முகப்பு

28 April 2014

மந்த்ராலயமும் ஹம்பியும் : பாக்கியவதி ஜம்புலிங்கம்*

தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்களது குழுவில் 25 பேர் குடும்ப உறுப்பினர்கள் சென்றோம். தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை மெயிலில் மந்த்ராயலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்கிருந்து மூன்று வேன்கள் மூலம் மந்த்ராலயம் சென்று சேர்ந்தோம்.

முதல்நாள்-மந்த்ராலயம்: 
ராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அன்னத்தைப் பெற்று ஓரிடத்தில் அமர்ந்து உணவு உண்ணல், அருமையான பராமரிப்பு என்று ஒவ்வொன்றையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
 
 

 தொடர்ந்து இரவு மந்த்ராலயத்தில் தங்கத் தேர், வெள்ளித் தேர் மற்றும் மரத்தேர் என மூன்று தேர்களில் ராகவேந்திரரின் திருவுருவம் வைக்கப்பட்டு வந்த அருமையான காட்சியைக் கண்குளிரக் கண்டோம்.டிசம்பர் 31-ம் தேதி இரவு 12 மணி. மந்த்ராலயத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வாண வேடிக்கை. மந்த்ராலய வளாகத்தில் புத்தாண்டு இனிமையாக உதயமானது. மறுநாள் அருகேயுள்ள கோயில்களைப் பார்ப்பது என முடிவெடுத்தோம்.

இரண்டாம் நாள்-மந்த்ராலயத்திற்கு அருகேயுள்ள இடங்கள்:
புத்தாண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்தில் அருகில் உள்ள இடங்களுக்குச் சென்றோம். அதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு ராகவேந்திரர் 13 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்றோம். அமைதியான சூழல்; அருகே துங்கபத்திரை நதி, அந்த நீரின் சலசலப்பும், காற்றும் மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பின்னர் பிச்சாளி கோயில் சென்றோம். 

 




தமிழ்நாட்டில் நாமக்கல் மற்றும் சுசீந்திரம் போன்ற இடங்களில் உள்ளதைப் போல பெரிய ஆஞ்சநேயராக இருக்கும் என நினைத்துக் கொண்டு சென்றோம். மலை மீது அவ்வாறான அமைப்பு இருப்பதாகக் கூறினர். தனியாக ஆஞ்சநேயர் பெரிய சிலையாகக் காணப்படவில்லை. பின்னர் உருகுந்தா நரசிம்மர், முதுகுலதொட்டி ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் சென்றோம்.அடுத்து ஆடோனியில் உள்ள கோயிலுக்குச் சென்றோம். கோயில் மலைமீது இருந்தது. மலைமீது ஏற சிரமமாக இருந்தது. சிலர் மட்டும் மலைமீது ஏறினர். எங்களில் சிலருக்குப் போக ஆசை இருந்தபோதும், மலை மீது ஏற முடியவில்லை. பின்னர் சலவைக்கல்லால் ஆன மிகமிக அழகான பார்சுவநாதர் எனப்படும் சமணர் கோயில் சென்றோம்.  பின்னர் பசவத்தொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். இப்பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் ஆஞ்சநேயர் கோயில்களைக் காண  முடிந்தது.

 மூன்றாம் நாள்- ஹம்பி: 
உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்ற வார்த்தைகளுடன் ஹம்பி பற்றிய விளம்பரத்தை நான் பத்திரிகைகளில் பார்த்ததுண்டு. ஆனால் அந்த ஊருக்கு இப்போது நேரில் போகப்போகிறோம் என எண்ணியபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

