முகப்பு

22 June 2014

தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் : அழகிரி விசுவநாதன்

கடந்த மார்ச் 2014இல் 83வயதினை நிறைவு செய்த, வலைப்பூ வாசகர்களுக்கு முன்னரே அறிமுகமான, ஐயா அழகிரி விசுவநாதன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "எனது ஒன்பதாவது புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. உங்களுக்கு அப்புத்தகத்தைத் தர விரும்புகிறேன். வரமுடியுமா?". ஐயாவைப் பார்க்கச் சென்றேன். தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் என்ற தனது புதிய நூலைக் கொடுத்தார்.

ூலின் முகப்புப்பக்கம்


"படிப்பவர்களைக் கண்டால் பெருமையாக இருக்கிறது. எழுத்தார்வம் உள்ள உங்களிடம் புத்தகத்தைத் தருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகத்தைப் படித்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள், நண்பர்களிடம் கூறுங்கள். அவர்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கக் கூறுங்கள். நான் இது தொடர்பான கருத்துக்களை அறியவிரும்புகிறேன்" என்றார். அவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டு, எழுதுவதாகக் கூறினேன். விடை பெறும் போது அவர் என்னிடம், "என்னுடைய அடுத்த புத்தகம் தஞ்சாவூரில் 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வோடு கற்பனை கலந்து எழுதப்படுவதாகும். நூலின் தலைப்பு என்ன தெரியுமா?" என்று கேட்டுக்கொண்டு சற்று நேரம் இடைவெளிவிட்டு "அது ஒரு மர்ம நாவல், அதன் தலைப்பு கண்ணெதிரே ஒரு மோகினிப்பிசாசு. அடுத்த சந்திப்பில் அந்த நாவலைப் பற்றி விரிவாகப் பேசுவோம் என்றார்." என்றார். தன் 10ஆவது நூலை எழுதத் தயாராகும் ஐயாவிடம் நன்றி கூறி  விடை பெற்றேன்.

ஐயாவின் கையொப்பத்துடன் அன்பளிப்புப்படி
84 வயதில் பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதிவரும் அவர், இந்நூலில் தமிழ் மொழியின்மீதான தன்னுடைய பற்றை வெளிப்படுத்துகிறார். 20 பக்கங்கள் கொண்ட சிறிய நூலாக இருப்பினும் அந்நூலில் அவர் தந்துள்ள கருத்துக்கள் சிந்திக்கப்படவேண்டியவையாக உள்ளன. அற்புதமான எண் ஒன்பது என்பார்கள் (பக்கம்1-6), மகளிருக்கு மரியாதை (பக்.7-11), தாய், தாயி ஆயி ஆகிய சொற்கள் (பக்.12-13), காயம், ஈரங்கி, ஏட்டு முதலிய சொற்கள் (பக்.14-19) என்ற நான்கு தலைப்புகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளன இந்நூல்.
ூலின் பின் அட்டை
ஒன்பது அல்ல, ஒட்டு
"அற்புதமான எண் ஒன்பது என்பார்கள். எந்த எண்ணால் நாம் ஒன்பதை பெருக்கினாலும், முதல் எண்ணையும் அடுத்த எண்ணையும் கூட்டினால் ஒன்பதே வரும். அதுதான் எண் ஒன்பதின் தனித்தன்மை எனலாம்.... ஆனால் தமிழில் ஒன்பது என்றால் 9 அல்ல, 90யைக் குறிக்கும். அதாவது 9 x 10 = 90. தொண்ணூறு என்றால் தமிழில் 90யை மட்டும் குறிக்கிறது. ஆனால் இது 9 x 100 = 900யைக் குறிக்கவேண்டும்.  தொள்ளாயிம் என்றால் தமிழில் ஒன்பது நூறுகளை மட்டும் குறிக்கிறது. அது ஒன்பது ஆயிரத்தைக் குறிக்கவேண்டும்.... ஒன்பது என்ற சொல்லை இனி ஒட்டு என்ற சொல்ல வேண்டும். இது இப்படி சரியாக இருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒட்டு, பத்து என்க...." (பக்.2-3).

