முகப்பு

23 January 2021

100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு

எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு (9597961646) எழுதியுள்ள முதல் நூல் 100 நூறு வார்த்தை கதைகள்.


பாத்திரங்களின் அறிமுகம், சூழல், கதையின் மையக்கரு என்ற அனைத்தையும் 100 வார்த்தைகளுக்குள் உள்ளடக்கி ஒரு கதையைக் கூறுவது என்பது சற்று சிரமமே. எந்தக் கருத்தைக் கூறுவது, எதனை விட்டுவிடுவது என்ற நிலையில் அவர் எதிர்கொண்ட நிலையை, கதைகளைப் படிக்கும்போது உணரமுடிகிறது. இருந்தாலும் இடைவெளி எதுவும் வாசகரால் உணரப்படா வகையில் கதைகளை முழுமையாக நிறைவு செய்துள்ளார். அந்த முயற்சியினை மேற்கொண்டு முடிந்தவரை தாம் எண்ணியதை வெளிப்படுத்துகின்ற நூலாசிரியரின் பாணி பாராட்டத்தக்கது. சமூக நிலையோடு கூடிய யதார்த்தத்தினை வெளிப்படுத்தும் கதைகள் மட்டுமன்றி அறிவியல், வரலாறு என்ற பல துறைகளைச் சார்ந்த கதைகளையும் இத்தொகுப்பில் காணமுடிகிறது.

“…..சரியாக 100 வார்த்தைகளில் கதை சொல்ல முயல்வதால் வர்ணனைகள், விளக்கங்கள் இல்லாமலும், பாத்திரங்களின் குணாதிசயங்களும், சில கதைகளின் பின்னணியும், சில கதைகளின் முடிவும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிதமாகவும் அமைந்திருக்கும்…..” என்றும் தமிழில், முதல் முறையாக 100 வார்த்தை கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியே இந்நூல் என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.

விபத்தில் குரல் இழந்த நிஷாவின் ஆவலை வெளிப்படுத்தும் அரங்கேற்றம் (ப.1), வெள்ளாம சரியில்லாத காட்டில் தன் நம்பிக்கையை வைத்திருக்கும்  பொன்னனின் அறுவடை (ப.2), பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்ற அரசின் அறிவிப்பு உண்டாக்கும் பாதிப்பில் தேடி வரும் உதவி (ப.3), மகனின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும்போது தன் தந்தையின் கவலையைப் போக்கும் அந்த மகன் (ப.5)  கேன்சரை எதிர்கொண்டவளுக்குக் கிடைக்கும் இன்ப அதிர்ச்சி (ப.6), பிரபல நடிகனின் வீழ்ச்சி அவனை கேன்சர் நோயாளி வேடமேற்க இட்டுச்செல்லும் அவலம் (ப.11), பெண் பிள்ளைக்குக் காலேஜ் எதற்கு என்று கேட்ட பாட்டியிடம் சண்டைபோட்டவள் அதே பாட்டிக்கு இருதய மாற்று சிகிச்சை செய்யும் நிலை (ப.20), பெத்த குழந்தைகளுக்கு எப்பவுமே நான் அம்மாதான் என்று கூறும் வாடகைத்தாயின் பெருமனம் (48), வீடியோகான்பரன்சுக்காக தம்மை அலங்காரித்துக்கொள்ளும் குடும்பத்தார் (57), ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை அவர்களின் நிலையறியாமல் மாற்றுக்கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகம் (63) என்றவாறு கதைகள் அமைந்துள்ளன.

வலையுலகிலும், அமேசான் தளத்திலும் சாதனை படைத்துவருகின்ற நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் நூலின் அணிந்துரையில் “…இவரது ஒவ்வொரு கதையும் நம்மை ஏதோ ஒரு விதத்தில்  பாதிக்கத்தான் செய்கின்றன. இளையவர்தான், ஆனாலும் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. உலகியலை நன்கு அறிந்தவர் என்னும் உண்மை புரிகிறது. எழுத்துலகில் சாதிக்கத் துடிக்கும் இவரது மன நிலை தெளிவாய் தெரிகிறது. சாதிப்பார் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. ஏனெனில், இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் களம் அப்படிப்பட்டது. தமிழில் யரும் நுழையாத தளத்திற்குள் நுழைந்து, தனித்து நின்று வாளெடுத்துச்சுழற்றி, வெற்றி வீரராய் வெளி வந்திருக்கிறார்….. தமிழில் இதுவரை இல்லாத ஒரு புது வடிவத்தை, புது உருவத்தை, தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகம் செய்திருக்கிறார். இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் புனைகதை மன்றமானது 1980ஆம் ஆண்டுவாக்கில் சிறுகதை வடிவத்தில் ஒரு புதுமையைப் புகுத்தி உருவாக்கிய Drabble என்ற வடிவத்தை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்….” என்று குறிப்பிடுகிறார்.