 ஆந்திரத்திலிருந்து கர்நாடகாவிற்குள் நாம்  நுழைவதாக செல்போனில் செய்தி வந்தது. மிகக் குறுகிய நேரத்திற்குள் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்குள் வந்துவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. பெயர்பலகைகள் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என மாறி மாறி கண்களில் தென்பட்டுக்கொண்டே இருந்தன. வேன் டிரைவர் உதவும் மனப்பான்மையுடையவராகவும், கேட்கும் விவரங்களைக் கூறுபவராகவும் இருந்தார். ஐந்தாறு மொழிகளைத் தெரிந்து வைத்திருந்த அவர் தமிழில் நன்றாகப் பேசினார். துங்கபத்திரா நதியைத் தாண்டினால் ஹம்பி என்றும், அந்த எல்லை வரை கொண்டு வந்துவிட்டு, பின்னர் அங்கு காத்திருப்பதாகவும் கூறினார். செல்லும் வழியில் கருங்கற்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளைக் கண்டோம். செங்கற்களைக் காண்பது அரிதாக இருந்தது. செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள். ஆங்காங்கே பெரிய பெரிய கூழாங்கற்களைக் தெளித்துச் சிதறிவிட்டது போல மலைகள்.

சிறிதும் பெரிதுமான மலைகள். ஹம்பி செல்வதற்கு படகில் ஏறி துங்கபத்திரா நதியைக் கடக்க வேண்டியிருந்தது. படகில் செல்லும்போதே விருப்பாட்ஷா சிவன் கோயில் எங்களுக்குத் தெரிந்தது. படகைவிட்டு இறங்கி முதலில் விருப்பாட்ஷா கோயில் சென்றோம்.

 தமிழகக் கோயில்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தாலும், துங்கபத்திரா நதிக்கரையோரம் உள்ள விருப்பாட்ஷா கோயில் மிகவும் அழகாக இருந்தது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் உள்ளே நுழைந்ததும் வலப்புறம் கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கும் ஆர்வம் வரவே, சென்று போய்ப் பார்த்தோம். எங்களால் நம்ப முடியாத ஒன்றை அங்கு கண்டோம். அக்கோயிலின் ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக அங்கே தெரிந்தது.





 
 





 


 




 


இடப்புறம் பெரிய கல் தொட்டி, பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கோயில் தரிசனம் முடித்து வெளியே வந்தோம். கடல் கல் கணேஷ் என அழைக்கப்படும் ஒரே கல்லில் ஆன பெரிய பிள்ளையார், கடுகு கல் கணேஷ், கிருஷ்ணர் கோயில், தரையின் கீழ் தளத்தில் இருந்த பாதாளலிங்கம் எனப்படும் சிவன் கோயில் (லிங்கம், நந்தி அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில்) ஒரே கல்லால் ஆன அற்புதமான நரசிம்மர் சிலை, நாணயம் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம், ராணி குளியல் அறை (ஏறக்குறைய சிறிய குளம் போல உள்ளே அமைப்பு, ஆங்காங்கே சிறிய மண்டபங்களுடன், மேல் தளம் எதுவு மின்றி), யானை கட்டும் இடம், வாசற்புறம் மொட்டையாக இருந்த சமணர் கோயில், அவ்வாறே ஒரு ராமர் கோயில், நாற்சதுர வடிவிலான மிக சிறப்பாக படிக்கட்டுகள் அமைந்த குளம் ஆகியவற்றைப் பார்த்தோம்.




  பிறகு கல் தேர் பார்த்தோம். இந்த கல் தேரை விளம்பரங்களிலும் திரைப்படக் காட்சிகளிலும் பார்த்த நினைவு எனக்கு வந்தது. அந்த கல் தேர் ஏழு பாகங்களைக் கொண்டதாகக் கூறினர். படிக்கட்டுகள் சிறப்பாக அமைந்த குளமும், கல் தேரும் எங்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டன.

 

 நாங்கள் ஆட்டோவில் போகும்போது எங்கு பார்த்தாலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் அமைப்புகள், அழிந்து போன மண்டபங்கள், சிதைந்த சிலைகள் என்ற நிலையில் பலவற்றைக் கண்டோம். ஆட்டோ கிளம்பிய இடமான விருப்பாட்ஷா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் படகில் மறுபடியும் திரும்பி துங்கபத்திரை நதியைக் கடந்தோம்.