வந்தாள் அல்ல, வந்தாளர்
"சத்தியமூர்த்தி வந்தான் என்று சொல்கிறோம். சத்தியமூர்த்தி கொஞ்சம் வயதானவராக இருந்து நாம் அவரை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று நினைத்தால் சத்தியமூர்த்தி வந்தார் என்று சொல்றோம். வந்தார் என்பது ஆண்பால் வினைச்சொல். அதே மாதிரி பெண்களைக் குறிக்கும்போது சரோஜா வந்தாள் என்கிறோம். சரோஜா கொஞ்சம் வயதானவராக  இருந்து மரியாதையாக அழைக்கவேண்டும் என்று விரும்பினால் சரோஜா வந்தார் என்று பேசுகிறோம், எழுதுகிறோம். வ்ந்தார் என்பது ஆண்பால் வினைச்சொல். ஆகையினால் சரோஜா வந்தாளர் என்று சொல்ல வேண்டும்........ மஞ்சுளா நன்றாகப் பாடினாள் என்பதை மரியாதையாக மஞ்சுளா நன்றாகப் பாடினாளர் என்று சொல்ல வேண்டும்.வாசகர்கள் என் கருத்தை ஒத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். அதற்காகத்தான் இந்த கட்டுரை, இந்தப் புத்தகம் எனலாம்".(ப.11).
 
ஆசிரியரின் பிற நூல்கள்
தாய், தாயி, ஆயி
"தாய் என்றால் என்ன பொருள் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்? அன்னை, அம்மா, நம்மைப் பெற்றவர் என்றும் பொருள்படும். சின்னக்குழந்தைகள் நமது கிராமங்களில் தனது பாட்டிகளை அம்மாயி என்று சகஜமாக அழைக்கின்றன. அதற்கு என்ன பொருள்? அம்மாவின் அம்மா (பாட்டி). அப்பாவின் அம்மா (இன்னொரு பாட்டி) என்று அர்த்தம். அதைப்போல் அம்மப்பா (தாத்தா) அப்பப்பா (இன்னொரு தாத்தா) என்று அழைத்தால் என்ன? சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.........இன்று  பேச்சுத்தமிழில் இருக்கும் அம்மப்பா (தாத்தா) அப்பப்பா (இன்னொரு தாத்தா) இந்த இரண்டு சொற்களையும் எழுத்துத் தமிழில் கொண்டுவரவேண்டும்....."(ப.13). 
காயம், ஈரங்கி, ஏட்டு
"......ஆறு வருஷமா கிளார்க்கா வேலைபார்க்கிறான் என்றார் மாப்பிள்ளையின் தந்தையார்.
அப்படியென்றால் வேலை காயம் ஆகியிருக்குமே? என்று இழுத்தாள் மூதாட்டி.
Confirmation தானே கேட்கிறீங்க? வேலை காயமாகி 4 வருடமாச்சி.....இந்த இடத்தில் காயம் என்றால் confirmation என்று பொருள்படும்....இந்த ஆங்கில வார்த்தை மருவி காயம் என்றுத் தமிழில் வழங்குகிறது. இதை நாம் திசைச்சொல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்....."(ப.15).

"........ஈரங்கி, ஈரங்கி என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? Hearing என்ற ஆங்கில வார்த்தையின் மரூஉதான் ஈரங்கி என்பது..........ஈரங்கி என்றால் என்றைக்கு வழக்கு விசாரணை என்று பொருள். இந்த ஈரங்கி என்ற வார்த்தையையும் திசைச்சொலலாக நாம் தமிழில் சேர்த்துக்கொள்ள வேண்டும்....."(ப.15).

"......ஏட்டு என்ற சொல்லை நாம் காவல்துறை வட்டாரத்தில் அடிக்கடி கேட்கக்கூடும். ஏட்டு என்றால் Head Constable என்று பொருள் தரும். கான்ஸ்டபிளுக்கு மேலே இன்ஸ்பெக்டருக்குக் கீழே உள்ள ஒரு பதவி இது. ஹெட் கான்ஸ்டபிள் என்ற சொல் மருவி ஏட்டு ஆகிவிட்டது. இதையும் திசைச்சொல்லில் தமிழில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.........."(ப.16).

