிகழ்வினையும் இப்பதிவில் காண்போம்.

அணிந்துரை

ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் எழுதியுள்ள பெரிய புராண நாடகங்கள்-ஒரு பன்முகப்பார்வை என்ற இந்நூல் பெரிய புராணத்தையும், நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நாடகம் ஓர் அறிமுகம், பெரிய புராண நாடகங்களும் வரலாற்றுக் களங்களும், காலப் பின்னணி, அரசியல் பின்னணி, சமயப் பின்னணி, சமுதாயப் பின்னணி, நாடகங்களில் நிகழ்வுகளும் கருத்து வெளிப்பாடுகளும், பெரிய புராண நாடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்புகளுடன் அமைந்துள்ளது.


நாடகம்-ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சமயங்களோடும், சமுதாயத்தோடும் நாடகங்கள் கொண்டுள்ள பிணைப்பில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரையிலான நாடக வளர்ச்சி அணுகப்பட்டுள்ளது.
பெரிய புராண நாடகங்களும் வரலாற்றுக் களங்களும் என்ற தலைப்பில் பெரிய புராணத்தின் 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார், கண்ணப்பர், எறிபத்தர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், நந்தனார், மெய்ப்பொருள் நாயனார், பூசலார், இளையான்குடி மாறனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய 11 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு நாடகங்களின் பின்புலத்தில் சுருக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
காலப்பின்னணியில் கி.பி.400-கி.பி.600, கி.பி.600-கி.பி.660, கி.பி.660-கி.பி.885 என்ற மூன்று பிரிவில் நாடங்களின் தலைமைப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்படுகின்ற 11 நாயன்மார்களும் தென்னிந்தியாவில் பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் கருத்துப்பிரச்சாரம் மூலமாக சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. 
ரசியல் பின்னணியில் 63 நாயன்மார்களில் அரசியல் தொடர்புடைய 17 பேரில் எறிபத்தர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், மெய்ப்பொருள் நாயனார், பூசலார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய ஏழு நாயன்மார்களின் கால அரசியல் செல்வாக்கு, அக்கால ஆட்சி, நிகழ்ந்த போர்கள், பிற சமயங்களின் தாக்கம்,  குடிப்பெருமை, தமிழர் வீரம் போன்றவவை, அரசியலை விளக்குவதற்கு கதை முறையும் நாடக முறையும் பழங்காலந்தொட்டே வழக்கில் இருந்துவருகின்ற கண்ணோட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.     
