முகப்பு

29 December 2018

சான்ஸ் ஃபார்காட்டிகா : நினைவாற்றலைப் பெருக்க புதிய எழுத்துரு

நூல்கள் வாசிப்போருக்கும், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் ஒரு இனிய செய்தி. ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை (font) உருவாக்கியுள்ளனர். வாசகர்கள் மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் இந்த புதிய எழுத்துரு உதவும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

புதிய எழுத்துருவினைக் கண்டுபிடிக்க இப்பல்கலைக்கழகம் 400 பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. சாதாரண ஏரியல் எழுத்துருவில் 50 விழுக்காட்டினர் நினைவுவைத்துக்கொண்டபோது புதிய எழுத்துருவான சான்ஸ் ஃபார்காட்டிகாட்டிகாவில் 57 விழுக்காட்டினர் நினைவில் வைத்துக்கொண்டிருந்ததை ஆய்வின் முடிவில் காணமுடிந்தது.

இந்த எழுத்துருவினை உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று வெவ்வேறு வகையான மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மெய்ப்பு வாசிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் இந்த எழுத்துரு சோதிக்கப்படவுள்ளது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களை மனதில் வைத்தே இந்த எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அயலக மொழிகளைக் கற்போருக்கும், நினைவாற்றல் இழந்த முதியோருக்கும் இது உதவும்.   இந்த எழுத்துருவானது இடது புறத்தில் ஏழு டிகிரி பின்சாய்ந்த நிலையில், எழுத்துகளுக்கிடையே இடைவெளியுடன் காணப்படுகிறது.  பெரும்பாலான வாசகர்களுக்கு பிற்சாய்வுநிலை அமைப்பிலான எழுத்துரு புதிதாக இருக்கும். ஏனென்றால் இது ஆறுகளைக் காண்பிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. எழுத்துக்களின் ஆரம்பம் வடிவத்தை மனதில் தக்கவைத்துக்கொள்வதற்காக மூளையின் செயல்பாட்டை சற்றே நிதானித்து செயல்படுத்தும் வகையில் உள்ளது. தன்னை சரியான நிலையில் தயார்படுத்திக்கொள்ள மூளை தயாராகும்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஏரியல், டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருக்களைப் பார்ப்பதைப் போலவே சான்ஸ் ஃபார்காட்டிகா எழுத்துருவையும் பார்க்கும்.

மூளையில் தகவலை ஆழமாகப் பதிய வைக்க இந்த எழுத்துரு உதவும். படிப்பதற்குச் சிரமம் இருப்பது போலத் தெரியும். எழுத்துருவின் வடிவின் அடிப்படையில் படிக்கத் தாமதமாகும்போது இயல்பாக நினைவாற்றல் அதிகமாகிறது.  நினைவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வேகத்தடுப்பு என்பதானது சேர்க்கப்படுகிறது. வேகத்தடுப்பிற்கும் வாசிக்கப்படும் உரைக்கும் ஒரு சரியான  சம நிலையை இந்த எழுத்துரு சிறப்பாகச் செய்கிறது. அப்போது நினைவுத்திறன் மேம்படுகிறது.

மாணவர்கள் தேர்வுக்குப் படிக்கும்போது உதவுவதைப் போல இந்த எழுத்துரு உதவுகிறது. ஒரு நூலினை இந்த எழுத்துருவில் ஒருவர் படிப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த எழுத்துருவில் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்க ஒரு வாசகர் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றார். செலவழிக்கப்படுகின்ற அந்த நேரத்தில் மூளையானது தகவலை தகவமைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு தரப்படுகிறது. எழுதும்போது உரிய வடிவத்தை நிறைவு செய்ய மனம் முயற்சிக்கும்போது வாசிப்பின் வேகம் குறைந்து நினைவாற்றலின் வேகம் அதிகரிக்கிறது. இது மாயமல்ல. முயற்சியின்பாற்பட்ட அறிவியல் ஆகும். அவ்வாறே நாம் குறிப்பெடுக்கும்போது, சில நிமிடங்களுக்கு முன்பாக என்ன எழுதினோம் என்பதை மறந்துவிடுவோம். ஆனால் இந்த எழுத்துருவானது நாம் எழுதும் குறிப்புகளை அதிக நேரம் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இப்போதுதான் முதன்முறையாக குறிப்பிட்ட கொள்கையினைக் கொண்ட வடிவக் கோட்பாட்டோடு உளவியல் கோட்பாடு இணைந்து ஒரு எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துருவினை sansforgetica.rmit என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி உள்ளது. வழக்கமாக உள்ள எழுத்துருக்களை எதிர்கொண்டு இந்த புதிய எழுத்துரு வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

