முகப்பு

21 November 2020

அப்பாவுக்காக... : ஜ. பாக்கியவதி

என் மனைவி திருமதி பாக்கியவதி தன்னுடைய இரண்டாவது படைப்பான  “அப்பாவுக்காக...'' என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். அவருடைய தந்தையும் என்னுடைய மாமனாருமான திரு திருவண்ணாமலை  நாடார் (1927-1998) அவர்களைப் பற்றிய நினைவலைகளை தன்னுடைய சகோதர சகோதரிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெற்று ஒருங்கிணைத்துள்ளார்.  தன் தாயாரின் (திருமதி தி.தில்லையம்மாள் (1931-2017)) கைவைத்திய முறையைப் பற்றியும், இளம் வயதில் இறந்த தன் சகோதரரைப் பற்றியும் இதில் எழுதியுள்ளார். 


அவருடைய மகன்கள்/மருமகள்கள், மகள்கள்/மருமகன்கள், பேரன்கள்/பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்/கொள்ளுப்பேத்திகள் என்ற வகையில் சுமார் 70க்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொண்டு மின்னஞ்சல், வாட்ஸ்அப், குரல்வழிப்பதிவு, கூகுள்வழிப்பதிவு என்ற பல நிலைகளில் பெற்றுள்ளார். 

பதிவுகள் தாமதமான நிலையில் உரியவர்களை அலைபேசியில் அழைத்து, நினைவூட்டி அவற்றைப் பெற்று இணைத்தார். அவ்வாறாகப் பெற்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பக்கங்களை மடிக்கணினியில் தானே தட்டச்சு செய்து, திருத்திய பின் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் திருத்தத்திற்காக அனுப்பினார். இறுதியாக ஒட்டுமொத்தமாக அதனைப் பார்க்கும்போது அவர் மேற்கொண்ட பணியினைக் கண்டு வியந்தேன்.நுணுக்கமாகவும், செறிவாகவும் இந்நூல் அமைய வேண்டும் என்ற நோக்கில் அவர் எடுத்த முயற்சி போற்றத்தக்கதாகும். 

ஒரு குடும்பத்தில் இருந்து வாழ்ந்து மறைந்தவரைப் பற்றிப் பதியும்போது அது இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும். அவர்களின் பழக்கவழக்கங்கள், வழிகாட்டல்கள், நேர்மைத்தன்மை, மனித நேயம், குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்திச்சென்ற விதம் போன்றவற்றை வளரும் தலைமுறையினர் அறிந்து கடைபிடிக்க இது போன்ற பதிவு உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலைக் காண்போர் தம் பெற்றோரைப் பற்றி எழுத மிகவும் ஆர்வம் கொள்வர். கூட்டுக்குடும்ப முறை அருகி வருகின்ற இக்காலகட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதாகும்.

என் மனைவியின் உரையிலிருந்து : 

"...நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு என் கணவர் படிக்கச் சொன்னார். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லை. மகன்கள் படித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு கம்ப்யூட்டரில் தமிழ் டைப் அடிக்க கற்றுக்கொடுத்தார்கள் அவர்கள் வேலைக்குச் சென்றபிறகு தினமும் நாளிதழ்களும், நூல்களும் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கவும் எழுதவும் ஆரம்பித்த நான் தொடர்ந்து என் கணவரும் மகன்களும் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் பிழைத்திருத்தம் செய்ய ஆரம்பித்தேன். தொடர் வாசிப்பு என்னை எழுதத் தூண்டியது..." 

"...கொரோனா நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த எண்ணினேன்..... எங்கள் பெற்றோரைப் பற்றி எங்களைவிட பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் எழுதியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்தையும் நேரடியாக நானே மடிக்கணினியில் தட்டச்சு செய்தேன்.... அப்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது....." 