சமயப்பின்னணியில் சமயத்தின் இன்றியமையாமை, சைவத்தின் தொன்மை, சமணம், பௌத்தம், வைதீகம், இனக்குழு சமயம் உள்ளிட்ட சமயங்கள், பிற இலக்கியங்களில் சமயம், சமயங்களுக்கிடையேயான பூசல்கள், சைவ சமயத்திற்கு மன்னர்களின் ஆதரவு, அடியார்களின் பக்தி நெறி, சிவபெருமானின் பெருமை, திருமுறைகளின் சிறப்பு, வழிபாட்டிற்குரிய இடங்களான மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆலயம் மற்றும் அர்ச்சனைகளின் சிறப்பிடம், ஐந்தொழில், நான்குவகை மார்க்கங்கள், வழிபாட்டு முறை, அற்புதங்கள் போன்றவை குறித்தும், கதைமாந்தர்களான நாயன்மார்களின் பக்தி, எளிமை, பெருமை, இறையனுபவம் ஆகியவை குறித்தும் நாடகங்களின் துணைகொண்டு விளக்கப்பட்டுள்ளது.   
சமுதாயப் பின்னணியில் இல்லறம், திருமண வகைகள், முறைகள் மற்றும் சடங்குகள், பெண் சொத்துரிமை, நீதி, வணிகம், சமுதாயத்தில் சாதிபேதம், பண்பாடு, விருந்தோம்பல், சமயம் சார்ந்த சடங்குகள், நுண்கலைகள், பெண்களின் நிலை, ஆண் பெண் சமத்துவச்சிந்தனைகள் போன்ற பலவற்றைக் குறித்து நாடகத்தின் வழியாக நோக்கப்பட்டுள்ளது.
நாடகங்களின் நிகழ்வுகளும் கருத்து வெளிப்பாடுகளும் என்ற தலைப்பில் நாடகப்பாத்திரம், உரையாடல், உத்தி என்ற வகைப்பாட்டில் சைவ சித்தாந்தம், அன்பில் ஒருமைப்பாடு, சைவ நெறிக்குரிய முறைகள், மறத்தொண்டுகள், அன்பு நெறியின் அடையாளங்கள், ஒழுக்கமுடைமை, வீரம், தாய்மையின் இறையன்பு,  விதியின் தாக்கம், ஆண்டவனைவிட அடியார்கள் சிறந்தவர்கள் போன்ற நிலைகளில் வெளிப்படுகின்ற கருத்துகள் நாடகத்தின் வாயிலாக அணுகப்பட்டுள்ளது.
பெரிய புராண நாடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பின்கீழ் சைவ சமய நாடகங்கள் தென்னிந்திய வரலாற்றிற்கும், தமிழ் இலக்கியத்திற்கும், சைவ சித்தாந்தத்திற்கும், நாடகத்திற்கும் அளித்த கொடையினைப் பற்றி  ஆராயப் பட்டுள்ளது.
நாடகம் வாயிலாக கருத்தினை வெளிப்படுத்தும்போது நூலாசிரியர்  கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலை நிகழ்விடத்தையும் குறிப்பிட்டுத் தந்துள்ளவிதம் வாசகரை நாடகக் களத்திற்கும், நிகழ்வு நடைபெற்ற காலகட்டத்திற்கும் அழைத்துச் சென்றுவிடும் வகையில் உள்ளது.  தேவையான இடங்களில் உரிய இலக்கியச் சான்றுகளையும், பிற சான்றுகளையும் தந்து தன் கருத்தினை ஆதாரத்தோடு ஆசிரியர் முன்வைக்கும்விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வினை மேம்படுத்தி மேலும் தரவுகளைச் சேர்த்து, அது நூல் வடிவம் பெற ஆசிரியர் மேற்கொண்ட முயற்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பெரிய புராணம் என்ற பெருந்தலைப்பின் ஊடாக, நாடகம் என்ற நுணுக்கத்தை அமைத்து சமயம், சமுதாயம், வரலாறு, பக்தி, இலக்கியம் போன்ற பரிமாணங்களை காலத்திற்கேற்றவாறு நுட்பமாக அணுகித் தந்துள்ள விதம் போற்றத்தக்கதாகும். இப்பொருண்மையில் அரிதாக நூல்கள் காணப்படும் நிலையில் சைவத்திற்கும், நாடகத்துறைக்கும் ஓர் அரிய வரவாக இந்நூல் அமைந்துள்ளது.  
நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 