அங்கிருந்து ஆட்டோவில் சிறிது தூரம் சென்றபின் படகில் நவ பிருந்தாவன் எனப்படும் இடத்திற்கு சென்று வந்தோம். துளசி மாடம் போன்ற அமைப்புடன் அங்கு காணப்பட்டது. நவபிருந்தாவன் பார்த்தபின் அங்கிருந்து எங்களது வேன் பயணம் தொடர்ந்தது. மந்த்ராலயம் மட்டுமே செல்ல திட்டமிட்டு பின்னர் ஹம்பியும் சென்று பார்த்தது எங்கள் மனதிற்கு நிறைவைத் தந்தது.


*என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதி தினமணி இதழில் கடந்த ஆண்டு வெளியான கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.

நன்றி : தினமணி, 28.4.2013
புகைப்படங்கள் : திருமதி கண்மணி இராமமூர்த்தி

20 April 2014

வாழ்வில் வெற்றி

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16.8.1982இல் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த நான் வார, மாத இதழ்களில் வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்து அப்பணியினைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். எனது முதல் வாசகர் கடிதம் 15.9.1983இல் வெளியானது. உடனுக்குடன் கதைகள், பிற செய்திகளைப் படிப்பது, அதுபற்றிக் கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. இதன்மூலம் பெரும்பாலான செய்திகளை ஆழ்ந்து நோக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் எழுதும் ஓரிரு வரிகள், வார்த்தைகளை அப்போது இதழ்களில் படிக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவு வாசகர் கடிதங்களை எழுதுவதுடன் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றை எழுதும் ஆர்வம் எழுந்தது. கருத்துக்களை மேம்படுத்திக் கொள்ளவும், வெளிக்கொணரவும் இதனை ஓர் வாய்ப்பாக நான் உணர்ந்தேன்.சிறுகதைகள் நூலாக வடிவம் பெற்றபோது மனதில் ஒருவகையான நிறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் இருந்த ஆர்வமும், படியாக்கம் என்ற நிகழ்வின் மீதான ஆர்வமும் பிற நூல்கள் வரக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் வாசகர் கடிதத்தில் தொடங்கிய பயணம்.......
100க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் 
ஆறு நூல்கள்
60க்கும் மேற்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
27 புத்தர் மற்றும் சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்புகள்
130 பத்திரிக்கை நறுக்குகள் :
முதல் பத்திரிக்கை நறுக்கு (தினமலர், 17.6.1999)

தமிழ்/ஆங்கில இதழ்களில் மேற்கோள்கள்
முதல் மேற்கோள் (The Hindu 24.11.2000)
தமிழ்க்கட்டுரையில் முதல் மேற்கோள் (காலச்சுவடு, ஜூலை 2004)
ஆங்கிலக்கட்டுரையில் முதல் மேற்கோள் (Outlook, 19.7.2004) 

தமிழ்/ஆங்கில இதழ்களில் பேட்டிகள் 
தமிழ் நாளிதழில் முதல் பேட்டி (தினமணி, 6.1.2008)
ஆங்கில நாளிதழில் முதல் பேட்டி (Times of India, 29.10.2012) 


தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள்
ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி, 22.4.2010)
படிப்போம் பகிர்வோம் (தினமணி, 22.4.2013)
தமிழில் இந்த ஆண்டின் சொல் எது? (தி இந்து, 12.1.2014)
நிதான வாசிப்பு (மொழிபெயர்ப்பு) (தி இந்து, 13.1.2014)

இரு வலைப்பூக்கள்
சோழ நாட்டில் பௌத்தம்
முனைவர் ஜம்புலிங்கம்

இவ்வாறாக என்னை எழுதவைத்ததோடு மட்டுமன்றி களப்பணியில் ஈடுபட வைத்து ஓர் ஆய்வாளனாக உருவாக்கியது 32 ஆண்டுகளாக மேலாக நான் பணியாற்றிவருகின்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நன்றி கூறும் இவ்வினிய வேளையில் எனது நூல்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றேன்.    

பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46
முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து:
"ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது. ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம் பிடித்துக் கொள்ளும் திறன் கைவசம் இருக்கிறது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக்கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும்...இந்தச் சித்து விளையாட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை..."

"கதைகள் நன்றாக இருக்கின்றன. நன்றாக என்றால் எப்படி? கொஞ்சம் உறைப்பது மாதிரி, கொஞ்சம் நறுக் சுறுக்கோடு சுரணை வருவதற்காகக் கிள்ளுவது மாதிரி...அதுவும் அப்பாவியாக இருந்துகொண்டு நான் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே அனாயாசமாகக் கிள்ளுவது மாதிரி...."


என்னுடைய முதல் நூலான வாழ்வில் வெற்றி, மின்னூலாகவும் வெளிவந்துள்ளது.   

Judgement Stories of Mariyathai Raman (Tr),  New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate, Ambattur,  Chennai 600 098, November 2002, I Edition, Rs.30

Tantric Tales of Birbal (Tr), New Century Book House (P) Ltd, November 2002, I Edition, Rs.45
Jesting Tales of Tenali Raman (Tr),  New Century Book House (P) Ltd,  October 2005, I Edition, Rs.50
Nomadic Tales from Greek (Tr),  New Century Book House (P) Ltd, May 2007, I Edition, Rs.25
From the Preface of Nomadic Tales from Greek:
".........He (Dr B Jambulingam) is having a flair for translation. His translation work includes the Tamil books of Mullai P.L.Muthiah into English (Mariyathai Raman Theerppu Kathaikal, Birbal Thanthira Kathaikal and Tenali Raman Vikata Kathaikal). Now the author successfully translated the book Greekka Nadodi Kathaikl written in Tamil by C.S.Subramanian into English under the title Nomadic Tales from Greek.....He is a man with a multidimensional outlook who needs encouragement to proceed further with his liteary and academic activities.We hope that this book written by him will go a long way in achieving this ambition....."

தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50
 என்னுரையிலிருந்து:
"1997 மார்ச் 16 நாளிட்ட The Week இதழில் "You can be cloned" என்ற தலைப்பில் முதன்முதலாகப் படியாக்கம் தொடர்பான அட்டைப்படக் கட்டுரை வெளியாகியிருந்தது. அறிவியல் வரலாற்றில்  ஒரு புதிய சாதனையான அந்தச் செய்தியைப் பார்த்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் அதிர்ச்சி. அதன் நன்மை தீமைகளைப் பற்றிய ஒரு அலசலே அதற்குக் காரணம். இத்தகைய ஒரு வரலாற்று நிகழ்வைத் தமிழில் மொழிபெயர்க்க விழைந்தேன்......தமிழில் அறிவியல் செய்தி வெளிவர வேண்டும் என்ற நோக்கமும், ஆங்கில மூலத்திலிருந்து அதிகமான செய்திகளைக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வமும் என் முயற்சிக்கு விறுவிறுப்பைத் தந்தது......  

தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து:
"வரலாற்று ஆய்வுக் களங்களிலும், அறிவியல் ஆய்வுக் களங்களிலும் தனித்த முத்திரையைப் பதித்துவரும் நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் இவ்வரிய நூலை பெரிதும் பாராட்டும்வண்ணம் உருவாக்கியுள்ளார். படியாக்கம் குறித்த அறிவியல் செய்திகளை இளம் மாணவர்களும், அறிவியல் ஆர்வலர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலை உருவாக்கியுள்ளார். படியாக்கம் என்னும் இந்நூல் அறிவியல் தமிழுக்கு ஒரு புது வரவாகத் திகழ்கிறது....."

