முகப்பு

18 January 2015

One Life Is Not Enough - An Autobiography : K.Natwar Singh

கே.நட்வர்சிங் எழுதியுள்ள One Life Is Not Enough - An Autobiography என்ற நூலில் 22 தலைப்புகளில் அவருடைய இளமைப்பருவம், இந்திய வெளிநாட்டுப்பணியில் (Indian Foreign Service) அவர் பணியில் சேரல் என்ற நிலையில் தொடங்கி அவருடைய திருமணம், சீனா, ஜாம்பியா, ரஷியா போன்ற நாடுகளுடனான உறவு, ஐக்கிய நாடுகள் சபையில் அவருடைய அனுபவம், புதுதில்லியில் இரு மாநாடுகளை நடத்தியபோது அவர் எதிர்க்கொண்ட சவால்கள்,  இந்தியாவில் நெருக்கடி நிலை, காங்கிரசின் வீழ்ச்சி, சோவியத் நாடுகளின் மரணம், இலங்கையின் துயரம், ஐக்கிய நாடுகள் சபை, ஜாம்பியா, சீனா போன்ற நாடுகளில் அவருடைய பணி, புதுதில்லியில் இரு நாடுகளை நடத்தியபோது எதிர்கொண்ட சவால்கள் போன்ற பலவாறான  தலைப்புகளில் ஆழமாக விவாதிக்கிறார். தன்னை ஒரு நேருக்காரர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் நேரு தொடங்கி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி போன்றவர்களுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.


1983இல் புதுதில்லியில் கூட்டுசேரா இயக்க மாநாடு நடைபெற்றபோது ஜோர்டான் மன்னர் பேசியபின் அழைக்கப்பட்டதற்காக பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கோபித்துக்கொண்டு புதுதில்லியை விட்டுக் கிளம்பவிருந்த நிலையில் ஃபீடல் காஸ்ட்ரோ மூலமாக பிரச்னைக்கு தீர்வு கண்டதை மறக்கமுடியுமா? அவர்களுடைய விவாதத்தில் ஒரு பகுதி இதோ.

ஃபீடல் காஸ்ட்ரோ:   நீங்கள் இந்திரா காந்தியின் நண்பர்தானே?
யாசர் அராபத் :    இந்திரா காந்தி என் மூத்த சகோதரி. நான் அவருக்காக எதையும் செய்வேன்.
ஃபீடல் காஸ்ட்ரோ: ஒரு தம்பியைப் போல நடந்துகொள்ளுங்கள். மதிய அமர்வில் கலந்துகொள்ளுங்கள்.

இவ்வாறாகப் பல நிகழ்வுகள் குறித்து இந்நூலில் விவாதிக்கிறார் ஆசிரியர்.

அதிக நூல்களை அவர் படித்துள்ள நிலையில் அவரோடு தொடர்பு கொள்வோரிடம் அவர்கள் படிக்கும் நூல்கள் பற்றியும், அவர் படித்த நூல்கள் பற்றியும்,   பல இதழ்களுக்கு கட்டுரைகளும், மதிப்புரைகளும் எழுதியுள்ளது பற்றியும் குறிப்பிடுகிறார். படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள ஆர்வத்தை அவருடைய இந்நூலில் காணமுடிகிறது.

1956இல் அவருடைய பணியின் ஓர் அங்கமாக பயிற்சிக்காக நான்கு மாதங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது தஞ்சாவூரில் 15 நாள் தங்கியதையும், அப்போது கும்பகோணம் சென்றதையும் குறிப்பிடுகிறார். அவருடைய அனுபவங்களை அவருடைய சொற்களாலேயே நாம் காண்போம். 

பணிக்காலம்
"இந்திய வெளிநாட்டுப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நேரு தனித்தனியாக சந்திப்பார் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது...இதற்கு முறை ஓரிரு முறை நான் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு ஏதோ இறுக்கமாக இருந்தது.. அந்த என் மன நிலையைச் சரி செய்ய நேரு என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டுவிட்டு, பின்னர் பேச ஆரம்பித்தார். 'சீனாவால் நமக்கு ஆபத்தா?' அதற்கு நான் 'ஆம் மற்றும் இல்லை' என்றேன். அம்மாமனிதர் கேட்டார் 'நீங்கள் எனக்கு அரசியல் கற்றுத்தருகின்றீர்களா?'. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா தொடர்பாகவும், இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் தொடர்பாகவும் கேட்டார். எங்களது விவாதத்திற்குப் பின் நான் ஆச்சர்யப்படும்படியாக அவர் வாசல் வரை வந்து என்னை வழியனுப்பினார்.  அவருடைய உயரிய மனதை எண்ணி வியந்தேன்." (ப.27) 


