முகப்பு

13 January 2014

நிதான வாசிப்பு ஒரு கலை

பேட்ரிக் கிங்ஸ்லி

இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது. ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.

தாவும் மனம்
இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.

பெரும் புரட்சி
அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர். இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”

‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.

ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.

நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?
நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.

ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது. அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

முப்பது நொடிகள்தான்
தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.

பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை. அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு
நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்.

கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: பா. ஜம்புலிங்கம்


நன்றி  : தி இந்து நாளிதழ் 
 

12 January 2014

தமிழில் இந்த ஆண்டின் சொல் எது?

பா. ஜம்புலிங்கம்

அக்டோபர் 1984. இந்திரா காந்தி இறந்தபோது ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி ‘இந்திரா காந்தி அசாசினேட்டட்’ (Indira Gandhi Assassinated). அதற்கு முன் அசாசினேஷன் என்ற சொல் இருந்திருந்தாலும், இந்தியாவில் அப்போதுதான் பலருக்கும் அச்சொல் தெரியவந்தது. இச்சொல்லுக்கு அரசியல் அல்லது சமய காரணங்களுக்காக (ஒரு முக்கியமான நபரை) கொலைசெய்தல் என்பது பொருள். 1981வாக்கில் எகிப்து அதிபர் அன்வர், கெய்ரோவில் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்தச் சொல்லை முதன்முதலாகப் பார்த்த நினைவு எனக்கு. 

ஆகஸ்ட் 1997. டயானா இறந்தபோது செய்தித்தாள்களில் பிரபலமான சொல் ‘பப்பரஸி’ (paparazzi). ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்களை எடுத்து, செய்தித்தாள்களுக்குத் தருவதற்காகப் பிரபலங்களைப் பின்தொடர்ந்து செல்லும் புகைப்படக்காரர் என்பது இச்சொல்லுக்கான பொருள். 

அகராதியில் இருந்தால்கூடப் பயன்பாட்டில் அதிகமாக வரும்போதோ, பிரபலமாகும்போதோ, ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பின்னணியிலோ ஒரு சொல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறே அந்தந்தக் காலகட்டத்தில் புதிய சொற்கள் உருவாகின்றன. அவ்வகையில், 2013-ல் முக்கிய இடத்தைப் பெறும் சொல் ‘செல்ஃபி’ (Selfie). இச்சொல் அவ்வாறான இடத்தைப் பெற்ற சூழல் சுவாரஸ்யமானது. 

திரும்பிப் பார்க்க ஒரு வரலாறு
எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய கோடாக் பிரௌனி பெட்டிக் கேமரா அறிமுகமானபோது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் எட்வர்ட் பெண்மணி ஒருவர் நிலைக்கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது. 

கண்ணாடி, கேமராவின் துணையுடன் முதன்முதலாக ரஷ்யாவின் அண்டாசியா நிகோவ்லேவ்னா தன் 13-வது வயதில் புகைப்படம் எடுத்து, அதைத் தன்னுடைய கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்தப் புகைப்படத்தைக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்தபோது தன் கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். 1914-ல் நடந்தது இது. 

‘ஃபேஸ்புக் கலாச்சாரம்’ பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக ‘மைஸ்பேஸ்’-ல் காணப்பட்டது. இது 2000 கதை. 

ஆஸ்திரேலிய இணைய அமைப்பில் (ABC Online) இச்சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இது 2002 கதை. 

‘ஃபிளிக்கர்’ தளத்தில் புகைப்படப் பகிர்வில் இச்சொல் இடம்பெற்றது 2004-ல். 

இச்சொல்லைப் பற்றி புகைப்படக்காரர் ஜிம் கிராஸ் விவாதிக்கிறார் 2005-ல். 

இளம் பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘ஃபிளிக்கர்’ தளத்தில் பிரபலமாக இச்சொல் புழக்கத்தில் பரவுகிறது 2009-ல். 

கொரிய மற்றும் ஜப்பானிய செல்பேசியைக் கொண்டும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாகவும் எடுக்கப்பட்டு, ஐபோன் வழியாக நகலெடுக்கப்பட்டபோது, தானாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தன. முதலில் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த இம்முறை, நாளடைவில் எல்லோரிடமும் பரவுகிறது 2010-ல். 

மிகச் சிறந்த சொற்களில் ஒன்றாக ‘டைம்’ இதழால் இச்சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாளடைவில் அதன் பயன்பாடு உச்சத்தில் வர ஆரம்பித்தது 2012-ல். 