படியாக்கம் நூலுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் அளித்த பாராட்டுக்கடிதம்

படியாக்கம் நூலுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அளித்த பாராட்டுக்கடிதம்



தஞ்சை மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் நண்பர்கள் திரு தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ள நூலில் தஞ்சை மாவட்டத்தில் சமண சமய வரலாற்றினை ஆராய்கிறது.  (நூலைப் பெற முகவரி : ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர், அலைபேசி 94434 76597, 2018, ரூ.130)

விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகளை எழுதியபோது பெற்ற அனுபவங்களைக் கொண்டு விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் என்ற தலைப்பில் அமேசான் மூலமாக வெளியிட்டுள்ளேன். இந்நூலில், விக்கிப்பீடியாவில் பதிவுகளை எழுதும்போது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். புதிதாக விக்கிப்பீடியாவில் எழுத வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு அண்மையில் நூல் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, அலைபேசி 98426 47101) வடிவம் பெற்றுள்ளது. 


என்னுடைய நூல்கள்

1) வாழ்வில் வெற்றி, பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46
2) Judgement Stories of Mariyathai Raman (Tr), New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate,
Ambattur,  Chennai 600 098, November 2002, I Edition, Rs.30
3) Tantric Tales of Birbal (Tr), NCBH, November 2002, I Edition, Rs.45
4) Jesting Tales of Tenali Raman (Tr), NCBH,  October 2005, I Edition, Rs.50
5) Nomadic Tales from Greek (Tr), NCBH, May 2007, I Edition, Rs.25
6) படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50
7) தஞ்சை மாவட்டத்தில் சமணம்தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் உடன் இணைந்து,  ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்,
அலைபேசி 94434 76597, 2018, ரூ.130
9) சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112,   அலைபேசி 9842647101, செப்டம்பர் 2022, ரூ.1000

 --------------------------------------------------------------------------------------------------
  இன்று (20.4.2014) எங்கள் (ஜம்புலிங்கம்-பாக்கியவதி) பேரனுக்கு
(மகன் திரு பாரத்- மருமகள் திருமதி அமுதா)
தமிழழகன்
பெயர் சூட்டு விழா
 --------------------------------------------------------------------------------------------------
21 ஜனவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது./

12 April 2014

செம்மேகம் : கலியுகன் கோபி

திரு. கலியுகன் கோபி
பேச்சும் சிந்தனையும் கவிதையாகக் கொண்டுள்ளவர் நண்பர் கலியுகன் கோபி. தொழிலாளர்களுக்கான செங்கவிதைகள் என்ற நிலையில் அவர் எழுதியுள்ள செம்மேகம், கவிதை உலா என்ற கவிதைத்தொகுப்புகளைப் படித்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு படித்த கவிதைகளும், பிற இதழ்களில் வெளிவந்த கவிதைகளும் இவ்விரு தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. சுமார் 50 கவிதைகளைக் கொண்ட செம்மேகம் கவிதைத் தொகுப்பில் உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிய கவிதைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கவிதைகளில் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக உள்ளது. நெற்றி வியர்வை நீரால் நிலத்தை நனைத்துக் குளிரவைக்கும் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தொகுப்பை அவர் சமர்ப்பணம் செய்துள்ளார். குறிப்பிட்ட சில கவிதைகளை நாம்  பகிர்வோம்.


"காவிரி நதியெனப் பெருகி
கழனி யெங்கும் செழித்து
உழவர் தம் குடிசைகளில்
கும்மாளம் கண்டு மகிழ சித்திரை மகளே வருக.." (சித்திரை மகளே, ப.14)

"வள்ளலார் முறை வகுத்தார்
வள்ளுவர் புலால் மறுத்தார்
வயிறு வளர்த்தால் தொந்தி
வரம்பு மீறினால் வாந்தி" (உணவு, ப.16)

"உலகத்தொழிலாளர்கள்
கட்டி வைத்த 
அன்புப்பாசறை!.......
எட்டு மணி வேலை கேட்ட
சிகாகோ தோழர்களின்
சரித்திர முத்திரை" (செங்கொடி, ப.21)