எங்கள் மகன்களின் அணிந்துரையிலிருந்து : 

"...அனைத்தையும் தட்டச்சு செய்து, ஒரு வடிவத்திற்குக் கொண்டு வந்த பணியை மேற்கொண்டவர் ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தவர் என்பதை அறியும்போது இதனை ஒரு பெரும் சாதனையாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது..." 

"நூலுக்கான வரைவை எங்களின் பார்வைக்கு அம்மா அனுப்பியதும், 'அக்னிச் சிறகுகள்' நூலில் அப்துல் கலாம் ஒரு நாள் இரவு முழுவதும் உட்கார்ந்து ராக்கெட்டின் வடிவமைப்பைச் செய்து முடித்து தன் துறைத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கும் காட்சிதான் எங்கள் நினைவிற்கு வந்தது....." 

"ஒருவருடைய செல்வத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவருடைய உழைப்பை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவருடைய பொருள்களை எடுத்துக்கொள்ள முடியும், ஆனால் ஒருவருடைய பெயரை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்கள் தாத்தா தன் பெயரையும் முகவரி தெரியாத பல சிறு குறு வியாபாரிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளார். இதைவிட பெரிய கொடை என்னவாக இருக்க முடியும்? அவருடைய கொடையும் நல்லெண்ணமும்தான் நம்மை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது."

நூல் விவரம்: அப்பாவுக்காக..., ஜ. பாக்கியவதி, முதல் பதிப்பு, நவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம், தஞ்சாவூர், ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com. 


21 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது.

14 November 2020

தீபாவளி நினைவுகள் : தினமணி

என் இளம் வயதில், எங்கள் வீட்டில் மளிகை சாமான் பட்டியலை என் ஆத்தா சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். அதில் முதலில் இடம் பெறுவது விரளி மஞ்சள் ஆகும். தொடர்ந்து பிற மளிகைப்பொருள்களின் பெயர்களை அவர் சொல்லச்சொல்ல எழுதுவேன். வழக்கமாக வீட்டில் பெரும்பாலான வேலைகளை என்னை வைத்தே எங்கள் ஆத்தா ஆரம்பிப்பார். பொருள்கள் வந்தவுடன் என்னைவிட்டுத் தான் அனைத்தையும் பிரிக்கவும், அடுக்கி வைக்கவும் சொல்வார். சில சமயங்களில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் எடுத்து தன் கையில் கொடுக்கச் சொல்வார். என் கை ராசி என்றும், அதனால் அவ்வாறு செய்வதாகவும் சொல்வார். சில சமயங்களில் மளிகை சாமான் பட்டியலில், எண்ணெய் உள்ளிட்ட சிலவற்றின் அளவில் அதிகமாகப் போடச் சொல்வார். அப்போது, அந்த மாதத்தில் ஏதோ ஒரு விழா வருவதை அறிந்துகொள்வோம். பண்டிகைக் காலங்களில்  இவ்வாறாக பட்டியலில் சில கூடுதல் பொருள்களும் சேரும். தீபாவளியின்போது முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை போன்றவை எங்கள் வீட்டு பலகாரங்களில் முக்கிய இடம் பிடித்தவையாகும். கூடுதலாக, அதிக அளவிலான மளிகைப் பொருள்கள் வழக்கமான மாதாந்திரப் பட்டியலில் சேரும்போதே தீபாவளி நெருங்கிவிட்டதை உணர்வோம். 

கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதன் தெருவில் இருந்த எங்கள் இல்லத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள்களிலிருந்து கொண்டாடிய பண்டிகைகளில் நினைவில் நிற்கும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பாடல் பெற்ற தலங்களிலும், மங்களாசாசனம் பெற்ற தலங்களிலும், பிற கோயில்களிலும் தொடர்ந்து நடைபெறுகின்ற விழாக்களின் காரணமாக கும்பகோணம் ஒவ்வொரு நாளும் விழா நாளாகவே எங்களுக்குத் தோன்றும். 