வித்தியாசமான பாணியை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ள நூலாசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

நூலின் படியை நாங்கள் பெற்ற இனிய தருணங்கள்



அச்சு நூலைப் பெற : 1) தமிழ்க்குடில் பதிப்பகம், 19, எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர் விரிவாக்கம், கீழ வாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9488969722, நவம்பர் 2020, ISBN: 9789354260575, 120 பக்கங்கள், ரூ.120

2)http://www.tamilbookman.in/products/general-tamil-books/100-varthai-kadhaigal-j-sivaguru.html?fbclid=IwAR0U4jO7Nd_E82DbQRqOrH4J5dC_spodIjhYM9QUJE2-TA7w1Z2fZpDFIJ8

மின்னூலைப் பெற: https://www.amazon.in/dp/B08PSCXRYZ

கருத்தினை பதிய: https://www.goodreads.com/book/show/56170846-100



 

01 January 2021

பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412

முகம் இதழில் என் ஆய்வினையும், களப்பணியையும் பற்றி வெளியான பதிவினை இரு வலைப்பூக்களிலும் பகிர்வதில் மகிழ்கிறேன்.






இளமைப்பருவத்தில் சில எண்ணங்களைச் சுமந்துகொண்டு வாழ்க்கையில் பயணிக்கும் அனைவரும் தாம் நினைத்தவற்றை அடைந்துவிடுவதில்லை. வாழ்க்கைச்சூழல் வேறுவேறு பாதைகளுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. இருப்பினும், எழுச்சி எண்ணங்கள் உடையோர் தமக்குக் கிடைத்த பாதையில் ஆற்றலுடன் பயணித்துப் புதிய இலக்குகளை எட்டிப் புகழ் வாழ்வில் பூரித்துப் பயணிக்கின்றனர். 

ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டத்திற்கு கல்கியின் வரலாற்றுப் புதினங்களை ஆய்வு செய்ய நினைத்தவர், பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற நாகப்பட்டின விகாரைப் பற்றிய சிந்தனையில் பௌத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய நேர்ந்து பௌத்தவியலுக்குப் பல அருங்கொடைகள் அளித்திருக்கின்றார் முனைவர் பா.ஜம்புலிங்கம். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திருவாளர் பாலகுருசாமி-திருமதி தர்மாம்பாள் இணையருக்கு 02.04.1959இல் பிறந்தவர் பா.ஜம்புலிங்கம். தொடக்கக் கல்வியை கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இளங்கலை பொருளாதாரம் படிப்பை அரசினர் ஆடவர் கல்லூரியிலும் நிறைவு செய்தவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சு-சுருக்கெழுத்தராக பணியில் சேர்ந்த இவர், படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று உதவிப்பதிவாளராக உயர்ந்து 30.04.2017இல் பணி நிறைவு பெற்றவர்.

வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணங்கொண்ட இவர், அரசுப்பணியில் இருந்துகொண்டே, பகுதிநேரக்கல்வியாக சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முடித்தார். பின்னர் முனைவர் பட்டம் பெறவேண்டும் என்னும் வேட்கையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘தஞ்சை மாவட்டத்தில் பௌத்தம்’ (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். பின்னர், இவர் பணியாற்றிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் உள்ளடங்கிய சோழ நாட்டினை களமாக்கி, ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.  

தமிழகத்தில் பௌத்தம் என்றவாறான தலைப்புகளில் உள்ள நூல்களில் புத்தர் சிலைகள் தொடர்பான குறிப்புகளை சேகரித்து கள ஆய்வின் மூலம் மேலும் பல அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவு’ என்பது இவரது ஆய்வில் கிடைத்த தகவல்.

அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பரவாய், புட்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மானம்பாடி, விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளனூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்படுவதாகவும், அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்றும், பெரண்டாக்கோட்டையில் சாம்பான் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி என்றும் புத்தரை வழிபடுவதாகக் குறிப்பிடுகின்றார். புதூரில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியிலும், மார்பிலும் திருநீறு பூசி வழிபடுவதாகவும், மணமாகாத பெண்கள் இச்சிலையைச் சுற்றி வந்தால் திருமணம் நடைபெறும் என்று நம்புவதாகவும் குறிப்பிடுகின்றார்.

