முகப்பு

22 August 2021

ஜெர்மானிய இளைஞர்களின் 2020ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலச்சொல்

வாசகர்களின் வாழ்வில் முக்கியமான இடத்தை அகராதிகள் பெறுகின்றன. காலச்சூழலுக்கேற்ப பயன்பாட்டு நிலை மற்றும் பயன்படுத்தப்படும் சூழல் என்ற வகையில் புதிய சொற்கள் அகராதியில் இடம் பெற ஆரம்பிக்கின்றன. இதனைத் தவிர குறிப்பிட்ட சில சொற்கள் ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காரணத்தின் அடிப்படையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாக அமைந்துவிடுகின்றன.  அந்த வகையில் அந்தந்த ஆண்டிற்கான அந்த மொழியின் சிறந்த சொல் தெரிவு செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மனி (1971), ஜப்பான் (1995), ரஷ்யா (2007),  டென்மார்க் (2008), போர்ச்சுக்கல் (2009), நார்வே (2012), உக்ரைன் (2013) உள்ளிட்ட நாடுகள் ஆண்டின் தத்தம் மொழிக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்து அவ்வப்போது அறிவிக்கின்றன. 




மெரியம் வெப்ஸ்டர் அகராதி (2003), ஆக்ஸ்போர்டு அகராதி (2004), ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம் (2006), ஆஸ்திரேலிய ஆங்கிலேய மொழிக்கான மக்கையர் அகராதி (2006), கேம்பிரிட்ஜ் அகராதி, டிக்ஸனரி இணைய தளம் (2010), காலின்ஸ் அகராதி  (2013) உள்ளிட்ட ஆங்கில அகராதிகளும், அகராதிகளின் இணையதளங்களும் சிறந்த ஆங்கிலச்சொல்லை பல ஆண்டுகளாகத் தெரிவு செய்கின்றன. 

ஜெர்மனியில் ஒவ்வோராண்டும் சொல் தேர்வில் மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 1971 முதல் சிறந்த ஜெர்மானியச்சொல்லும் (Word of the Year : Germany), 1991 முதல் பொருத்தமற்ற ஜெர்மானியச் சொல்லும் (Un-word of the Year : Germany), 2008 முதல் இளம் ஜெர்மானியரால் சிறந்த ஆங்கிலச் சொல்லும் (German Youth Word of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லும், பொருத்தமற்ற சொல்லும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. 2020ஆம் ஆண்டிற்கான இளம் ஜெர்மானியரின் சிறந்த ஆங்கிலச் சொல் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2008ஆம் ஆண்டு ஜெர்மனிய இளைஞர்கள் தமக்குப் பிடித்த சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள். அன்றாட மொழியில் இளைஞர்களின் உறவை வெளிப்படுத்துவதற்காக லாங்கென்சேடிட் (Langenscheidt) என்ற பதிப்பகம் இந்தப் போட்டியை ஆரம்பித்தது. 2019ஆம் ஆண்டு முதல் பொன்ஸ் பதிப்பகம் (Pons publishing house) இதனைத் தொடர்கிறது.  லாஸ்ட் (Lost) என்ற ஆங்கிலச் சொல் 2020இன் ஜெர்மானிய இளைஞர்களுக்கான சிறந்த சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய மொழியில் இதன் பொருள் உறுதியற்ற தன்மை அல்லது சிலவற்றைப் புரிந்துகொள்ள இயலாநிலை என்பதாகும். பொன்ஸ் பதிப்பகம்  இளைஞர்களை 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டபோது 48 விழுக்காட்டினர் வாக்களித்த வகையில் இந்த சொல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜெர்மன் மொழியியலாளரான நில்ஸ் பாஹ்லோ (Nils Bahlo) இவ்வாறான சொல் தெரிவு பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “ஆங்கிலத்தை ஒரு நாகரிகமான மொழியாக கருதுவதால் அன்றாட வாழ்க்கையில் ஜெர்மனியில் உள்ள இளைஞர்கள் ஆங்கிலச் சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார்கள். தமக்கு சமமான நிலையில் பாவித்து தொடர்புகொள்வதும், அதாவது ஒத்த கருத்துள்ளோரையோ, நண்பர்களையோ அடையாளம் காண்பதும் இளைஞர்களுக்கு அவசியமாகிறது. மொழியுடனான தொடர்பும் இங்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஒரு குழந்தையானது நடக்க ஆரம்பிப்பதைப் போல இளைஞர்கள் மொழியைத் திறமையாகப் பயன்படுத்துவதை நன்கறிய வேண்டும்.  தம்மைப் பற்றி வெளிப்படுத்திக்கொள்ள மொழியை ஒரு தூண்டுகோலாகவே  இளைஞர்கள்  நினைக்கின்றார்கள். அயலகத் தாக்கத்தினால் ஜெர்மானிய மொழி தரம் தாழ்ந்துகொண்டிருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தாக்கம் இருப்பது உண்மைதான், ஆனால் அதன் விழுக்காடு மிகவும் குறைவே. மொழியைப் பற்றி சிந்திக்கவும், நம் மொழியுடன் இணைந்து பணியாற்றவும் இளைஞரின் சொல் தேர்வுத் தெரிவு அவசியமாகிறது.” 

கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களுக்கான மொழியில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. மொழியின் குணநலன் மாறிவிட்டாலும்கூட, சண்டையிட்டுக்கொள்ளல், குடித்தல், பள்ளிக்குச் செல்லல், இசையை ரசித்தல், பழக்க வழக்கங்களை கடைபிடித்தல் போன்றவற்றில் பெரிய மாற்றத்தைக் காணமுடியவில்லை. 

ஜுன் 2020இல் ஆரம்பித்த இந்தத் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேல் வாக்களித்துள்ளனர். இணையம் மூலமாக தம் கருத்துகளை அறிவிக்கும்படி இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு வந்தவற்றில் 10 சொற்கள் தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டது. சொல்லைத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இருந்த முக்கியமான மூவரும், முந்தைய போட்டிகளில் பெற்றி பெற்றோரும் ஆங்கில மொழியினைப் பின்புலமாகக் கொண்டவர்கள் ஆவர். 

இளைஞர்கள், தம்மை மூத்தோரிடம் வேறுபடுத்திக் காண்பிக்கும்பொருட்டு வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள் என்றும், அவர்கள் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்தும்போது, அதில் அதிகமாக கையாளப்படுகின்ற ஆங்கில மொழியையே பயன்படுத்துகின்றார்கள் என்றும், அதனை அவர்கள் நாகரிகமாகக் கருதுவதாகவும் கூறுகிறார் பெர்லின் பல்கலைக்கழக ஆங்கில மொழியியல் பேராசிரியரான அலெக்சியாடோ (Alexiadou).

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஜெர்மானியச்சொல்லும் பொருத்தமற்ற ஜெர்மானியச்சொல்லும், பிற மொழிகளில் ஆண்டிற்கான சிறந்த சொல்லும் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழில் ஆண்டின் சிறந்த சொல் அறிவிக்கப்படும் நாளுக்காகக் காத்திருப்போம்.  

துணை நின்றவை

Word of the Year, Wikipedia
Word of the Year (Germany), Wikipedia
Un-word of the Year (Germany), Wikipedia
This is the German youth word of the year for 2020, The Local De, The Local Germany, 15 October 2020
‘Lost’ is Germany’s youth word of the year 2020, Germany DW, 15 October 2020
Youth word of the year : Lost prevails, en24 news, 15 October 2020

நன்றி : திகிரி ஏடு 3, அகம் 2, ஜூலை-செப்டம்பர் 2021  


ஆய்வு தொடர்பான சில ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள அண்மையில் சென்னைக்குப் பயணம். கொரோனா நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டது.



11 செப்டம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

15 August 2021

75ஆவது சுதந்திர தினம்

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த இனிய நேரத்தில், ஒவ்வோராண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களை மிகவும் சிறப்பாகக் கொண்டாடிய எங்கள் தாத்தாவின் நினைவு வந்தது. எங்கள் தாத்தா திரு ரெத்தினசாமி அவர்கள் பழைய காங்கிரஸ் கட்சிக்காரர். தேசப்பற்று மிக்கவர். 


கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் இருந்த எங்கள் வீட்டின் வாசலில் கொடிக்கம்பம் இருக்கும். அதில் காங்கிரஸ் கொடி பறந்துகொண்டேயிருக்கும்.  தெருவில் கடைசியில் எங்கள் வீடு இருந்ததால் அருகில் வந்தால்தான் கொடி பறப்பது தெரியும். கொடி பழையதாகும்போதோ, கிழியும் நிலையில் இருந்தாலோ தாத்தா அதனை மாற்றி புதிய கொடியைக் கட்டிவிடுவார். கொடி கட்டிய கயிற்றின் கீழ்முடிச்சு எங்களால் தொட முடியாத உயரத்தில் இருக்கும். பெரியவர்களால் மட்டுமே அதனை ஏற்றி, இறக்கமுடியும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில் எங்கள் வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்படும். தெருவில் ஆங்காங்கே உயரத்தில் வண்ணத்தாள்கள் விதம் விதமாக பல வடிவங்களில் வெட்டப்பட்டு,  குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும். கொடிக்கு முன்பாக ஒரு தட்டில் உதிரிப்பூக்கள் காணப்படும். நடுநாயகமாக மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கு தேசியக்கொடியை சட்டையில் அணிவிப்பார்கள். ஆரஞ்சுசுளை மிட்டாய் தட்டில் வைக்கப்பட்டிருக்கும். பிறருக்குத் தரும்போது, ஆசைதீர நாங்களும் எடுத்து டவுசர் பைகளில் நிரப்பிக்கொள்வோம்.  

சுதந்திர தினம் போன்ற தினங்களில் தத்தம் பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக எங்கள் தாத்தாவை அழைப்பதற்காக பலர் வருவார்கள். கும்பேஸ்வரர் கோயில் மேலவீதியிலுள்ள திரு பி.ஆர். (அவர் பெயர் முழுமையாக எனக்குத் தெரியாது, ஆனால் பி.ஆர்.என்றழைப்பார்கள்), கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி 16 கட்டில் திரு குருசாமி அண்ணன், தெற்கு வீதியில் திரு குமரசாமி அண்ணன் உள்ளிட்ட அனைவரும் கும்பகோணம் கும்பேஸ்வரர் பூங்காவின் எதிரில் உள்ள நண்பரின் பட்டாணிக்கடையில் அமர்ந்து நாட்டு நடப்பு தொடர்பாக விவாதிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களும் தாத்தாவைப் போலவே ஆங்காங்கே கொடி ஏற்றுவார்கள். 

எங்கள் தெரு, கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, மணிக்காரத் தெரு, பழைய அரண்மனைத்தெரு உள்ளிட்ட பல தெருக்களில் எங்கள் தாத்தா தேசியக்கொடியேற்றிப் பார்த்திருக்கிறேன். விழா நாள்களில் பள்ளி மாணவர்களுக்கு மேடையில் இலவச நோட்டுப்புத்தகங்கள், பேனா, பென்சில், சிலேட், சிலேட் குச்சி, இனிப்புகளை அவரோ, பிற நண்பர்களோ வழங்குவர். சில சமயங்களில் அவருடன் சென்று இலவச நோட்டுப்புத்தகங்களை நானும் வாங்கி வந்ததுண்டு. 

அவர் நினைவாக எங்கள் வீட்டில் இன்னும் இதுபோன்ற நாள்களில் தேசியக்கொடியை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். கொடி மரம் நட்டு கயிற்றில் கட்டி ஏற்றுவதற்கு பதிலாக அந்நாள்களில் தேசியக்கொடியை பறக்கவிடுகிறேன். 