சித்ராப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் ஏதாவது ஒரு விழா கொண்டாடப்படுவதைக் காணமுடியும். இல்ல விழாவாயினும், கோயில் விழாவாயினும் எங்களுக்குக் கொண்டாட்டம். 

இளமைக்காலத்தில் விழா என்றால் மகிழ்ச்சியைத் தருவதற்கு முக்கியமான காரணங்கள் உண்டு. அன்று பள்ளிக்குப் போக வேண்டியதில்லை. ஆசிரியர் தருகின்ற வீட்டுப்பாடங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இனிமையாகப் பொழுதைக் கழிக்கலாம். 

தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே  பலகாரம் செய்வதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தாத்தா, ஆத்தா, அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்கு வாங்கப்பட்ட துணிகளை தைக்கக் கொடுத்துவிடுவோம். தைத்து வந்தபின் அவ்வப்போது அவற்றை ஆசையோடு எடுத்துப் பார்ப்போம். புத்தாடைகளைப் பற்றி தெரு நண்பர்களிடமும், பள்ளி நண்பர்களிடமும் பெருமையாகப் பேசிக் கொள்வோம். 

பொங்கல் பண்டிகையைவிட தீபாவளியின்போது சற்று குறைவாகவே வீட்டைச் சுத்தம் செய்வோம். இரு திண்ணைகள், வரவேற்பறை, கூடங்கள், சாமியறை, சமையலறை, பிற அறைகள், மாடிப்பகுதி போன்றவற்றை ஒவ்வொன்றாக சுத்தம் செய்வோம். எங்கள் அப்பா செய்யும் வேலைக்கு நாங்கள் துணையாக இருப்போம். ஏணியின் கால்களை நானோ, தம்பியோ, தங்கையோ பிடித்துக் கொள்ள தென்னை விளக்குமாறால் எங்கள் அப்பா வீடு முழுவதும் ஒட்டடை அடிப்பார்கள். அப்போது அதிகமான தூசிகள் வரும். சமயங்களில் ஓட்டிலிருந்து தேள்கள் கீழே வந்துவிழும். கவனமாக ஒட்டடை அடிப்போம். இதே மாதிரியான வேலையை பொங்கலின்போதும், பிற முக்கியமான பண்டிகைகளின்போதும் செய்வோம். 

பட்டாசு கொளுத்தினாலோ, வெடி வெடித்தாலோ பேரப்பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று எங்கள் தாத்தா, அப்பாவிடம் குறைவாகவே அவற்றை வாங்கச் சொல்வார். ஆதலால் எங்களின் தீபாவளிப் பட்டியலில் சிறிது அளவே வெடிகளும், பட்டாசுகளும் இருக்கும். இருந்தாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டிலிருந்து தீபாவளியன்று வருகின்ற அன்பளிப்பில் இருக்கும் பட்டாசுகளை தாத்தாவிற்குத் தெரியாமல் எடுத்துவைத்து, வெடிக்க ஆரம்பித்துவிடுவோம்.    

வீட்டு சுத்தம், புத்தாடைகள் ஒரு புறமிருக்க மளிகை சாமான்கள் மூட்டையாக வீட்டுக்கு வந்த பிறகு தீபாவளி பலகாரத்திற்கானவற்றை ஆத்தா தனியாக எடுத்து வைப்பார். பலகாரங்கள் செய்வதற்காக, வீட்டின் அருகில் உள்ள மில்லில் அரைப்பதற்காக அரிசி, ஜீனி என்று ஒவ்வொன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுப்பார். அதனை நானோ என் சகோதர சகோதரிகளோ எடுத்துச் சென்று அறைக்கப் போவோம். மில்லில் யார் யார் வீட்டிலிருந்து அரைக்க வந்திருக்கிறார்கள், என்னென்னவற்றை அரைக்க வந்திருக்கிறார்கள் என்று கவனமாகக் கவனிப்போம். அவர்கள் அரைப்பது ஏதாவது நாங்கள் எடுத்துச் செல்லாவிட்டால் வீட்டில் வந்து கேட்டு, அது எந்த பலகாரத்திற்காக என்பதை அறிந்து அதையும் செய்து கொடுப்பதற்காகக் கேட்போம். இவ்வாறு பலகாரங்களின் பட்டியல் சில சமயங்களில் நீண்டு விடுவதும் உண்டு. 