மே-நவம்பர் 2013. கரென் ந்யேபெர்க் விண்வெளியில் இருந்தபோது ‘செல்ஃபி’ எடுத்துள்ளார். விண்வெளியில் இருக்கும்போது தலைமுடியை எப்படிச் சுத்தம் செய்துகொள்வது என்றுகூட அவர் அப்போது செய்துகாட்டினார். 

ஜூலை 2013. டிசைனர் மற்றும் நடிகை ரிகன்னா தன்னைத்தானே இலக்கு வைத்து எடுத்த ‘செல்ஃபி’உலகின் மிசச்சிறந்த புகைப்படமாகக் கருதப்படுவதாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் வழி அறிய முடிந்தது. 

ஆகஸ்ட் 2013. இளைஞர்களுடன் போப் எடுத்துக்கொள்ளும் ‘செல்ஃபி’ உலகப் பிரபலமானது. 

நவம்பர் 2013. ஆக்ஸ்போர்டு அகராதிகளின் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ தேர்ந்தெடுக்கப்படுகிறது. “இந்த ஆண்டில் சிறந்த சொல்லாக இருக்க அச்சொல் கடந்த 12 மாதங்களுக்குள்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றோ, அது நீண்ட நாள்களாக இருந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை” என்கிறார் ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ஆசிரிய இயக்குநர் ஜுடி பியர்சல். இச்சொல்லின் பயன்பாடு வியக்கத்தக்க வகையில் 17,000 விழுக்காடு இருந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் 2013. நெல்சன் மண்டேலா இறுதி மரியாதைச் சடங்கின்போது, அமெரிக்க அதிபர் எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ படம் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகி ‘செல்ஃபி’யை உலகம் முழுக்கப் பரப்பியது. 

புதிதாகப் பிறக்கும் சொற்கள்
இப்போது ‘செல்ஃபி’யைப் போல மேலும் பல சொற்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. ‘ஹெல்ஃபி’(தன் தலைமுடியை புகைப்படமெடுத்தல்), ‘பெல்ஃபி’(தன் பின் புறத்தைப் புகைப்படமெடுத்தல்), ‘லெல்ஃபி’(தன் கால்களைப் புகைப்படமெடுத்தல்), ‘வெல்ஃபி’(உடற்பயிற்சி செய்யும் நிலையில் புகைப்படமெடுத்தல்), ‘ட்ரெல்ஃபி’(குடித்த நிலையில் புகைப்படமெடுத்தல்) என்று வரிசை கட்டி நிற்கின்றன இந்தச் சொற்கள். 

தமிழில் எந்த வார்த்தை?
ஆங்கில மொழியைப் புகழும்போதோ, இகழும்போதோ, ஒப்பிடும்போதோ ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள மறக்கிறோம். ஆங்கிலம் உலகெங்கும் பரவக் காரணம், மொழியோடு அந்தச் சமூகம் கொண்டிருக்கும் இந்தப் பிணைப்புதான். ஒரு சமூகமே சேர்ந்துதான் ஒரு மொழியை வளப்படுத்த முடியும்; வெறும் பண்டிதர்களும் பாடநூல் ஆசிரியர்களும் மட்டும் அல்ல. மொழிக்கு மேல்நாட்டுச் சமூகம் கொடுக்கும் மதிப்பின் அடையாளம்தான் ‘செல்ஃபி’ என்ற ஒரு வார்த்தை கடந்திருக்கும் பயணம். தமிழில் இப்படி எல்லாம் மொழியைப் பற்றி நாம் பேசுகிறோமா, எழுதுகிறோமா, குறைந்தபட்சம் சிந்திக்கிறோமா? வாசிப்போடும் எழுத்தோடும் முக்கியமாகப் புத்தகங்களோடும் நெருக்கமான உறவைப் பராமரிக்கும் ஒரு சமூகமே மொழியை வாழ்வாங்கு வாழவைக்க முடியும். 

தமிழில் இதுவரை இப்படி எல்லாம் சிறந்த சொற்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மொழி மீது நாம் ஒவ்வொருவரும் அக்கறை காட்டினால், அடுத்த ஆண்டு ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படலாம்!

பா.ஜம்புலிங்கம், முனைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர், தொடர்புக்கு: drbjambulingam@gmail.com

 

நன்றி  தி இந்து நாளிதழ் 

07 January 2014

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) : குடவாயில் பாலசுப்ரமணியன்