ஜவஹர்லால் நேரு
"இந்திய வெளிநாட்டுப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நேரு தனித்தனியாக சந்திப்பார் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது...இதற்கு முறை ஓரிரு முறை நான் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு ஏதோ இறுக்கமாக இருந்தது.. அந்த என் மன நிலையைச் சரி செய்ய நேரு என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டுவிட்டு, பின்னர் பேச ஆரம்பித்தார். 'சீனாவால் நமக்கு ஆபத்தா?' அதற்கு நான் 'ஆம் மற்றும் இல்லை' என்றேன். அம்மாமனிதர் கேட்டார் 'நீங்கள் எனக்கு அரசியல் கற்றுத்தருகின்றீர்களா?'. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா தொடர்பாகவும், இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் தொடர்பாகவும் கேட்டார். எங்களது விவாதத்திற்குப் பின் நான் ஆச்சர்யப்படும்படியாக அவர் வாசல் வரை வந்து என்னை வழியனுப்பினார்.  அவருடைய உயரிய மனதை எண்ணி வியந்தேன்." (ப.27)
"1922 முதல் 1945 வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட 10ஆண்டுகளை நேரு சிறையில் கழித்தார். தன் மனதையும் உடலையும் எப்பொழுதும் நல்ல நிலையில் வைத்துக்கொள்வதில் கவனமாக இருந்தார். அதிகமாகப் படித்தார், அதிகமாக எழுதினார். சொற்களையும் சொற்றொடர்களையும் நேசிப்பவன் என்றும், அதை உரிய முறையில் உரிய இடத்தில் பயன்படுத்துபவன் என்றும் தன்னைப் பற்றி நேரு கூறுவார். தன்னுடைய கருத்துக்கள் எவையாயினும் தான் பயன்படுத்தும் சொற்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும், குறிப்பிட்ட ஒழுங்கமைவிலும் அமையவேண்டும் என்று விரும்புவார். சிறையில் அவர் எப்போதும் ஒரு நாட்குறிப்பேடு வைத்திருப்பார். அதில் அவருடைய மன உணர்வுகள், அரசியல் ஏற்ற இறக்கங்கள், உள் மனக்குழப்பங்கள் பதியப்பட்டிருக்கும்.." (ப.110) 


ராஜாஜி
"ராஜாஜியுடன் மிகவும் நெருக்கமாக நான் பழகியுள்ளேன். அவருடைய வாழ்க்கை முறை என்பதானது ஒரு ரிஷியின் வாழ்க்கையைப் போன்றது...மென்மையாகப் பேசுவார்...நேருவைப் போலவே காலந்தவறாமையை சரியாகக் கடைபிடித்தார்.  (ப.80)
நேருவும், காந்தியும் சுயசரிதை எழுதியுள்ளார்கள் அவ்வாறே நீங்களும் சுயசரிதை எழுதலாமே என்று ராஜாஜியிடம் நான் கேட்டுக்கொண்டபோது அவர், அதற்குப் போதுமான நேரமில்லை என்றும், கவர்னர் ஜெனரலாக இருந்தபோது நேரம் இருந்தது என்றும் கூறினார். மேலும் அவர் புன்னகையுடன் பிரதமருக்கும் துணை பிரதமருககும் இடையே நிலவும் கருத்தொற்றுமையின்மையைச் சரிசெய்வதிலேயே தன் நேரம் பெரும்பாலும் செலவழிந்துவிடுகிறது என்றும் கூறினார்.  " (ப.82) 


"ராஜாஜி ஆஸ்துமாவால் அதிகம் வேதனையுற்றார். 1921இல் முதன்முதலாக அவர் சிறையில் தனியறையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அடைக்கப்பட்டார். மின்சாரம் இல்லை. இரவு முழுக்க கொசுத்தொல்லை. அது அவருடைய ஆஸ்துமாவை மேம்படுத்தியது. இதனாலலேய தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகக் கூறினார். எனக்கு அதிர்ச்சி. இந்நோய்க்கான மருந்து அப்போது இந்தியாவில் இல்லை. சரியான உணவு முறை மற்றும் மன உறுதி மூலமாகவே அவர் ஆஸ்துமாவை எதிர்கொண்டார். " (ப.82) 