கடந்த ஆண்டுகளில் எங்கள் இல்லத்தில் கொண்டாடப்பட்ட 
சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள்

இந்த ஆண்டு நாங்கள் குடியிருக்கும் நகரில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்னை அழைத்தார்கள். சுதந்திர தின பவள விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்தேன். வழக்கம்போல எங்கள் வீட்டிலும் கொடியேற்றினோம். நான் மூன்றாவதோ நான்காவதோ படிக்கும் காலம் தொடங்கி, எங்கள் தாத்தாவை கொடியேற்றுவதற்காக பலர் வந்து அழைத்துச்சென்ற அந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. ஜெய்ஹிந்த்.


எங்கள் குடியிருப்புப்பகுதியில் இந்திய சுதந்திர தின பவள விழாவில் கொடியேற்றி, உரையாற்றல், 
புகைப்படம் நன்றி : முனைவர் அசோக்குமார்


தொடர்புடைய பதிவு : காந்தி 150: எங்கள் இல்லத்தில் காந்தி

03 August 2021

மனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு

கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியாறு அனைத்தும் என் நினைவிற்கு வந்துவிடும். காவிரியாற்றில் தண்ணீர் வரும்போது பார்க்கும் அழகினைக்காண பலமுறை நண்பர்களோடு சென்றுள்ளேன். நுங்கும் நுரையுமாக ஒரு சிறிய அளவில் வரும் நீர் தொடர்ந்து முழுமையாக காய்ந்த மணலை நனைத்துக்கொண்டு பரவிவருவதைக்காணக் கண் கோடி வேண்டும். நாங்கள் அத்தண்ணீருடனே செல்வோம். சிறிது சிறிதாக கால்களை நனைத்துக் கொண்டே தண்ணீர் ஓடுவதைப் பார்ப்போம்.

எட்டாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளி திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளி. விழாக்காலங்களில் கும்பேஸ்வரரின் திருமஞ்சனத்திற்காக காவிரியிலிருந்து புனித நீரை யானை எடுத்துவருவதற்காக திருமஞ்சன வீதி வழியாகச் செல்லும். அப்போது திருமஞ்சன வீதியிலுள்ள எங்கள் பள்ளி, 16 கட்டு (உள்ளே புகழ்பெற்ற காளியம்மன் கோயில்), பேட்டை (இப்போது சுவடின்றி மறைந்துவிட்டது. இங்கு நண்பர்களின் வீடுகள் இருந்தன. கரகாட்டம் இங்கு சிறப்பாக நடக்கும். பார்வையாளர்கள் வட்ட வடிவில் அமர்ந்திருப்போம்.) வழியாகத் தொடர்ந்து கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் வழியாக காவிரியாற்றுக்கு செல்வதைப் பார்த்துள்ளோம். பல முறை யானையின் பின்னால் நாங்கள் சென்றுள்ளோம். திருமஞ்சன வீதிப்படித்துறை அந்த வகையில் எங்களுக்கெல்லாம் அறிமுகம்

எனக்கும் என் உடன் பிறந்தோருக்குமான மூன்று சப்பரங்கள் பரண்மீது இருக்கும். ஒரு கோயில் தேரை சிறிதாக மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுவே, சப்பரம். ஆடிப்பெருக்கின் முதல் நாள் காலை பெரிய கூடத்தில் ஏணியை வைத்து, எங்கள் அப்பா இறக்குவார். நாங்கள் கீழிருந்து ஒவ்வொன்றாக வாங்கி சிறிய கூடத்தில் வரிசையாக வைப்போம். பின்னர் அதைச் சுத்தமாகத் தூசியினைத் தட்டிவைப்போம். கிழிந்த நிலையிலுள்ள கடந்த ஆண்டு ஒட்டிய வண்ணத்தாள்களைச் சரிசெய்வோம். அன்று மாலை எங்கள் அப்பா பல புதிய வண்ணத்தாள்களை ராமசாமி கோயில் சன்னதியில் உள்ள பேப்பர் கடையில் வாங்கிவருவார். சில சமயங்களில் நாங்களும் சென்றதுண்டு. அதில் சற்று மொத்தமான ஒரு பக்கம் வண்ணத்தோடும் மற்றொரு பக்கம் வண்ணமில்லாமலும் உள்ள தாள் (single colour thick paper), மெல்லிய அளவிலான பல வடிவப் பூக்களைக் கொண்ட மெல்லிய வண்ணத்தாள் (thin colour paper with design), மெல்லிய சாதாரண வண்ணத்தாள் (plain colour paper), பளபளப்பாக இருக்கின்ற தங்க, வெள்ளி வண்ணங்களில் தாள்கள் (gold and silver colour shining paper), சப்பரத்தின் உள்ளே ஒட்டுவதற்கு விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாஜலபதி போன்ற படங்களில் சில படங்கள் இருக்கும். எங்கள் அம்மாவோ, ஆத்தாவோ பசை மாவைக் காய்ச்சி ஒரு கொட்டாங்கச்சியில் தருவார்கள். நாங்கள்  அதை எடுத்து, அப்பாவைச் சுற்றி உட்கார்ந்து ஒட்டுவோம்