வாசிப்பை நேசிப்போமே : கும்பகோணம் கோயில்கள், தஞ்சாவூர் பெரிய கோயில், திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார்கோயில் கொடுங்கை, திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபம், திருவாரூர் தேர் என ஒவவொரு ஊரின் பெயரைச் சொல்லும்போது உடனடியாக அவ்வூரின் புகழ் பெற்ற இடங்கள் நம் நினைவிற்கு வருவது இயற்கையே. அவ்வகையில் தாராசுரம் என்றால் நம் நினைவிற்கு வருவது ஐராவதீசுவரர் கோயிலும் அங்குள்ள நாயன்மார் சிற்பங்களுமே. கல்லூரி  நாள்களில் (1975-79) அக்கோயிலுக்கு நண்பர்களுடன் செல்லும்போது கோயிலின் பல பகுதிகள் புதையுண்டும், மண்மூடியும் இருந்ததைப் பார்த்துள்ளோம். தொடர்ந்து நடைபெற்ற புனரமைப்பில் கோயிலின் பல பகுதிகள் வெளிவுலகிற்குத் தெரிய ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ச்சியுற்றோம். அக்கோயிலைப் பற்றிய ஓர் அற்புதப்படைப்பாக வெளிவந்துள்ளது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் என்னும் நூல்.

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தாராசுரம் என்று ஊரை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற பழையாறையின் சிறப்பு, இக்கற்றளியைக் கட்டிய இரண்டாம் இராசராசோழனின் சிறப்பு, . தொடர்ந்து திருக்கோயிலின் அமைப்பு மற்றும் கட்டடக்கலைச்சிறப்பு, கோஷ்ட சிற்பங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறிவிட்டு, திருத்தொண்டர் புராணத் தொடர் சிற்பக்காட்சிகளைப் பற்றிக் கூறுகிறார்.
"சேக்கிழார் பெருமானையும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற காரணத்தால், தான் பேரரசனாக முடி சூடியதும் தான் தோற்றுவித்த இராசராசபுரியின் (தாராசுரத்தின்) இராசராசேச்சரம் என்னும் திருக்கோயிலில் பெரிய புராணத்தை அப்படியே காட்சியாக வடித்து உலகம் என்றென்றும் அடியார்கள் வரலாற்றை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து போற்றுவேண்டும் என விரும்பினான். சேக்கிழார் பெருமானின் வழிகாட்டலும், ஒட்டக்கூத்தரின் உறுதுணையும் அக்கோயிலில் உள்ள கல்லெல்லாம் கவி பேசவைத்தன" (ப.93) என்று குறிப்பிடுகிறார். 

"தேவார மூவரைச் சிறப்பிக்கும் முகமாக, சிற்பக் காட்சிகளின் தொடக்கமாக விளங்கும் தடுத்தாட்கொண்ட புராண காட்சித் தொடரினை அடுத்து திருஞானசம்பந்தரின் வாழ்வின் நிகழ்ந்த அற்புதக் காட்சிகள் சிலவற்றையும், திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதக் காட்சிகள் சிலவற்றையும், அப்பர் தேவாரப்பதிகம் ஒன்றைக் காட்சிப்படுததியும் காட்டிய பின்னரே திருத்தொண்டத்தொகை பட்டியலிடும் அடியார்களின் வரிசைப்படி பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் தொடர்கின்றன" என்றும், "இவற்றில் பெரும்பாலான சிற்பங்களுக்கு மேலாக சோழர் கால கல்வெட்டுப் பொறிப்புகளில் காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளன" என்றும் கூறுகிறார் நூல்சிரியர். (ப.94)

சிற்பக்காட்சி, தொடர்புடைய பாடல் அடிகள், அதனைப் பற்றிய சிறு குறிப்பு, சிற்பம் தொடர்பான பெரிய புராண விளக்கம், சிற்ப நுட்பம்   என்ற நிலையில் பெரிய புராணச் சிற்பங்களைக் கதையுடன் ஆசிரியர் விளக்கும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. 

பல இடங்களில் பதிவுகளுக்குக் கீழ் குறிப்பிடத்தக்க சிற்பங்களின் புகைப்படங்களை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தந்துள்ளார். அடுத்து, ராஜகம்பீரன் திருமண்டபம் (பக்.304-351), மேற்தளத்து விமான மண்டப ஏழு நதித் தெய்வங்கள் மற்றும் கயிலைக்காட்சி (பக்.352-361), கங்காளமூர்த்தி மண்டபம் (பக்.378-382), வடபுறத் திருச்சுற்று மாளிகையின் சுவரில் காணப்படும் ஓதுவார் நூற்றெண்மர் (பக்.383-396), ஆடற்கலை (பக்.397-410) என பல நிலைகளில் உள்ள சிற்பங்களைப் பற்றி ஆழமாக விவாதிக்கிறார்.