"எவ்விரு மேகங்கள்
வந்திங்கு மறைத்தாலும்
எத்தனை இடர்கள்
தந்திங்கு வெறுத்தாலும்
தளரமாட்டோம்" (ஆர்ப்பரிப்போம்!..., ப.24)

"காலங்கள்
காலடியின் கிடக்கும்போது
கண்கள் கனவுகளில்...!
விழித்தபோது
கால்கள்
காலங்களைத் தேடித்தேடி!" (கனவுகளும் காலங்களும், ப.32)

"அவநம்பிக்கைப் புயல்
வீசும்போது
அஞ்சாமல் 
எதிர்த்து நில்
போராட்டத்தின் முடிவில் 
வெற்றிக்கோப்பைகள்
வரவேற்கும்" (வெற்றியின் அழைப்பு, ப.52)

(செம்மேகம், கலியுகன் கோபி, இலக்கிய உயராய்வு மய்யம், சத்திரம் தெரு, நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, ஆகஸ்டு 2012, ரூ.40)


கவிதை உலா கவிதைத்தொகுப்பு செம்மேகம் தொகுப்பிலிருந்து சற்று மாறுபட்டது. பலவகையான தலைப்புகளில் சுமார் 40 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள், தமிழ்மொழி, தாய்நாடு, பல்வேறு உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள்  என்ற பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் தன்னம்பிக்கையை வளர்ப்பவனாக உள்ளன. உலகத்தமிழ் நெஞ்சங்களுக்கு இத்தொகுப்பை ஆசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். சிலவற்றை நாம் இங்கு ரசிப்போம்.

"எண்ணங்களை விலைபேசாது
வண்ணங்களிடம் மண்டியிடாது!
அச்சுறுத்தலுக்கு அஞ்சாது
மாற்றுக் கருத்துக்களைத் தூற்றாது!"
(கொள்கைகள்)
"மேடுபள்ளங்கள் தள்ளிவிடும்
பயணம் தொடருவேன்!
துரத்தித்துரத்தி காலம் விரட்டும்
காயப்படுவேன்...
சிந்தனைகள் புதிய பாதையில்
இலட்சியம் வகுக்கும்
நிமிர்ந்திடுவேன்!"
(இலட்சியப்பயணம்)
"வாழ்க்கைத் தோட்டத்தில்
வண்ண வண்ணப் பூக்களாய்
வகை வகையாய்
நூல்கள் பூத்திருக்கும்.....
அதில் தேனாய் 
தேங்கியிருக்கும் நல்லொழுக்கம்!"
(கல்வியும் ஒழுக்கமும்)

"சாமான்ய மக்களுக்கும் செல்வாக்கு கோரி
வாதாடி வெற்றிகண்ட வழக்கறிஞர்!
மூடப்பழக்கத்து சிறைகளில் முடங்கியோரின்
கதவுப்பூட்டைத் திறக்கவந்த சாவியானவர்!"
(அரசியல் சிந்தனையில் சிங்காரவேலனார்)

"சிதறிய முத்துக்களாய்
நிலை மறந்திருந்தபோது
அதனைக் சோர்த்து
சரமாக்கியவனே....
உதிரிப்பூக்களாய் கிடந்தவர்களை
மாலையாய்த் தொடுத்து
மணம் நுகர்ந்தவனே
மகாகவியே!"
(மகாகவி பாரதியார்)

"தலைகனங்கொண்டோரை
தமிழ்ப்பாட்டால்
தலையிலடித்தது
உன் எழுதுகோல்....!
நீ பட்ட கடனும்
நீவிட்ட கண்ணீரும்
வறுமை தந்த தொல்லைகளும்
வரம்புக்கா உட்பட்டது!"
(கவியரசர் கண்ணதாசன்)

(கவிதை உலா, கலியுகன் கோபி (அலைபேசி 9487155909), ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்க அறக்கட்டளை, 47, குமரன் கோவில் தெரு, கடலூர் துறைமுகம் 607 003, சூன் 2011, ரூ.25)