"....இந்த சொற்களை அகராதியில் (Dictionary) சேர்க்கும்போது வளைவுக்குறிக்குள் (Bracket) என்னுடைய பெயரைப் போடவேண்டும். எப்படியென்றால் (Coined By Alagiri Visvanathan) என்றுப் போட வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்......."  என்று ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். 

மேற்காணும் சொற்களுடன் வேறு சில சொற்களைப் பற்றியும், பயன்பர்டுகளைப் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் விவாதிக்கிறார். அவர் சொல்லும் சில சொற்கள் ஏற்கக் கூடியனவாக இருப்பினும் சிலவற்றின்மீது நீண்ட விவாதம் தேவைப்படுகிறது. இவ்வாறான ஒரு சிந்தனையுடன் அவர் படைத்துள்ள இந்நூலைப் படிப்போமே. வாசிப்பை நேசிப்போமே.

வேண்டுகோள் : நூலைப் பெறவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் விரும்பும் நண்பர்கள் நூலாசிரியரை அவரது முகவரியில் கடிதம் வழியாகவோ அலைபேசியிலோ (திரு அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, மராட்டியத் தெரு அருகில், டபீர் குளம் சாலை, கீழவாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9442871071) தொடர்பு கொள்ளலாம். உங்களது கருத்துக்களுக்காக அவர் ஆவலோடு காத்திருக்கிறார்.

14 June 2014

பண்பாட்டுப்பொருண்மைகள் (நாட்டுப்புறவியல் ஆய்வுகள்) : மா.சுந்தரபாண்டியன்

முனைவர் மா.சுந்தரபாண்டியன்
முனைவர் மா.சுந்தரபாண்டியன் அவர்களுடைய பண்பாட்டுப் பொருண்மைகள் (நாட்டுப்புறவியல் ஆய்வுகள்) என்ற நூல் பல கருத்தரங்களில் அளிக்கப்பட்ட 15 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாக அமைந்துள்ளது. 


நமது பண்பாட்டு நிகழ்வுகள் பதியப்படும்போது நம் பெருமையை நம்மால் உணரமுடிகிறது. வளர்ந்துவரும் தனியார் மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் பன்மடங்கு பெருகிக் கொண்டுவரும் இந்நிலையில் பண்பாடு குறித்த பொருண்மைகளை விவாதிக்க வேண்டிய சூழல் எழுகிறது. அது காலத்தின் தேவையாகவும் ஆகிவிடுகிறது. இச்சூழலில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்த நூல்கள் அத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன எனலாம். அவ்வகையில் இந்நூல் வழிபாடுகளும் விழாக்களும் (பக்.9-41), வாழ்க்கை வட்டச்சடங்குகள் (42-111), சிறார் வழக்காறுகள் (112-122), ஊர்ப்பெயராய்வு (123-131), நிகழ்த்துக்கலை (132-143) என்ற ஐந்து தலைப்புகளில்  அமைந்துள்ளது. முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காக தஞ்சாவூர் வட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நூலாசிரியர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது திரட்டப்பட்ட நேரடித் தரவுகளின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகள் இந்நூலில் முக்கியமான இடததைப் பெறுகின்றன.

கட்டுரைகள் பெரும்பாலும் திருக்கானூர்ப்பட்டியை மையமாகக் கொண்டுள்ளன. வழிபாடுகளும் விழாக்களும் என்ற தலைப்பின்கீழ் திருக்கானூர்ப்பட்டியில் உள்ள கோடியம்மன் கோயில் ஏகௌரியம்மன் கோயில், ஒத்தையால் முனியாண்டவர் கோயில், அங்காளபரமேசுவரியம்மன் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி நேரில் சென்று விவரங்களைத் தொகுத்து வரலாறு, நாட்டுப்புறவியல், சமூகவியல் என்ற பல்வேறு நோக்கில் அளித்துள்ளார்.திருவிழாக்களின்போது நடைபெறும் நிகழ்வுகளையும், மக்கள் இத்தெய்வங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அவர்களுடைய ஈடுபாடுகளையும்  வெளிக் கொணர்ந்துள்ளார். நேரடி களப்பணியின்போது அவர் சந்தித்த தகவலாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை வட்டச்சடங்குகளாக பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்ற நிலைகளில் காணலாகும் சடங்குகளைப் பொருளாதார நோக்கில் அணுகியுள்ளார். இவ்வகையான வாழ்க்கை வட்டச் சடங்குகளில்  பரிமாற்றத்தின் முக்கிய பங்கு, தாய்மாமனின் பங்கு ஆகியவற்றை திருக்கானூர்ப்பட்டியில் நடைபெற்ற பல சடங்குகளில் கலந்துகொண்டு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நெறிமுறைகளைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஊர்ப்பெயராய்வு என்ற நிலையில் திருக்கானூர்ப்பட்டியைப் பற்றி வரலாற்று ரீதியாக செய்திகளைத் சேகரித்து அளித்துள்ளார்.  ஊரின் எல்லை, வாழும் மக்கள், மண்வளம், நீர்வளம், தொழில், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல கூறுகளைப் பற்றி விவாதிக்கிறார். 