This line is typed in Sans Forgetica by Dr B Jambulingam 
என்று இந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தது




துணை நின்றவை

Font of all knowledge? Researchers develop typeface they say can boost memory, The Guardian, 4 Oct 2018

Researchers create new font designed to boost your memory, Washington Post, 5 Oct 2018 

Scientists create new ‘Sans Forgetica’ FONT that promises to boost your memory, Mirror, 5 Oct 2018 

Scientists create a new ‘Sans Foretica’ font they say can could boost your memory, Daily Mail, 4 Oct 2018

22 December 2018

வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி : முனைவர் சோ.கண்ணதாசன்

நண்பர் முனைவர் சோ.கண்ணதாசன் (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோசி அரசு கல்லூரி, தன்னாட்சி, தஞ்சாவூர்) அவர்கள் எழுதியுள்ள வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி என்ற நூலைப் பார்த்ததும் என் பள்ளிக்கால அனுபவங்கள் நினைவிற்கு வந்தன. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் பள்ளி நண்பர் கோவிந்தராஜனின் பெரியப்பா தையற்கடைக்குச் செல்லும்போது அருகில் உள்ள வெற்றிலைக்கடையில் வெற்றிலையை அடுக்குவது, ஏலம் போடுவது போன்றவற்றைப் பார்ப்பேன். 

பள்ளிப்பருவம் முதலே பெரியவர்கள் சிலர் வெற்றிலைப் போடும் அழகினை ரசித்து வந்துள்ளேன். சிலர் இரண்டடுக்காக உள்ள கையடக்க எவர்சில்வர் டப்பாவில் கீழ்த்தட்டில் வெற்றிலையையும், மேல் தட்டில் சீவல் அல்லது பாக்கையும், சுண்ணாம்பையும், புகையிலையையும் வைத்திருப்பர். சிலர் பல மடிப்புகளைக் கொண்ட தாளில் வெற்றிலையையும், சீவல் பாக்கெட்டையும், புகையிலையையும், மடிக்கப்பட்ட ஒரு வெற்றிலையில் சுண்ணாம்பையும் வைத்திருப்பர். அவர்கள் வெற்றிலையை லாவகமாக எடுத்து, சுண்ணாம்பை பெருவிரலில் எடுத்து சிறிது தடவி வெற்றிலையை மடித்து அதனுள் பாக்கையோ, சீவலையோ வாயின் ஓரமாக ஒதுக்கி உள்ளே வைக்கும் அழகு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். சிலர் சீவலுக்குப் பதிலாக பாக்குக்கொட்டையைக் கடித்துச் சிறிதாக்கி வெற்றிலைக்குள் வைத்துப் போடுவர். பெருவிரல் மற்றும் கட்டைவிரலால் சிறிதளவு புகையிலையை உதறி எடுக்கும் அழகும் ரசனையாக இருக்கும்.  பயணத்தின்போதோ, பிற நிகழ்வுகளின்போதோ இவ்வாறாக வெற்றிலை போடுபவர்களை ஆர்வமாகப் பார்த்து ரசிப்பேன். 