நாயன்மார் சிற்பங்களில் காணப்படும் கோயில்கள் என்ற நிலையில் தில்லையம்பலம், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோலக்கா, நல்லூர்ப்பெருமணம், பழையாறை வடதளி, திருவையாறு, தில்லை திருப்புலீச்சரம், தேவாசிரிய மண்டபம் மற்றும் திருவாரூர்ப் பூங்கோயில், ஆலவாய் (மதுரை), திருப்புகலூர் வர்த்தமானீச்சரம், திருப்பழனம், திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை), திருவாரூர் திருவரநெறி, திருவாவடுதுறை, திருவொற்றியூர், அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்), திருநின்றவூர், திருவானைக்கா, கண்டியூர், அவிநாசி உள்ளிட்ட பல கோயில்களை (பக்.411-437) நம் முன் கொண்டுவருகிறார் ஆசிரியர்.

சிற்பக்களஞ்சியத்தில் அற்புதப் படைப்புகளாக உள்ள சிற்பங்களை உரிய சூழலோடு கூறும் ஆசிரியர்  (பக்.438-455). இக்கோயிலின் வழிபாட்டின் உள்ள செப்புத்திருமேனிகள், திருச்சுற்று மண்டபத்துத் திருப்பணியில் இரண்டாம் முறை கிடைத்த சோழர் காலச் செப்புத்திருமேனிகள் (பக்.456-472), வெற்றியால் வந்த கலைச்செல்வங்களாக சோழ மன்னர்கள் கொண்டுவந்த சிற்பங்கள் (பக்.473-477) ஆகியவற்றைப் புகைப்படங்களுடன் வர்ணிக்கிறார். தாராசுரம் கோயிலிலிருந்து இடம்பெயர்ந்து தஞ்சாவூர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்களையும் உரிய அழகியல் உணர்வோடு பகிர்ந்துகொள்கிறார்.

 எந்த ஒரு சிற்பத்தை நாம் நினைக்கின்றோமோ அந்த சிற்பத்தை உரிய விளக்கத்துடன் இந்நூலில் காணமுடியும். புராணக்காட்சிகள், சண்டைக் காட்சிகள், நாட்டியக்காட்சிகள் என அனைத்துவகையான காட்சிகளையும் கொண்ட சிற்பங்களைப் பற்றியும், அவற்றின் அமைப்பைப் பற்றியும் மிகவும் நுணுக்கமாக விளக்குகிறார். கோயிலைப் பல கோணங்களில் இந்நூலில் நாம் காணமுடியும்.

நூலின் முன்னுரையில் ஆசிரியர் 1970இல் தொடங்கிய தாராசுரம் கோயில் பற்றிய தன் ஆய்வு நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாகக் கூறுகிறார். இவ்வாறான தனது அனுபவத்தை இந்நூலில் அரிதின் முயன்று அனைவரும் பயனுறும் வகையில் அழகான வகையில் தந்துள்ளார். 

ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ள இந்த கலைப் பெட்டகத்தைக் காணவும், அதன் மிக நுண்ணிய கூறுகளைத் தெரிந்துகொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்நூலை வாசிப்போமே.  தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), குடவாயில் பாலசுப்ரமணியன் (அலைபேசி 9843666921), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, website: www.sdet.in, பக்.16+552+20, 2013, ரூ.1000]

(இந்நூல் 2013இல் எங்கள் இல்ல நூலகத்தில் சேர்ந்துள்ள 100 ஆவது நூல்)

01 January 2014

மனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 2014



பல இலக்கியவாதிகளும், அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் சுய சரிதை எழுதியுள்ளனர். அவ்வாறே தாம் வாழ்வில் சந்தித்த மனிதர்களையும், எதிர்கொண்ட நிகழ்வுகளையும் நினைவாற்றலுடன் அனைவருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் பலர் வாழ்வியல் அனுபவங்களை எழுதியுள்ளனர். சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுதுவது என்பது கத்திமேல் நடப்பதைப்போல. ஏதாவது ஓரிடத்தில் விடுபாடோ, மிகைப்பாடோ இருப்பின் அவை பல எதிர் நிகழ்வுகளை உண்டாக்கிவிடும். கண்ணாடியைக் கையாளுவதைப் போல கையாளும் ஆசிரியர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை உணர்த்துகிறது கே.நட்வர்சிங் எழுதியுள்ள "சிங்கங்களுடன் நடந்தபோது" (Walking with Lions : Tales from a Diplomatic Past, K.Natwar Singh) என்ற நூல். தன் வாழ்வில் பல அரிய மனிதர்களைச் சந்தித்ததாகவும், அது தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்றும் கூறும் ஆசிரியர், அவர்கள் மூலமாக தன் வாழ்வும், இலக்கும் மேம்பட்டது என்கிறார். 