மார்ட்டின் லூதர் கிங்
"20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 28 ஆகஸ்டு 1963இல் நடந்தது. அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த உரையினை மார்ட்டின் லூதர் கிங் வாஷிங்டனில் லிங்கன் நினைவிடம் முன்பாக நிகழ்த்தினார்.50 வருடங்களுக்குப் பின் இப்பொழுதும் அந்த எனக்கு ஒரு கனவு உள்ளது என்ற உத்வேகப் பேச்சு அனைவருக்கும் தூண்டுகோலாக உள்ளது...அவரை பேச்சை கோடிக் கணக்கில் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தவர்களில் நானும் ஒருவன். இந்நிலையில் நான் 28 ஆகஸ்டு 1963ஐ மறக்கவேமாட்டேன்........ அவரை நான் டிசம்பர் 1964இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறச் செல்லும்போது சந்தித்தேன்...அப்போது அவரிடம் நான் தொகுத்துக்கொண்டிருந்த நேருவின் பெருமைகள் என்ற நூலுக்கான அவரது கட்டுரையை எப்போது அனுப்புவீர்கள் என்று கேட்டேன்...." (ப.88)

மாசேதுங்
"மாசேதுங்கை நான் முதன்முறையாகச் சந்தித்ததை என்னால் நினைவுகூற முடியும். லாவோஸ் பிரதமருக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன்......அவர் ஒரு சிந்தனையாளர், கவிஞர், அறிஞர், புரட்சிக்காரர், மார்க்சியவாதி...இரும்பு மனம் கொண்டவர். அவருடைய நாட்டைப் பற்றி முழுமையாக அவர் அறிந்துவைத்திருந்தார். அவருடைய மனத்தின் சக்தியை யாருடனும் ஒப்பிடமுடியாது, இதற்கு விதிவிலக்கு லெனின் மட்டுமே...." (ப.47)

கென்னடி, சேகுவாரா
"ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதி ஜான் எப். கென்னடி மற்றும் சேகுவாராவின் பேச்சுக்களால் களை கட்டியது. இரு வேறு காரணங்களுக்காக உலகம் அவர்களை நோக்கியது. நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ நாட்டுக்காக என்ன செய்தாய் என்று கேள் என்ற கென்னடியின் துவக்கவுரை இன்னும் என் மனதில் நிற்கிறது...சேகுவாரா அப்போது அனைவரும் அறிந்திருந்த மிகப்பெரிய தலைவராக இருந்தார்....சேகுவாரா பேசும்போது அரங்கு நிரம்பி வழிந்தது...." (ப.73)

 சில மறக்க முடியாத நிகழ்வுகள்

"நேரு, டிட்டோ, நாசர் மூவருடைய சந்திப்பின் பத்தாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் அக்டோபர் 1966இல் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டிட்டோவும், நாசரும் புதுதில்லி வந்தனர். மாநாட்டின் துவக்க விழா ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்திரா காந்தி தன் தொடக்கவுரையை ஆரம்பித்தபோது  மைக்ரோபோன் வேலை செய்யவில்லை. நான் அதிகம் பயந்துபோனேன். ." (ப.135)

"1968இல் நாசர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். புதுதில்லி செங்கோட்டையில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது எகிப்து நாட்டுப் பாடல் பாடப்பட்டது. பின்னர் நாசர் நேருவிடம் தவறான நாட்டுப்பாடல் பாடப்பட்டது பற்றிக் கூறியுள்ளார். மன்னர் பரோக் காலத்திலிருந்து பாடப்பட்ட நாட்டுப்பாடல் தவ்றுதலாக பாடப்பட்டுவிட்டது. 1952இல் நாசர் மேற்கொண்ட ஒரு புரட்சியின்போது அவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டவர். ." (ப.140)