நாம் பார்க்கும்போது ஏமாந்துபோகக்கூடாது என்பதற்காக அவர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக் கொடுப்பார்கள். வெற்றிலைக்காம்பின் ருசியும் அவர்களுடைய அன்பும் நம்மை ஈர்த்துவிடும். சிலர் கையில் வெற்றியையும் சீவலையும் உள்ளங்கையில் வைத்து மசித்துக் கொடுப்பர். அது இன்னும் ருசியாக இருக்கும்.  திருமணத்திற்குப் பின் அவ்வப்போது பிற இல்ல சிறப்பு நிகழ்வுகளுக்குச் செல்லும்போது அவ்வப்போது வெற்றிலை போடுவேன். நாக்கு சிவந்திருக்கிறதா என்று நானே பார்த்துக்கொள்வேன். அவ்வாறு போடும்போது இனம் புரியா மகிழ்ச்சி மனதில் தோன்றும். கும்பகோணம் கொழுந்து வெற்றிலை போட்டால் சிவக்குது என்ற திரைப்பாடல் வரிகள்கூட அப்போது நினைவிற்கு வரும். தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்று வெற்றிலையல்லவா?

  

நூலாசிரியர் அகராதியியலின் வரலாற்றைப் பற்றி விவாதித்துவிட்டு அகராதியைத் தருகிறார்.  அகராதியியல் வரலாற்றில் அகராதியியல் தோற்றம், அகராதிக்கும் களஞ்சியத்திற்கும் உள்ள வேறுபாடு, அகராதியின் வளர்ச்சிக்காலம், அகராதியின் வகைகள், நூல் அகராதிகள், பிற சிறப்பு அகராதிகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கிறார். தொடர்ந்து ஆய்வுக்களமான, தஞ்சாவூருக்கு வடமேற்கே 15 கிமீ தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள நடுக்காவேரி என்னும் ஊரின் சிறப்பினையும், அங்குச் சாகுபடி செய்யப்பட்டு வருகின்ற நெல், தென்னை, வெற்றிலை, கரும்பு, வாழை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டு ஊரின் அமைப்பு, மக்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறார்.

தொடர்ந்து வெற்றிலை வேளாண்மை செய்வதற்கான காரணங்கள், வெற்றிலை வேளாண்மை செய்யும் முறை, வெற்றிலை வேளாண் தொடர்பான பழமொழிகள், வெற்றிலை தொடர்பான புராண, மரபுக்கதைகள், சங்க இலக்கியம், சிலம்பு, அற இலக்கியம், கம்பன் காவியம், நாட்டுப்புறப் பாடல், திரைப்படப்பாடல்கள், வைத்திய நூல்கள் ஆகியவற்றில் வெற்றிலை, வெற்றிலையின் பயன், பழமொழிகளில் வெற்றிலை என்ற தலைப்புகளில் விவாதிக்கிறார்.

அகராதியில் அகர வரிசையில் வேளாண் கலைச்சொற்களைத் தந்துள்ளார். தலைச்சொற்பகுதியில் திருந்திய வடிவத்தினை முதலிலும், அச்சொற்களின் பேச்சு வழக்கு வடிவங்களை அடைப்புக்குறிக்குள்ளும் தந்துள்ளார். விளக்கப்பகுதியில் சொற்களுக்குரிய பொருளை எளிய நடையில் தந்துள்ளார். அவர் தந்துள்ள சொற்களில் சிலவற்றைக் காண்போம்.

அரைக்கவளி (அரக்கவுளி) – ஐம்பது வெற்றிலைகளைக் கொண்ட சிறிய கட்டு.
ஆக்கை கட்டுவது – அகத்தி, செம்பை மரங்களில் வெற்றிலைக் கொடிப் படர கோரை கொண்டு கட்டுகை.
எக்கிக் கட்டுதல் – வெற்றிலைக் கொடியைச் சுருக்குக் கட்டும்பொழுது, கால் விரலை ஊன்றிக் குதி காலை உயர்த்தி எக்கி நின்று கைக்கு எட்டிய தூரம் வரை கட்டுதல்.    
கறலை – வெற்றிலைக்கொடியின் தண்டில் காணப்பெறும் தடிமனான பகுதி.
கொடிக்கால் – வெற்றிலைக் கொடிகளைத் தாங்கும் கால் (அல்லது) குச்சி.
நாராசம் – கொடிக்காலுக்குள் போவதற்கு ஒதுக்கப்படும் பொதுப்பாதை.
முட்டி – இருபத்தைந்து கவுளிகளைக் கொண்ட வெற்றிலைக்கட்டு.