சப்பரம் நான்கு சக்கரங்களுடன் உள்ள கீழ்ப்பகுதி (தட்டைப்பகுதி, அதில் இழுத்துச்செல்லும் வகையில் ஆணி அடிக்கப்பட்டிருக்கும்), குறுகிய செவ்வகத்தில் நடுப்பகுதி, இரு பக்கவாட்டுப்பகுதி, மேலே நீண்ட முக்கோண வடிவப்பகுதி ஆகியவற்றுடன் இருக்கும். மூன்று சப்பரங்களும் ஒரே உயரமாக இல்லாமல் வெவ்வேறு உயரத்தில் இருக்கும். மூன்று சப்பரங்களுக்கும் அளவுக்கேற்றபடி தாள்களை வெட்ட ஆரம்பிப்பார் அப்பா. பசை வந்ததும் முதலில் சற்று மொத்தமாக உள்ள தாளை சப்பரம் முழுதும் ஒட்டிவிட்டு, பின்னர் அதில் பல வடிவப்பூக்கள் கொண்ட தாளை பார்வைக்காக ஓரத்திலும், குறுக்கே கோடுபோலவும் ஒட்டுவார். மூன்றாம் நிலையாக தாளை பூ வடிவில், பெரிய அளவிலிருந்து சிறிய அளவு வரும் வரை, வெட்டி அதன் மேல் வைப்பார். அது முப்பரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும். இரு பக்க மூலையிலும் பளபளப்புத்தாள்கள் அழகாக வெட்டப்பட்டு தொங்கவிடப்படும். நிறைவாக நடுவில் சாமிப்படத்தை நடுவில் ஒட்டுவார். பார்ப்பதற்கு அழகான தேர்களைப் போல இருக்கும். சப்பரத்தின் முன்புறத்தில் நடுவில் இருக்கும் ஆணியில் இழுத்துச்செல்லும் அளவிற்கு வைத்து சணலை இரட்டையாக வைத்துக் கட்டுவார். அனைத்து வேலையும் முடிவதற்குள் இருட்டி விடும்.

எப்போது விடியும் என்று ஆவலோடு காத்திருப்போம். காலை எழுந்தவுடன் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். நாங்கள் சப்பரங்களை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்துவெளியே வருவோம். அதே சமயத்தில் அடுத்தடுத்த வீடுகளில் இருக்கும் சிறுவர்களும் சப்பரங்களுடன் வெளியே வருவார்கள். ஒவ்வொருவரும் சப்பரத்தில் ஒட்டப்பட்ட வண்ணத்தாள்கள், வடிவங்கள், ஒட்டப்பட்ட சாமி படம் அனைத்தையும் ஒப்புநோக்கி மகிழ்ச்சியடைவோம். அடுத்து பயணம் ஆரம்பிக்கும். சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் எங்கள் வீட்டிலிருந்து தொடங்கி, மேட்டுத்தெரு சந்திப்பில் திரும்பி, சர் சி பி ராமஸ்வாமி அய்யர் துவக்கப்பள்ளி வழியாக கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, வராகக்குளம், கரும்பாயிரம் பிள்ளையார் கோயில், ரெட்டியார் குளம் கீழ்க்கரை (இங்கிருந்த ஈஸ்வரன் தட்டச்சுப்பயிற்சி நிலையத்தில்தான் நானும் நண்பர்களும் தட்டச்சும், அந்நிலையத்தின் கீழே திண்ணையில் இந்தியும்  கற்றுக்கொண்டோம்.) வழியாகச் செல்வோம். செல்லும் வழியில் யார் முதலில் செல்வது என போட்டி வைத்துக்கொள்வோம். சப்பரங்கள் ஓடும் சப்தம் காதுக்கு இனிமையாக இருக்கும். எங்களின் பயணம் திருமஞ்சனவீதிப் படித்துறையில் காவிரியாற்றைப் பார்த்தபடியே நிறைவடையும்