"ஆகஸ்டு 1969இல் ராஜீவ் மற்றும் சோனியாவுடன் பிரதமர் காபூலுக்கு வருகை புரிந்தார். 1947க்குப் பின் முதன் முதலாக அப்போது அவர் கான் அப்துல் கபார் கானைச் சந்தித்தார். அவரிடம் சென்று பிரதமர் அவரைச் சந்திக்க நேரம் கேட்டு வரும்படி கூறினார். அவரோ தானே பிரதமரை மாலை 4.00 மணிக்குச் சந்திக்க வருவதாகக் கூறினார். கானுடன் துணைக்கு வருவதற்காக அழைக்கச் சென்றபோது 15 நொடிகள் தாமதமாகச் சென்றேன். அப்போது கான் என்னிடம் உரிய நேரத்தில் வந்திருக்கவேண்டும் என்று கூறினார்.." (ப.143)

"காபூல் பயணத்தின்போது ஒரு நாள் மாலை திருமதி இந்திராகாந்திக்கு நேரம் கிடைக்கவே காரில் வெளியில் செல்ல விரும்பினார். காபூலுக்கு சில மைல்கள் தொலைவில் மரங்கள் சூழ்ந்த நிலையில் இடிபாடான நிலையில் ஒரு கட்டடத்தை அவர் பார்த்தார். ஆப்கானிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அது பற்றி விசாரித்தபோது அது பாபரின் சமாதி என்றனர். மரபுப்படி சரியான பாதுகாப்பு இல்லாத நிலையில் அங்கே செல்வதில் தயக்கம் இருப்பதைக் காணமுடிந்தது. இருப்பினும் நாங்கள் சமாதியை நோக்கிச் சென்றோம். சமாதியின் முன் நின்று தலையை சற்றே குனிந்த நிலையில் நின்ற இந்திரா காந்தி வரலாற்றுக்கு அண்மையில் நெருங்கியதை உணர்ந்ததாகக் கூறினார். அப்போது நான் இரு வகையில் அனுபவம் பெற்றுவிட்டேன் என்றேன். என்ன சொல்கிறீர்கள் அவர் என்னைக் கேட்க, நான் பாபரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவது அதுவும் இந்தியாவின் ராணியுடன், என்பது எனக்குப் பெரும் பெருமையே என்றேன். " (ப,144)
பரந்துபட்ட அறிவு, பல பெருந்தலைவர்களுடன் நட்பு, உலக நடப்புகள் முதல் உள்ளூர் நடப்புகள் வரை அனைத்தையும் விவாதிக்கும் நுட்பம் என்ற நிலையில் அமைந்துள்ள இந்நூலை வாசிப்போமே.

தலைப்பு : One lifel is not enough: an autobiography
ஆசிரியர் : K. Natwar Singh
பதிப்பகம் : Rupa Publishing India Pvt Ltd, New Delhi 110 002
ஆண்டு : 2014
விலை : Rs.500

நாம் முன்னர் படித்த இவருடைய நூல் : Walking With Lions: Tales from a Diplomatic Past

06 January 2015

அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஓர் ராஜதந்திரம் : மார்க் டிரான்

செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது? 
 
அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம். 

 
 
ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை உறுதிசெய்திருக்கிறது. 

‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ், கடந்த வாரம் ஹொஸே மார்த்தி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸும் அவரை வாழ்த்தினார்கள். தொலைக்காட்சிகளில் அப்போது ஒளிபரப்பான அந்த நிகழ்வில், ஹெர்னான்டஸின் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. 

எப்படி நிகழ்ந்தது?
இது எப்படி? கியூபர்கள் வியந்தார்கள். ஹெர்னான்டஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் 2001-ல் ‘பிரதர்ஸ் டு த ரெஸ்கியூ’ என்ற அமைப்பைச் சேர்ந்த இரு பயணியர் விமானங்களை கியூபாவின் விமானத்திலிருந்து சுட்டு, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டமைக்காகக் குற்றம்சாட்டப்பட்டவர். அப்போது நான்கு கியூபா-அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். 

ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்த தோடு மட்டுமின்றி, அவர் மனைவியும் கியூபா உளவுத் துறைக்காகப் பணியாற்றியதன் காரணமாகச் சிறையில் இருந்த தன் கணவரைச் சந்திக்க அமெரிக்காவால் அனுமதிக்கப்படாமல் தடைவிதிக்கப்பட்டதாக கியூபா அரசு கூறியது. 