இந்த அகராதிக்காக நூலாசிரியர் பல நூல்களிலிருந்து உரிய மேற்கோள்களைத் திரட்டித் தந்துள்ளதோடு, களப்பணி மேற்கொண்டு செய்திகளையும் திரட்டியுள்ளார். ஒவ்வொரு துறைக்கும் இவ்வாறான அகராதிகள் தற்போதைய தேவையாகவுள்ளது. மண் சார்ந்த தொழில்களையும், மரபுகளையும் விட்டு தற்போதைய சமூகம் விலகிப்போகின்ற நிலையில் மரபினையும், மண்ணையும் காக்கும் வகையில் நூலாசிரியர் அரிய முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இதனடிப்படையிலேயே இவர் நெல், தென்னை, கரும்பு, வாழை போன்றவை தொடர்பாகவும் அகராதிகளை வெளியிட முயற்சியினை மேற்கொள்ளலாம். 

அரிய அகராதியை வெளிக்கொணர்ந்த நூலாசிரியருக்குப் பாராட்டுகள். அருமையான முகப்பட்டை, அழகான எழுத்துரு, வாசிக்க மிகவும் எளிதாக நூல் அமைந்துள்ளது. 96 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு ரூ.150 விலை என்பது சற்றே கூடுதலாகத் தெரிகிறது. அடுத்தடுத்த பதிப்புகளில் விலையைக் குறைப்பது பற்றி அவர் சிந்திக்கலாம்.

நூல் : வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி
ஆசிரியர் :  முனைவர் சோ.கண்ணதாசன் (அலைபேசி 9442890293)
முகவரி : செல்ல தங்கம் பதிப்பகம், நாட்டார் தெரு, நடுக்காவேரி 613 101, தஞ்சாவூர் மாவட்டம் 
பதிப்பு : 2016
விலை : ரூ.150


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------------------------------------------

15 December 2018

அயலக வாசிப்பு : நவம்பர் 2018

நவம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், சன், அப்சர்வர் டான், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளையும், முதல் உலகப்போர் நிறைவுற்ற நாளன்று The Hindu நாளிதழில் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியான செய்தியினையும் காண்போம்.

2000இல் வெளியான, சிறந்த திரைப்படத்திற்கான விருது உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற, கிளாடியேட்டர் திரைப்படம் பார்த்துள்ளோம். நினைவிருக்கிறதா? அதன் தொடர்ச்சியாக 2ஆம் பகுதி விரைவில் வெளிவரவுள்ளது.


ஒருமுறைப் பயன்பாடு என்ற பொருளைக் கொண்ட ‘Single-use’ என்ற சொல் இந்த ஆண்டின் (2018) சிறந்த சொல்லாக காலின்ஸ் அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நெகிழியிடம் நாம் அடிமையானதையும், சிறிய பை தொடங்கி தேக்கரண்டி வரை நாம் பயன்படுத்துகின்ற, பிளாடிக்கால் ஆன பொருள்கள் இப்போது உலகை ஆக்கிரமித்துள்ளதையும் இது உணர்த்துகிறது.