50 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலில் அவர் தான் தொடர்பு கொண்ட இந்திய மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இவ்வனுபவங்கள் வித்தியாசமானதாகவும், சுவாரசியமானதாகவும், ஆவலோடு ரசிக்கத்தக்கதாகவும் உள்ளன. சில வியப்பைத் தருகின்றன. ஆங்காங்கு அவருடைய எழுத்தின் ஆற்றல் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.   இந்நூலிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
பலருடனான அனுபவங்களைப் பற்றி எழுதும் நட்வர்சிங், தான் மதிப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஃபீடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, வியட்நாம் அதிபர் வோ இங்குயென் கியாப், கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.  

ஃபீடல் காஸ்ட்ரோ
நட்வர்சிங் அதிகமாகப் பாராட்டுபவர்களில் ஒருவர் ஃபீடல் காஸ்ட்ரோ. வாழும் வரலாறு என்று அவருக்குப் புகழாரம் சூட்டும் நட்வர்சிங் அவருடனான நெருக்கத்தினை  விவாதிக்கும் விதம் படிப்பவர் மனதில் பதிந்துவிடும். "கூட்டு சேரா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காகத் திட்டமிட 1982 இறுதியில் நான் ஹவானா சென்றேன். ஆறாவது மாநாடு 1979இல் ஹவானாவில் நடைபெற்றது. அப்போது அவ்வியக்கத்தின் தலைவராக ஃபீடல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்....என்னைப் பொருத்தவரை அவர் அதிகம் மதிக்கத்தக்கவர்....1953இல் நடந்த புரட்சியின் விளைவாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. விசாரணையின்போது அவர் பேசிய பேச்சு அனைவருடைய மனதிலும் பதிந்த, மறக்கமுடியாத ஒன்று: 'எனக்குத் தெரியும், இந்த ஆட்சி அனைத்து வழிகளிலும் உண்மையை அடக்க முயற்சிக்கும்;  எனக்குத் தெரியும், என்னைச் சுவடின்றிப் புதைக்க சதி நடக்கும்; ஆனால் என் குரலை நெரித்துவிடமுடியாது; நான் தனியாக இருப்பதாக இருந்தால் கூட அது என் இதயத்திலிருந்து எழும்....என் இதயம் அதற்கு போதிய நெருப்பினைத் தரும், கோழைகள் இதனை மறுக்கலாம்...முடிவுகள் எனக்குப் பாதகமாக எடுக்கப்படலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. வரலாறு என்னை இவற்றிலிருந்து விடுவிக்கும்.' ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள். நினைக்க முடியாத ஒன்று நடந்தது. நான் தங்கியிருந்த கடைசி நாள் அவரது அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு. நான்கே சொற்கள். ஃபீடல் காஸ்ட்ரோ உங்களைக் காண உள்ளார். எனக்கோ ஒரு புறம் தயக்கம், மறுபுறம் மகிழ்ச்சி. அப்போது என் மனதில் உதித்தது இதுதான்: 'நான் அவரிடம் என்ன பேசப்போகிறேன்?'. நான் அனாவசியமாகக் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவர் மிகவும் இலகுவாகக் கேட்டார், 'கூர்க்காக்கள் யார்?  பாக்லாந்து தீவுகளில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்?'. க்யூபாவின் அதிபரிடம் கூர்க்காக்களின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறினேன்...........நான் அவரிடம் கேட்டேன்: 'மேன்மை தங்கிய ஐயா, நீங்கள் கூர்க்காக்களைப் பற்றிக் கேட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது.' அதற்கு அவர், மௌரிஸ் கர்சாக் எழுதிய அன்னபூர்ண என்ற நூலை அண்மையில் படித்ததாகவும் அந்நூலில் அவர்களைப் பற்றிய குறிப்பு இருந்ததாகவும்  கூறினார்.  இம்மாமனிதருடன் இரு முறை சந்தித்துப் பேசும் வாய்ப்பினை நான் பெற்றேன்".    