நாகப்பட்டினத்திலுள்ள புத்தரின் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்தியிருப்பதுடன், நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள் சோழ மன்னர்கள் பௌத்தத்திற்கு அளித்த ஆதரவையும், அக்காலத்தில் பௌத்தம் உயரிய நிலையில் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), மணலூர், திருச்சி மாவட்டம் மங்கலம், திருச்சி, திருவாரூர் மாவட்டம் புதூர்,  குடவாசல், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை,  வளையமாபுரம், கண்டிரமாணிக்கம்,  இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன்பட்டனம், அரியலூர் மாவட்டம் குழுமூர், பிள்ளைபாளையம், கடலூர் மாவட்டம் ராசேந்திரப்பட்டினம்,  நாகப்பட்டினம் மாவட்டம் கிராந்தி ஆகிய இடங்களில் 17 புத்தர் சிலைகளைக் கண்டறிந்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், திருவாரூர் மாவட்டம் தப்ளாம்புலியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி, திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், அடஞ்சூர், செருமாக்கநல்லூர், சுரைக்குடிப்பட்டி, திருவாரூர் மாவட்டம் பஞ்சநதிக்குளம், தோலி, பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு, நாட்டாணிஆகிய இடங்களில் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டறிந்துள்ளார்.

இவருடைய முதல் நூல் “வாழ்வில் வெற்றி” என்னும் சிறுகதைத்தொகுப்பு நூலாகும் (2001). “பீர்பால் தந்திரக்கதைகள்”  (Tantric Tales of Birbal), “மரியாதைராமன் தீர்ப்புக்கதைகள்” (Judgement Stories of Mariyathai Raman), (2002), “தெனாலிராமன் விகடக்கதைகள்”  (Jesting Tales of Tenali Raman), (2005), “கிரேக்க நாடோடிக் கதைகள்” (Nomadic Tales from Greek) (2007) ஆகிய ஆங்கில நூல்களும், உயிரினங்கள் உருவாக்குவது பற்றிய “படியாக்கம்” என்னும் உயிரியல் நூலும் (2004)  “தஞ்சையில் சமணம்” (2018) என்னும் நூலும் இவர் படைத்துள்ளார். “விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள்” மின்னூலும் படைத்துள்ளார். மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், ஆய்விதழ்களிலும், முன்னணி நாளிதழ்களிலும், தமிழ் விக்கிப்பீடியாவில் 1000க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், ஆங்கில விக்கிப்பீடியாவில் 300க்கும் மேற்பட்ட  கட்டுரைகளும் ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற வலைப்பூவிலும், ‘முனைவர் ஜம்புலிங்கம்’ என்ற வலைப்பூவிலும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகின்றார். 

இவருடைய சாதனைகளைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் ‘சித்தாந்த ரத்னம்’ என்னும் பட்டத்தையும், தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம்  ‘அருள்நெறி ஆசான்’ பட்டத்தையும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘பாரதி பணிச்செல்வர்’ பட்டத்தையும்,  புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்கம், ‘முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர்’ பட்டத்தையும் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொல்கத்தா, பாட்னா, நாக்பூர், மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், பெங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், பரோடா, ராஜ்கோட் ஆகிய இடங்களிலுள்ள அருங்காட்சியகங்களிலிருந்தும், பாகிஸ்தான் (லாகூர், கராச்சி), பங்களாதேசம், மியான்மர், இலண்டன், இலங்கை ஆகிய இடங்களிலுள்ள அருங்காட்சியகங்களிலிருந்தும் புத்தர் செப்புத்திருமேனி படங்களைத் திரட்டி ஆய்வேட்டில் இணைத்திருப்பதுடன், தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் சென்று மிகுந்த சிரமங்களுக்கிடையே களப்பணியாற்றி பௌத்தம் பற்றிய ஆய்வு மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இவரது இப்பணி பௌத்தவியல் வரலாற்றிற்கு அருங்கொடை எனலாம்.

தாம் கண்டறிந்த தகவல்களை நூல்களாக்கித் தமிழுலகிற்கு அளித்து நிலைத்த புகழ் பெற வாழ்த்துகிறோம்.

பேசி: 9487355314

நன்றி : சிறப்பாசிரியர், முனைவர் இளமாறன், முகம், இதழ் 455, பொங்கல் இதழ், சனவரி 2011. முகம் (www.mugamidhazh.net.in) 






5 ஏப்ரல் 2023இல் மேம்படுத்தப்பட்டது.