நூல் வெளியீட்டு விழா
முனைவர் வீ. ஜெயபால் அவர்கள் எழுதியுள்ள பெரிய புராண நாடகங்கள் ஒரு பன்முகப் பார்வை என்ற நூலின் வெளியீட்டு விழா 30 அக்டோபர் 2019 அன்று தஞ்சாவூர் இராஜராஜ சமய சங்கத்தில் நடைபெற்றது. 

திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாணன் தம்பிரான் சுவாமிகள் வெளியிட, தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறையின் முன்னாள் தலைவர் முனைவர் க.இரவீந்திரன் நூலைப் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்ட சுவாமிகள் தன் ஆசியுரையில் கூறியதாவது :  63 நாயன்மார்களின் வரலாற்றினைக் கூறும் பெரிய புராணத்திலிருந்து 11 நாயன்மார்களின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பான நூலாக இந்நூல் அமைந்துள்ளது.  பெரிய புராணத்தின் கருத்துகள் தற்காலத்திற்கும் பொருந்தி வருகிறது.  சமூகத்திற்குப் பொருத்தமான ஒரு தலைப்பை ஆய்வாக எடுப்பது சமுதாயத்திற்கு மிகவும் பயனளிக்கக்கூடியது. பொதுவாக அக்காலத்தில் வரதட்சணை என்பது மாப்பிள்ளை கொடுப்பதே தவிர பெண்ணின் பெற்றோரிடமிருந்து மாப்பிள்ளை வாங்குவது அல்ல என்பது இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற சமூக நலன் சார்ந்த கருத்துகளும், சமயம் சார்ந்த கருத்துக்களும் இந்நூலில் காணப்படுகின்றன. கண்ணப்பரின் அன்பு, எறிபத்தரின் வீரம்,திருநாவுக்கரசரின் தொண்டு, பூசலார் மனத்தில் கோயில் கட்டிய பெருமை, சிறுத்தொண்டரின் சிறப்பு என்ற நிலையில் ஒவ்வொரு நாயன்மாரின் வாழ்வும் ஒவ்வொரு முறையில் தனித்துவம்  பெற்றிருந்தபோதிலும் அனைவரும் பக்தி என்ற நிலையில் ஒருங்கிணைந்து அடியார்களாகத் திகழ்கின்றார்கள் என்பது இந்நூலில் நாடக பாணியில் உரிய மேற்கோள் மற்றும் வசனங்களுடன் தரப்பட்டுள்ளன.    

 
வரலாற்று ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் வரவேற்புரையாற்றியதோடு நூலைப் பற்றிய மதிப்புரையையும் வழங்கினார். அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி இராஜா பான்ஸ்லே, ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் தலைவர் எம்.தினேஷ்குமார், பன்னிரு திருமுறை மன்றத்தலைவர் இல.குணசேகரன், சக்தி முனியாண்டவர் கோயில் அறங்காவலர் குரு. சிவசுப்ரணியன், முனைவர் கோ.ப.நல்லசிவம்  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் முனைவர் வீ.ஜெயபால் ஏற்புரை வழங்கினார். உலகத்திருக்குறள் பேரவைச் செயலர் பி. மாறவர்மன் நன்றி கூறினார். கோயம்புத்தூர் கல்லூரிப்பேராசிரியை முனைவர் கோ.புவனேஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சைவ அன்பர்களும், பொதுமக்களும், வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தனர்.



 நூல் தொடர்பான தேவைக்கும் விவரங்களுக்கும் தொடர்புகொள்ள முகவரி:
ஞானியார் முனைவர் வீ.ஜெயபால், 28, அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009
பதிப்பு : ஆகஸ்டு 2019, விலை :ரூ.250 
மின்னஞ்சல் : vee.jayabal@gmail.com, அலைபேசி : 94439 75920

அணிந்துரை, வாழ்த்துரைகள் (12) 
1.மர்ம வீரன் இராஜராஜசோழன்,  ஓவியர் சந்திரோயம், 2005, அணிந்துரை
2.காத்தாயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு,  9.4.2009, அணிந்துரை
3.சங்ககாலச் சோழர் வரலாறு, சமுதாய, சமய, பொருளாதார நிலை, டாக்டர் வீ.மலர்விழி, 2009, அணிந்துரை
4.சோழர் காலக் கட்டடக்கலையும் சிற்பக்கலையும், டாக்டர் வீ.மலர்விழி, 2009, அணிந்துரை
5.திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம், 20ஆம் ஆண்டுநிறைவு விழா மலர், 2010-11, வாழ்த்துரை 
6.இந்த எறும்புகள், கவிஞர் அவிநா, அழகுமலை பதிப்பகம், தஞ்சாவூர், 2.6.2012, அணிந்துரை
7.கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், பிரேமா நூலாலயம், தஞ்சாவூர், அக்டோபர் 2012, வாழ்த்துரை
8.ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், தஞ்சாவூர், மார்ச் 2013, அணிந்துரை
9.சுவடிப் பாதுகாப்பு வரலாறு, முனைவர் ப.பெருமாள், 2012, வாழ்த்துரை