ஃபீடல் காஸ்ட்ரோ தன்னைக் காணவருகிறார் என்றவுடன் பெற்ற மன நிறைவைவிட ஒரு பிரச்சினையை அவர் தீர்த்த விதத்தை  நட்வர்சிங் பகிர்ந்துகொள்ளும்விதம் நம்மைவிட்டு ஒரு சுமை இறங்கியதைப் போல உணரவைக்கும். அதனை நட்வர்சிங் கூறக் கேட்போம். "7.3.1983 அன்று கூட்டுசேரா இயக்க மாநாட்டை அதிபர் ஃபீடல் காஸ்ட்ரோ தொடங்கிவைத்தார். அவரது வலப்புறம் இந்திரா காந்தி. இடப்புறம் நான். அந்தப் புகைப்படம் உலகில் ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களில் வெளியானது. காஸ்ட்ரோவிற்கு எதிரான கொள்கை கொண்ட நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள்கூட அப்புகைப்படத்தை வெளியிட்டது....தொடக்க விழா நிகழ்வுகள் முடிந்ததும், ஐந்து குழுக்களின் தலைவர்கள் முதன்மை அமர்வில் உரையாற்றினர். அவர்களில் ஜோர்டான் மன்னரும், பாலஸ்தீன விடுதலை இயக்க யாசர் அராஃபத்தும் இருந்தனர். அந்த அமர்வு மிக எழுச்சியான குறிப்புடன் நிறைவடைந்தது....
அப்போது ஓர் எதிர்பாராத சிக்கல்....மதிய உணவு இடைவேளையின்போது துணை பொதுச்செயலர் எஸ்.கே.லம்பா என்னை அழைத்தார். 'ஐயா! நாம் இப்போது ஒரு சிக்கலில் இருக்கிறோம். காலை அமர்வின்போது ஜோர்டான் நாட்டு மன்னர் பேசியபின்பு தான் பேச அழைக்கப்பட்ட நிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதுவதாக அராஃபத் இப்போதுதான் கூறினார். அவர் ஆகாய விமானத்தைத் தயார் நிலையில் வைக்கக் கூறியுள்ளார். அவர் புதுதில்லியை விட்டு விரைவில் கிளம்பவுள்ளார்'.  நான் உடனே இதனை இந்திரா காந்தியிடம் தெரிவித்தேன். மதிய அமர்வு வரை காஸ்ட்ரோ தலைவராக இருப்பதால் அவரிடம் இதுபற்றித் தெரிவிக்கவேண்டும் என்றேன். இந்திரா காந்தியும் அவ்வாறே செய்தார். சிறிது நேரத்தில் காஸ்ட்ரோவும் வந்துவிட்டார். காஸ்ட்ரோ அராஃபத்தை அழைக்க, அராஃபத்தும் விரைவாக  வந்துசேர்ந்தார். உணர்ச்சிவசப்பட்ட அராஃபத்தை ஃபீடல் காஸ்ட்ரோ கையாண்ட விதம் ஒரு பாடம் எனலாம். காஸ்ட்ரோ சற்றுக் கோபமாக இருந்தாலும், நிதானமாக இருந்தார்..... காஸ்ட்ரோ அராஃபத்திடம், 'நீங்கள் இந்திரா காந்தியின் நண்பர்தானே?' என்று கேட்டார். அராஃபத் இதமான, தெளிவான பதிலை  காஸ்ட்ரோவிடம் கூறினார்:  'நண்பரே, இந்திரா காந்தி என் மூத்த சகோதரி. நான் அவருக்காக எதையும் செய்வேன்.'...  காஸ்ட்ரோ, அராஃபத்தை ஒரு கல்லூரி மாணவரை எச்சரிப்பதைப் போல எச்சரித்துவிட்டு, 'ஒரு தம்பியைப் போல நடந்துகொள்ளுங்கள். மதிய அமர்வில் கலந்துகொள்ளுங்கள்' என்றார். அராஃபத், காஸ்ட்ரோவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்". காஸ்ட்ரோவின் சமயோசிதப் பேச்சால் இப்பிரச்சினை மிகவும் சுமுகமாக முடிந்தது.