பலகாரங்கள் செய்யும்போது ஆத்தாவுடன் எங்கள் அம்மா துணையாக இருப்பார். சில சமயங்களில் எங்கள் அப்பாவின் தங்கையான எங்கள் அத்தையும் வந்து சேர்ந்து கொள்வார். இவ்வாறாக பல வீடுகளில் பலகாரங்கள் தயாரிப்பதை நாங்கள் பார்த்துள்ளோம். தீபாவளி பலகாரங்களை நாங்கள் இருக்கும்போது செய்யச் சொல்வோம். நாங்கள் பள்ளியைவிட்டு வந்தபின்னர் அனைவரும் சேர்ந்து அவற்றைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அருகே இருந்து முறுக்கு, அதிரசம் என்று ஒவ்வொன்றாக செய்வதைப் பார்ப்போம்.  செய்யும்போதே அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து வெளியில் சென்று தின்றுவிட்டு வருவோம். பலகாரங்களை செப்புத்தவளைகளிலும், பிற பாத்திரங்களிலும் அடுக்கி உயரமான இடத்தில் வைத்துவிடுவார்கள். அவற்றில் ஒரு பகுதியை எடுத்து அவ்வப்போது நாங்களே எடுத்துத் தின்பதற்கு வசதியாக சிறிய பாத்திரத்தில் எங்கள் உயரத்திற்கு எட்டும்படியான இடத்தில் வைப்பார்கள். இவ்வாறாக தயாரிக்கப்படுகின்ற பலகாரங்கள் தீபாவளி முடிந்த பின்னரும்கூட பல வாரங்கள் இருந்துகொண்டே இருக்கும். சிறிது சிறிதாக அந்தந்த பாத்திரங்களிலிருந்து பலகாரங்கள் குறைய ஆரம்பிக்கும். அடுத்த தீபாவளிக்கான நாளை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பிப்போம். 

எங்கள் ஆத்தா செய்யும்போது அம்மாவும், அத்தையும் துணையாக இருப்பார்கள். ஆத்தாவிற்குப் பிறகு எங்கள் அம்மா அவ்வாறே செய்ய ஆரம்பித்தார்கள். தொடர்ந்து தற்போது எங்கள் வீட்டில் அவர்களைப்போலவே நாங்கள் வேலைகளைச் செய்யும்போது எங்கள் மகன்களும், மருமகள்களும் துணையாக இருப்பதைக் காண்கிறேன். 

இருந்தாலும் மளிகைப்பட்டியல் போடும்போதும், மில்லுக்குப் போகும்போதும் பலகாரங்கள் தயாரிக்கும்போதும் ஆத்தாவின் நினைவு வந்துவிடும். மளிகை சாமான் பட்டியலை எழுத ஆரம்பிக்கும்போதே பிள்ளையார் சுழி போடு என்று எங்கள் தாத்தா சத்தமாகக் கூறுவதைப் போல இருக்கும். இவ்வாறான நினைவுகள்தானே நம் பண்பாட்டையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன. இந்த தீபாவளிக்காக, எங்கள் மகன் எங்கள் பேரன்களுக்காக பட்டாசு வாங்கப் பட்டியல் போட ஆரம்பித்தபோது, வெடியெல்லாம் வேண்டாம், பட்டாசு மட்டும் போதும் என்று சொன்னேன். அப்போது என் தாத்தா எனக்காக சொன்னது நினைவிற்கு வந்தது. 

நன்றி : தீபாவளி நினைவுகள், தினமணி, திருச்சி, 14, நவம்பர் 2020






31.10.2021இல் மேம்படுத்தப்பட்டது.