முகப்பு

04 April 2020

பஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா

அண்மையில் ஒரே பொருண்மையில் அமைந்த கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் ஒரே நாளில் பதிந்தது மறக்க முடியாத அனுபவமாகும். இவற்றில் ஏழு கட்டுரைகள் புதிதாக எழுதப்பட்டவையாகும். நான்கு கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டவையாகும்.

       27 மார்ச் 2020 அன்று தினமணி நாளிதழில் “அருள் தரும் பஞ்சராமர் தலங்கள்” என்ற தலைப்பில் (இரா.இரகுநாதன், அருள் தரும் பஞ்சராமர் தலங்கள், தினமணி, வெள்ளிமணி, 27 மார்ச் 2020, ப.1) ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.  அக்கட்டுரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சராமர் தலங்களான முடிகொண்டான் ராமர் கோயில், அதம்பார் கோதண்டராமர் கோயில், பருத்தியூர் ராமர் கோயில், தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில், வடுவூர் கோதண்டராமர் கோயில் ஆகியவற்றைப் பற்றி அமைந்திருந்தது. 

தமிழ் விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இதையொத்த “பஞ்சபூதத் தலங்கள்”, “பஞ்சகுரோசத் தலங்கள்”, “சப்தஸ்தானம்”, “சப்த மங்கை தலங்கள்”, “சப்தவிடங்கத் தலங்கள்”, “அட்டவீரட்டானக் கோயில்கள்” போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. அதனடிப்படையில் “பஞ்சராமர் தலங்கள்” என்ற தலைப்பில் ஒரு பதிவினை உருவாக்கி அதில் ஐந்து கோயில்களின் பட்டியலைக் கொண்ட புதிய கட்டுரை சேர்க்கப்பட்டது.


ஐந்து கோயில்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் தேடியபோது   முடிகொண்டான் ராமர் கோயில், பருத்தியூர் ராமர் கோயில், வடுவூர் கோதண்டராமர் கோயில் ஆகிய மூன்று கோயில்களைப் பற்றிய பதிவுகள் இடம்பெறாமல் இருந்ததைக் காணமுடிந்தது. அதம்பார் கோதண்டராமசாமி கோயில், தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில் ஆகிய இரு கோயில்களைப் பற்றிய பதிவுகள் இருந்தன. இல்லாத மூன்று கோயில்களுக்கு புதிய பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. முன்னரே இருந்த கோயில்களைப் பற்றிய பதிவுகள் மேம்படுத்தப்பட்டன. அனைத்திற்கும் உரிய மேற்கோள்கள் தரப்பட்டன. 

ஆங்கில விக்கிப்பீடியா
   ஆங்கில விக்கிப்பீடியாவில் "Mudikondan Kothandaramar Temple" என்ற கட்டுரையில் Pancharama Kshetrams எனக்குறிப்பிடப்பட்டு ஐந்து கோயில்களின் பட்டியலைக் காணமுடிந்தது.  "Kothandaramar Temple, Adambar", "Kothandaramar Temple, Paruthiyur", "Kothandaramar Temple, Vaduvur" ஆகிய மூன்று கோயில்களைப் பற்றிய பதிவுகள் இடம்பெறாமல் இருந்ததைக் காணமுடிந்தது. "Kothandaramar Temple, Thillaivilagam" என்ற தலைப்பில் பதிவு இருந்தது.  ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத மூன்று கோயில்களுக்கு புதிய பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. முன்னரே இருந்த கோயில்களைப் பற்றிய பதிவுகள் மேம்படுத்தப்பட்டன. அனைத்திற்கும் உரிய மேற்கோள்கள் தரப்பட்டன.

அவ்வகையில் ஒரே நாளில் தமிழ் விக்கிப்பீடியாவில் நான்கு கட்டுரைகளும், ஆங்கில விக்கிப்பீடியாவில் மூன்று கட்டுரைகளும் புதிதாக எழுதப்பட்டன.  ஒரே நாளில் தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டு கட்டுரைகளும், ஆங்கில விக்கிப்பீடியாவில் இரண்டு கட்டுரைகளும் மேம்படுத்தப்பட்டன. விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் வலது ஓரத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள “மற்ற மொழிகளில்” என்ற பகுதியில் அந்தந்த தமிழ்க் கட்டுரைக்கான அந்தந்த ஆங்கிலக் கட்டுரைகள் இணைக்கப்பட்டன. இதன்மூலமாக தமிழ்க்கட்டுரையிலிருந்து உரிய ஆங்கிலக்கட்டுரையையும், ஆங்கிலக்கட்டுரையிலிருந்து தமிழ்க்கட்டுரையையும் எளிதாக வாசிக்க முடியும்.

முதன்முறையாக ஒரு பொருண்மையை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதிய நாளன்றே ஆங்கில விக்கிப்பீடியாவிலும் அதனைப் பற்றி எழுதியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 

ராமர் - ஆராமர்
ஆங்கில விக்கிப்பீடியாவில் பிறிதொரு இடத்தில் Pancharama Kshetras (Pancharama Kshetrams அல்ல) என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஐந்து சிவன் கோயில்களைப் பற்றிக் காணமுடிந்தது. அக்கட்டுரையில் "These places (or Aaramas) are as follows..."  என்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஐந்து சிவன் கோயில்களைப் பற்றிய விவரங்கள் இருந்தன. ஒப்பிட்டுப்பார்க்கும்போது பஞ்ச+ராமர் (ramas) கோயில், பஞ்ச+ஆராமர் (aaramasகோயில் என்ற வேறுபாட்டினைக் காணமுடிந்தது. இருப்பினும் ஒரு கட்டுரையில் Kshetras என்றும், மற்றொரு கட்டுரையில் Kshetrams என்றும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இரு சொற்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாகும். இந்த வேறுபாட்டினை சரியாக கவனிக்காவிட்டால் இந்த இருவகைக் கோயில்களைப் பற்றிய புரிதல் சிரமமாகவே அமையும். 
தமிழ் விக்கிப்பீடியாவில் பார்த்தபோது பீமாவரம் சிவன் கோயில் என்ற கட்டுரையில் "பஞ்சஹாரம் (ஐந்து தோட்டங்கள்) என்று அழைக்கப்படுகின்ற ஐந்து சிவன் கோயில்களில் பீமாவரம் சிவன் கோயிலும் ஒன்றாகும். பிற கோயில்கள் அமராவதி, திராட்சராமம், சாமல் கோட்டை ஆகிய இடங்களில் உள்ளன. இவ்வூர் தட்சிண கயா என்றும் அழைக்கப்படுகிறது" என்ற செய்தியானது பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதிய தேவார வைப்புத்தலங்கள் (வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) என்ற நூலின் மேற்கோளைக் கொண்டு அமைந்திருந்ததைக் காணமுடிந்தது. குறிப்பிட்ட இந்த கட்டுரையானது தேவார வைப்புத்தலங்கள் பட்டியலில் விடுபட்ட கோயில்களைப் பற்றி எழுதியபோது என்னால் ஆரம்பிக்கப்பட்டதை அறிந்தேன். வாய்ப்பிருப்பின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள இக்கோயில்களில் பிற நான்கு கோயில்களைப் பற்றி எழுதவுள்ளேன்.