உலகில் முதன்முதலாக செயற்கை அறிதிறன் செய்தி வாசிப்பாளரை (AI news anchor) சீனாவின் செய்தி நிறுவனமான சின்குவா (Xinhua) இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோர்வறியா அந்த வாசிப்பாளரின் குரல், முக உணர்வு வெளிப்பாடு போன்றவை வழக்கான செய்தி வாசிப்பாளரிடம் காணப்படுவதைப் போலவே இருக்கும். அவருக்கு கியூ காவோ (Qiu Hao) என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் தலையை லேசாக ஆட்டியபடியும், கண் சிமிட்டிய படியும், கண் புருவங்களை உயர்த்திய நிலையிலும் அவர் செய்தி வாசித்தபோது பார்வையாளர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வருடத்தின் 365 நாளும் நான் உங்களுடன் இருப்பேன். என்னை நீங்கள் வரையறையின்றி நகல் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு செய்தியினை அளிப்பதற்காக நான் பல வேறுபட்ட தளங்களில் இருப்பேன்” என்று அவர் கூறுகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் 11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் கூறுவர். அதன் நூற்றாண்டு நினைவு நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரிரேலியா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்ற முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள். போர் முடிந்து 100 ஆண்டுகள் நிறைவு அமைதியையே எங்கும் வெளிப்படுத்தியது.

ஜெர்மனி சரணடைந்தது என்ற தலைப்பில் 12 நவம்பர் 1918 நாளிட்ட The Hindu இதழில் முதல் உலகப்போர் நிறைவுற்றதைக் குறிக்கும் செய்தி இன்றைய இதழில் (The Hindu, OpEd, 12 November 2018) வெளிவந்துள்ளது. "ஜெர்மனி சரணடைந்தது மற்றும் தொடர் நிகழ்வுகளையொட்டி எங்களது அலுவலகத்திற்கு நாளை விடுமுறை. ஆதலால் நாளை இதழ் வெளிவராது" என்ற அறிவிப்புடன் "அமைதியின் உதயம்" என்ற தலைப்பில் தலையங்கம் அன்று வெளிவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செரினா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் ஒற்றை மேற்கோள் சிக்கல் என்னவென்று பார்ப்போம். GQ எனப்படுகின்ற ஆண்களுக்கான பேஷன் இதழ் மேலட்டையில் இந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் என்று மூவரையும், வில்லியம்சையும் வெளியிடவுள்ளது. செரினா வில்லியம்ஸ் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனை ஆவார். அவருடைய நல்ல திடகாத்திர உடலமைப்பு கடந்த ஆண்டு அவரை ஆண் என்று அழைக்கவைத்தது. மேலும் அவர் ஆண்களுக்கான விளையாட்டுகளை விளையாடுகிறார் என்றும் அப்போது கூறப்பட்டது. இவ்விதழ் அவரை 'Woman' of the year என்று கூறியுள்ளது Woman என்ற சொல் ஒற்றை மேற்கோளில் காட்டப்பட்டதே சிக்கலின் ஆரம்பம். இந்த ஒற்றை மேற்கோளானது அவருடைய பாலினத்தையும், அவருடைய பெண்மைத்தன்மையையும் குறை கூறுவதாக உள்ளதாக அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள். இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸ்போர்டு அகராதி 2018இன் சிறந்த சொல்லாக Toxic (தமிழில் நச்சு) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. எப்போதும் போல் அல்லாமல் பலவகையான பொருள்கள், சூழல்கள், நிகழ்வுகள் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. (Single use என்ற சொல்லை காலின்ஸ் அகராதி 2018இன் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுத்திருந்தது.)