வரிசைப்படியாக அழகாக சப்பரங்களை கரையோரத்தில் நிறுத்திவைப்போம். காவிரிக்கரையில் காதோலை, கருகமணி, காப்பரிசி, எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து, புனித மஞ்சள் நூலை கட்டுவர். புதுமணத்தம்பதிகள் தாலி பிரித்துக்கட்டுவர். அவற்றையெல்லாம் பார்ப்போம். பழங்களை அப்போது ஆற்றில் இடுவர். அதனை பலர் நீருக்குள் மூழ்கிச் சென்று அதனை எடுப்பர். ஏதோ ஒரு வீர விளைட்டினைப் பார்ப்பதைப் போல இருக்கும். அனைத்தையும் ரசித்துக்கொண்டே அதே வேகத்தில் திருமஞ்சனவீதி படித்துறையிலிருந்து வீட்டிற்குத் திரும்புவோம்.

இல்லத்தில் வந்து ஆடிப்பெருக்கிற்கான நிகழ்வுகளை நிறைவு செய்தபின்னர் ஆசை தீர தெருவில் சப்பரத்தை திரும்பத்திரும்ப இழுப்போம். பின்னர் சப்பரங்கள் மறுபடியும் பரணிற்குச் சென்றுவிடும். அடுத்த ஆடிக்காக ஆவலோடு காத்திருப்போம்.

எங்கள் அப்பா எங்களுக்கு சப்பரத்திற்கு வண்ணத்தாள்கள் ஒட்டித்தந்ததைப்போல நாளடைவில் நானும் ஒட்ட ஆரம்பித்தேன். பின்னர் எங்கள் மகன்களுக்கு செய்து தந்தேன். அவர்களும் ஆடிப்பெருக்கினை காவிரியாற்றிற்குச் சென்று அனுபவித்தனர்.  

கல்லூரிப்பருவத்தின்போது நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நண்பர்கள் ராஜசேகரன், செல்வம், திருமலை, பாஸ்கரன், பொன்னையா ஆகியோருடன் சென்றபோது அவர்கள் அனைவரும் அரச மரத்தடிப் படித்துறையில் நீந்த ஆரம்பித்து, ராயர் படித்துறை, திருமஞ்சன வீதி படித்துறை, மேலக்காவிரி புதுப்பாலம் வரை சென்று வருவார்கள். அதற்கு அடுத்துள்ள படித்துறைகளில் முக்கியமானவை சக்கரப்படித்துறை, பகவத் படித்துறை, பாணாதுரை படித்துறை என்ற வகையில் முக்கியமானவைகளாகும். காவிரியாற்றிற்கு நீந்தக்கற்கச் சென்றாலும் நான் நீச்சல் கற்றுக்கொள்ளாததற்கு ஒரு தனி கதை உள்ளது. அதை தனியாகப் பார்ப்போம்.  

இவ்வாறாக ஒவ்வொரு திருவிழாவின்போதும் கும்பகோணம் நினைவுகள் மனதைப் பற்றிக்கொள்ளும்.   

ஆடிப்பெருக்கு தொடர்பாக எங்கள் மூத்தமகன் பாரத், தன்னுடைய முகநூல் பக்கத்தில் 2017இல் எழுதிய பதிவு: 


16 ஏப்ரல் 2024இல் மேம்படுத்தப்பட்டது.