நெல்சன் மண்டேலா
ஒரு பெரும் கதாநாயகராக உலகம் முழுதும் மதிக்கப்பட்டு போற்றப்படும் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா என்று கூறும் நட்வர் சிங், மண்டேலா சிறைவாசம் முடித்து 11.2.1990 அன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தபோது இந்தியா சார்பாக அவருக்கு வாழ்த்து அனுப்ப வெளியுறவுத்துறையிலிருந்து கூடுதல் செயலர் நிலையில் ஒருவர் அப்போதைய அரசால் அனுப்பப்பட்டது போதுமானதல்ல என்றும்,  அந்த மறக்கமுடியா நிகழ்வினை நினைவுகூறும் வகையில் ராஜீவ்காந்தி தலைமையிலான குழு அனுப்பப்படவேண்டும் என கட்சியில் பலர் பரிந்துரைத்ததன் பேரில் ராஜீவ் காந்தி அனுப்பப்பட்டார் என்றும் கூறுகிறார். அவர் எழுதுவதைப் படிக்கும்போது அக்குழுவில் நாமும் இருப்பதைப்போன்ற உணர்வு ஏற்படும்.  "ராஜீவ் காந்தி, நெல்சன் மண்டேலாவை 21.3.1990 அன்று சந்தித்தார். மண்டேலா அவரை அன்போடு வரவேற்றார். ராஜீவ் காந்தி பேச்சின் ஆரம்பம் இவ்வாறு இருந்தது. 'திரு மண்டேலா அவர்களே, நான் உங்களைச் சந்திக்கப் போகிறேன் என்று கூறியவுடன் என் மகள், நான் உங்களுடன் கைகுலுக்கும்போது அவளை நினைத்துக்கொள்ளவேண்டும் என்று உறுதியாகக் கேட்டுக்கொண்டாள். இப்போது அதை நான் செய்கிறேன்' என்றார் ராஜீவ்.  மண்டேலா அதனை அதிகம் ரசித்தார். பரஸ்பர அறிமுகத்திற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ராஜீவ் காந்தி தென்னாப்பிரிக்காவின் நிலையைக் கேட்டார். அதற்கு பதில் தரும் முன்பாக  தன் சிறைவாசத்தின்போது காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை மண்டேலா நினைவு கூர்ந்தார்.......ராஜீவ் காந்தி இந்தியாவின் நிலையை எடுததுக்கூறினார்........அப்போது மண்டேலாவுக்கு வயது 72, ராஜீவ் காந்திக்கு வயது 45. பேச ஆரம்பித்த சில மணித்துளிகளில் வயது வித்தியாசம் எல்லை கடந்துவிட்டது. மண்டேலா ராஜீவின் மகிழ்வுந்து வரை துணைக்கு வந்தார். பின்னர் வின்னி மண்டேலாவும் சேர்ந்துகொண்டார்....திரும்பும் வழியில் ராஜீவ் காந்தியும் நானும் பேசவேயில்லை. நாங்கள் இன்னும் மண்டேலாவின் நினைவுகளையே சுவாசித்துக் கொண்டிருந்தோம்".         

வோ இங்குயென் கியாப்
தன் அனுபவ அறிவின் ஒரு பகுதியினைப் பெறக் காரணமாக இருந்தவர் அதிபர் வோ இங்குயென் கியாப் என்று வெளிப்படையாகக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் நட்வர்சிங்.  "அதிபர் வோ இங்குயென் கியாப்பை நான் பல முறை ஹனோய், தில்லி மற்றும் கல்கத்தாவில் சந்தித்துள்ளேன்...மே 1954இல் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்த வகையில் என்றும் நிலைத்திருக்கும் புகழ் பெற்றவர் அவர்....போரில் அவர் மாசேதுங்கின் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டார்: 'எதிரி முன்னுக்குச் செல்லும்போது பின்வாங்கு, நிற்க ஆரம்பித்தால் தொல்லை கொடு, சோர்ந்துபோனால் தாக்கு, ஒதுங்க ஆரம்பித்தால் பின் தொடர்'. போரில் வெல்வது என்பது முதல் படி. போருக்குப் பின்னான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். அவர் என்னிடம் கூறினார்: 'போருக்குப் பின் நிர்வாகத்தில் ஒழுங்கு, பொருளாதாரத் திட்டம், உதவி மற்றும் புனரமைப்பு என்ற நிலையில் ஒரு நாளைக் கூட நாங்கள் வீணடிக்கவில்லை. போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் திட்டமிடாமல் போயிருந்தால் நாங்கள் தோற்றுப்போயிருப்போம். இறுதியாக, எங்கள் சிந்தனை வென்றது'....நெப்போலியன் ஒரு முறை புகழ்பெற்ற இச்சொற்றொடரைக் கூறிப் பெருமைபட்டுக் கொண்டார். : 'சூழ்நிலை! நான் சூழ்நிலையை உண்டாக்குகிறேன்'. அவ்வாறே வோ இங்குயென் கியாப் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டார், ஆனால் எவ்வித பகட்டுமின்றி. 2005இல் கடைசியாக நான் அதிபரை ஹனோயில் சந்தித்தேன். என் துணைவியாரும் உடனிருந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கௌரவிக்கும் முகத்தான் அவர் முழு ராணுவ உடையில் இருந்தார். அவரது மனைவி எங்களை உபசரித்தார். அவர் எங்களுக்கு அவருடைய கையொப்பமிட்ட நூல்களைத் தந்தார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 95. ....நான் என் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக அனுபவ அறிவினைப் பெற்றேன். அவற்றில் சில நான் வோ இங்குயென் கியாப்பிடமிருந்து பெற்றதென்றால் அது மிகையல்ல". 