உலகிலேயே உயரமான பெண், கிழக்கு சீனாவில் ஷாங்டன் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கின்ற சீன மாணவியான சாங் சியூ (11) என்று ஓர் ஐயத்தை எழுப்புகிறது டெய்லி மெயில். அவருடைய உயரம் 6 அடி 10 அங்குலம் (2.1 மீ) ஆகும். அவர் தேசிய கூடைப்பந்து சங்க விளையாட்டு வீரர்களின் சராசரி அளவான 6 அடி 7 அங்குலத்தைவிட சற்று உயரமாக உள்ளார். கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இங்கிலாந்தைச் சேர்ந்த, 6 அடி 2 அங்குலம் உயரமுள்ள ஸோபி ஹாலின்ஸ் (12) கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அவரைவிட உயரமான இவர் கின்னஸ் நிறுவனத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.கூட்டத்தில் எங்கிருந்தாலும் இவரை எளிதில் கண்டுகொள்ளலாம். கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டுமென்பதே இவருடைய விருப்பம். கின்னஸ் சாதனையில் அவர் இடம்பெற அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுக்கின்றார்களா என்பது இன்னும் தெரியவில்லை. (விரிவான பதிவினை இலக்கை நோக்கும் உயரமான பெண் என்ற தலைப்பில் முன்னர் படித்துள்ளோம்.)

22 நவம்பர் 1963. அந்த எட்டு நொடிகள் உலகை மாற்றிய நொடிகள். லீ கார்வே ஆஸ்வால்ட் ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து மூன்று முறை சுட, ஒரு குண்டு கென்னடியின் கழுத்தினை ஊடுறுவிச் சென்றது. ரகசியப் பிரிவினைச் சேர்ந்த கிளிண்ட், பின் வந்த காரிலிருந்து வேகமாக வந்து ஜனாதிபதியின் காரை நோக்கி ஓடி வருகிறார். ஜனாதிபதியையும், அவருடைய மனைவி ஜாக்கியையும் மனிதக்கவசமாக இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அவர் சில நொடிகள் தாமதித்து வந்துள்ளார். அவர் நெருங்கி வருவதற்குள் அடுத்த குண்டு கென்னடியின் தலையினைத் துளைத்துச் சென்றது. தற்போது 86 வயதாகும் கிளிண்ட், கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட 55ஆம் ஆண்டு நினைவு நாளில் தன் எண்ணங்களைப் பகிர்கிறார். கிளிண்ட் தான் இன்னும் வேகமாக ஓடி வந்திருக்கவேண்டுமோ என்று இன்றும் கூறுகிறார். ஜனாதிபதியின் மரணத்திற்கு தன்னைக் குற்றம் சாட்டிக்கொள்கிறார்.


Dictionary.com தளம் Misinformation என்ற சொல்லை இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது. Disinformation என்பதற்கு பதிலாக Misinformation என்ற சொல் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், போலிச்செய்திகளை (Fake news) எதிர்த்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக Misinformation தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆக்ஸ்போர்டு Toxic என்ற சொல்லையும், காலின்ஸ் Single use என்ற சொல்லையும் தேர்ந்தெடுத்தது நினைவிருக்கலாம்.


பிரான்சில் பெற்றோர்கள் இனி குழந்தைகளை அடிக்க முடியாது. பிரான்சில் 85 விழுக்காடு பெற்றோர்கள், குழந்தைகள் நல்லபடியாக வளர வேண்டும் என்பதற்காக தம் குழந்தைகளை அடிப்பதாகக் கூறுகிறார்கள். இருந்தபோதிலும், பிரெஞ்சு பாராளுமன்றம் பெற்றோர்கள் இனி அவ்வாறாக குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி பெற்றோர் உடல்ரீதியாகவோ, வாய்மொழி வழியாகவோ, உளவியல் அடிப்படையிலோ குழந்தைகளின்மீது எவ்வித செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது என்கிறது. இவ்வாறாகத் தாக்கப்படுகின்ற குழந்தைகள் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன என்று புதிய சட்டத்திற்கு ஆதரவு தருவோர் கூறுகின்றனர்.


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------------------------------------------

08 December 2018

2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி

ஆங்கில அகராதிகள் ஒவ்வோராண்டும் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஒரு சொல்லை, அதன் பயன்பாட்டு அடிப்படையில் தெரிவு செய்கின்றன. 2017இன் சிறந்த ஆங்கிலச் சொற்களாகயூத்க்வேக்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘ஃபேக் நியூஸ்’ (காலின்ஸ் அகராதி), ‘ஃபெமினிசம்’ (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) ஆகிய சொற்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. 2018க்கான சிறந்த ஆங்கிலச்சொல்லை இவ்வகராதிகள் தற்போது தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.   