இப்போதுதான் சிக்கல். எங்கு பார்த்தாலும் புரளி. அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்? ஹெர்னான்டஸ் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் ரகசியமாகச் சந்திக்க கியூபா அரசு உதவியிருக்குமா? உண்மை என்னவோ வேறு விதமாக இருந்தது. ஹெர்னான்டஸ், தன் மனைவியின் கருத்தரிப்புக்குக் காரணம், ‘‘உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள்தான்’’ என்றார். 

ரிமோட் கன்ட்ரோல்
“இந்தப் பேச்சுவார்த்தைகளின் காரணமாகக் கிடைத்த பலன்களில் ஒன்று இதுதான்” என்று ஹெர்னான்டஸ் கர்ப்பமாக உள்ள தன் மனைவியின் வயிற்றைச் சுட்டிக் காட்டினார். தடவிக்கொண்டே “ரிமோட் கன்ட்ரோல் மூலமாகச் செய்ததுபோல்தான் எல்லம் நடந்தது. இருப்பினும் அனைத்தும் சுபமாகவே முடிந்தது” என்றார். 

காஸ்ட்ரோ மற்றும் கியூபாவின் உயர்நிலை அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வில், அந்தத் தம்பதியினரும் விடுதலை செய்யப்பட்ட மற்ற உளவாளிகளும் இருந்தார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில் பேசும்போது ஹெர்னான்டஸ், “எல்லோரும் என்னிடம் இதுபற்றியே கேட்கிறார்கள். அவர்களுடைய பேச்சுகளையும் அனுமானங்களையும் கேட்கும்போது வேடிக்கையாக இருந்தது. உண்மையை நாங்கள் காப்பாற்ற வேண்டி அமைதியாக இருந்தோம். அனைத்தையும் முழுமையாக எங்களால் கூற முடியாது. நல்லது நடக்கக் காரணமாக இருந்தவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது.” 

இது தொடர்பான வெளியுறவுப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது ஹெர்னான்டஸின் விந்தணு சேகரிக்கப்பட்டு, கியூபாவுக்கு அனுப்பப்பட்டு, ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸ் செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கப்பட்டார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார்கள். 

பதிலுக்குப் பதில்
கியூபாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஆலன் கிராஸுக்கு, நல்ல சூழலை உருவாக்கித்தருவதற்கு ஈடாக அமெரிக்கா இந்த வேண்டு கோளை ஏற்றதாக அமெரிக்க நீதித் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இரு நாட்டுச் சிறைக் கைதிகள் பரிமாற்றத்தின்போது, கடந்த மாதம் கிராஸ் விடுதலை செய்யப்பட்டார். 

“தன் கணவர் மூலமாகக் குழந்தை பெற விரும்பிய பெரீஸின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்று, அதற்காக உதவியதை நாங்கள் உறுதி கூறுகிறோம். அவரது வேண்டு கோள் செனட்டர் லெய்ஹீயிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்தான் க்யூப சிறையில் கிராஸ் இருந்தபோது, அவரது சூழலை மேம்படுத்த வேண்டியிருந்தார்” என்று செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரோடென்புஷ் கூறினார். 

க்யூபாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள லெய்ஹீயுடன் உதவிய டிம் ரைசர், ‘‘ஹெர்னான்டஸ் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியது, கியூபா நிர்வாகத்தினர் கிராஸை சிறையில் நல்ல முறையில் நடத்தத் துணைபுரிந்ததோடு மட்டுமின்றி, இந்த ஒரு சாதனையை நிகழ்த்த ஒரு முக்கியமான சலுகையாகவும் இருந்தது’’ என்றார். 

“இவர் சிறையில் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள இது ஒன்றே சந்தர்ப்பம்” என்றும் ரைசர் சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார். தங்களின் பெண் குழந்தை இன்னும் இரு வாரங்களில் பிறக்கவிருப்பதாகவும் அவளுக்கு ஹீமா என்று பெயரிட உள்ளதாகவும் ஹெர்னான்டஸ் கூறினார். 

தி கார்டியன், தமிழில்: பா. ஜம்புலிங்கம்

----------------------------------------------------------------------------------------------------
5.1.2015 நாளிட்ட தி இந்து நாளிதழில் வெளியான எனது கட்டுரை. கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கினால் இதழில் படிக்கலாம்.

----------------------------------------------------------------------------------------------------

28.1.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.