டான் பிராட்மேன்
ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோது பெற்றதைவிட அதிக ஒரு மன மகிழ்ச்சியை டான் பிராட்மேனைச் சந்தித்தபோதுப் பெற்றதாகக் கூறும் நட்வர்சிங், அச்சந்திப்பின் மூலம் தன் நீண்ட நாள் கனவு நனவானதாகக் கூறி மகிழ்ச்சியடைகிறார். அதேசமயம் அவருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தான் இல்லை என்பதையறிந்து வேதனைப்படுகிறார்.  "நான் அதிபர் வோ இங்குயென் கியாப்பையும் நெல்சன் மண்டேலாவையும் பல முறை சந்தித்துள்ளேன். பிராட்மேனை ஒரே ஒரு முறைதான் சந்தித்தேன். அக்டோபர் 1989இல் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடிதங்களை நியூசிலாந்து பிரதமர்  டேவிட் லாங்கேக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் பாப் காக்கேவுக்கும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது....பாப் காக்கேவிடம் கடிதத்தை நான் கொடுத்தேன்.... அன்று மாலை காக்கே டான் பிராட்மேனுடனான விருந்திற்காக சிட்னி செல்வதாகக் கேள்விப்பட்டேன்....விமானப் பயணத்தின்போது காக்கே நட்புடன் நடந்துகொண்டார். அவர் விருந்திற்கான பிரத்தியேக ஆடையுடன் இருந்தார். விருந்தில் பேசவேண்டிய பேச்சு அடங்கிய தாளை வைத்திருந்தார். என் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் அவரிடம், பிராட்மேனை சந்திக்கமுடியுமா எனக் கேட்க எத்தனித்தேன். நான் அவ்வாறு கேட்பதற்குள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்: 'அமைச்சர் அவர்களே, நீங்கள் பிராட்மேன் விருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா?' பிராட்மேனைச் சந்திப்பது என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது....காக்கேவுக்கு நன்றி கூறினேன். தங்கும் விடுதிக்கு வந்துசேர்ந்தோம். நாங்கள் பிரதமரின் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரும் அவருடைய மனைவியும் அங்கிருந்தனர். சர் காலின் கௌட்ரேயும் உடனிருந்தார். 5 அடி 7 அங்குலம் உயரமான கதாநாயகனை ஆழ்ந்த ஈடுபாட்டோடு என் கண்கள் உற்றுநோக்கின. விருந்துக்கான ஆடையில் அவர். வழுக்கைத்தலை. 81 வயது. 'டான், இவர் இந்தியாவிலிருந்து வந்துள்ள அமைச்சர் சிங்'  என்றார் பாப் காக்கே. என் நாடித்துடிப்பின் வேகம் அதிகமானது. ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோதுகூட இவ்வாறாக எனக்கு நடந்திருக்கவில்லை. அவர் கையை நீட்டினார். நானும். ஒரே அமைதி. பின்னர் அம்மாமனிதர் பேச ஆரம்பித்தார். 'அண்மையில் நான் உங்களது ரயில்வேத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவருடைய பெயரை மறந்துவிட்டேன். மிக நல்ல மனிதர்'. அவர் மாதவராவ் சிந்தியாவைக் குறிப்பிட்டார் எனப் புரிந்துகொண்டேன். 'ஐயா, நான் உங்களை என் பள்ளி நாள் முதல் கதாநாயக நிலையில் வைத்து வழிபடுகிறேன். உங்களைச் சந்தித்ததை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்' என்றேன் நான். இவ்வாறான பேச்சினை அவர் எத்தனை முறை கேட்டிருப்பார் என நினைத்துக்கொண்டேன். ஒரு புகைப்படக்காரர் வந்தார். சற்றுத் தயங்கி,  பின் அவரிடம் உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். 'ஏன் கூடாது?' என்றார் காக்கே. புகைப்படம் எடுக்கப்பட்டது. பிரதமர், பிராட்மேன் மற்றும் அவரது மனைவி, சர் சாலின் ஆகியோரோடு நான்.  மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் அந்த புகைப்படம் வெளியானது. அதில் நான் இல்லை. நான் இருந்த பகுதி வெட்டப்பட்டிருந்தது". 

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் கதை நடந்த இடத்திற்கே, அக்காலகட்டத்திற்கே சென்றுவிடுவர். அத்தகைய தாக்கத்தை உண்டாக்கியவர் கல்கி. அவ்வாறே நேருவின் உலக வரலாறு (Glimpses of World History) நூலைப் படிக்கும்போது, அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள அரிய செய்திகள், அவரது மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு மட்டுமல்ல, படிக்கும் வாசகர்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். அவ்வாறே நட்வர்சிங்கின் இந்நூலைப் படிக்கும்போது இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு வானில் பல தூரம் சென்றும், கடல் கடந்து சென்றும் பல பெரும் தலைவர்களைச் சந்தித்ததைப் போன்ற உணர்வை இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் கிடைக்கின்றது என்பது முற்றிலும் உண்மை.     

இக்கட்டுரை தினமணி புத்தாண்டு மலர் 2014 திருச்சி பதிப்பில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை அம்மலரில் வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி-பா.ஜம்புலிங்கம்.