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக,  ஆண்டின் சிறந்த இந்தி சொல்லை 2017 முதல் தெரிவு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதி ஆரம்பித்தது. அவ்வகையில் 2017இன் சிறந்த இந்தி சொல்லாக ஆதார் என்ற சொல் ஆக்ஸ்போர்டு அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரி 2018இல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவின்போது அறிவிக்கப்பட்டது.


இறுதிச்சுற்றில் வந்த பிற இந்தி சொற்கள் நோட்பந்திபாகுபலிவிகாஸ்ஸ்வட்ச் மற்றும் யோகா என்பனவாகும்.



கடந்த ஆண்டு தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் 2018க்கான சிறந்த இந்திச் சொல்லைத் தேர்வு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதி களத்தில் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்தி பேசுவோரிடம் கடந்த 12 மாதங்களில் அதிகமான ஆர்வத்தையும், தாக்கத்தை உண்டாக்கிய சிறந்த இந்தி சொல்லைத் தேர்வு செய்ய அவ்வகராதி வேண்டுகோள் வைத்துள்ளது. அது ஒரு புதிய சொல்லாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏதாவது ஒரு வகையில் 2018ஆம் ஆண்டுடன் தொடர்புகொண்டிருக்கவேண்டும், உரிய சொற்களை 27 நவம்பர் 2018 முதல் 9 டிசம்பர் 2018 வரை இந்தி லிவிங் டிஸ்னரிஸ் தளத்திலோ, இந்தி டிஸ்னரி ஃபேஸ்புக் வழியாகவோ தெரிவிக்கலாம் என்றும் அவ்வகராதி கூறியுள்ளது. பெறப்படுகின்ற சொற்கள் 12 பேர் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஜனவரி 2018இல் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இலக்கியத்திருவிழாவின்போது அறிவிக்கப்படவுள்ளது.

295 மில்லியன் மக்கள் இந்தி பேசுவதாகவும், உலகில் அதிகமாகப் பேசப்படுகின்ற நான்காவது மொழி இந்தி என்றும், அதிகம் பேசப்படுகின்ற 50 மொழிகளில் இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளாக பெங்காளி (7ஆவது இடம்), பஞ்சாபி (10ஆவது இடம்), தெலுங்கு (15ஆவது இடம்), மராத்தி (19ஆவது இடம்), தமிழ் (20ஆவது இடம்), உருது (21ஆவது இடம்), குஜராத்தி (26ஆவது இடம்), கன்னடம் (32ஆவது இடம்), மலையாளம் (34ஆவது இடம்), ஒடியா (37ஆவது இடம்), போஜ்பூரி (41ஆவது இடம்), மைதிலி (44வது இடம்), சிந்தி (46ஆவது இடம்) ஆகியவை அமைவதாகவும் ஆக்ஸ்போர்டு அகராதி கூறுகிறது.

கடந்த ஆண்டு, ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டு இந்தி சிறந்த சொல் அறிவிக்கப்பட்டபோது நல்ல வரவேற்பு இருந்ததாகவும், எண்ணிக்கை அடிப்படையிலும் வகையின் அடிப்படையிலும் அதிகமான சொற்கள் பெறப்பட்டதாகவும், இந்தி பேசுவோரிடேயே 2018இல் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஓர் இந்தி சொல்லை எதிர்பார்ப்பதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். 

ஆண்டிற்கான சிறந்த தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி களத்தில் இறங்கும் நாளை எதிர்பார்க்கிறோம். 


துணை நின்றவை :
https://blog.oxforddictionaries.com/2018/01/27/hindi-word-of-the-year-aadhaar/


-------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------

10 டிசம்பர் 2018இல் மேம்படுத்தப்பட்டது.