சிறார் விடுகதைகள் என்ற தலைப்பிலான கட்டுரையில் விடுகதையைப் பற்றிய பொருள் மற்றும் இலக்கணத்தைக் கூறிவிட்டு  திருக்கானூர்ப்பட்டியில் காணலாகும் சிறுவர் சிறுமிகளின் விடுகதைகளை இயற்கை, தாவரம், மனிதன், விலங்கு, புழங்குபொருள்கள் என்ற வகைளில் சேகரித்து யெவளிப்படுத்துகிறார். 

பறையாட்டம் என்ற தலைப்பில் தஞ்சை மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயில் நடனம், காளைமாட்டு நடனம், குறவன் குறத்தி ஆட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்றவற்றை அறிமுகப்படுததிவிட்டு திருக்கானூர்ப்பட்டியில் வாழும் மக்களிடம் களப்பணி வாயிலாகச் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தோற்கருவிகளின் வகைகள் மற்றும் வரலாறு தொடங்கி அனைத்தையும் விரிவாக முன்வைக்கிறார்.


பண்பாட்டுப்பொருண்மைகள் (நாட்டுப்புறவியல் ஆய்வுகள்),  முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, டிசம்பர் 2006, ரூ.100, பக்.144.

இவருடைய பிற நூல்கள்



திருக்கானூர்ப்பட்டியில் இந்து உடையார், கிறித்தவ உடையார், கள்ளர், அம்பலார், பள்ளர், பறையர், சக்கிலியர் முதலான சாதி மக்களிடையே ஏற்படும் உறவுகள், உழைப்பு, பொருளாதார ஏற்றம் பற்றிய செய்திகளை இந்நூல் கிராமப்பொருளாதாரமாக விளக்குவதாக முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். கிராமப்பொருளாதாரம்,  முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், தஞ்சாவூர் 613 007, 2009, ரூ.50, பக்.112. 

 

நாட்டுப்புற மக்களிடம் பிறப்புச்சடங்கு, பூப்புச்சடங்கு, காதணி விழா, திருமணச்சடங்கு, வளைகாப்பு விழா, இறப்புச் சடங்குகளால் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டு வந்தது, எப்படி செயல்பட்டு வருகிறது, அவற்றின் சமுதாய மதிப்புகள் என்ன என்பதைக் குறித்து இந்நூல் அமைந்துள்ளதாக முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். செலவுப்பொருளாதாரம்,  முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், தஞ்சாவூர் 613 007, 2009, ரூ.50, பக்.96.

"நாட்டுப்புற மக்களின் வழக்காறுகள் அனைத்தும் அம்மக்களின் மேம்பாட்டிற்கே" என்ற கருத்திற்கிணங்க நாட்டுப்புற மக்களிடம் தரவுகள் கள ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்டு அறிவியல் முறையில் ஆராய்ந்து முடிவுகள் வெளிப்படுததப்பெற்றுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். முனைவர் பட்ட ஆய்வேட்டினை நூல் வடிவமாகக் கொணர்வது என்பது எளிதான காரியமல்ல. இருப்பினும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் வெளிவரவேண்டும் என்ற உயரிய நோக்கில் அவற்றை வெளிக்கொணர்ந்துள்ள ஆசிரியரின் பெருமுயற்சியைப் பாராட்டி, இந்நூல்களை வாசிப்போமே.